சுஜா's Blog
February 23, 2025
அகலாது அணையாது
ஓவியம்: ரவி பேலட்இதுவரை அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததே இல்லை. இந்த விஷயம் அவளுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும் வரை பிரச்சனையாக இல்லை. இப்போது அம்மா எப்படியோ கண்டுகொண்டதுதான் பிரச்சனையே. அம்மாவின் கண்களுக்கு எதுவும் தப்புவதில்லை. போன வாரம் பின்கழுத்தில் ஒரு சிறு காயம். கையில் போட்டிருந்த மோதிரம் அல்லது அவளது நகமாகக்கூட இருக்கலாம். தேங்காய் எண்ணெய் தடவச் சொல்லி அம்மா நச்சரித்தபடி இருந்தாள். சாதனா மறந்துவிட்டால் அம்மாவே வந்து தடவியும் விட்டாள். மூன்று நாட்கள் இரண்டு வேளையென அந்தக் காயம் சரியாகும் வரை எண்ணெய் சிகிச்சை. ப்ரா விஷயத்தைச் சும்மா விடுவாளா!
வெளியே தெரியாத விஷயம்தானே, எப்படி இருந்தால் என்ன என்று பெரிதாக அதற்கு அலட்டிக்கொண்டதில்லை சாதனா. ஆனால் ப்ரா வாங்கச் செல்வதுதான் பெரும் அவஸ்தை. அங்கு பலரும் ப்ரா வகைகளைக் கைகளால் தொட்டுப் பார்ப்பதும், வைத்துப் பார்ப்பதும், போட்டுப் பார்ப்பதுமாக மிகவும் தீவிரமான பாவனையில் சலித்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். அவளுக்குள் அது குற்றவுணர்வைக் கிளறிவிடும். செய்ய வேண்டிய முக்கியமான ஏதோ ஒன்றில் அலட்சியமாக இருப்பது போன்றதோர் உணர்வு. கூடவே ஆசையும் தலை தூக்கத் தொடங்கும், இந்த முறை அமைந்துவிட்டால்?
அந்த ஆசையை நெட்டித் தள்ளிவிட்டு, அவள் நேராகப் போய் ப்ரா அளவைச் சொல்லிக் கேட்டாலும், ‘அப்படியா என்ன’ என்பது போல் சேல்ஸ் பெண் பார்க்கும் பார்வை இருக்கிறதே. ‘எதற்கும் அளந்து பார்த்துவிடலாமா?’ கேட்பதென்னவோ கேள்விதான். ஆனால் பதில் சொல்வதற்குமுன் இன்ச் டேப் மார்பைச் சுற்றி வளைத்திருக்கும்.
‘இது சரியான அளவாகத் தோன்றவில்லை, புதிதாக ஒரு மாடல் வந்திருக்கிறது. இதே அளவில் ஆனால் கப் அளவு மட்டும் மாற்றித் தருகிறேன், போட்டுப் பாருங்கள்’ இல்லை சரியாகத்தான் இருப்பதுபோல் இருக்கிறது என்று தயக்கத்துடன் சொன்னால், வகுப்பெடுக்க ஆரம்பிப்பாள். ‘மார்பை மறைக்கத்தான் ப்ரா என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் அது உங்களுக்குத் தரும் சப்போர்ட் மிகவும் முக்கியம். அதனால் சுற்றளவு மட்டும் அல்ல, கப் சைஸ், உங்கள் தேவையைப் பொறுத்து, ஸ்டிரிங் மாடல், பேடெட் மாடல் எனப் பல வகையான மாடல்கள் உள்ளன….’ தவறு செய்து மாட்டிக்கொண்ட பள்ளிக்குழந்தையாய் விழித்தபடி நிற்க வேண்டியிருக்கும்.
புது ப்ரா வகைகளைப் பார்த்ததும், மீண்டும் ஆசை லேசாக வந்து எட்டிப் பார்க்கும். எப்போதும் ஒரே மாதிரி போடுகிறோமே, மாற்றிப் பார்ப்போமே என்று தோன்றும். வாங்கிவிடுவாள். பலவகை மாடல்களைப் போட்டுப் பார்த்து, வெகுதிருப்தியாக வாங்கிய ப்ரா வீட்டிற்கு வந்த மறுநாளே, பழைய ப்ராவைவிட மோசமாகத்தான் தோன்றும். தோள்பட்டையில் பிடிப்பாகவோ, அடிமார்பில் குத்துவது போலவோ இருக்கும். கழற்றி அலமாரியின் அடியில் போட்டுவிட்டுப் பழையதைத் தேடத் தொடங்குவாள். அடுத்து புதிதாக ஒன்று வரும்வரை அது அங்கேயேதான் கிடக்கும், அவ்வப்போது அவசரத் தேவைக்கு எடுப்பதைத் தவிர்த்து. புதியது வந்துதான் அதன் மதிப்பை உணர்த்தும். பழகிப் போன பழைய ப்ரா என்ற அந்தஸ்தையும் பெற்று முன்னிலையில் வந்துவிடும்.
கல்யாணம் நிச்சயமாகிய இந்த இரண்டு மாதங்களுக்குள் எல்லாவற்றிலும் அம்மாவின் தலையீடு. இனி எதுவுமே தனது அந்தரங்கமாக இருக்கப் போவதில்லையா, ப்ரா உட்பட? சாதனாவுக்கு உள்ளே மெதுவாக ஒரு அச்சம் பரவத் தொடங்கியிருந்தது. திடீரென்று அவளது உடல் குடும்பச் சொத்தாகிவிட்டதைப் போல் தோன்றியது. கல்யாணம் முடியும் வரை அதைப் பாதுகாத்து ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானதைப் போல் அம்மா பரபரக்கிறாள். ப்ரா வாங்கும் வைபோகமும் அம்மாவின் முடிவுதான், சித்தியுடன் போக வேண்டும்.
முன்பெல்லாம் அம்மாதான் வாங்கி வருவாள். சரியாக இருக்கிறதா பார் என்பாள். சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வாள். சரியாகத்தான் இருக்கும். ஒரு கட்டத்தில் தோழிகளுடன் போயிருக்கிறாள். அது மேலும் சங்கடம். பின்னர் எப்போதும் தனியாகப் போய்த்தான் வாங்குவாள். கூச்சமா தெரியவில்லை. சாதனாவுக்கு ஷாப்பிங் என்பதிலேயே அவ்வளவாக விருப்பமில்லை. முக்கியமாக, ப்ரா கடையில் அதிக நேரம் நிற்கவே பிடிப்பதில்லை. என்னவோ ஒரு பதட்டம்! உடன் ஒட்டிக்கொண்டு அவஸ்தை கொடுக்கும் பொருள் என்ற எரிச்சலோ என்னவோ. ஆனால் அவள் ப்ரா போட ஆசைப்பட்ட காலமும் உண்டு.
அவளது வகுப்பில் முதலில் ப்ரா போட்டது மீராதான், முதலில் பெரியவளானதும் அவள்தான். யூனிபார்மின் வெளிறிய மஞ்சள் நிறத்தை மீறி மீராவின் வெள்ளை ப்ரா பளீரென வெளியே தெரியும். மற்ற பெண்கள் எல்லாம் ஏதேதோ கேலியாகச் சொல்லிச் சிரிப்பார்கள். சாதனாவுக்கு மட்டும் தானும் எப்போது ப்ரா போடப் போகிறோம் என்று ஆசையாக இருக்கும்.
சடங்கு நாளன்று மீராவை ஒரு ஸ்டூலில் உட்கார வைத்து மஞ்சள் தண்ணீர் ஊற்றினார்கள். பாவாடையை மார்பு வரை ஏற்றிக் கட்டியிருந்தாள். மஞ்சள் நிறப்பாவாடை. அதன் கீழ் ஓரங்களில் இருந்த லேஸ் அவளது முழங்காலைத் தொட்டிருந்தது. தண்ணீர் பட்டதும் பாவாடை ஒட்டிக்கொள்ள, அவளது மார்பகங்கள் சிறுகூம்பாகத் தெரிந்தன. விரிந்த சிறு மலரைப் போன்ற வடிவத்தில் மஞ்சள்நீரில் நனைந்தன. மஞ்சள் நீரும் மலர்களுமாய் அபிஷேகம் செய்யப்படுவது போலிருந்தது. தாங்கள் சீராட்டப்படுவதைக் கொண்டாடும் இரு இளவரசிகளாய் அவை பளபளத்தன. சாதனா கண்ணெடுக்காமல் பார்த்து ரசித்தாள். மார்பின் வடிவம் அவளை மிகவும் கவர்ந்தது. உடலில் திடுமெனப் பூத்திருக்கும் ஒரு பூ போல. அதனால்தான் பூப்பெய்துதல் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் மனதுக்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.
விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றுவதாகச் சொல்லிவிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுத் தன் அறைக்குள் வந்தாள். சட்டையைக் கழற்றி, குனிந்து பார்த்தாள். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கண்ணாடி கிடைத்தால்? அவளது அறையில் கண்ணாடி இல்லை. குளியலறைக்குச் சென்று உடைகளைக் களைந்துவிட்டு வாஷ்பேசின் அருகே இருக்கும் சிறு கண்ணாடியில் பார்த்தாள். தோள்பட்டை வரைதான் தெரிந்தது. நன்கு தள்ளி நின்று பார்த்தபோதும் சரியாகத் தெரியவில்லை. பக்கவாட்டில் திரும்பி நின்று உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது. சிறிய மேடு. தன்னுடலில் புதிதாய் முளைக்கும் பூ, மொட்டுவிட்டிருக்கும் பூ. தொட்டுத் தடவும்வேளையில், வெளியே அம்மா கூப்பிடும் சப்தம் கேட்டது. அவசரமாக உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
ஒரு முறை அம்மாவுக்குத் தெரியாமல் அம்மாவின் ப்ராவைப் போட்டுப் பார்க்க முயன்றாள். எப்படிப் போடுவெதென்றே தெரியவில்லை. முன்பக்கம் எது என்பது தவிர எதுவும் புரியவில்லை. கைகளில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.
வயதுக்கு வருவதற்கு முன்பே சாதனாவைப் பள்ளியில் ப்ரா போடச் சொல்லிவிட்டார்கள். மலர்வதற்கு முந்தைய பருவத்துப் பூவினை ஒத்திருந்தன அவளது மார்பகங்கள். அம்மாவும் அதை அடிக்கடி கவனித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. கண் அங்கு போன வேகத்தில் வேறெங்கோ அலைபாய்ந்துவிடும். பள்ளியில் ப்ரா போடச் சொன்னதைக் கேட்டதும் அதே போல் ஒரு முறை பார்வையை ஓடவிட்டாள். இப்போதே என்ன அவசரமோ என்று முணுமுணுத்தவாறே வாங்கித் தந்தாள். எப்படிப் போட வேண்டும் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு அகன்றாள்.
அதுவொரு வெள்ளை நிற ப்ரா. பின்புறம் இருந்த ஊக்கு கைக்கு எட்டவே இல்லை. அதை மாட்டுவதற்குள் வியர்த்துக் கொட்டி கையும் வலிக்கத் தொடங்கியிருந்தது. மார்பகங்களை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்தாற்போன்ற உணர்வு. அம்மா மல்லிகைப்பூக்களை டிபன் பாக்ஸில் போட்டுத் தண்ணீர் தெளித்து வைப்பாள், சில நாட்கள் வாடாமல் இருக்க. அது போல் தன் பூவை வியர்வையோடு பத்திரமாக வைத்துவிட்டதைப் போலிருந்தது.
அம்மா ப்ராவையும் மார்பையும் ஒரு முறை உற்றுப் பார்த்தாள்.
‘அடுத்த வாரம் டெஸ்டுக்குப் படிச்சுட்டியா?’ என்றாள். நன்றாக இருக்கிறது என்றுகூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று அம்மாவின்மேல் கோபம் வந்தது சாதனாவுக்கு.
பள்ளியில் சில தோழிகளிடம் ப்ரா போட்டிருப்பதை சாதனாவே போய்ச் சொன்னாள். அன்றைக்கெல்லாம் பெரிய மனுஷியாகிவிட்டதைப் போன்ற மிதப்பில் அலைந்தாள். அவ்வப்போது கை தானாக மார்புப் பக்கம் போய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கப் பரபரக்கும். கிரீடங்களைச் சுமந்து கொண்டிருப்பது போல் ஒரு நிமிர்வு. கூடவே தன்னைத் தானே ரசிக்கும்போது எழும் கூச்சம்.
