கடல் காணாத சிறுவர்கள்

1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார்.

ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக ஆக்குகிறார். பெற்றோர்கள் அதனை வாசிக்கும்படி செய்கிறார். அத்தோடு அத்தனை மாணவர்களையும் கடல் காணுவதற்காகப் பயணம் அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.

ஆனால் சில மாணவர்களின் பெற்றோர் அனுமதி தர மறுக்கிறார்கள். பணமில்லை என்கிறார்கள். பெற்றோர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து மாணவர்களைக் கடல் காண அழைத்துப் போவதற்கு ஆசிரியர் காத்திருக்கிறார். அந்தப் பயணம் என்னவானது, ஆசிரியர் என்னவானார் என்பதையே The Teacher Who Promised the Sea திரைப்படம் விவரிக்கிறது.

2023ல் வெளியான ஸ்பானிஷ திரைப்படம். பட்ரீஷியா ஃபோன்ட் இயக்கியுள்ளார் . உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்திலிருந்து கதை பின்னோக்கி நகர்கிறது.

அந்தோனி பெனாய்கெஸ் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காக அவற்றைத் தாங்களே அச்சிட உதவி செய்கிறார். இதற்காகத் தான் கொண்டு வந்திருந்த சிறிய அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். மாணவர்கள் தாங்களே அச்சுக் கோர்க்கிறார்கள். ஒவ்வொரு தாளாக அச்சிடுகிறார்கள். அச்சிடப்பட்ட காகிதங்களை இணைத்துப் புத்தகமாக்குகிறார்கள். அது வரை எந்தப் பள்ளியிலிலும் இல்லாத புதிய நடை முறை. அந்தோனி பெனாய்கெஸ் மாணவர்கள் அனைவரையும் எழுத்தாளராக மாற்றுகிறார்.

மாணவர்களுக்குள் ஏற்படும் போட்டி. விலகல். நெருக்கம். மற்றும் ஆசிரியரின் எளிய வாழ்க்கை படத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறை என்பது நான்கு சுவர்களுக்குள் அடங்குவதில்லை என்பதை உணர்த்தும்விதமாக அவர்களை இயற்கையான சூழலுக்கு அழைத்துப் போகிறார். நடனம் பாடல் இசை என உற்சாகப்படுத்துகிறார். அவர் நடனமாடும் விதம் அழகானது.

ஆசிரியரின் விருப்பத்திற்கு எதிராக திருச்சபையும் உள்ளூர் நிர்வாகமும் செயல்படுகின்றன. வகுப்பறைக்குள் பாதிரியார் வருகை தருவதும் கண்காணிப்பதும் முக்கியமான காட்சி.

அந்தோனி பெனாய்கெஸ் கடற்பகுதியைச் சேர்ந்த மான்ட்-ரோய்க் டி கேம்பினைச் சார்ந்தவர். தனது மாணவர்களை அங்கே அழைத்துச் செல்ல விரும்புகிறார். இதற்கு, சில குடும்பங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஊரின் மேயர் தனது மகளை அனுப்ப மறுக்கிறார். ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை அந்தோனி சமாளிக்கும் விதம் சிறப்பானது.

திடீரென ஸ்பானிய உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. அந்த ஊரும் பள்ளியும் ஃபலாங்கிஸ்ட் படைகள் வசமாகின்றன. எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் இப்படம் கல்வியில் புதுமைகள் செய்த ஆசிரியரின் ஒப்பற்ற ஆளுமையை விவரிக்கிறது. கடல்காணாத சிறுவர்களின் புத்தகம் என்பது ஒரு குறியீடு. மாணவர்கள் தான் காணாத கடல் பற்றி வைத்துள்ள எண்ணங்கள் வியப்பளிக்கின்றன.

காலத்தின் கைகளிலிருந்து நழுவிப் போன அந்த நூல் மீண்டும் கண்டறியப்படுவதுடன் அதன் வழியே புதையுண்டு போல பல உண்மைகள் வெளியாவது மனதிற்குப் பரவசம் தருகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2026 01:31
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.