காற்றில் நடனமிடும் விரல்கள்

லியோ டால்ஸ்டாயை சந்தித்துப் பழகிய நினைவுகளை மாக்சிம் கார்க்கி சிறுநூலாக எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய் இறந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த பிறகு இந்த நினைவுக்குறிப்பை எழுதி வெளியிட்டார்.

அதில் டால்ஸ்டாய் மீதான பிரமிப்பும் அன்பும் மட்டும் வெளிப்படவில்லை. வெறுப்பும் கோபமும் இணைந்தே வெளிப்படுகின்றன. அந்த உண்மைகளை கார்க்கி மறைக்க விரும்பவில்லை.

மாக்சிம் கார்க்கி எழுதிய சுயசரிதை மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ளது. அதைத் தவிர அவரது விரிவான வாழ்க்கை வரலாறு இன்று வரை எழுதப்படவில்லை. அவரது கடைசிநாட்கள் பற்றிய தெளிவற்ற சித்திரமே இன்றும் காணப்படுகிறது

ஸ்டாலின் காலத்தில் கார்க்கியை ரஷ்யாவில் சென்று சந்தித்த எழுத்தாளர் ரோமன்ரோலந்து “அவர் ஒரு அமைச்சர் போலிருந்தார். பெரிய மாளிகை. உதவிக்கு நிறைய ஆட்கள் என அவரது வாழ்க்கை பகட்டாக அமைந்திருந்தது. எப்போதும் அவர் வீட்டில் மக்கள் கூட்டம். கிராமங்களிலிருந்து ஆட்கள் உதவி கேட்டு வந்து கொண்டேயிருந்தார்கள். கட்சி ஆட்கள். அரசாங்க ஊழியர்கள். கலைஞர்கள் என பலரும் அவரைக் காண காத்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் உணவும் தேநீரும் தரப்பட்டன. சிபாரிசு கடிதங்களை வழங்கிக் கொண்டேயிருந்தார்.  இரவு பகலாக அவரைச் சுற்றிலும் ஆட்கள். இடைவிடாத பயணம்  கார்க்கி செல்லும் இடமெல்லாம் வரவேற்பு. கொண்டாட்டம். இவ்வளவு செல்வாக்கு இருந்த போதும் கார்க்கி மகிழ்ச்சியற்றவராகவே இருந்தார். அவர் இந்தக் கொண்டாட்டங்களை விரும்பவில்லை. வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அதிருப்தி. சலிப்பு. ஏமாற்றம் அவரிடமிருந்தது. கார்க்கி எப்போதும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியவர். அதற்காக எதையும் செய்யக்கூடியவர். அதை நானும் அனுபவித்தேன் “ என்று குறிப்பிடுகிறார்.

1901-ல் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கார்க்கி சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரைப் பிணையில் விடுவிக்க உதவியவர் டால்ஸ்டாய். கார்க்கியின் அரசியல் சார்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து டால்ஸ்டாய் கடுமையாக விவாதம் செய்திருக்கிறார். இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கடந்து டால்ஸ்டாயை மிகவும் நேசித்தார் கார்க்கி.

அந்த நினைவுக்குறிப்பில் டால்ஸ்டாயின் கைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவருக்கு அற்புதமான கைகள் இருந்தன. அழகானவை அல்ல. நரம்புகள் வீங்கி முடிச்சு போட்டது போன்ற கைகள். ஆனால் தனித்துவம் நிறைந்தவை . ஒருவேளை லியோனார்டோ டாவின்சிக்கு அப்படிப்பட்ட கைகள் இருந்திருக்கலாம் என்கிறார். ஆச்சரியமான ஒப்புமை.

டாவின்சியைப் போலவே டால்ஸ்டாயிற்கும் புதுமைகளின் மீது விருப்பமும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமையும் தேடலும் இருந்தன.

