தமிழ்நதி's Blog

June 23, 2014

மனக்கோலம்




விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான்.
மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேதனையை வேறுவழியின்றி தாங்கிக்கொண்டிருப்பதிலிருந்து பிறந்த அனத்தலாயிருந்தது அது. நிறைந்து சரிந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்ற மதுவைக் கையமர்த்திவிட்டு எழுந்து வெளியில் போனான் சாந்தன். நிலாவெளிச்சம், அடைப்பற்ற யன்னல் வழியாகவும் இன்னமும் செப்பனிடப்படாத ஓடுகள் வழியாகவும் விறாந்தையில் இறங்கியிருந்தது. ஐப்பசி மாதத்துக் குளிரில் தரை சில்லிட்டிருந்தது. ராசாத்தியின் அறைக்கதவருகில் போய் நின்று கூப்பிட்டான்.
“அக்கா…!”
“ம்…..”
“நித்திரை கொள்ளேல்லையா?”
‘க்றும்… ரும்’என்று புரிபடாத ஓசையொன்று பதிலாக வந்தது.
மதுவும் எழுந்து வந்துவிட்டிருந்தாள். அவளது வயிற்றைப் பார்க்கும்போதெல்லாம் அபிக்குட்டி ஞாபகத்தில் வந்தாள். முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்த இறுதிநாட்களில், சாப்பாட்டுக்கு நின்ற சனங்களின் வரிசையில் ஷெல்விழுந்ததில் அபி செத்துப்போனாள். அப்போது அபிக்கு இரண்டரை வயது. மதுவின் இடதுதோள்பட்டையிலிருந்து முழங்கைவரை நீளமான சப்பாத்து வடிவில் சதை பிய்ந்த அடையாளம் இருக்கிறது. வெளியில் போகும்போது கையை மறைப்பதற்காக சேலையை இழுத்து இழுத்து விட்டுக்கொள்வாள். இந்த நான்கு ஆண்டுகளில் அவள் அபியை நினைத்து அழாத நாளே இல்லை. இப்போது நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சி. இரத்த அழுத்தம் வேறு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு தூக்கமில்லாதிருப்பது மதுவின் உடல் நலத்திற்குக் கேடானது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், அக்கா எழுப்பும் அமானுஷ்ய ஓசைகளால் உறங்கமுடிவதில்லை.
“அக்கா…!”
“ம்…”
“நித்திரையைக் கொள்ளுங்கோ…”
“நித்திரைகொள்ள விடமாட்டாங்களாம்”
அவனுக்கு கதவை உடைத்துக்கொண்டு வெளியே ஓடி வானத்தை நோக்கிக் கதறியழவேண்டும் போலிருந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டான். மதுவின் கைகள் அவனது தோளைத் தடவின.
அக்கா திடீரென இரவைக் கிழித்துக்கொண்டு வீரிட்டுக் கத்தினாள்.
“அவளை விடுங்கோ….. பச்சைப் பாலன்…. அவளை விடுங்கோ…”
முன்புறத்தில் இறக்கப்பட்டிருந்த பத்திக்குள் படுத்திருந்த சிவலை திடுக்கிட்டு எழுந்து குரைக்கத் தொடங்கியது. யன்னலருகில்  மூக்கை வைத்து மூசித் தானும் விழித்திருப்பதாக அறிவித்தது. பின் ஒன்றும் நடவாததுபோல் மறுபடியும் உறக்கத்திலாழ்ந்துவிட்டது. ராசாத்தியின் அனுக்கத்திற்கும் அலறலுக்கும் அக்கம்பக்கத்தைப் போலவே சிவலையும் பழகிவிட்டிருந்தது. முன்னர் அவர்கள் வளர்த்த நாயின் பெயர் வீரன். இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து போன வழியில் வீரன் எங்கோ தொலைந்துவிட்டிருந்தது. வீரனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிரித்தபடியிருக்கும் அபியின் புகைப்படம் மட்டும் அழிவுக்குத் தப்பி எஞ்சிவிட்டிருக்கிறது.
மது குசினிக்குள் போய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு வந்தாள். வலிப்பு வந்தாற்போல ராசாத்தியின் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன. வாயிலிருந்து வீணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காக மறைப்புப்போல கட்டி, கால்களை இறுக்கி ஒடுக்கி தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள். மது அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள். விசும்பல் மெதுமெதுவாக அடங்கி ராசாத்தி உறங்கும்வரை தடவிக்கொண்டிருந்தாள். சாந்தனுக்கு மதுவைப் பார்க்கப் பாவமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுவுக்கு வேறுவிதமாக இருக்கத் தெரியாது. அவளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, அவளது அண்ணனிடம் அடிவாங்கி காதலித்துக் கலியாணம் கட்டியது அந்தக் குணத்திற்காகவுந்தான்.
“இப்பிடியே வீட்டிலை வைச்சுக்கொண்டிருந்து உபத்திரவந்தான். ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய்க் காட்டுங்கோ… உங்கடை அக்காவுக்கு மூளை பிசகிப் போச்சுதெண்டதை ஏன் மறைக்கிறீங்கள்?” என்று ஊரில் பலபேர் சாந்தனைக் கேட்டுவிட்டார்கள்.
தன் அக்காவுக்குப் பைத்தியம் என்பதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘தகப்பனைத்தின்னி’என்று பெயர் கேட்ட அவனது பத்தாவது வயதில் தாயையும் இந்திய இராணுவத்தின் ஷெல்லடிக்குப் பலிகொடுத்தான். அவனைவிட ஏழு வயது மூத்த ராசாத்தி இரண்டாந் தாயாகி அவனை வளர்த்தாள். மாமா வீட்டில் இடிசோறு கிடைத்தது; சீதனம் கிடைக்கவில்லை. ஊரில் ஒரு முதிர்கன்னிக்குரிய அத்தனை மரியாதைகளும் ராசாத்திக்கும் கிடைத்தன. ராசாத்திக்கு முப்பது வயதுக்குப் பிறகு, வயது நகர மறந்து நின்றுவிட்டாற்போலொரு தோற்றம். அதெல்லாம் பழைய கதை. 

திரும்பிவந்த புதிதில் தன்பாட்டில் சுருண்டு சுருண்டு படுத்திருப்பாள் சாப்பிடுவதையும் உறங்குவதையும் விட மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டவளைப் போலிருந்தாள். ஏதாவது கேட்டால் தலையைக் குனிந்தபடி மௌனம் சாதித்தாள். அவள் யாரையும் பார்ப்பதில்லை என்பதை, குறிப்பாக கண்களைத் தவிர்த்தாள் என்பதை சாந்தன் பலநாட்கள் கடந்தபின்பு கண்டுபிடித்தான். அவள் அநிச்சையாகச் செய்த செயல் ஒன்றே ஒன்றுதான்: அந்த அறையின் யன்னலை எத்தனை தடவைகள் திறந்துவிட்டாலும் அவசர அவசரமாக எழுந்து அதை இறுகச் சாத்தினாள். வெளிச்சத்தைக் கண்டு நடுங்கினாள். ஆரம்பத்தில், மதுவோ சாந்தனோ அவள் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைந்தால் அடிபட்ட மிருகம்போல கூச்சலிட்டாள். ஆகவே, அந்த அறையின் வாசலில் சாப்பாட்டை வைத்துவிட்டு குரல்கொடுக்கப் பழகினார்கள். விடிகாலையில் ஊர் விழித்தெழுவதற்குமுன் எழுந்து இயற்கைக் கடன்களையும் குளியலையும் முடித்துவிட்டு வந்து மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டுவிடுவாள். இயல்புக்குத் திரும்பி கேட்ட கேள்விக்குப்பதிலளிக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாகின. அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தாம்.
சாந்தனும் மதுவும் செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்பிவந்தபோது பொட்டல்வெளியாகிப் போன வளவே அவர்களை எதிர்கொண்டது. தென்னைமரங்களை யானைகள் சு+றையாடியிருந்தன. கிணற்றடியினருகிலிருந்த பாக்குமரங்களும் பட்டுப்போயிருந்தன. பூச்செடிகள் இருந்தமைக்கான அடையாளமே இல்லை. அபிக்குட்டியின் ஞாபகத்தில் தின்னாமல் குடியாமல் கிடந்தாள் மது. சாந்தன்தான் சமையலிலிருந்து எல்லாம் செய்யவேண்டியிருந்தது.
விசாரணை நிலையத்திலிருந்து ராசாத்தியை யாரோ கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அவள் நேராக, கீறிவைத்த கோட்டில் தடம்பிசகாமல் நடப்பதுபோல நடந்துவந்தாள். கண்கள் பிணத்தினுடையவை போல நிலைகுத்தி நின்றன. உடலில் சதை என்று சொல்வதற்கு ஏதுமில்லாதபடிக்கு இளைத்துப்போயிருந்தாள். அப்படியே போய்ப் படுத்து உறங்கிவிட்டாள். உறக்கம் என்றால் உறக்கமில்லை! திடீரென்று அமானுஷ்யமாக ஊளையிடுவாள். இருந்தாற்போல எழுந்து வெளியில் ஓடுவாள். பெரும்பாலும் இராணுவமுகாமை நோக்கியே அவள் ஓடுவாள். எலும்பினால் செய்யப்பட்டதுபோலிருந்த அந்த உடலுள் எவ்வளவு சக்தி அடைபட்டிருந்தது என்பதை, அவளை இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டுவந்து வீடு சேர்க்கும் நாட்களில் சாந்தனால் உணரமுடிந்தது.
பகலில் வேகம் தணிந்து வேறு மனுசியாயிருப்பாள். எவரும் சொல்லாமலே தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் இழுத்து இறைத்தாள். வளவைக் கூட்டி அள்ளினாள். நாய்க்குட்டிக்குச் சாப்பாடு வைத்தாள். அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதன் கண்களை உற்றுப் பார்ப்பாள். அது அவளது முகத்தை நக்கிக் கொடுக்கும். மனிதர்களது அடையாளங்களும் பெயர்களும் அவளது மனதிலிருந்து அழிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பறவைகளோடும் விலங்குகளோடும் செடிகொடிகளோடும் நெருக்கம் காட்டினாள்.
மதுவும் சாந்தனும் தங்களது அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்ட சில நிமிடங்களில் ராசாத்திக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.
மூடிய விழிகளுக்குள் குறிகளாகத் தெரிந்தன. சமையலறையில் மரக்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியளவு நீண்ட, மெல்லிய, சதைப்பற்றான, தசையைத் துளைத்திறங்கும் கூரிய எலும்பு போன்ற குறிகள். இராணுவச் சீருடையினுள்ளிருந்து நீளும் குறிகள். சிலசமயங்களில் சிவில் உடையிலும் அவர்கள் வருவதுண்டு. விகாரமான இளிப்போடு, வாய்க்குள் திணிக்கப்படும் குறிகள். வியர்வை நாற்றமும் மூத்திரவாடையும் வீசும் குறிகள். தலையை ஆட்டி ஆட்டி அந்தக் குறிகளை நினைவிலிருந்து விலக்க முயன்றாள்.
“ராசாத்தி அக்கா! நான் செத்துப் போயிட்டனெண்டு அம்மாட்டைச் சொல்லுங்கோ.”
ராசாத்தி திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையின் மூலையில் துளசி நிற்பதை அவள் பார்த்தாள். துளசி பள்ளிக்கூடச் சீருடை அணிந்திருந்தாள். வெள்ளைநிறச் சீருடையில் அடர்ந்த செந்நிறக் குருதி திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது. நீளமான அவளது கண்களில் கண்ணீரும் கலவரமும் நிறைந்திருந்தன. அவள் நின்றிருந்த இடத்தில் காலருகில் குருதி கருநிறத்தில் தேங்கிநின்றது.
“என்னாலை நடக்கமுடியாமல் இருக்கு அக்கா!”அவள் அழுதாள்.
ராசாத்தி எழுந்து துளசியருகில் போனாள். துளசியின் தோள்பட்டையில் வைத்த கைகள் இருளுள் விழுந்தன. அவளைக் காணவில்லை. இப்போது அந்த அலைச்சத்தம் கேட்கத் தொடங்கியது. வர வர நெருங்கி வந்தது. கடலை அவள் கைவிரித்து வரவேற்றாள். அதனுள் புகுந்து தானுமொரு அலையாக மாறிவிட விரும்பினாள். அவள் நெருங்க நெருங்க கடலோ பின்வாங்கிச் சென்றது. இராட்சத நாகமொன்றின் படமென தலைவிரிந்து இடுப்பொடுங்கிய கரிய அலையொன்றின் நுனியில் நின்ற துளசி ‘அக்கா! நான் போறன்’என்றாள். அலையோசை அடங்கி றபான் ஒலிக்கத் தொடங்கியது.
ராசாத்தி செவிகளைப் பொத்திக்கொண்டாள். அவளது விரல்களையும் மீறி உள்நுழைந்தது பாட்டு. மதுவின் வாசனை வீசும் பாடல் நள்ளிரவு தாண்டியும் ஒலிக்கும். பிறகு, பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளை நோக்கித் தள்ளாடியபடி வரும்.
வினோதினி தனது மார்புச் சட்டையை விலக்கிக் காட்டினாள். பல் ஆழப்புதைந்த தடயம். புத்தரின் பல்! புத்தர் கடிக்கமாட்டார் என்றுதான் ராசாத்தி அதுகாறும் நினைத்திருந்தாள்.
ஊர் உறங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் விழித்திருந்தன.
ராசாத்தி எழுந்து வெளியில் வந்தாள். ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். சிவலை ஒற்றைச் செவியை உயர்த்தி அவளைப் பார்த்தது. முன்னங்கால்களை நீட்டி நெட்டுயிர்த்திவிட்டு தலையை உடம்புக்குள் புதைத்துக்கொண்டு உறங்கிப்போனது.
முன்னரெல்லாம் கழிப்பறையில் அமரமுடியாது. கால்களை அகட்டி அமர்ந்தபோதெல்லாம் வலி உயிர்பிடுங்கியது. மலத்திலும் சிறுநீரிலும் இரத்தம் கலந்திருந்தது. அவளது அறைக்கதவின் இடுக்கினூடாக நாட்பட்ட குருதியின் நாற்றம் கிளம்பி முகத்திலறைந்தது. மதுதான் வைத்தியரிடம் அழைத்துப் போனாள். வைத்தியரது அறை வாசலில் காத்திருந்தபோது அங்கிருந்த பெண்களிலொருத்தி ராசாத்தியை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இவவுக்கு என்ன வருத்தம்?”
“காய்ச்சல்”என்றாள் மது.
அந்தப் பெண் ‘எனக்கு எல்லாம் தெரியும்’என்ற சிரிப்பைச் சிரித்தாள். அவள் ராசாத்தியைப் பார்த்த பார்வையில் அருவருப்பு தெரிந்தது.
ராசாத்தி கால்களை அகட்டிப் படுத்திருந்தபோது, வைத்தியர் அனிச்சையாகத் தன் மூக்கைத் தேய்த்தார். ஆனாலும் அவர் கருணையோடுதான் நடந்துகொண்டார். ஊரிலுள்ளவர்களைப்போல அவர் ஒதுங்கிப் போகவில்லை. அந்தப் பெண்போல விஷமூறிய கண்களால் சிரிக்கவில்லை.
ராசாத்தி வானத்தை உறுத்துப் பார்த்தாள். நிலவுக்குப் பெரிய வயிறு. மதுவைப்போல அதுவும் நிறைசு+லி. வயிற்றைக் கிழித்துக்கொண்டு சின்னஞ்சிறிய கையொன்று நீண்டது. அது அபிக்குட்டியின் கைகளைப் போல வெண்ணிறமான, குண்டுக்கை. இப்போது நிலவு செந்நிறமாகிவிட்டது. வெளிச்சம்போல இரத்தம் ஒழுகியது. இவள் தலையை ஆட்டினாள். பிறகு கடப்பைத் திறந்துகொண்டு வெளியில் ஓடினாள். அவள் ஓடிய திசையில் இராணுவ முகாம் இருந்தது.
…..

