மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா.
விழாக்களில் எப்போதுமே அன்னியமாவது என் இயல்பு. எந்த விழாவிலும் நான் ஒரு வகையான ‘சம்மல்’ தோன்றும் முகத்துடன்தான் காணப்படுவேன். ஆகவே எனக்கு என்னுடைய விழாப்புகைப்படங்களைப் பார்க்கப் பிடிப்பதில்லை. கணிசமான விழாக்களில் என் மனம் எதிலும் சம்பந்தப்படாமலிருப்பதை எவரும் என் முகபாவனைகள் வழியாகக் காணமுடியும். நாங்களே ஒருங்கிணைக்கும் விஷ்ணுபுரம் விருதுவிழாக்களின் போதுகூட அப்படித்தான். காலச்சுவடு கண்ணனின் திருமண விழாவில் சுந்தர ராமசாமிதான் அங்கிருப்பவர்களிலேயே அந்நியமானவராக திகழ்ந்தார் என்பதை அப்போது கவனித்து எழுதியுள்ளேன்.
ஆனால் வகுப்புகளில் போது வேறொரு மனநிலை அமைகிறது அங்கு கற்றலும் கற்பித்தலும் நிகழும்போது உருவாகும் களிப்பு உள்ளது. என்னுடைய வகுப்புகள் ஒருவகையில் அணுக்கமான நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்திருப்பது போல என்பதுதான் அது ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்குகிறது. வகுப்புகளில் நான் என்னை மறந்து திளைக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். நான் உரையாற்றும் நிகழ்வுகள் எனக்கு ஒருவகை வகுப்புகள்தான். குறிப்பாக கட்டண உரைகள் நானே என் பேசுபொருளில் ஆழ்ந்து செல்லும் அனுபவம் கொண்டவை. ஆகவே ஒருபடி மேலானவை.
விழாக்கள் அவை எத்தனை முக்கியமானவையாக இருந்தாலும் அடிப்படையில் சம்பிரதாயமானவை. சம்பிரதாயமான செயல்பாடுகளுக்கு இயல்பாகவே ஒரு சலிப்பூட்டும் தன்மை உண்டு. ஏனென்றால் ஒன்று, அவை ஏற்கனவே நமக்கு முன்னரே தெரிந்தவையாக இருக்கும். இரண்டு, அவை இயந்திரத்தனமாக மட்டுமே செய்யப்பட முடியும். இயந்திரத்தனமாகச் செய்யப்பட்டால் மட்டுமே அவற்றுக்கு ஒழுங்கும் முறைமையும் அமைகிறது. ஒழுங்குதான் சம்பிரதாயச் செயல்பாடுகளிலுள்ள முதன்மை அழகு. அந்த ஒழுங்கு சற்றுச் சிதைந்தால்கூட பதற்றமும் ஒவ்வாமையும் உருவாகிறது. மூன்று, அவற்றில் உணர்ச்சிகரம் நேரடியாக வெளிப்பட வாய்ப்பே இல்லை. அவை நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகங்கள்தான்.
ஆனால் சடங்குகளைத் தவிர்க்கவும் முடியாது. ஏனெனில் வாழ்வின் முக்கியமான தருணங்களை எல்லாமே சடங்குகள் வழியாகத்தான் நாம் நிறைவேற்றிக் கொள்கிறோம். எல்லாச் சடங்குகளும் குறியீட்டுத் தன்மை கொண்டவை. ஆகவே மிகமிகத் தொன்மையானவை. முடிவிலாக் கடந்தகாலத்துடன், முன்னோருடன் நாம் நம்மை உணர்வுபூர்வமாக இணைத்துக்கொள்ளவே சடங்குகள். நாம் இங்கே வாழ்வது ஒரு தொடர்ச்சிதான் என்னும் உணர்வை, நாம் செய்யும் செயல்கள் அழிவற்ற தொடர்ச்சி கொண்டவை என்ற எண்ணத்தை அவை அளிக்கின்றன. ஆகவேதான் காலத்தொடர்ச்சி அற்ற புதிய சடங்குகள் வேடிக்கைகளாக ஆகிவிடுகின்றன.
ஒரு சடங்கு நிகழ்ந்து முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவில் எழும்போது அதில் ஆழ்ந்த உணர்ச்சிகள் ஏறி இருக்கின்றன எப்பதைக் காணலாம். என் நினைவில் அப்படி உணர்ச்சிகரமாக நீளும் சடங்கு நிகழ்வுகள் பல. என் திருமணம். அதன்பின் கதா விருதை டெல்லியில் சங்கர் தயாள் சர்மா அவர்களிடமிருந்து விருது பெற்றது. குர்அதுல்ஐன் ஹைதர் அவர்களிடமிருந்து சன்ஸ்கிருதி சம்மான் விருது பெற்றது. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து பாவலர் விருதை பெற்றது. அண்மையில் தமிழகத்திற்கு வெளியே இருந்து கிடைத்த முக்கியமான ஏற்பாகிய புக் பிரம்மா விருது வரை அப்படி பல தருணங்கள். அஜிதனின் திருமண நாள் கூட அத்தகைய ஓர் இனிய நினைவாகத்தான் என் நினைவில் இருக்கிறது.
