தஸ்தாயெவ்ஸ்கியின் ஓவியம்

ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற உருவப்படத்தை வரைந்தவர் ஓவியர் வசிலி பெரோவ். 1872-ல் வரையப்பட்ட இந்த ஓவியம் மாஸ்கோவில் உள்ள ட்ரெட்டியாகோவ் கேலரிக்காக வரையப்பட்டது.

அப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் வயது 51. தனது இடியட் நாவலை எழுதிக் கொண்டிருந்தார். தொடராக அது வெளியாகிவந்தது.  பேடன்பேடனுக்குச் சென்று சூதாடி பொருளை இழந்து அப்போது தான் ரஷ்யா திரும்பியிருந்தார்.  கடனில் தத்தளித்த காலமது. அவரது மனைவி அன்னாவும் உடல்நலமற்றிருந்தார்.

இந்த ஓவியத்தை  வரைவதற்காக பெரோவ் ஒருவார காலம் தினமும் தஸ்தாயெவ்ஸ்கியை சந்தித்து அவரது தோற்றம் மற்றும் முகபாவத்தை ஆராய்ந்திருக்கிறார். ஓவியத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் கைவிரல்கள் கோர்க்கப்பட்டு அழுத்தமாக இணைந்துள்ளன. அதில் அவரது தீர்க்கமான மனநிலை வெளிப்படுகிறது. அவரது நெற்றி மற்றும் புருவங்கள் வரையப்பட்டுள்ள விதம், எதையோ சொல்ல முற்படுவது போன்ற முகபாவம் சிறப்பாகவுள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கி அமர்ந்திருக்கும் விதம், அவரது உடை மற்றும் பின்னணி பழைய ரஷ்யாவின் நகர்ப்புற வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன . அக்காலத்தில் ரஷ்யாவில் ட்ரெஞ்ச் கோட்டுகள் ஃபேஷனாக இருந்தன. தஸ்தயெவ்ஸ்கி வழக்கமாக வெள்ளை நிற பொத்தான் வைத்த சட்டைகளையும் பேண்ட்டுகளையும் அணிபவர்; எனவே, இந்த உருவப்படத்திலும் அவரது கோட்டிற்குள் வெள்ளைச் சட்டை வெளியே தெரிவது போல வரையப்பட்டுள்ளது.

பெரோவ் அவரது வழக்கமான பேண்ட்டின் வண்ண அமைப்பை மாற்றி, அதில் கோடு போன்ற வடிவத்தை அளித்தார். நீண்ட மேலங்கியின் மடிப்புகளைச் சித்தரிக்க வளைகோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தஸ்தயெவ்ஸ்கியின் முகம் மற்றும் கைகளுக்கு இடையே சமநிலையை உருவாக்கி, அவற்றை ஒன்றோடொன்று இணைந்து சீராக இருக்குமாறு அமைத்திருப்பதும் சிறப்பானது.

இந்த ஓவியம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்னா தஸ்தாயெவ்ஸ்கி இதனைப் பாராட்டி எழுதியிருக்கிறார். 1971 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வெளியிட்ட தபால் தலையில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது

வசிலி கிரிகோரிவிச் பெரோவ் ரஷ்யாவின் டோபோல்ஸ்கில் பிறந்தவர் .அவரது தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர். திருமணத்திற்கு முந்திய உறவில் பெரோவ் பிறந்தவர் என்பதால் முறையான உரிமைகளைத் தந்தையிடமிருந்து பெற முடியவில்லை.அவருக்கு வசிலியேவ் எனக் குடும்பப்பெயர் சூட்டப்பட்டது. பெரோவிற்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. ஆகவே தனது பெயரை ‘பெரோவ்’ என்று மாற்றிக்கொண்டார். ரஷ்ய மொழியில் ‘பெரோ’ என்றால் பேனா என்று பொருள்.

சிறுவயதில் அம்மைநோய் பாதித்து அவரது கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. அத்தோடு அம்மை தழும்புகள் நிறைந்த முகத்தோடு வாழ நேரிட்டது.

தனது வளர்ப்பு நாயை வரைவதற்காகப் பண்ணை உரிமையாளர் மாஸ்கோவிலிருந்து ஒரு ஓவியரை வரச் செய்த வைத்த நாளில் அதனை வேடிக்கை பார்த்த பெரோவ் ஓவியம் வரைவதில் நாட்டம் கொள்ளத் துவங்கினார்.