மாலையாவதற்குள் அடிப்பகுதியைச் சுற்றிலும் வியர்த்து அரிக்கத் தொடங்கியிருந்தது. வீட்டுக்கு வந்ததும் ப்ராவைக் கழற்றினாள். விடுதலை! என்று மார்பகங்கள் துள்ளிக் குதிப்பது போலிருந்தது. தோள்பட்டையில் பட்டையாய்த் தடம் பதித்திருந்தது ப்ரா. இனி எப்போதும் உன் வாழ்வில் இருக்கப் போகிறேன் என்பதுபோல் அழுத்தமாக. இரண்டு தோள்பட்டைகளிலும் மார்பகத்தின் அடிபாகத்திலும் பட்டையாய் பெல்ட்டால் அடிவாங்கிய தழும்புபோல் இருக்கும் அம்மாவின் ப்ரா தடம் நினைவுக்கு வந்தது.
ஒரு வாரத்திற்குள் ப்ரா போரடித்துவிட்டது. அதில் இருந்து விடுபடுவற்காகத் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதுவும் அவளுக்குப் புரிந்துபோனது. பலநேரங்களில் அனிச்சையாக, சில நேரங்களில் வேண்டாவெறுப்பாக ப்ரா அவளோடு ஒட்டிக்கொண்டது.
அது பெரிய கடை. ப்ராவுக்கு மட்டுமே தனியாகப் பெரிய பகுதி இருந்தது. சாதனா இங்கு முன்பே வந்திருக்கிறாள். அளவும் பிராண்டும் சொல்லி வாங்கிச் சென்றிருக்கிறாள். அது அவளுக்குத்தான் என்றுகூடச் சொன்னதில்லை. சேல்ஸ் பெண்களைப் பார்த்தாலே அவளுக்குக் கூச்சமும் தயக்கமுமாக இருக்கும். அங்கு அனைவரும் மார்பையே ஊன்றிப் பார்ப்பார்கள். யாருக்கும் அது வித்தியாசமாகவும் தெரிவதில்லை. முழுதும் பெண்கள்தான். கூட வந்த சில ஆண்கள், பக்கத்தில் உள்ள டாய்ஸ் செக்ஷனிலோ, எதிரில் இருக்கும் பெல்ட் செக்ஷனிலோ நின்றுகொண்டிருப்பார்கள். ‘முடிந்ததா’ என்பதுபோல் அவ்வப்போது லேசாக எட்டிப் பார்த்துக்கொள்வார்கள்.
முகமும் மார்பகங்களும் மட்டுமே கொண்ட பொம்மைகள் அப்பகுதியைச் சுற்றிலும் இருந்தன. சில இடங்களில் முகமற்ற வெறும் மார்பகப் பொம்மைகள். பல வகையான மாடல், கலரில் ப்ராக்கள் போட்டுக்கொண்டு ‘என்னைப் பார்’ என்பது போல் அந்தப் பகுதியின் மேல் அலமாரிகளில் வீற்றிருந்தன. சரியாக அவற்றிற்கு மேலே சிறிய விளக்குகள் போடப்பட்டு வெளிச்சம் பாய்ந்திருந்தது. வெளிர் ரோஸ் நிறத்திலான பொம்மைகளுக்கு எல்லா நிற ப்ராக்களும் எடுப்பாக இருந்தன. சாதனாவின் கண்கள் அவற்றையே சுற்றிச் சுற்றிப் படமெடுத்தன. பொம்மைகளுக்கு மாட்டப்பட்டிருக்கும் ப்ராக்கள் எல்லாம் வெகு அழகாகவும் கச்சிதமாகவும் இருப்பதாய்த் தோன்றியது அவளுக்கு. மார்பகத்தைச் சுற்றிலும் ப்ரா தடமும் இல்லை. பொம்மை மார்புகள் அளவில் சிறிதாக, வடிவத்தில் நேர்த்தியாக, கொஞ்சமும் தொய்வின்றி நின்றன. மார்பகத்திற்கு ஏற்ற பிராவா? பிராவுக்கு ஏற்ற மார்பகமா? முதலில் தயாரிக்கப்பட்டது எதுவாக இருக்கும்?
சித்தி நேராக ஒரு பிரபலமான ப்ராண்ட் பகுதிக்கு அழைத்துப் போனாள். சேல்ஸ் பெண் சிரித்தபடி ‘எந்த மாதிரி ப்ரா வேண்டும்?’ என்று கேட்டாள். சித்தி அதே கேள்வியைத் தமிழில் சாதனாவைப் பார்த்துக் கேட்டாள். சாதனாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரியான அளவு ப்ரா என்று மட்டும்தான் மனம் சொன்னது. அதை எப்படிச் சொல்வது? நேரத்தை வீணாக்க விரும்பாத சேல்ஸ் பெண் ‘முதலில் சில மாடல் காட்டுகிறேன் பாருங்கள்’ என்றபடி எடுத்துக் காட்டத் துவங்கினாள்.
வயர்டு ப்ரா என்று ஒரு மாடலைக் காட்டினாள். ப்ராவின் கீழ்ப்பகுதியில் நடு மார்பில் இருந்து அக்குள் பகுதி வரைக்கும் மெல்லிய கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ‘சிலருக்கு அது பிடிப்பதில்லை ஏனென்றால் அது கொஞ்சம் இறுக்கமாகப் பிடிப்பதைப் போலிருக்கும்’ என்று சொன்னாள். ஆனால் அது போடுவதால் மார்பு தொங்குவது போல் இல்லாமல் சற்றுத் தூக்கினாற் போல் அழகாக இருக்கும் என்றபடி ப்ராவை விரித்து, அந்த ப்ராவுக்குள் மார்பு இருப்பதைப் போன்ற பாவனையுடன் அதன் வயரைத் தொட்டு மேலே இழுத்துக் காட்டினாள். மேலேறி நின்றது கம்பி. ‘கம்பி குத்திவிட்டால்?’ சாதனா கேட்டாள். கம்பியைச் சுற்றிலும் துணி இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் அப்படியே வெளியே வந்துவிட்டாலும் சின்னதாக சிராய்ப்பு தவிர பெரிதாக ஒன்றும் இராது என்றும் பதில் தந்தாள் சேல்ஸ் பெண்.
சாதனா அந்த ப்ராவைக் கையில் எடுத்தாள். கம்பியைத் தொட்டுப் பார்த்தாள். வளைந்த சிறு கம்பி. அதற்குள் மார்பகங்களை வைத்துவிட்டால் போதும். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும். சிறைக்கம்பி போல், எல்லை தாண்டி வந்துவிடக் கூடாது என்ற உத்தரவுடன்.
சித்தியும் சேல்ஸ் பெண்ணும் அவ்வப்போது சாதனாவின் மார்பை ஆய்வு செய்வதைப் போல் கண்களால் அளந்தனர். சித்தி வேறு மாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சேல்ஸ் பெண் இன்னொரு மாடல் ப்ராவைக் கொண்டு வந்தாள். அந்த ப்ரா அடர் நீலக் கலரில் பளபளவென்ற துணியில் இருந்தது.
ப்ரா கடையில் சாதனாவுக்கு சுவாரசியமான ஒரே விஷயம் அதன் வண்ணங்களும் வேலைப்பாடுகளும்தான். வெள்ளை, கருப்பு, தோல்நிறம்தான் பெரும்பாலும். அரிதாக சில அடர் வண்ணங்கள். நல்ல மயிற்கழுத்து நிறத்தில் லேஸ் வைத்த ப்ரா ஒன்று சாதனா கண்ணில் பட்டது. பக்கத்தில் உள்ள இன்னொரு ப்ராண்ட் ப்ராக்களை எட்டிப் பார்த்தாள். அங்கு ரத்தச் சிவப்பு நிறத்தில் ப்ராக்கள் இருப்பது தெரிந்தது.
‘இதெல்லாம் போட்டுப் பாரு’ சித்தி ஐந்து வகையான ப்ராக்களை சாதனாவின் கையில் திணித்தாள்.
‘இத்தனையுமா?’
ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள் சாதனா. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும் தெரிந்தது. எல்லாமே ஒரே மாதிரியும் தெரிந்தது.
‘இது இரண்டும் போட்டுப் பார்க்கிறேன் சித்தி’
‘இந்தா, இதையும் வச்சுக்கோ’ என்றபடி இன்னொன்றயும் திணித்தாள்.
டிரையல் ரூம். முழுக்கண்ணாடி, பிரகாசமான விளக்கு. சுற்றிலும் ப்ராவுடன் நிற்கும் பெண்கள் போட்டோ, மேல்கூரையையும் விட்டுவைக்கவில்லை. கைப்பையை வைக்க சிறு டேபிள் இருந்தது. அதில் ப்ராவை எல்லாம் வைத்தாள். கண்ணாடி இல்லாத இன்னொரு பக்கம் திரும்பி நின்றுகொண்டாள். ஊக்கு போட்டு முடிந்ததும் திரும்பிக் கண்ணாடியில் பார்த்தாள்.
‘சரியா இருக்கா?’ சித்தி கேட்டாள்.
எது சரி? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாவற்றையும் மறைக்கும்படி இருந்தது அந்த ப்ரா. ஆனால் கொஞ்சம் அழுத்துவது போலவும் இருந்தது. பெரிதாக எடுக்கலாமோ? அடுத்த இரண்டையும் வேகமாகப் போட்டுப் பார்த்தாள். ஊக்கு போட முடிகிறதா என்பதைத் தவிர வேறு என்ன பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை அவளுக்கு. ‘சரியாக இருக்கிறது சித்தி’ என்று குரல் கொடுத்துவிட்டுப் பழைய ப்ராவைப் போட்டுக்கொண்டாள்.
நர்சிங் ப்ரா கேட்டு வந்த ஒரு பெண்ணைக் கவனித்தாள் சாதனா. இரண்டு பக்கமும் மார்பின் நடுவில் சிறிய ஜிப் வைத்திருந்தது அந்த ப்ராவில். ஜிப்பின் தரத்தைக் காட்டுவதற்காக அதைப் பல முறை வேகமாக மூடியும் திறந்தும் காட்டினாள் சேல்ஸ் பெண். திறந்ததும் வெறுமை காட்டும் அந்த ப்ரா மூடிக்கொண்டதும் ஏதோ ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறேன் என்பதுபோல் காட்சியளித்தது.
சித்தி அவளுக்கென்று சில ப்ராக்கள் எடுத்திருந்தாள். சாதனாவிடம் அதைக் காட்டி சித்தி ஏதோ பேசத் தொடங்க, கடைப்பெண் ‘இதைப் பேக் செய்யட்டுமா’ என்று
அவளது காரியத்திலேயே குறியாக நின்றாள்.
காத்திருந்தாற்போல், சித்தியைக் கூட்டிக்கொண்டு அந்தப் பெண் பில் போடும் இடத்துக்குப் போனாள். சாதனா மெதுவாக இருபக்கமும் பார்த்தபடி நடந்தாள். எஸ்கலேட்டரின் முகப்பில் நின்றபடி மேலே எட்டிப் பார்த்தாள். மஞ்சள் நிறத்தில் பூ போட்ட வான்நீல நிறச் சட்டை அணிந்தபடி ஒரு பொம்மை. சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் போட்டிருக்கவில்லை. தலையில் மஞ்சள் நிறத் தொப்பி, பிங்க் நிற ஷார்ட்ஸ். பெண்கள் பகுதியின் முகப்பில் என்ன இருக்கிறதென கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்றெண்ணியபடி நோட்டம் விட்டபோது சித்தி கையில் பையுடன் வந்துகொண்டிருந்தாள். நடந்தபடியே பைக்குள் இருந்து ஒவ்வொரு ப்ராவாக எடுத்து நிறமும் அளவும் சரியாக வைத்திருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டாள்.
‘எல்லாம் சரியா இருக்கானு நீயும் ஒரு தடவ பார்த்துரு சாதனா, மாறிப் போச்சுனா ரிடர்ன் பண்ணவும் முடியாது.’
சித்தி நீட்டியதும், பையைக் கையில் வாங்கி உள்ளே பார்த்தாள். உள்ளே பல நிறங்களில் பல ப்ராக்கள் குவிந்து கிடந்தன. என்னென்ன வாங்கினோம் என்பதே குழம்பிப் போயிருந்த அவளால் எப்படி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்ல முடியும்?
எஸ்கலேட்டரில் இறங்கும்போது ப்ரா பகுதியின் பொம்மை வரிசையைப் பார்த்தாள். அதே அளவான சிரிப்போடு அவளைப் பார்த்தன.
எம்.ஆர்டியில் ஏறி உட்கார்ந்ததும் சித்தியின் மார்புப் பக்கம் சாதனாவின் கண்கள் தானாய்ப் போயின. ஓரக்கண்ணால் பக்கவாட்டில் பார்க்கையில் கடை பொம்மையின் அதே கச்சித வடிவம். உடலோடு ஒட்டியிருக்கும் சுடிதாரின் உள்ளே சொன்ன பேச்சைக் கேட்கும் குழந்தையாய் அந்த மார்பகங்கள். ப்ராவை நன்றாகப் பார்த்து வாங்கத் தெரிந்தவள்தான் சித்தி.
