யானை டாக்டர், அறம்- வாசிப்பு

யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. அவர் டாக்டர் கே./ டாக்டர் திரு.கிருஷ்ணமூர்த்தி. தன் வாழ்க்கையையே யானைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர். அவைகளின் ஒவ்வொரு அசைவையும், நகர்தலையும், பார்வையின் பொருளையும் உணர்ந்தவர். சமிக்ஞைகளைப் புரிந்தவர். அவரின் அன்பார்ந்த நேசத்தை அவைகளும் உணர்ந்திருந்தன. இவர் நமக்கு ஆபத்தில்லாதவர். பாதுகாப்பானவர், நம்மைப் பாதுகாக்கவென்றே தன்னை அர்ப்பணித்தவர். தன் வாழ்வில் எந்த சுயநலத்தையும் கருதாமல், தனக்கென்று ஒரு குடும்பம் என்று கூடக் கொள்ளாமல் நம்மைப் பாதுகாக்க, பராமரிக்க என்று இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்று உணர்ந்து இவர் மீது அளவிலா அன்பு செலுத்தின. 

உடலில் ஒரு சிறு நோவு என்றாலும் இவர் இருப்பிடம் தேடி வந்தன. இரவானாலும், பகலானாலும், பனி பெய்யும் பொழுதானாலும், மழையும் புயலும் என எது நிகழ்ந்தாலும், எத்தனை மைல் தூரமானாலும்,  நமக்காக இவர் உண்டு என்று அவர் இருப்பிடம் நோக்கி வந்து தஞ்சம் புகுந்தன. தன் உறவுக்கு, தன் குட்டிக்கு, தன் இனத்தில் உள்ள எவருக்கும் எனினும் இவரிடம் சென்றால் நமக்கு நலம் உண்டு என்று அன்பு செலுத்தின. நம்பி வந்து நின்றன. அந்த நம்பிக்கையை அளித்தவர் அவர். டாக்டர் கே. அதற்காக அவர் பெரும்பாடு பட்டிருக்கிறார். நிறைய உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். தன்னலம் கருதாது செயல்பட்டிருக்கிறார். தன் சந்தோஷங்களை இழந்திருக்கிறார். விரும்பித் துறந்திருக்கிறார். யானைகளின் நலனே தன் நலன் என்று வாழ்ந்திருக்கிறார். தன் பொழுதுகளை, நாட்களை, மாதங்களை, வருடங்களை  தன் மொத்தக் காலங்களை, எனக் கணக்கில் கொள்ளாது தியாகம் செய்திருக்கிறார். 

அன்பின் சின்னமாய் அவர் விளங்கினார். அரவணைப்பின் ஆதாரமாய் நின்றார். மனிதன் தன்னை, இந்த இயற்கையை, பிற ஜீவராசிகளை தன் மேன்மையான குணத்தை ஆதாரமாய்க் கொண்டு ஆழமாய் நேசிக்க முடியும், அவற்றை அரவணைத்து நலம் காக்க முடியும். தன் பார்வையாலும், புன்னகையாலும், கையசைவினாலும்,உடல் மொழியினாலும் அவைகளை ஈர்க்க முடியும். நேசத்தைப் புரிய வைக்க முடியும். தன் அன்பை வெளிப்படுத்த முடியும். அதன் ஆழத்தை, உண்மையை உணர வைக்க முடியும் என்று செய்து காட்டினார். அந்தச் செயலில் எந்தச் சுயநலமும் இல்லை. எந்த விளம்பரமும் இல்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. தூய அன்பின் வெளிப்பாடு அது. நான் நினைத்தேன். செய்கிறேன். இதைச் செய்வதில் நான் மன நிம்மதி அடைகிறேன். என் ஆத்மா சாந்தி பெறுகிறது. என் இதயம் பெருமிதமடைகிறது. மனம் பொங்கி வழிகிறது. இது எனக்கு இறைவன் வகுத்த விதி. அவன் போட்டுக் கொடுத்த பாதை. என் ஆழ் மன உணர்வினையே நான் பிரதிபலிக்கிறேன். அதுவே எனக்கு இறைப்பாதையை வகுத்துக் கொடுத்தது. இது நான் மனமுவந்து செல்லும் பாதை. முனைப்போடு மேற்கொண்ட புனிதப் பயணம். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இது தொடரும். 

இந்த யானைகளே என் நண்பர்கள். என் உடன் பிறப்புக்கள். இதுவே என் வாழ்க்கை….இவையன்றி என்னால் தனித்து வாழ இயலாது. தனித்து இயங்க இயலாது. தனித்து என்னை உணரவே இயலாது. 

ந்தக் காட்டைப் புரிஞ்சிக்கிட்டாதான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்டைப் புரிஞ்சிக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க வாழணும்னா,அந்த உலகத்துலே இருக்கிற பணம், புகழ், அதிகாரம், லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிட்டு வரணும். இவங்களை விட்டா நமக்கு வேறே சொந்தம் எதுவுமி்ல்லேன்னு இருக்கணும். போய்யா…போய்ப் பாரு…அந்தா இருக்கானே செல்வா…அவனை மாதிரி வேறு ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியமா? அந்த நிமிர்வும், அந்தக் கருணையும், அற்பத்தனமே இல்லாத கடல் போல மனசும், அதை அறிஞ்சா மனுஷன் ஒரு பொருட்டா? -டாக்டர் கே.யின் கேள்விகள்.

