மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா – 2

மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா-1.

முனைவர் பட்டம் என்பது இன்று சாதாரணமாக மாறி உள்ளது. அதற்குக் காரணம் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக முனைவர் பட்டம் ஆகிவிட்டது என்பதுதான். முன்பு முதுகலைப் பட்டமே கல்லூரி ஆசிரியர் பதவிக்குச் செல்வதற்கான தகுதியாக இருந்தது. புகழ்பெற்ற பேராசிரியர்களான எம்.வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஏறத்தாழ பணி ஓய்வு நிலையில்தான் முனைவர் பட்டம் பெற்றனர். அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்தனர். பெரும்பேராசிரியரான ஜேசுதாசன் முனைவர் பட்டமே பெறவில்லை.

முனைவர் பட்டம் ஓர் அடிப்படைத் தகுதியாக ஆனவுடன் முனைவர் பட்டத்தை பெறுவதற்கான முயற்சிகள் பெருகின. அதற்கான குறுக்கு வழிகள் உட்பட அனைத்தும் உருவாகி, முனைவர் பட்டமே மிகச் சாதாரணமாக ஆகிவிட்டது. தமிழில் முதுகலை படித்து முனைவர் பட்டமும் முடித்தவர்கள் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய மிக எளிய அறிமுகம் கூட இல்லாமல் இருப்பதை தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று முனைவர் பட்டத்திற்கு மதிப்பு என்பது ஒரு சில ஆய்வுத்துறைகளில் மட்டுமே உள்ளது. அதுவும் எந்த பல்கலை கழகம், எந்த வழிகாட்டி என்பதை ஒட்டியே அந்த மதிப்பு அளவிடப்படுகிறது.

மதிப்புறு முனைவர் பட்டம் என்பதும் அவ்வாறே தன்னுடைய மதிப்பை இழந்துவிட்ட ஒன்றுதான். நெடுங்காலத்திற்கு முன்பு கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் என்ற ஒருவர் தன் சட்டைப் பையிலையே ஒரு பல்கலைக் கழகத்தை வைத்திருந்தார் என்று சொல்வார்கள். எல்லாவிதமான ஆவணங்களையும் முறையாக உருவாக்கிக் கொண்டு, சட்டபூர்வமான ஒரு பல்கலைக்கழகத்தை அவர் நடத்தினார். ஆனால் கட்டிடமோ கல்வி முறையோ ஆசிரியர்களோ மாணவர்களோ இருக்கவில்லை. மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதற்கு மட்டுமே நடத்தப்பட்ட பல்கலைக்கழகம் அது. அன்று அவர் கோவி.மணிசேகரன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை அள்ளி வழங்கி இருக்கிறார். அவர்கள் எல்லாம் அந்த பட்டங்களை தங்கள் பெயருடன் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

பின்னர் பல்கலைக்கழகம் என்ற பெயரை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை பல்கலைக்கழக மானிய குழு சட்டபூர்வமாக தடைசெய்து, அதற்கான நிபந்தனைகளை உருவாக்கியது. இன்று ஒரு பல்கலை தொடங்குவது என்பது மிகப்பெரும் பொருட்செலவு, மிகப்பெரிய அமைப்பு வல்லமை கொண்ட ஒரு செயல். அதற்கான அனுமதி பெறுவதற்கும் பல ஆண்டுகாலம் ஆகும். பெரிய அளவிலான வைப்புநிதியும் தேவை. ஆயினும் இன்று வளரும் இந்தியாவில் கல்வி என்பது வளர்ச்சியடைவதனால் தனியார் பல்கலைகள் பெருகியும் வருகின்றன.

அண்மைக்காலங்களில் சில தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைகள் அரசியல் சார்ந்தவர்களுக்கும் திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் மதிப்புறு முனைவர் பட்டங்களை எந்த வகையான கணிப்பும் இல்லாமல் அள்ளி வழங்குகின்றன. மிகச் சாதாரணமான திரைத்துறை சார்ந்தவர்களுக்கும், தங்களுடைய கல்லூரிக்கு விருந்தினராக வர ஒப்புக்கொண்ட பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்குவதனூடாக தங்களுடைய மதிப்புறு முனைவர் பட்டத்தின் கவுரவத்தையே அழித்துக் கொள்கின்றனர்.

