அகத்தின் வெளிச்சம்

ஒரு வாரம் போல மழை. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நேற்று வரை அடை மழை. பக்கத்துவீட்டு அம்மா யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்தால் 'வானம் நெனைச்சு நெனச்சு பெய்யுது' என்று வைதுகொண்டிருந்தார். வயல் வேலை எதாவது இருக்கும். 

மூன்று நாட்களாக சூரியனே தென்படவில்லை. வெளிச்சம் மட்டும் மங்கலாக. எனக்கு அடைமழை மிகவும் பிடிக்கும். அம்மாவிற்கு பிடிக்காது. ஏனெனில் வீடு நசநச வென்று இருக்கிறது என்பார். வீட்டில் மேற்குபக்கம் மூக்கால் வாசி சுவர் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டது என்பதால் வரவேற்பறை மழையும் வெயிலும் வெளிச்சமும் பனியும் காற்றும் புழுதியுமாக காலநிலைக்கு ஏற்ப இருக்கும். தங்கை வரவேற்பறையும் வாசலும் ஒன்று தான் என்பாள்.
 திரைசீலையை ஒதுக்கினால் மழை அழகாக தெரியும். கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கும் அவ்வாவின் மிகப்பெரிய எதிரியே இந்த திரை சீலை தான். அதை நாங்கள் இழுத்துவிடுவதும், அதை அவர் மறுபடி விலக்கி விடுவதுதான் நாள் முழுவதும் வேலை. நாம் ஒரு வயதில் அசௌகரியமாக உணர்வதே இன்னொரு வயதில் சௌகரியமாகவும் இருக்கும் போல. 

ஆனால் நான் வாசிக்கும் எழுதும் இடம் அகத்தளம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளடங்கியது. சமையல் அறைக்குள் சென்றால்.. அதற்கும் உள்ளே உள்ள  மிக சிறிய அறை. வெளியே அப்படி ஒரு அறை இருப்பதே தெரியாது. 
அண்மையில் ஒரு கட்டுரையில் பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்ட்டின் பற்றி வாசித்தேன். சமையலறைக்கு அருகில் அவருடைய எழுதும்மேஜை இருந்தது என்று அறிந்த போது வியப்பாக இருந்தது. ஆனால் என் சிறிய அறையை ,சிறிய அறை என்று உணரமுடியாதபடி செய்வது பெரிய ஜன்னல். 
நல்ல வெளிச்சமும் காற்றும் உள்ள வீடு.  வீட்டின் வெளிச்சமிக்க அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் உள்ள வெளிச்சமும் சின்னய்யா தந்தது என்று நினைத்துக்கொள்வேன். எழுதும் அறையில் ஜன்னலில் பாதியை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறேன். பின்பக்க சந்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம். அப்படியிருந்தும் வெளிச்சம் குறையாத அகத்தளம் என்னுடைய வாசிப்பறை.
காலையில் வாசித்துக்கொண்டிருக்கும் போது சட்டென்று வெளிச்சம் புத்தகத்தின் மீது விழுந்தது. மூன்று நாட்களின் அடைமழை முடிந்த வெளிச்சம். உடனே மாடிக்கு சென்றேன். குளிர்காற்றில் சூரிய வெளிச்சத்தில் முல்லைச்செடி குதூகலமாக பூத்து அசைந்து கொண்டிருந்தது. நெல்லம் வயல்களில் தேங்கிய தண்ணீரை சூரிய வெளிச்சம் பெரிய தகடு போல காட்டியது. நெல்லம்பயிர்கள் வேர்பிடித்திருக்கக்கூடும்.தெருவில் உள்ள சிறு கோயிலில் இருந்து இசை கடிகாரத்தில் ஏழு மணிக்கான பாசுரம் ஒலிக்கத்தொடங்கியது. இன்று மூன்று ஊர்களுக்குப்பொதுவான எதுமலையானுக்கு பொங்கல் வழிபாடு. குதிரை ஏறிய மீசை வைத்த பெருமாள்.
எப்போதும் உள்ள கார்த்திகை மாத மனநிலையில் புதிதாக ஒரு கூடுதல் அம்சம் இந்த இசைக்கடிகாரம். முதலில் இந்த இசைக் கடிகாரம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் காலை ஏழுமணிக்கு ஒலிக்கும் பாடல்கள் இலக்கியத் தரமானவை. ஒரு நாளின் கூடுதல் சுவையாக சேர்கிறது.
 வீட்டின் மூலை முடுக்குகளில் இருள் உண்டு. ஆனால் வீண்மீன்களை காட்ட ஜன்னலும் உண்டில்லையா...கீழே இறங்கினால் அன்றாட வாழ்வும் கஸ்ட்ட நஷ்டங்களும் உண்டு. இரவு உறங்கப்போகும் போது கூட வீட்டை பற்றிய பலமான யோசனை இருந்தது. ஆனால் இலக்கியமும், இந்த வெளிச்சமும் உயிர்ப்பளிப்பவை. வாழ்க்கையில் அனைவருமே எல்லாவிதமான எதிர்மறை விஷயங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அடைத்து கட்டிய வீடு போல. ஆனால் நம் ஜன்னல்கள் எவ்வளவு பெரியவை. மனதை போல. அதிலிருந்து கொஞ்சம் இலக்கியம் வழியாக ஏறி சென்றால் வானம்.