டால்ஸ்டாயை முதன்முறையாகக் கார்க்கி சந்திக்கச் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. சோபியா யாரோ ஒரு பெயர் தெரியாத யாத்ரீகன் வந்திருப்பது போல நினைத்துக் கொண்டு உணவு கொடுத்து துரத்தி அனுப்பியிருக்கிறார். அந்த ஏமாற்றத்தை கார்க்கியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

பின்னாளில் டால்ஸ்டாயின் இலக்கிய வட்டத்தில் ஒருவராக அவரையும் இணைத்துக் கொண்டார்கள். ஒருமுறை ஆன்டன் செகாவோடு டால்ஸ்டாயைக் காணச் சென்றிருக்கிறார். அப்போது டால்ஸ்டாய் அமர்ந்திருந்த தோற்றம் கடவுளைப் போலிருந்தது. அவர் ஒரு ரஷ்யக்கடவுள் என்று கார்க்கி குறிப்பிடுகிறார்.

செகாவிடம் டால்ஸ்டாய் காட்டிய அன்பை, நட்பை தன்னிடம் காட்டவில்லை. செகாவை சொந்த மகனைப் போலவே நடத்தினார். ஆனால் தன்னை ஒரு விநோத நாடோடியைப் போலக் கருதியதோடு இலக்கிய ரசனையற்ற மனிதன் போலவே நடத்தினார்.

அவரைச் சந்தித்த போதெல்லாம் பௌத்த சமய நூல்களைப் படிக்குமாறு அறிவுரை கூறினார் என்றும். அவர் எப்போதும் பௌத்தம் மற்றும் கிறிஸ்துவைப் பற்றி விரும்பி பேசக்கூடியவர் எனவும் கார்க்கி குறிப்பிடுகிறார்.

தனது சிறுகதை ஒன்றை டால்ஸ்டாயிடம் வாசித்துக் காட்டிய போது, “உங்கள் கதாபாத்திரங்களின் உரையாடல் இயல்பாக இல்லை. அவர்கள் புத்திசாலித்தனமாகப் பேசுகிறார்கள். விவசாயிகள் இப்படித் தன் மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேச மாட்டார்கள்.” என்று டால்ஸ்டாய் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு குறுநாவலை பற்றிய விவாதம் பத்திரிக்கைகளில் காரசாரமாக நடந்து கொண்டிருந்த போது அந்தக் கதை தனக்குப் பிடித்திருப்பதாகக் கார்க்கி பாராட்டியது அவரைச் சந்தோஷப்படுத்தியது.

டால்ஸ்டாயிற்குச் சீட்டு விளையாடுவது மிகவும் பிடிக்கும். அன்றாடம் சீட்டு விளையாடினார். அவரது கைகள் சீட்டை அடுக்கி வைத்திருப்பது, உயிருள்ள பறவைகளை கையில் வைத்திருப்பது போலவே பதற்றமானதாகயிருக்கும் என்கிறார் கார்க்கி

“உங்களுக்கு வந்த கனவுகளிலேயே மிகவும் பயங்கரமான கனவு எது?” என்று டால்ஸ்டாய் ஒருமுறை அவரிடம் கேட்டார்.

“எனக்கு அரிதாகவே கனவுகள் வரும், அவையும் எனக்குச் சரியாக நினைவில் இருக்காது. ஆனால், இரண்டு கனவுகள் என் நினைவில் தங்கியுள்ளன. ஒருமுறை நான் கண்ட கனவில், வானம் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்தது; அதிலுள்ள நட்சத்திரங்கள்…வட்டமாகவும், தட்டையாகவும் இருந்தன ஒரு நட்சத்திரம் ஒரு பந்தாக வீங்கி சத்தமின்றி வெடித்தது, இது போலத் தொடர்ந்து நட்சத்திரங்கள் வெடித்தன” என்றார் கார்க்கி.

“இந்தக் கனவு நீங்கள் வானவியல் பற்றி ஏதேனும் புத்தகம் படித்ததால் உருவாகியிருக்கக் கூடும். இரண்டாவது கனவு எதைப்பற்றியது” எனக்கேட்டார்

“பனி படர்ந்த சமவெளி; சிறு குன்றோ, மரமோ, புதரோ இல்லை.பனிக்கு அடியிலிருந்து சில கம்பிகள் மட்டுமே வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. அடிவானம் முதல் அடிவானம் வரை, பிரித்தறிய முடியாத ஒரு மஞ்சள் கீற்று நீண்டு கிடந்தது. மனிதர்கள் அணியும் சாம்பல் நிற ஃபெல்ட் பூட்ஸ் தனியாக அதன் ஊடாக அணிவகுத்துச் செல்வதைக் கண்டேன்.”