ஆனால் அதேசமயம் தமிழகத்தின் ஒரு பல்கலையில் இருந்து ஒரு நவீனப்படைப்பாளிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிப்பதென்பது சாமானியச் செயல்பாடு அல்ல. அதற்கு ஆயிரம் பல்லாயிரம் தடைகள். கி.ராஜநாராயணனுக்கு ஒரு கௌரவ முனைவர் பட்டம் வழங்க பலமுறை முயன்று தோற்றதை பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல்கலை சம்பந்தப்பட்டவர்களுக்கு இலக்கியவாதி எந்த வகையிலும் பொருட்டாகத் தெரிவதில்லை என்பதே காரணம்.

இச்சூழலில் தக்ஷசிலா பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் எனக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது முதலில் எழுந்தது ஒரு தயக்கம்தான். ஏனெனில் அது ஓர் எழுத்தாளராக எனக்கும், என்னுடைய முன்னோடிகள் என்று நான் எண்ணும்  பெரும் படைப்பாளிகளுக்கும் மதிப்புக் குறைவானதாக ஆகிவிடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

ஏறத்தாழ ஒரு மாத காலம் அந்தப் பல்கலை பற்றி நண்பர்களிடம் விசாரித்த பின்னரே பட்டம் பெற ஒப்புக்கொண்டேன். இவ்வளவிற்கும் திரு.தனசேகரன் அவர்கள் என் வாசகர். இதை முன்னர் பெற்றவர் எவர், எவர் என்னுடன் பெறப்போகிறவர் என்ற இரு கேள்விகளையும் முன்வைத்தேன். தக்ஷசிலா பல்கலையின் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் இது என்றும், என்னுடன் பி.டி.உஷா மட்டுமே விருதுபெறுகிறார் என்றும் அறிந்தபின் ஒப்புக்கொண்டேன்.

இந்த கவனமும் தயக்கமும் என்னுடைய ஆணவம் அல்ல என்பது எனது வாசகருமான திரு.தனசேகரன் அவர்களுக்குத் தெரியும். நான் என்னை தமிழின் மகத்தான நவீன இலக்கிய மரபின் அடையாளங்களில் ஒன்றாகவே நினைக்கிறேன். தமிழ் நவீன இலக்கியத்தை உலக அரங்கிற்குக் கொண்டுசெல்லும் கனவுடனும் இருக்கிறேன். உலகளாவிய என் வாசகர்களின் திரள் என்பது என் எழுத்தால் நான் உருவாக்கிக்கொண்டது. அவர்களே இன்றைய தமிழின் தலைசிறந்த வாசகச் சமூகம். ஆகவே என் தகுதி என்பது நவீன இலக்கியத்தின் தகுதியே. அதை எங்கும் எவ்வகையிலும் குறைத்துக்கொள்ள நான் ஒப்ப மாட்டேன்.

‘நான்’ என்று சொல்லும்போது எப்போதும் இந்த கூட்டு அடையாளத்தையே சொல்கிறேன். ஒரு செயலை நாம் செய்யும்போது நம் ஆணவம் பெருகுகிறது, அச்செயல் மெய்யாகவே வளரும்போது நம் ஆணவம் குறையத்தொடங்கி அச்செயல் நம் கண்முன் பெருகி நின்றிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நாம் நம்மை உணர்கிறோம்.

முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு என்பது மேலே நாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து சடங்குகளை உருவாக்கிக் கொண்டது. ஏனெனில் அவ்வாறு ஒரு வழக்கம் இங்கில்லை. மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் அவற்றின் அனைத்துச் சடங்குகளையும் ஐரோப்பிய அரசவைகளில் இருந்து உருவாக்கிக் கொண்டன. ஐரோப்பிய அரசவைகளின் நிகழ்வுகள் ரோமாபுரியின் அவைகளில் இருந்து வந்தவை. அவையே கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்புகளின் சடங்குகளாகவும் நீடிக்கின்றன. ஆகவே இங்கே இன்று அவற்றைப் பார்க்கையில் ஒரு கத்தோலிக்க அவைநிகழ்வு என்ற எண்ணம் வரக்கூடும்.

