சி. சு. செல்லப்பா உரை.

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சி. சு. செல்லப்பா குறித்து உரையாற்றினேன்.

ஒரு மணி நேர விரிவான உரை. தமிழ்மொழித்துறை மாணவர்களும் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் நிறைந்த அவை. சி.சு.செல்லப்பாவின் பேரன் கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூரிலிருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அந்த உரையில் செல்லப்பாவின் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள், அவரது, சிறுகதைகள் , புதுக்கவிதை உருவான விதம், அவர் முன்னெடுத்த அமெரிக்க இலக்கிய விமர்சன முறை, அவரது இலக்கிய நண்பர்கள், செல்லப்பாவின் லட்சிய வாழ்க்கை, அவரது எழுத்து இதழின் பங்களிப்பு, புத்தகங்களை ஊர் ஊராகச் சுமந்து விற்ற நிகழ்வு, அவரது வாடிவாசல் நாவலின் சிறப்புகள் மற்றும் சுதந்திர தாகம் நாவல் குறித்த பார்வைகளை முன்வைத்துப் பேசினேன்.

தனது தாத்தா உயிரோடு இருந்திருந்தால் சாகித்ய அகாதமி விருதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். அவர் எந்த விருதையும் பெற விரும்பியவரில்லை. காந்தியவாதியாக இருந்தாலும் தாத்தா கோபக்காரர் என்று அவரது பேரன் கார்த்திக் தனிப்பட்ட உரையாடலின் போது தெரிவித்தார். காந்தியே கோபக்காரர் தான். காந்தியவாதிகள் பலரும் பிடிவாதமானவர்கள். தங்கள் முடிவுகளை எப்படியாவது செயலாக்கிவிடக் கூடியவர்கள். பேசிப்பேசி அவர்களால் எவரையும் வென்று விட முடியும் என்றேன். அது உண்மை எனக் கார்த்திக் சிரித்துக் கொண்டார்.

சி. சு. செல்லப்பா தனிநபரில்லை. அவர் ஒரு இலக்கிய இயக்கம். அவரைப் போன்ற ஒருவரை இனிக் காண முடியாது. தமிழ் இலக்கியத்தின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டத்தில் செல்லப்பாவின் பங்களிப்பு முக்கியமானது. அவரது காலத்தில் புதுக்கவிதையை கேலி செய்தவர்களே கூட இன்று புதுக்கவிதையை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். வெறும் ரசனை விமர்சனம் கைவிடப்பட்டு கோட்பாடு ரீதியாக விமர்சனத்தை முன்னெடுக்கும் செயல்பாடு கல்விப்புலம் தோறும் உருவாகிவிட்டது. சிறுபத்திரிக்கை மரபின் ஆணிவேராகத் திகழ்ந்தவர் சி. சு. செல்லப்பா.

தமிழ்மொழித் துறைத்தலைவரும் பாரதியியல் அறிஞருமான முனைவர் ய. மணிகண்டன் நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2026 03:15
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.