யாரையெல்லாம் வாசிக்கலாம்…?
நிறைய கடிதங்கள் எழுதுவேன். இந்தக் கடிதம் யாருக்காவது பயன் தரலாம். #கடிதம் #றாம் #2025
#கவிஞர்கள்
அன்பின் xxxxxxக்கு,
நீண்ட நாட்களுக்கு முன்பு கவிஞர்களுள் யாரை எல்லாம் வாசிக்கலாம் என்று கேட்டிருந்தீர்கள் அதற்கு இவ்வளவு தாமதமாகப் பதில் அளிப்பது குறித்து வருந்துகிறேன்; ஆனால், இன்று எனது ஆத்ம நண்பன் பிறந்தநாள். அந்த உற்சாகத்தில் உங்களுக்கு இந்தக் கடிதம்.
பொதுவாக இளந்தாரிகள் பொருளாதாரத்தில் நிலைபெறாத பருவத்தில் எழுத வந்தால் எனக்குப் பிடிக்காது; குறிப்பாக, கவிதை எழுத வந்தால்.
காரணம், எழுத்தும் வாசிப்பும் வசீகரமானவை. அதில் வீழ்ந்து லௌகீக வாழ்க்கையை நாசப்படுத்திக்கொண்டால் பழி நம் மீது வரும் என்கிற அச்சம்.
பிறகு கவிதை.. கவிதை எழுதி ஒருவன் கௌரவமாக வாழ முடியாது. தமிழில் மட்டுமல்ல உலக அளவில் அதிக அங்கீகாரம் கிடைக்காத வகைமை அது.
இருந்தும் உங்களுக்கான கடிதம், நீங்கள் ஏற்கனவே ஒரு இலக்கிய மாணவர் என்பதால்தான்,
நீங்கள் ஏலவே ஆங்கில இலக்கிய மாணவர்கள் என்பதால், எந்தெந்தக் கவிஞர்களைப் படிக்கலாம் என்று கேட்ட கேள்வியைத் தமிழ்க் கவிஞர்கள் என்றே புரிந்துகொள்கிறேன்; எனக்கு உலக, ஆங்கில கவிஞர்கள் பற்றி அவ்வளவு அறிவு இல்லை. ஆனால், ழாக் ப்ரெவர் எனக்கு ரொம்ப பிடிக்கும், நிறைய மொழிபெயர்ப்புக் கவிதைகள் வாசித்திருக்கிறேன்.
யாரைப் படிப்பது என்று சொல்வதில் உள்ள பிரச்சனை என் ரசனை உங்கள் ரசனைக்கு இயைபுடையதாக இருக்குமா என்பதுதான்.. அந்தச் சிக்கலோடு இவர்களை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.
1. மரபான முறையில் தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் சங்க இலக்கியம், திருக்குறள் என்று வருவார்கள். அந்தக் கிரமம் அத்தனை அவசியமில்லை. கவிதை அதன் ஆழ, அகலங்களைச் சமகால மொழியிலிருந்து பின்னோக்கிச் சென்று புசிப்பது அலாதியான அனுபவத்தைத் தரும்.
2. மனுஷ்ய புத்திரன் நல்லத் தொடக்கம். காரணம், எளிய மொழி மட்டுமல்ல. அவரால் எதையும் எழுத முடியும் என்பது எனக்குப் பிடித்தமானது. ஆனால், மனுஷில் ஒருவர் தேங்கி நிற்பதை நான் நல்ல நிலைமை என்று சொல்ல மாட்டேன்.
3. அடுத்து, வெய்யில் – அதிலும் குறிப்பாக, அக்காளின் எலும்புகள். மனுஷுக்கு நேரெதிர் ரகம். தமிழில் நாட்டார் மரபை நவீன மொழிக்குள் கடத்தியவர். சன்னத ரகம் அவருடைய கவிதைகள். அது இயல்பிலேயே யாரையும் வசீகரிக்கக் கூடியது. குறிப்பாக, ரத்தம் சூடான இளைஞர்களை.
4. இசையைப் படிக்கலாம். இசையின் உறுமீன்களற்ற நதி, சிவாஜிகணேசனின் முத்தங்கள் ஆகியவை எனக்குள் புதிய கதவுகளைத் திறந்தவை. இசையை எனக்குப் பிடிக்கும் (இசைக்கு என்னைப் பிடிக்காது என்பது வேறு விசயம்)
5. பெருந்தேவி – ஸ்ரீவள்ளி என்ற சக உலகங்களை அவசியம் படிக்க வேண்டும்.
6. சிவசங்கர் எஸ் ஜே மொழிபெயர்த்த பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு.