முனைவர் பட்டம் வழங்கப்படுவதற்கு உள்ளது போலவே முனைவர் பட்டத்தை பயன்படுத்துவதற்கும் நிறைய மரபுகள் வெளிநாடுகளில் உள்ளன. ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர்களும், மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களும் மட்டுமே தங்கள் பேருடன் முனைவர் (Dr) என்று போட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தங்கள் பெயருடன் Dr என்று போட்டுக்கொள்ள கூடாது. அவர்கள் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே- ஆய்வாளர்களோ அறிஞர்களோ அல்ல.

முனைவர் பட்டம் வாங்கியவர்களும் கூட அப்பட்டத்தை பெயர்களுடன் எப்பொழுதும் போட்டுக் கொள்ளக் கூடாது. கல்வித்துறை சார்ந்த செயல்பாடுகளுடன் இணைந்து மட்டுமே அப்பட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இது சட்டம் அல்ல, வழக்கம். கௌரவ முனைவர் பட்டம் என்பது ஓர் ஏற்பு மட்டுமே. எதற்கும் ஓர் அடையாளம் அல்ல.

என் வரையில் இந்த ஏற்பு நான் கல்வித்துறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக அமையும். உதாரணமாக, அண்மையில் தெற்கு கலிஃபோர்னியா பல்கலை உட்பட பல பல்கலை நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். அங்கே என் பெயர் முன்மொழியப்படும்போது இந்த பட்டம் உதவிகரமாக அமையும். அது நான் செய்யவிருக்கும் பணிகளுக்கான ஒரு தொடக்கவிசையை அளிக்கும்.

அக்கார்ட் விடுதியில் நவம்பர் 19ஆம் தேதி காலை 8 மணிக்கே நானும் அருண்மொழியும் சித்தமாகிவிட்டோம். விடுதியின் முகப்புக்கு வந்தோம் அங்கு லேய்மா போவே வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டு காத்திருந்தோம். பிற நண்பர்கள் நேரடியாகவே பல்கலைக்கழகத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். நாங்கள் புதுச்சேரியில் இருந்து கிளம்பி  காலை 10 மணிக்கு தக்ஷசிலா பல்கலையை அடைந்தோம். மிகப் பெரிய வளாகம் கொண்டது. ஏராளமான கட்டிடங்கள் தொடர்ந்து கட்டுப்பட்டு கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் பெரும்பாலும் தொடக்க நிலையிலே இருக்கின்றன.

அங்கே எங்கள் வண்டி நுழையும்போதே செண்டை தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்களை பல்கலை வேந்தர் தனகரன், இணைவேந்தர் ராஜராஜன், இணைவேந்தர நிலா, பல்கலைக்கழக துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சார், பதிவாளர் செந்தில் ஆகியோர் வாசலில் வரவேற்று மலர்க்கொத்து அளித்தனர். வேந்தரின் அறைக்குள் சென்று அமர்ந்து தேநீர் அருந்தினோம். பி.டி.உஷா சென்னையில் இருந்து வந்து சேரவில்லை. பிஜியின் துணைத்தூதர் ஜகன்னாத் சாமி வந்திருந்தார்.

பத்தரை மணிக்கு  கலைகழ்ச்சிகள் தொடங்கின. இந்திய மரபிசையை மேலையிசையுடன் இணைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் வீணைக் கலைஞராகிய புண்ணியா சீனிவாசன் மற்றும் அவர் கணவர் சீனிவாசன் நிகழ்த்திய இசை நிகழ்வு. கர்நாடகப் பாடல்களை புண்ணியா வீணையில் வாசிக்க, கூடவே மின்னணுத்தாளமும் கீபோர்டும் இணைந்து ஒலித்தன. அதன்பின் மாணவர்களின் மரபுசார் நடன நிகழ்ச்சி.

