சிலுவைக் குறியால் அடையாளப்படுத்தப்பட்ட
பென்னாம் பெரிய வீட்டின் அறைகளுள்
என்னோடும் புத்தகங்களோடும்…
எப்போதாவது வந்து போகின்றன கீழ்வீட்டுப் பூனைகள்
எப்போதுமிருக்கிறது மேசை மீதில்
நீலப் பளிங்கு விழிகள் இமைக்காமல் பஞ்சுப் பூனையொன்று.
பெருமழைக்காட்டில் இறங்கும் வெயில் கதிர்களாய்
வடிகட்டப்பட்டிருக்கின்றன உரையாடல்கள்.
தொடர்மாடிக் குடியிருப்புகளுக்காக
இன்னமும் விற்கப்படாத நிலங்களின் வெட்டப்படாத மரங்களிலிருந்து
இழைந்து குழைந்து கூவும் பறவைகள்
வகிர்ந்து செல்கின்றன நிசப்தத்தை.
எனதேயான பொழுதுகளில் எனதேயான தேநீரை அருந்துகிறேன்
இங்கு நான்
மகளில்லை
தாயில்லை
மனைவியோ காதலியோ
தியாகியோ துரோகியோ
பரத்தையோ பத்தினியோ இல்லை
நீண்ட காலத்திற்குப் பிறகு மனுசியாயிருக்கிறேன்.
Published on May 10, 2013 07:58