உரி: சில குறிப்புகள் – 8
சலம் – உரி – யதி மூன்றும் வேறு வேறு களம், வேறு வேறு காலம், வேறு வேறு மனிதர்களின் வாழ்க்கை. எந்த விதத்திலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றது என்று நிறுவிவிடுவது மிகவும் சுலபம். ஆனால் எனக்கு இம்மூன்று நாவல்களும் ஒரு நாவலின் மூன்று அங்கங்கள் மட்டுமே.
உலகில் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்தியத் துணைக் கண்டத்தில்தான் ஆன்மிகமும் பக்தி இயக்கமும் பல்வேறு வடிவங்களில் பல்கிப் பெருகித் தழைத்திருக்கின்றன. இவ்வரிசையில் தத்துவங்களையும் சேர்க்க முடியும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஆன்மிகமோ பக்தி இயக்கமோ பெரிய அளவில் தழைக்காவிடினும் தத்துவங்கள் உண்டு. அவை சார்ந்த ஆய்வுகள் உண்டு. வாத-விவாதங்கள் உண்டு. மதம் என்கிற நிறுவனமயமாக்கப்பட்ட கட்டமைப்பின் உறுதித்தன்மை அல்லது நெகிழ்வுத்தன்மையின் அடிப்படையில் இம்மூன்றின் இருப்பும் இயக்கமும் அளவில் வேறுபாடு கொள்ளும்.
சிறு வயதில் நான் வளர்ந்த சூழல் நூறு சதம் பக்தி இயக்க வழி வந்த குடும்ப உறுப்பினர்களால் வடிவமைக்கப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கேற்றி, அது மலையேறும் வரை என் அம்மா சாப்பிடமாட்டார். முழுத் திரியும் எரிந்து அணைய நேரமானாலும் காத்திருந்து, மலையேறும் கட்டத்தில் தன்னை மறந்து நெக்குருகிக் கண்ணீர் சிந்துவார். கோவிந்தா, நீ போகும்போது நான் செய்த பாவங்களையெல்லாம் மறக்காமல் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு போய்விடு என்று தவறாமல் வேண்டுவார். அதுவரை விளக்கு – திரி – தீபம் என்று பார்த்துக்கொண்டிருப்பவன், திடுக்கிட்டு கோவிந்தன் என்றொரு தெய்வம் அதில் வந்து உட்கார்ந்திருப்பதைக் கவனிக்காமல் இருந்துவிட்டது குறித்து அதிர்ச்சி கொள்வேன். முந்தைய வருடம் கிடைத்த இந்த அதிர்ச்சி அடுத்த வருடப் புரட்டாசிக்கு நினைவிருக்காது. மீண்டும் மலையேறும் தருணத்தில் அம்மா கண்ணீர் சிந்திப் பாவ மன்னிப்புக் கேட்பார். நான் மீண்டும் அதிர்ச்சி கொள்வேன். பதினைந்து வயது வரை இது தவறாமல் நடந்து வந்தது நினைவிருக்கிறது. பிறகு மலையேறும் தருணம் வரும்போது விளக்கைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு அம்மாவின் கண்ணில் நீர் எப்போது வரும் என்று உற்று நோக்க ஆரம்பித்தேன்.
என் குடும்பம் வைணவப் பின்னணியைக் கொண்டது. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில், சைதாப்பேட்டை பெருமாள் கோயில்களில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் உற்சவங்களில் ஆர்வமுடன் பங்கெடுப்பார்கள். என் அப்பா வழிப் பாட்டியின் சகோதரரும் (அப்பாவின் மாமா) அவரது குடும்பத்தாரும் திருக்கண்ணபுரம் கோயிலில் ஊழியம் செய்தவர்கள். பிறகு அக்குடும்ப உறுப்பினர்கள் சிலர் இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்தபோது மயிலாப்பூரில் மாதவப் பெருமாள் (அல்லது கேசவப் பெருமாள். சரியாகத் தெரியாது.) கோயிலில் பணி புரிந்தார்கள்.