பி.டி.உஷா வந்து சேர்ந்தார். பல்கலையின் புதிய வளாகத்தை அவர் திறந்து வைத்தார். பி.டி.உஷாவை பார்த்தபோது நான் ஒரு விவாதத்தை நினைவுகூர்ந்தேன். உஷா தங்கம் வென்றபோது ஊடகங்கள் அவரைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தன. முதிய விமர்சகரான எம்.கிருஷ்ணன்நாயர் அதை கடுமையாகக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதினார். உடல்சார்ந்த ஒரு வெற்றியை கொண்டாடும் சமூகம் உளம்சார்ந்த, ஞானம் சார்ந்த சாதனைகளை குறைத்து மதிப்பிடுகிறது, அது ஒரு வீழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

அதை மறுத்து கல்பற்றா நாராயணன் ஒரு கவிதை எழுதியிருந்தார். ’உஷா ஓடும்போள்’ என்னும் அக்கவிதையில் ஒவ்வொருவரும் அவரவர் இறுதி எல்லைக்கு அப்பால் வைக்கும் ஒரு காலடி என்பது மானுடகுலத்தின் சாதனையே என்று எழுதியிருந்தார். அது உஷாவால் உடலால் நிகழ்த்தப்படுகிறது. கலைஞனால் கலையில் நிகழ்த்தப்படுகிறது. எல்லா வெற்றிகளும் மானுடவெற்றிகளே என அக்கவிதை சொன்னது.

சென்னையிலிருந்து அஜிதன், சைதன்யா, அஜிதனின் மனைவி தன்யா, அவர்களின் குடும்ப நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன், அவர் மனைவியும் மானசா பதிப்பக பங்குதாரருமான கிருபாலட்சுமி, மானசா பதிப்பகத்தின் முதன்முகமான மானசா ஆகியோர் வந்திருந்தார்கள். நாங்கள் ஒரு அறையில் பேசிக் கொண்டிருந்தோம் மானசாவிடம் நான் டாக்டர் ஆகிவிட்டதாக நவீன் சொல்லி இருந்தார். ‘ஜெயமோகன் தாத்தா ஊசி போடுவாங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதை இந்த பட்டத்திற்கான ஓர் ஏற்பு என்றுதான் சொல்ல வேண்டும். அறைக்குள் பலர் இருப்பதும், அவர்கள் தன்னை கவனிப்பதும் மனசாவை உற்சாகப்படுத்தியது. புதிதாக கற்றுக் கொண்ட சொற்களை நான்கு பக்கமும் சிதறடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன செய்தாலும் கூடவே சொற்களும் கசிந்தன.

எனக்கு ஒரு பதற்ற நிலை இருந்தது. ஒரு நாடகம் தொடங்க இருப்பது போல. நான் என்ன பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். பெரும்பாலும் இத்தகைய தருணங்களில் என்னால் நீண்ட நேரம் பேச முடிவதில்லை. எவர் கவனிக்கிறார்கள், என்ன கவனிக்கிறார்கள் என்று தெரியாத ஓர் அவை என்பது எனக்கு மிகவும் அந்நியமான ஒன்று. சடங்குசார்ந்த உரையை ஆற்ற முடிவதே இல்லை. நான் என்ன பேசப்போகிறேன் என்று எனக்குத்தெரியவில்லை.

என்னுடைய ஆடையை கொண்டு வந்து தந்தார்கள். ஆழ்ந்த சிவப்பு நிறம் கொண்ட, தோளிலும் விலாவிலும் பெரிய சுருக்கங்கள் கொண்ட பெரிய ‘கவுன்கோட்டு’ இது பிரிட்டனில் அரசகுடிகளுக்கு அரசவைக்கு வகுக்கப்பட்ட நிறம். பிரிட்டிஷ் அரசு அளிக்கும் சர் உள்ளிட்ட பட்டங்களை பெறுபவர்கள் Aristocracy எனும் தகுதிக்குள் நுழைகிறார்கள் என்பதை காட்டுவது இது. அந்த நிகழ்வின் ஒவ்வொரு ஆடை வண்ணத்துக்கும் அதற்கான பொருள் உண்டு. பல வண்ணங்கள். கரிய நிறம் என்பது அரச சபையில் தோன்றுவதற்கான அடிப்படை வண்ணம். 