அருகே இருந்த அந்த இரண்டு பேர் தொடக்கக் கல்லூரிப் பெண்களாக இருக்க வேண்டும். அவர்களின் இளமுலைகளும் ப்ராவும்தான் அவளது கண்ணிற்குப் பட்டது. கைக்குழந்தையுடன் ஒரு பெண் இருந்தாள். அவளது மார்பகங்கள் சற்று சரிந்தாற்போல் இருந்தன. டிசர்ட்டுக்குப் பின்னால், சுடிதாருக்குள், டிரஸ்சுக்குள், சர்ட்டுக்குள், சேலை பிளவுசுக்குள், க்ராப் டாப்பிற்குள் என எம்.ஆர்.டி முழுதும் மார்பகங்கள் நிறைந்திருந்தாற்போல் இருந்தது.
அடுத்த ஸ்டேஷனில் கூட்டமாய் ஆட்கள் ஏறினார்கள். அவளுக்கு நேரெதிரே ஒருவன் நின்றான்,மேல் கம்பியைப் பிடித்தவாறு. எம்.ஆர்டி வாசல் திறந்த நேரம், அடித்த காற்றில் அவனது டிசர்ட் உடலோடு ஒட்டிக்கொண்டதால் அவனது மார்பகங்களின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இளம்பெண்களின் மார்பகங்களைப் போல் சிறிய கூம்பாக இருந்தன. அவன் தன் மார்பகத்தை மறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. சட்டை தொளதொளவென்று இருந்தது. அதுவும் மார்பகத்தை மறைக்கத்தானா என்று தெரியவில்லை. காற்றில் டிசர்ட் ஒட்டியிருப்பதால் முலைக்காம்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. அவனிடம் உனக்கு பேடெட் வகை ப்ராதான் சரியாக இருக்கும் என்று சொல்லத் தோன்றியது.
அவளுக்கு நேரெதிரில் இருந்த பெண் எழுந்துபோய்விட, அவன் அங்கு உட்கார்ந்தான். எதிரில் அவனது மார்பையும், குனிந்து தனது மார்பையும் என மாறி மாறிப் பார்த்தாள் சாதனா.
சட்டென்று அவளது மார்பகங்கள் காணாமல் போய்விட்டதைப் போன்ற உணர்வு. கனம் குறைந்தாற்போல் ஒரு கணம். மீண்டும் வந்து விழுந்து பாறாங்கல்லாய்க் கனப்பது போல் மறு கணம் என அழுத்தியும் நெகிழ்த்தியும் ஆட்டம் காட்டின அவை. சாதனா தனது மார்பகங்களை உற்று நோக்கினாள். அவை அங்குதான் இருந்தன. எழுந்து பறக்கப் போகிறோம் என்பது போல் லேசாக அசைந்துகொடுத்தன. அவள் தன் இரு கைகளால் இரு மார்பகங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். மடியில் அவள் கைகளுக்குள் இருந்த பை கீழே சரிந்தது. அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த ப்ராக்கள் தெறித்து விழுந்தன. கருப்பு, சிவப்பு, தோல்நிறங்களில் ஒன்றன்மேல் ஒன்றாய் ஒழுங்கின்றி விழுந்திருந்தன. அங்கிருந்த அனைவரின் கண்களும் சில நொடிகள் அந்த ப்ராக்கள் மேல் நிலைகொண்டன. பின் நகர்ந்துவிட்டாலும், ஓரக்கண்ணால் அளந்தபடியே இருந்தன. யாரும் பார்ப்பதற்குள் எடுத்துவிடும் அவசரத்துடன் சித்தி வேகமாக எழுந்தாள். சிதறிக்கிடக்கும் ப்ராக்கள் எல்லாவற்றிற்கும் மேலே அந்த நீலநிற ப்ரா பொம்மைக்கு மாட்டப்பட்டதைப் போல் முற்றிலும் விரிந்து, அளவும் வடிவமும் காட்டியபடி கிடந்தது.
அதற்குக் கொஞ்சமும் கூச்சமே இல்லை.
***
காலச்சுவடு நவம்பர் 2024
The post அகலாது அணையாது first appeared on சுஜா.
February 3, 2025
நோக்குங்கால்
Artwork by William E. Norton (Sunrise over Fishing Waters)
பலரும் தற்செயலாய்க் கண்கள் சந்தித்துக்கொள்ளும் அந்தத் தருணமேனும், ஒரு குட்மார்னிங் அல்லது புன்னகை அல்லது தலையசைப்பில் என்னை அங்கீகரித்துவிட, இவர்கள் மட்டும் அந்தச் சந்திப்பிற்கு வழியே இல்லை என்பதுபோல் கண்களை எங்கோ வைத்திருப்பது எப்படி? யாருக்கும் முகம் கொடுப்பதே இல்லை, ஏதோ வேறு உலகத்தில் சஞ்சரிப்பது போல. அவர்கள் உலகில் நான் இல்லை என்பது என்னை ஏனோ தொந்தரவு செய்தது. என்னுலகில் அவர்கள் பூதாகரமாகிப் போனதும் அதன் காரணமாகத்தான்.
இத்தனைக்கும், பார்க்குமனைத்துடனும் என்னைப் பிணைத்துக்கொள்ளும் சூட்சமம் தெரியும் எனக்கு. உச்சியில் பூத்துத் தொங்கும் கொன்றை, மாடிப்படியருகே ஒளிந்து நின்று தலை மட்டும் நீட்டும் தெருப்பூனை, தரையில் ஜோடியாக இசைத்து நடக்கும் சிட்டுக்குருவிகள், நடைபாதைக் கைப்பிடிக் கம்பியில் ஊர்வலம் போகும் சிவப்பு எறும்புகள் என அனைத்துக்கும் இடம் உண்டு, இந்த மூவர் தவிர.
தினம் காலைச் சிந்தனையை இந்த மூவர் ஆக்கிரமித்துவிடுவார்கள். காலணி அணிந்துகொண்டே நடையா மெதுவோட்டமா என்று முடிவெடுக்கும்போதே அவர்களின் தலையீடு தொடங்கிவிடும். உலகை ஓரிடத்தில் நிலைத்து நிறுத்திவிட்டு நான் மெதுவாக ஓடி நகரும் மெதுவோட்டம்தான் எனக்குப் பிடித்தமானது. அனைத்துமே நொடிக் காட்சிகளாகிவிடும். துள்ளல் நகர்வு தரும் உற்சாகத்தில் உலகம் ரம்மியமானதாகத் தோன்றும். நடையில் அனைத்தையும் ஊன்றிக் கவனிப்பதால், பல சிந்தனைகளைக் கிளர்த்தி மனத்தை சுறுசுறுப்பாக்கும். இன்றென்னவோ கண் விழித்தது முதலே மனம் அசுர வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. நடைதான் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுத்தேன். அந்த மூவரில் ஒருவரையாவது கண்ணோடு கண்காண வேண்டும்.
இருள் போர்த்திய உலு பண்டான் கால்வாய் மங்கலாகத் தெரிந்தது. இருபுறமும் மேடாக இருக்கும் நடைபாதையில் நிழல்களாய் சில அசைவுகள் தெரிந்தன. நடைபாதைகளை இணைக்கும் மேம்பாலங்கள் தோரண வாயில்கள் போல் வளைந்து நின்றன. ஏ4 தாளிற்கு அளவெடுத்து வரைந்த மார்ஜின் போல பாதைகளின் இருபுறமும் நெடிதுயர்ந்த மரங்கள் அடர்ந்திருந்தன. இருளில் துண்டு துண்டு காடுகள் போல் அத்தனை அடர்வுடன் காட்சியளிக்கின்றன, அருகில் உள்ள டோவர் காட்டின் ஒரு நீட்சி போலிருக்கிறது. முதல் குரலாய் எங்கிருந்தோ ஒரு குயில். என்னை எழுப்பும் அதே குரல். விடியலில் சேவல் கூவும் என்று படித்திருக்கிறோம். எங்கள் வீடு எப்போதுமே குயில் கூவித்தான் விடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் குரல்களின் எண்ணிக்கை கூடுகிறது. உருவங்களற்ற விதம்விதமான குரல்கள் விடியலுக்கு முகாந்திரமாக ஒலிக்கின்றன.
கிம் மோ பகுதியில் இருந்து நடைபாதைக்கு நுழையுமிடத்தில் அல்லது முதல் பாலத்துக்கு அருகில் இருக்கும் அசோக மரத்துக்குப் பக்கத்தில் முதலாமவரைப் பார்த்துவிடுவேன்.
வயது 60 இருக்கலாம். முழங்காலுக்கு சற்றுக் கீழே வரை உள்ள ஷார்ட்ஸும், காலர் டி சர்ட்டும் போட்டிருப்பார். இடது கையில் கட்டியிருக்கும் பலவண்ண நூல்களை அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொள்வார். அந்தக் கையில் வைத்திருக்கும் நீளக்குச்சியைச் செங்கோலைப் பிடித்திருக்கும் தோரணையில் வைத்திருப்பார். மெலிந்த உடலுக்குச் சற்றும் பொருத்தமில்லாத பெரிய வாட்சை வலது மணிக்கட்டு தாங்கிக்கொண்டிருக்கும். அந்தக் கையில் பெல்ட்டும் செயினுமாகச் சுருட்டி வைத்திருப்பார். நடக்கும்போது பாதங்கள் பக்கவாட்டில் திரும்பியிருக்கும். ஸ்லோ மோஷனில் நடக்கும் சாப்ளின். நாய்க்குட்டியைக் கூட்டிச் செல்வது போன்ற பாவனையுடன் செயினை இழுத்துப் பிடித்துக்கொண்டே நடப்பார். அவ்வப்போது நின்று குனிந்து பேசுவதும் உண்டு. சில சமயம் ரகசியக் குரலில், சில சமயம் கோபக் கத்தல்.
தூரத்தில் பார்த்ததுமே எனக்குள் ஒரு குறுகுறுப்பு தொடங்கிவிடும். கூடவே பயமும். என் கண்களைச் சந்திப்பதில்லை என்று விசனப்பட்டாலும் அப்படிச் சந்தித்தால் என்ன செய்வது என்பதில் பல குழப்பங்கள் எனக்குண்டு. சிரிப்பதா? சிரித்தால் அவரைக் கிண்டல் செய்வது போல் எடுத்துக்கொண்டு கோபப்படுவாரோ? அவரது இல்லாத நாயை நான் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? அதற்கும் வணக்கம் சொல்வதா? அதைப் பார்க்காதது போல் நடந்துகொண்டால் அவர் மனம் வருத்தப்படுமா? அவரே வந்து பேசினால் என்ன செய்வது? இல்லாத நாயுடன் பேசிக்கொண்டிருக்கிறாரே, அவருக்கு நிச்சயம் மனப்பிறழ்வாகத்தான் இருக்க வேண்டும். காயப்படாமல் நடந்துகொள்வது எப்படி? திடீரென்று தாக்கினால்? வேகம் கூட்டி அவரிடம் இருந்து முடிந்தவரையில் விலகி, அப்படியொருவர் அங்கு இருப்பதையே உணராதது போல் கடந்துவிடுவேன். என் கண்கள் நகர்ந்துவிட்டாலும், உடல் அவரது அசைவுகளை உணர்ந்தபடியேதான் இருக்கும்.
இன்றும் கால்கள் நடக்க கண்கள் தேடிக்கொண்டிருந்தன. பெரிதாக எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் மென்காற்று வீசிக்கொண்டிருந்தது. பசுமையின் மணம். பசுமைக்கென்று ஒரு மணம் இருக்கிறதா? நீரின் மணமா? அல்லது அங்கிருந்த தாவரங்களின் மணமா? அல்லது உயிரினங்களின் மணமா? பாசிகளின் மணமா? எல்லாம் கலந்த கலவையாகப் பசுமை மணம். நாசிக்குள் நுழையும்போதே ஒவ்வோர் அணுக்களையும் எழுப்பி அவற்றுள் புகுந்துவிடும் மணம். கால்வாயில் நீர் நிறைந்திருந்தது. அரைத் தூக்கத்தில் வெட்டும் மின்னல் ஒலி, டிரம்ஸ் ஓசை போல் இடி, ஊளையிடும் காற்றோசை என நேற்றிரவு நடந்த கச்சேரியின் கதாநாயகி இன்று மென்னடையில் காலாற நடந்து செல்கிறாள். சிற்றசைவுடன் நிதானமான நகர்வு. தெளிவான நீரோடை. ஒரு வெள்ளைக் கொக்கு நீரில் அடிமேல் அடி வைத்து நடந்துகொண்டிருந்தது, கால்வாய் நீரின் ஓட்டத்தை எவ்விதத்திலும் கலைத்துவிடாமல். அதன் கால்கள் நிலத்தைத் தொடும் இடம் தெரிகிறது. உடல் கனம் முழுதையும் எப்படிக் கால்களுக்குக் கொண்டு வராமல் அவற்றால் நடக்க முடிகிறது. என் கால்களும் கொக்குகளின் கால்களைப் போலாகிவிட்டிருந்தன. நிலத்தில் தடம் பதிக்காமல், சத்தமெழாமல், அதே சமயத்தில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தேன்.