“மானம் போகுது”
சைக்கிளைப் பிடித்தபடி நின்ற மாமா உறுமினார். தேகம் கோபத்தில் நடுங்கியது.
“எதெண்டாலும் உள்ளுக்கை வந்திருந்து கதையுங்கோ மாமா”சாந்தன் அழைத்தான்.
அவரது கைகள் சைக்கிளின் மட்காட்டை இறுக்கிப்பிடித்திருந்தன. பெரிய பெரிய கறுத்த விரல்களில் உரோமம் அடர்ந்திருந்தது.
“நீ இவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் விடு. இல்லையெண்டா நஞ்சைக் கிஞ்சைக் குடுத்து சாக்காட்டு. இப்பிடி வேசைப் பட்டம் கேக்கிறதிலும் சாகட்டும்.”
சாந்தன் அவரை முறைத்துப் பார்த்தான்.
“அவவுக்கு தான் எங்கை போறனெண்ட சுயநினைவு இல்லை”

“சுயநினைவு இல்லாதவள் அதெப்பிடியடா நேரா ஆமிக் காம்ப்புக்குள்ள போறாள்? ருசி கண்ட உடம்பு” மாமா காறித் துப்பினார்.
சாந்தன் மாமாவை சைக்கிளோடு தூக்கி வீதியில் எறிந்துவிடலாமா என்று நினைத்தான். அவரது சோற்றைத் தின்று வளர்ந்த நன்றி அவனது உடலில் மீதமிருந்தது. பிறகு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.
“நீங்க போங்கோ. அவ இனி எங்கையும் போகமாட்டா. அதுக்கு நான் பொறுப்பு”
“நல்லவேளையாக பற்குணம் தற்செயலாக் கண்டு பிடிச்சுக்கொண்டு வந்தான். இல்லையெண்டா நாறியிருப்பியள்”
மாமா கோபத்தோடு சைக்கிளை ஏறத்தாழத் தூக்கித் திருப்பினார். யாரையோ உழக்குவதுபோல உழக்கிக்கொண்டு வெகுவேகமாகப் போனார்.
மாமா கத்திவிட்டுப் போவதைப் பார்த்தபடி ராசாத்தி மாலுக்குள் அமர்ந்திருந்தாள்.
“அக்கா! ஏனிப்பிடிச் செய்யிறீங்கள்?”
அவள் சாந்தனை வெறுங்கண்களால் பார்த்தாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டாள்.
“ஊருக்கை எல்லாரும் என்னைத்தான் பேசுகினம் அக்கா”
நிமிர்ந்து பார்த்த விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது.
“எனக்கு…. தெரியாது தம்பி” குமுறிக்கொண்டு வந்து விழுந்தது பதில். கண்ணீர் தன்பாட்டில் வழிந்தது. அதைத் துடைப்பதற்கு அவள் முயற்சி எடுக்கவில்லை.
“இரவானதும்… இரவானதும்…”அவளால் முடிக்கமுடியவில்லை.
மது சாந்தனைப் பார்த்தாள். அவனது கண்கள் மகிழ்ச்சியில் மின்னிக்கொண்டிருந்தன. ‘தம்பி’என்ற வார்த்தை இத்தனை நாட்களுக்குப் பிறகு ராசாத்தியின் வாயிலிருந்து வந்ததைக் கேட்ட மகிழ்ச்சி அது.
“எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்….”
ராசாத்தியின் கண்கள் வானத்திற்குப் போய்விட்டன. இறந்தகாலம் வானத்தில் இருந்தது. அங்கு துளசி இருந்தாள். வாணியும் தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள். விசாரணை என்ற பெயரில் அகதி முகாமிலிருந்து அவர்களை இழுத்துக்கொண்டு செல்லப்பட்டார்கள். அடைத்துவைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு இரவும் ‘விசாரணை’ நடந்தது. நள்ளிரவு கடந்தபிறகு உடலில் உயிர் மட்டும் மிச்சமிருக்க திரும்பக் கொண்டுவந்து போட்டார்கள்.
“என்ரை கழுத்தை ஆராவது நெரிச்சுக் கொல்லமாட்டீங்களா? என்னாலை முடியேல்லை… என்னாலை முடியேல்லை…”வாணி இரவிரவாக அழுதாள். அவளது சின்ன உடலில் காய்ச்சல் பொழிந்துகொண்டிருந்தது.
ராசாத்தி சீற்றத்தோடு தரையை உதைத்தாள். சிவலை பயத்தோடு எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக்கொண்டது.
“அவங்களைக் கொல்லவேணும்”
மது பாய்ந்தோடி வந்து ராசாத்தியின் வாயைப் பொத்தினாள். அவளது உடல் பயத்தில் நடுங்கியது. சுற்றுமுற்றும் பார்த்தாள். காற்றுக்கும்கூட கண்களும் செவிகளும் இருந்தன. அவர்கள் எந்நேரமும் அவ்வழியாக வரக்கூடும். துப்பாக்கி முதுகுறுத்த கூட்டிச் செல்லப்படும் சாந்தனை மது மனக்கண்ணில் கண்டாள். சாந்தன் ராசாத்தியின் அருகில் வந்து அமர்ந்தான்.
“அக்கா! அபிக்குட்டி செத்துப்போச்சுது. நாங்கள்தான் மிச்சமிருக்கிறம்”மன்றாட்டத்தில் முடிந்த குரல் உடைந்துபோய் அழ ஆரம்பித்தான்.
“மதுவுக்குப் பிள்ளை பிறக்கப்போகுது. இந்நேரம் நீங்கள் இப்பிடி நடந்துகொண்டால் எங்களையெல்லாம் வந்து பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள்”குழந்தைக்குச் சொல்வதுபோல தொடர்ந்தான்.
ராசாத்தி தலையை ஆட்டினாள். ஓசையெழும்படியாக பற்களைக் கடித்தாள். அவளது தேகத்திற்குள் நான்கு குதிரைகள் புகுந்துகொண்டாற் போலிருந்தாள்.
“அக்கா!”
“ஹ்ம்…”
“இனிப் பட எங்களாலை ஏலாது அக்கா!”
ராசாத்தியின் இமைகள் அவசரகதியில் மூடித் திறந்தன. மூடிய கண்களுக்குள் தோன்றிய முகங்களை கைகளைக் கொண்டு விலக்கப் பார்த்தாள். அப்படி அவள் செய்யும்போது காற்றைக் கைகளால் அறைவதுபோலிருந்தது. றபான் சத்தம் வேறு காதைக் கிழித்தது. உரு வந்தாற்போல தலையை ஆட்டினாள். பிறகு மயங்கிச் சரிந்தாள். மது தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே போனாள்.
அன்றிரவு மதுவும் சாந்தனும் நீண்ட நாட்களுக்குப் பின் ராசாத்தியின் அமானுஷ்ய ஓசைகளின்றி ஆழ்ந்து உறங்கினார்கள். ராசாத்தி காணாமற் போனதை அவர்கள் கண்டுபிடித்தபோது வெயில் விறாந்தையில் ஏறியிருந்தது.


நன்றி-“உரையாடல்“-கனடாவில் வெளியாகும் சஞ்சிகை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2014 08:36

June 20, 2014

"பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை



சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவராவார். நந்திமலைச் சாரலிலே (குழந்தைகள் நாவல்-1962), அந்திமாலை (நாவல்-1966), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1987), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு (2013) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், The Singer and the Song (இசைத்துறையைச் சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2000), Mirrors and the  Gestures (நடனத்துறை சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2003) ஆகியவற்றோடு இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகளும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்துவரும் அம்பை, ‘ஸ்பாரோ’என்ற பெயரிலான, பெண்களது வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆவணக் காப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் அதன் இயக்குநருமாவார். ‘அந்திமாலை’க்கு நாராயணசாமி ஐயர் விருது (கலைமகள் சஞ்சிகையால் வழங்கப்பட்டது), 2006இல் அமெரிக்காவாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட விளக்கு விருது, 2008 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது, 2011இல் கலைஞர் பொற்கிழி விருது (சிறுகதைகளுக்காக வழங்கப்பட்டது) ஆகிய விருதுகளைப் பெற்றவர். ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழியல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அம்பை அவர்களை தாய்வீடு பத்திரிகைக்காகச் சந்தித்தோம்.

*******

ஆணாதிக்கம் வேரோடிப் போயிருக்கும் சமூகமனமானது பொதுவெளியில் இயங்குகிற பெண்களை வேறு கண்களால் பார்க்கிறது. நீங்கள் எழுத வந்த காலகட்டமாகிய அறுபதுகளில் நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும். ஒரு பெண்ணாக நீங்கள் அனுபவித்த சிக்கல்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றிச் சொல்லமுடியுமா?

அந்த அனுபவங்களைக் குறித்துப் பெரிதாக நான் பேசுவதில்லை. காரணம், அவை கசப்பான அனுபவங்களாக இருந்தமைதான். ‘சிறகுகள் முறியும்’ 1976இல் வெளிவந்த பத்து ஆண்டுகளில் ஒரேயொரு விமர்சனக் கட்டுரை வந்திருந்தது…அதுவொரு ஆண் எழுத்தாளரால் எழுதப்பட்டது…. பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. “சில கதைகளைப் படிக்கிறபொழுது நாம் இந்தக் கதைகளை எழுதியிருக்கக்கூடாதா என்று தோன்றும்; சில கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்று தோன்றும். அம்பையின் கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது” என்று எழுதியிருந்தார். இந்த விமர்சனக் கட்டுரையை ‘சதங்கை’பத்திரிகை முதற்பக்கத்தில் பிரிசுரித்திருந்தது. யாருமே முதற்பக்கத்தில் புத்தக விமர்சனக் கட்டுரையைப் பிரசுரிக்கிற வழக்கமில்லை.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’வெளிவந்தபிற்பாடு, தான் அதற்கொரு விமர்சனம் எழுதவிருப்பதாக மங்கை சொன்னபோது “சிறகுகள் முறியும்“க்கே இன்னும் யாரும் விமர்சனம் எழுதவில்லை”என்று வேடிக்கையாகச் சொன்னேன். அதை நான் ஒருவகையான பெண்வெறுப்பாகத்தான் பார்க்கிறேன். பெண்ணானவள் இன்னின்னவற்றைப் பற்றித்தான் எழுதலாம் என்று இவர்கள் ஒரு வரையறை வைத்திருந்தார்கள். ஆனால், அந்த வரையறையை முறியடித்த பல பெண்கள் முன்னாடியும் இருந்தார்கள். கௌரி அம்மாளால் எழுதப்பட்ட ‘கடிவாளம்’என்ற நாவலை எடுத்துக்கொண்டீர்களானால், அதில் தாயில்லாத ஒரு குடும்பம் உறவுமுறையில் எப்படிச் சிதிலமடைந்துபோகிறது என்பதை எழுதியிருப்பார். தாயில்லாத காரணத்தால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதிலமடைந்தது என்று வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவ்வளவு நுணுக்கமாக எழுதப்பட்ட நாவல் அது. சரஸ்வதி அம்மாள் ‘கன்றின் குரல்’என்றொரு நாவல் எழுதியிருந்தார். அதில் ஒரு சின்னப் பையன், மணமான ஒரு பெண்ணை அட்மைர் பண்ணியிருப்பான்…. ஆனா அவன் என்ன நினைச்சுப்பான்னா தான் அவளைக் காதலிக்கிறதா நினைச்சுப்பான். மனோதத்துவ நோக்கோடு அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பெண்களெல்லாம் ‘குடும்பப் பெண்கள்’என்ற நிலையில் குடும்பத்தை நடத்திக்கொண்டே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள்.. எழுதினார்கள்… இலக்கியப் பத்திரிகைகள்; நடத்தினார்கள். ஆனால், நான் அந்த வரையறைக்குள் வரவில்லை. அந்தச் சட்டகத்தினுள் என்னை நுழைக்க முடியவில்லை.

நான் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்… எனக்குத் திருமணமாகியிருக்கவில்லை… தனியாக இருந்தேன்… ஆகவே, எனது எழுத்தை அவர்கள் வேறு கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள். நான் சென்னையில் தங்கியிருந்து முறையாகத் தமிழ் பயிலாமல், பெங்களுரில் தங்கி தமிழை இரண்டாம் மொழியாகப் படித்துக்கொண்டிருந்தேன். மேலும், எனக்கு கன்னடம், ஹிந்தி போன்ற வேறு சில மொழிகளிலும் வாசிப்புப் பரிச்சயம் இருந்தது. வீட்டில் இசை பயின்ற காரணத்தால் - தியாகராஜ கீர்த்தனைகள் தெலுங்கில்தான் இருக்கும் - தெலுங்கிலும் பரிச்சயம் இருந்தது. நான் ஒரு மொழியில் எழுதினாலும் பல மொழிகளது செல்வாக்கும் உணர்வும் அதில் கலந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கியச் சரித்திரத்தைத் தொடர்ந்து படித்து அதைத் தொடர்ந்து எழுதவில்லை. ஆக, பெண்-ஆண் உறவுச் சிக்கல்கள் பற்றி அதற்கு முன்னால் வேறு பலரும் எழுதியிருந்தாலும், மேற்குறித்த காரணங்களால் எனது மொழிநடை அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அந்த வயதில் நான் அதைப் பெண்ணிய மொழி என்றெல்லாம் நினைக்கக்கூட இல்லை. எனக்கு அந்தச் சட்டகங்கள், வரையறைகள் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 
 பெங்களுரிலிருந்து வந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் வரலாறு முதுகலை படித்துமுடித்தேன். பொதுவாக முதுகலையில் நல்ல புள்ளிகள் பெற்றவர்கள் கல்லூரிப் பேராசிரியராகப் போவார்கள். அல்லது ஐ.ஏ.எஸ். ஆவதற்கான படிப்புப் படிப்பார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான் விரும்பினார்கள். ஆனால், நான் காந்தியவாதியாக இருந்தேன்… ஏதாவது ஒரு சின்ன ஊருக்குப் போய் அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேண்டும் என்று எனக்கொரு இலட்சியம் இருந்தது. என்னுடைய முதுகலைப் பரீட்சை முடிவு வெளியாவதற்கு முன்பாகவே ஒரு சின்ன ஊரில் ஆசிரியப்பணியில் அமர்ந்துவிட்டேன். அங்கே எட்டு மாதங்கள்தான் பணியில் இருக்கமுடிந்தது. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் மிகவும் புரட்சிகரமாக இருப்பதாகவும் அந்தக் கருத்துக்களை நான் மாணவர்களிடத்தில் போதித்து அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழ்பண்ணிவிடுவேன் என்றும் பள்ளிநிர்வாகம் கருதியது. மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடத்தில் பூசை நடக்கும். அதில் கலந்துகொள்ள விரும்பாமல் நான் காரணங்கள் சொல்லி மறுத்துவந்தேன். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தியது ஒரு செட்டியாரம்மா. அவருடைய மகள் திருமணமான பத்து நாட்களிலேயே குருவாயூர் கோவிலுக்குப் போனபோது குளத்தில் விழுந்து இறந்திட்டாங்க. அந்தம்மா என்ன நினைத்தாரென்றால் தன்னுடைய மகள் ஒரு தேவதையாகப் போய்விட்டதாக நினைச்சாங்க. தன்னுடைய மகள் மாதிரியே ஒரு சிலை செய்து அதற்கு நகையெல்லாம் போட்டு கண்ணாடிப் பெட்டியொன்றுக்குள் வைத்து, அதற்கு வெள்ளிக்கிழமைதோறும் பூசை நடத்திவந்தார். மாணவர்கள் கேள்விகளே கேட்கக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் எதிர்பார்த்தது. நான் என்னுடைய மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டுமென விரும்பினேன்.

ஒருநாள் எனது மாணவிகளில் ஒருத்தி எழுந்து, “டீச்சர் உங்களுக்கு தேவதைகளில் எல்லாம் நம்பிக்கை இருக்கா?”என்று கேட்டாள். “தேவதைகளும் கிடையாது… பூதங்களும் கிடையாது”என்று நான் பதிலளித்தேன். மாணவர்களுடைய மனங்களில் அந்தப் பதில் பதிந்துவிட்டது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை எனது மாணவர்கள் பூசைக்குப் போகவில்லை. நான் வழக்கத்திலேயே போவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பிள்ளைகளைத் தவறாக வழிநடத்துவதாக என்னைக் குறைப்படத் தொடங்கினார்கள். அதைவிட, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் நாங்கள் எங்கே போகிறோம் என்று வீட்டு முகவரியெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். விடுமுறை விட்டால் வீட்டிற்கல்லாமல் நாங்கள் எங்கே போகமுடியும்? அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் நடத்தை பற்றியெல்லாம்கூடச் சந்தேகப்பட்டார்கள். ஒருதடவை, என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு ஆசிரியரை விடுமுறைக்கு பெங்களுரிலுள்ள எனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டேன். நாங்கள் திரும்பிவந்ததும் ‘எங்களுடைய அனுமதியில்லாமல் அவரை எப்படி நீங்கள் உங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகமுடியும்?’என்று கேள்வி எழுப்பினார்கள். “என்னுடைய வீட்டிற்கு நான் அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்? இது ஜனநாயகமல்ல! இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது”என்று நான் பதிலளித்தேன். அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்களுள்ளேயே நான்தான் வயதிற் குறைந்தவளாக - இருபத்தொரு வயது என்று எண்ணுகிறேன் - இருந்தேன். இப்படியாகக் கேள்வி மேல் கேள்விகள் எழுப்பிய காரணத்தினாலேயே அந்தப் பள்ளியிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்கள் (சிரிக்கிறார்).

இடைப்பட்ட காலத்தில் - அதாவது நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைமகள் நடத்திய நாவல் போட்டியிற் பங்கேற்றேன். ‘அந்திமாலை’என்ற அந்த நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. உடல் சம்பந்தப்படாத காதல், அதாவது “பிளாட்டோனிக் லவ்“ பற்றிய நாவல் அது. ஒரு நடுத்தரக் குடும்பத்திலே இருக்கக்கூடிய பெண்ணுக்கு காதலைப் பற்றியோ உடம்பைப் பற்றியோ என்ன தெரிந்திருக்கமுடியும்? உடலே இல்லாத ஒரு வெளியில்தானே மிதந்துகொண்டிருப்போம்? வீட்டில் உடலைப் பற்றி, வயதுக்கு வருவதற்கு முன்னால் வயதுக்கு வருவது என்றால் என்னவென்பது பற்றி, மாதவிடாய் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், அந்த வயதில் நான் ஒரு காதல் நாவல் எழுதினால் அப்படித்தானே இருக்கும்? உடல் இல்லாத காதல்தான் உயர்ந்த காதல் என்று அப்போது மனதில் ஒரு எண்ணம்… அதில் வரும் கதாநாயகி “அழியப் போகும் எனது உடலை விட அழியாத என் ஆன்மாவை உனக்குத் தருகிறேன்”என்றெல்லாம் வசனம் பேசுவாள். அதற்குப் பரிசு வேறு கிடைத்துவிட்டது (சிரிக்கிறார்). நான் எம்.ஏ. முடித்துவிட்டு அந்த ஊரில் ஆசிரியராக இருந்தபோது இந்த நாவல் கலைமகளில் தொடராக வருகிறது. அதை வாசித்தபோது வேறு யாராலோ எழுதப்பட்டது போல உணர்ந்தேன். அதோடு என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளவே முடியவில்லை.
பள்ளிக்கூட வேலையை விட்டு பெங்களுருக்குப் போகாமல் நேரே சென்னைக்கு வந்தேன். காரணம்,“நான் முன்னமே சொன்னேனல்லவா இது நடக்காதென்று?”என்று எனது தந்தையார் சொல்வாரென்று பயம். சென்னையில் ஒரு கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் சேர்ந்தேன். தூரத்து உறவினர் வீட்டில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது எழுதப்பட்டதுதான் ‘சிறகுகள் முறியும்’. அதை எழுதிவிட்டு கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எல்லோரும் அதைத் திருப்பியனுப்பினார்கள். 1967 ஆரம்பத்தில் அது எழுதப்பட்டது… 1967 அக்டோபர் வரை பிரசுரமாகாமல் இருந்த அந்தக் கதையை, பி.எச்.டி. பண்ணுவதற்காக நான் டெல்லிக்குப் போனபோது என்னோடு எடுத்துப்போனேன். கணையாழி ஆசிரியருக்கு அதை அனுப்பி, “இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?”என்று கேட்டேன். அவர் என்னை வந்து பார்த்தார்… “இது நல்ல கணையாழிக் கதைதான். அதை நீங்கள் அனுப்பிவைத்த பத்திரிகைகள்தான் சரியில்லை… உங்கள் மொழிநடை மாறியிருக்கிறதே உங்களுக்குத் தெரியவில்லையா?”என்று கேட்டார். “எனக்குத் தெரியவில்லை”என்று சொன்னேன். நான் என்ன நினைக்கிறேனென்றால், மொழி என்பது நம்முடைய வாழ்க்கையையொட்டி, நமது உடல் எந்தெந்தத் தளங்களில் இயங்குகிறதோ அந்த அனுபவத்தையொட்டி மொழி அமைந்துவிடுகிறது. அது இயற்கையாக நிகழ்ந்த காரணத்தால் எனது மொழி மாறியது எனக்குத் தெரியவில்லை. பிறகு நான் கணையாழியில் நிறையக் கதைகள் எழுதினேன். ஆனாலும், எந்தக் கதைக்கும் பெரிய வரவேற்பு இருந்ததாக நினைவில்லை. வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர்தான் தொடர்ந்து எழுதும்படியாக ஊக்குவித்துக்கொண்டிருந்தார்கள்
.

