இலக்கிய வாசிப்பைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்
பாவண்ணன் நேர்காணல்
கேள்விகள் : ஜி.மீனாட்சி
எழுத்தாளர் பாவன்னன் சிறுகதைகள்,கவிதைகள், நாவல்கள், கட்டுரைகல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி, தனி முத்திரைபதித்து வருபவர். ஆழமான, நுணுக்கமான விஷயங்களை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில்எழுதுவது அவரது வழக்கம்.
43 ஆண்டுகளுக்கும் மேலாகஇலக்கிய உலகில் கோலோச்சும் அவரது எழுத்துகள், அவருக்கான பல்வேறு அங்கீகாரங்களை விருதுகள்வடிவில் பெற்றுத் தந்திருக்கின்றன. இயல் விருது, சாகித்திய அகாதமி வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளர்விருது, இலக்கியச்சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் பாவண்ணனின் புகழ் மகுடத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும்வகையில் எழுத்தாளர் சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின் சூரிய விருது வாழ்நாள் சாதனைக்காகஇந்த ஆண்டு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
தற்போது பெங்களூரில் வசித்துவரும் பாவண்ணன், விருது பெறுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து சிலகேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி: எழுத்தாளன் ஆக வேண்டும் என்று விரும்பித்தான் நீங்கள் இத்துறைக்கு வந்தீர்களா ?
பதில்: தொடர்ச்சியாக எனக்கு அமைந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலால்பள்ளிப்பருவத்திலிருந்தே எனக்கு வாசிப்பின் மீது ஆர்வமிருந்தது. நாடோடிக்கதைகள், பஞ்சதந்திரக்கதைகள்,புராணக்கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், படக்கதைகள் என தேடித்தேடிப் படித்தேன். எங்கள்வீட்டுக்கு அருகிலேயே இருந்த நூலகம் எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. பள்ளியிறுதிவகுப்பில் படித்த நேரத்தில் தற்செயலாக நான் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளையும் ஜெயகாந்தன்சிறுகதைகளையும் படிக்க நேர்ந்தது. அன்றுமுதல் என் ஆர்வம் இலக்கிய உலகத்தை நோக்கித்திரும்பியது. கல்லூரியில் படித்த காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளையும் இந்தியச்சிறுகதைகளையும்உலகச்சிறுகதைகளையும் தேடித் தேடிப் படித்தேன். அந்த வாசிப்பின் வழியாக எழுத்தின் மீதுஎனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
எழுதி எழுதி துன்பத்தைக்கடப்பது பற்றி கார்க்கி தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதிய ஒரு குறிப்பு என்னை மிகவும்கவர்ந்தது. அந்த வரி என் ஆழ்மனத்தில் தங்கிவிட்டது. எனக்குப் பொறியாளர் பணி கிடைத்து,அதற்குரிய பயிற்சியில் இருந்த நேரத்தில் ஓர் இரவில் என் துன்பியல் அனுபவமொன்றை ஒருசிறுகதையாக முதன்முதலாக எழுதினேன். எழுத்து என்பது, துன்பத்தை இல்லாமலாக்கவில்லை, துன்பத்தின்பாரத்தை இல்லாமலாக்குகிறது என்பதை அக்கணத்தில் நேரிடையாக உணர்ந்தேன். இனி எழுத்தே என்வாழ்க்கையின் வழி என்பதை அத்தருணத்தில் தீர்மானித்துக்கொண்டேன். நானே வகுத்துக்கொண்டஅப்பாதையிலேயே இன்றுவரை சென்றுகொண்டே இருக்கிறேன்.
கேள்வி: உங்கள் எழுத்துக்கள் முதன்முதலில் அச்சானது எந்தப் பத்திரிகையில் ?
பதில்: நான் எழுதிய முதல் சிறுகதையை தீபம் பத்திரிகைக்குத்தான்அனுப்பிவைத்தேன். ஆனால் அது வெளிவரவில்லை. அதையடுத்து ‘பழுது’ என்றொரு சிறுகதையை எழுதிமீண்டும் தீபத்துக்கு அனுப்பிவைத்தேன். 1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இதழில் அச்சிறுகதைவெளியானது.
கேள்வி: சிறுகதை , கவிதை, நாவல் , கட்டுரை , மொழிபெயர்ப்பு ... இவற்றில் எந்த வடிவம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது ?
