மழையை ருசிக்கும் சிறுமி
தெலுங்குச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 1973ல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. அதில் எழுத்தாளர் திரிபுரநேனி கோபிசந்த் எழுதிய பாசம் என்ற கதை விவசாயி ஒருவரின் வாழ்க்கையை விவரிக்கிறது.

திரிபுரநேனி கோபிசந்த் சிறந்த தெலுங்கு எழுத்தாளர். பத்து நாவல்கள், பன்னிரண்டு நாடகங்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
ஜோகய்யா என்ற விவசாயிக்கு மூன்று மகன்கள். பேரன் பேத்தி எனப் பெரிய குடும்பம்.. அவரது மனைவி நோயாளியாக மரணப் படுக்கையில் கிடக்கிறார். ஜோகய்யாவிற்கு நிறைய நிலமிருக்கிறது. அவர் எப்போதும் நிலமே கதியெனக் கிடக்கிறார்.
மாடு விற்பதற்காக அந்த ஊருக்கு வந்தவர் மாடு வாங்கியவர் வீட்டிலே மருமகனாகி அதே ஊரில் தங்கிவிட்டார். அந்த நாட்களில் அவரது மாமனாருக்கு ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. ஆனால் ஜோகய்யா கடுமையாக உழைத்து ஐந்து ஐந்து ஏக்கராக நிலத்தை வாங்கி இன்று நூறு ஏக்கருக்கும் மேலாக்கி விட்டிருந்தார்.
அவரது மாமனார் தனது மரணத்தருவாயில் ஜோகய்யாவை அருகில் அழைத்து “உன்னைக் கிட்ட சேத்துகிட்டதற்கு என் மானத்தைக் காப்பாற்றிட்டே“ என்று சொல்கிறார். அது தான் ஜோகய்யா பெற்ற உயரிய அங்கீகாரம். இத்தனை ஆண்டுகள் நிலத்தில் பட்ட கஷ்டங்கள் யாவும் அந்த அங்கீகாரத்தின் வழியே மகிழ்ச்சியாக மாறுகிறது.
ஒரு விவசாயி அடையும் ஆனந்தம் இவ்வளவு தான். அவர் உலகிடமிருந்து அங்கீகாரத்தை எதிர்பாக்கவில்லை. ஆனால் தன்னை நம்பிப் பெண்ணைக் கொடுத்தவரின் பாராட்டைப் பெரிதாக நினைக்கிறார்.
அம்மாவின் பக்கத்தில் துணையாக இருங்கள் என மகன் தந்தையை வீட்டில் இருக்கச் சொல்கிறான். ஆனால் ஜோகய்யா நிலத்திற்குக் கிளம்பி விடுகிறார். தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட சண்டையை விலக்கி தனது வயலுக்கான தண்ணீரை பாய்ச்சுகிறார். திடீரென வீட்டிலிருந்து ஆள் வந்து மனைவியின் உயிர் பிரியப்போவதாகச் சொல்கிறார்கள். அப்போதும் அவரசமாக வீடு திரும்புவதில்லை. தண்ணீர் பாய்ச்ச மாற்றுஆள் ஏற்பாடு செய்துவிட்டே வீடு திரும்புகிறார்.
வீட்டில் தான் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைப் பற்றிப் புலம்பியபடியே தான் ஜோகய்யாவின் மனைவி உயிரை விடுகிறார். தான் இல்லாமல் இவற்றை எப்படி இவர்கள் செய்து முடிப்பார்கள் என்பது தான் அவளது கவலை. அந்தத் தவிப்போடு உயிர் பிரிகிறது. அந்தக் காட்சி மறக்க முடியாதது.
தனது தந்தை நிலமே கதியாகக் கிடப்பது மகன் நரசய்யாவிற்குப் பிடிக்கவில்லை. அவன் ஊரின் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறான். ஆனால் தந்தையை வீட்டில் இருக்க வைக்க முடியாது என அவனுக்குத் தெரியும்
தனது நிலத்தில் உள்ள நாவல்மரத்தடியில் ஜோக்கய்யா மதியம் சாப்பிடுவது வழக்கம். மனைவி இறந்த பிறகு அங்கே அமர்ந்து சாப்பிட பிடிக்கவில்லை. இறப்பின் வலி அங்கிருக்கும் போது தான் முழுமையாக வெளிப்படுகிறது.
பேத்தி அவருக்காகச் சோறு கொண்டு வருகிறாள். தொட்டுக் கொள்ள ஆவக்காய் ஊறுகாய். மழை வரும் போலிருக்கிறது. மழையில் பேத்தி நனைந்துவிடக் கூடாதே எனக் கவலைப்படுகிறார்.தான் கண்குளிர பார்க்க வேண்டும் என பேத்தியை பட்டுப்பாவாடை கட்டிக் கொண்டு வரச் சொல்லியிருந்தார் ஜோக்கய்யா.
சாப்பாட்டை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு பேத்தி வயலில் ஒடிவிளையாடுகிறாள். திடீரென மழை பெய்ய ஆரம்பிக்கிறது.
பட்டுபாவாடை அணிந்த அந்தச் சிறுமி தனது நாக்கை நீட்டி தூறலை ருசி பார்க்கிறாள். அந்த வரி அபாரமான அழகுடன் ஒளிர்கிறது. இது தான் கதையின் அழியாச்சுடர்.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்தபின்பு இந்தக் கதையை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது இது போன்ற அசலான வரிகளே.
நூறு ஏக்கர் நிலம் கொண்ட ஜோகய்யா விதவிதமாக விருந்து சாப்பிட ஆசைப்படவில்லை. தனது சொந்த நிலத்தில் மரத்தடியில் அமர்ந்தபடி ஊறுகாயும் சாதமும் தான் சாப்பிடுகிறார். அந்தக் காட்சி வாசிக்கும் போது நம் முன்னே விரிகிறது.
அவரைப் போல அவரது பிள்ளைகள் கடினமாக உழைப்பதில்லை. விவசாயப் பணிகளில் வரும் பிரச்சனைகளைச் சந்திப்பதில்லை. காலமாற்றமும் கதையில் அழகாக வெளிப்படுகிறது.
ஜோகய்யாவின் பெற்றோர்கள் யார். அவரது கடந்த காலம் என்ன எதுவும் கதையில் விவரிக்கபடுவதில்லை. அவர் தனது கடந்தகாலத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்டார்.
மாடுவிற்க வந்தவரை எப்படி மாப்பிள்ளையாக்கி கொண்டார்கள் என்று கதையில் சொல்லப்படுவதில்லை. ஆனால் அப்படித் தான் கடந்தகாலங்களில் நடந்தது. அன்றைய மனிதர்களுக்கு ஒரு ஆளை எடைபோடுவதற்கு நிறைய நேரம் தேவைப்படவில்லை. கி.ராவின் கதை ஒன்றிலும் இப்படி ஊர் மாப்பிள்ளையாகி விடும் மாடசாமி வருகிறான்.
காலம் தாண்டி நிற்கும் கதைகள் இது போன்ற நுண்மையான, நிஜமான, உணர்வுகளையும் அசலான சித்தரிப்பினையும் கொண்டிருக்கின்றன. சொல்லபடாத விஷயங்களே கதையை அடர்த்திக் கொள்ளச் செய்கின்றன. நாக்கை நீட்டி மழையை ருசிக்கும் பேத்தியைப் போல இந்தக் கதையை ருசிக்கிறேன். என்னவொரு ஆனந்தம்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 669 followers