ஒரு கதை எழுதுகிறபோது ‘இது வெளியாகுமா?’என்று நினைக்கவே மாட்டேன். ஆகவே, இதையெல்லாம் எழுதலாமா கூடாதா என்ற மனத்தடைகள் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனக்கு எழுதணும்; அதனால் எழுதினேன். டெல்லியில் இருந்தபடி எழுதிய காரணத்தால் இங்கு (சென்னையில்) தொடர்ந்து எதிர்ப்பு இருந்தது எனக்குத் தெரியவில்லை. நான் சென்னைக்கு இரண்டொருமுறை வந்து, எனது வாழ்க்கையைப் பற்றிச் சில நயமில்லாத கேள்விகளை எதிர்கொண்டபோது, சில எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறைகளைப் பார்த்தபோதுதான் இங்கு ஒருவித பெண்வெறுப்பு இருப்பதை நான் அறிந்துகொண்டேன். தற்காலத் தமிழிலக்கியச் சரித்திரம் எழுதும்போது அதில் ஒரு பெண்ணுடைய பெயர்கூட இருக்காது. எனது நண்பர்களுள் ஒருவரேகூட அப்படித் தவிர்த்திருந்தார். அப்போது அவரிடம் நான் “இங்கு எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே… நாற்பதுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ ராஜம் கிருஷ்ணன், சூடாமணி… அதற்கு முன்னாலும் குமுதினி, குகப்பிரியை, கௌரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள் இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக்கூடச் செய்திருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையே…”என்று கேட்டால், “இது இலக்கியச் சரித்திரம்; இது பெண்களைப் பற்றிய சரித்திரம் இல்லை”என்று பதிலளித்தார். நாங்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறதுபோலவும் சரித்திரத்தில் எங்களுக்குப் பங்கில்லைப் போலவும் அந்தப் பதில் அமைந்திருந்தது.

அதேசமயம், தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளேயே வண்ணதாசன், வண்ணநிலவன், க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி என்று மிகவும் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். திருநெல்வேலி எல்லாம் போய் வண்ணதாசன் வீட்டில் இருந்திருக்கிறேன். சென்னையில் வண்ணநிலவனும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஆனால், இப்போது பேட்டி ஒன்று கொடுத்து இலக்கிய நண்பர்கள் என்று சொல்லும்போது வண்ணநிலவன் என் பெயரைச் சொல்லமாட்டார். அது எனக்குப் பரவாயில்லை… எங்களுடையது நல்ல நட்பாக இருந்தது… அவருடைய மனைவிகூட எனக்குப் பழக்கமானவர்தான். அப்படி நல்ல நண்பர்களும் இருந்தார்கள். ஆனாலும், பொதுவாக ஒரு பெண்ணோடு என்ன இலக்கியம் பேசுவது என்றவொரு அலட்சியம் அப்போது இருந்தது; இப்போதும் இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போனால் -இதை நான் காலச்சுவடு பேட்டியில்கூடச் சொல்லியிருக்கிறேன் - “இந்தப் புடவை நல்லா இருக்கு”என்பார்கள். வீட்டில சமைச்சுட்டு வந்திட்டீங்களா…. உடல் நலமா இருக்கீங்களா?” இப்படியெல்லாம் கேட்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் கூட்டங்களுக்குப் போகிறபொழுது, “அம்பைக்கு இப்போது வயதாகிவிட்டதுபோல தெரிகிறது” என்பார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும். நானும் விடுவதில்லை… நானும் கேட்பேன்… “இந்த வேட்டியெல்லாம் எங்க வாங்கிறீங்க? இதே மாதிரி ஒரு வேட்டி என் கணவருக்கு வாங்கணும்”. “நீங்க தலைக்குத் தேங்காய் எண்ணெய் போடுறீங்களா? பிறில் கிறீம் போடுறீங்களா?”இப்படியெல்லாம் கேட்பேன். அப்படி நான் கேட்பது அவர்களுக்கு உவப்பாக இருப்பதில்லை.

இப்படி ஒருவித பெண்வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

ஆம், சமூகவலைத்தளங்களில் அந்தப் பெண்வெறுப்பை கூடுதலாக அவதானிக்க முடிகிறது. எழுதுகிற பெண்கள்மேல் சற்று அதிகமாகவே அந்த வெறுப்பைக் காண்பிக்கிறார்கள்.  பெண்ணியவாதி என்ற சொல்லே ஒரு வசைச்சொல்லாக, கெட்டவார்த்தையாகப் பிரயோகிக்கப்படுகிறது.

எழுதுகிற பெண்கள்மீது மட்டுமில்லை; பெண்கலைஞர்கள் எல்லோர்மீதும் அந்த வெறுப்பு இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘பெமினிஸ்ற்’என்ற வார்த்தையே ஒருகாலத்தில் கெட்டவார்த்தையாகத்தான் உபயோகத்தில் இருந்தது. பெண்ணியவாதி என்பவள் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்வாள் என்றொரு அபிப்பிராயம் இருந்தது; இப்போதும் இருக்கிறது. படித்த, சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய செயற்படக்கூடிய பெண்ணினுடைய முதல் வேலை ஒழுக்க வரையறையை மீறுவதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்காகத்தான் பெண்கள் காத்திருப்பதாக நினைத்தார்கள். கற்பு என்பது எப்படி அவர்களைப் பொறுத்தளவில் உடலை ஒட்டியதாக இருக்கிறதோ அவ்விதமே விடுதலை என்பதும் உடலை ஒட்டியதாகத்தான் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். பொது இடங்களில் பல தளங்களில் நாம் இயங்க விரும்புகிறோம். அதை அவர்கள் ஒரே அர்த்தத்தில்தான் பார்க்கிறார்கள். நாம் வேகமாக இயங்குவதற்கு ஏற்புடையதாக நமது உடைகள் மாறலாம்; தலைமுடியை வெட்டிக்கொள்ளலாம்… அதையெல்லாம் அவர்கள் உடல்ரீதியான மாற்றங்களாக, வெறும் தோற்றமாற்றங்களாக நினைக்கிறார்களேயல்லாது, உள்ளார்ந்த மாற்றமாக நினைப்பதில்லை.

ஐம்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக நீங்கள் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதன் வளர்ச்சிப்போக்கு சீராக இருக்கிறதா? அல்லது தேக்கம் கண்டிருக்கிறதா? அப்படி ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

தேக்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தளவில் அது வளர்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். புதிய பல எழுத்தாளர்கள் வந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு எழுத்தையும் இப்படித்தான் எழுதவேண்டும்… அப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்லாமல் எல்லாவகையான எழுத்தையும் -கொச்சையாக எழுதுவதைத் தவிர – மற்றெல்லா வகை எழுத்தையும் நான் வரவேற்கிறேன். கடைசியில் எது நிலைக்கும் என்பதைக் காலந்தான் தீர்மானிக்கும். தொடர்ச்சியாக எழுதப்பட்டுக்கொண்டிருப்பதே ஆரோக்கியமான வளர்ச்சிதான். அத்தனை பெண்வெறுப்பு இருந்த என்னுடைய காலகட்டத்திலும்கூட எங்களுக்குள் உரையாடல் இருந்துகொண்டுதானிருந்தது. சுந்தர ராமசாமியோடு, வெங்கட் சாமிநாதனோடு இப்படி எல்லோருடனும் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டுதானிருந்தோம். சில புத்தகங்களைப் படித்துவிட்டு விவாதித்திருக்கிறோம். சிலபேர் குழுவாக இணைந்து ‘பிரக்ஞை’பத்திரிகை நடத்தியபோது நான் அந்தக் குழுவில் இருந்தேன். அதை நடத்தியவர்கள் எல்லோரும் எனது நண்பர்கள். அதனால், பல புது எழுத்துக்கள் வரும்போது அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் ஆத்மாநாம் நிறையக் கவிதைகள் எழுதினார். பிரக்ஞையிலும் எழுதினார். பெண்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும், என்னளவில் அதுவொரு பொற்காலமாக, இயங்கக்கூடிய காலமாக இருந்தது. பிரக்ஞையில் இருந்த மற்றெல்லோரும் ஆண்கள் எனினும் அவர்களோடு அமர்ந்து பேசி விவாதிக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலும் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் ராமகிருஷ்ணன் க்ரியாவை ஆரம்பித்து, வித்தியாசமான புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். எல்லோரும் வியாபாரப்போக்கில் போகிறபோது, இவர் மட்டும் வித்தியாசமான புத்தகங்களைப் போடப்போகிறேன் என்று சொன்னதானது எல்லோருக்கும் அதிர்ச்சி. புத்தகங்கள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, சி.சு.செல்லப்பா புத்தகங்களைச் சுமந்துகொண்டுபோய் விற்றுவிட்டு வந்திருக்கிறார். ராமகிருஷ்ணனால் வெளியிடப்பட்ட புத்தகங்களை எழுதிய ந.முத்துசாமி போன்றோர் வித்தியாசமான எழுத்துவகைமையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தவகையில் 1987இல், எனது, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’யை க்ரியா வெளியிட்டபோது அது எனக்கு ஒரு பெரிய கௌரவமாகத்தான் நினைத்தேன். அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுள் ‘வுமன் புரொட்டகனிஸ்ட்’ என்று சொல்வார்களே அந்த மாதிரியான கதைகள் இரண்டோ மூன்றோ இருந்தன. இயல்பாக அப்படி அமைந்ததே அன்றி நான் அதைத் தெரிந்து செய்வதில்லை. அந்தச் சாயலில் அமைந்த ஒரு பெண் இருந்தாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தின் பின்னட்டையில், “திருநெல்வேலியில் இருக்கும் பெண்களைக் குறித்த சில கதைகள் இருக்கின்றன. அவற்றோடு சில சோதனைக் கதைகளும் உண்டு”என்று க்ரியா ராமகிருஷ்ணன் எழுதினார். ராமகிருஷ்ணன் நல்ல நண்பர்… அதனால் அவரோடு நன்றாகச் சண்டை போடலாம். ஆகவே, “கதைகளில் சோதனை பண்ணுகிற வழக்கமெல்லாம் எனக்கு இல்லை. நீங்கள் எப்படி சோதனைக் கதைகள் என்று எழுதலாம்?”என்று கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன். “இதே கதைகளை ஒரு ஆண் எழுதியிருந்தால் அப்போதும் நான் இதேமாதிரித்தான் பின்னட்டையில் எழுதியிருப்பேன்”என்றார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. “இதேபோலத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் முத்துசாமியின் நீர்மை கொண்டுவந்தீர்கள். அதில் அத்தனை கதைகளுமே ஆண்களைப் பற்றிய கதைகள்தாம். ஆனால், நீங்கள் என்ன எழுதினீர்கள்…? இந்தக் கதைகள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் என்று எழுதினீர்கள். ஆக, பெண்கள் எதைப் பற்றி எழுதினாலும் பெண்களைப் பற்றியது என்ற ஒரு குறுகல் வட்டத்தினுள் அவை இருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.”என்றேன். பெரிய சண்டை! அவர் கடைசியில் சொன்னார்… “இரண்டாவது பதிப்பில் நீயே பின்னட்டையில் எழுது… நான் எழுதலை”என்று. அப்படித்தான் செய்தேன். இரண்டாவது பதிப்பைப் பார்த்தால் தெரியும் பின்னட்டையில் நான்தான் எழுதியிருக்கிறேன். அதெப்படி அப்படிப் பிரித்து எழுதலாம்? பெண்களும் வாழ்க்கைக்குள்தானே இருக்கிறார்கள்…? அவர்களால் வாழ்க்கையைப் பற்றி எழுதமுடியாதா? அப்படி அது பெண்வெறுப்பு என்று இல்லாமற்கூட இருக்கலாம். ஆனால், ஏதோவொரு வித்தியாசம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் இருக்கிறது. ரொம்ப நல்ல எழுத்தாளர்கள், ரொம்ப நல்ல நண்பர்களது வாயிலிருந்துகூட அப்படியான பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது.

அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால், அவர்களை அறியாமலே அது வந்துவிடுகிறது. வேண்டுமென்றோ நம்மை அவமானப்படுத்துவதற்காகவோ அவர்கள் அதைச் செய்வதில்லை. அதைச் சுட்டிக்காட்டுகிறபோது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நான் எழுதுகிறபோது ஆண்-பெண் உறவு என்று எழுதாமல் பெண்-ஆண் உறவு என்று எழுதுவேன். பெண்களை எப்போதும் ‘பரன்தீஸிஸ்’ ஆக வைத்து நான் எழுதமாட்டேன். ஆனால் அதை மொழிபெயர்ப்பவர் ஒரு பெண்ணாகவே இருந்தாலும் அதை ஆண்-பெண் என்று மாற்றிவிடுவார். அதற்குக் காரணம் அந்த மொழி நமக்குள் ஊறிப்போயிருப்பதுதான். அந்த மொழியில் முங்கித்தானே நாம் வெளியில் வரவேண்டியிருக்கிறது. நம்மையே சுயவிமர்சனம் பண்ணிப் பார்க்கிறபோது எத்தனையெத்தனை விசயங்களை நாம் முறிக்கவேண்டியிருக்கிறது, மூச்சுவிட்டு வெளியேறத் திணறவேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் விசயங்கள் இருந்தாலும், இலக்கியம் தேக்கநிலையில் இருப்பதாக நினைக்கவில்லை. எழுத்தாளர்கள் தேக்கப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், நான் படிக்கிற இலக்கியங்கள் தேக்கப்பட்டுப் போயிருப்பதாக நினைக்கவில்லை. சிலசமயம், நமக்குப் பிடிக்காத நபர்கள்கூட நல்ல கதைகளை எழுதுகிறபோது அதை மனத்தடையில்லாமல் வாசிக்கமுடிகிறது. நான் கதைகளை அப்படித்தான் பார்க்கிறேன். அவர்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகள் நமக்கு உவப்பில்லாதபோதும், அந்தக் கதைகளை நான் கதைகளாக மட்டுமே பார்த்துப் படிக்கிறேன். ஆனால், அந்தக் கதைக்குள் தொக்கியிருக்கக்கூடிய மறைமுகமான அரசியல் நமக்கு நன்றாகத் தெரிகிறது. என்றாலும் தொடர்ந்து நல்ல இலக்கியம் வந்துகொண்டுதானிருக்கிறது. எழுதுவதைத் தவிர, எல்லோரையும் படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. எந்தப் புத்தகம் வெளிவந்தாலும் அதை உடனேயே வாங்கிப் படித்துவிடுகிறேன். எனக்கு எழுத்து எந்தவகையில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை.

வலிந்து எழுதாமல், தவிர்க்க முடியாத இடங்களில்கூட பெண்களால் காமத்தைக் குறித்து மனத்தடை இல்லாமல் எழுதமுடிவதில்லை. வாசக முகம், சமூகத்தின் கண்ணோட்டம் பற்றிய பிரக்ஞை நினைவில் வந்து தடுத்துவிடுகிறது. அந்த இடத்தை நீங்கள் எப்படி மேவி வந்தீர்கள்?