அதன் பிறகு தனது விளையாட்டினை மறந்து நாள் முழுவதும் படம் வரைந்து கொண்டேயிருந்தார். . அதுவே கலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையை உருவாக்கியது. ஆனால் அவரது அன்னை அதனை விரும்பவில்லை. தொடர்பிடிவாதம் காரணமாக மாஸ்கோ சிற்பம் மற்றும் கட்டிடக்கலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.

1856 ஆம் ஆண்டு டிசம்பரில், பெரோவ் தனது பன்னிரண்டு வயது சகோதரனான நிக்கோலாயை மாதிரியாகக் கொண்டு வரைந்த ‘சிறுவனின் தலை’ என்ற ஓவியம் வெள்ளிப்பதக்கம் பெற்றது. அந்த வெற்றி அவரைப் புதிய கலை முயற்சிகளில் ஈடுபடச் செய்தது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இம்பீரியல் கலை அகாடமியிலிருந்து தனது படைப்புகளுக்காகப் பல விருதுகளை வென்றிருக்கிறார்

1862-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், பெரோவ் கலைபயணத்திற்கான நிதி உதவி பெற்றுப் பாரீஸ் சென்றார். அங்குள்ள கலைக்கூடங்களையும் ஓவியர்களையும் பார்வையிட்டார். அங்கிருந்த நாட்களில் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார். ஆனால் பாரீஸ் நகரின் கலைவாழ்க்கை அவருக்கு அந்நியமாகவே இருந்தது. ஆகவே ரஷ்யா திரும்பி கிராமப்புற வாழ்வினையும் நாட்டார்பாடல்களையும் ஓவியமாக வரையத் துவங்கினார். அதில் பெரும்புகழ் பெற்றார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இசைக்கலைஞர்களை ஓவியம் வரைய வேண்டும் என்ற ட்ரெட்டியாகோவ் கேலரின் விருப்பத்திற்காகத் துர்கனேவ் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியை ஓவியம் வரைந்திருக்கிறார். புகைப்படம், சிற்பம். ஓவியம் என டால்ஸ்டாய் நிறையச் சித்தரிக்கபட்டிருக்கிறார். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கிக்கு குறிப்பிட்ட சில ஓவியங்களைக் காணக்கிடைக்கின்றன. அதில் மிகவும் புகழ்பெற்றது பெரோவ் வரைந்த ஓவியம்.

1869-ல், பெரோவின் மனைவி இறந்துபோனார் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் இருவர் இளவயதில் இறந்து போனார்கள். விளாதிமிர் என்ற ஒரு மகன் மட்டுமே எஞ்சியிருந்தார். 1872-ல், பெரோவ் தனது இரண்டாவது மனைவியான எலிசவேட்டா யெகோரோவ்னாவை மணந்து கொண்டார். வேட்டையாடச் சென்ற நேரத்தில் ஏற்பட்ட குளிர்தாக்குதல் காரணமாகக் காசநோய் ஏற்பட்டு முறையான மருத்துவச்சிகிட்சைகள் இன்றி இறந்து போனார்

பெரோவ் வாழ்நாள் முழுவதும் வரைந்து ஐந்தாயிரம் ரூபிள்களைச் சேமித்திருந்தார். அதைக் கொண்டு 1875-ல், ஸ்ட்ரெல்கோவோ என்ற கிராமத்தில் தனக்காக ஒரு சிறிய தோட்டத்தை வாங்கினார் அங்குத் தனது இறுதி ஆண்டுகளில் ஒவ்வொரு கோடைகாலத்தையும் கழித்தார் அந்த நாட்களில் லியோ டால்ஸ்டாயுடன் நெருங்கிய நட்பு உருவானது. அன்றாடம் சந்தித்த உரையாடியதோடு கலை குறித்துக் காரசாரமாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். பெரோவின் ஓவியங்களை டால்ஸ்டாய் மிகவும் பாராடியிருக்கிறார். பெரோவ்விற்குப் பிடித்தமான ஓவியர் வில்லியம் ஹோகார்த் ஆவார்

•••

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2026 00:31
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.