இறைவன், வண்ணதாசன்
Black and white portrait of an old woman with an angelic smile from Trivandrum, Keralaஎழுதுகிறவன், வாசிக்கிறவன் என்கிற கூத்து எல்லாம் இருக்கட்டும். ஒரு எழுபத்தேழு எழுபத்தெட்டு வயது அன்றாடனுக்கு தூக்கம் வருவதற்கும் தூக்கம் வராமலே போவதற்கும் பிரத்யேகக் காரணங்கள் இது இது என்று சொல்ல முடிவதில்லை.
அடுக்கடுக்கடுக்காகப் பாதாளம் வரை தோண்டி, உடலிற்கு ஒன்பது வாசல்களில், மனதிற்கு எண்பது வாசல்களில் ஒன்றிரண்டு தேவையில்லாமல் திறந்திருப்பதை அல்லது மூடியிருப்பதைக் காரணம் சொல்ல முடிகிறவர்கள் இருக்கலாம்.
எனக்கு அதெல்லாம் தெரியாது. சில சமயம் அது உண்மை. சில சமயம் அது பொய். அனேகமாக என் வரையில் அது பொய்யும் இல்லை. மெய்யும் இல்லை.
நேற்றுத் தூக்கம் வரவில்லை. வரவில்லை என்றால் வரவில்லை. அவ்வளவுதான். தூக்கம் வராமல் இருக்கும் போதில் தூக்கம் வருவதற்காக எந்த முயற்சியையும் நான் செய்வதில்லை. அப்படிச் செய்தால் மேலும் தூக்கம் வராது போகும். அது தானாக வரும். ஜன்னல் கம்பி வழி வரும் காற்றுப் போல, பூனைக்குட்டி போல. பூ விரியத் துவங்கிய இருவாட்சி மூட்டில் கீரிப்பிள்ளைகள் புரள்வது போல.
எனக்குத் திடீரென்று சக்தி கணபதியின் ஞாபகம் வந்தது. சக்தி கணபதி ஓவியர். புட்டார்த்தி அம்மன் கோவில் பூசாரியின் மகன். அவர் வீட்டுக்கு ஒரே ஒரு தடவை போயிருக்கிறேன். அவர் வீட்டு வாசல் சுவரில் சக்தி கணபதி ஒரு அம்மன் படம் வரைந்திருந்தார். புட்டார்த்தி அம்மன் படம் தானோ? நான் வரைந்தது என்று அவர் சொல்லவும் இல்லை. காட்டவும் இல்லை. எனக்குத் தெரிந்துவிட்டது அது சக்தி மட்டுமே வரைய முடியும் புட்டார்த்தி என்று. இன்னும் அந்தச் சுவரும் சாயமும் தெரிகிறது.
படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன். லைட்டைப் போட்டேன். வெளிச்சம் அதிக மாக இருந்தது. எதற்குமே அதிக வெளிச்சம் தேவையில்லை. சிறிது வெளிச்சமே போதும். சிறிது வெளிச்சம் மனதிற்குள் இருந்து வருவது என நினைத்துக் கொள்வேன். பெருவிரலில் ஒவ்வொரு ரேகையையும் அதில் வாசித்துவிடலாம்.
எனக்கு ஜெயமோகனின் அந்தக் கதையை வாசிக்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. கதைத் தலைப்பு ஞாபகம் வரவில்லை. கதையின் பெயர்களும் ஆட்களின் பெயர்களும் இப்போது ஞாபகம் வரச் சிரமப் படுகிறது.
கடவுள் என்று பகவதி என்று எல்லாம் போய்ப் போய்த் திரும்பிக் கடைசியில், அப்படிப் போவதை விட்ட பின், ‘இறைவன்’ என்ற தலைப்பு மீன் போலச் சிரித்த முகத்துடன் தண்ணீருக்கு உள்ளே இருந்து வெளியே வந்தது.
தேடி எடுத்து ‘இறைவன்’ கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் திளைப்பில் இருந்து வெளியேறின நிறைவில் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். கால்பக்கத்துக் கட்டில் விரிப்பின் கசங்கல்களை நீவிச் சரிசெய்தேன்.
மாணிக்கம் ஆசாரி வரைந்த அந்த தெக்கதிலே பகவதியை எல்லாம் விட்டுவிட்டு, மாணிக்கம் ஆசாரியுடனும் இசக்கியம்மை அம்மச்சியுடனும் இசக்கியம்மையின் செல்ல மகள் நீலாம்பாளுடனும் இருந்தேன்.
‘எனக்க செல்லமே.. எனக்க செல்ல மகளே.. எனக்க முத்தே…’ என்று இரு கைகளையும் அகல விரித்து இசக்கியம்மை முத்தச்சியை அள்ளியெடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.
எப்போது தூக்கம் வந்தது என்று தெரியாது. அப்படி ஒரு உறக்கம்.
வண்ணதாசன்
(முகநூலில்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