நான் எழுதும்போது பெண்ணுடைய இச்சையைப் பற்றி எழுதுவது ஒரு தவறென்று நினைக்கவேயில்லை. பெண்கள் சாதாரணமாகப் பேசும்போது அதைப் பற்றி நிறையப் பேசுவதைக் கேட்டபோது அது பேசப்படாத ஒன்றல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு கதையை எழுத அமர்கிறபோது, ‘நான் பெண் இச்சையைப் பற்றிப் பேசப்போகிறேன்’என்று முன்தீர்மானம் செய்துகொண்டு அமர்வதில்லை. அதனால் அதை நான் மீறுவதாகவே நினைக்கவில்லை. ஆனால், ‘நான் காமத்தைக் கொண்டாடும் ஒரு கவிதையை எழுதப்போகிறேன்’என்று சொல்லிவிட்டு எழுதும்போதுதான் பல தடைகள் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். எழுத்து தன்னிச்சையான ஒரு செயலாக இருந்தால், நமக்கு எந்தத் தடையும் இருக்காது. ஒரு கதையில் ஒரு பெண்ணினுடைய இச்சையைப் பற்றி எழுதித்தானாக வேண்டும் என்றால் எழுதித்தானாக வேண்டும். குட்டி ரேவதி எழுதிய ‘முலைகள்’ மாதிரி ஒரு கவிதையை எழுதுகிறபோது தன்னிச்சையாக அருவிமாதிரி வருகிறது. தவிர, மனைவி-கணவன் உடலுறவின்போதுகூட அதில் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கை அரசியல் எவ்வளவு பொதிந்திருக்கிறது என்று சல்மா மாதிரி எழுதுகிறபோது, ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை பற்றி எழுதுவதாக நினைக்கிறார்களே தவிர, இதுபோல வேறு யாரும் எழுதவில்லை நான் எழுதுகிறேன் என்று தன்னை அடையாளப்படுத்த நினைப்பதில்லை.

உங்களுக்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக பெண் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…

ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இவர்களெல்லாம் எனக்கு முன்னோடிகளே! ஆனாலும், நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகம் படித்தது தி.ஜானகிராமன், லா.ச.ரா. போன்றவர்களைத்தான். அப்போது கலைமகள் பழைய எழுத்தாளர்களாகிய சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள், குகப்ரியை, குமுதினி ஆகியோரது எழுத்துக்களை வெளியிட்டு வந்தது. குகப்ரியை நடத்திய ‘மங்கை’போன்ற பத்திரிகைகளெல்லாம் எங்கள் வீட்டில் எடுப்பது கிடையாது. கலைமகள், ஆனந்த விகடன் எடுப்பார்கள். நான் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த தலைமுறையைச் சேர்ந்தவள். அதனால் என்னுடைய எண்ணங்கள் சில முன்னையவற்றிலிருந்து மாறுபட்டிருந்தன. பெண்களுள் ராஜம் கிருஷ்ணனும் சூடாமணியும் லஷ்மியும் பிரபலமாக இருந்தார்கள். லஷ்மி டாக்டராக இருந்தவர். அவரது எழுத்தில் விமர்சனங்கள் இருந்ததுதான். எனினும், வேலை பார்க்கிற, படிக்கிற பெண்கள் அவர்களது குழப்பங்கள் பற்றி எழுதியவர் என்றவகையில் அவர் பிரபலமாக இருந்தார். எனினும், நான் எழுதவந்த அறுபதுகளில் எழுதிக்கொண்டிருந்தவர்களுள் மிகவும் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தவர் ஜெயகாந்தன்தான்.

நாற்பதுகளும் ஐம்பதுகளும் மொழிபெயர்ப்புக் காலம். ரஷ்ய நாவல்கள், பெங்காலி, மராட்டி, குஜராத்திக் கதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தன. த. நா. சேனாதிபதி, த. நா. குமாரசாமி ஆகிய இரண்டு சகோதரர்களும் அந்த மொழிபெயர்ப்புகளுள் பெருவாரியானவற்றைச் செய்தார்கள். பெங்காலி இலக்கியத்தைப் படித்துப் படித்து மனதுள் புரட்சிகரமான பெங்காலி இளைஞன் ஒருவன் இருந்தான். தாகூர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் இவர்களெல்லாம் கலந்த ஒரு இளைஞன்… திருமணம் செய்தால் இப்படியொருவனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நினைப்பெல்லாம் இருந்தது. அப்புறம் பார்த்தால் அவனும் அப்படியொன்றும் வித்தியாசப்பட்டவன் இல்லையென்று தெரிந்துபோயிற்று (பெரிதாகச் சிரிக்கிறார்). அப்படியொரு கற்பனைக்குத் தூண்டுதலாக இருந்தவை தமிழில் படித்த இந்த பெங்காலி மொழிபெயர்ப்புக் கதைகள்தாம்.

அப்போது ஜெயகாந்தன்தான் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தார். அவரது அக்னிப் பிரவேசம் கதையைப் படித்திருப்பீர்கள். அந்தக் கதையில் "கெட்டுப்போய்" (இவர்களது வார்த்தைகளின்படி) வீடு வந்த பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றிய தாயார் சொல்வார், ‘இதுதான் உன்னைச் சுத்தப்படுத்தற கங்கை’என்று. அதைப் படித்த எல்லோரும் வியந்துபோய்ச் சொன்னார்கள்… ‘யாரால் இப்படிப் புரட்சிகரமாக எழுதமுடியும்?’என்று. ‘அவள் எந்தவகையில் கெட்டுப்போய்விட்டாள்? அவளது தலையில் கங்கையை ஊற்றிச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை என்ன இருந்தது?’ என்று அந்தக் கதையைப் படித்தபோது எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல… என்னோடு உரையாடலில் இருந்த சில தோழிகளுக்கும் அதே எண்ணந்தான். அப்புறம் அந்த கங்கா கங்கையிலேயே செத்துப்போய்விடுவாள். நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பட்டிமன்றம் நடக்கும்… கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?என்று… எப்போது பார்த்தாலும் இதே பட்டிமன்றந்தான். ஒருதடவை கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் அதாவது, ‘பெண்களுடன் சேர்ந்து படிப்பதால் ஆண்களுக்கு நன்மையா? தீமையா?’என்றொரு பட்டிமன்றம் நடந்தது. நிறைய ஆண்கள் வந்து பெண்கள் மாதவிகளாக வந்து எங்களை மயக்குகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள். நான் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் குறிப்புச் சொல்லும்போது சொன்னேன்… ‘எப்போது பார்த்தாலும் பெண்கள் மாறிவிட்டார்கள் மாறிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே… ஆண்கள் மாறவில்லையா? முன்பு குடுமி வைத்திருந்தவர்கள் இப்போது கிராப்பு வைத்துக்கொள்ளவில்லையா? முன்பு வேட்டி கட்டியவர்கள் இப்போது பான்ட் போட்டுக்கொள்ளவில்லையா?”என்று கேட்டேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2014 23:03

April 20, 2014

‘இனி ஒருபோதுமில்லை’என்றார்கள்…..





மனித இதயம் அனிச்ச மலரினும் மென்மை, மழையின் பெருங்கருணை, பறவையின் அடிவயிறு, குழந்தையின் முதற்சிரிப்பு, நிலத்தின் பொறுமை… ஹா…! இனியும் கதைகளை விடவேண்டாம். அவை மட்டுமன்று; அது காழ்ப்புணர்ச்சியின் கருவறை, துரோகமெனும் நஞ்சுறையும் புற்று, சுயநலத்தின் வாழ்விடம், ‘மற்றவர்’ மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்ணும்கூட.
மற்றவர்… நாமல்லாத மற்றவர்…. யூதர்கள், ஜிப்சிக்கள், ஓரினச் சேர்க்கையாளர், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், ஏழைகள், கறுப்பர், மங்கோலியர், காக்கேசியர், நரிக்குறவர், கோவியர், முக்குவர், பறையர், பள்ளர்…. விலங்குகள், பறவைகள், ஊர்வன… மற்றவர்கள்… மற்றவைகள்… இனத்தால், மதத்தால், சாதியால், தேசத்தால், நிறத்தால், பண்பாடு, கலாச்சாரத்தால் நமக்குப் புறம்பானவர்கள்…

கொலைபடவும் சிறைப்படவும் வதையுறவும் விதிக்கப்பட்டவர்கள்…ரஃபேல் லெம்கின்! நீங்கள் உன்னதமான மனிதராயிருத்தல் வேண்டும். நீங்கள் அந்தச் சொல்லை உருவாக்கினீர்கள். இல்லையெனில், எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடந்ததென்று பற்பல சொற்களால் பன்னிப் பன்னி முயன்றிருக்க வேண்டும். உங்களுக்கு இனப்படுகொலையுண்டவர்களின் ஆன்மாக்கள் கடமைப்பட்டவை.நீங்கள் அப்போது சிறுவனாக இருந்தீர்கள்… பண்டைய ரோமானியப் பேரரசின் ‘புகழ்பூத்த’ நீரோ மன்னன், புதிய மதமொன்றைச் சகித்துக்கொள்ள முடியாமல், சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டிற்குள் கிறிஸ்தவர்களை எறியக் கட்டளையிட்டான் என்பதைப் பற்றிப் படித்தபோது, நீங்கள் கேள்விகளால் உங்கள் தாயைத் துளைத்தெடுக்கிறீர்கள்:

“அதெப்படி அப்படிச் செய்யமுடியும் அம்மா? அதை எப்படி மக்கள் அனுமதித்தார்கள்? இத்தகையதொரு கொலைவெறியை எங்ஙனம் அவர்களால் பார்த்து இரசிக்க முடிந்தது?”
நீங்கள் கேள்விகளாலானவர் ரஃபேல். சட்டக் கல்லூரி மாணவனான பிற்பாடு நீங்கள் கீழ்க்காணும் கேள்வியை உங்கள் பேராசிரியரிடம் கேட்கிறீர்கள்:
“ஆர்மேனியர்களைப் படுகொலை செய்யக் கட்டளையிட்ட மெஹ்மெற்  ரலாத் தண்டிக்கப்படாதது ஏன்?”
“இதோ பார் ரஃபேல்… அதற்குச் சட்டத்தில் இடமில்லை.  உதாரணமாக, ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரனை எடுத்துக்கொள்வோம். அவன் சில கோழிகளை வளர்க்கிறான். பிறகு அவற்றைக் கொல்கிறான். அது அவனுடைய தொழில். அந்தக் கோழிகளை ஏன் கொன்றாய் என்று நீ அவனிடம் கேட்பாயானால், நீ உள்விவகாரத்தில் தலையிடுகிறாய். எல்லை மீறுகிறாய் என்று பொருள்”
“ஆனால், ஆர்மேனியர்கள் கோழிகள் அல்லர்!”
அது அப்படித்தான் ரஃபேல்!
துருக்கியருக்கு, ஆர்மேனியர் - கால்நடைகள்ஜெர்மனியருக்கு, யூதர்கள் - கீழ்மக்கள் (vermin)ஹுட்டுக்களுக்கு, ருட்ஸிக்கள் – கரப்பான் பூச்சிகள்சிங்களப் பேரினவாதிகளுக்கு, தமிழர்கள் - நாய்கள்
ரஃபேல்! அந்தக் கேள்வி உங்களைத் தொந்தரவு செய்கிறது. உள் நின்று உறுத்துகிறது. உங்களுக்கு அது புரியவேயில்லை.
“ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்லும்போது அவன் தண்டிக்கப்படுகிறான்; ஒரு மில்லியன் சனங்களை, ஒரு தேசத்தைக் கொலைசெய்தவன் சுதந்திரமாக வெளியில் திரிகிறான். ஒரு மில்லியன் சனங்களைக் கொல்வதென்பது ஒரு தனிமனிதனைக் கொல்வதைக் காட்டிலும் குறைவான குற்றச்செயலா?”
சட்டப்புத்தகங்களில் அப்போது அந்தக் குற்றம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. அதைக் குறிக்க ஒரு பெயர்தானும் இருக்கவில்லை. சிறுபான்மையினர் யாவரும் நேரம் வந்தால் கழுத்து அறுபட்டுச் சாகவிருக்கும் கோழிகளே!
“அவர்கள்தாம் (ஆர்மேனியர்கள்) எவ்வளவு அவலப்பட்டுச் செத்துப்போனார்கள்!”நீங்கள் பெருமூச்செறிகிறீர்கள்.
 “அவர்கள் – துருக்கியர்- எங்களை இடம்மாற்றப் போவதாகச் சேதி கிடைத்தது.” அப்போது பதினான்கு வயதுச் சிறுவனாயிருந்த ரகோச்சி லெவோனியன் நினைவுகூர்கிறார்:
“தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பி வருவார்களென்று அயலவர்களில் பெரும்பாலானோர் நம்பினார்கள். நீண்ட பயணத்திற்குத் தயார் செய்வதுபோன்று ரொட்டிகளையும் இன்னபிற உணவுகளையும் தயாரிக்கத்தொடங்கினார்கள். அவற்றைத் தயாரிப்பதில் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று தந்தை எனது தாயாரிடம் சொன்னார். செல்லும் வழியில் உறங்குவதற்குத் தேவையானதை மட்டும் கோவேறு கழுதையொன்றில் ஏற்றினார். என்ன நடக்கப்போகிறதென்பதை அவர் ஊகித்திருந்தார்.”
அவருடைய ஊகம் மெத்தச்சரி! ஏப்ரல் 24, 1915அன்று சிறுபான்மையினராகிய ஆர்மேனியர்களின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள். வலுவுள்ள ஆர்மேனிய இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. எஞ்சியோர் சிறிய சிறிய குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமிருப்பவர்கள் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் மட்டுமே.
அதோ!ஆர்மேனியப் பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் துருக்கியர்கள் ஆடுமாடுகளைப் போலச் சாய்த்துக்கொண்டு போகிறார்கள். அந்த ஊர்வலம் மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. புல்பூண்டற்ற வனாந்தரங்களில் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் கூரிய துப்பாக்கி முனைகளால் நடத்திச்செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வழியில் கடந்து செல்லும் ஊர்களில் வாழும் துருக்கியர்கள் அந்தப் பாவப்பட்ட சனங்களின் சொற்ப உடமைகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்களை இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை வாங்கிக்கொள்ளும்படியாக, அவர்களேனும் உயிரோடு வாழட்டுமென்று வழியில் எதிர்ப்படும் துருக்கிப் பெண்களிடம் மன்றாடுகிறார்கள் ஆர்மேனியப் பெண்கள். சிலர் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக வளரவிருக்கிறார்கள்.
முடிவற்ற நடை.  உணவும் தண்ணீரும் மறுக்கப்பட்டவர்களாய் அவர்கள் போகிறார்கள். புல்பூண்டுகளைச் சாப்பிடுகிறார்கள். சில நாட்களிலேயே தூசிபடிந்த எலும்புக்கூடுகளின் ஊர்வலம் போலாகிவிட்டார்கள் அவர்கள். காலணிகள் தேய்ந்துபோன குழந்தைகளின் பாதங்களிலிருந்து குருதி சொட்டுகிறது. பசியினாலும் களைப்பினாலும் நோயினாலும் மயங்கிச் சரிகிறார்கள். கடைசி வாய்த் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தம் பெற்றோரைக் கூவியழைத்தபின் பயனின்றி மரித்துப் போகிறார்கள். செல்லும் வழியெங்கும் வயோதிபர்களின் உடல்கள் விழுந்து கிடக்கின்றன. அருகில் அமர்ந்து யாரும் அழுவதற்கில்லை.
ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது குடிமக்களே! நடவுங்கள். பிரித்தெடுத்து அழைத்துச் செல்லப்பட்ட ஆண்கள் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்…. பெண்களே! நடவுங்கள். இன்னும் சில நாட்களில் பிணந்தின்னிப் பறவைகளுக்கு இரையாக மாறவிருப்பவர்களே! ஏற்கெனவே விழுந்துவிட்டவர்களின் மேல் இடறிவிழுந்துவிடாமல் நடவுங்கள். இல்லையெனில் துப்பாக்கிகளின் பயனெட்களால் கொல்லப்படுவீர்கள். அதோ! நடக்கமுடியாமல் சோர்ந்துபோன ஒரு பெண்ணின் கதையை அவர்கள் முடித்துவிட்டார்கள். நல்லது. அவளது துயரம் அவ்வகையிலேனும் நிறைவுற்றது. துரதிர்ஷ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! நீங்கள் பாலைவனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் மலைகளினோரங்களிலும் சிதறி அலைந்து வெகு விரைவில் மடிந்தே போய்விடுவீர்கள்.
நல்லபடியாக முடிந்தது இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை! (அது அப்போது அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கவில்லையாயினும்) ஒரு மில்லியன் ஆர்மேனியர்களின் ஆன்மாக்கள் பசியில் கத்தியழும் குரல்கள் பாலைவனங்களில் அலைந்துகொண்டிருக்கின்றன.ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின் அப்போதைய அமெரிக்கத் தூதுவராயிருந்த ஹென்றி மோர்கன்தாவு எழுதுகிறார்:

“புதிய வகையிலான கூட்டுப் படுகொலைக்கு இது உதாரணமாயிற்று. துருக்கிய ஆட்சியாளர்கள் ஆர்மேனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறும்படியாக இட்ட உத்தரவானது, அந்த மொத்த இனத்திற்குமான மரண சாசனம்; இதைத் துருக்கியர்கள் உணர்ந்தேயிருந்தார்கள். ஆனாலும், என்னோடு அதைக் குறித்து எந்தவொரு உரையாடலையும் நிகழ்த்தவோ உண்மையை வெளிப்படுத்தவோ முயற்சி எடுத்திருக்கவில்லை.”

தனியொரு மனிதனாகிய உங்களது குரல் மறுபடியும் மறுபடியும் ஒலிக்கிறது ரஃபேல் லெம்கின்:
 “ஒரு தேசத்தை, இனத்தை, மதத்தை, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டாகப் படுகொலை செய்வதை எந்தப் பெயர்கொண்டு அழைப்பது? அந்தக் கொடிய செயலைத் தடுத்து நிறுத்தும் சட்டங்கள் உண்டா?”
“இல்லை. ஆர்மேனியர்கள் எப்போதோ முடிந்துபோனார்கள். இப்போது அதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது?”முணுமுணுக்கிறார்கள்.
அச்சொல்லுக்கான நெருக்கடி ஜேர்மனியிலிருந்து புறப்பட்டு உலகை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அந்த நெருக்கடியின் பெயர் ஹிட்லர்!