இந்த மதிப்புறு முனைவர் பட்ட விருது விழாவும் அத்தகைய ஒரு நிகழ்வுதான். அது அணுகிவரும் வரை அதைப்பற்றி நான் எண்ணவே இல்லை. தொடர்ச்சியாக ஒன்றரை மாத அமெரிக்காப் பயணம். ஒவ்வொரு இரண்டு நாளுக்கும் ஒரு நிகழ்ச்சி. வகுப்புகள். அதன் பிறகு இந்தியா வந்து இங்கே செய்து முடிக்க வேண்டிய பல வேலைகள். குறிப்பாக இரண்டு பெரிய திரைப்படங்களின் திரைக்கதை வேலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வந்ததுமே அவற்றில் மூழ்கவேண்டியிருந்தது.
நவம்பர் 19ஆம் தேதி விருது விழா. 16 ஆம் தேதி தான் விருது விழாச் சடங்கு பற்றிய எண்ணங்கள் வந்தன. திருவனந்தபுரத்தில் திரைப்பட விவாதத்திற்காக தங்க வேண்டி இருந்தது. இயக்குநர் மும்பையில் இருந்து வந்திருந்தார். நானும் அருண்மொழியும் அங்கு சென்று எஸ்பி கிரான்ட் ஹோட்டலில் தங்கி அந்த விவாதத்தை முடித்துவிட்டு 18 ஆம் தேதி காலை திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து சென்னை வந்தோம். அங்கிருந்து காரில் மாலை நாலரை மணிக்கு புதுச்சேரி அக்கார்ட் விடுதிக்கு வந்தோம். நண்பர்கள் பலர் பல ஊர்களில் இருந்து ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்து தங்கி இருந்தார்கள்.
ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் நண்பர்களும் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தார்கள். அத்தனைபேர் கூடியிருக்கிறோமே, மாலையில் ஒரு சந்திப்பு எற்பாடு செய்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாமா என்று முன்னரே கிருஷ்ணன் கேட்டிருந்தார். ஆனால் மாலையில் ஏழரை மணிக்கு சிறப்பு விருந்தினர்களுடன் ஒரு விருந்தை அக்கார்ட் விடுதியிலேயே பல்கலை அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தமையால் அந்த நண்பர் சந்திப்பை நடத்த முடியவில்லை.
நண்பர்களுடன் கூட்டமாக புதுச்சேரியின் கடற்கரைக்கு சென்று ஏழு மணி வரை பேசிக் கொண்டிருந்தேன். சேலம், பெங்களூர், ஈரோடு, கோவை, சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து வந்த நண்பர்கள் திரண்டிருந்தனர். ஏ.வி.மணிகண்டன் மேல்சித்தமூர் சென்றிருந்ததாகச் சொன்னார். கிளம்பும்போது அங்குள்ள சமண மடத்தின் பட்டாரகர் பார்த்து எங்கே செல்கிறீர்கள் என்று விசாரித்ததாகவும், அவரிடம் ஜெயமோகனுக்கு விருது வழங்கும் விழா என்று சொன்னதாகவும், அப்போதுதான் பட்டாரகர் என் வாசகர் என்று தெரியவந்ததாகவும் சொன்னார். பட்டாரகர் ஒரு வாழ்த்துச்செய்தி எழுதி எனக்கு கொடுத்தனுப்பியிருந்தார்.
வியப்பாக இருந்தது. மேல்சித்தமூருக்கு 2006ல் நான், வசந்தகுமார், யுவன் சந்திரசேகர், மதுரை சண்முகம் ஆகியோர் சிரவணபெலகொளாவுக்கு மகாமஸ்தகாபிஷேகம் பார்க்கச் செல்லும் வழியில் அங்கே சென்றபோது இப்போதிருப்பவரின் முந்தைய பட்டாரகரைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டோம். (பட்டாகரர் என்பவர் சமணர்களின் மடாதிபதி போல. மேல்சித்தமூர்தான் தமிழகச் சமணத்தின் தலைமையிடம்). பட்டாகரரின் வாழ்த்து என்பது என் இந்த கௌரவத்திற்கு ஒரு படி மாற்று கூட்டுவது என்று எண்ணிக்கொண்டேன்.