பதில்: அனைத்து வடிவங்களிலும் எனக்கு ஆர்வம் உண்டு. மிகவும்பிடித்தமான ஒரே ஒரு வடிவத்தைக் குறிப்பிட வேண்டுமெனில் நான் சிறுகதையைத்தான் சொல்வேன்.
கேள்வி: சிறுகதை நாவல்களுக்கான களங்களை எப்படி கண்டடைகிறீர்கள் ?
பதில்: கதைக்கணங்களைக்கண்டடைவது என்பது ஒன்றைப்போல பிறிதொன்றமையாத அரிய நிகழ்வு. அது ஒரு கனவு போல. காத்திருந்துகனவு காணமுடியாது. தற்செயலாக தோன்றி மறையும் தன்மையை உடையது அது. அது தோன்றும் கணத்தில்அதை சட்டெனப் பற்றிக்கொள்ள வேண்டும். அது சிறுகதைக்குரியதா, நாவலுக்குரியதா என்பதைஅக்கணத்தை மீண்டும் மீண்டும் அசைபோடும்போது நமக்கே தெரிந்துவிடும். அக்கணத்துக்குரியபின்னணி, களம், மாந்தர்கள், சிக்கல், உரையாடல் என அனைத்துமே அடுத்தடுத்த காட்சிகளாகநம் மனத்தில் விரிந்தபடி செல்லும். அதைப் பின்பற்றிச் செல்லும் வகையிலே நம் மனத்தைசுதந்திரமாக அனுப்பிவைத்தால் போதும். அது தானாக தன் போக்கில் பயணம் செய்து தன் இலக்கைஅடைந்துவிடும்.
கேள்வி: உங்கள் படைப்புகளில் மிகவும் சிறந்ததாக , நிறைவானதாக நீங்கள் கருதுவது எது ?
பதில்: சிறுகதைத்தொகுதிகளில் ஆனந்த நிலையம், நாவல்களில்பாய்மரக்கப்பல், கட்டுரைத்தொகுதிகளில் பன்னீர்ப்பூக்கள் ஆகியவற்றை மிகச்சிறந்த படைப்புகள்வரிசையில் வைக்கலாம்.
கேள்வி: யாருக்காக எழுதுகிறீர்கள் ? உங்கள் எழுத்து யாரைப் போய் சேரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?
பதில்: எழுத்து என்பது என் விடுதலைக்கான வழி. வாசகர்கள்அனைவரையும் அது சென்று சேரவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது தன் போக்கில் பயணம்செய்து அவர்களைக் கண்டடைகிறது என்பதையும் நான் அறிவேன். சமீபத்தில் என் நண்பர் மின்சாரரயிலில் பயணம் செய்தபோது, அவருடைய இருக்கைக்கு எதிரில் இரு பெண்மணிகள் என்னுடைய சிறுகதைகளைமுன்வைத்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டே வந்ததைக் காதுகொடுத்துக் கேட்டதாகவும் மாம்பலம்நிலையத்தில் இறங்கவேண்டியிருந்ததால் அவர்களிடம் உரையாடாமலே இறங்கிவிட்டதாகவும் மகிழ்ச்சியோடுதெரிவித்தார். நமக்குத் தெரியாமலேயே அந்த வாசக உலகம் இயங்கியபடி இருக்கிறது.
கேள்வி: உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் அங்கீகாரம் தொடர்பாகநீங்கள் நிறைவாக உணர்கிறீர்களா?
பதில்: எல்லா வகையிலும் நான் நிறைவாகவே உணர்கிறேன். குறையொன்றுமில்லை.
கேள்வி: நீங்கள் பெற்ற விருதுகளில் மறக்க முடியாத விருது எது ?
பதில்: 1982இல் என்னுடைய முதல் சிறுகதை வெளியானது. அதற்குப்பிறகு எல்லா இலக்கிய இதழ்களிலும் நான் எழுதினேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய இதழ்களில் கூட என்னுடைய சிறுகதை வெளிவந்துள்ளது.1986இல் கணையாழி இதழில் வெளிவந்த என்னுடைய முள் என்னும் சிறுகதையை அந்த ஆண்டின் மிகச்சிறந்தசிறுகதையாகத் தேர்வு செய்து 1987 ஏப்ரல் மாதத்தில் இலக்கியச்சிந்தனை அமைப்பு எனக்குமுதன்முதலாக விருதளித்தது. இருபத்தொன்பது வயதில் எனக்குக் கிடைத்த அவ்விருது என்னைமேன்மேலும் ஊக்கம் கொண்டவனாக எழுத வைத்தது. அது ஓர் இனிய தொடக்கம். அதை ஒருபோதும் மறக்கமுடியாது.