சிலர் காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு அமைதியாக, சிலர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு. முழுதும் விடியாத காலையின் இருள் ஓர் அமைதியைத் தக்க வைத்திருந்தது. ஒளி சத்தங்களுக்குத் தைரியம் கொடுத்து வெளிக்கொணர்வது போல, இருள் அமைதிக்கு ஆதரவளித்து ஆக்கிரமிக்கச் செய்கிறது போலும். வாக்கிங், ஜாக்கிங், சைக்கிள் என நகர்வுகள் நகர்வுகள். நானும் நகர்கிறேன். என்னுடன் உலகமும் நகர்கிறது. ஒரு மீன்கொத்தியின் உச்சஸ்தாயிக் குரல் ஓங்கி ஒலித்தது. ஒரே இடைவெளியில் விட்டுவிட்டு அந்தச் சத்தம். குரல் வந்த வழி பார்த்தேன். அதே மொட்டை மரத்தின் உச்சிக்கிளையில் சூரிய ஒளியில் மின்னும் நீல நிறம். அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் அந்தக் கணம் கேட்கும் ஒற்றைக் குரலாக அதன் குரல். அந்தப் பகுதி முழுதும் தன் குரலால் இணைத்துவிடும் பிரயத்தனம் போல.
தூரத்துப் பறவையொலி போல் விசில் சத்தம் கேட்கிறது. இவர்தான் இரண்டாமவர். பாலத்தின் எதிர்ப்புறம் நடக்கிறார். விசிலடித்தபடியே நடப்பார். அவருக்குக் கண் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அவர் எதையும் பார்த்து நான் பார்த்ததில்லை. அவரது உலகில் விசிலும் பாட்டும் மட்டும்தான். சீனத்து இளையராஜா பாடலாக இருக்கும். வயதை வைத்துப் பார்த்தால் எம்.எஸ்.வியாக இருக்கவும் வாய்ப்புண்டு. உயரம் குறைவுதான் என்றாலும் நடையும் விசிலும் சிறு துள்ளலும் சந்திரபாபுவை நினைவூட்டும். அந்தக் காலை நடையில் பறவைகளின் ஒலியுடன் ஒத்திசைவாய் அந்த விசில் ஒலி கேட்கும். விசில் மூலம் அவர் பறவைகளுடன் பேசுகிறாரோ? உலகத்துடன்? என்னுடன்? விசிலும் காற்றொலி தானே? பேச்சைப் போல, பாட்டைப் போல, இவ்வுலகின் அனைத்து ஒலியையும் போல. அவரது விசில் மொழி எனக்குப் புரியவில்லை என்பது என் போதாமைதானே? அவரும் கொஞ்சம் எனக்காக மெனக்கெடலாமே. சின்ன பார்வை போதும், அவருலகில் என்னை இணைத்துக்கொண்ட திருப்தி கிட்டிவிடும் எனக்கு.
மூன்றாமவர், கிளி மனிதர். சைக்கிளை ஓட்டிச் சென்று பார்த்ததில்லை. உருட்டியபடி நடப்பார். மீனாட்சியின் கிளி போல, தோளில் ஒரு கிளி அமர்ந்திருக்கும். சுற்றிலும் உள்ள மரங்களில் இருந்து பலவிதமான கிளிச்சத்தங்கள் கேட்கையில் இதுவும் குரலெழுப்பும். அவர் சொல்லிக் கொடுத்த சீன மொழியில் பேசுகிறதா? கிளிகளின் பாஷையை இன்னும் மறக்காமலிருக்கிறதா? அந்தக் கிளிகளிடம் பேசுகிறதா, அவரிடம் பேசுகிறதா? எதுவும் தெரியவில்லை. அவர் தன் பாட்டுக்கு நடந்துகொண்டிருப்பார். கிட்டத்தட்ட 70 வயதிருக்கலாம். நடையில் நிதானமும், ஒரு தாளமும் இருக்கும். அவருக்கும் சுற்றுலகம் கிடையாது. தானும் சைக்கிளும் கிளியும் மட்டுமே. அவரது வலது கையில் இரண்டு வாட்சுகள் கட்டியிருப்பார், கிளிக்கு ஒன்று அவருக்கு ஒன்று என்பது போல. அவரிடம் பேச வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. கிளியைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். முடிந்தால் கிளியிடம் நட்பாகிக்கொள்ளலாம். அதற்கெல்லாம் அவர் மனது வைத்தால்தானே. அவரது கண்கள் இந்த உலகிலேயே இல்லையே. தூரத்தில் இருந்து என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார். அரையிருளில் கிளி கருப்பாகத் தெரிகிறது. உண்மையில் அது கிளியா? கிளியின் நிழலா? என்னை நெருங்கியதும் நொடியில் மறைந்துவிடுவார்கள். இன்று அவரிடம் மறித்துப் பேசினால் என்ன? கண்களை எப்படிச் சந்திப்பிற்கு இடமின்றி வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஒரு தற்காப்புக் கலைதான். இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே எனக்குத் தேவையான ஒன்று.
முதலாமவர் அசோக மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். நாய்களை வாக்கிங் கூட்டி வருபவர்கள் பொதுவாக ஒரு ப்ளாஸ்டிக் பையும் பேப்பரும் கையில் எடுத்து வருவார்கள். பொது இடங்களில் அதன் கழிவுகளை எடுத்து அப்புறப்படுத்துவதற்காக. ஆனால் அவர் கையில் பை இல்லை. தன் நாய் அதைச் செய்யாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். பின் ஏன் மரத்தடியில் நிற்கிறார்? நடையை மெதுவாக்கினேன். அவரைப் பார்த்துக்கொண்டே நடக்கலாம். இன்று அவரைக் குறித்துக் கூடுதலாகச் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். நேரடியாகப் பார்க்கமால் எப்படிப் பார்ப்பது? சிறுது தள்ளியே நின்றுகொண்டேன்.
பைனாகுலர் எடுத்து வந்திருந்தால் பறவைகளைப் பார்ப்பது போல் அங்கு சிறிது நேரம் நின்றிருக்கலாம். அந்தக் கால்வாய் நீரைப் பார்த்துக்கொண்டே நின்றேன். அங்கு எப்போதும் காணப்படும் உடும்பு ஒன்று வெகுதூரத்தில் இருந்து தண்ணீரில் நீந்தி வந்துகொண்டிருந்தது. உடும்பு என்றால் எனக்கு பயம். உடும்பு என்ன செய்யும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் உடும்புப் பிடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தாலே பயமுறுத்தும். முதலைகள் போன்ற தோலுடன், முதலைகள் போல் அல்லமால், வேகமாக அசையும் அவை எளிதில் நம்மை நெருங்கிவிடலாம் என்கிற பயமாக இருக்கலாம். சில சமயம் உடும்புகள் தண்ணீரில் இருந்து மேலேறி வந்து நடைபாதையில் நிற்பதையும் பார்த்திருக்கிறேன். பலரும் அலறுவார்கள். ஒரு நாள் அதன்மேல் ஒருவர் சைக்கிளை ஏற்றிவிட, அது துள்ளிப் பாய்ந்து தண்ணீருக்குள் விழுந்தது. கீழே விழுந்ததில் அவருக்குக் கை கால்கள் எல்லாம் சிராய்ப்பு. பார்க்கப் பார்க்க அதன் தடித்த தோல் ஒரு அச்சத்தைத் தருகிறது.
உடும்பு முன்னும் பின்னுமாக ஒரே பகுதியில் நீந்திக்கொண்டிருந்தது. அவரை ஓரக் கண்ணால் பார்த்தேன். அவரது நாய் அசோக மரத்தைச் சுற்றி வருகிறது போலும். அவர் பார்வை நகர்ந்த விதம் கொண்டு கணித்தேன். அசோக மரம் முழுக்கப் பூக்கள். ஆரஞ்சு நிறத்தில் மின்னுகின்றன. காலை வெயில் ஏறிக் கொண்டிருந்தது. சூரியக்கீற்றுகள் தொட்டு அனைத்து ஜீவராசிகளும் உறக்கத்தில் இருந்து எழுகின்றன. இருளில் இதுவரை ஒளிந்திருந்த உலகம், நிறம் துலங்கி கண் திறக்கிறது. உடல் முழுக்க பூத்து நிற்கும் அசோக மரமும் எழுகிறது. வேர் முதல் மரத்தண்டு உட்பட எல்லா இடங்களிலும் பூக்கள். மரம் முழுக்கப் பூக்கள். கொத்துக் கொத்தாய். என்னையறியாமலேயே முழுதும் மரத்தின் பக்கம் திரும்பி பூக்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தேன். ஒரு மலருக்குள் பல மலர்கள். பல மலர்கள் சேர்ந்தது ஒரு மலர். அந்த மலர்கள் என்னைப் பார்ப்பது போலிருந்தது. அசோக வனத்தில் இவை சீதைக்கு ஆறுதல் தந்திருக்குமா? அவற்றிடம் உரையாடலைத் தொடங்க நினைத்தேன். அவர் என்னைக் கவனிப்பது தெரிகிறது. அவரது உடல்மொழி மாறுகிறது. இறுக்கமாகிறது. அவர் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அவர் யாரையும் பார்க்கத் தயாராக இல்லை, அந்த நாயைத் தவிர.
நாய் சங்கிலியை மரத்தின் பக்கம் இழுக்கிறது போலும். அவர் தன் பக்கம் அதை இழுக்கிறார். அது வர மறுக்கிறது. அதனுடன் பேசுகிறார், தாஜா செய்து அழைத்துப் போகப் போவதைப் போல. கிடைத்த சமயத்தில் அவர் முகத்தைப் பார்த்துவிட்டேன். தாடையில் மட்டும் வெள்ளைநிறக் குறுந்தாடி, கழுத்தைத் தாண்டி நெஞ்சு வரை நீண்டிருந்தது. வெள்ளை மீசை, புருவங்கள். கையில் சீன எழுத்துகளில் பச்சை குத்தியிருந்தார். சில குறியீடுகளும் உருவங்களும்கூடத் தெரிந்தன. கிழமரங்களின் பட்டைகளைப் போல அழுத்தமான வரிகளுடன் உலர்ந்து இறுக்கமாக இருந்தது முகம். உதடுகள் இறுக்கித் தைத்திருப்பதைப் போலிருந்தன. அவரது உடலின் வாசலான அது பூட்டப்பட்டுப் பல்லாண்டு ஆன தோற்றத்துடன் இருந்தது.
அவர் நாயை அதன் போக்கில் கொஞ்ச நேரம் விட்டுவிட்டுப் பின்னர் அழைத்துப் போகலாம் என்று முடிவெடுத்துவிட்டதைப் போல் மரத்தையே பார்த்தபடி நின்றார். நானும் இன்று நாயுடன்தான் கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
விசிலொலி எதிர்ப்பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. எதிர்ப்புறம் நின்று பார்த்தாலும், தூரமாக இருந்தாலும், ஒருவர் உற்று நம்மைக் கவனிக்கிறார் என்றால் ஒரு குறுகுறுப்பு வரும்தானே? அந்தக் குறுகுறுப்பை அவரிடம் எப்படியும் இன்று உண்டாக்கி என்னைப் பார்க்க வைக்க வேண்டும். அவரையே உற்றுப் பார்த்தேன். ஒரு பாடலை முடித்து இன்னொரு பாடலுக்குப் போகிறார், நடந்துகொண்டே.
