சென்னையில் ஓர் ஆங்கில வாசிப்புக் குழுமம்.
அன்புள்ள ஜெ.
மானசா பதிப்பகம் புக் கிளப் பற்றிய செய்தியை பகிர்ந்திருந்தீர்கள். Manasa Book Club, Chennai. இப்படி ஒரு அமைப்பை தொடங்குவது பற்றிய செய்தியை முன்னரும் பகிர்ந்திருந்தீர்கள். மானசா பதிப்பகம், ‘புக் கிளப்’, அலுவலகத் திறப்பு. உங்களுடைய தளத்தில் நீங்கள் புக் கிளப் என்பது இன்றைய குழந்தைகளுக்கு மிக உதவியான ஒன்று என்றும், இணைய அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கான வழி என்றும் சொல்லியிருந்ததையும் வாசித்துள்ளேன். புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.
எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே எதையுமே வாசிக்காதவர்கள். பத்து வயது வரை நன்றாக நிறைய வாசித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பின் செல்போனுக்கு அடிமை. கேம்களுக்கு அடிமை. பள்ளிப் படிப்பு தவிர மற்ற நேரமெல்லாம் வேறெந்த நினைப்பும் இல்லை. வாழ்க்கையையே அதனால் இழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்போன்ற குழந்தைகளை இந்த புக் கிளப் போன்ற அமைப்புகளுக்குள் கொண்டுவர முடியுமா என்ன? இவற்றால் உண்மையாகவே ஏதேனும் பயன் உண்டா?
ஆர்.நளினி சுந்தரம்
Manasa Book Club, Chennai.அன்புள்ள நளினி,
மின்னணு அடிமைத்தனம் பற்றி நான் முன்னரே விரிவாக எழுதியுள்ளேன். (மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்). சொல்லப்போனால் சீரான இடைவெளியில் இதை எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். நம் குழந்தைகள் மின்னணு அடிமைத்தனத்தில் சிக்கி அழிந்துகொண்டிருக்கிறார்கள். எதையும் சிறிதுநேரம்கூட கூர்ந்து கவனிக்கமுடியாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கும் அறிவுச்சவால்களை எதிர்கொள்ளமுடியாதவர்களாக ஆகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு நூல்களை வாங்கிக்கொடுப்பதோ, படி படி என ஊக்குவிப்பதோ எந்தப் பயனையும் தராது. ஒன்று, அவர்களுக்கு ‘நேரடியாக செய்யும் செயல்கள்’ தேவை. தாவர அறிமுகம், பறவை பார்த்தல் போன்றவை அவ்வாறான நேரடியான செயல்முறைகள். அவை நிலத்துடனான உறவை உருவாக்குகின்றன. கவனத்தை குவிக்கப் பயிற்றுவிக்கின்றன. இரண்டாவதாக, கூர்ந்த அவதானிப்புக்கு பழக்கமுள்ள சுற்றம் தேவை. இன்றைய குழந்தைகள் மின்னணு அடிமைத்தனத்தை நோக்கி இழுக்கப்படுவதே பிற குழந்தைகளால்தான். சரியான சூழல், சுற்றம் இல்லையென்றால் வாசிப்பை நடத்த முடியாது.
தொடர்ச்சியாக நான் சொல்லி வரும் ஒரு கருத்து, வாசிப்புப் பயிற்சி என்பது. பயிற்சி இன்றி நூல்களை வாசிக்க முடியாது. நூல்களை வாசிக்காதவர்களால் சமகால அறிவியக்கத்தை புரிந்து கொள்ள முடியாது. நூல்களை வாசிக்காதவர் சமகாலத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கும் இணையக் குப்பைகளுக்குள் சென்று சிக்கிக் கொள்ளாமலிருக்க முடியாது. வாழ்வின் பெரும் பகுதியை வீணடிக்க நேரிடும். நீண்ட கால அளவில் தன் அறிவுத்திறனை இழந்து நவீன தொழில்நுட்பத்திற்கு அடிமையாகவும், இன்னொரு கட்டத்தில் தொழில்நுட்பத்தால் பணி நீக்கமும் ஆளுமை நீக்கமும் செய்யப்படும் சருகாகவும் ஆக நேரிடும்.
