முகுந்த் நாகராஜன் வாசிப்பு- சரத்
அன்புள்ள ஜெ,
கடந்த அக்டோபர் 25 அன்று கவிஞர் முகுந்த் நாகராஜன் அவர்களுடன் ஒரு நாள் சந்திப்பை கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள் ஓசூரில் ஒருங்கிணைத்திருந்தார். மிகுந்த தயக்கத்திற்கு பிறகு சந்திப்பிற்கு முகுந்த் நாகாராஜன் அவர்கள் ஒப்புக் கொண்டு வந்திருந்தார். 2003இல் முதல் கவிதைத் தொகுப்பிற்கு நீங்கள் அவருக்காக நடத்திய கூட்டத்திற்கு பின்பு இதுவே அவர் கலந்து கொள்ளும் கூட்டம் என்று கூறினார். அவரது கவிதைகளைப் போல அவரிடம் அவ்வளவு எளிமையாக நெருங்கிவிட முடியவில்லை. ஒருவித தயக்கத்துடன் தனிமையை விரும்பக் கூடியவராக அல்லது அதுதான் அவரது இயல்பு என்பதைப் போல் இருந்தார். நெருங்கி பேசியவற்றிற்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு தனது தனிமைக்குள் விரைந்து சென்று விடுபவராக இருந்தார்.
அவரது பல கவிதைகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு வாசகர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. வேணு முழுத்தயாரிப்பில் வெவ்வேறு தொகுதிகளின் கவிதைகள் அவற்றின் பேசு பொருளால் இணைபவற்றை தொகுத்து வைத்திருந்ததும் கூடியிருந்த நண்பர்கள் முன்னதாகவே முழுத் தொகுப்பையும் படித்துவிட்டு வந்திருந்ததும் அவரது கவிதையுலகின் மீதான வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்ள உதவியது. கவிஞரும் பல கவிதைகளுக்குப் பின்னான அவரது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். என்னுடைய வாசிப்பையும் கவிஞருடனான சந்திப்பையும் கொண்டு அவரது ஐந்து கவிதைகளின் தொகுப்பில் இருந்து நான் அடைந்த அனுபவத்தை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன்.
2000 இன் முற்பகுதியில் வேலைக்காக நகரத்திற்கு செல்லும் கவிஞர், அங்கு அடையும் தனிமையும், நகரத்தின் வெறுமையும், வேலையில் இருக்கும் உயிர்ப்பற்ற தன்மையும், ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் உணர்வுமே முதலில் அவரது மொழியில் கவிதையாகிறது என்று தோன்றுகிறது.
அவரது முதல் தொகுப்பில் அது குறித்தான நிறைய கவிதைகள் இருந்தாலும் உதாரணத்திற்காக இரு கவிதைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
நீலம் என்று ஒரு நிறம்
ஒரு காலத்தில் வெளிர்நீலம்
எனக்குப் பிடிக்கும்
வானத்தை, கடலை, கிருஷ்ணனை
நினைவூட்டும் வெளிர்நீலம்
எனக்குப் பிடிக்கும்.
என் தூரத்து உறவினர்களும்
இதை அறிந்திருந்தார்கள்.
வேறு நிறமேஅணிவதில்லை என்று
வீட்டில் குறை சொன்னார்கள்.
வேலைக்காய் தொலைதூரம் வந்த பிறகு
வெளிர்நீலம் ஒத்து வரவில்லை.
தினமும் துவைக்க முடியாத சூழ்நிலையில்
அடர்பழுப்பும், கரும்பச்சையும்
நீலத்தைத் துரத்தி விட்டன.
சனியன் பிடித்த நீலத்தை
விட்டு ஒழித்ததற்காக
வீட்டில் சந்தோஷப்பட்டார்கள்
சனியன் பிடித்தது நீலம் அல்ல,
வேலைதான் என்றால்
அவர்களால் நம்பவே முடியாது.
தனிமை கண்டதுண்டு
நான் தனியாய் தங்கி இருக்கும்
வீட்டின் கதவை மூடுவது எப்படி என்று
இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
பூட்டைத் திறந்து விடுகிறேன் சரியாக, தினமும்.
ஆனால், உள்ளே நுழைந்து மூடும் போதோ,
யாரையோ வெளியே விரட்டிக் கதவை மூடுவது
போல் தோன்றி விடுகிறது.