நிகழ்ச்சி தொடங்கியது. எங்களை அந்த ஆடையுடன் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். நிகழ்வுடன் நேரடி தொடர்புடையவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். பல்கலை வேந்தர், துணைவேந்தர், இணைவேந்தர்கள், பல்கலை பதிவாளர் மற்றும் துறைத் தலைவர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய வண்ணங்களில் சாட்டின் துணியாலான அலங்கார மேல்சட்டைகள். அவர்கள் ஒவ்வொருவரும் சடங்குமுறைப்படி வந்து அமர்ந்தார்கள்.

பதிவாளர் நிகழ்ச்சியை அறிவித்தபின் துணைவேந்தர் எனக்கும் பி.டி.உஷாவுக்கும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க இருப்பதாகவும், மற்றும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க இருப்பதாகவும், அதற்கான அனுமதி அளிக்க வேண்டும் என்றும்  தனித்தனியாக கோரிக்கையை வாசிக்க அதற்கு வேந்தர் ஏற்பை வாசித்தார். முறையான சொற்றொடர்கள் தேவை என்பதனால் எல்லாமே எழுதி வாசிக்கப்பட்டன.

கௌரவ முனைவர் பட்டம் ஒருவரின் சட்டபூர்வமான அசல்பெயருக்கே வழங்கப்பட முடியும். அந்த அசல்பெயருடன் மட்டுமே அதைப் போட்டுக்கொள்ளவும் முடியும். புனைபெயருடன் முனைவர் முன்னொட்டை இணைக்கக்கூடாது, அது மரபல்ல. அதாவது என் பெயர் ஜெயமோகன், ஆனால் அதனுடன் முதலெழுத்து இல்லை என்பதனால் அது புனைபெயர்தான். ஆகவே நான் ‘டாக்டர் ஜெயமோகன்’ அல்ல. நான் எப்போதுமே ஜெயமோகன் என்று மட்டுமே போட்டுக்கொள்வதனால், என் பெயருடன் எப்போதுமே முனைவர் பட்டம் இணைக்கப்பட வாய்ப்பில்லை.

என் தந்தை பெயரை நான் என் பெயரிலிருந்து விலக்கியது நன்கு எண்ணிச் செய்யப்பட்டதுதான். என் அடையாள அட்டைகளில் நான் என் தந்தை பெயருடனேயே இருக்கமுடியும், அது என் பிறப்பின் இன்றியமையாமை. என் நூல் அட்டைகளில் நான் என் பெயருடனேயே இருக்கவேண்டும் என எண்ணினேன். எழுத்தாளனாக நான் என் ஆசிரியர்களின் நீட்சியே ஒழிய, என் தந்தையின் வாரிசு அல்ல.

என் சட்டபூர்வப்பெயருடன் முனைவர் பட்டம் முறையான சொற்றொடர்களில் அறிவிக்கப்பட்டது. அதாவது என் பாஸ்போர்ட் பெயர், ஜெயமோகன் பாகுலேயன் பிள்ளை. பரவாயில்லை, பிள்ளைவாள் பெயருடன் முனைவர் சேர்ந்துகொண்டது என எண்ணி புன்னகைத்துக் கொண்டேன். என்னை வசைபாடும்போது “ஆமா, இவன் பெரிய பிஎச்டி” என்று சொல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. இப்போது என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை.

முடிவெடுக்கும் சடங்கு முடிந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு வேந்தரின் அடையாளத்துடன் ஒருவர் முன்னால் செல்ல, அவரைத் தொடர்ந்து பட்டமளிப்பு ஊர்வலம் நிகழ்ந்தது. இந்த ஊர்வலமே சர் பட்டம் அனைத்திற்கும் பிரிட்டனின் அரசில் வழக்கம். அரசரின் தனியறையில் இருந்து அவைக் கூடத்திற்கான வருகை அது. இத்தகைய நிகழ்வை வெண்முரசில் வெவ்வேறு வகையில் சித்தரித்திருக்கிறேன். ஆனால் இது மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பது என்னுடைய கற்பனைதான். ஏனெனில் இதை நமது நூல்கள் பெரும்பாலும் குறிப்பிட்டதில்லை. ஆனால் இந்த ஊர்வலம் என்பது ஐரோப்பிய அரச சபையில் மிக முக்கியமான ஒன்று. அப்போது அவை எழுந்து நின்று வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்பது மரபு. பிரிட்டனின் சபையில் அதற்கான வாழ்த்துரைகளுமே முறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஊர்வலத்தில் எவர் முன்பு செல்ல வேண்டும் எவர் பின்னால் செல்வார்கள் என்பதற்கும் நெறிமுறைகள் உண்டு. அந்த வரிசையில் மேடையில் அமரவேண்டும். மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் இறுதியாக வர வேண்டும். மேடையில் அமர்ந்த பிறகு முறையான நிகழ்ச்சிகள் தொடங்கின. பல்கலை பதிவாளர் பேரா.செந்தில் விழா தொடங்குவதை அறிவிக்க வேந்தர் ஏற்பு அளித்தார். வரவேற்புரை வழங்கினார். துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சார் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சாதனைகளை, கனவுகளை பற்றிய அறிக்கையை அளித்தார்.