ஒருமுறை என் அப்பாவின் மாமா எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த நேரம் வீட்டில் நான் மட்டுமே இருந்தேன். அப்பாவும் அம்மாவும் வெளியே சென்றிருந்தனர். வாயிற்கதவுக்கு வெளியே நின்றிருந்தவரை நான் உள்ளே அழைத்தபோது கோபித்துக்கொண்டு வர மறுத்துவிட்டார். பிறகு அப்பா வந்ததும் சமாதானமாகி உள்ளே வந்தவர், என் அழைப்பை ஏற்க மறுத்ததன் காரணத்தைச் சொன்னார். நான் அப்போது கைலி அணிந்திருந்தேன்!
அத்தனை படுபயங்கர ஆசாரவாதிகள்.
என் பெரியப்பா வைணவ இலக்கியங்களில் ஆர்வமும் தேர்ச்சியும் மிக்கவர். ஆத்திகர் – பக்திமான்தான் என்றாலும் வைணவத்தினும் அவருக்கு இலக்கியமே பெரிது. தினமணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிப் பிற்காலத்தில் திருப்பெரும்புதூர் ஜீயராக வாழ்ந்து மறைந்த சேரா என்கிற சே. ராமானுஜாச்சாரியார் அவரது நெருங்கிய நண்பர். அவர் அப்போது திருமால் அடியார் குழாம் என்றொரு அமைப்பினை நடத்தி வந்தார். அதன் சார்பாகத் திருமால் என்றொரு மாதப் பத்திரிகை அந்நாளில் வந்துகொண்டிருந்தது. என் பெரியப்பா அதன் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். என் அப்பாவும் அதில் நிறைய எழுதியிருக்கிறார். எல்லா ஆழ்வார் பாசுரங்களின் நயம் சார்ந்த கட்டுரைகள்.
அதுவல்ல விஷயம். அந்தத் திருமால் அடியார் குழாத்தினர் ஒருமுறை பாத யாத்திரையாக எங்கிருந்தோ எங்கோ சென்றுகொண்டிருந்தனர். வழியில் நாங்கள் அப்போது வசித்து வந்த கேளம்பாக்கத்துக்கு வந்தார்கள். எனக்கு அந்தக் காட்சி என்றும் மறக்காது. கொளுத்தும் வெயிலில் அவர்கள் கோவளம் செல்லும் தார்ச் சாலையில் நடந்து வர, கால் சுடாதிருப்பதன் பொருட்டுச் சாலையெல்லாம் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே ஒரு கூட்டம் சென்றது. சாலையோரம் என் அப்பாவுடன் நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். யாத்திரைக் குழுவினர் நெருங்கியபோது அப்பா, நடுச்சாலையென்றும் பாராமல் விழுந்து வணங்கியதைக் கண்டேன். அவர் வணங்கிவிட்டதால் எங்களுக்கும் வேறு வழியில்லை என்றாகி, நாங்களும் விழுந்து வணங்க நேர்ந்தது.
பிறகு அப்பா சொன்னார், திருமாலினும் அடியார் பெரியவர். அடியாரை வணங்குவது ஆண்டவனை வணங்குவதினும் பெரிது.
எங்கள் குடும்பத்தின் வேறொரு உறுப்பினர் ஒருவரும் இதனை இதே வடிவில் ஆண்டுதோறும் செய்வார். ஆனால் அது திருமால் அடியார் குழுவினருக்கல்ல. ஞானானந்த கிரி அல்லது அவரைப் போன்ற வேறொரு பக்தி இயக்க சன்னியாசியின் அடியார் குழாத்துக்கு. மிகச் சிறு வயதில் கண்ட காட்சி என்பதால் இப்போது சரியாக நினைவில்லை. திருவல்லிக்கேணி வீதியில் அந்த பஜனைக் குழாத்தினர் வரும்போது வெறுமனே விழுந்து வணங்குவதோடல்லாமல், சாலையிலேயே உருண்டு சுற்றி வந்து வணங்கும் அளவுக்கு அவரது பக்தி தீவிரம் மிக்கதாக இருந்தது.