எத்தனை மென்மையாய் கதவை மூடினும்,
குழந்தையை முகத்தில் அடித்துத் துரத்தின
மாதிரி வலிக்கிறது.
வீட்டுக் கதவை மூடவாவது
குடும்பம் ஒன்று வேண்டும்.
இந்த நகரின் வெறுமையின் பிரம்மாண்டத்தில், “சட்டென்று செவ்வகமான உலகத்தில்”, அடைந்து, பொருளின் தேடலுக்காக சிக்குண்டு “முடி வளர்த்து திரிந்து” கிடந்தவருக்கு, இதிலிருந்து மீள்வதற்கான வழிகளை வெவ்வேறு கவிதைகளின் வழி அவர் தேடிப்பார்ப்பதை முதல் தொகுப்பில் நாம் பார்க்க முடிகிறது. நோக்கமில்லாமல் அலைந்து திரியும் அவரை “சும்மா” என்ற கவிதையில் காண முடிகிறது.
இந்த நகர வாழ்க்கையின் தினசரி வேலைகளை மறந்து விட அவர் விரும்புவதை “நினைக்கத் தெரிந்த மனமே” கவிதையில் வெளிப்படுத்துகிறார். நிலவை கவிதையாய் மாற்றிப் பார்த்து தோற்கிறார். கடந்து போன பால்ய கால நிகழ்வுகளில் கரைந்து போன ஊரினை, வாழ்வை ஏக்கமாகப் பார்க்கிறார்.
அவர் உணர்ந்தவற்றை சொல்ல முயன்று தோற்கும் கீழே வரும் கவிதையில் எப்படியோ குழந்தையைப் பற்றிக் கொண்டு விடுகிறார்.
சொல்லத்தான் நினைக்கிறேன்
பெயர் தெரியாத கோவிலின்
மார்கழி காலைப் பொங்கலின் ருசியை
கனவில் பார்த்த நதியின் மாயத்தை,
முன்சீட் பெண்ணின் தலைப்பூ மணத்தை,
அவள் கைக்குழந்தையின் கால் கொலுசழகை
சொல்லத்தான் நினைக்கிறேன்.
முடியவில்லை.
சொல்ல முடிந்ததெல்லாம்
இனிப்பு–புளிப்பு–கசப்பு–உப்பு,
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு,
கருப்பு வெளுப்பு பழுப்பு சிகப்பு,
ஒன்று இரண்டு மூன்று நான்கு.
குழந்தையைப் பற்றிக் கொண்டுவிடுகிறார் என்று சொல்லும் போது மற்றவற்றை விட்டு விடவில்லை. அவரது அனைத்து தொகுதிகளிலும் கனவுகளின், பெண்களின் வாழ்வின் மீதான கவிதைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பிரதானமாக அமைந்திருப்பது குழந்தைகள் உலகம் தான். குழந்தைகளின் உலகத்தை கவனிக்கத் தொடங்கும் தோறும் அவரது கவிதைகள் வண்ணமயமாகிவிடுவதைக் காண முடிகிறது. குழந்தைகளின் உலகம் பற்றிய அவரது கவிதைகள் என் மீது ஆழ்ந்த பாதிப்பை செலுத்துவதற்கு முதன்மைக் காரணம் அவரது மொழி என்று தான் தோன்றுகிறது. எந்த வித பாசாங்கும் இல்லாத, சிக்கல்களும் இல்லாத மழலை மொழியில் அக்கவிதைகள் அமைந்திருப்பது நம்மை உற்சாகமாக்கி விடுகிறது.
தம் மக்கள் மழலை மொழி
‘டுட்டு’ என்று ஒருத்தன் குறிப்பிடும் ரயிலை
‘டாட்டா’ என்பானாம் இன்னொருத்தன்.
‘சாச்சா’ என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி.
பிஸ்கட்டை ‘அக்கி’ என்று சொல்பவளும்,
‘பைபை’ என்று பைக்கை சொல்பவளும்.
டிவியை ‘டிடி’ என்பவனுமாக
வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது
குழந்தைகளின் உலகம்.
எல்லாவற்றையும் எல்லாரும்
ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்
சொல்லித்தருவோம் அவர்களுக்கு.