டால்ஸ்டாய் அந்தக் கனவை நம்பவில்லை. “இதில் புத்தகத்தன்மையிருக்கிறது. இதனை நீங்களாக உருவாக்கியிருக்கிறீர்கள்” என்று பதில் அளித்தார். அத்தோடு விசித்திர கனவுகள் குறித்த அவரது பல்வேறு எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

லியோ டால்ஸ்டாய் இறந்துவிட்டார் என்ற தந்தியைக் கண்ட கார்க்கி மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

“வலியிலும் கோபத்திலும் அழுதேன், அவருடன் பேச வேண்டும் என்ற ஆசை என்னை வாட்டியது. நீரோடையின் அடியில் கிடக்கும் ஒரு வழவழப்பான கூழாங்கல்லைப் போல அவர் சவப்பெட்டியில் படுத்திருந்தார். அடர்ந்த தாடியுள்ள முகத்தில் மர்மமான சிறுபுன்னகை படர்ந்திருந்தது. தன் கைகளை மார்பின் குறுக்கே அமைதியாகக் கட்டியிருந்தார். அவரது கூர்மையான கண்கள் நினைவில் வந்து போயின. அவரது விரல்கள். அதுவும் பேசிக் கொண்டிருக்கும் போது காற்றில் நடனமிடும் விரல்களை மறக்க முடியவில்லை

எழுத்தாளர்களைத் தனது சொந்த பிள்ளைகள் போலவும், தந்தையான தனக்கு அவர்களின் எல்லாத் தவறுகளும் தெரியும் “என்பதாக டால்ஸ்டாய் நடந்து கொண்டார் என்கிறார் கார்க்கி.

ஸ்டாலின் கால நெருக்கடிகள், ஒடுக்குமுறைகளின் போது எழுத்தாளர்களைக் காப்பாற்றியவர். சிறையிலிருந்து மீட்க உதவியர் கார்க்கி தான் என்று அன்னா அக்மதேவா குறிப்பிடுகிறார்.

கார்க்கியின் கடைசி நாவலான “The Life of Klim Samgin” கடுமையான தணிக்கைக்கு உள்ளானது. நான்கு தொகுதிகளாக வெளியான பெரிய நாவலது. அதில் அன்றைய அரசியல் சூழல் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படையாகக் கார்க்கி எழுதியிருக்கிறார்.

“யஸ்னாயா போலியானா பண்ணையில் ஒரு நாள் டால்ஸ்டாயுடன் நடந்து கொண்டிருந்தேன். தூறலுடன் கூடிய, மேகமூட்டமான ஒரு இலையுதிர்கால நாள். வழியெல்லாம் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. டால்ஸ்டாய் கனமான மேலங்கியும் உயரமான தோல்காலணிகளும் அணிந்து கொண்டு பிர்ச் மரங்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.. வழியில் குறுக்கிட்ட வாய்க்காலை கண்ட போது ஒரு சிறுவன் போல ஆசையாகத் தாவிக் குதித்தார்” என்று கார்க்கி நினைவு கொள்கிறார்.

டால்ஸ்டாய் குறித்த நினைவுகளை அவரது மகனும் மகளும் தனிநூலாக எழுதியிருக்கிறார்கள். அவருடன் பழகியவர்கள். பத்திரிக்கையாளர்கள் சிறுநூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் விரிவான நாட்குறிப்புகள் எழுதியிருக்கிறார். சுயசரிதை எழுதியிருக்கிறார். இத்தனை நூல்களுக்கு இடையே கார்க்கி வரைந்த டால்ஸ்டாயின் சித்திரம் தனித்துவமாக ஒளிர்கிறது. அது தந்தையைப் பிடிக்காத மகனின் மனதிலுள்ள அன்பை போன்றது. அவன் காணும் தந்தையின் உருவம் உலகம் அறியாதது.

சிறுவன் போலத் தாவிக்குதிக்கும் டால்ஸ்டாயின் சித்திரம் எனது மனதில் அழமாகப் பதிந்துவிட்டது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2026 05:03
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.