கேள்வி: இன்றையஇலக்கியப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: உற்சாகம் அளிப்பதாகவே இருக்கிறது. எல்லா இளம் எழுத்தாளர்களின்படைப்புகளையும் படிக்கமுடிவதில்லை என்றபோதும் முக்கியமானவர்களின் படைப்புகளை நான் தவறவிடுவதில்லை.செந்தில் ஜெகந்நாதன், சுஷில்குமார், விஷால்ராஜா, ஜா.தீபா, திருச்செந்தாழை, கமலதேவி,சுரேஷ் ப்ரதீப், விஜய ராவணன், மயிலன் ஜி.சின்னப்பன், ஹேமி கிருஷ் என பலருடைய கதைத்தொகுதிகள்வெளிவந்ததும் வாங்கிப் படித்திருக்கிறேன். ஒவ்வொருவருடைய கதைகூறல் முறையும் புதுமையாகவும்வசீகரமாகவும் உள்ளது.
கேள்வி: அடுத்து நீங்கள் எழுத விரும்பும் படைப்பு எது ?
பதில்: இரண்டு நாவல்களைத் தொடங்கி, நிறைவு செய்யாமல் அரைகுறையாகவேபல ஆண்டுகளாக வைத்திருக்கிறேன். அவற்றை நிறைவு செய்யவேண்டும்.
கேள்வி: உங்கள் நூல்களில் எந்த நூலுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்தது ?
பதில்: பாய்மரக்கப்பல் நாவலும் பன்னீர்ப்பூக்கள் கட்டுரைத்தொகுதியும்நான் மொழிபெயர்த்த பருவம் என்னும் நாவலும் அதிக பாராட்டுகளைப் பெற்றவை.
கேள்வி: சூர்ய விருது கிடைத்திருப்பது குறித்து...
பதில்: மிகவும் மகிழ்ச்சியாகஉணர்கிறேன். இன்றைய இளம் வாசகர்களின் கவனம் என் படைப்புகள் மீது குவிவதற்கு சூரிய விருதுஅறிவிப்பு உதவியிருக்கிறது.
கேள்வி: நீங்கள் சொல்ல விரும்புவது ஏதேனும் இருந்தால் ...
பதில்: இன்றைய சூழலில் இலக்கிய வாசிப்புப்பழக்கம் என்பதுபெற்றோர் வழியாக, ஆசிரியர் வழியாக, நண்பர்கள் வழியாக அல்லது தற்செயலாக உருவாகும் ஒன்றாகவேஅமைந்துள்ளது. அப்பழக்கத்தைத் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இலக்கியவாசிப்பு என்பதை ஒரு கதையைப் படிப்பதாக நாம் சுருக்கிப் பார்க்கக்கூடாது. இலக்கியத்தின்வழியாக வெவ்வேறு நூற்றாண்டுகள் ஊடே வளர்ந்து வந்திருக்கும் வரலாற்றையும் சமூகத்தையும்மானுடப்பண்புகளையும் உளவியலையும் அறிவியலையும் உறவுச்சிக்கல்களையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். அதை ஓர் அறிவுத்துறையாக கட்டமைத்து, பள்ளிப்பருவத்திலிருந்தே பாடத்திட்டத்தில்ஒன்றாக மாற்றி, அதை கணிதப்பாடத்தைப்போலவும் அறிவியல் பாடத்தைப்போலவும் நாள்தோறும் பயிற்றுவிக்கும்வழிமுறை உருவாகவேண்டும். இளந்தலைமுறையினர் பட்டதாரிகளாக மட்டுமன்றி நல்ல மானுடப்பண்புள்ளவர்களாகவும்உருவாக அம்முயற்சி உதவக்கூடும் என்பது என் நம்பிக்கை.
(அமுதசுரபி – நவம்பர் 2025)
Paavannan's Blog
- Paavannan's profile
- 4 followers

