நேர்வழி விருது- கடிதம்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
நேர்வழி விருது விழாவிற்கு நானும், கணவரும் இரு குழந்தைகளும் தாவரவியல் வகுப்பிற்கு பின் சென்றிருந்தோம். சரண்யாவும் எங்களுடன் இணைந்து கொண்டார். வண்டியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து செல்ல சிறிது கால தாமதமானதால் கவிநிலவன், ஹேமவர்த்தினி இசை நிறைவுறும் தருவாயில் சென்றடைந்தோம். ஓடும் ஆற்றின் கரையும், அவர்களின் குரலிசையும் அந்த மாலையை அழகாக்கி கொண்டிருந்தது.
அறப்போர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். டெண்டர் குளறுபடி, அதை வெளிக்கொணர தன்னையும் மீறி முயன்ற கடைநிலை அரசு ஊழியர், அறப்போர் இயக்கத்தின் மூலம் பாதுகாக்கபட்ட மக்களின் பணம், நேர்மையுடன் இருப்பது கடினமானதையினும் இயல்பானதே அதனாலேயே அழகானதும் கூட என்ற நிறைவை அளித்தது.
திரு. ராம்குமார் ஐஏஎஸ் அவர்கள், ‘அசலான முன்மாதிரிகள்’ பற்றிய தன் அனுபவ பதிவு, அவர் கல்லூரி பருவத்தில் மாணவர்களை தங்களின் முன்னேற்றத்திற்காக பின்னிருந்து ஊகுவித்து, எதிர்பாரா குறைகளை முன்னின்று ஏற்ற பேராசிரியர் பற்றி பகிர்ந்தது, ஈரோடு கிருஷ்ணன் அவர்களையே நினைவுறுத்துகிறது.
குக்கூ சிவராஜ் அண்ணாவின் குரலில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ கேட்டது, அருபெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணையின் முன் எங்களை நிறுத்திவிட்டது. கீழ்வெண்மணி படுகொலைக்குபின்
அங்கு சென்று தங்கிய ஜெகந்நாதன் ஐயா கிருஷ்ணம்மாள் அம்மா அவர்கள் ஆற்றிய செயலின் பலன், கிருஷ்ணம்மாள் அம்மா தன் நூறாவது அகவையில் கீழ்வெண்மணி சென்றதையும், இரவு வெளியே நடமாடிய ஒருவரை உள்ளே அழைக்க சொன்னதையும், அவர் வெங்கடேச நாயுடு, 74 ஏக்கர் நிலத்தை திரும்ப தந்தவர், அவரை அணைத்து அம்மா கண்ணீருடன் பலமுறை கூறிய ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ கண்களில் நீரை வரவழைத்து விட்டது. என் பதின் பருவத்தில் ‘ராமையாவின் குடிசை’ ஆவணப்படத்தை தகிக்கும் மனதுடன் பார்த்த நினைவுகள் வந்து சென்றது. அனைவருக்குமான அன்பும் கருணையும் எவ்வளவு மகத்தானது.
முனை அமைப்பின் மாணவர்களின் பணி பாராட்டுக்குரியது. விருது விழா சிறப்பாக அமையவும், அம்மாபாளையத்தை முன்மாதிரி கிராமமாக்க உழைத்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், நேர்வழி விருது பெற்றவர்களுக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
ப்ரீத்தி
நேர்வழி விழா- முனை இயக்கம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

