முகுந்த் நாகராஜன் சந்திப்பு

அன்புள்ள ஆசிரியருக்கு,

கவிஞர் முகுந்த் நாகராஜனுடன் நிகழ்ந்த கலந்துரையாடல்

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளை கேள்.
அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்.
உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு.
அதன் அருகாமையை
நழுவ விடாதே
ஒரு போதும்.

என்று ரூமி சொல்வது போல், கவியின் மனநிலையை வாசகன் அடைவதும், அதுவும் கூட்டு மனங்களால் இணைந்து அடையும் அத்தருணம், கவிஞருடனான கலந்துரையாடல் என்பது சொல்லிற்கு மேலான மீ மொழி ஆனது,.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி, பிகின் பள்ளி ,ஓசூரில் கவிஞர் முகுந்த் நாகராஜன் அவர்களுடனான ஒரு கலந்துரையாடலை, திரு. வேணு வேட்ராயன் முன்னெடுத்து நிகழ்த்தியபோது.
பாடலோடு தொடங்கலாம் என்று வேணு அவர்கள் கூறியதற்கிணங்க, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்கிற பாரதியாரின் பாடலைப்பாடினேன். இசை நிகழ்ச்சிகளில் நாட்டை அல்லது ஹம்சத்வனி பாடி ஆரம்பிப்பது போல, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல் ஒரு குழந்தையின் உலகத்தைப் பற்றி பேசும் கவிஞருடனான கலந்துரையாடலுக்கு மிகவும் பொருந்தியதாய், அழகாய் அமைந்தது.
வேணு அவர்கள் முகுந்த் அவர்களின் கவிதைகளை தொகுத்து குறிப்புக் கையேடு ஒன்று செய்ந்திருந்தார், அதன்வழி கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுத்தார். கவிதையின் பேசுபொருள் கொண்டு கோர்க்கப்பட்ட கவிதைகளை பக்க எண், வரிசை எண் வழியாக, ஒவ்வொருவரும் படித்து, உரையாடி இன்புற்றோம்.

அதில் கிருஷ்ணர், பிள்ளையார் பெயர்களில் எழுதப்பட்ட கவிதைகளை வாசித்தோம். பண்டிகை நாட்களில் இருந்த அவர் வீடும், அவரின் பால்யத்தையும், அவர் கவிதைகளின் வழி ரசித்ததோடு, நம் வீடும் பண்டிகையும் நினைவுக்கு வந்து புன்முறுவல் தந்தது மகிழ்ச்சி. எங்கள் அனைவருக்கும் பிடித்த கவிதையின் சில வரிகள்
கடவுள் செய்தோம்
கோலம் போட்ட பலகையை
….
எண்ணெய் போட்ட விளக்குகள்
இரண்டு பக்கமும் வைத்து
அருகம்புல் அர்ச்சனை செய்தோம்
பழங்களை வைத்தோம்
கொழுக்கட்டை வைத்தோம்.
இப்படி படிப்படியாக கடவுளை செய்து
அவர் காலில் விழுந்தோம்.
மறுநாள் இரவு கிணற்றில் போட்டோம்.
தினமும் கடவுள் கட்டுப்படியாகாது.

அலுவலக நிமித்தமாய் வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருந்த போது அவர் சந்தித்த தனிமையைக் கூறும் கவிதைகள் நெகிழ்ச்சியானவை. தனிமைத்துண்டு என்ற பெயரில் உள்ள கவிதைகளும், இன்னும் சில தனிமை சொல்லும் கவிதைகளையும், நாங்கள் வாசித்தபோது முகுந்த் மென்மையான புன்னகையில் அதைக்கடந்தார். அவற்றிலிருந்து சில வரிகள்
எத்தனை மென்மையாய்க் கதவை மூடினும்
குழந்தையை முகத்தில் அடித்து துரத்தின
மாதிரி வலிக்கிறது.
வீட்டுக் கதவை மூடவாவது குடும்பம் ஒன்று வேண்டும்.

தனிமையின் விளிம்பு
அளவு சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.

செங்கல் அடக்கியவன்
உடம்பு சரியாக இல்லாத போது
தனியாக வரக்கூடாது என்றான்.
பின், கல்லெடுக்கச் சென்றான்.
வீட்டில் யாரும் இல்லை,
தனியாகத்தான் இருக்கிறேன்.
என்று சொல்ல நினைத்தேன்.

இவரது இரவு, தூக்கம் மற்றும் கனவு பற்றிய கவிதைககளை வாசித்தோம், அதில் ஒன்று,
காலத்தை நீர் சொட்டின் மேல் ஏற்றி இருப்பது சுவாரசியமானது,
சொட்டுச்சொட்டாய்

இறுக மூடிய பின்னும்
சொட்டுச் சொட்டாய்
நீர் ஒழுகி கொண்டிருந்த
குளியலறை குழாயின் கீழ்
காலி வாளியை வைத்து விட்டு
தூங்கப் போனேன்.
நள்ளிரவில், கல்யாணமான கனவிலிருந்து விழித்து
குளியலறைக்குப் போனபோது
பாதி வாளி நிறைந்திருந்தது.
குழந்தைகள் பிறந்து வளர்ந்து தனியே போய்
நாம் ஓய்வெடுப்பதற்குள் முழு வாளியும் நிறைந்துவிடும்.
அதுவரை என் கம்பளியைப் பிடித்து இழுக்காதே பெண்ணே,
நான் கொஞ்ச நேரம்
தூங்குகிறேன்.