திடீரென்று அம்மாவும் மகனுமாக இருவர் சைக்கிளில் வந்தனர். ஐரோப்பியர் போல் தெரிந்தார்கள். சைக்கிளை அருகில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கால்வாய்ப் பக்கம் வேகமாகத் திரும்பினார்கள். இப்போது அங்கு இரண்டு உடும்புகள் ஒன்றை ஒன்று கட்டியணைத்துக்கொண்டு நின்றன, மல்யுத்தம் போல. அந்தச் சிறுவனுக்குத் தான் காணும் காட்சியில் ஆச்சரிய உணர்வைவிட மேலோங்கி இருந்தது அறிந்துகொள்ளும் ஆர்வம்தான். உடும்புகள் பக்கம், அம்மா பக்கம் எனத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பல கேள்விகள். why, what, is it, when, how என்ற ஆரம்பக் கேள்விச் சொற்கள் மட்டும்தான் என் காதில் தெளிவாக விழுந்தன. கேள்விகளுக்கு நடுவில் இடைவெளி இருந்தாற்போல் இல்லை. தன் கேள்விகள் அனைத்தையும் தன்னுள் இருந்து இறைத்துக் கொட்டிவிடும் அவசரம்தான் இருந்தது. சிறுது நிறுத்தினாலும் கேள்விகள் சுரப்பது நின்றுவிடுமோ என்கிற பயம். அல்லது கேட்க ஆளில்லாமல் போய்விடுமோ என்கிற பதற்றம். உண்மைதான். பதில்கள் வரும்வரை கேள்விகள்தானே பிரதானம், பல சந்தர்ப்பங்களில் பதில்களுக்குப் பின்னும்கூட. கேள்விகள் தனித்த உயிரி. பதில்களை ஒட்டி மட்டுமில்லை அதன் வாழ்வு. எனக்கும் பல கேள்விகள் உண்டு. தினமும் இன்றைய பிரதான கேள்வி என்று ஏதேனும் ஒன்று வந்து சேரும். இன்றைய நடை இப்படி நிற்றலில் முடிந்திருப்பதும் கேள்வியால்தானே? அவன் கேள்விகளுக்கு நடுநடுவே சில சிறிய பதில்களும் அம்மாவிடம் இருந்து வந்தன. பல கேள்வி பதில்களுக்குப் பிறகு ‘I don’t know whether they are fighting or mating’ என்று அம்மா சொல்வது கேட்டது. ‘மேட்டிங்’ பற்றி முன்பே அவனுடன் பேசியிருப்பது போலிருந்தது அவள் சொன்ன தொனி. அவன் அமைதியானது போலில்லை. அவன் தன் கேள்விக்கிணற்றில் மேலும் ஆழத்திற்குச் சென்று கேள்விகளை இறைக்கத் தொடங்கினான். இப்போது கேள்விகள் குரலாக மட்டுமே அம்மாவிடம் வருகின்றன. அவனது கண்கள் இம்மியும் உடும்புகளை விட்டு நகரவில்லை.
கால்வாயின் எதிர்ப்புறம் சீனமொழியில் அதே உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுமிக்கு அப்பா பதில் சொல்கிறார். அவள் கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருக்கிறாள். திடீரென்று அதைச் சண்டை என்றே முடிவெடுத்துவிட்டதுபோல ‘ஃபைட்! ஃபைட்!’ என்று கத்திக்கொண்டிருக்கிறாள். அப்பா அவளை அமைதியாக இருக்கும்படி சொல்கிறார். அவள் கேட்டபாடில்லை. அவளது உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. ‘ஃபைட்! ஃபைட்!’ என்றோ ‘மேட்! மேட்!’ என்றோ கத்த வேண்டும் போலிருந்தது. விசில் சத்தம் எப்போது நின்றது என்று தெரியவில்லை. நாயும் அவருமாக எப்போது உடும்புகள் பக்கம் திரும்பினார்கள் என்றும் தெரியவில்லை. கிளியுடன் அவரும் எப்போது என்னருகில் வந்து நின்றார் என்பதுவும் தெரியவில்லை. மேலும் சிலரும் கால்வாயின் இருபுறமும் நின்று வேடிக்கை பார்த்தார்கள். உடும்புகளிடம் எந்த அசைவும் இல்லை. தம் ஏகாந்தத்தில் இருக்கின்றன. சுற்றுப்புறம் எதுவும் அவற்றைப் பாதிக்கவில்லை.
ஒரே வீரியத்துடன் இருளும் ஒளியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. ஒவ்வொரு சந்திப்பிலும் என்னவோ பரிமாற்றங்கள் நடக்கிறது என்பது உறுதி. இருளின் ரகசியங்கள் தெரிந்துகொண்டேதான் ஒளி ஒன்றுமே இல்லை என்பதுபோல் பளீரிடுகிறதா? வானம் நொடிக்கொரு நிறமெடுத்தது. மஞ்சள், சிவப்பு என நிறங்கள் மாறிக்கொண்டே இருந்தன. உதயமா, அஸ்தமனமா என்ற குழப்பத்தைத் தந்தது.
வால் பகுதி மட்டுமே நீரில் இருக்க முழுக்க எழுந்திருந்த உடலுடன் இரண்டு உடும்புகள் கட்டிக்கொண்டு நின்றன. வால்கள் லேசாகத் தண்ணீரில் அசைகின்றன. ஆரத் தழுவி நிற்கின்றனவா? பிடித்து வைத்திருக்கின்றவா தெரியவில்லை. கைகள் உடலை முழுக்க இறுக்கிப் பிடித்திருந்தன. அசைவின்றி ஒரே சிலை போல் நின்றன. அவ்வப்போது சிறு அசைவுகள். மீண்டும் அதே சிலைத் தோற்றம். நான் அந்த மூவரையும் பார்த்தேன். கண்களை உடும்புகளில் ஊன்றியிருந்தார்கள். கிளியும் அமைதியாக இருந்தது.
திடீரென ஒரு உடும்பு இன்னொன்றைக் கீழே தள்ளி அதன் மேலேறிப் படர்ந்தது. கீழே கிடந்த உடும்பு எதிர்ப்பது போல் எழ முயற்சி செய்தது. ஆனால் மேல் உடும்பின் உடல் முழுதும் அதன்மேல் கொடுத்த அழுத்தத்தில் நகர முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ் உடும்பு அசைவுகளைத் துறந்தது. இரண்டும் அசைவின்றி சிலையாகின. ஒன்றன் மேல் ஒன்று படுத்திருக்கும் சிலைகள். அப்படியே சில நிமிடங்கள். அனைவரும் அசைவின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெற்றி! என்று சிறுமி கை தட்டி குதூகலிக்கிறாள். அவளது அப்பா அவள் கையைப் பிடித்து நிறுத்துகிறார். மீண்டும் அமைதி. சிறுவன் கூர்ந்து கவனிக்கிறான். அம்மா அவன் தோளில் கை போடுகிறாள்.
இருள் தன் இறுதி மூச்சை இழுத்து, ஒளிக்கு வழி விட்டது.
அமைதியைக் கலைத்து, சலனத்தைத் தூவும் சத்தம் சற்று தூரத்தில் கேட்டது. அனைவரது பார்வையும் அந்தத் திசைக்குப் போயின. நான்கைந்து நீர்நாய்கள் நீரின் ஓட்டத்தைக் குலைத்தபடி வேகமாக நீந்தியும் ஓடியும் வந்தன. நீர் விலகி கரையோரங்களில் ஒதுங்கியது. கனத்த உடம்புகளில் இருந்து தெறித்து விழும் துளிகள் சூரிய ஒளியில் நீர்க்குமிழிகள் போலிருந்தன. வழவழப்பான அவற்றின் தோல்களில் நீர் பசையாக ஒட்டியிருந்தது. நீரைக் கிழித்துக்கொண்டு பெரும் பாய்ச்சலாய் அவை ஊடுறுவுகின்றன. நீரின் சத்தமா நீர்நாய்களின் அசைவுச் சத்தமா? இரண்டும் உரசி ஒன்றாகிப்போன சத்தம்.
அந்த சலசலப்பிற்கு இடையே ஒரு க்ளக்! கனம் நிதானமாக நீரில் விழும் சத்தம். உடும்புகள் பிரிந்து நீருக்குள் ஓடின, ஒன்றை ஒன்று துரத்தியபடி. நீர் நாய்கள் கலைத்துப்போட்ட நீரில் இப்போது எதுவுமே தெரியவில்லை. கலங்கலாக சலசலப்புடன் ஒரே இடத்தில் குதித்தபடி இருக்கிறது நீர். வெகு அருகில் நாய் ஒன்று பெருங்குரலெடுத்துக் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் தன்னிச்சையாக அவர் பக்கம் பார்த்தேன். அவரும் சங்கிலியைப் பிடித்து இழுத்தபடி, அதனை அதட்டினார். கிளியும் விசிலும்கூட நாயைப் பார்த்தன. மூவரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒரே நேரத்தில் ஒற்றைப் பார்வையென மூவரும் என்னைப் பார்த்தனர். நானும் மூவரையும் ஒன்றாகப் பார்த்தேன். மூவர் நால்வரானோம். இப்போது அங்கு வேறு யாருமே இல்லை, மீன்கொத்தியின் உச்சஸ்தாயிக் குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மேலெழும் சூரியனை மேகமொன்று வேகமாக நகர்ந்து சென்று மறைத்தது.
***
தமிழ்வெளி – அக்டோபர் 2024
The post நோக்குங்கால் first appeared on சுஜா.
January 16, 2025
அகண்
Artwork by Frida Kahlo
இவ்வளவு மூர்க்கமாக அம்மாவை நான் பார்த்ததில்லை. பச்சிளங்குழந்தையைக் கையில் வைத்திருக்கும்போது இவ்வளவு ஆங்காரம் வருமா? அம்மாவின் கைகளில் இருந்த நிவி அழத் தொடங்கினாள். நிவியை வாங்குவதற்கு அம்மாவை நோக்கி முன்னகர்ந்தேன். அம்மா படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டாள். ஏசி ஆன் செய்யும் சத்தம் கேட்டது. நிவியைத் தூங்க வைக்கப் போகிறாள். வர எப்படியும் பதினைந்து நிமிடங்களாவது ஆகும்.
என்ன தவறு செய்தேன்? அம்மா ஏன் அப்படி முறைத்தாள்? யோசித்துப் பார்த்தேன். எதுவும் நினைவில் இல்லை. சிவந்து உருளும் அம்மாவின் கண்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. வலது கண்விழி மட்டும் நகர்ந்து என்னை நோக்கி வந்தது. இதோ இப்போது அந்த ஒற்றைக் கண் என் கண்ணோடு வந்து ஒட்டிக்கொண்டது. என் வலது கண்ணின் முன் தூக்கிட்டுத் தொங்கும் சிவப்பு ரோஜாவைப் போல் அது நிற்கிறது.
போன மாதம் என்று நினைக்கிறேன். பக்கத்துவீட்டு க்ளாராவின் ஒற்றை முடி இப்படித்தான் வந்து ஒட்டிக்கொண்டது. காலையில் லிப்டில் குட்மார்னிங் சொன்னாள். லிப்டைவிட்டு வெளியே வந்ததும் அவள் வேறு திசையில் நான் வேறு திசையில் நடந்தோம். பஸ் ஸ்டாப்புக்கு நடந்துகொண்டிருந்தபோது திடீரென ஒரு முடி கண் முன்னால் தெரிந்தது. என் முடிதான் என்று நினைத்துக் கையால் தள்ளிவிட்டேன். அசையவில்லை. கண்ணைக் கசக்கியும் சிமிட்டியும் பார்த்தேன். என்ன செய்தும் போகவில்லை. கண்ணில் ஏதேனும் பிரச்சினையோ என்ற பயம் வந்துவிட்டது. என் கண்ணுக்குள் தெரியும் அந்த முடியை உற்று கவனித்தேன். ஸ்ட்ரைட்டனிங் செய்து, சிவப்பு நிறம் பூசப்பட்ட முடி. க்ளாராவின் முடி என்று கண்டுபிடிக்கவே கொஞ்சம் நேரமெடுத்தது. அது அசைவின்றி நின்றது. எடையற்ற முடி, ஆனால் ஒற்றையாய் இப்படிக் கண்முன் நிற்கும்போது இரும்புக் கம்பி போல் இருக்கிறது. என்ன செய்வது? எப்படித் துரத்துவது? குளித்தால் சரியாகிவிடலாம். அன்றிரவே தலைக்குக் குளித்தேன். அப்படியும் அது அங்கேயே நிலை குத்தி நின்றது. ரகுவிடம் சொன்னால் பிரமாதமான உளவியல் காரணங்கள் எல்லாம் சொல்வான்.
‘உனக்கும் கலரிங் ஸ்ட்ரைடனிங் ஆசையோ? குழந்தை பிறந்ததும் முடி கொட்டிடுமோன்கிற பயமோ? உன் முடி நீளத்தைக் குறைச்ச இல்ல. அதோட ஆழ்மன விசனமாக இருக்கும். முடி பத்தின கவலை எல்லாம் விட்டுரு. எனக்கு உன் முடி எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?’
எனக்குள் அப்படி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் முடியைப் பற்றிய எந்த எண்ணமுமே இல்லை. முடி மட்டுமல்ல, உடல் தோற்றத்தைக் குறித்த எந்த ஆசையும் இல்லை. சோம்பேறித்தனமாகக்கூட இருக்கலாம். அதற்கான எந்த மெனக்கெடலும் கிடையாது. லிப்டிலிருந்து வெளியே வந்தபோது எனக்கு முன்னால் க்ளாரா போனாள். அவளது முடி என் கண்ணில் தென்பட்டது, வேறொன்றும் இல்லை. தூங்கி எழுந்ததும் போய்விடலாம். ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எழுந்தேன். எதைப் பார்த்தாலும் ஒற்றைச் சிவப்புக் கம்பியின் வழி பார்ப்பது போலிருந்தது. அது முடி என்பதே மறந்துபோய் என் கண் ஒரு கம்பிக்குப் பழகிவிட்டது. யார் கண்ணுக்கும் அது தென்படவில்லை என்பது மட்டுமே ஆறுதல். நிவிக்குக் காய்ச்சல் வந்த ஒரு நாள் அது காணாமல் போனது. அதை மறந்துமிருந்தேன், இந்தக் கண் வந்து தொற்றிக்கொள்ளும்வரை.