‘கண்ணாமூச்சி’ கவிதையில்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கண்ணை மூடிக்கொண்டு
மகளைத் தேடும் அம்மாவை
ஓடி வந்து தொட்டு
அவுட் ஆக்குகிறாள்
விளையாடத் தெரியாத
சிறு மகள்
என்ற கவிஞரை ‘அவுட்’ செய்து விடுகிறது குழந்தைகளின் உலகம். அவரது நகர வாழ்க்கையை குழந்தைகளைக் கொண்டு அவரால் சுலபமாக எதிர்கொள்ள முடிகிறது இப்போது என்று தோன்றுகிறது.
மரம் ஏறிய சின்னப்பெண் கவிதையில்
வானத்தின் தேவதை போல் அல்லவா
ஒலித்தது அவள் குரல்!
உதிர்ந்த காய்களை சேகரித்தார்கள் தோழிகள்.
இன்னும் வேண்டுமா? என்று கேட்டாள் தேவதை.
அடுத்த மரத்தின் உச்சியில்
நடமாடிக் கொண்டிருந்தாள்
கீழ் உலகின் கவலைகள் ஏதுமின்றி.
மறுபடி பார்க்க முடியுமோ, இல்லை,
மரம் மரமாக நடந்து போய் விடுவாளோ
என்று மயங்கினேன் என்கிறார்.
காட்டுக்குக் கலர் அடித்தவள் கவிதையில்
கலர் அடித்துக் கொண்டே
கொஞ்சம் கொஞ்சமாக
காட்டுக்கு உள்ளே போக ஆரம்பித்தாள்
என்னை வெளியே நிறுத்திவிட்டு
என்றவாறு குழந்தைகள் உலகை வெளியிலிருந்து அவதானிக்கும் கவிதைகளின் வழியே, அவரை குழந்தைகள் மெதுமெதுவாக அவர்களது உலகிற்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
கின்மோர்
தூங்கப்போகும் முன்
ஆனியன் விளையாட்டு
விளையாட ஆரம்பித்தோம்
நானும் நேயமுகிலும்.
‘ஆனியன் கெடையாது’ என்று
ஆரம்பித்து வைத்தேன்.
‘கீனியன்?’ என்றாள் சிரிக்க ஆரம்பித்து.
‘கிடையாது’ என்றேன் உறுதியாக.
‘மீனியன்?’ என்றாள்.
‘இல்லை’ என்றேன்.
‘சூனியன், மானியன், வானியன், கானியன்..?’ என
கேட்டுக்கொண்டே போனாள்
சிரிப்பு பொங்கப் பொங்க.
‘விளையாட்டு காலி… தூங்கு…’ என்றேன்.
‘ஒன்மோர் ஒன்மோர்’ என்றாள்.
‘அதெல்லாம் கிடையாது’ என்று விளக்கை அணைத்தேன்.
இருட்டில் ‘கின்மோர்?’ என்றாள் மெதுவாக.
என் கை மீறிப் போய்விட்டது
இந்த விளையாட்டு.
இப்படி விளையாட ஆரம்பித்தவர் பின் குழந்தைகள் இல்லாமலே அவர்களோடு விளையாடிவிட்டு வருகிறார்.
நீர் தெளித்து விளையாடுதல்
முன்பின் பழக்கம் இல்லாத பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிகக் குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும் போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தன்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்.
போக்குவரத்தின் திசை என்னும் கவிதையில்
எதிர்பாராமல்
சாலையில் கடந்து போன
சித்தியைப் பார்த்த குழந்தை
ஆட்டோ உள்ளே இருந்து கூவுகிறாள்.
வண்டி நிற்குமுன்
ஆட்டோ பின்னால் இருக்கும்
சின்ன ஜன்னல் வழியாக
தன் கையை நீட்டி
சித்தியை அழைக்கிறாள்.
பரபரப்பான போக்குவரத்து
அவள் கை நீட்டும் திசையில்
சென்று மீள்கிறது ஒரு கணம்.
என்பதாக குழந்தையின் கை நீட்டலுக்கு தன் பரபரப்பான உலகத்தை ஒரு கணம் நிறுத்தி விடுகிறார். தன் வாழ்வின் பரபரப்பை அல்லது பொருள் தேடலின் வெறுமையை குழந்தைகளின் உலகை கொண்டு நிறைத்துக் கொள்கிறார். இப்போது அவரிடம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பதிலாக இந்தக் கவிதை இருக்கிறது.
என்னிடம் பெரிதாக
‘வாழ்க்கை எப்படிப் போகிறது’
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
அப்புறம் பார்க்கலாம் என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.