முதலில் பி.டி.உஷா அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. விருது அளிக்கப்பட்ட பின் அவர் ஓர் ஏற்புரை வழங்கினார். என் பெயர் சொல்லப்பட்டு எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிப்பது அறிவிக்கப்பட்டது. அதற்கு வேந்தர் ஏற்பு தெரிவித்தார்.

பட்டத்தைப் பெற்றபின் அதன் பிறகு நான் ஒரு சிறு உரை ஆற்றினேன். இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினேன். மிகச் சுருக்கமாக நான் ஓர் இலக்கிய மரபின் உறுப்பினராக அங்கு வந்திருப்பதாகவும், அந்த மரபுக்கு கிடைத்த ஏற்பு என அந்த பட்டத்தை கொள்வதாகவும், பொதுவாக நவீனத் தமிழ் எழுத்து என்பது தமிழ்ச் சூழலில் அமைப்பாலோ கல்வித்துறையாலோ ஏற்கப்படாத ஒன்றாகவே இருக்கின்றது என்றும், அந்த மரபு உடைக்கப்பட்டு அதற்கு ஏற்பு அமையத் தொடங்குவதற்கான ஒரு புள்ளியாக அதை எடுத்துக் கொள்வதாகவும் சொன்னேன். என்  முன்னோடிகள் கவுரவிக்கப்படவில்லை, ஆனால் என் வழித்தோன்றல்கள் கல்வித் துறையால் ஏற்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

பொதுவாக ஒரு தத்தளிப்பு எனக்கு இருந்தது. நீண்ட நேரம் நடந்த நிகழ்வு என்பதனால் மட்டும் அல்ல. அந்த அதை ஒரு வகையில் உணர்ச்சிகரம் என்றுதான் சொல்ல வேண்டும். நேரடியான உணர்ச்சிகர  நிலைகள் எனககு வழக்கமில்லை. பொதுவாக மலையாளிகளே உணர்ச்சிகரமற்றவர்கள் என்பதுண்டு, இருக்கலாம். என் முன் திரண்டிருந்த என் நண்பர்கள், நான் அந்த தருணத்தை நவீன இலக்கியத்தின் ஒரு விரிந்த பரப்பில் வைத்துக்கொண்டது என பல காரணங்கள் இருக்கலாம்.

உண்மையில் மிகக் குறைவாகவே தமிழ்நாட்டில் நான் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன் – நான் பிறரை கௌரவிக்கிறேன் என்பது வேறு விஷயம். என் அறுபதாம் ஆண்டு நிகழ்வுக்குப்பின் இது என் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வு. ஆகவே அவர்களின் உணர்வுநிலைகள் உச்சத்தில் இருந்தன.

வேந்தர் தனசேகரன் மகாலிங்கம், மகன் ராஜராஜன், மகள் நிலா மற்றும் மருமகள்

வேந்தர் தனசேகரன், இணைவேந்தர்கள் ராஜராஜன் மற்றும் நிலா ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். பிஜி தீவின் துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி பேசினார். லெய்மா போவேயின் உரை மிகத் தீவிரமான ஒன்றாக இருந்தது. அதை ஒரு வகையான ஒரே நிகழ்த்துகலை என்றுதான் சொல்ல வேண்டும். இரு கைகளையும் அசைத்தும், அவையை நோக்கியும் மேடை நோக்கியும் நாடகீயமாகத் திரும்பியும், கணீரென்ற குரலில் உற்சாகம் ததும்பும் பாவனைகளுடன் அவர் பேசியது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சிற்றுரைகளில் ஒன்று.

