மலர்வு
ஆறாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் என்னுடைய அத்தை மகள் கமலவேணி எனக்கு முதன்முதலாக சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கிக்கொடுத்தாள். நீச்சலும். நீச்சல் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. ஒரு முறை அவ்வா பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டும் முழுகிவிட்டேன். அத்தை சட்டென்று தூக்கிவிட்டார். அதற்கு பிறகு சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஜாலியாக கிணற்றில் மிதந்து கொண்டிருப்பேன். தம்பி தங்கை நீச்சல் பழகி என்னை கேலி செய்தாலும் கண்டு கொள்ளாமல் சுரைகுடுக்கையுடன் அந்த பெரிய கிணற்றுக்குள் மணிகணக்கில் சுற்றி வருவேன். சின்னய்யா என்னை முதுகில் அமர்த்திக் கொண்டு நீச்சல் அடிப்பார். 'இப்போ அப்படியே தண்ணிக்குள்ள தள்றேன் பாரு' என்றாலும் பயப்பட மாட்டேன். நான் விழக்கூடாது என்று அவர் அடிக்கடி ஒருகையால் முதுகில் அமர்ந்திருக்கும் என்னை சரியாக தள்ளி தள்ளி அமர வைப்பார்.
யாராலும் எனக்கு நீச்சல் கற்று தர முடியவில்லை. இறுதியாக அய்யா கழுத்து வரை தண்ணீர் நிற்கும் படியில் நின்று கொண்டு தண்ணீருக்குள் கைகளை நீட்டியிருப்பார். கைகளில் படுத்தபடி நீச்சல் பழக வேண்டும். கையை கொஞ்சம் மாற்றினாலும் சட்டென்று அய்யாவை பிடித்துக்கொள்ளவேன். சில நாட்கள் கழித்து அய்யா இதுக்கு நீச்சல் வராது என்று விட்டுவிட்டார்.
அதனால் எனக்கு சைக்கிள் பழக்குவதில் யாருக்கும் ஆர்வம் வரவில்லை. ஆனால் கமல்அக்கா கோபமாக சைக்கிள் பழகனும் என்று என்னை இழுத்துச் சென்றாள். அய்யாவின் சின்னய்யாவின் சைக்கிள்களில் எது வீட்டிலிருக்கிறதோ அதில் உள்ள முக்கோணத்தில் கால் விட்டு அடித்து ஏறி ஓட்ட வேண்டும். கால் எட்டாத பிள்ளைகள் அப்படி ஓட்டுவதை குரங்கு பெடல் [ Crank bedel] என்று சொல்வது.
வீட்டில் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்ததால் கமலக்காவிற்கு எனக்கு சைக்கிள் பழக்கித்தர வேண்டும் என்று பிடிவாதம்.
'பெரியகமல் சின்னகமலுக்கு சைக்கிள் பழக்குது' என்று வீட்டில் உள்ளவர்கள் கேலி செய்து கொண்டிருந்த மூன்றாவது நாள் நான் சைக்கிள் ஓட்ட பழகிவிட்டேன். இடுப்பை வளைத்தால் சைக்கிள் சரியாக ஓட்ட முடியாதில்லையா? அப்போது முதுகில் ஒரு அடி வைப்பாள். பிறகு முதுகைத் தொடும் போதே சரியாக நிமிர்ந்து ஓட்டினேன்.
கொஞ்சம் பலகீனமான ஆள் என்பதால் முதுகு கை கால் வலி இருந்தது. நாளாம் நாள் அத்தை மகன் எனக்கு சைக்கிள் பழக்கி தர வந்தது. பின்னால் கேரியரை மட்டும் பிடித்துக்கொண்டு 'ஓட்டு' என்றதும் சட்டென்று ஓட்டத்தொடங்கினேன். அந்த மூன்று நாளும் கனவில் கூட சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தேன்.
காய்கறி கடையை தாண்டும் போது கடைக்கார தாத்தா சிரித்தபடி 'பழகிடுச்சே' என்றார். பின்னால் தூரத்திலிருந்து மாமா 'ஆமா தாத்தா' என்று சொல்வது கேட்டது.
