இனிக்கும் இருள்

எழுத்தாளர் கோ.புண்ணியவான், மலேசியா

கல் மனங்களிலும் கனிவு பிறக்கும் என்பது இக்குறும்படத்தின் கதைப் பொருள். அதனை கலைநயம் குன்றாமல் கொண்டு செல்கிறார் ஹரி பிரசாத். நிலத்தை எப்படியாவது பார்வையற்ற தம்பதியினரின் தலையில் கட்டிவிடவேண்டும் என்று கண்ணையா புரோக்கரும் அவர் சகாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் பார்வைக்குறைவானவர்கள் என்று முதற் சந்திப்பிலேயே தெரிந்துகொள்ளும் கண்ணையா ஓரு கரிசனமான மன அசைவை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.

வீட்டு மனையின் நிலப்பட்டாவை வாங்க பணம் தேவையென்று சொன்னதும் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள் தம்பதிகள். அந்த இடம் குறும்படத்தின் உயிரோட்டமான மைய இடம். கண்ணையாவைச் சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறார்கள். அங்கிருந்தே கண்ணையாவின் ஏமாற்றும் தந்திர மனம் ஆட்டம் காண்கிறது.

இனிப்பைப் பரிமாறும்போதும், அதுவும் ஒரு பார்வையற்றவர் தன்னை உபசரிக்கிறாரே என்று எண்ணும்போதும் கண்ணையாவின் உள்மனம் தத்தளிக்கத் துவங்குகிறது. இனிப்பு சாப்பிடும்போதும் உப்பிட்டவரை ஒருபோதும் ஏமாற்றக்கூடாது என்று அவரின் மனசாட்சி அவரை அறைந்துகொண்டே இருக்கிறது. அவரால் இனிப்பை சரிவர உண்ணமுடியாமல் போகும்போதே மனிதன் இயல்பிலேயே நல்லவன், சூழ்நிலை அவனின் நற்குணத்தின் திசையை மாற்றிவிடுகிறது என்று காட்டவே கண்ணையாவால் உணவை முடிக்க முடிக்கமுடியாமல் திணறும் காட்சி வைக்கப்படுகிறது. 

அவர்களைப் பொய் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிக்கவேண்டும் என்று சதித்திட்டம் போட்ட கண்ணையா , ஒரு கட்டத்தில் மனமாறி அவர்கள் ஏமாற்றப்படவேண்டியவர்கள் அல்ல என்று  இன்னொரு பொய்யை  நல்லதுக்காகச் சொல்லி தன்னால் அவர்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றிவிடுகிறார். இக்குறும்படத்தின் ஜீவனை கண்ணையாவின் நடிப்பு இறுகப் பிடித்துவைத்துக்கொண்டே இருக்கிறது. கண்ணையாவுக்குப் பணத் தேவை நெருக்குகிறது என்பதை அவரின் மகள் பள்ளிப்பணம் கேட்கும்போது தெரியவரும் இடமும் இருள் இனிது குறும்படத்தின் திருப்பமான காட்சி.

எல்லாருடைய வாழ்விலும் இருள் சூழத்தான் செய்யும். ஆனால் அவ்விருளை இனிமையாக்குவது மனசாட்சி உள்ள மனிதனால் மட்டுமே முடியும். மனசாட்சி இல்லாத மனிதர்கள் உண்டா? இருள் சூழாத மனிதர்கள்தான் உண்டா? இருள் வந்தடைக்கும்போது மனசாட்சி திறந்துகொள்கிறது என்பதை இருள் இனிது குறும்படம் பிசிறில்லாமல் காட்டிவிடுகிறது. 

கண்ணையா தன் பாத்திரத்தில் ஒன்றி மிக யதார்த்தமாக நடித்துக் காட்டுகிறார். நம்மையும் நெகிழச்செய்து விடுகிறார். பார்வையற்ற தம்பதிகளின் நடிப்பும் மிகையற்று இயல்பாக இருக்கிறது. படத்தை இயக்கிய ஹரி பிரசாத்துக்கு காட்சி ஊடகத் துறையில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. துணை தொழில்நுட்பக் கலைஞர்களும் வாழ்த்துகள்.

Thanks

கோ.புண்ணியவான், மலேசியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2025 22:23
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.