முடி போலல்ல இந்தக் கண். வந்த பத்து நிமிடங்களிலேயே பயமுறுத்திக் கொண்டிருந்தது. சிவப்பென்றால் அப்படி ஒரு சிவப்பு. இரத்தச் சிவப்பு நிறம். இரத்தமேதான் அங்கு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு கரு உருண்டை மிதக்கிறது. இரண்டும் திரவம்தான். ஆனால் ஒன்றில் ஒன்று கலக்காமல் தனித்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது, மனிதக் கருதான். உருவான மூன்று மாதங்களுக்குள் இருக்கலாம். டாக்டர் லின் ஸ்கேன் செய்தபோது காட்டிய உருண்டைகள் எல்லாம் நினைவில் வந்து போயின. எப்படி இங்கே தனியாக இரத்தத்தில் மிதக்கிறது? மொத்தக் கோளமும் எப்படிக் கண்ணானது? அம்மாவின் ஒற்றைச் சிவப்புக் கண்!
ரகுவிடம் சொன்னால், ‘வேறொன்னுமில்லடா. இந்த பதிமூனு மாசமா கரு, குழந்தை, யூட்ரஸ், டெலிவரினு வேற நினைப்பே இல்லாம இருந்தல்ல? ஒரு உயிரை இன்னொரு உயிருக்குள்ள சுமப்பதுனா சும்மாவா? அதான் எல்லாமே உனக்குக் கருவாத் தெரியுது போல. இன்னும் சொல்லப் போனா இதெல்லாம் உன் மனப்பிரமை. இதை அப்படியே அதன் போக்குல விட்டு நீ இயல்பாக இரு. தன்னால சரியாகிரும்.’
கை பிடித்து அழுத்திக்கொண்டே அக்கறையுடன் சொல்வான். வேண்டாத கோபத்தை ஏற்றுக்கொள்வதுகூட எளிது. ஆனால் வேண்டாத அக்கறையையும் அன்பையும் என்ன செய்ய முடியும்?
அம்மா வந்துவிட்டாள். நேராகக் கிச்சனுக்குப் போய் ஒரு கிண்ணத்தில் ஊறப்போட்டிருந்த பாதாம் பருப்பை எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள். நிவி தூங்கும் அறைக்குள் நுழைந்தேன். ஏசி போட்டிருப்பது போலவே இல்லை, மெல்லிய குளிர் காற்று. சற்றே திறக்கப்பட்டிருந்த ஜன்னல் திரை வழி நுழையும் அளவான சிறிய வெளிச்சம் அறையை ரம்மியமாக்கியது. தூங்குவதற்கேற்ற சூழலை அம்மா அழகாகக் கொண்டு வந்துவிடுகிறாள். என்னால் நிவியைப் பால் கொடுத்து மட்டும்தான் தூங்க வைக்க முடிகிறது. நிவி பக்கத்தில் படுத்துக்கொண்டேன்.
நிச்சயம் முடியைப் போல் இந்தக் கண்ணை விட்டுவிடக் கூடாது. இந்த முறை கூடுதல் கவனத்துடன் ஆராய வேண்டும். எந்தெந்த நேரங்களில் வருகிறது. என்ன செய்கிறது? சாப்பிடும்போதோ தூங்கும்போதோ முடியைப் பார்த்த நினைவில்லை. மற்ற நேரங்களில் எல்லாம் கூடவேதான் இருந்தது. ஆனால் பெரிதாகத் தொல்லை எதுவுமில்லை, ஒரு உறுத்தலைத் தவிர. இந்தக் கண்ணின் சிவப்போ திகிலாக இருக்கிறது. என் கண் முன்னால் நிற்கும் அது என்னையும் பார்க்கிறது. நான் பார்க்கும் அனைத்தையும் பார்க்கிறது. முன்னும் பின்னும் பார்க்கும் கண். அதுவே என் கண்ணாகிவிட்டால்? நானும் முன்பின் பார்க்க முடியுமோ? என் வலது கண்ணுக்குள்ளேயே போய்விடுமோ? ஒரு கண் மட்டும் சிவப்பாக நிலைகுத்தி நிற்கும் என் உருவத்தைக் கற்பனை செய்து பார்த்தேன். காளி ரூபம்போல் ஒற்றைக் கண், கலக்கத்துடன் மற்றொரு கண். எவ்வித உணர்ச்சியும் காட்டாத மற்ற முகபாகங்கள். உக்கிரமும் கலக்கமும் இரண்டு கண்களானால் என்னவாகும்? ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் பார்க்க முடியுமோ? சுட்டெரிக்கும் கண் கலக்கக் கண்ணை ஒடுக்கிவிடுமோ. பார்க்கும் எல்லாமே சிவப்பாக மாறிவிடுமோ, சிவப்புத் திரையிட்டது போல. கண்ணை மூடினாலும் இருளில் ஒற்றைக்கண் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் கொஞ்சம் உக்கிரம் குறைவதாகத் தோன்றியது. கண்ணைத் திறந்தால் காத்திருந்தது போல வந்து தொற்றிக்கொண்டு வெறித்தது. பயம் குறைந்தால்தானே உற்றுக் கவனித்து ஆராய முடியும்? நிவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இதெல்லாம் செய்ய வேண்டாம். இப்போது கண் மூடியிருப்பது நல்லது.
அந்தக் கண்ணை மீண்டும் கவனித்தபோது நான் குளித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் ப்ளீடிங் நின்றபாடில்லை. உடலில் வேறெந்த வலியும் இல்லை. குழந்தை பிறந்த சுவடே இல்லை. இந்த ப்ளீடிங் மட்டும் எரிச்சலாக இருந்தது. ஒரு குழந்தை போதும் என்று ரகுவும் நானும் எப்போதோ முடிவு செய்துவிட்டோம். கருப்பையை நீக்கிவிடலாமா? ரகுவிடம் சொன்னால் ‘கருப்பை உன்னோட இருக்கும் உறுப்பு. அதை நீக்குவதால் உடலின் சமநிலை பாதித்து, வேறெந்த மாதிரி உடல் உபாதைகள் வரும்னு தெரியாது. உனக்கு இப்போது பிரச்சினை மனசுதான். டெலிவரி முடிந்த கொஞ்ச நாளுக்கு இப்படியெல்லாம்தான் மனம் படுத்தும். ரொம்ப அலட்டிக்காத. நான் இருக்கேன்.’ என்று கையைப் பிடித்து முத்தமிடுபவனிடம் ‘என் ப்ளீடிங்கிற்கும் நீ இருப்பதற்கும் என்ன சம்பந்தம் ரகு?’ என்று கேட்டுவிட முடியுமா? என் நாப்கினைக் குப்பையில் போடுவது, இரத்தக் கறை படிந்த என் துணிகளைக் கழுவுவது என எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறான். மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களையும் அவன் அருகாமையால் மட்டுமே எளிதில் கடந்துவர முடிந்தது. வெந்நீரை ஊற்றியதும் மார்பில் இருந்து பால் கசிந்தது. இந்தப் பழுப்பு நிறத்திரவம்தான் நிவியின் முழு உணவு. எப்போதும் உணவைச் சுமந்துகொண்டிருப்பதை நினைத்துச் சிரிப்பு வந்தது. கண் குளியலறையின் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தது. மூன்று கண்கள் இருக்கும் உணர்வு. ஆனால் அது பார்ப்பவற்றை அதன் கோணத்தில் என்னால் பார்க்க முடிவதில்லை. 360 கோணத்தில் சுற்றும் மூன்றாவது கண்ணாகிவிட்டால் நன்றாக இருக்கும். வேண்டாம், ரகு சொல்வது போல் சமநிலை பாதிக்கப்படும். சீர்மை குலைந்துவிடும்.
நிவியும் குளித்த களைப்பில் இருந்தாள். என் விரல்களை இறுக்கப் பற்றியபடி பால் குடித்துக் கொண்டிருந்தாள். சிவப்புக் கண் பார்த்துக் கொண்டிருந்தது. எதைப் பார்க்கிறது என்று என்னால் கணிக்க முடியவில்லை. உண்மையில் அதற்குப் பார்வை உண்டா? உடலில் பல நரம்புகள் பின்னிப் பிணைந்துதானே கண்ணுக்குப் பார்வை கிடைக்கிறது. தனிக்கோளமாக நிற்கும் இந்தக் கண்ணுக்குப் பார்க்கும் திறன் இருக்குமா? அது தனி உயிர்தானா? அப்படித்தான் தோன்றுகிறது. ததும்பும் அந்தச் சிவப்பில் உயிர் இருக்கிறது. உயிர் என்றால் என்ன? உயிர்ப்பு என்றால் துடிப்புதானா? அசைவும் அலைவும்தான் உயிரா? சிமிட்டாமல் இருக்கும் கண்ணை எப்படி உயிருள்ளது என்று சொல்ல முடியும்? ஆனாலும் உயிர்ப்பு தெரிகிறதே. திறந்தே இருக்கும் விழிகள். உற்றுப் பார்த்தேன். இமை இல்லை. வெறும் சிவப்புக் கோளம், டாக்டர் லின் விவரித்த ப்ளாஸ்டோசிஸ்ட். எனக்குப் பிரசவம் பார்த்தவள் அவள். ஒவ்வொரு வாரத்திற்கான கரு வளர்ச்சியையும் படம் காட்டி விவரித்துச் சொல்வாள். வலது கையில் பேனாவை வைத்துக்கொண்டு அதை நாலா புறமும் காற்றில் ஆட்டியபடிபேசுவாள். குழந்தை உருவாகியிருக்கிறது என்று உறுதி செய்த நாள் முதல் அடிக்கடி சந்தித்ததால் நட்பாகிவிட்டோம். லின் நட்பானது போல் கருப்பையும் மனதுடன் ஒன்றிவிட்டதோ. ஒரு வேளை ரகு சொல்வதுபோல்தானோ. அப்படியென்றால் முடி?
எல்லாவற்றிற்கும் காரணம் கண்டுபிடிப்பது எளிது. ஆனால் என்ன பயன்? இப்போது என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சரி. பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பார்த்தேன். மடித்த என் கைக்குள் இருக்கும் நிவியின் தலையும் என் இடது மார்பும் என் முகமும் மங்கலாகத் தெரிந்தன. முகத்தில் அப்படி ஒரு கண் இருந்த தடமே இல்லை. என் கண்கள் என்னைக் கேலி செய்வது போல் சிரிக்கின்றன. கண்ணாடியில் தெரியாத எதுவும் நிஜமில்லை. அப்படியென்றால் இது கற்பனைதானா? அல்லது கண்ணாடி பார்க்க விரும்பாத கண்ணா? நிவியின் உதடுகளில் சின்ன அசைவு மட்டுமே. பால் குடிக்கிறாளா, தூங்குகிறாளா என்றே தெரியவில்லை.
கண்ணாடியில் இருந்து முகத்தைத் திருப்பினேன். கண் காட்சியளித்தது. சிவப்புக் கோளத்துக்குள் இளஞ்சிவப்பு நிறத்தில், சிலந்தி வலையைப் போல் மெல்லிய நரம்புகள். நரம்புகள் இணையும் புள்ளிகள் அணுவைப் போன்ற வடிவில் இருந்தன. நடுவில் ஒரு கரு. அந்தக் கருவின் உள்ளே கடற்குதிரையின் உருவத்தில் என்னவோ இருக்கிறது. அதன் மேல் தாவி ஏறுகிறேன். அது திரவத்தில் வழுக்கிக்கொண்டு போகிறது. திரவத்தைத் தொடப் பார்க்கிறேன், கைகளில் படவில்லை. வழுக்கிக்கொண்டே போகிறது. கைகளை இருபுறமும் படகுத் துடுப்புபோல் வீசி அலசுகிறேன். துடுப்பின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. நிவியின் சிணுங்கலில், கண் விழித்தேன். தூங்கிவிட்டேன் போலும், கைகளைத் தளர்த்தியதில் நிவி விழித்திருந்தாள்.