மனிதனின் கீழ்மைகள் எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டுக்கு வரும் சிலரின் கீழான செயல்பாடுகள் – ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்ததுபோலக் காணக் கிடைக்கும் கொடுமை – வழி தோறும் குடித்துக் கும்மாளமிடுவதும், வாந்தி எடுப்பதும், மலைச்சரிவுகளின் மௌன வெளியில் காரின் உறாரனை அடித்துக் கிழிப்பதும், முடிந்தவரை உச்சமாக காரின் ஸ்டீரியோவை அலறவிட்டுக் குதித்து நடனமாடி, ஓங்கிக் குரலெடுத்துக் கெட்டவார்த்தைகளைக் கூவுவதும்….பாட்டில்களை உடைத்து எறிவதும், – கீழ்த்தரமான பச்சை சுயநலம் தெறிக்கும் – மனிதப் புழுக்கள். உடைந்த பாட்டில்களின் சிதறல்களால் எத்தனை யானைகள் எவ்வளவு துயரத்துக்கும்,துன்பத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. உயிரிழந்திருக்கின்றன. எவ்வளவு உடல் வேதனைக்கு ஆளாகி மீள முடியாமல் தவித்திருக்கின்றன? எந்த மிருகத்தை விடவும் யானைக்கு அந்த கண்ணாடிச் சிதறல்கள் மிகவும் அபாயகரமானது என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறார்களா? 

இதுபோன்ற எண்ணிலடங்கா வேதனைகளைத் தாளாமல்தான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று சொல்லாமல் சொல்லி கருணை மழை பொழிகிறார் டாக்டர் கே. அவருக்கு பத்மஸ்ரீ விருதிற்காக முயல, அது கடைசி நிமிடத்தில் நழுவிப் போன தகவல் மிகவும் வேதனையாய் உணரப்பட்டபோது, துளியும் அதனைப் பொருட்படுத்தாத ஒரு புன்னகையே அதற்கு பதிலாகிறது. அந்தோ நிற்குதே, அந்த யானைக்கு உன்னைத் தெரியும்ங்கிறதை நீ பெரிசா நினைச்சேன்னா, டெல்லியிலே யாரோ ஒரு காகிதத்துலே எழுதிக் கையிலே கொடுக்கிறதைப் பெரிசா நினைக்கத் தோணுமா? 

நான் உங்கள வெளியே கொண்டு போகணும்னு நெனச்சேன் டாக்டர். இங்கே இப்படியொரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும்னு எனக்குத் தெரியாது. இப்படிப் புத்தம் புதுசா ஒரு உலகத்தைப் பார்க்கப் போறோம்னு நான் நினைக்கலை…..-அவன் சொல்கிறான்.

இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானை காலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்ம சமூகத்திலேதான் டாக்டர் வளர்ந்து வர்றான். அவன்தான் ஐ.டி.கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேலை பார்க்கிறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழ கொழன்னு இங்லீஷ் பேசறான். அதனால பிறவி மேதைன்னு நினைச்சிக்கிறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதான் இந்த நாடும் இந்தக் காடும் எல்லாமும் இருக்கு. அவங்களிலே ஒரு பத்து பர்சன்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்குன்னு தெரியட்டும்னுதான் முயன்றேன். இப்டி ஒரு ஐடியலிஸத்துக்கும் இன்னும் நம்ம சமூகத்திலே இடம் இருக்குன்னு காட்ட முற்பட்டேன். இன்னும் இங்கே காந்தி வாழறதுக்கு ஒரு காலடி மண்ணிருக்குன்னு சொல்ல நினைச்சேன்…ஒரு பத்துப் பேரு கவனிச்சாப் போருமே டாக்டர்….-என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான்.

பெரும் லட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்புகளைச் சென்று தீண்டும்…காந்தியின் வலிமை அங்குதான். அந்த ஊற்றின் ஈரம் எங்கேனும் ஓரிடத்தில் இன்னும் இருக்கும்தான்….டாக்டர் கே. க்கான பத்மஸ்ரீ விருதுக்குரிய முயற்சிகளில் அவன் சிந்தனை இந்த ரீதியில்தான் பயணித்தது.

அந்த நன்னெறியினை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது ஜெயமோகனின் இந்த “யானை டாக்டர்“.  வெறும் கதையல்ல இது. வாழ்க்கை நெறி. ஒரு புனிதமான வாழ்வியல்.  ஒவ்வொரு மனிதனின் கவனத்திலும் சென்று ஆழப் பதிய வேண்டிய  அறநெறிச் சாரம். படித்துமுடிக்கும்போது கண்ணீர் முட்டி  நிற்கிறது. எப்படியொரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் டாக்டர் கே.  என்று வியக்க வைக்கிறது. காடும்,காடு சூழ்ந்த இடமுமாக கதை நகர்த்தப்பட்டிருக்கும் விதத்தில் நாமும் கூடவே அர்த்தமோடு பயணிக்கிறோம். ஒரு நல்ல, சுயநலமற்ற, சேவை மனம் கொண்ட மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதில் மிகுந்த திருப்தி கொள்கிறோம்.

உஷா தீபன்

உஷாதீபன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2025 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.