'மாம்ஸ்... மாம்ஸ்.. வந்து சைக்கிள பிடி...எங்க மாம்ஸ கூப்பிடுங்க' என்று தெருவே கத்திக்கொண்டு ஓட்டினேன்.
எல்லாரும் சிரித்தார்களே தவிர யாரும் கூப்பிடவில்லை. பள்ளியில் படிக்கும் கரிகாலன் அண்ணா மட்டும் 'அப்படியே மாதாகோயில் வழியா போய் உங்க வீட்டு சந்துல போ' என்றார். இறங்கத்தெரியாமல் அவர் சொன்ன வழியில் வீட்டிற்கு வந்தால் வாசலில் மாமா சிரித்துக்கொண்டு நின்றது. எனக்கு சரியான கோபம். மாமாவிற்கு பின்னால் மல்லிகை பந்தலின் கீழ் அய்யா சின்னய்யா அவ்வா இருந்தார்கள்.
"ஒம்பதாவது படிக்க கோட்டபாளையத்துக்கு லேடி பேர்டில் பறந்து போற...நான் வாங்கித்தரேன்," என்று சின்னய்யா சொன்னார்.
பின்பு எப்போது சைக்கிள்கள் வீட்டில் நின்றாலும் உடனே எடுத்து சுற்றத்தொடங்கினேன். ஆனால் டபுள்ஸ் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. தனியாக ஓட்டுவது மட்டும் தான். அப்போதெல்லாம் பிள்ளைகள் விதவிதமாக ஸ்டைலாக சைக்கிள் நிறுத்துவார்கள். வந்த வேகத்தில் ஒருகால் ஊன்றி நிறுத்துவது. சைக்கிளில் அமர்ந்து ஒரு மிதியில் சைக்கிளை ஓட்டுவது என்று பலமாதிரி செய்வார்கள்.
நான் கடைசி வரை பெடல் அடித்து ஏறுவது, ப்ரேக் பிடித்து மெதுவாக இறங்குவது தான். நிதானமாக ஓட்டுவது வழக்கம். நான் செய்த ஓரே சகாசம் என்பது...மழை நாட்களில் கண்கண்ணாடியை மழைநீர் மறைக்கும் என்பதால் கண்ணாடியை இடதுகையில் பிடித்தபடி வலது கையால் ஓட்டுவது மட்டுமே. அதுவும் மழை பெய்தால் மட்டும்.
இந்த சைக்கிள் எனக்கு காட்டிய உலகம் இன்று வரை அழகானது. பள்ளிக்கு செல்லும் வழி நெடுக நெல்வயல்கள்..தென்னை வாழை மரங்கள். பாசன ஓடைகள். இரண்டு இடங்களில் ஆற்று பாலங்கள். செடி கொடிகள். எங்கள் பள்ளியும் ஊருக்குள் இல்லை. வயல்காடுகளுக்குள் இருந்தது.
லேடி பேர்ட் கிடைக்கவில்லை. நான் கேட்ட மெரூன் ஹெர்குலஸ் அப்போது டிமேண்ட் அதிகம். கிடைக்கவில்லை. அய்யாவிற்கு பிடித்த ஊதா நிற அட்லஸ் தான் எனக்கான சைக்கிள். குட்டியான சீட்..பள்ளி சைக்கிள் ஸ்டேண்டில் மற்ற பிள்ளைகளில் சைக்கிளை விட என்னுடையது குட்டியாக தெரியும். ஆனால் எனக்கு வசதியான அளவிற்கு அய்யா பார்த்து வாங்கியிருந்தார் என்று இப்போது புரிகிறது. அப்போது அவரிடம் கோபித்துக்கொண்டேன். அதற்கும் எப்போதும் போல சிரித்தார்.
சைக்கிளில் தனியாக செல்வேன். எனக்கு நண்பர்கள் குழு இல்லை. முதல் ஒரு வாரம் அய்யா என் பின்னால் சைக்கிளில் வந்தார் என்று கல்லூரி படிக்கும்போது தான் சொன்னார். எங்கள் ஊர் வயல்வெளி,கள்ளுக்கடை முடக்கு,வயல்வெளி,ஐய்யாற்று பாலம், அக்ரஹாரம்,வயல்வெளி,வடக்கு விசுவை,வயல்வெளி, கோட்டப்பாளையம் கடந்து வயல் பாதையில் ஏறி லட்சுமி தியேட்டர் தாண்டி நெல்லங்காட்டு பாதையில் ஏறினால், வயல்களுக்கு நடுவில் பள்ளிக்கூடம்.