திரும்பி வந்து குளித்து உடைமாற்றி கீழே சென்று விருந்தில் கலந்து கொண்டேன். தக்ஷசிலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் மகாலிங்கம் என் வாசகர். என் தளத்தை நாளும் வாசிப்பவர். அவருடைய மகன் ராஜராஜன், மகள் நிலா ஆகியோர் பல்கலைக்கழக நிர்வாகிகள். அமைதிக்காக லெய்மா போவே (Leymah Gbowee), அவருடைய கானா நாட்டு தோழி ஆகியோர் வந்திருந்தார்கள். ஃபிஜி நாட்டின் இந்திய தூதர் ஜெகன்னாத் சாமியும் அவர் மனைவியும் வந்திருந்தனர். பத்து மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.
அமைதிக்காக 2011 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர் லெமா போவே. லைபீரியாவின் உலகமுகமாக அறியப்படுபவர். லைபீரியா அமெரிக்காவுக்கு ஆப்ரிக்காவில் இருந்த ஒரே காலனி நாடு. 1861ல் ஆப்ரஹாம் லிங்கனின் தலைமையில் அமெரிக்காவில் அடிமையொழிப்பு நிகழ்ந்தபோது அடிமைகளாக இருந்து விடுதலை பெற்ற ஏராளமான கறுப்பினத்தவர் லைபீரியாவுக்கு கொண்டு சென்று விடப்பட்டார்கள். இன்றைய லைபீரியாவின் ஒரு பங்கினர் அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளியினர். நிறத்திலும் அதைக் காணலாம்.
அவ்வாறு அவர்கள் அனுப்பப்பட்டதைப் பற்றி அப்போது மிகப் பெரிய விமர்சனம் இருந்தது. ஏனென்றால் கருப்பின அடிமைகளில பெரும்பாலானவர்கள் பழைய எரித்ரியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள். அமெரிக்காவில் இருநூறு ஆண்டுகளாக வாழ்பவர்கள். அவர்களுக்கு ஆப்பிரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆப்பிரிக்காவில் வாழ்வதற்கான உடல் நிலை, அதற்கான உழைப்புப் பயிற்சி, சமூகத்தொடர்புகள் அவர்களுக்கு இல்லை. இனம் அன்றி அடிப்படையில் அவர்களை ஆப்பிரிக்காவுடன் இணைக்க எந்த அம்சமும் இல்லை. அவர்களை திரும்ப ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவது என்பது ஒரு வகையான நாடுகடத்தல் தண்டனைதான் என்று அமெரிக்க மானுட உரிமைச் சிந்தனையாளர்கள் சொன்னார்கள்.
ஆனால் உண்மையில் லைபீரியா சென்றவர்கள் அமெரிக்காவில் இருக்கும் கருப்பினத்தாரை விட மேலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதே இன்றுள்ள உண்மை. அதற்கு மூன்று காரணங்கள், அவர்கள் அங்கே ஒரு வலுவான அமெரிக்க – ஆப்ரிக்க இனக்குழுவாக ஆகி வளர முடிந்தது. பிற இனத்தவருடன் இயல்பான உறவையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இரண்டு, இனரீதியாக அமெரிக்காவில் அவர்கள் உணரும் அடிநிலை, ஆட்பட்ட நிலை, தாழ்வுணர்ச்சி அங்கே உருவாகவில்லை. மூன்று லைபீரியாவின் ஆட்சிமொழி ஆங்கிலம், பூர்வகுடி மொழிகள் இருபதுக்குமேல். அமெரிக்கக் கறுப்பர்களுக்கு அந்த ஆங்கிலம் ஒரு கூடுதல் தகுதியாகவும் அமைந்தது.
ஆப்ரிக்காவில் முதலில் சுதந்திரம் அடைந்த நாடு லைபீரியா. 1847லேயே அது சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக நிகழ்வதை போல அஙகும் 1980ல் உள்நாட்டு கலவரம் தொடங்கியது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் சிக்கல் என்பது அரசியல் அதிகாரமும் இனக்குழு அதிகாரமும் ஒன்றுடன் கலந்துள்ளன என்பதுதான். இனக்குழுக்கள் நடுவே அதிகாரத்திற்கான போட்டி நிகழும் போது அதில் அயல்சக்திகள் தலையிட்டால் ஒரு கட்டத்தில் உள்நாட்டு போராக வெடிக்கிறது. அயல்நாட்டுப்போர் நீண்டகாலம் நீடிப்பதில்லை, அதன் அழிவும் குறைவே. ஆனால் உள்நாட்டுப்போர் பல தலைமுறைக்காலம் நீடிக்கும். அந்நாட்டை வெறும் குப்பைமேடாக ஆக்கும். மாபெரும் மக்கள் அழிவை உருவாக்கும்.