1931இல் செய்தித்தாளொன்றுக்கு அவனால் வழங்கப்பட்ட நேர்காணலொன்றில் ‘கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாகவும் அதன்போது மில்லியன் கணக்கிலான மக்கள் இடம்பெயர்க்கப்படவும் கொல்லப்படவும் கூடும்’என முன்மொழிந்திருந்தான். 
ஜெர்மனியின் அதிகாரத்தை ஹிட்லர் கையேற்ற நூறாவது நாளிரவு (மே 10, 1933) நூல்களின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிரிலிருந்த திறந்தவெளியரங்கில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் – ஜெர்மானியர்கள் அல்லாதவர்களால் எழுதப்பட்டவை சாம்பலாக்கப்படுகின்றன. அன்றிரவு மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில், புத்தகக் கடைகளில், நூலகங்களில் ‘யூத அறிவுஜீவித்தனத்தின் மரண’த் திருவிழா கொண்டாடப்பட்டது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன், சிக்மன்ட் பிராய்ட், ஹெய்ன்றிச் ஹெய்னெ ஆகியோரும் யூதர்களாயிருந்த காரணத்தால் அவர்தம் நூல்களும் ஜெர்மானியர்களின் அன்றைய இரவினை வெளிச்சமாக்கின.
ஜ+ன் 01, 1981இல் யாழ்ப்பாண நூலகத்திலிருந்த தொண்ணூற்றி ஏழாயிரம் நூல்களும் கிடைத்தற்கரிய பழஞ் சுவடிகளும் பேரினவாதிகளால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. அன்று சிங்களப் பேரினவாதத்தின் நாகரிகம் கொழுந்துவிட்டெரிந்ததை உலகம் கண்ணாரக் கண்டது. “எங்கே புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே ஈற்றில் மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்”என்று நீங்கள் சொன்னது சரியாயிற்று ஹெய்ன்றிச் ஹெய்னெ.
நாஜிக்களின் வதைமுகாம்களில், J.A.TOPF & SOHNE தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இராட்சத எரியடுப்புகளுள் அள்ளி அள்ளிக் கொண்டுவந்து திணிக்கப்படுகின்றன பிணங்கள்.  அவை மகாராஜாக்களின் கோட்டை அடுப்புகளைப் போல இரவு பகலாக எரிகின்றன. நிணமும் மயிரும் பொசுங்கும் நாற்றம் தாளமுடியவில்லை. தள்ளித் தள்ளி கைசலித்துப் போகிறது நாஜிப்படை. மனிதத் தோலால் செய்யப்பட்ட விளக்கு மறைப்புகளின் அருகமர்ந்து அதிகாரிகள் நாட்கணக்கில் திட்டமிட்டும் அத்தனை உடல்களை அழித்து முடிப்பதென்பது சிரமமான காரியமாகத்தானிருக்கிறது.
ஆறு மில்லியன் உடல்கள்!
ஆனால், அந்தக் கொலைகள் இன்னமும் ‘கொலைகள்’என்றே சுட்டப்படுகின்றன. நமது சின்னண்ணன்களில் ஒருவராகிய பிரிட்டிஷின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் ‘பெயரற்ற குற்றம்’என்றே அதை விளித்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் நடந்தது சாட்சிகளற்ற போர் எனில், இஃது பெயரற்ற குற்றம்! கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அமெரிக்காவோ பிரிட்டனோ ரஷ்யாவோ ஆரம்பத்தில் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பெயரற்ற குற்றமொன்றைப் புரிந்துகொள்வது எப்போதும் சிக்கலானதே! யூத இனத்தின் படுகொலையை ‘’ஹோலொகோஸ்ட்’என்று அழைக்க பின்னரே பழகிக்கொண்டார்கள்.
மேலும், ஜெர்மனியில் இருந்து வரும் செய்திகள் நம்பமுடியாத அளவிற்குக் கொடுமையானவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய புனிதர்களால் அவற்றையெல்லாம் செய்யவே முடியாது; வதந்திகள் என்று ஒதுக்கப்படுகின்றன.
எவர்தான் அவற்றை நம்புதற்கியலும்? அது இப்படித்தான் தொடங்கியது:நீங்கள் ஒரு யூதர் என்று வைத்துக்கொள்வோம்.  நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு சட்டம் (நியூரம்பர்க் சட்டம்) அமுலுக்கு வருகிறது. அந்தச் சட்டம் உங்களது குடியுரிமையைப் பறித்து ஜெர்மானியர்கள் இல்லை என்று அறிவிக்கிறது. (ஆம். உங்கள் மனதுள்ளிருந்து குற்றவுணர்வொன்று அலையலையாக எழுந்து வருகிறதல்லவா? பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்தம் இருப்பினை இலங்கையும் இந்தியாவும் சுதேசித் தமிழர்களும் பந்தாடியது போலவேதான் நடந்தது.) ஒரு குடிமகனுக்குரிய உரிமைகள் எவையும் உங்களுக்கு இல்லை என்கிறது. ‘இந்த மண்ணைப் பொறுத்தளவில் நீங்கள் வெளிநாட்டவர்; வேண்டுமானால் இங்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம்’ என்று சலுகை காட்டுகிறது.
யூதர்களும் ஜெர்மானியர்களும் திருமணம் செய்துகொள்ளலாகாது; அவ்விதம் செய்துகொள்வதானது சட்டவிரோதம் என்று உங்களுக்குச் சொல்லப்படுகிறது. மீறிச் செய்வீர்களாயின் புதிய சட்டத்தின் பிரகாரம் உங்களைச் சிறையிலடைக்கவியலும். நீங்கள் உங்கள் இனத்தவரல்லாத மற்றவருடன் பாலியல் உறவுகொண்டால்… கதிமோட்சந்தான்! ஆகவே, நீங்கள் யூதராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் நாற்பத்தைந்து வயதுக்குக் குறைவான பிராயமுடைய ஜெர்மானியப் பெண்ணை வேலைக்காரியாகக்கூட வைத்திருக்கவியலாது. இசகுபிசகாக ஏதாவது நடந்து ஜெர்மானியர்களின் ஆரிய இரத்தம் மாசுபடுத்தப்பட்டுவிட்டால் தொலைந்தது. பத்தரை மாற்றுத் தங்கம் போலும் தூய ஆரிய இரத்தத்தை, கீழ்மக்களாகிய யூதர்களின் இரத்தம் மாசுபடுத்தலாகாது. அது நோய்க்கிருமி போன்றது. தேசத்தின் ஆரோக்கியத்திற்குக் கெடுதலானது. நீங்கள் பாதி யூதரா? முழுமையான யூதரா என்ற கேள்வி இப்போது எழுகிறது. நீங்கள் மூன்று யூதப் பாட்டன்களைக் கொண்டவராக இருந்தால் நீங்கள் முழு யூதராவீர்கள். யூதராகிய நீங்கள் பரிசோதனைக் கூடத்தின் மேசையில் கிடத்தப்பட்டிருக்கும் எலியைப் போல அத்தனை சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவீர்கள்.
அளக்கப்படுகிறது மூக்கின் நீளம்; அதன் அளவு உங்களைக் காப்பாற்றியிருக்கலாம். அல்லது கொன்றுபோட்டிருக்கலாம். மேலே உருச்சிறுத்து கீழ்விரிந்த அளவையினால் உடலின் பாகங்கள் அளக்கப்படுகின்றன. அந்தோ! அவளது  யூத இடுப்பு அவளைக் கொன்றது. குருதியில் ஆரியத் துணிக்கைகள் இல்லாதவனும் தொலைந்தான். 20 நிறங்களால் மூடப்பட்ட கண்ணாடி உருண்டைகளைக் கொண்ட உலோகச் சட்டம் அகன்றதொரு சதங்கை போலிருக்கிறது. அது அவர்களின் இனத்தைத் துப்பறிந்தது. நீ ஒரு ஜிப்சியின் கண்களைக் கொண்டிருந்தாயானால், உனது உடலும் ஆன்மாவும் கிழிபட்டு அலையவே விதிக்கப்பட்டிருக்கிறது. பரிதாபத்திற்குரியவனே! கண்களின் நிறமே உன்னைக் கொன்றது. 29 வகையிலான தலைமயிர் மாதிரிகளைக் கொண்ட அந்தக் கோர்வை ஒரு நிலச்சுவான்தாரின் மனைவியின் இடுப்பில் தொங்கும் சாவிக் கொத்தினைப் போலவேயிருக்கிறது. ஜெர்மானியர்கள் அல்லாதவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களின் உயிர்கள் மயிர்களின் நிறத்தில், தன்மையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.
ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஒரு தவளையைப் போல வரலாற்றைக் கவிழ்த்துப் போட்டு அறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவையெல்லாம் ஆரம்பக் கட்டக் கண்துடைப்புகள்தாம். பிறகு… பிறகென்ன…கொல்லுங்கள். யூதர்களை, ஓரினச் சேர்க்கையாளர்களை, மனநிலை பிறழ்ந்தவர்களை, ஜிப்சிக்களை, ஆபிரிக்கர்களை, கம்யூனிஸ்டுக்களைக் கொல்லுங்கள் பெருமானே!
உங்கள் குறி தூய ஆரியக் குறிதானா அடோல்ப் ஹிட்லர்? விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அளவைகளுள் கச்சிதமாகப் பொருந்தியதா தங்கள் ஆரியக்குறி? அதிலிருந்து வெளிப்பட்டது ஆரிய விந்துதானா? ஈவா பிராவ்ன்! நீயாவது சொல்!

மரணவண்டிகளாகிய அந்தப் புகையிரதங்கள் அலறிக்கொண்டு போகின்றன. இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் விலங்குகளைப் போல அவர்களைக் கொண்டுபோகிறார்கள்.
நீண்ட பயணம். மரணமுகாமாகிய ஆஷ்விச்சுக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அழுக்கு இன்னொரு ஆடையாகப் படிந்திருக்கிறது. கடூழியத்திற்குத் தகுதியற்ற அனைவரும் கொல்லப்படத் தகுதியுடையவர்களே. ‘ஆடைகளைக் கழட்டிவிட்டு உள்ளே செல்லுங்கள். குளிக்கலாம்’நீங்கள் போகிறீர்கள். தண்ணீருக்குப் பதிலாக ஷவரிலிருந்து சைக்ளோன் பி பொழிகிறது. தண்ணீர் ஒருபோதும் வஞ்சிப்பதில்லை; உங்கள்மீது பொழிந்தது விஷவாயு. சதை வற்றித் தோல்களாகச் சுருங்கிப் போய்க் கிடக்கிறீர்கள்.நம்பமுடியாமல் கண்கள் அகல விரித்தபடி அந்தத் தாய் கேட்கிறாள்:

“இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள்… உண்மையாகவே இவர்களைக் கொல்லப்போகிறீர்களா?”

என்ன கேள்வி இது! கொன்றார்கள்.

உனது முகாம் பொறுப்பாளனிடம் நீ கேட்கிறாய்: “எனது முதிய தந்தையால் இனி வேலை செய்யவியலாது. அவரை இன்று கொல்லப்போகிறார்கள். அவரை ஒரு தடவை சமையலறைக்கு அழைத்துப் போய் ரொட்டி ஒன்றைக் கொடுக்க எனக்கு அனுமதியுண்டா?” மனிதத் தோலில் தீட்டப்பட்ட ஓவியங்கள் தொங்கும் அறைகளுள் ஓய்வொழிச்சலில்லாத திட்டமிடலில் நாஜி அதிகாரிகள். எத்தனை பேர்களையும் கொல்லவியலும்; உடல்களை அழிப்பதுதான் அவர்களுக்குச் சிக்கலாயிருக்கிறது. மண்ணை ஒதுக்குவதுபோல புல்டோசர்கள் உடல்களை ஒதுக்கிக்கொண்டு போகின்றன. மனிதப் புதைகுழிகள் எங்குதானில்லை! பிணங்களின் வற்றியுலர்ந்த மார்புகள் சுரைக்காய்கள் போல தொங்குகின்றன. போலந்தில், டென்மார்க்கில், நெதர்லாந்தில், பெல்ஜியத்தில், பிரான்சில் ஹிட்லரின் மரணநிழல் படர்ந்துகொண்டே செல்கிறது.

அந்தப் பையன்- அவன் அங்குதான் வாழ்ந்தான் – எலீ வீஸலிடம் அவன் கேட்டது நினைவிருக்கிறதா?
“இது உண்மையாக இருக்கக்கூடுமா? இது இருபதாம் நூற்றாண்டு. மத்திய காலத்தில் நாம் வாழவில்லை. இப்படியொரு காலத்தில் இத்தகைய குற்றங்கள் எங்ஙனம் இழைக்கப்படவியலும்? இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இந்த உலகத்தால் மௌனமாயிருக்க முடிவது எப்படி?”சிறுவர்கள் பெரும்பாலும் விடையிறுக்கவியலாத கேள்விகளையே பெரியவர்களிடம் கேட்கிறார்கள்.
உலகம் என்பது எது? அதன் மனச்சாட்சியின் நிறம் என்ன? இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவின் கழுத்தில் தொங்கும் சால்வையின் நிறமாகிய சிவப்பா? ஹிட்லரின் ஸ்வஸ்திகாவின் நிறமா? போலந்தில் யூதர்களின் மத சாஸ்திர கலாசாலையில் இருந்த நூல்கள் நாஜிக்களால் சந்தைத் திடலில் கொண்டுவந்து குவித்து தீமூட்டப்பட்டபோது எழுந்த புகையின் நிறமா? முள்ளிவாய்க்காலில் கரிந்துபோய்க் கிடந்த உடல்களின் வெளித்தெரிந்த வெந்த இறைச்சியின் நிறமா? ருவாண்டாவில், கிழங்குகளைப் பொதிவதுபோல பாய்களால் சுற்றிப் பொதியப்பட்டிருந்த உடல்களிலிருந்து பாய்களை மீறிக் கசிந்துகொண்டிருந்த குருதியின் நிறமா?
இப்போது அந்தக் கூட்டுப் படுகொலைகளுக்குப் பெயர் கிடைத்துவிட்டது. ரஃபேல் லெம்கின்! நீங்கள் ‘இனப்படுகொலை’(Genocide)என்ற சொல்லை உருவாக்கிவிட்டீர்கள். பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சு+ட்டுவதைப் போல இறப்பின் வகைமாதிரிக்கேற்ப பெயர் சு+ட்ட வேண்டிய அவசியத்திற்கு மனிதகுலம் தள்ளப்பட்டது என்னே முரண்! முரணேதான்; முரண் நகையன்று.
பெயர் சு+ட்டப்பட்ட பிற்பாடும் அப்பெயர் கொண்டு விளிக்கத் தயங்கிய உலகத்தின் யோக்கியதையை என்ன பெயர்கொண்டு அழைப்பதெனத் தெரியாமல் பிற்பாடு குழம்புவார்கள் ருவாண்டாவின் ருட்ஸிகள்
1994 ஏப்ரலில்- இரண்டாம் உலக யுத்தத்தின்பிற்பாடு, ‘இனியொருபோதுமில்லை’என்றெழுந்த குரல்களைப் பழிக்கும்படியாய்- ருவாண்டாவில் வீழ்த்தப்பட்ட இலட்சக்கணக்கான உடல்களின் மீது மரணப் பறவைகள் நிழல்விழுத்திப் பறந்துசெல்கின்றன. ருட்ஸிகள் ஒளிந்திருந்த காடுகளின் மேல் இரத்தவாடையை முகர்ந்தபடி கழுகுகள் சுற்றியலைகின்றன. தஞ்சமடைந்திருந்த தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் ஒன்றன்மேலொன்றாய் விழுந்துகிடக்கின்றன கறுத்த, உயர்ந்த, சுருட்டை முடியினைக் கொண்ட உடல்கள். தேடியழிக்கப்பட வேண்டிய ‘காக்ரோச்சு’க்களை பெரும்பான்மையினராகிய ஹுட்டுக்கள் அழித்துவிட்டார்கள். ருட்ஸிக்களின் வீடுகளைத் தீ பெரும்பசியோடு தின்றுகொண்டிருக்கிறது.
ருட்ஸி இனத்தவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயமொன்றின் மதகுருவானவர் ஹுட்டு மதகுருவொருவருக்குச் செய்தி அனுப்புகிறார்.
“நாளை நாங்கள் கொல்லப்படுவோம் என்று அறியத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய சார்பில் மேயருடன் பேசி எங்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள்” அந்தச் செய்தி கிடைக்கப் பெற்றவர் எதுவும் செய்தவற்கில்லை.