7. பாலஸ்தீன கவிதைகள், கவிஞர்கள் பலரின் நூல்கள் யாவும் நுஃமான், யமுனா ராஜேந்திரன் போன்றோர் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. அவற்றைப் படிக்கலாம்.
8. ஹைக்கூ கவிதைகளுக்குத் தொடக்கத்தில் செல்ல வேண்டாம். அது வடிவத்திற்குள்ளே உங்களைத் தேங்க வைத்துவிடும்.
9. தேவதச்சன் முழுத்தொகுப்பு, ஞானக்கூத்தன், பிரமிள், ஆத்மாநாம், ஆகியோரின் முழுத் தொகுப்புகள் உன்னை அடையாளம் கண்டுகொள்ள உதவும். சிலர் நகுலனில் தங்களை அடையாளம் காண்பார்கள். நான் நகுலனைப் படித்ததில்லை; படிக்க முயற்சித்தப் போது கிடைத்த மோசமான ’காவ்யா’ பதிப்பு அதற்குக் காரணம்.
10. ரமேஷ் – பிரேமின் கருப்பு வெள்ளை கவிதை உள்ளிட்ட அவர்களுடைய நூல்களை அவசியம் படிக்க வேண்டும். இருவரும் தனித்தனியாக எழுதியவற்றை இப்போதைக்கு முயற்சிக்க வேண்டாம்.
11. அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சொற்கள், பிரம்மராஜன் மொழிபெயர்த்த உலகக் கவிதைகள் (அச்சில் இல்லை) வாசிக்க வேண்டும்.
12. சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், யுவன் சந்திரசேகர், கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்தன் ஆகியோர் புத்தகங்களை நூலகத்தில் கண்டெடுத்துப் படிக்கவும்.
13. மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டி ரேவதி, சல்மா ஆகியோரின் தொடக்கக் கால கவிதைகளை அவசியம் வாசியுங்கள்.
14. கவிஞர்களின் முதல் தொகுப்புகளை வாசிப்பது அவசியம்.
15. கண்டராதித்தன்,ஸ்ரீநேசன், ராணி திலக், ஷங்கர்ராமசுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், இளங்கோ கிருஷ்ணன், என்.டி, ராஜ்குமார், சபரிநாதன், நரன், ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். கவிதையின் பரிமாணங்கள் உங்களுக்கு அத்துப்படி ஆகும்.
16. நிறைய கவிஞர்களைப் புத்தகங்களாக வாசிக்க இயலாதபட்சத்தில் இதழ்களில் வரும் கவிதைகளை வாசிப்பது நல்லது. பல்வேறு கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகை நூல்களும் பயன்தரும்.
17. இளைஞர்களுள் றாம் சந்தோஷ், பெரு விஷ்ணுகுமார், வே. நி. சூர்யா, வினையன் போன்றோரை வாசிக்க வேண்டும். [பொதுவாகவே, கவிஞர்கள் தரும் பட்டியல் துவேசம் மிகுந்தது அரைகுறை அறிவிலானது எனவே இந்தப்பட்டியலில் இல்லாவர்களையும் உனது விருப்பப்படி படிக்கலாம்.]
18. எறிசோறு படிக்க வேண்டும்.
19. தேவதேவனைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் போதுமானது; அவருடைய இணையதளத்தைப் பயன்படுத்துக.
20. தமிழ்க் கவிஞர்கள் என்றால் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் மட்டுமல்ல. பிறநாட்டாரும் உண்டு. ஆனால், அவர்களுள் யார் நல்ல கவிஞர்கள் என்று அவர்களுக்குள்ளேயே நிறையக் கோஷ்டி மோதல் இருப்பதால் யாரையும் படிக்கும் ஆர்வம் பிறப்பதில்லை. முன்பு விரும்பு அனார் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். அவருடைய நூல்கள் தமிழகத்தில் கிடைத்தமை ஒரு காரணம். கூடவே, ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகளைப் படித்துப்பார்க்கவும்; அவர்கள் குறித்து எனக்கு எனதறிவு போதாமையுடையது.
கூடுதலாக,
00. கவிதை மட்டுமல்லாது; கவிதை சார்ந்த நூல்களையும் அவசியம் படிக்க வேண்டும்.
01. கவிஞனாகாதே. வேறு உருப்படியான வேலைகளைப் பார். [நாவல் எழுதுக, மொழிபெயர்ப்பு, சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்க]
பட்டியலில் இல்லாதவர்களையும் அவசியம் படியுங்கள்.
– றாம் சந்தோஷ் வடார்க்காடு
04.08.2025
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