ஆப்ரிக்காவின் பல நாடுகளில் பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்தழிந்து கொண்டிருப்பது உள்நாட்டுப் போர்களால்தான். ஆசியாவிலும் இந்தோனேசியா, கம்போடியா, இலங்கை என பல நாடுகளில் உள்நாட்டுப்போர்கள் நிகழ்ந்து பேரழிவுகள் உருவாகியுள்ளன. எந்தக் காரணத்துக்காக உள்நாட்டுப்போர் நிகழ்ந்தாலும் அதில் கூட்டம்கூட்டமாகச் செத்து அழிபவர்கள் சாமானிய மக்களே. எந்த வகையில் அப்போர் முடிந்தாலும் ஏதேனும் ஒரு தரப்பு அதிகாரத்தை அடைகிறது, அதனால் அந்த மக்களுக்கு எந்த நன்மையும் விளைவதில்லை. செத்தவர்கள் சருகுகள் போல கூட்டி ஒதுக்கப்படுவார்கள். மறக்கப்படுவார்கள். இதுவே வரலாறு.
லைபீரியாவின் உள்நாட்டுப்போரின் அழிவில் இருந்த அதை மீட்டெடுப்பதற்கான ஒரு பெண்கள் சக்தியாக இருந்தவர் லெய்மா. Women of Liberia Mass Action for Peace என்னும் அமைப்பை அவர் 2003ல் தன் 31 ஆவது வயதில் முன்னெடுத்தார். ஒரு மீன் சந்தையில் 5 பேரை திரட்டி அவர் ஆரம்பித்த இயக்கம் அது. படிப்படியாக மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படைகளுக்காகவும் ஒரு போராட்டமாக அது மாறியது. லைபீரிய உள்நாட்டுப்போரில் 2,50,000 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரத்துக்காக போராடிய இரு தரப்பினரும் ஆண்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்தனர். அல்லது கொடூரமாகக் கொன்றனர். தங்கள் மகன்களை, கணவர்களை ஒளித்து வைத்துக்கொண்டு தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் அலைந்தனர் பெண்கள்.
பொதுவாக உள்நாட்டுப் போர்களில்தான் மிக அதிகமாக கொடூரங்கள் நிகழ்கின்றன. ஏனென்றால் அயல்நாட்டுப்போர் ராணுவங்களுக்கு இடையே, ராணுவ முறைப்படி நிகழ்கிறது. உள்நாட்டுப்போரில் கடுமையான காழ்ப்புகளும் வெறுப்புகளும் உருவாக்கப்படுகின்றன. கொள்கைகள், இனஅடையாளங்கள், மதநம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படைகளில் இந்த வெறுப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில் ‘துரோகிகள்’ என முத்திரையடிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களே மிகுதி. அந்தக் கொலைகளும் பிறரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவை என்பதனால் கொடூரமாக நிகழ்த்தப்படுகின்றன. லைபீரியாவில் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம்பேர்.
அச்சூழலில் இருந்து எழுந்து வந்த ‘நாயகி’ லெய்மா. ஆப்ரிக்கப் பெண்களுக்கே உரிய கம்பீரமான ஒரு தாய்மை, தளராத உற்சாகம் அவரிடம் இருந்தது. சென்ற இருபதாண்டுகளாக தொடர்ச்சியான ஜனநாயகமும், அதன் விளைவான பொருளியல் வளர்ச்சியும் லைபீரியாவில் உள்ளன என்று சொன்னார். சிற்றூர்களுக்கும் மின்சாரம், சாலை, குடிநீர் வசதிகள் வந்துள்ளன. வணிகம் வளர்கிறது. கனிமவளம் நிறைந்த லைபீரியா பொருளியலில் அதையே இப்போது முதன்மையாகச் சார்ந்திருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் அங்கே கல்வி மறுமலர்ச்சி உள்ளது. அது பிற வளர்ச்சிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்றார்.
பிஜி தீவின் தூதர் ஜெகன்னாத் சாமியின் முன்னோர் ஆந்திரர்கள், ஆனால் பழைய சென்னையில் இருந்து ஃபிஜி சென்றவர்கள். கரும்புத்தோட்டத்தினிலே என்னும் பாரதியின் பாடலை பிஜி தீவின் தமிழர்களை எண்ணி எழுதியதாகச் சொல்வார்கள். (ஆனால் பிஜியில் கரும்பு இல்லை. பிஜி தீவிலிருந்து ஒருவர் வந்து அங்கும் பிற அயல்நிலங்களிலும் தமிழர்கள் படும் பாட்டைப் பற்றிச் சொன்னதை எண்ணித்தான் பாரதி அப்பாடலைப் பாடினார்) அதைப்பற்றி அவரிடம் சொன்னேன்.
இனிய உரையாடல் இரவு பத்து மணிவரை. அதன்பின் அறைக்கு வந்தேன். மறுநாள் பட்டமளிப்பு விழா. அருண்மொழி அதற்கான ஆடைகளை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

