இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள்.
ஒரு கவிதையைப் போல இன்னொரு கவிதை இருப்பதில்லை. எந்த இரண்டு கவிதைகளையும் ஒன்று போல வாசிக்கவும் முடியாது. செவ்வியல் இசையை ரசிப்பதைப் போலக் கவிதை வாசிப்பதற்கும் சில பயிற்சிகள். அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன. அதே நேரம் திரையிசை பாடல்களைக் கேட்பதை போல நேரடியாக மனதில் சென்று தேங்கிவிடும் கவிதைகளும் இருக்கின்றன,

ஒரு கவிதையைப் புரிந்து கொண்ட விதத்தை வைத்து மற்றொரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒரு சாவியிருக்கிறது. கவிதை துளையில்லாத பூட்டு. எங்கே சாவியைப் பொருத்த வேண்டும் என வாசகனே கண்டுபிடிக்கிறான்.
நான் கவிதை படிப்பதில் ஆனந்தம் கொள்கிறவன்.
எனது காலை கவிதையோடு துவங்கக் கூடியது. இளவெயிலைப் போல எனக்குக் கவிதையும் தினமும் தேவைப்படுகிறது.
மின்மினிகள் தனக்கென ஒளியைக் கொண்டிருப்பதைப் போலச் சில கவிதைகளில் மாறாத ஒளி மினுங்குவதைக் கண்டிருக்கிறேன். கவிதையை வாசிக்கத் துவங்கும் போது வாசிப்பவரின் வயது மாறத் துவங்குகிறது. மாறுகிறதா, அல்லது கலைகிறதா,
அமர்ந்த நிலையில் நம்மை ராட்டினம் உயரத்திற்குக் கொண்டு போய்விடுவதைப் போலக் கவிதை மேலே கொண்டு செல்கிறது. அப்போது நமக்குத் தெரிந்த காட்சிகள் வியப்பாக மாறுகின்றன. உயரம் தரும் சந்தோஷம் எப்போதுமே அலாதியானது.
அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கு நம் மனது ஏங்குகிறது. கவிதை சட்டென நமது அன்றாட உலகை, அதன் காட்சிகளை மாற்றிவிடுகிறது.
கவிதையின் வரிகள் எனக்கு படிக்கட்டுகள் போலவே தோன்றுகின்றன.
கவிதைக்குள் செல்லும் அரூபப் படிக்கட்டுகள் நம்மை எங்கே கொண்டு செல்கின்றன என உரையாடலின் போது கவிஞர் தேவதச்சன் கேட்டார்
உள்ளும் வெளியும் என்று பதில் சொன்னேன்.
அறிந்த உலகிலிருந்து அறியாத உலகிற்கும், தெரிந்த காட்சிகளை அதன் ஆழத்திற்கும், மொழியின் வழியாக மொழிவசப்படாத விஷயங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்வதாகச் சொன்னேன்
கவிதையின் வரிகள் படிக்கட்டுகள் தானா என்று தேவதச்சன் மறுபடியும் கேட்டார்
படிக்கட்டாக கொள்வது ஒருவகை விளையாட்டு என்பேன். சில வேளைகளில் அது பனிச்சறுக்கு. சில தருணங்களில் அது மலையேற்றம். கடலாடுதல், இருட்டில் நடத்தல். ஊஞ்சல் ஆடுதல்.
ஒவ்வொரு கவிஞனும் தனக்கென ஒரு குகையைக் கொண்டிருக்கிறான்.. கதவுகளற்ற அந்தக் குகைக்குள் வசிக்கிறான்.. அதன் சுவர்களில் சில விசித்திர சித்திரங்களை வரைந்து வைத்திருக்கிறான். இறந்த விலங்குகளின் உடல்களையும் அங்கே பாதுகாத்து வைத்திருக்கிறான். குகை ஒரே நேரத்தில் காலத்திற்குள்ளும் காலத்திற்கு வெளியிலும் இருக்கிறது. குகையில் வாழுகிறவர்கள் காலத்தை உறையச் செய்கிறார்கள். புராதனம் என அதைச் சொல்ல வேண்டும். குகைவாசியின் பசியும் வெளிவாசியின் பசியும் ஒன்றில்லை. குகைவாசி வெளியுலகிற்கு தனது குகைக்குள் குறைவான பொருட்களை மட்டுமே கொண்டு வருகிறான். பசியும் காமமும் அவனைத் தீவிரமாக இயக்குகின்றன. குகைச்சித்திரங்கள் உலகம் காணுவதற்காக வரையப்பட்டவையில்லை
கவிதையின் வெளிப்படும் இயற்கையும் உலகின் இயற்கையும் ஒன்றில்லை. அதுவும் நகரவாசிகள் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது நாடகத்திரை போலபின்புலம் மட்டுமே. நதிகளையும் மரங்களையும் மலர்களையும் மட்டுமே நவீன கவிதை பெரிதும் இயற்கையாக கொள்கிறது. வெளிப்படுத்துகிறது. கவிதை பொருட்களை புதிய வெளிச்சத்தில் காணச் செய்கிறது. புரிந்து கொள்ள வைக்கிறது.