பதிலாக ஹுட்டுக்களின் தலைவனொருவன் பதில் அனுப்புகிறான்.“நாளைக் காலை மிகச் சரியாக ஒன்பது மணிக்கு நீங்கள் கொல்லப்படுவீர்கள்.” கொலையாளிகள் தாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு விசுவாசமானவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்! மிகச் சரியாக ஒன்பது மணிக்கு அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயங்களுள் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. சிதறிக் கிடந்த உடல்களை விலக்கி விலக்கி நடந்துசென்ற கொலைஞர்கள் எஞ்சிய உயிர்களை வாள்களாலும் கத்திகளாலும் முடித்துவைத்தார்கள்.
தந்தை நோவாவின் நிர்வாணத்தைப் பார்த்த காரணத்தால் சபிக்கப்பட்ட பிள்ளை ஹாமின் வழிவந்தோர், சாபத்தினால் கருநிறமாகியவர்களின் வரலாறு செந்நிறக் குருதியினால் எழுதப்பட்டது. வாழைத் தோட்டத்தினுள் ஒளிந்திருந்தபோது கொல்லப்பட்ட குழந்தையே! உனது பொம்மையை இறுக்கியபடி நீ உறைந்துபோயிருக்கிறாய். கொல்லப்படுவதற்கு முன் உன் தந்தையின் முன் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணே! உயிரின் ஒளி அணைந்துவிட்ட உன் முகத்தில் துயரத்தைக் காட்டிலும் அவமானமே மிஞ்சியிருக்கிறது. காஹிரா ஆறு சடலங்களின் கனம் தாங்காமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஐ.நா. வாகனங்களை விரட்டியபடி ருட்ஸிக்கள் ஓடிவருகிறார்கள். தங்களை அழைத்துச் செல்லுங்கள் என்று இறைஞ்சியோ, இனப்படுகொலையிலிருந்து காப்பாற்ற வேண்டியோ அல்ல;
“கத்திகளாலும் ஆணிகள் பொருத்தப்பட்ட சட்டகங்களாலும் வெட்டப்பட்டும் குத்துப்பட்டும் நாங்கள் சாகவிரும்பவில்லை. அந்த மரணத்தின் வலியை எங்களால் தாங்கவியலாது. தயவுசெய்து துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுவிடுங்கள்”என்று மன்றாடியபடி பின்னே ஓடிவருகிறார்கள். ஐ.நா. வாகனங்கள் அவர்களைப் பின்னிறுத்தி விரைந்து சென்றுவிடுகின்றன.
வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது என்று எத்தனை தடவைதாம் எழுதுவது? நினைவிருக்கிறதா….? வன்னியில், பூட்டப்பட்டிருந்த உங்கள் இரும்புக் கதவினூடாக ‘எங்களை விட்டுவிட்டுப் போக வேண்டாம்… போக வேண்டாம்’என்று அசைந்த கைகளை? “எங்களுக்கு உணவோ தண்ணீரோ நீங்கள் தரவேண்டியதில்லை. எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம். நீங்கள் எங்களை விட்டுப் போனால் நாங்கள் கொல்லப்பட்டுவிடுவோம்”என்று கெஞ்சிய அந்த முதியவரை நினைவிருக்கிறதா ஐ.நா.அதிகாரிகளே?
ருவாண்டாவில், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தேறிய பிற்பாடு அந்தத் தேவாலயத்தினுள் நுழைந்த செய்தியாளர்களுக்குத் தெரியவில்லை எந்தக் கை எந்த உடலுக்குரியதென்பது. எந்தத் தலையை எந்த உடலுடன் பொருத்துவதென்பது உண்மையில் குழப்பமான காரியந்தான். வளர்ந்த பெண்ணொருத்தியின் உடலுடன் தவறுதலாகப் பொருந்திப் போய்விட்ட குழந்தையொன்றின் தலை பரிகசித்துச் சிரிக்கிறது மண்டையோட்டினுள் எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய பற்களால்.
யரூபுயே என்ற கிராமத்தின் தேவாலயத்திற்குள் தன் சக செய்தியாளர்களுடன் நுழைந்த ஃபேர்கல் கீன் என்ற ஊடகவியலாளர் சொல்கிறார்:
“வெள்ளைப் பளிங்குக் கல்லாலான கிறிஸ்துவின் சிலையருகில் அந்த மனிதன் விழுந்து கிடந்தான். அவனுடைய முழங்கால்கள் அவனது உடலின் பின்புறமாக மடக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவனது கைகள் அவனது தலையினருகில் வெட்டிப் போடப்பட்டிருந்தன. உடல்களை விலக்கிக் கொண்டு நாங்கள் நடக்கவேண்டியிருந்தது. பெரும்பாலான உடல்களிலிருந்து ஊன் வடிந்துபோயிருந்தது. மரணத்திற்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை. திருப்பீடத்தினருகில் உடல்கள் விழுந்து கிடந்தன. கன்னி மரியாளின் காலடியில் எலும்புத்துண்டுகள் குவிந்துகிடந்தன. ஒரு மனிதன் தனது கைகளால் தலையை மறைத்தபடி வீழ்ந்து கிடந்தான். வாளின் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கைகளை உயர்த்தியபோது அவன் கொல்லப்பட்டிருக்கவேண்டும்.”
மனித வரலாற்றை வதைகளதும் படுகொலைகளதும் பரீட்சார்த்தக் களமாக மாற்றியிருந்த ஹிட்லரின் வீழ்ச்சியுடன், ஆஷ்விச்சையும் இன்னபிற வதைமுகாம்களையும் பார்த்த அதிர்ச்சியில் 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, ஜனவரி 12, 1951இல் அமுலுக்கு வந்த ‘இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் தண்டனையளிப்பதற்குமான சட்டம்’ கோப்புகளின் கல்லறையில் அந்தோ செத்துக்கிடக்கிறது.
‘இனப்படுகொலை’என்ற வார்த்தையை ஐ.நா.வும் அமெரிக்காவும் உச்சரித்தால், இராணுவத் தலையீடு என்ற விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும். அத்தகைய தருணங்களில் உபயோகிப்பதற்கென்றே இருப்பவைதாம் ‘உள்நாட்டு யுத்தம்’, ‘இரு தரப்பினருக்கிடையேயான மோதல்’, ‘ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம்’, ‘குருதியின் பயங்கரம்’, ‘கூட்டுப் படுகொலைகள்’ ஆகிய பிரயோகங்கள். அரசியல் என்ற சதுரங்கத்தில் மேலாண்மையுடைய நாடுகள் சிறு கீறலும் படாமற் தப்பிக்க மேற்குறித்த வார்த்தைகளே உதவுகின்றன.
ஆக, உலக மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டிருப்பவர்கள், ருவாண்டாவில் நடந்தது இனப்படுகொலையே என உச்சரிக்கவோ அறிக்கைகளில் குறிப்பிடவோ மறுத்தார்கள்.

அப்போது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட உள்ளறிக்கையொன்றில் தெளிவாக  அறிவுறுத்தப்பட்டுள்ளது: “எச்சரிக்கை! இனப்படுகொலை என அடையாளப்படுத்துவதானது நம்மை ‘எதையாவது’ செய்யவேண்டிய கட்டாயத்துள் தள்ளும்”
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பேச்சாளர் கிறிஸ்டின் ஷெல்லி செய்தியாளர் மாநாடொன்றில் ருவாண்டா பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ருவாண்டாவில் ‘இனப்படுகொலை நடவடிக்கைகள்’ (acts of genocide)நடப்பதாக அறிகிறோம்”
“இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கும் இனப்படுகொலைக்கும் என்ன வித்தியாசம்?” செய்தியார்களுள் ஒருவர் கேட்கிறார்.
“அது வந்து…….. நான் நினைக்கிறேன்… உங்களுக்குத் தெரியும்……… அதற்கென்றொரு வரைவிலக்கணம் இருக்கிறது….” என்று இழுத்து நீண்ட விளக்கமொன்றைச் சொல்கிறார் ஷெல்லி.

“எத்தனை ‘இனப்படுகொலை நடவடிக்கை’கள் சேர்ந்தால் ஒரு இனப்படுகொலை ஆகும்?”
“இதுவொரு கேள்வியேயல்ல; நான் இதற்குப் பதிலளிக்க வேண்டியதில்லை”
ஆயிற்றா? எல்லாம் சட்டப்படி நடக்கவேண்டும் என்று முடிந்தபோதெல்லாம் அறிவுறுத்தும் கனவான்களே! அப்போதுதான் சோமாலியாவில் முப்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்; அமெரிக்கப் படைகளை உப்புப் பெறாத ருவாண்டா போன்ற நாடுகளில் பலியிட முடியாது; செலவினங்களின் நெருக்கடி; அதிபர் பில் கிளின்டன் அவர்கள் சிக்கல்களிலிருந்து விலகியிருக்க விரும்பினார்; மேலும், மிக முக்கியமாக ருவாண்டாவில் நிலக்கரியோ எண்ணெயோ குறைந்தபட்சம் கப்பல்களை நிறுத்தக்கூடிய துறைமுகமோ இல்லை. பிறகெப்படித் தலையிட முடியும்? நியாயமான கேள்விதான்! பெரியண்ணனும் உலகப் பொலிஸ்காரனுமாகிய அமெரிக்கா பிற்பாடு மன்னிப்புக் கேட்டது. அமெரிக்காவின் மன்னிப்பு என்ற வார்த்தையானது, ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ருட்ஸிக்கள் மற்றும் அவர்களுக்குச் சார்பானவர்கள் என்று கருதிப் படுகொலை செய்யப்பட்ட சில ஆயிரக்கணக்கான ஹுட்டுக்களின் உயிர்களுக்கு நிகரானது. நம்புங்கள் நண்பர்களே!
பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் அமெரிக்க அதிபர் ருவாண்டாவின் மண்ணில் தன் பாதங்களைப் பதிக்கவியலாமற் போயிற்று. கிகாலியின் விமானநிலையத்தில் ஒரு மண்டபத்தில் அந்த மன்னிப்புக் கோரும் நிகழ்வு நடந்தேறியது.
“ருவாண்டாவின் இனப்படுகொலையில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது தேசத்தின் மரியாதையைச் செலுத்தவே இன்று இங்கு வந்திருக்கிறேன். அனைத்துலக சமூகமும் ஆபிரிக்காவின் இதர நாடுகளும் ருவாண்டாவில் நிகழ்ந்தேறிய துயரமான அழிப்பின் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளவே வேண்டும். படுகொலைகள் ஆரம்பித்தவுடன் அதைத் தடுத்து நிறுத்த உடனடியாக ஒன்றும் செய்யவில்லை….. அந்தக் குற்றத்தை இனப்படுகொலை என்ற பொருத்தமான சொல்லால் விளிக்கவும் நாங்கள் தவறியிருந்தோம்…”என்று அந்நாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் உரையாற்றியதாக அப்போது ருவாண்டாவின் நாடாளுமன்றப் பேச்சாளராயிருந்த ஜோசப் செபரென்சி எழுதுகிறார். மேலும் அவர், ‘அப்போது கூட்டத்தினர் பலமாகக் கைதட்டினார்கள்’என்றெழுதுகிறார்.

ஈழத்தமிழர்களும் தட்டுவார்கள். தட்டுவோம். தோள்பட்டையோடு கைகள் துண்டிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகளற்ற விழிகளால் வெறுமனே வெறித்துக்கொண்டிருக்க, கூட்டத்தில் சாதாரணமாக எதிர்ப்படக்கூடிய, நம்பிக்கைக்குரிய ஒருவரின் முகத்தினைக் கொண்டிருக்கும் இந்நாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது உறுதியான, கனத்த குரலில் ‘உயர்ந்ததோங்கிய பனைமரங்களோடும் கடலோடும் கூடிய எழிலான இந்த நிலத்தில் நடந்த இறுதிப்போரின் சரியான தருணத்தில் நாங்கள் தலையிட்டிருந்தால் சில ஆயிரக்கணக்கான உயிர்களையாகுதல் காப்பாற்றியிருக்கலாம். எனது தேசத்தின் மக்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்”என்று வருத்தந்தோய்ந்த குரலில் உரையாற்றும்போது…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2014 17:20

April 18, 2014

‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நுால் அறிமுகம்)



‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’
(நூல் அறிமுகம்)
ஆசிரியர்: சசி வாரியர்
தமிழாக்கம்: இரா.முருகவேள்

இந்த வாழ்வின் அருமை எப்போது தெரிகிறதெனில், சாவுக்கு நாள் குறிக்கப்படும்போதுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, முதுகு முள்ளந்தண்டினுள்ளிருக்கும் தண்டுவடத்தில் கட்டி என்று வைத்தியர் சொன்ன கணத்தில், என்னால் இழக்கப்படவிருந்த உலகம் சட்டென அழகாகிப்போனதைப் பார்த்தேன். நோயாகட்டும் மரணதண்டனையாகட்டும் ‘இதோ முடிந்துவிடப்போகிறது’எனும்போதே வாழ்வின்மீதான காதல் பெருக்கெடுக்கிறது; குறைகள், குற்றப்பட்டியல்கள் சிறுத்துப்போகின்றன. அதிலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தின் எரிதழலில் தினம்தினம் கருகும்போது வாழ்வின் காலடியில் கிடந்து உயிர் மருகி மருகி மன்றாடத் தொடங்கிவிடுகிறது. பகத்சிங் போல தூக்குமரத்தை நோக்கி நெஞ்சுரத்தோடு நடந்துசென்றோர் அரிது.

என்னதான் குற்றம் இழைத்திருந்தாலும், மரணதண்டனை எனப்படும் கொலைத்தண்டனையை மனம் ஒப்பமறுக்கிறது. ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ஐ படித்தபிற்பாடு இத்தண்டனை முறை இல்லாதொழியவேண்டும் என்ற எண்ணம் முன்னரிலும் வலுப்பட்டிருக்கிறது. சிறையறையின் நீண்ட தடுப்புக்காவலில் துளித்துளியாக சிந்தியதுபோக எஞ்சிய உயிரின் கழுத்தை எங்ஙனம் முறித்துக் கொன்று ‘திருத்து’கிறது அரசும் சட்டமும் என்பதை அறிய இந்நூலை வாசித்தே ஆகவேண்டும்.

திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலுமாக முப்பதாண்டு காலம் தூக்கிலிடுபவராகப் பணியாற்றிய ஜனார்த்தனன் பிள்ளை எழுதிக் கொடுத்த குறிப்புகளையும் வாய்மொழியாகச் சொன்னவற்றையும் தொகுத்து சசி வாரியர் (HANGMAN'S JOURNAL) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார். இரா.முருகவேள் அதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜனார்த்தனன் பிள்ளையால் தமிழில் எழுதப்பட்ட குறிப்புகளை சசி வாரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டபின், அது மீண்டும் இரா.முருகவேளால் மூலமொழியாகிய தமிழுக்குத் திரும்பிவந்திருப்பதாகும்.

கடைசித் தூக்குப் பணியை நிறைவேற்றி (117 தூக்குகள்) கால் நூற்றாண்டு கழித்து, எழுத்தாளர் ஒருவரால் (சசி வாரியர்) தூண்டப்படும் ஜனார்த்தனன் பிள்ளை, அந்தப் பழைய இருண்ட நாட்களின் நினைவுகளுள் மீண்டும் விழுந்து குற்றவுணர்வில் தவிப்பதையும் அவரது உள்ளார்ந்த தனிமையையும் சித்தரிக்கிறது இந்நூல். ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’என்பதற்கொப்ப சில அனுபவங்கள் சாதாரண மனிதர்களின் அறிதலுக்குச் சாத்தியப்படாதவை. கற்பனையைக் காட்டிலும் விசித்திரங்கள் நிறைந்தவை. அத்தகைய ஒரு உலகை இந்நூல் அறியத்தருகிறது.
எழுத்தாளரைச் சந்திக்கும்வரை, கரிய நினைவாக, சீழ் அகற்றப்படாத காயமாக குற்றவுணர்வானது தூக்கிலிடுபவருள் இருந்துவந்திருக்கிறது. அந்நினைவுகளைத் தூண்டிய பிறகு அவரால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை. நண்பர்களுடன் உரையாட இயலவில்லை. மனைவியுடனான பேச்சும் நின்றுபோய்விட்டது.  மழையோ வெயிலோ அவருக்கு உறைப்பதேயில்லை. குடியும் அவரைக் கைவிட்டுவிட்டது. கயிறு இறுகி இறுகித் தடம் பதிந்துபோன தூக்குமரத்தினருகில், ஒரு மனிதனை முற்றிலுமாக இந்த வாழ்விலிருந்து மறையச் செய்யும் ஆளியினருகில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மனிதன் நின்றுகொண்டிருக்கும் பொறிக்கதவினருகில், அது படாரெனத் திறந்து கழுத்தில் கயிறு இறுக அந்தப் பலியுயிர் மறைந்துபோகும் இருண்ட நிலவறைக்குள் அவர் மீண்டும் நினைவுகளால் வாழவேண்டியிருக்கிறது. துர்க்கனவுகளால் அவரால் உறங்கமுடியாது போகிறது.

“நான் இந்த வேலையை மறுத்திருக்கவேண்டுமோ? எனது பிள்ளைகளுக்கு உணவளிக்கவே அதைச் செய்தேன்”என்று அவரது மனம் பதகளிக்கிறது. கடவுளின் பெயரால்தான் நான் என் பணியைச் செய்தேன். நான் கடவுளின் ஒரு கருவிதான்”மீண்டும் மீண்டும் தற்சமாதானம் செய்துகொள்கிறார்.

உண்மையில் அவர் ஒரு கருவி. அரசனதும் அரசாங்கத்தினதும் கட்டளையை நிறைவேற்றவேண்டிய பணியாள். அவர் இல்லையெனில் இன்னொருவர் அதைச் செய்தே இருப்பார். எனினும், இந்தச் சமூகம் அவரை எந்தக் கண்களால் பார்க்கிறது? அவர்கள் ஜனார்த்தனன் பிள்ளையைக் கண்டதும் விலகிச் செல்கிறார்கள். உரையாடிக் கொண்டிருந்தவர்கள் சட்டென மௌனமாகிறார்கள். ‘நீயே கொலைகாரன்’என்று அந்த மௌனம் அவரைச் சாடுகிறது. இந்நூலின் முன்னுரையில் தியாகு அவர்களால் சொல்லப்படுவதைப்போல ‘கொலைச் சங்கிலியின் கடைசிக் கண்ணி’யே அவர். வெட்கப்படவேண்டியவர்களும் குற்றவுணர்வுகொள்ளவேண்டியவர்களும் குற்றவாளிகளை உருவாக்கும் அதிகாரங்களே. சட்டத்தின் பாரபட்சமான (விதிவிலக்குகளும் உண்டு) விரல்களால் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று எங்ஙனம் தீர்மானமாக அழைக்கமுடியும்? மேலும்,குற்றம் என்பதன் கனமும் பொருளும் ஆளுக்காள் மாறுபடுவதல்லவா? பசியில் உணவுப்பொட்டலத்தைத் திருடுபவன் தண்டிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரங்களைத் திருடும் தொந்தி பெருத்த கார்ப்பரேட் கொள்ளைக்காரர்கள் கௌரவிக்கப்படுவதுந்தானே இன்றைய நீதி?

