வெளியேறியவர்களின் கதை!
வணக்கம் ஜெ,
தத்துவ வகுப்பில் உங்களை சந்தித்துவிட்டு வந்த பின்னர் நான் வாசிப்பதோடு நின்று விடாமல் அதை தொகுத்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துள்ளேன் அதன் ஆரம்பமாக ஹெர்மன் ஹெஸ்ஸே அவர்களின் சித்தார்த்தா புத்தகத்தில் நான் பெற்றதையும் உணர்ந்ததையும் பகிர்கிறேன்.இந்தப் புத்தகமும் என் கைகளுக்கு எனக்கு மிகவும் தேவையான நேரத்தில் வந்தடைந்தது.
நான் இந்தப் புத்தகத்தை ஒரு கவிதையாகவே அணுகினேன்.ஒரு கவிதையின் ஆழம் எப்படி வாசகர்களைக் கொண்டு மாறுகிறதோ அதேபோல் இந்தப் புத்தகத்தின் தத்துவமும் கவித்துவமும் வாசிப்பின் ஆழத்தை பொறுத்தது.சித்தார்த்த வாசித்தப்பின் நான் அடுத்ததாக படிக்க வேண்டும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்த புத்தகம் Mikhail Naimy அவர்கள் எழுதிய The Book of Mirdad.அந்த வகையிலும் இந்த புத்தகம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
சித்தார்த்தாவின் முதல் வரியே கவித்துவமாக இவ்வாறு தொடங்குகிறது “மனையின் நிழலில் படகுகள் ததும்பும் நதிக்கரையில் கோவிந்தனுடன் வளர்ந்தான் சித்தார்த்தன் “என்று ஆரம்பிக்கிறது. சித்தார்த்தன் பின்னாளில் ஒரு படகோட்டியாய் மாறி ஒரு படகோட்டியின் உதவியுடன் ஞானத்தை அடைய இருக்கிறான் என்பதை முதல் வரியிலேயே சொல்கிறார்.தன் தந்தையிடம் பிடிவாதமாக அனுமதி பெற்று சமணர்களிடம் சேர்ந்து கடினமான பயிற்சியின் மூலம் அறிவை மட்டுமே பெறமுடியும் ஞானத்தை ,நிர்வாணம் என்ற நிலையை அடைய இயலாது என்பதை உணரும் சித்தார்த்தனின் மனநிலையை நான் முழுவதுமாக என்னுடன் பொருத்தி பார்க்கிறேன்.கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது நான் என்ற நிலையை துறக்க முடிகிறது ஆனால் மீண்டும் அந்த நான் என்ற நிலைக்கு பயிற்சி முடிந்ததும் மனம் திரும்புகிறது .புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கும் பொழுதோ எழுதும்பொழுதோ ஒரு மனஎழுச்சியுடன் இருக்கும் நான் அடுத்த நிமிடமே அன்றாடத்தில் விழுந்து விடுவதை இதனோடு இணைத்து பார்த்தேன்.புத்தகம் வாசிக்கும் பொழுது அந்தக் கதை மாந்தர்களுடன் எனக்கு ஏற்படும் கருணை அவர்களை அவர்களின் தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் மன இயல்பு வாழ்க்கையில் இருப்பதில்லை அந்த “நான் ” நிலைக்கு திரும்பி விடுகிறேன்.புத்தகங்கள் நமக்கு ஞானத்தை கொடுக்க முடியாது அறிவை தான் கொடுக்க முடியும் என்பதை நம்புகிறேன்.
அடுத்து சித்தார்த்தன் கமலாவை சந்திக்கிறான்.சித்தார்த்தனிற்கும் கோவிந்தனிற்கும் நிர்வாண நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து அதனை அடைய வேண்டிய பாதையை மேற்கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே கமலா அதை அடைகிறாள்.அவள் அடைந்தது ஞானமா? முக்தியா? என்பதை நான் அறியவில்லை ஆனால் அந்த புத்தரை பார்த்தால் அவள் அடையக்கூடிய அதே உணர்வை அவள் அடைந்தாள் .ஏன் அவளுக்கு அது கிட்டியது? தன்னிடம் இருந்த செல்வத்தை ,இளமையை ,செருக்கை ஒவ்வொன்றாக உதறியதால் பெற்றாளா?
நிர்வாணா என்பது உண்மையான ஆனந்தம் என்று பொருள். கமலா அடைந்ததும் ஆனந்தம்.
சித்தார்த்தனிடமிருந்து கமலா காட்சியின் மூலம் அதாவது அவனது முகத்தைக் காண்பதின் மூலம் அடையும் ஆனந்தத்தை கோவிந்தன் சித்தார்த்தனை ஸ்பரிசிப்பதின் மூலம் அதாவது முத்தமிடுவதன் மூலம் அடைகிறான்.You cannot teach wisdom ,you can attain wisdom only through experience . காட்சி மற்றும் ஸ்பரிசத்தின் மூலம் ஞானம் அடைவது எனக்கு கவித்துவமாக இருந்தது .சித்தார்த்தன் மற்றும் வாசுதேவன் இடையே நிகழும் உரையாடல் அருமையான இடங்கள்.காலம் பற்றிய வரிகள் “காலம் என்பது ஒன்று கிடையாது ,ஏக காலத்தில் ஆறு எங்கெங்கும் இருக்கிறது,மூலஸ்தானத்திலும் முகத்துவாரத்திலும் ,நீர் வீழ்ச்சியிலும் , ஓடத் துறையிலும் ,மேகத்தும் ,விரி கடலிலும் எனவே நிகழ் காலம் ஒன்றுதான் அதற்கு உண்டு ” இந்த வரிகள் இந்த நிமிடத்தை முழுவதுமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்.நான் ,என் தந்தை மற்றும் என் பிள்ளை வேறு வேறு அல்ல எல்லாம் ஒன்றே என்ற அந்த புரிதல் .காலம் என்பது இல்லை என்ற உணர்தல் மிக எளிமையாக சொல்லப்பட்டது .
வாசுதேவன் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு மக்களை சேர்ப்பிக்கும் படகோட்டியாக அமைத்து நதியிடம் பேசுவது மற்றும் நதி பேசுவதை உற்று கவனிக்கும் ஆற்றலை(Art of Listening ) பயிற்றுவிக்கும் ஆசானாக வடிவமைத்து இருப்பதுதான் இந்த நாவலில் என்னை கவர்ந்த விடயம்.இயற்கையோடு இணைந்து இருப்பவர்கள் ஞானிகள் .இயற்கை நம்மிடம் உரையாடிக் கொண்டு இருக்கிறது ஆனால் நாம் அதை கேட்பதில்லை.இந்த இடத்தில் எனக்கு கவிஞர் தேவ தேவன் அவர்களிடம் ஒரு முறை “நீங்கள் ஏன் உதிர்ந்த இலைகளைப் பற்றி நிறைய கவிதைகள் எழுதுகிறீர்கள் ?”என்று கேட்டதற்கு, “அந்த இலைகள் என்னிடம் ஏதோ கூற விளைவது போல் இருக்கிறது அதனால் எழுதுகிறேன் ” என்று கூறியது என் நினைவில் வந்தது .
நன்றி ஜெ,
மதுநிகா சுரேஷ் .
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