பக்தி செய்யும் நேரத்தில் பக்திமானாகவும் மற்ற நேரங்களில் சாதாரண மனிதர்களாகவும் இருந்துவிட்டுப் போவதில் இவர்கள் யார் ஒருவருக்கும் எந்த இருப்பியல் சிக்கலும் இருந்ததில்லை. இதை மிகக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஆனால் நானொரு பக்திமானாக உருவெடுக்கத் தொடங்கிய நாள்களில் குற்ற உணர்வு மட்டுமே மனத்தில் மேலோங்கியிருந்தது. அதாவது, ஒரு சாதாரண மனிதனாக எனது செயல்பாடுகளில் ‘குற்றம்’ என்று நான் கண்டவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றன. மறுபுறம் செய்கிற குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பதற்குத்தான் கடவுள் இருக்கிறான் என்கிற எண்ணம் வீறு கொண்டெழும். என் அம்மாவின் கண்ணீர் பக்தியெல்லாம் ஒன்றுமேயில்லை என்று நினைக்கும் அளவுக்கு என்னுடையது, மாபெரும் கதறல் பக்தியாகவே பெருக்கெடுக்கும். ஆனால் பக்தி செய்து முடிந்ததும் மறக்காமல் பாவங்களையும் செய்யத்தான் செய்தேன். இது தந்த குற்ற உணர்வின் கனம் என் பக்தியினும் அதிகமாகிக்கொண்டே சென்றது. எந்த அளவுக்கென்றால், என் பக்தியே ஒரு போலி என்று நானே தீர்ப்பெழுதும் அளவுக்கு.
பிறகு படிக்கத் தொடங்கி, உணர்ச்சித் தளத்தில் தோன்றும் எதுவும் அத்தனை முக்கியமானதல்ல – பக்தி உள்பட என்னும் தெளிவு ஏற்பட்ட பின்பு மெல்ல மீண்டேன். யதியில் காட்டப்படும் பக்தி இயக்க ஈடுபாடு கொண்ட குடும்பம் பெரும்பாலும் என் குடும்பத்தின் சாயலில் வடிவமைக்கப்பட்டதுதான். அந்நாவலில், திருவிடந்தை ஆதி வராகப் பெருமாள் கோயில் வாசலில் உயிரை விட்டு ஒரு முழுநாள் பெருமாளைப் பட்டினி போடுவேன் என்று சொல்லும் பாட்டி என் உறவுக்காரப் பாட்டி ஒருவரின் சாயலில் உருவானவர்தாம். அவர் திருக்கண்ணபுரத்தில் வசித்து வந்தவர்.
ஒரு சரியான சாதாரண மனிதனாக வாழ்வில் இதுவரை செய்த நல்லவை-கெட்டவையைப் பட்டியலிட்டுப் பார்த்தால் கெட்டவையின் சதவீதம் நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அது அப்படித்தான் இருக்க முடியுமென்கிற தெளிவைப் பெற நான் நெடுங்காலம் காத்திருக்க நேர்ந்தது. மனித வாழ்க்கை பெரும்பாலும் பிசிறுகளினால் ஆனது. வரையறுக்கப்பட்ட ஒழுக்க விதிகளை மீறுவதுதான் மனித குலத்தின் ஆதார இயல்பு. எனவே என் வரையறைகளை நானே வகுத்துக்கொள்வதுதான் சரி என்கிற முடிவுக்கு வந்தேன். லாசரா ஓரிடத்தில் எழுதுவார். வேலி என்பது வசதிக்கு நகர்த்தி வைத்துக்கொள்வதுதான். ஆனால் மனிதனுக்கு வேலி முக்கியம்.
ஒரு காலத்தில் உக்கிரமான கிருஷ்ண பக்தனாக இருந்தேன். என் மனத்துக்குள் ஒலிக்கும் குரல் கிருஷ்ணனுடையதுதான் என்று முடிவே செய்திருந்தேன். ஹரே கிருஷ்ணா அறிமுகமாகி, அங்கே சென்றுவரத் தொடங்கிய பின்பு இது இன்னும் தீவிரமானது.
பிறகு சில காலம் தீவிரமான திருப்பதி பெருமாள் பக்தனாக இருந்தேன். மாதமொரு முறை திருப்பதிக்குச் சென்றுகொண்டிருந்தேன். துறவியாகித் திருப்பதியில் நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் என்றெல்லாம் ஒரு காலத்தில் திட்டமிட்டிருக்கிறேன். பிறகு அங்கு கிடைக்கும் இலவசச் சாப்பாடு மட்டுமே அந்த இடத்தை என் மனம் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்பதை உணர்ந்ததும் அவ்வெண்ணம் விலகியது.