சில வேளைகளில் கவிதையின் வரிகள் நகரும் மின்படிக்கட்டுகள் போலத் தானாக முன்நகர்கின்றன. சில தருணங்களில் உயரமான கற்படிக்கட்டுகள் போல முனைந்து கடக்க வேண்டியதாகின்றன. ஒன்று போலத் தோற்றம் தந்தாலும் ஒவ்வொரு படியும் அதற்கெனத் தனியிடத்தையும் தனித்த நினைவுகளையும் கொண்டிருக்கின்றன. படிகளின் வரிசையில் பேதமிருக்கிறதா, அல்லது முதற்படியும் கடைசிப்படியும் ஒன்றையொன்று கோவித்துக் கொள்ளக்கூடியதா, இடைவெளியை கடந்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட படிக்கட்டுகள் தன்னிருப்பில் மௌனமானவை. அவை கால்களின் நினைவுகளைக் கொண்டவை
கிணறுகளைப் போலக் கவிதையும் ஆழம் கொண்டதா அல்லது பாதிப் படிகள் கொண்ட குளத்தைப் போல நம்மை ஏமாற்றக்கூடியதா. படிக்கட்டுகள் எதுவும் இல்லாத கடலிற்குள் எங்கிருந்து நேரடியாக இறங்கிவிடலாமே. அப்படியான கவிதைகளும் இருக்கிறதே. கற்படிகளில் வந்து அமரும் தட்டாரப்பூச்சிகள் படிகளைக் கேலி செய்கின்றன. மலரின் இதழ்களும் படிக்கட்டுகள் தான். அவை அடுக்கபட்டுள்ள விதம் வேறு. மரத்தின் கிளைகளும் படிகள் தான். வாசனையும் படிக்கட்டாக நம்மை நகரச் செய்கிறதே. கிளைவிட்டு கிளை தாவும் அணில் மரத்தையும் வீட்டு மதிற்சுவரையும் ஒன்றாகவே கருதுகிறது. அதற்கு மரம் என்பது இடைவெளிகளின் வடிவம்.
கவிதையின் படிக்கட்டுகளில் அன்றாடம் ஏறி இறங்குகிறேன். சில நேரம் சில படிகளைத் தாவி விடுகிறேன். சில நேரம் ஒரே படியில் நின்றபடி இருக்கிறேன். இன்று வாசித்த இஸாவின் கவிதை ஒன்றில் நத்தை இடுப்பு வரை அம்மணமாக இருப்பதாக வருகிறது. அந்த வரி இதுவரை நான் அறிந்திருந்த நத்தை குறித்த மனப்பிம்பத்தை மாற்றிவிட்டது. வெட்கபடுகிற, தன்னில் பாதியை மட்டுமே வெளிக்காட்டுகிற இந்த நத்தை புதிதாகயிருக்கிறது.

அகழ் இணைய இதழில் வெளியான மலையாள கவிஞர் கல்பற்றாவின் கவிதை குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்தேன் கவிஞனுக்கும் கவிதைக்குமான உறவு குறித்துக் கல்பற்றா தனது கட்டுரை ஒன்றில் அழகாக விவரித்துள்ளார்.. அந்தக் கட்டுரைகளை அவர் சமைக்கிறார் என்று புரிந்தது. கவிதையைப் பற்றிப் பேசத்துவங்கி தனிநபர், சமூகம், உலகம் என மூன்று சட்டகங்களுக்குள் பொருத்தி விடுகிறார். சட்டை அணியாத சிறுவனைப் போலிருக்கும் எளிய கவிதைகளை எழுதும் கல்பற்றா கவிதையின் இயல்பை விவரிக்கும் கட்டுரைகளில் அரக்கு முத்திரையிடப்பட்ட வரிகளாகவே எழுதுகிறார். அவர் வியந்து மேற்கோள் காட்டும் மலையாள கவிதை வரிகள் எதுவும் எனக்கு வியப்பளிக்கவில்லை. அவற்றை விடவும் அவர் நல்ல கவிதைகளை எழுதியவர் என்றே தோன்றுகிறது.
கவிதைக்குள் செல்வதற்கும் கவிதையினுள் இருப்பதற்குமான வழிகளை, சாத்தியங்களை வாசகனே உருவாக்குகிறான். நமது மரபில் தெய்வம் மட்டுமே மலரில் அமர்ந்திருக்கிறது. மலரில் அமர்வது எளிதில்லை.
கவிதை வாசிப்பு என்பது என்வகையில் மலரில் அமர்வதே.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 669 followers