தூங்காத இரவின் அவஸ்தையை நாசுக்காக, அழகாக சொல்லும் கவிதை
எனக்கு தூக்கம் வரவில்லை.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இரவெல்லாம் நடந்து, களைப்பாய்
நான் போய்ச் சேரும் காலைக்கு,
பூப்போல வந்து சேர்ந்து விடுகிறீர்கள்
குறுக்கு வழியாக.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
எனக்கு தூக்கம் வரவில்லை.

முகுந்த் அவர்களின் குழந்தைகள் உலகம் அன்பும், அழகும்  நிறைந்ததென்பது நாம் அறிந்ததே. சற்றேறக் குறைய அனைத்து கவிதைகளையும் படித்து ஆனந்தித்தோம். அதில் சில முக்கியமான, எங்கள் அனைவரையும் கவர்ந்த கவிதைகளை பகிர்கிறேன்.
ஆட்டம் போடும் வீடு இக்கவிதையில் , அவர் பார்க்கும் பொருட்களும் குழந்தைகள் போல விளையாடிக்களிக்கிறது.
பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.
எதையோ மறந்து போனதால்
உடனே திரும்பினேன், திறந்தேன்.
டிவியும் பிரிட்ஜும் ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன.
அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம்
அணி அணியாகப் பிரிந்து
கபடி ஆடிக் கொண்டிருந்தன.
பழைய சாக்ஸ் கூட தன்னிச்சையாய்
சுற்றிக் கொண்டிருந்தது.
………………………………………………………..
திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும்
என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்!

விளையாட்டு பிள்ளைகள்

இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்த பூங்காவில்
ஒன்று ஊஞ்சலில் நின்றும், உட்கார்ந்தும்
ஒற்றைக் காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ என்று கத்திக் கொண்டும் இருந்தது.
மற்றொன்று காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக் கொண்டும்
ஓ என்று கத்தி கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?

வழி அனுப்ப வந்த குழந்தைகள் கவிதையில் கடைசி சில வரிகள்,

வழியனுப்பி விட்டு திரும்பினார்கள்;
பெரியவர்களைப் பிரிந்து பெரியவர்களும்,
ரயிலை பிரிந்து குழந்தைகளும்.

 

அணியுமாம் தன்னை வியந்து
….
தலையை ஆட்டி மூடியை உதறிவிட்டு
நான் விக்ஸ் டப்பா இல்லை என்றது
நீ யார் என்றதும்
மேஜை மேல் ஏறி நின்று
தன் இரட்டை குடுமியை தூக்கி
‘நான் தென்னை மரம்’ என்றது
தென்னை மரத்திலிருந்து
விக்ஸ் மிட்டாய் கொட்டியது.

நல்ல பலூன்
‘சாமி காப்பாத்து….
நல்ல புத்தி கொடு,
நல்ல படிப்பு கொடு,
நல்ல ஆரோக்கியம் கொடு’ என்று சொல்லிவிட்டு
கொஞ்ச நேரத்துக்குப் பின்,
நல்ல ரெட் பலூன் கொடு’ என்றாள்.
சாமி திடுக்கிட்டார்.

பூஜ்ய வாத்து
…..
‘ஜீரோ வாத்து தான் பாக்கி இருக்கும்’ என்றாள் நேயமுகில்.
அந்த ஜீரோ வாத்து
எப்படி இருக்கும் என்றேன்.
‘அது ரொம்ம்ம்ம்ப குட்ட்ட்ட்டியா இருக்கும்’ என்றாள்.
ஒரு வாத்தாக வளர்ந்து விடாதே,
என் பூஜ்ய வார்த்தே!

கிருஷ்ணா
வெண்ணெய் உண்ணும்
கிருஷ்ணன் சிலையை வைத்து
விளையாடிக் கொண்டிருந்த நேயமுகில்,
‘வாயில் விரல் வைக்காதே கிருஷ்ணா’ என்றாள்.
‘ஸாரி நேயமுகில்’ என்றான் கிருஷ்ணன்.

கவிஞரின் பரிவும், கருணையும் வெளிப்படும் கவிதைகளில் எனக்குப் பிடித்தமானது,
எழுப்புதல்
கீழ்வீட்டுக் குழந்தை வந்து
என் தண்ணீர் பாட்டிலுடன்
விளையாடிவிட்டுப் போனது.
குழந்தை படுத்து இருப்பது போல்
சுவர் ஓரம் உருண்டு கிடந்தது பாட்டில்.
மெதுவாக எழுப்பி உட்கார வைத்தேன்.
தழும்பி அடங்கியது தண்ணீர்.
அது வரைக்கும் திருதிரு என்று
முழித்தபடி
உட்கார்ந்திருந்தது குழந்தை.

பிரிந்து போன குழந்தை பூச்சி
….
பையை உதறிப் பார்த்துவிட்டு
எடுத்து வந்திருக்கலாம்
குட்டி பூச்சி பாவம்,
பஸ் நம்பர் கூட தெரியாது.

இவ்வாறாக அவரின் முழுத் தொகுப்பையும் நண்பர்கள் அனைவரும் ஒரு மாதம் முன்பே படித்து குழுமத்தில் பகிர்ந்து கவிஞருடன் கலந்துரையாடியதில் முடிவாக, பாரதியாரின் அதே சின்னஞ்சிறு பாடலின் கடைசி இரண்டு சரணங்கள் பாடியதில் இரண்டு வரிகள்,
இன்பக்கதைகள் எல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ,
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ.

மிகப் பொருத்தமாக அமைந்து, நிகழ்வு நிறைவுடன் முழுமையுற்றது. இந்நிகழ்வை வடிவமைத்த வேணு மற்றும் சரண்யா இருவருக்கும் நன்றி.

அன்பும் நன்றியும்,
தீபா.R

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2025 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.