ஊர்களுக்குள் சைக்கிள் செல்லும் போதெல்லாம் பார்வை நேர் இடவலது மட்டும். வயல்பாதைகளில் மிக மெதுவாக வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வேன்.
ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலபாடத்தில் பூ பற்றிய ஒரு கவிதை பாடமாக இருந்தது. ஒரு சிறிய பூ கிளைகளுக்குள் மறைவாக இருந்தது..யாரும் பார்க்கும் தொலைவில் இல்லை. பறிக்கும் இடத்தில் இல்லை. அது வேடிக்கை பார்த்தபடி இருந்தது. மற்ற பூக்களெல்லாம் பறிக்கப்பட்டு பூச்செண்டாகும் கர்வத்துடன் கூடைகளில் சென்று கொண்டிருந்தன. அந்த பூ வாடி இந்த செடியோடு உதிர்ந்து உரமாகி மீண்டும் பூக்கும். இந்த கவிதை நீண்ட கவிதை. இலைகளுக்குள் இயற்கை அந்த பூவை ஏன் ஔித்து வைக்க வேண்டும் என்று கவிதை முடிந்ததாக ஞாபகம். யார் எழுதியது என்று தெரியவில்லை.
அந்தக்கவிதை என்னை என்னவோ செய்தது. பதினான்கு வயதில் மனம் எதை உள்வாங்கியது என்று தெரியவில்லை. பள்ளி விட்டு வரும் வழி நெடுக பூச்செடிகளை பார்த்துக்கொண்டே வருவேன். பாதை ஓரத்தில் சின்னஞ்சிறு பூக்களை சைக்கிளை நிறுத்திவிட்டு பார்ப்பேன். நெல்லம் காடு பூப்பதை..தென்னம்பாளை பூப்பதை என்று எதையும் தவற விடாமல் பார்ப்பது வழக்கம்.
கோடை மழை பனி காலங்களில் மாறும் இயற்கை என்னையறியாமல் மனதில் பதிந்தது அந்த காலகட்டம் என்று தோன்றுகிறது. சாயுங்காலம் கொல்லி மலையை ,மறையும் சூரியனை, செவ்வானத்தை ,வயல்காடுகளை பார்த்தபடி மெதுவாக வீட்டிற்கு வருவேன். எப்போதாவது உப்பிலியபுரம் என்ற ஊரில் உள்ள AEO அலுவலகத்திற்கு சென்று திரும்பும் அய்யா என்னை பார்ப்பார். அப்போது சைக்கிளை நிறுத்திவிட்டு எதாவது பார்த்துக்கொண்டிருப்பேன். அய்யா 'என்னப்பா இங்க நிக்கற..பிள்ளைகளெல்லாம் எப்பவோ போயிடுச்சே' என்பார். அவருக்கு நான் இருட்டுவதற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அம்மா தான் பதறிக்கொண்டே இருப்பார். சின்னய்யாவிற்கு எப்போதும் கேலி.
'இன்னிக்கு வரும் போது ரோட்டுல சைக்கிள் மட்டும் நிக்குது..ஆளக்காணுன்னு பாத்தா பாலத்துலே நின்னு தண்ணி பாக்குது..' என்று எதாவது சொல்வார். இருவரில் யார் என்னை வழியில் பார்த்தாலும் 'இருட்றதுக்குள்ள வரனும்' என்று தான் சொல்வார்கள். அப்போது இந்த ஊர்களில் எல்லாம் எந்த பயமும் இல்லை. பையன்கள் இல்லாமலும் இல்லை. என்னிடம் யாரும் பேசியதில்லை. [அது ஒரு புட்டிடா என்று நிச்சயம் கேலி செய்திருப்பார்கள். அப்போதெல்லாம் என் கண்ணாடியை கேலி செய்யாதவர்கள் அரிது] . அய்யா, சின்னய்யாவிடம் படித்தவர்களாக இருப்பார்கள். மேலும் நான் பசங்களை கண்டுகொண்டதில்லை. நமக்கு பூ இலை தழை ஆறு பார்க்கவே நேரம் போதாது..இதையும் சின்னய்யா கேலி செய்வார். 'ஊருக்குள்ள வந்தா குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி போகவேண்டியது. அந்தப்பக்கம் வயக்காடு வந்தா கடிவாளத்தை காத்துல விட்றது' என்பார்.