சிவப்புக் கண்ணைக் கண்டுகொள்ளாதது போல், கணினியில் அலுவலகம் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருந்தேன், விடுமுறை முடியப் போகிறதே. தன்னிருப்பை அசாத்தியமாக உறுதி செய்துகொண்டிருந்தது அந்தக் கண், ஒவ்வொரு எழுத்தின்மேலும் பதிந்து. விடாப்பிடியாக வேலையை முடித்தேன். செல்போனில் எடுத்த நிவியின் புகைப்படங்களை ஹார்ட் டிஸ்கில் சேமிக்கும்போது, சில பழைய புகைப்படங்கள் கண்ணில் பட்டன. நான்கு வருடங்கள் முன்பு நானும் ரகுவும் ஒரு மரத்தடியில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு உட்கார்ந்து சூர்ய அஸ்தமனத்தை ரசித்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று. புகைப்படத்தில் எங்கள் முகங்களுக்குப் பின்னால் தூரத்தில் சூரியன் சிவந்து ஜொலித்தது. ஒற்றைக் கண் உற்சாகமாகிவிட்டதோ. என் கண்களை நகர்த்தி சிவப்புக் கண்ணைச் சரியாக சூரியனுடன் இணைக்க முற்பட்டேன். முடியவில்லை. வலிந்து எதையும் செய்ய விடுவதாக இல்லை போலும் அந்தக் கண். சரி, அது இஷ்டப்படியே இருக்கட்டும். அதனிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று எனக்குத் தெரியும். அடுத்து எதையாவது கண்ணில் தொற்றிக்கொண்டால்தான் இதில் இருந்து விடுபட முடியும். இந்த முறை நானே தேர்ந்தெடுத்தால் என்ன? இந்தச் சூரியன்? வேண்டாம், கண்ணின் தகிப்பே தாங்க முடியவில்லை.
வீட்டை ஒரு முறை நோட்டம் விட்டேன். கண்ணை உறுத்தாத எதையாவது வைத்துக்கொள்ளலாம். ஏதேனும் பூ? பால்கனித் தொட்டியில் பூத்து நின்ற மல்லி அருகில் போய் அதை உற்றுப்பார்த்தேன். அசைவில்லை. ஒரு வேளை சிவப்புதான் சரிவருமோ. நெடிய வளர்ந்திருக்கும் செம்பருத்திச் செடியிடம் போனேன். பூக்கள் கண்ணுக்குத் தென்படவில்லை. கைகளால் இலைகளைத் துழாவி அசைத்துப் பார்த்தபோது ஒரு சிறிய பூ கண்ணில் பட்டது. சிவப்புக் கண்ணும் சேர்ந்து தேடியதோ! வலது கையில் அந்தப் பூவைப் பிடித்துக்கொண்டேன். ஆழமான அதன் நடுப்பகுதியை உற்று நோக்கினேன். கண் சரியாக அந்தச் சரிவிற்குள் போய் நிலை குத்தி நின்றது. வேறொன்றும் நடப்பது போலில்லை. பக்கத்துவீட்டுப் பூனை அவர்களது வீட்டு வாசலில் நின்றபடி என்னையே வெறித்துப் பார்க்கிறது. உடல் முழுக்கக் கருத்திருக்கும் அந்தப் பூனையின் கண்கள்தான் முதலில் என் கண்ணில் பட்டன. மஞ்சள் நிறத்திற்குள் கருப்புக் கோளம், கொஞ்சம்கூட அசைவேயில்லை. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் தொற்றிக்கொள்ளுமோ என்ற பயத்தில் வீட்டிற்குள் வந்துவிட்டேன்.
கிளினிக் அறைக்குள் நுழைந்ததும் வாசலுக்கு வந்து என்னைக் கட்டிக்கொண்டாள் லின். அவள் எப்போதுமே இப்படித்தான். அவளது உதடுகள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும், அவளது கை, என் தோளையோ, கைகளையோ, தலையையோ தொட்டு அவற்றுடன் தனி உரையாடல் நடத்திக் கொண்டிருக்கும்.
‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டாள். என் கைகளைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அவளது நாற்காலிக்குப் போனாள். வழக்கமாக அவள் உடுத்தும் முழங்கால் நீள ஸ்கர்ட். ப்ரில் இல்லாத பார்மல் ஸ்கர்ட். இடுப்புடன் ஒட்டிக்கொண்டு இருக்கும். அவள் நடக்கும்போதும் நாற்காலியில் சுற்றும்போதும் முழங்கால் பகுதியில் மட்டும் அசைவு தெரியும். என் கண்கள் அந்த அசைவையே கவனித்தன.
‘ரகு வரவில்லையா? உன் மகள் எப்படியிருக்கிறாள்? உன் உடல்நிலை எப்படி இருக்கிறது?’
அவள் நாற்காலியில் அசைந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். மூன்றாவது கேள்விக்கு மட்டும்தான் பதில் சொன்னேன். என் பதில்களைக் குறித்துக்கொண்டாள். அந்த அறை எனக்கு ஒரு வருடப் பழக்கம். ஒருபக்கச் சுவரில் புகைப்படங்கள் ஒட்டியிருக்கும். ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் டாக்டரும் தாயும் பிறந்த குழந்தையும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். நானும் நிவியும் லின்னும் எடுத்த புகைப்படம் அங்கிருக்கிறதா என்று தேடினேன்.
‘பரிசோதித்துவிடலாமா?’ என்று கேட்டு, பின்னால் நின்றுகொண்டு விவரங்களை கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த நர்சைப் பார்த்தாள் லின்.
நான் எழுந்துகொண்டேன். அந்த அறையிலேயே சுற்றுத்திரை போட்டு மூடினால் மற்றொரு தற்காலிக அறை உருவாகிவிடும். அதற்குள் நுழைந்தேன். அங்கு மங்கிய இருள். கண் நன்கு விழித்துக்கொண்டது.
‘ஸ்கேன் மட்டுமா?’ நர்சிடம் கேட்டேன்.
‘உள் பரிசோதனையும் சேர்த்துதான்’ என்றாள்.
உள்ளாடையையும் கழற்றிவிட்டு அந்தப் படுக்கையில் ஏறிப் படுத்தேன். நர்ஸ் படுக்கையை இடுப்புக்குக் கீழே மடக்கிவிட்டாள். இரண்டு பக்கமும் கால்களை விரித்து வைக்க ஏதுவாக ஸ்டாண்டுகள். அதில் என் கால்களை வைக்க உதவினாள். வெள்ளை நிறப் போர்வையை அவள் என்மேல் போர்த்தவும் லின் வரவும் சரியாக இருந்தது. விரித்து வைத்திருக்கும் என் இரண்டு கால்களுக்கு நடுவில் நின்றாள் லின். கைகளால் முதலில் வயிற்றுப் பகுதியைத் தொட்டு அழுத்திப் பார்த்தாள்.
ஒவ்வொரு அழுத்தத்திற்கும் ‘வலி இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
‘குட், எல்லாம் நார்மலாகிவிட்டது.’ என்றாள்.
என்னவோ நான் செய்த சாதனை என்பதுபோல். நான் உள்ளுக்குள் சிரித்தேன். கண்ணும் சிரித்தது போலிருந்தது.
‘அப்படியென்றால் அவ்வப்போது பிளீடிங் மட்டும் ஏன்?’
‘மற்றபடி எல்லாம் நார்மல் என்பதால் பயப்பட ஒன்றுமில்லை. இன்னும் ஒரு மாதம் பார்க்கலாம். நின்றுவிடும்.’
லின்னின் குட்டிக் கண்கள் அழகாகச் சிரித்தன. இந்தக் கண்ணுக்கு மாறிவிடலாமா? சிவப்புக் கண் அதை அனுமதித்தது போல் தெரியவில்லை. லின் மார்பு, வயிறு முடித்துவிட்டு இப்போது யோனிக்குப் போகிறாள். அங்கிருந்த ஸ்டாண்ட் ஒன்றில் பொருத்தியிருக்கும் லைட்டை யோனிக்கு மட்டும் வெளிச்சம் தருவது போல் திருப்பினாள் நர்ஸ்.
‘ஸ்டிச் எல்லாம் உதிர்ந்துவிட்டது’ என்றாள் லின். போர்வையைச் சற்று நகர்த்திவிட்டு பல முறை சாரி சொல்லிக்கொண்டே அதன் வழி கருப்பையைத் தொட்டுப் பார்த்தாள்.
‘வலிக்கிறதா?’ என்றாள்.
இல்லை என்பது போல் தலையாட்டினேன். கண் லின்னின் விரல்களையே பார்ப்பது போலிருந்தது. இந்தக் கண்ணைப் பற்றி லின்னிடம் சொன்னால் என்ன? உளவியல் ஆலோசனைக்குப் போகச் சொல்லி அறிவுறுத்துவாளோ?
‘முடிந்தது. கருப்பையும் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது. நீ மீண்டும் பழைய ஆளாகிவிட்டாய்.’ என்றாள் சிரித்தபடி. சிவப்புக் கண் அவளையே பார்த்தது. சட்டென ஒரு பொறி தட்டியது.
‘நான் பார்க்கலாமா லின்?’
‘என்ன?’ என்று குழப்பத்துடன் என் முகத்தைப் பார்த்தாள்.
எல்லாம் முடிந்தது என்று சொன்னதும் வழக்கமாக நான் எழுந்து இந்நேரம் உடை உடுத்தத் தொடங்கியிருப்பேன். படுத்திருப்பதை வைத்து ஊகித்தாளோ என்னவோ, ‘ஒய் நாட்?’ என்றாள்.
நர்ஸும் சிரித்தபடி மேசையருகே இருந்த கைப்பையை எடுக்கப் போனாள்.
‘பெரியதை எடுத்து வா.’ என்றாள் லின்.
ஸ்க்ரீனைத் திறந்து அடுத்த அறைக்குப் போனாள் நர்ஸ். கண்ணின் இரத்தம் அசைந்ததோ! லின் என் படுக்கையின் தலைப்பகுதியை மேலே ஏற்றினாள். தலைப்பக்கம் நின்றவாறே, ‘எதற்கும் பெயின் கில்லர் மட்டும் தருகிறேன்.’ என்று சொல்லிவிட்டு எழுதிக்கொண்டிருந்தாள்.
‘பால் கொடுக்கிறாயா? அதில் எதுவும் பிரச்சினையில்லையே?’
நான் பதில் எதுவும் சொல்லவில்லை.
ஒற்றைக் கண் லின்னையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. லின் அந்தக் கண்ணைப் பார்த்திருந்தால் கண் அவளிடம் போயிருக்குமோ? பாதி இருட்டான அந்த அறையில் அந்தக் கண் சுதந்திரமாக உணர்வது போலிருக்கிறது. என்னைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரிப்பது போலவும். உன்னைத் துரத்துகிறேன் பார் என்றேன்.
ஒரு கண்ணாடியை இரண்டு கைகளால் தூக்கிக்கொண்டு வருகிறாள் நர்ஸ். தலையில் இருந்து தோளளவு உயரம் கொண்டது. நகர்ந்து வரும் கண்ணாடி திரையிடுக்கில் சின்னதாகத் தெரிந்தது. கண்ணாடிச் சில்லுபோல் கண்ணாடியின் சிறு துண்டுதான் ஒரு நேரத்தில் என் பார்வைக்குக் கிட்டியது. அடுத்த அசைவில் வேறொரு துண்டு. குழந்தையின் கை, லின்னின்சிரித்த உதடுகள், கரடி பொம்மையின் தொப்பை, சூரியகாந்திப்பூவின் காம்பு, ஜன்னலின் ஓரம், அதில் தெரியும் ஒரு துண்டு வானம், கொன்றை மரத்தின் உச்சி. நர்ஸ் கால்களுக்கு நடுவே கண்ணாடியை வைத்தாள். போர்வையை நகர்த்திவிட்டுச் சரியாக இருக்கிறதா என்பதுபோல் என்னைப் பார்த்தாள். என் கண்ணில் தொற்றியிருக்கும் சிவப்புக் கண்ணின் ரத்தம் கொதிப்பது போலிருந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். நர்ஸ் கண்ணாடிக்குப் பின்புறமிருந்து இடது பக்கம் தலையை மட்டும் நீட்டி என்னைப் பார்த்தாள். லின் சற்றே குனிந்து என் தோளைத் தொட்டபடி கண்ணாடியில் பார்த்தாள். நான் கண்ணைத் திறந்தேன். இருவரின் முகமும் கண்ணாடியில் தெரிகிறது. நடுவில் அந்தச் சிவப்புக் கண்.
***
தமிழ்வெளி – ஏப்ரல் 2024
January 1, 2025
வாசிப்பு – 2024
ஒவ்வோர் ஆண்டும் ஒரு படைப்பாளரை முழுதுமாகவோ அல்லது அவரது முக்கியமான படைப்புகள் அனைத்தையுமோ வாசிப்பதை முன்பெல்லாம் திட்டமிட்டுச் செய்வேன். ஜெயகாந்தன், தி ஜானகிராமன், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி, பூமணி, அம்பை, பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரை இப்படித்தான் வாசிக்க முடிந்தது. இந்த வருடம் திட்டமிடாமலேயே அது நடந்திருப்பது தெரிகிறது.
இந்த வருடம் ஆர்.சூடாமணியின் சில கதைகளை மீள் வாசிப்பு செய்யும் எண்ணத்துடன் தொடங்கி, தனிமைத்தளிர் தொகுப்பு வாசிப்பில் முடிந்தது.
