துஞ்சன் இலக்கிய விழா
கேரளாவில் நடைபெற்ற துஞ்சன் இலக்கிய விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றினேன். பிரம்மாண்ட அரங்கு. திரளான மக்கள் கூட்டம். எழுத்தச்சனின் புகழ்பாடும் நிகழ்வுகள். நிறைய எழுத்தாளர்களும் கலைஞர்களும் வந்திருந்தார்கள். மறைந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நினைவாக திறந்த வெளி அரங்கம் அமைக்கபட்டிருந்தது. எம்.டி. வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாறு விரிவான நூலாக வெளியாகியுள்ளது. புத்தகத் திருவிழாவில் அந்த நூலை எழுத்தாளர் ஸ்ரீகுமாரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளித்தது.

நானும் எனது மனைவியும் மூன்று நாட்கள் டாக்டர் ரகுராம் வீட்டில் தங்கியிருந்தோம். அவரும் துணைவியார் நவநீதமும் மிகுந்த அன்புடன் கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.

டாக்டர் ரகுராம் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதக்கூடியவர். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தமிழில் இருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருபது நூல்கள் வெளியாகியுள்ளன. சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர். ஓவியர். ஆகவே இலக்கியம் இசை ஓவியம் என மூன்று நாட்களும் நிறைய உரையாடினோம்.


நவநீதம் அவர்கள் தேர்ந்த தோட்டக்கலை நிபுணர். ஓவியர். நிகழ்ச்சி தொகுப்பாளர். வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம் அமைத்திருக்கிறார். கோண்டு பழங்குடி ஓவிய மரபைப் பின்பற்றி ஓவியங்கள் வரைகிறார். அபாரமான ஓவியங்கள். அவர்களின் ஓவியக்கண்காட்சி சென்ற ஆண்டு கோழிக்கோடு லலித்கலா அகாதமியில் நடைபெற்றிருக்கிறது.

துஞ்சன் இலக்கிய நிகழ்வினை வழிநடத்தும் மொழிபெயர்ப்பாளர் வெங்கடாசலம் திரூரில் அன்புடன் வரவேற்று சிறந்த ஒருங்கிணைப்பை செய்தார். அவரது மொழியாக்கத்தில் எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகி மூன்று பதிப்புகள் வந்துள்ளன.

தற்போது மண்டியிடுங்கள் தந்தையே நாவலையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அவரது அன்பிற்கு எனது மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வின் ஒரு பகுதியாகப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் மலையாள மொழியாக்க நூலின் அட்டை வெளியிடப்பட்டது. அப்துல் ஸமது சமதானி எம்பி மற்றும் ஜெயக்குமார் ஐஏஎஸ் இதனை வெளியிட்டு சிறப்பு செய்தார்கள். இந்த நூலை மாத்ருபூமி வெளியிடுகிறது
ஒரு கிறிஸ்துமஸ் மஞ்சுகாலம் என இந்த நாவல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு மாலை மலப்புரத்தில் நடைபெற்ற ஷேடோகிராபி என்ற புகைப்படக் கண்காட்சி ஒன்றிலும் கலந்து கொண்டேன். அங்கே எழுத்தாளர் சிஹாபுதின் பொய்த்தும்கடவினை சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
துஞ்சன் இலக்கிய விழாவில் . துஞ்சன்பரம்பு மேற்பார்வையாளர் டி.பி.சுப்பிரமணியன் , ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஸ்ரீகுமார், கே.ஜெயக்குமார் IAS, குருக்கோழி மொய்தீன் எம்எல்ஏ, அப்துல் ஸமது சமதானி எம்பி, கவிஞர் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
துஞ்சன் இலக்கிய விழா குறித்துப் பத்திரிக்கைகளில் விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி செய்தியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.




சிஹாபுதினுடன்

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 665 followers