வாசிப்புப் பயிற்சியை அடைவதற்கான ஒரே வழி என்பது சிறுசிறு புத்தகக் குழுக்கள்தான். மேலை நாடுகளில் இந்த புத்தகக் குழுக்கள் மிகப்பெரிய அளவிலே வாசிப்பை முன்னெடுப்பதற்கான பங்களிப்பை ஆற்றுகின்றன. கூடி அமர்ந்து புத்தகங்களை பற்றிப் பேசுவதுதான் அது. புத்தகங்களைப் பற்றி கேட்பதே அதற்குள் நுழையும் வழி. அனைவருமே அங்கு பேசப்படும் அனைத்து நூல்களையும் படித்து விட்டு வர வேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். அந்த குழுக்களில் பங்கெடுப்பவர்களில் ஒரு சிலர் மிக நன்றாக படித்தவர்களாகவும் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். சிலருக்கு மிக எளிய அறிமுகம் அல்லது ஆர்வம் மட்டுமே இருக்கும். ஆனால் காலப்போக்கிலே அதில் ஈடுபடுகிற ஒவ்வொருவருமே புத்தக ஆர்வம் கொள்வதை, வாசிப்பாளர்களாக மாறுவதைகப் பார்க்க முடிகிறது .
நாங்கள் தொடங்கிய வாசிப்புக் குழுக்களில் கலந்து கொண்ட பலர் மிகுந்த தயக்கத்துடனும் தங்கள் அறியாமை பற்றிய தாழ்வுணர்ச்சியுடனும் வந்தவர்கள்தான். அவர்கள் இன்று சிறப்பாக பேசக்கூடியவர்களாகவும் சில குழுக்களை வழிநடத்த கூடியவர்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்பதை காண்கிறோம். புத்தகக் குழுக்களின் பணிகள் மூன்று.
அ. புத்தகக் குழுக்கள் என்பவை சரியாக நடத்தப்பட்டால் நமக்கு நூல்களை அறிமுகம் செய்தபடியே இருப்பவை.ஆ. நமக்கு வாசிப்பு மனநிலையை தக்கவைத்துக்கொள்ள உதவுபவை.இ. நமக்கு நம் வாசிப்பை பலகோணங்களில் விரித்தெடுத்து ஆழமாக்கிக்கொள்ளும் பயிற்சியை அளிப்பவை.நாங்கள் விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் பல புத்தகவாசிப்புக் குழுக்களை நடத்துகிறோம். அவை எல்லாம் தமிழ் நூல்களுக்காக. விஷ்ணுபுரம் அமைப்பின் களம் தமிழிலக்கியம் மட்டுமே. ஆனால் மானசா புத்தகக்குழு வேறு, விஷ்ணுபுரம் அமைப்புடன் அதற்கு தொடர்பில்லை. அவர்களின் இலக்கு ஆங்கில இலக்கிய வாசிப்பை உருவாக்குவது.
தமிழகத்தில் இன்று நம் குழந்தைகளை பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தவர்கள். தொடக்கநிலை நூல்கள் படிப்பதில் அவர்களுக்கு ஓர் எளிய அறிமுகம் கல்விக்கூடம் வழியாக வருகிறது. ஆனால் அதன்பின் அவர்களில் சிலரே முதிராஇளமை வாசிப்புக்குள் செல்கிறார்கள். எஞ்சியோர் வாசிப்பை விட்டுவிடுகிறார்கள். தீவிரமான, தரமான வாசிப்பை நோக்கி செல்ல அவர்களால் இயல்வதில்லை. அதற்கான வழிகாட்டுதல்கள் நமது கல்லூரிகளில் அல்லது பள்ளிகளிலிருந்து அளிக்கப்படுவதில்லை. அந்த வழிகாட்டலுக்காகவே இந்த புத்தக குழுக்களை நான் பரிந்துரைக்கிறேன்.
விரைவாக ஓடும் குதிரையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒருவர் தன்னியல்பாகவே தானும் அதே விரைவில் ஓடத்தொடங்குகிறார் என்பது போலத்தான் புத்தகக் குழுக்களின் செயல்பாடு. அவற்றுள்ள மிகச்சிறந்த வாசகரின் தரத்தை பிறர் தாங்களும் அடைகிறார்கள். மானசா பதிப்பகம் நிகழ்த்தும் இந்த ‘புக் கிளப்’ பற்றி நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், நான் அறிந்த மிகச்சிறந்த இலக்கியவாசகர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க ஒருவரால் இது நடத்தப்படுகிறது- சைதன்யா இன்று என் ஆசிரியர்கள் அளவுக்கே எனக்கு இலக்கியம் பற்றிக் கற்பிப்பவள்.