இதில் சாப்பிட முடியாமல் முழிக்கும் குழந்தை உருவகமாக மாறி கேலி செய்கிறது. குழந்தைகளின் உலகை கவனித்து, அதில் சஞ்சரித்து அவர்களோடு விளையாட தொடங்கி மூழ்கும் போது அவர் கவிதைகள் சட்டென்று களங்கமின்மையின் உச்சத்தில் ஏறி, ஆன்மீக வெளிப்பாடாக மாறிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவர் இக்கவிதைகளின் வழியே செய்த பயணத்தில் அடைந்த உள் விடுதலை அதிசியக்கத்தக்க எளிமையோடு நம் கண்முன் நிகழ்கிறது. குழந்தைகளின் களங்கமற்ற மனதிற்கு இவ்வாழ்வின் முக்கியமானவற்றை கடவுளிடம் வேண்டிக் கொள்ள சொல்லப்பட்டவற்றிற்கும், ரெட் பலூனிற்கும் எந்த வித்தியசமும் இல்லாமல் போகும் கவிதை அத்தகையது என நினைக்கிறேன்.
நல்ல பலூன்
கைகூப்பி
‘சாமீ காப்பாத்து…
நல்ல புத்தி கொடு,
நல்ல படிப்பு கொடு,
நல்ல ஆரோக்கியம் கொடு’ என்று
வேண்டிக்கொள்ளப் பழக்கியிருந்தோம்.
ஒரு நாள் தனியாக
சாமிவிளக்கின்முன் உட்கார்ந்து,
‘சாமீ காப்பாத்து…
நல்ல புத்தி கொடு,
நல்ல படிப்பு கொடு,
நல்ல ஆரோக்கியம் கொடு’ என்று சொல்லிய
கொஞ்சநேரத்துக்குப் பின்,
‘நல்ல ரெட் பலூன் கொடு’ என்றாள்.
சாமி திடுக்கிட்டார்.
அதே போன்ற இன்னொரு கவிதை ‘ஜோர்’
புது உடை
புது ஜிமிக்கி
புது நெக்லேஸ்
புது ஹேர்கிளிப்
புது வளையல்
புது தொப்பி என
புதிதாய் எதைப் போட்டுக்கொண்டாலும்
பீரோ கண்ணாடிமுன்
நின்று பார்த்துவிட்டு
‘ஜோரா இருக்கு’ என்று சொல்லிக் கொள்வாள்.
மேஜை விளிம்பில்
விரலைக் கீறிக்கொண்டாள் ஒரு நாள்.
ப்ளாஸ்திரி போட்டு விட்டோம்.
அழுதுகொண்டே போய்
பீரோ கண்ணாடியில்
அதைப் பார்த்துவிட்டு
‘ஜோரா இருக்கு’ என்று வந்தாள்.
இத்தனை ஜோராக ஒரு காயத்தை மாற்றிக் கொள்ள முடியுமானால் இந்த வாழ்வில் கவலைக் கொள்ள என்ன இருக்கிறது.! நாம் முதலில் படித்த முதல் தொகுப்பின் ‘தம் மக்கள் மழலை மொழி’ கவிதையில் வித்தியாசங்களைக் கொண்ட குழந்தைகளை அவதானித்த கவிஞர், கவிதைகளின் வழியே, ஒரு குழந்தையின் பேதங்களற்ற தன்மைக்கு வந்து சேர்கிறார். இவ்வாறு குழந்தைகள் உலகின் அருகிலிருக்கும் கவிஞரும் அப்படியே ஆகிவிடுகிறார்.
ஏய்.. நேயமுகில்..
காய்கறிக் கடைக்காரர் பேத்திக்கு
நேயமுகிலின் வயதுதான்.
ஊரிலிருந்து வந்திருந்தாள்.
கடையெங்கும் சுற்றிக் கொண்டிருந்தாள்.
தாத்தாவுக்குத் தெரியாமல்
சின்ன வெங்காயம் இருக்கும் கூடையை
மெல்ல இழுத்துக் கவிழ்க்க
முயன்று கொண்டிருந்தாள்.
‘ஏய் நேயமுகில்’ என்று அதட்டினேன்.
அதை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.
‘இது பேர் ப்ருந்தா’ என்றார் கடைக்காரர்
சிரித்துக்கொண்டே.
எனக்கு மிக பிடித்தமான மேல் சொன்ன மூன்று கவிதைகளுக்கும் ஐந்தாவது தொகுப்பில் அவர் வந்தடைத்திருக்கிறார். இக்கவிதைகளை எழுதிய கவிஞரை குறித்து சட்டென்று அவர் எழுதிய ஒரு கவிதையே நினைவில் வந்தது.