மிக எளிய ஒரு நிலையில், ஓர் ஊக்கம் மட்டுமே தொடக்கமாகக் கொண்டு பெருஞ்செயல்கள் பிறக்க முடியும் என்றும்; தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செய்யப்படும் செயல்களே வெற்றி நோக்கிச் செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அதைச் சொல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் கொண்டவர் அவர். வரலாறு என்பது முதல் காலடியில் இருந்து தொடங்குகிறது. வரலாறு என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் வைத்துக் கொண்டே இருக்கும் தொடர்காலடிகளின் வழியாக நிகழ்கிறது என்பதற்கு அவரே உதாரணம்.

அருண்மொழி பிறகு என்னிடம் “என்ன உரை! என்ன உரை! ஒரு கணம் கூட அவர்களிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை!” என்று சொன்னாள். நான் சொன்னேன் “தன்னந்தனிப் பெண்ணாக ஒரு நாட்டில் ஒரு பெரிய மக்கள் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். மக்களைத் திரட்டுபவர்கள் மாபெரும் பேச்சாளர்கள்தான். ஆக்கத்துக்கும் சரி, அழிவுக்கும் சரி”

இரண்டரை மணிக்கு தொடங்கிய விழா ஐந்தரை மணிக்கு முடிவடைந்தது. விழா முடிவை பதிவாளர் அறிவிக்க மீண்டும் ஒரு சிறு ஊர்வலம் நடந்தது. அவைக்கு வந்தது போலவே அதன் எதிர்த் திசையில் திரும்பி அவை நீங்கினோம். வேந்தரின் அறைக்குச் சென்று சேர்ந்ததும் விழா நிறைவுற்றது. ஒரு மூன்றரை மணி நேர மாபெரும் நாடகத்தின் முடிவு போல தோன்றியது.

என்னுடைய நண்பர்கள் என்னை பார்க்க விரும்பினார்கள். ஆகவே அங்கு சிற்றவைக்கூடத்தில் நான் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் எனக்கு பொன்னாடை போர்த்தி, கட்டித் தழுவி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பாவண்ணன், பவா செல்லத்துரை, கண்டராதித்தன், முகையூர் அசதா என எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். வாழ்த்துக்களும், முத்தங்களும், கேலிகளும், சிரிப்புகளும் என நாள் நிறைவடைந்துகொண்டே இருந்தது. முந்தைய நிகழ்வின் நீண்ட சம்பிரதாயத் தன்மையை ஒட்டுமொத்தமாக தலைகீழாக்கி ஒரு தன்னிச்சையான கொண்டாட்டத்தை அந்த சந்திப்பு உருவாக்கியது. அங்கே அவர்கள் நடுவே நிற்கையில் நான் ஈட்டிக்கொண்ட செல்வம் இது என்று பெருமை எழுந்தது.

வேந்தரும், துணைவேந்தரும், இணைவேந்தர்களும் வந்து வழியனுப்பினர். அனைவரிடமும் விடை பெற்று கிளம்பி மீண்டும் அக்கார்ட் விடுதிக்கு வந்தோம். அருண்மொழி களைப்புடன் அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். நான் அருகே அமர்ந்தேன். ஓர் இழப்புணர்வு. எந்த எய்துதல்களும் உடனடியாகக் காலத்தில் பின்னகர்கின்றன, எய்தப்பட்டவை இயல்பாக ஆகிவிடுகின்றன. அந்த இழப்புணர்வை வெல்ல ஒரே வழிதான். அடுத்த செயல். என் அடுத்தகட்ட பணிகள் பற்றிய மின்னஞ்சல்கள் காத்திருந்தன. ஒவ்வொன்றுக்காக பதில் எழுத ஆரம்பித்தேன். அரைமணி நேரத்தில் முழுமையாகவே வெளியே வந்துவிட்டேன். அடுத்த பயணம் இன்னும் ஐந்து நாட்களில் பிரிட்டனுக்கு. அடுத்த பணிகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.