ஊர்க்காரர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள், பள்ளி ஆசிரியைகள் என்று பல பேர் அய்யாவிடம் நான் அங்கங்கே வேடிக்கை பார்ப்பதை ,தனியாக வருவதை சொல்லியிருக்கிறார்கள். அய்யா என்னிடம் 'சைக்கிள் ஓட்றப்ப கவனமா இருக்கனும்...பசங்க யாராவது வம்பு பேசினா எங்கிட்ட சொல்லனும்' என்று மட்டும் சொல்வார். ஆனால் நல்ல பயல்கள்..கேலி மட்டும் தான். கேலி பற்றி எனக்கு கவலையில்லை.
யாரும் என்னிடம் வம்பு பேசாததால் தான் நான் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அதற்காக இப்போதும் அவர்களை பற்றி பெருமிதமாக நினைக்கிறேன். அன்றும் பிள்ளைகளுக்குள் காதல் இருந்தது. வம்புகள் இருந்தன. ஆனால் தன் போக்கில் இருக்கிற பெண்ணை யாரும் தொல்லை செய்யவில்லை.
அப்போதுதான் நான் தலைக்கு பூவைத்து கொள்வதை நிறுத்தினேன். பூவை பறிப்பதில் எனக்கு விருப்பமில்லை. பதினான்கு வயதிலிருந்து இன்று வரை பூ பறிப்பதில்லை...தலையில் சூட்டுவதில்லை. விளக்க முடியாத ஒரு உணர்வு அது. ஆனால் நடைமுறையில் மத்தியதர குடும்பத்தில், கிராமத்தில் வசிக்கும் பெண் பூ வைக்காமல் இருப்பது அவ்வளவு எளிதானதில்லை. மென்மையாக மறுத்துக்கொண்டே இருக்கிறேன்.
இன்று காலையில் மாடியில் உள்ள முல்லை செடி தொடர்ந்த மழையால் செடி முழுக்க பூத்திருப்பதை கண்டதும் சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது.
ஏசியன் பெயிண்ட்வாளியில் நிரப்பப்பட்ட மண்ணில் இந்த செடி இருக்கிறது. சிறிய செடி. மற்ற செடிகளுக்குள்ள இடவசதி இதற்கில்லை. மண் குறைவு. ஆனாலும் ஒரு மழைக்கு இத்தனை மலர்வு.
சங்ககாலத்தில் கார்காலத்தில் மலரும் முல்லையை பற்றி கணிசமான பாடல்களில் உள்ளது. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்ற கையறு நிலை பாடல்களில் இருந்து முல்லை எயிராக நகுமே தோழி என்று காதல் பாடல்கள் வரை.
முல்லை பூப்பது என்பது கார்காலத்தில் அத்தனை அழகான இயற்கை நிகழ்வு. அதன் பசுமையான கொடியும் இலைகளும் அத்தனை வெண்மையான மலர்களும் மனதை மலர்த்துகிறது. அதுவும் மலர்தல் என்பது ... வெண்இதழ்கள் அனைத்தையும் விரித்து வானத்தை நோக்கி மலர்ந்திருக்கும் முல்லை பூ ஒரு அப்பட்டமான சமர்ப்பண நிலை போல தோன்றுகிறது.
கொத்தாக மலர்ந்திருக்கும் முல்லை மலர்கள் படைப்பூக்க மனநிலையை தூண்டவல்லது. இது அழகா..Pleasure ஆ...இயல்பா என்றெல்லாம் பிரிக்கமுடியவில்லை. ஆனால் வெறும் மகரந்த சேர்க்கைகானவை மட்டுமல்ல மலர்கள். இயற்கை பூக்களில் சமன்பட்டு நிற்கிறது என்று தோன்றுகிறது. அந்த தன்மை தான் நம்மை ஈர்க்கிறது... நம்மையும் மலர்த்துகிறது.
கமலதேவி's Blog
- கமலதேவி's profile
- 1 follower