எப்படி வாசிப்பது, எப்படி படைப்புக்களுக்கு அடியில் உள்ள கூடுதல் அர்த்தங்களை எடுத்துக் கொள்வது என்பதற்கு எத்தனை காணொளிகள் வழியாகவும் சொற்பொழிவுகள் வழியாகவும் வழிகாட்டினாலும் அது பயனுள்ளதல்ல. தொடர்ச்சியாகச் செயபல்படும் ஒரு வாசிப்புக் குழுமம் மட்டுமே பயனுள்ளது.அத்தகைய ஒரு கூட்டுக் குழு வாசிப்பு ஆங்கில நூல்களுக்கு சென்னை சார்ந்து அநேகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சென்னையில் ஆங்கிலம் வழியாக வாசிப்பவர்கள் மிகமிகமிகக் குறைவு.
சென்னையிலேயே பல கல்லூரிகளில் ஆங்கிலத் துறைகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், முதுகலை பட்டம் பெற்ற்வர்களை பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆங்கில நூல்களின் வாசிப்பு விற்பனை என்பது சென்னையை பொறுத்த அளவிலே கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவிலேயே இருக்கிறது. இந்தியாவின் பதிப்பகங்கள் எவையுமே சென்னையை ஒரு புத்தக விற்பனைக் களமாக கருதுவதே இல்லை. இந்தியாவின் பதிப்பாளர்கள் எவருக்குமே சென்னையில் கடைகளோ, விற்பனைத்தொடர்பாளர்களோ இல்லை. தமிழகத்திலேயே இல்லை. பெங்களூரில் ஒரே சாலையில் ஒன்பது ஆங்கில புத்தகக்கடைகள் உள்ளன, தமிழகத்தில் ஆங்கில நூல்களுக்கான ஒரு கடைகூட இல்லை.
ஆனால் சென்னை சேர்ந்த பெரும்பாலான பெற்றோர் ஒருவகையான பேச்சு மொழி ஆங்கிலத்தை தன் குழந்தைகளுக்கு பழக்கிறார்கள் .அந்த ஆங்கிலத்தில் அந்த குழந்தை பேசுவதைப் பார்த்து அது ஆங்கிலத்தில் திறமை மிகுந்தது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் ஆங்கிலத் தரம் என்பது வருந்தத்தக்க அளவுக்கு குறைவானது என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு நமக்கு பெரும்பாலும் ஆளே கிடைப்பதில்லை. தமிழகத்திலிருந்து தொழில்முறை மொழிபெயர்ப்புக்கு கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவானவர்கள். தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் கூட தமிழர்கள் பணியாற்றுவது மிகக் குறைவு.
இந்த ஆங்கில அறிவின்மை என்பது நமக்கு நம்முடைய கல்வி முறையில் இருந்து வருகிறது. பொதுவாக இங்கே ஆங்கிலப்படிப்புக்குச் செல்பவர்கள் பிற படிப்புகளுக்குச் செல்ல தகுதியற்ற மதிப்பெண்கள் கொண்டவர்கள். ஆங்கிலத்தையே தமிழில் புரிந்து கொண்டு மனப்பாடம் செய்து எழுதி வெல்பவர்கள். அல்லது வெறுமே ஒரு பொழுதுபோக்குக்காக ஆங்கிலம் பயிலும் உயர்குடிப்பெண்கள். அந்த பெரும் கூட்டத்தில் சிலருக்கேனும் ஆங்கிலத்தில் வாசிக்கவும், ஆங்கிலத்தில் சிந்திக்கவும் ஆர்வம் இருக்கக்கூடும். தரமான ஆங்கிலத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பைத் தேடி அவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக ஒரு வாய்ப்பை திறந்து வைக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தகக் குழுவின் நோக்கமாக இருக்கிறது
தமிழகத்தில் இன்று எங்குமே ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்திய நாவல்களைப் பற்றியோ, வெளிநாட்டுப் படைப்புகளை பற்றியோ எந்த விவாதம் நிகழ்வதில்லை. (முகநூலில் மேலோட்டமாக பேசிக்கொண்டிருக்கும் snob களை நான் கருத்தில்கொள்ளவில்லை.) அப்படி ஒரு விவாதம் சென்னையில் ஓர் இடத்திலேனும் நிகழ்வது என்பது ஒரு தொடக்கம்.
ஜெ
at connect@manasapublications.com
or via WhatsApp at +91 7305567808.
Venue:
Manasa Publications
Flat No: 2, Srinivas Apartments,
Gandhi Nagar 2nd Main Road,
Adyar, Chennai – 600020
Time: 10:00 AM – 12:00 PM
Agenda for 2025:
November: Everything the Light Touches by Janice PariatDecember: Childhood Friend by Vaikom Muhammad BasheerJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