எம்.டி.வாசுதேவனின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள் முழுதும் வாசித்திருந்தபோதும், மஞ்சுவை மலையாளத்தில் மீள் வாசிப்பு செய்தபோது, அவரது சிறுகதைகளையும் மலையாளத்தில் வாசிக்கும் ஆர்வம் எழவே அதுவும் சாத்தியமாகியது. தொடுதிரை தொகுப்பில் தொடங்கி, மலையாளத்தில் கல்பற்றா நாராயணனின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததும் அப்படித்தான்.
ஆங்கிலத்தில் மேரி ஆலிவரின் கவிதைகளை மொத்தமாக மீள் வாசிப்பு செய்ய நினைத்து ஆண்டுத் தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்கள் அவரது கவிதைகளுடன் பயணித்தேன். சில்வினியா ஒக்காம்போவின் சிறுகதை மற்றும் குறுங்கதைகள் தொகுப்பு, லிடியா டேவிஸின் குறுங்கதைத் தொகுப்புகள் சிலவற்றை வாசித்தது, அவர்களது எழுத்துலகத்தை ஆழ்ந்தறியும் வாய்ப்பாக அமைந்தது.
எப்போதும் என் மேசையில் இருப்பது கவிதைப் புத்தகங்கள்தான். தினமும் கவிதை வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போதும் நண்பர்களிடம் அவ்வாண்டு வெளியாகும் தொகுப்புகளின் விவரம் கேட்டு வாங்கிவிடுவது வழக்கம். கவிதை மற்றும் கவிதை சார்ந்த புத்தகங்களை வாசிப்பது என்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு செயலாகவே இருக்கிறது. புதிய தொகுப்புகள் ஒரு பக்கம் என்றால் மீள்வாசிப்பிற்கும் கவிதைகளைத்தான் அதிகம் நாடுவேன். ஒரு புத்தக அலமாரி முழுக்க கவிதைகளும், கவிதைகள் சார்ந்த புத்தகங்களும் மட்டுமே வைத்திருக்கிறேன். தோன்றும்போதெல்லாம் எடுத்துப் புரட்டுவததும் அன்றைய மனநிலைக்கேற்றவாறு கவிஞர்களைத் தேர்வு செய்து வாசிப்பதும் வழக்கம். இந்த வருடம் கவிதை வாசிப்பு குறைந்திருப்பது தெரிகிறது. சிறுகதைகள் குறித்து நண்பர்களுடன் நடந்த தொடர் உரையாடல், சிறுகதை வாசிப்பின் பக்கம் என்னை அதிகம் திருப்பியிருக்கிறது என்று நினைக்கிறேன். தொகுப்புகளாக வாசித்தவை தவிர, பத்திரிக்கைகளில் வெளிவருபவை, நண்பர்கள் பரிந்துரைப்பவை என்று உதிரியாக வாசிக்கும் சிறுகதைகளும் கவிதைகளும் தனி.
சீன மொழியின் பழங்கவிதைகளை ஆங்கிலத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே பயணி தமிழாக்கம் செய்த தொகுப்பும் கைக்குக் கிடைத்தது. தமிழில் அவற்றை வாசித்தபோது, சங்கப் பாடல்களை வாசித்தது போன்றே இருந்தது.
ஷங்கர்ராமசுப்ரமணியனின் ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தொகுப்பு. 2024இல் அதை மீள்வாசிப்பு செய்தபோது, எத்தனை முறை வாசித்தாலும் “நல்ல கவிதைகள் ஒவ்வொரு முறையும் நமக்குத் தருவதற்கென்று புதிதாக ஒன்றைத் தனக்குள் வைத்திருக்கும்” என்ற என் நம்பிக்கை மேலும் வலுபெற்றது.
வருடத் தொடக்கத்தில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியல் போடுவதும், நண்பர்களுடன் சேர்ந்து வாசிப்பது, இறுதியில் வாசித்தவற்றின் பட்டியலைப் பார்ப்பதும் உற்சாகம் தருவதாக இருந்தது. சமீபமாக, பட்டியலிடுவதில் ஆர்வம் குறைந்து வருவது தெரிகிறது. படித்த புத்தகங்களைக் குறித்த சிறுகுறிப்பு எழுதி வைக்கும் பழக்கமும் நண்பர்களுடன் வாசித்தவை குறித்து உரையாடுவதும் தொடர்கிறது.
தொடங்கிய புத்தகத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்கிற எண்ணமும் மாறியுள்ளது. சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்துவிடும், நேரவிரயம் என்று. அதைத் தவிர்க்க goodreads மற்றும் நண்பர்களின் பரிந்துரை உதவுகிறது. ஒரு சில படைப்புகள் நல்ல படைப்புகளாகவே இருந்தாலும், அது நமக்கானது இல்லை அல்லது அதற்கான காலம் இது இல்லை என்ற புரிதலோடு சில புத்தகங்களைத் தனியே வைத்துவிடுகிறேன்.
2024இல் வாசித்தவற்றுள் நான் பரிந்துரைக்கும் நூல்கள் இவை.
புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன் கிருஷ்ணப் பருந்து – ஆ மாதவன்காகித மலர்கள் – ஆதவன்கங்கை எங்கே போகிறாள் – ஜெயகாந்தன்ஆத்துக்குப் போகணும் – காவேரிஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன்அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாயஆறாவது வார்டு – செகாவ்வாஸவேச்வரம் – கிருத்திகாஅசடு – காசியபன்புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்மஞ்சு – எம்.டி.வாசுதேவன் நாயர் (மீள்)இலட்சிய இந்து ஓட்டல் – விபூதிபூஷன் பந்தோபாத்யாய1984 – George OrwellThe Strange Library – Haruki MurakamiFoster – Claire KeeganCold Enough for Snow – Jessica AuThe song of the Bird – Anthony de MelloThe Man who planted Trees – Jean GionoA shining – Jon FosseThe vegetarian – Han KangThe cat who saved the books – Sosuke NatsukawaThe visitor – J.H.Low (Graphic novel)Kampong boy – Lat ( Graphic Novel)Ten loves of Nishino – Hiromi Kawakamiஆயிரம் சந்தோஷ இலைகள் – ஷங்கர்ராமசுப்ரமணியன்(மீள்)துஆ – சபரிநாதன்வால் – சபரிநாதன் (மீள்)தேதியற்ற மத்தியானம் – தேவதச்சன்காற்றைக் கேட்கிறவன் – கல்யாண்ஜிப்ளக் ப்ளக் ப்ளக் – ராணி திலக்ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது – பொன் முகலிகல்லாப் பிழை – மோகனரங்கன்வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை – பயணிபுன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர், தமிழில் செங்கதிர்The Shambhala – Anthology of Chinese PoetrySelected poems of Ayyappa panicker – Kalpatta Narayanan (Malayalam)Irikkapporuthi – Ammu Deepa (Malayalam)Karinkutty – Ammu Deepa (Malayalam)Neelakoduveli – T.P.Rajeevan (Malayalam)Selected Poems of Kalpatta Narayanan (Malayalam)Orkkappurangal + Kalpatta Narayanan (Malayalam)Soorpanagaiyum matra kavithagalum – Kalpatta Narayanan (Malayalam)A thousand mornings – Mary OliverFelicity – Mary OliverDevotions – Mary OliverWhat kind of woman – Kate BaerAnd yet – Kate Baerதனிமைத் தளிர் – ஆர்.சூடாமணிசிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பைசாந்தன் சிறுகதைகள்இரட்டை இயேசு – விஜய ராவணன்மகாமாயா – குமாரநந்தன்திமிரி – ஐ. கிருத்திகாதங்கமயில் வாகனம் – தமிழ்நதிவீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர்And Softly Go the Crossings – Danielle LimThus were their faces – Silvinia OcampoThe hole – Hiroko OyamadaVarieties of disturbances – Lydia DavisThe yellow wall-paper – Charlotte Perkins GilmanTen things my father never taught me – Cyril WongShort Stories of M.T.Vasudevan Nair (Malayalam)கதையும் புனைவும் – பா வெங்கடேசன்பாரதி நினைவுகள் – ம.கோ.யதுகிரி அம்மாள்தெருவென்று எதனைச் சொல்வீர் – தஞ்சாவூர்க் கவிராயர்தரைக்கு வந்த தாரகை – தஞ்சாவூர்க் கவிராயர்Freedom from the known – J. KrishnamurtiOn fear – J.KrishnamurtiThe post வாசிப்பு – 2024 first appeared on சுஜா.
September 24, 2024
புள்ளிச் சேம்புகளின் வயல் – அம்முதீபா
ஆளரவம் இல்லை
ஒரு சிறு காற்றுகூட
வீசவில்லை
நான் இந்தக் கல்லின் மறைவில்
பதுங்கி இருக்கிறேன்
நான் திருடன் இல்லை
குற்றச் செயல் செய்ததில்லை
குழந்தைகளுக்காக ஒளிந்து
விளையாடவில்லை
மந்தமான தனிமையில் விருப்பமுமில்லை
என் இந்த இருப்பு
எத்தனை காலமாக என்றோ
எப்போது முடியுமென்றோ
எனக்குத் தெரியவில்லை
என்னைத் தேடி
யாராவது புறப்பட்டிருப்பார்களா
இன்னும்
புறப்படாமலே இருக்கிறார்களா
எனக்குத் தெரியவில்லை
ஒரு சிறு காற்று வீசினால்
நான் வீட்டிற்குப்
போய்விடலாம் என்று தெரியும்
உறைந்துபோன
இந்த மதியம்
அசையத் தொடங்கினால்
தப்பிவிடலாம்.
The post புள்ளிச் சேம்புகளின் வயல் – அம்முதீபா first appeared on சுஜா.
பிறந்த வீட்டில் – அம்முதீபா
காலச்சுவடு – ஜூலை 2024
The post பிறந்த வீட்டில் – அம்முதீபா first appeared on சுஜா.
இறுக – அம்முதீபா
பலத்த காற்று
பெருமரத்தை
சுற்றிச் சுழற்றியது.
மரம்
சர்வசக்தியையும் திரட்டி
பறவையின் கூட்டை
இறுகப் பிடித்தது.
பறவைக்கூடு
பறவைகளை
பறவைகள்
பறவைமுட்டையை
பறவைமுட்டை
உயிரை
உயிர்…
தள்ளாடும் மரக்கிளையில் அமர்ந்து
எல்லா சரிவுகளுக்குப் பின்னும் உள்ள
ஆதியொலியை
இறுகப் பிடித்தது.
காலச்சுவடு – ஜூலை 2024
The post இறுக – அம்முதீபா first appeared on சுஜா.
எங்கோ – அம்முதீபா
எறும்பு கடித்த எரிச்சல்
ஆனால், எறும்பு எங்கே போனது?
நீண்ட தேடலுக்குப் பிறகு
எறும்பு கண்ணில் பட்டது.
அப்படியென்றால் உடல் எங்கே?
வலி மட்டும்
நித்தியத்தில் எங்கோ
தங்கிவிட்டது.
காலச்சுவடு – ஜூலை 2024
The post எங்கோ – அம்முதீபா first appeared on சுஜா.
விடிகாலையில் – அம்முதீபா
இடது கையில்
சூரியனைத் தூக்கிப் பிடித்து
வலது கை வெட்டுக்கத்தியால்
நடுவில் ஓங்கி வெட்டி
இரண்டு துண்டுகளாக்கி
அதில் ஒரு துண்டை எடுத்து
துருவத் தொடங்கினாள்.
கீழே உள்ள தட்டில்
உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கிறது
வெளிச்சம்.
காலச்சுவடு – ஜூலை 2024
The post விடிகாலையில் – அம்முதீபா first appeared on சுஜா.
September 16, 2024
பரீட்சை – வீரான்குட்டி
மழையில்
ஒரு இலை விரித்து
அதன் கீழ்
நடந்துபோகின்றனர் இரண்டுபேர்
அவர்களில்
யாருக்குக் கூடுதல்
அன்பென்று
எப்படி அறிந்துகொள்ள முடியும்?
அதிகம் நனைந்தது
யாரென்று பார்த்தால் போதும்.
இரண்டுபேர்
ஆசையோடு
ஒரு அப்பத்தைப் பங்கிட்டுத் தின்கிறார்கள்.
அவர்களில்
யாருக்குக் கூடுதல்
நேசமென்று
எப்படி அறிந்துகொள்வது?
அப்பத்தின்
சிறு பாதிக்காக
விரைந்தோடும் விரல்கள்
யாருடையதென்று பார்த்தால் போதும்.
தங்களுக்குள்
காதலுக்காக
வாதிடுகின்றனர் இரண்டுபேர்
அதில்
அதீத அன்பு யாருக்கென்று
அறிந்துகொள்ள என்ன வழி?
அவர்களில்
தோற்பது யாரென்று தெரிந்துகொள்ளக்
காத்திருந்தால் போதும்.
The post பரீட்சை – வீரான்குட்டி first appeared on சுஜா.
சுஜா's Blog
- சுஜா's profile
- 3 followers