 

[இதுதான் நான் எடுத்து பதிவேற்றும் முதல் காணொளி துண்டு. இப்போது தான் வலைப்பூவில் நம்முடைய சொந்த காணொளிகளை பதிவேற்றலாம் என்று கண்டுபிடித்தேன். புகைப்படங்களை பதிவேற்றும் இடத்திற்கு அடுத்ததாகதான் இதற்கான வசதியும் இருக்கிறது. அன்றாடம், அரசியல்,உறவு சிக்கல்கள்,வேற்றுமைகள்,கசப்புகள் என்று எல்லா எதிர்மறை அம்சங்களும் எல்லோருக்கும் உண்டு. அதை கடந்து நமக்கு கொஞ்சம் மனம் விரியவேண்டியதிருக்கிறது. 
இலட்சியம் நேர்மறை எல்லாமே க்ரின்சா? 
 போரே வாழ்வாக  இருந்த சங்ககாலத்திலும் தலைவியின் மாமை நிறமுள்ள மாங்கொழுந்தை தலைவன் கண்டான். தன் தேர் மணி ஒலிக்காது தேரை செலுத்த சொன்னான். குறிஞ்சி பூப்பதை கண்டான். பொருள் தேடி பாலைவழி நடக்கும் போதும் தாழை மணத்தை ரசித்தான்.
 ஆனால்உண்மையான கசப்பிற்கு மதிப்பு உண்டு. கசப்பை எல்லா கனிகளிலும் இயற்கையே சேர்ப்பதில்லை. குறிப்பிட்ட வெகு சிலவற்றில் மட்டுமே கனிகளில் கசப்புண்டு. உண்மையில் எட்டிக்காய்க்கு மதிப்புண்டு. அதை வேறு எதிலும் போலியாக இயற்கை கலப்பதில்லை.
உதாரணத்திற்கு இன்று ஒரு பள்ளிக்கூட வாத்தியார் பையன்கள் தன்னை பேசும் அசிங்கமான வார்த்தைகளை நேரடியாக கேட்க வேண்டியுள்ளது. அதற்காக அவர் அப்படியே எரிச்சலாக இருந்தால் உண்மையில் சீக்கிரம் சாக வேண்டியது தான். இன்று மதீப்பீடுகள் விழுமியங்கள் மிகவும் அவல நிலையில் உள்ளன. ஒரு உச்சத்திற்கு பிறகு மீண்டும் மாறலாம்.
 தனிமனிதனின் மனநிறைவிலிருந்து தான் மதிப்பீடுகளும் விழுமியங்களும் உயிர் கொள்ள முடியும். நிறைவு என்பது அறுபது வயதில் இல்லை. அன்றாடத்தில் உள்ள சின்னஞ்சிறியவற்றில் உள்ளது. நாம் இன்று இழந்து சிரமப்படுவது இதைத்தான் என்று தோன்றுகிறது ]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2025 22:54
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.