முதல் தொகுப்பில் ‘எப்படி விழாமல் விளையாடினோம்’ என்ற கவிதையில்
நாம் வளர்ந்த மாதிரியே
வீடும் வளர்ந்திருக்கிறது.
அப்போது வெறும் ஒரு அடி உயரத்தில்தான்
இருந்தது அந்த சன்–ஷேட்
உனக்குத்தான் மறந்துவிட்டது என்றான்
கொடுத்து வைத்த அந்தப் பாவி.
இக்கவிதையின் “கொடுத்து வைத்த அந்தப்பாவி” யாக அவரை நினைத்துக் கொண்டேன்.
இத்தனை தொகுப்பிலிருந்து கடைசி தொகுப்புகளில் வேறு குறிப்பிடத்தக்க விதமான கவிதைகள் உருவாகி வருவதை கவனிக்க முடிகிறது. இப்போது குழந்தைக்கு பதிலாக இயற்கையும் அவரது கவிதைகளில் விளையாட தொடங்கியிருக்கிறது.
கடல் காற்று
கடற்கரையில்
வண்ணவண்ண சோப்புக் குமிழிகளைப்
பறக்க விட
சிறு பிளாஸ்டிக் வளையத்தை
சோப்பு நீரில் முக்கி எடுத்து
ஊதுவதற்கு
வாயைக் குவிக்கிறால் கார்த்திகா.
கடல்காற்று
அவளை முந்திக்கொண்டு
வளையத்துக்குள் நுழைந்து
குமிழ்களைப் பறக்கவிடுகிறது,
பாய்மரங்களைக்
காக்க வைத்துவிட்டு.
நெய்தல்
கடலின் முன்னே நிற்கவைத்து
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன் அவளை.
கண்ணாடியில் வெளிச்சம் விழுகிறது என்று
கழற்றிடச் சொன்னேன்.
பின்னணியில் நடந்து போன குடும்பம்
கடந்து செல்லும் வரை காத்திருந்தேன்.
எல்லாம் சரியான ஒரு கணத்தில்
புகைப்படம் எடுத்தேன்.
அழகாக நின்றிருந்த
அவள் பின்னால்
கடல் அவசர அவசரமாக
தலையை முடிந்து கோண்டிருந்தது.
இவ்வாறு காற்றும் கடலும் கவிஞரின் உலகில் இப்போது நுழைந்து கொண்டுள்ளன. கவிதைகளை வாசித்து பகிர்ந்து கொண்ட பின்பாக, கேள்விகள் கேட்கப்பட்டவற்றிற்கும் ஆரம்பத்தில் சொல்லியது போன்றே எண்ணிவிடக் கூடிய வார்த்தைகளால் பதிலளித்தார். எவ்வாறு குழந்தைகளின் உலகிற்குள் வந்து சேர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு பெரியவர்களின் உலகம் மிக சலிப்பூட்டுவதாக இருப்பதாக பதிலளித்தார். நேயமுகில் பெரியவளாகிவிட்டால் உங்களுடைய கவிதைகளிலிருந்து குழந்தைகள் மறைந்து விடுமா? என்ற கேள்விக்கு தெருவில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார். குழந்தைகள் இருக்கும் தெருவிற்காக கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் அவரது கவிதை சட்டென்று நினைவிற்கு வந்தது. குழந்தை உலகில் ஈடுபடும் மனதை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் அவரது கவிதைகள் தமிழ் கவிதையுலகின் அசலான குரல்களில் ஒன்று என வேணு அவர்கள் கூறினார். இத்தனை மென்மையான களங்கமற்ற உயிர்துடிப்பான கவிதைகள் குழந்தைகளின் பல்வேறு அவதானிப்புகள் வழியே உருவாகியிருந்தது, எல்லாரும் குழந்தைகளை விரைவில் கடந்து போன பல தருணங்களை கண்முன் நிறுத்தின. தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி அவர்களுடனான ஒரு இயற்கை நடையும் இச்சந்திப்பில் சாத்தியமாகியது மிக மகிழ்ச்சியான ஒரு தருணம். நிகழ்வை ஒருங்கிணைத்த கவிஞர் வேனு அவர்களுக்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட சரண்யாவிற்கும் நன்றி.
அன்புடன்
க சரத்குமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