எதிர்பாராத விதமாகக் கிடைத்த சில துறவியர் தொடர்பு, மிகத் தீவிரமாக வள்ளலாரைப் படிக்கத் தொடங்கியது இரண்டும் கிட்டத்தட்ட சம காலத்தில் நடந்ததால் மெல்ல மெல்ல என் ஆவேசங்கள் தணியத் தொடங்கின. கோயில் கோயிலாகச் சுற்றித் தீவிர சைவ சமயத் துறவியாகப் பதிகம் பாடிக்கொண்டிருந்த வள்ளலார் எந்தப் புள்ளியில் ஆதிப் பெருந்தனிமமன்றி அறிவதற்கும் தொழுவதற்கும் இன்னொன்றில்லையெனக் கண்டார் என்பதை அறிந்த கணத்தில் என் கொதிப்புகள் முற்றிலும் தணிந்து போயின.
பிறகொரு சமயம் சுவாமி தயானந்த சரஸ்வதியைப் படிக்கத் தொடங்கியபோதுதான் கிருஷ்ணன் என்பவன் ஒரு மன்னனே (ஜீவாத்மா) அன்றிப் பரமாத்மா அல்ல; நல்ல மன்னர்களைத் தொழுவது உலகெங்கும் உள்ள வழக்கமே என்று தெளிந்தேன். இந்நாவல்களுக்காக வேதங்களைப் படிக்க ஆரம்பித்தபோது பிரம்மம் என்கிற ஆதித் தனிமத்துக்கு உருவமில்லை, அது அவதரிப்பதில்லை என்று அதில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன். அது இருப்பது. அவ்வளவுதான்.
வாழ்வில் நொடிப் பொழுதும் நான் நாத்திகனாக இருந்ததில்லை, உணர்ந்ததில்லை. தோல்வியுறும், விரக்தியடையும் பொழுதுகளில்கூடப் பரம்பொருளைப் பழித்ததில்லை. ஆனால் பரம்பொருள்தான். கடவுள் அல்ல. கடவுள்கள் அல்லர்.
ஒரு நம்பிக்கையாளனாக இருப்பதென்பது எனக்கு நான் கட்டிக்கொண்ட வேலியல்ல. என் குடும்பமோ, சுற்றமோ தந்ததல்ல. நிச்சயமாக அல்ல. அது, இயற்கை எனக்கென அமைத்தளித்ததென்றே கருதுகிறேன். என் வசதிக்கு அதை நகர்த்திக்கொள்ளவே செய்கிறேன். என் இறை அதை அனுமதிக்கிறது.
எண்ணிப் பார்த்தால், கடவுளைக் குறித்த குழப்பங்களே மனிதச் சிந்தையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. இதற்கு நாத்திகர்களும் விலக்கல்ல என்றே நினைக்கிறேன். கடவுளர் அனைவரும் மனிதன் கட்டமைத்த மதங்களின் உருவாக்கமே அன்றி வேறல்ல. எனவே என் இறையை நானே வடிவமைத்துக்கொள்வதுதான் எனக்கு வசதியாக இருக்குமென நினைத்தேன்.
எழுதத் தொடங்கியதில் இருந்து சொல்லன்றி இன்னொன்று என் சிந்தையை முழுமையாக நிறைத்ததில்லை. இறையென்பது முழுமையன்றி வேறில்லை. இது துலங்கிவிட்டபோது நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் என் செயலில் என்னைக் கரைத்துக்கொண்டேன். எழுதும்போது கவலைகளற்றவனாகிவிடுகிறேன். கவலையற்ற மனம் தவறு செய்யாது. தவறு நிகழாத இடத்தில் குற்ற உணர்வுக்கு இடமின்றிப் போய்விடும்.
இந்தத் தெளிவை எட்டித் தொட இத்தனை காலம் வேண்டியிருந்திருக்கிறது. அதனாலென்ன? எனக்கு நானே கொண்டாடிக் கொள்ள ஒரு தருணம். உரியின் கதை சொல்லி ஒரு நபரல்ல. ஒரு சொல்தான்.
சொன்னேன் அல்லவா? சொல்லே என் இறை.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .