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனவுணர்வுகளைப் பற்றி இந்நூலில் அதிகமில்லை. எனினும், எழுதப்படாத மறுபக்கம் வலியின் வரிகளால் நிரவப்படக்கூடியதும் இரக்கந்தருவதுமாகும். ஆளி இழுக்கப்பட்ட கணத்தில் உள்நோக்கிப் படாரெனத் திறந்துகொள்ளும் பொறிக்கதவின்மீது நிற்கும் மனிதனின் கண்களைப் பற்றி ஜனார்த்தனம் பிள்ளை அடிக்கடி குறிப்பிடுகிறார். முகமூடி மாட்டப்படுவதற்கு முந்தைய கணத்தில் அந்தக் கண்களைத் தவிர்க்கப்பார்த்தும் அவர் எவ்விதமோ சந்தித்துவிடுகிறார். அந்தக் கண்கள் பெரும்பாலும் உள்ளாழத்தை நோக்கிக்கொண்டிருந்ததாக அவர் சொல்கிறார்.

அரசுகள் தமது கொலைபாதகங்களுக்குப் பொறுப்பேற்பதில்லை. போர் என்ற பெயரிலும் தேசியபாதுகாப்பு என்ற பெயரிலும் வலுவற்ற நாடுகளுள்ளோஃ பிரதேசங்களுள்ளோ புகுந்து வளங்களைக் கொள்ளையடித்து அப்பகுதி மக்களைக் கொல்லும், சிறைப்பிடிக்கும் எந்த அதிகாரமும் பழிபாவங்களுக்கு அஞ்சுவதில்லை. எனினும், அஞ்சுவதுபோன்ற நாடகங்கள் அரங்கேறத்தான் செய்கின்றன. இந்நூலிலும் அப்படியொரு நாடகம்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதை அறிவித்து திருவிதாங்கூர் மன்னருக்கு நீதிமன்றத்திலிருந்து செய்தி அனுப்பப்படும். ஆனால், அந்தச் செய்தியை மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள் மதியந்தான் பெற்றுக்கொண்டதாக அரண்மனை அலுவலர்கள் உறுதிப்படுத்துவார்கள். மன்னர், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்துவிடுவார். ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்ட அறிவித்தலை எடுத்துக்கொண்டு அரண்மனையின் தூதுவர் சிறைச்சாலையை நோக்கி விரைந்து போவார். விரைந்து போவார் என்றால்…. அதுவொரு பாவனைதான்! மரணதண்டனை பெரும்பாலும் விடிகாலையில் நிறைவேற்றப்பட்டிருக்கும். அது முடிந்தபிற்பாடுதான் ‘விரைந்துபோய்’ அந்த அறிவித்தலை, தண்டனைக்குப் பொறுப்பான சிறையதிகாரியிடம் கையளிப்பார். அரிதாக, தூதுவர் போகும்வேளை மரணதண்டனை நிறைவேற்றப்படாதிருந்தாலும், நிறைவேற்றப்படுவதற்காக அவர் காத்திருப்பார். பிறகு ஒரு நாடகம் அரங்கேறும். அதை,‘நகைச்சுவை நாடகம்’என்கிறார் சசி வாரியர்.

“ஐயோ கடவுளே!” என்று அந்தத் தூதுவர் அலறுவார். நீங்கள் அந்தக் கைதியைக் கொன்றுவிட்டீர்கள்.”

“ஆமாம். அவர் இறந்துவிட்டார்.”சிறைத் தலைமைக் காவலர் பதிலளிப்பார். “பார்! என்னிடம் தீர்ப்பு இருக்கிறது. என்னிடம் என்ன செய்யும்படி கூறப்பட்டதோ நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.”

“ஆனால் நான் அவருக்கான தண்டனை குறைப்பாணையை வைத்திருக்கிறேன். அரசர் நேற்று மாலை இதில் கையெழுத்திட்டார். நீங்கள் அறிந்திருப்பீர்கள் நாங்கள் சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் வேலைசெய்வதில்லை. அதனால்தான் தாமதம்…”

“அய்யோ! என்ன ஒரு பரிதாபம். இவருக்கு இது எவ்வளவு தாமதமாக வந்திருக்கிறது.”

இது ஒத்திகை பார்க்கப்படாத கச்சிதமான நாடகம்! அதிகாரமானது எளிய மக்களிடத்தில் எப்போதும் ‘கருணை’யோடே இயங்குந்தன்மையது என்பதை விளக்க இதைவிட வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டியதில்லை.

இந்நூலில் தூக்கிலிடுவது குறித்து மட்டும் பேசப்பட்டிருக்கவில்லை. ஜனார்த்தனன் பிள்ளைக்கும் அவரது முன்னாள் பள்ளி ஆசிரியரான பிரபாகரன் மாஷ்க்கும் இடையிலான உரையாடல்கள் சாரமும் சுவாரசியமும் மிக்கவை.

“நீ உண்மையிலேயே தனியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், அது ஒன்றும் உலகத்தில் நடக்கவே நடக்காத ஒன்றல்ல…”

“எனக்குப் புரியவில்லை”

“இப்படிக் கொஞ்சம் நினைத்துப்பார், இன்னொரு மனிதனின் இதயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? அவன் மனதில் உண்மையில் என்னதான் இருக்கிறது? உன் மனைவியைப் பற்றியோ, நெருங்கிய நண்பர்களைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ உனக்கு எந்தளவுக்குத் தெரியும்? எனவே எல்லோர் நிலையும் இதேதான். அடிப்படையில் யாரும் தங்கள் உள்ளத்தின் அடியாழத்திலிருக்கும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. ஜனார்த்தனன் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது இதுதான். நீ மட்டும் தனியன் அல்ல. எல்லோரும் அப்படித்தான்.”

என்னுடைய பிரார்த்தனையெல்லாம் இந்தப் புத்தகத்தை தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமான எவரும் படித்துவிடக்கூடாதே என்பதுதான். கழுத்தில், வலதுபக்கக் காதுக்குக் கீழே சரியாக குறிப்பிட்ட அந்தப் புள்ளியில் முடிச்சினை இடவில்லையெனில், தூக்கிலிடப்படுபவரின் உயரத்துக்கும் பருமனுக்கும் ஏற்ப கயிற்றைச் சரியான நீளத்தில் இடவில்லையெனில், ‘வீழ்ச்சி’துல்லியமாகக் கணிப்பிடப்படவில்லையெனில் இறுதிக்கணங்கள் மிகக் கொடூரமான வலியைத் தருவதாக அமைந்துவிடும் என்கிறார். சரியாக நிறைவேற்றப்படாத ஒரு தூக்கைப் பற்றி ஜனார்த்தனன் பிள்ளை இவ்விதமாக விபரிக்கிறார்:


“லிவரை அழுத்துகிறேன். பொறிக்கதவு படாரென்று கீழே திறந்து இருபுறம் உள்ள தூண்களில் மோதிக்கொள்ளும் ஓசை. அந்த மனிதர் குழிக்குள் மறைகிறார்… எல்லா முகங்களும் அந்த விநாடியில் மாறிப்போய்விட்டன. அவர்கள் எதைக் கவனிக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். அது உதறுகிறது. உதறுகிறது. உதறிக்கொண்டேயிருக்கிறது. கடவுளே… ஏன் இப்படி உதறுகிறது? கீழிருந்து அந்த மனிதர் தனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றும் சத்தங்கள் வருகின்றன. முதலில் சிறுநீர்ப்பை பின்பு குடல்கள் அந்த மெல்லிய சத்தங்களாலும், திறந்திருந்த பொறிக்கதவு வழியாக மிதந்து வந்த மெல்லிய நாற்றத்தாலும் நான் குறுகிப் போகிறேன்… நீண்ட… நீண்ட நேரத்திற்குப் பின்பு இறுதியாக கயிறு உதறுவது நிற்கிறது. அவர் இறந்துவிட்டார்.”

தூக்கிலும் அதுவொரு மோசமான தூக்கு! அவர் தன் ‘பணி’யைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். குறைந்த வலியுடனான சாவை அந்தப் பரிதாபத்திற்குரியவனுக்குத் தர இயலாதுபோயிற்று.

“வாழ்வு என்பதே ஒருவகையில் சாவு நோக்கிய பயணந்தான்”என்கிறார் தியாகு முன்னுரையில். அந்தப் பயணத்தின் வழியில்தான் பறவைகளும் வயல்களும் நீர்நிலைகளும் மலர்களும் குழந்தைகளும் இருக்கின்றன-இருக்கிறார்கள். இருபத்திரண்டு ஆண்டுகளாக இருட்டறைகளில் பேரறிவாளனும் முருகனும் சாந்தனும் இழந்த இளமையை, பைசாசமென தூக்குக்கயிறு தலைக்குமேல் ஆடிக்கொண்டேயிருந்தபோது அவர்கள் அனுபவித்த துயரத்தை, துர்க்கனவுகளால் விழித்திருந்த இரவுகளை எந்தத் தீர்ப்பால் மீளப்பெற்றுத்தர இயலும்?அவர்கள் விடுதலையானாலும்கூட சிறையிருந்த இருண்ட காலத்தின் ஞாபகங்களன்றி எஞ்சிய நாட்கள் கழியாது என்பது திண்ணம்.


வெளியீடு: டிசம்பர் 2013, பதிப்பகம்: எதிர் வெளியீடு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2014 18:30

March 31, 2014

நித்திலாவின் புத்தகங்கள்



நடப்பது இன்னதென்று அவளது மூளை கிரகித்துக்கொள்வதற்கிடையில் மீண்டும் சில பறந்துவந்தன. அவள் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் அதற்கு முந்தைய நொடிதான் ஒரு கொலை நடந்துமுடிந்து இரத்தம் கூழாகத் தரையில் பரவிக்கொண்டிருந்தது. கொலை செய்த காத்யா சாவதானமாக அந்த நொடிதான் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தாள்.
குழப்பத்தோடு நிமிர்ந்துபார்த்தபோது, கண்களில் அனல் தெறிக்க அம்மா நின்றுகொண்டிருந்தாள். “இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத்தான் நீ உருப்படுவாய்” என்று கத்தி அழுதபடியே அம்மாவால் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் நித்திலாவின் காலடியை அண்மித்தும் அவளுக்குப் பின்புறமாகவும் தாறுமாறாகச் சென்று விழுந்திருந்தன. நித்திலா அமைதியாக எழுந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டுபோய் அவை இருந்த இடத்தில் மறுபடியும் அடுக்கி வைத்தாள். பிறகு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு படுத்துவிட்டாள். சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னால் அம்மா நின்றுகொண்டிருப்பதை அவளால் உணரமுடிந்தது.

அப்பா இறந்துபோனபோதுகூட அம்மா அப்படிக் கத்தியழுது அவள் பார்த்ததில்லை. அதற்கு அவர் எந்நேரமும் குடித்துக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். அண்ணா தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்து நின்றபோதும், அவன் சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போனபோதும்கூட அம்மா தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. இன்று கண்களில் நீர் பெருக்கெடுக்க உடலெல்லாம் பதறித் துடிக்க கத்துகிறாளென்றால், அந்தளவிற்கு உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப் போயிருக்கவேண்டும் என்று நினைத்தாள்.

அம்மா புத்தகங்களைத் தூக்கியெறிந்ததைப் பார்த்த கணத்தில் கோபம் பொங்கியது. வேறு யாராவது அப்படிச் செய்திருந்தால் சன்னதம் ஆடித் தீர்த்திருப்பாள். ஆனால், அம்மாவை ஒன்றும் சொல்லமுடியவில்லை. தவறு இழைத்துவிட்டதான மனநிலை நித்திலாவை மௌனமாயிருக்கச் செய்தது. படுத்திருந்தபடி அறையைச் சுற்றி விழிகளை ஓட்டினாள். அன்றாட உபயோகத்தில் இல்லாத பொருட்களை வைப்பதற்கென உயரத்தில் கட்டப்பட்டிருந்த தட்டுக்களில், அலமாரிகளில், எழுதும் மேசையில், கணனி மேசையில், முகம் பார்க்கும் கண்ணாடி முன், கட்டிலில், நாற்காலியில், அதனருகில் தரையில் இவையெல்லாம் போதாதென்று கட்டிலுக்குக் கீழும் புத்தகங்கள் கிடந்தன. கழிப்பறையின் தண்ணீர்க்குழாயினுள் சிறிய புத்தகங்கள் செருகப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் எளிமையான வாசிப்பிற்குரிய ஜனரஞ்சக சஞ்சிகைகள். விடயத்திலும் பருமனிலும் கனத்த புத்தகங்கள் மலச்சிக்கலுக்கு இட்டுச்சென்றன.

அந்தச் சிறிய அறைக்குள் அவளோடு கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்தன. புதிதாக வாங்கி வரும் புத்தகங்கள் தமக்கான இடத்தை அடைவதற்கு முன்னம் சில காலம் முன்னறையில் அமர்ந்திருக்கும். அடிக்கடி அவற்றை எடுத்து மணந்துபார்ப்பாள். பெற்றோல் மணம், சிகரெட், விபூதி மற்றும் மழை கிளர்த்தும் வாசனை, மெழுகுவர்த்தி எரியும்போது எழும் வாசனை போலவே அதுவும் அவளுக்கு மிகப் பிடித்தமானதாயிருந்தது. ஆரம்பத்தில் அப்படி அவள் செய்யும்போது, ‘நீ திருந்தமாட்டாய்’என்ற பாவனையில் அம்மா தலையசைத்துச் சிரிப்பாள். பிறகு, வினோதமாகப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளத் தொடங்கினாள். இப்போதெல்லாம், நித்திலா புத்தகங்களை மணந்து பார்ப்பதைப் பார்க்க நேரும் அம்மாவின் கண்களில் வேதனை குடிகொண்டிருப்பதை அவள் அவதானித்திருந்தாள்.

அவள் சிறுமியாயிருந்தபோது, விபரீதமெனச் சொல்லத்தக்க எதையும் அவளிடத்தில் கண்டார்களில்லை. அந்நாட்களில் அப்பா எப்போதாவதுதான் குடித்தார். அப்பாவும் அம்மாவும் பணத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கியிருக்கவில்லை. வாசிக்கும் பழக்கம் ஆரோக்கியமானதென்ற எண்ணமே அப்போது அவர்களுக்கிருந்தது. ‘புத்திசாலி! இத்தனை சிறிய வயதில் இவ்வளவு பெரிய புத்தகம் படிக்கிறதே’என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில் பெருமை கலந்த ஆனந்தமிருந்தது. வீட்டிற்கு புதியவர்கள் வரக்கண்டால் ஓடிப்போய் ஒளிந்துகொள்வாள். வீட்டிற்கு வருபவர்களுக்குரித்தான சம்பிரதாயம் வழுவாமலிருக்க அவர்களும் இவளை இழுத்துப் பிடித்து வைத்து சில கேள்விகளைக் கேட்பார்கள். அந்நேரங்களில், ஒரு முயல்குட்டியைப் போல ஓடுவதற்கு ஆயத்தமாக கால்களைப் பெயர்த்துக்கொண்டு உள்ளறை நோக்கிக் கண்களைத் திருப்பியிருப்பாள்.

அவள் அறையைவிட்டு வெளியே வருவது மிகக் குறைவு என்பதையும் தவிர்க்கவியலாமல் போனாலொழிய எவருடனும் பேசுவதில்லை என்பதையும் அவர்கள் தாமதமாகவே உணரத்தொடங்கினார்கள். எப்போதாவது சடுதியாக அறைக்குள் நுழையும்போது வாசித்தபடியோ, கையில் புத்தகத்தோடு வேறோரு உலகத்தினுள் மூழ்கிவிட்டிருப்பதையோ புத்தகம் கையிலிருக்க உறங்கிவிட்டிருப்பதையோ கண்டார்கள். விளக்குகள் ஒளிர்ந்தபடியிருக்க உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் தமது சின்ன மகளைக் குறித்து அவர்கள் கவலைகொள்ளத் தொடங்கினார்கள்.
அவளுடைய பதினாறாவது வயதிலிருந்து அம்மா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்கத் தொடங்கினாள். முதலில் வருத்தத்தோடும் பிறகு எரிச்சலோடும் நாளாக நாளாக கோபத்தோடும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்?”

“எப்பிடி இருக்கிறேன்?”

“மற்றப் பொம்பிளைப் பிள்ளையளைப் போலை நீ ஏன் இருக்க மாட்டேனெண்டிறாய்?”

அம்மா அந்தக் கேள்வியைக் கேட்கும்போது பக்கத்துவீட்டு சுமதியை மனதில் வைத்துக்கொண்டுதான் கேட்கிறாள் என்பதை நித்திலா அறிவாள். சுமதி, அம்மாவின் நீரிழிவு நோய் பற்றி அக்கறையோடு கேட்பாள். அவளுக்குச் சமைக்கத் தெரிந்திருந்தது. குறிப்பாக, அவள் சுடும் தோசை வட்டாரியால் வரைந்ததைப் போல வட்டமாக இருந்தது. மேலும் அது தோசையைப் போலவே உருசித்தது. வீட்டைத் தூசி தும்பு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளப் பழகியிருந்தாள். சுமதியின் வீட்டுக்கு யாராவது போனால் விழுந்து விழுந்து உபசரிப்பாள். அவர்கள் ‘செத்துப் போ’என்று சொன்னால், ‘எத்தனை மணிக்கு?’என்று கேட்டுக்கொண்டு செத்துப்போகிறவளைப் போல அத்தனை அனுசரணையோடு நடந்துகொள்வாள். எல்லாவற்றிலும் முக்கியமாக, புத்தகங்களைக் கட்டிக்கொண்டு விழுந்து புரள்வதில்லை. அவளைப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்புவாள் அம்மா.

“பிள்ளை என்று இருந்தால் சுமதியைப் போல இருக்கவேணும்”என்பாள் அம்மா.

நித்திலாவும் அம்மாவைச் சமாதானப்படுத்துவதற்காக ‘ஏதாவது உதவி செய்யவா?’என்று கேட்டபடி சிலசமயம் சமையலறைக்குள் வருவாள். வேலை எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் வெண்ணெயில் இறங்கும் கத்திபோல வழுக்கிச் செல்லும் அந்தக் கேள்வி. அம்மா வேலைகளை முடித்துக்கொண்டு சோபாவில் படுத்திருக்கும்போது ஏதாவது ஆறுதலாகக் கதைக்கவேண்டுமென்று நினைப்பாள். ஆனால், சொற்களைத் திரட்டிக்கொண்டு கதைப்பதென்பது சிரமமானதும் சோம்பல் மிகுந்ததுமான காரியமாயிருந்தது அவளுக்கு.
எப்போதாவது முன்னறைக்குள் வந்து அமர்ந்திருக்கும்போது, தலைக்கு மேல் மயிரிழையில் கட்டப்பட்ட கத்தியொன்று தொங்கிக்கொண்டிருப்பதேயான மனஅந்தரத்தோடு அப்படியும் இப்படியுமாக அசைந்தபடி அமர்ந்திருப்பாள். அந்தக் கண்ராவியைக் காணச் சகிக்காமல் அப்பாதான் சொல்வார்.

“நீ போறதெண்டாப் போ”

நித்திலா கதைக்காமலிருப்பதை விடவும்அப்படி நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு அமர்ந்திருப்பதைப் பார்ப்பது இன்னும் மோசமாயிருந்தது.
வெளியாட்களோடு எப்படி நடந்துகொள்வது என்பதையும் அவள் அறியாதிருந்தாள். அப்படித் தவிர்க்கமுடியாமல் ஏதாவது கதைக்க நேர்ந்த சமயங்களில், அவர்கள் திடுக்கிடும்படியாக அசந்தர்ப்பமாக ஏதாவது சொல்லிவைத்தாள்.

“உனக்கு உன்ரை புத்தகங்களைத் தவிர்த்து வேறை ஒரு சிந்தனையுமில்லை”என்று அண்ணாகூடச் சொல்லியிருக்கிறான். ‘என்னைச் சொல்கிறாய்… நீயும் சுயநலவாதிதான்’என்று இடித்துரைப்பதன் மூலமாக தனது தவறுகளின் கனத்தைக் குறைக்க அவன் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் முயற்சித்திருக்கிறான்.

அவளுக்கு புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டது எந்த வயதிலிருந்து என்று அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. மதில்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களை, அஞ்சலிக் கவிதைகளை, அரசியல் அறைகூவல்களை எதையும் அவள் விட்டுவைத்ததில்லை. மளிகைப் பொருட்களைச் சுற்றிவரும் காகிதங்களை சுருக்கம் நீக்கி எடுத்து வாசிப்பதற்கெனச் சேகரித்துவைப்பாள். சிகரெட் பெட்டியில் எழுதப்பட்டிருக்கும் ‘புகைத்தல் கொல்லும்’என்ற பயமுறுத்தலுக்குக் கீழேயுள்ள வாசகத்தைத் தவறாமல் அப்பாவுக்கு வாசித்துக் காட்டுவாள். பெரும்பாலும், அவளால் வாசிக்கப்பட்ட ஒரு சிகரெட் பெட்டியில் இருந்ததைப்போல மறு பெட்டியில் மரணம் எழுதப்பட்டிருப்பதில்லை.

குறைந்த மழைக்காலம், கூடிய வெயில்காலம் ஆகிய இரண்டு காலங்களில் மட்டும் வாழ்வதென்பது அவளுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. வெவ்வேறான நிலவெளிகளில் மானசீகமாகவேனும் வாழவிரும்பினாள். சுவாரசியமோ மர்மமோ திருப்பங்களோ அற்ற யதார்த்தத்தை விட்டு வெளியேறி அதியற்புதமான உலகமெனத் தன்னால் நம்பப்பட்ட ஒன்றினுள் நுழைந்துகொண்டாள்.

ஈரலிப்பான மழைக்காடுகளுள் நனைந்த குரல்களால் பறவைகள் ஒலியெழுப்புவதையும், இரவானதும் பெயர்தெரியாத பூச்சிகளும் வண்டுகளும் ரீங்கரிப்பதையும் கேட்டுக்கொண்டிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்த புல்வெளிகளில் அலையும் தும்பிகளின் பின்னே, உடலெல்லாம் உற்சாகக் காற்று நிரம்பியிருக்க கைகளை விரித்தபடி ஓடினாள். மஞ்சள் முகங்களில் சிறிய உள்ளடங்கிய கண்களால் சிரிப்பவர்களோடு சிநேகம் கொண்டாள். பனிபொழியும் வீதிகளில் காதல் பித்துப் பிடித்து தனக்குத்தானே அரற்றிக்கொண்டு போனவனின் குளிராடையைத் தொட்டுப் பார்த்தாள். புகையைக் கக்கிக்கொண்டு விரைந்த புகையிரதத்தில் தொற்றி நின்றபடி தாயை நோக்கிக் கைகளை ஆட்டியவளின் கண்ணீரில் உருகினாள். இருந்தவர்களுள் நல்லவனாகத் தோன்றியவனும் அதிகாரமற்றவனுமான வெள்ளைக்காரத் துரையொருவனில் காதல் கொண்டாள். கால இயந்திரத்தின் முட்களைத் தான் விரும்பியபடி முன்பின்னாக நகர்த்தி நூற்றாண்டுகளில் அங்கிங்கென உலவித் திரிந்தாள்.

வகுப்பிலும் பாடத்தைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களுக்குள் மறைத்துவைத்துக்கொண்டு வேறு எதையாவது படித்துக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் குழுமியிருந்தார்கள். சாமியாடிகளுள் கடவுளர்கள் புகுந்துகொள்வதுபோல, கதை சொல்லும்போது அவள் வேறொருத்தியாக மாறிவிடுவாள். தனக்குள் ஒடுங்கும் சுபாவமுடைய அந்தச் சிறுமியா இவள் என்று பார்ப்பவர்கள் ஐயுறும்படியான மாற்றமாயிருக்கும் அது. அந்நேரம், அவள் வாசித்த புத்தகங்களிலிருந்த மனிதர்கள் தரையிறங்கி அழுவார்கள். சிரிப்பார்கள். பித்தேறிப் பிதற்றுவார்கள். அவசரப்பட்டுக் கொலை செய்துவிட்டு ஆசுவாசமாகக் கவலைப்படுவார்கள். கண்களை அகலவிரித்தும் சுருக்கியும் கதையின் போக்கிற்கேற்ப காற்றில் கைகளை அலையவிட்டும் குரலில் ஏற்ற இறக்கங்களைக் காண்பித்தும் தனி நடிப்பு நாடகமே நிகழ்த்திக் காண்பிப்பாள். சிலசமயங்களில், வாசித்த கதைகளிலிருந்து புதிய கதைகளை இட்டுக் கட்டிச் சொல்வதுமுண்டு. அப்போது அவளது முகத்தில் இரகசியமான புன்னகை மலர்ந்திருக்கும். தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு இரகசியத்தின்பாலான குறுகுறுப்பில் திளைப்பாள்.
பள்ளிக்கூடம் விட்டதும் ஓட்டமாய் ஓடிப்போய் தன் புத்தகங்களிடம் புகுந்துகொள்வாள்.

“சாப்பிடு”அம்மா வெளியிலிருந்து குரல் கொடுப்பாள்.

“அஞ்சு நிமிசம்”

“சாப்பிட வா”

“ரெண்டு நிமிசம்”

“எவ்வளவு நேரம் கூப்பிடுறது?”

இவ்விதமாக நிமிடங்கள் மணித்தியாலங்களாகக் கரைந்துபோவது வழக்கமாயிருந்தது. கடைசியில் பொறுக்கமாட்டாமல் கடுகடுத்த முகத்தோடு அம்மா வந்து நிற்கும்போது வேறு வழியில்லாமல் எழுந்து செல்வாள். ஒரு கையில் புத்தகம் மறுகையால் சாப்பாடு என்னும்போது பல நாட்கள் என்ன சாப்பிட்டோம் என்பதே அவளுக்குத் தெரியாமலிருக்கும்.

ஒரு தடவை, நூலகத்திலிருந்து இரவல் எடுத்துவர இயலாத அரிதான புத்தகமொன்றின் பக்கங்களைக் கிழித்து எடுத்துவந்தாள். அன்றெல்லாம் அப்படிச் செய்திருக்க வேண்டாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேயிருந்தாள். இரவில் எழுந்திருந்து அந்தப் பக்கங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மென்சிறகுகளாலான பறவைக் குஞ்சொன்றின் இறந்த உடலைக் கையில் வைத்திருப்பதைப் போல உணர்ந்தாள். அதன்பிறகு கிழிப்பதை விட்டுவிட்டு முழுப்புத்தகங்களாகத் திருடவாரம்பித்தாள். கணிசமான அளவு புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. ஒருநாள் நூலகரிடம் கையுங்களவுமாகப் பிடிபட்டபோது பெரிய சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவருக்கு அப்பாவைத் தெரிந்திருந்தது. “இனிமேல் அந்தப் பக்கம் வந்தால் பொலிசிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன்” என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். பிறகு அந்த நூலகப் பக்கம் மறந்தும் போவதில்லை.

ஒருவழியாக பல்கலைக்கழகம்வரை படிப்பை ஒப்பேற்றினாள். அவளுடைய தோழிகளெல்லாம் வேலை தேடத் தொடங்கிய காலத்தில் அவள் நூலகம் நூலகமாகப் போய்க்கொண்டிருந்தாள். நூலகத்திலிருந்த புத்தகங்களில் இரவல் வாங்கக்கூடியவை எல்லாம் வாசித்துத் தீர்ந்தன. பக்கத்து ஊர்களிலும் அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ள நூலகங்களிலும்கூட. தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காகக் கொடுத்த பணத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு வந்திறங்கியவளைப் பார்த்தபோதுதான் அவளில் ஏதோ கோளாறு இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றவாரம்பித்தது. அன்றைக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாள். நித்திலா விசும்பியபடியே சாப்பிடாமல் படுத்துவிட்டாள். ஏதாவது செய்துகொண்டுவிடுவாளோ என்ற பயத்தில் அம்மா நள்ளிரவில் எழுந்திருந்து பார்த்தபோது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் படித்துவிடுவாள் என்றில்லை. அவ்வளவு புத்தகங்கள் தன்னிடம் இருப்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு பெரிய உலகமே தன் அலமாரிக்குள் அடைபட்டிருப்பதாக அவள் நம்பத்தொடங்கினாள். அந்த மனிதர்களோடு இரகசியமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டாள். இரவுகளில் அவளது அறைக்குள்ளிருந்து குரல்கள் கேட்கத் தொடங்கின.

கையில் ஒரு சதம்கூட இல்லாதபோதிலும் புத்தகக் கடைகளுக்குப் போவாள். புத்தகங்களின் முதுகைப் பார்த்துக்கொண்டு நிற்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அங்கு நிற்கும்போது காலம் புரவியின் கால்கள்கொண்டு பாய்ந்தோடியது. சுற்றவர இருக்கும் பொருட்கள்,மனிதர்கள், ஓசைகள் எல்லாம் அந்நேரங்களில் மறந்து மறைந்துபோயின.

திடீரென்று ஒருநாள் அவளது திருமணத்திற்கென்று சேர்த்து வைத்திருந்த நகைகளில் ஒரு சங்கிலியைக் காணவில்லை. முற்றத்து மணலை அரித்துக்கூடத் தேடியாயிற்று. கிடைக்கவேயில்லை. நித்திலாவின் கட்டிலுக்கு அடியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த மைமணம் மாறாத புத்தகங்களைப் பார்த்த அன்றைக்குத்தான் ஏதோ விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது அம்மாவுக்கு உறைத்தது.
அழுது அடம்பிடித்து திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தாள் அம்மா. நித்திலா அப்படிச் சம்மதித்ததுகூட ஏதோவொரு குற்றவுணர்வினாலும் அடிக்கடி அவளது கனவுகளில் தோன்றும் இராஜகுமாரன் இவனாயிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பினாலுந்தான்.

புகார் கவிந்து மூடிய மழைமாலைப்பொழுதுகளில் அந்த இராஜகுமாரனோடு ஒரே குடையினுள் முன்னொருபோதும் அறிந்திராத தெருக்களில் அவள் நடந்து போயிருக்கிறாள். ஒரு தடவை அவர்கள் பீட்டர்ஸ்பேர்க்கில் புகையிரதத்துக்காகக் காத்திருந்தார்கள். அவளது தலையில் தூவப்பட்டிருந்த பனித்துகள்களை அவன் விரல்களால் தட்டிவிட்டான். அன்றைக்கு அவன் சாம்பல் நிறத்தில் கனத்த குளிராடையொன்றை அணிந்திருந்தான். நித்திலாவை அவன் ‘நாஸ்தென்கா’’வென்று அழைத்தான். முகமெல்லாம் களிப்பேருவகை பொங்கத் திரும்பிய கணத்தில் அவள்தான் எத்தனை அழகாயிருந்தாள்!
முதலிரவில், ‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?’என்று கணவனானவன் கேட்டபோது, ஒரு நொடியும் தாமதிக்காமல் ‘புத்தகங்கள்’என்றாள். அரையிருளில் அவனது முகம் புலப்படவில்லை. எனினும், அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை என்பதைத் தொடுதலில் உணர்ந்தாள். அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தைகளைக் காட்டிலும் செயலையே விரும்பினான். தன்னைத் தின்னக் கொடுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். முகட்டைப் பிரித்துக்கொண்டு தன் குதிரையோடு இராஜகுமாரன் வெளியேறிப் போனான். வருத்தமாக இருந்தது.

மாமியார் அவளது புத்தகங்களை எடுத்துவரக்கூடாதென்று சொன்னபோது திரும்பி கணவனின் கண்களைப் பார்த்தாள். அவனோ அதைக் கவனிக்காததுபோல மறுபுறம் திரும்பிக்கொண்டான். அப்போதிருந்தே அவனைப் பிடிக்காமலாயிற்று.

புகுந்த வீட்டில் மாடுகளும் மனிதர்களும் நிறைந்திருந்தார்கள். அவளுக்கு ஒரு நிமிடந்தானும் ஓய்வில்லை. இரவுகளில் கணவன் படுக்கைக்கு அழைத்தால் சுவரில் நகரும் பல்லியையோ இருளையும் ஒளியையும் மாறி மாறிப் படர்த்தும் வாகனங்களின் நிழல்களையோ பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். அவன் அவளை ‘மரக்கட்டை’ என்று திட்டும்போது மரத்த விழிகளால் அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொள்வாள். அவனும் நாளடைவில் சலித்துப்போனவனாக பக்கத்து ஊரிலுள்ள ஒரு பெண் வீட்டிற்குப் போய்த் தங்கத் தொடங்கினான். முதலில் தயங்கித் தயங்கிப் பகலிலும் பிறகு தயங்காமல் இரவிலும் போகத் தொடங்கினான். இவளோ வீட்டுக்குப் போகவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டேயிருந்தாள். மாமியாரும் ‘இந்தச் சனியனைக் கொண்டுபோய் விட்டுத்தொலை’என்று சொல்லத்தொடங்கினாள். அவன் ஆற்றமாட்டாமல் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான்.

அவள் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அன்று அவளிடமிருந்து மாட்டுச் சாணி வாடையடிப்பதாக அம்மா சொன்னாள். நீண்ட காலத்திற்குப் பிறகு அவள் புத்தகங்களோடு படுத்துறங்கினாள். நடுஇரவில் கண்விழித்துப் பார்த்தபோது ஆழ்கடலின் பேரமைதி தன்னுள் இறங்கியிருக்கக் கண்டாள்.
முதலில், அவள் தற்காலிகமாகத்தான் அங்கு வந்திருப்பதாக அம்மா நினைத்தாள். பிறகு உண்மையறிந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிந்தாள். இவளோ திருமணம் என்ற ஒன்று தனக்கு நடக்கவேயில்லை என்பதாக நடந்துகொண்டாள். போதாக்குறைக்கு, ஒரு சோடிக் காப்பை விற்று புத்தகங்கள் வேறு வாங்கி வந்திருந்தாள். அம்மா எடுத்ததற்கெல்லாம் கோபப்படத் தொடங்கியது அப்போதிருந்துதான். என்றாலும் புத்தகங்களைத் தூக்கியெறியுமளவிற்கு மனதில் கோபம் அடர்ந்திருக்கும் என்பதை நித்திலா அறிந்திருக்கவில்லை. அம்மா சலிக்காது கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்?”

வயோதிபத்தில் சுருங்கியிருந்த அம்மாவின் முகம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது துயரத்தால் மேலும் சிறுத்துவிடும். கண்கள் உள்ளாழத்தில் புதைந்துகொண்டன போலிருக்கும். அவளுக்கோ பதிலற்ற கேள்விகளைக் கேட்கும் அம்மா அங்கிருந்து அகன்றால் போதுமென்றிருக்கும்.

“மருமகன் எவ்வளவு நல்லவர். அவரோடை நீ ஏன் ஒத்துப்போயிருக்கக்கூடாது?”

இவளோ கடைசியாக வாசித்த வரியில் அகலாது நின்றுகொண்டிருப்பாள். அடுத்த வரியானது எதிர்பாராத திசையில் அவளை அழைத்துச் செல்வதற்குக் காத்திருப்பதான பதட்டம் உள்ளோடும்.

“உன்ரை வாழ்நாளிலை இதையெல்லாம் நீ வாசிச்சு முடிக்கப்போறேல்லை”அம்மாவின் குரல் சாபமிடுவதைப் போல ஒலித்தது.
அது நித்திலாவுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் அவள் மழைக்காலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல, குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களைப் பொதிந்து வைத்திருப்பதைப்போல புத்தகங்களைச் சேகரித்தாள். வீட்டிற்கு வரும் யாராவது அவளது புத்தகங்களுக்கருகில் செல்கிறார்களென்று உணரும் தருணம் தற்காப்புக்குத் தயாராகும் விலங்கு போலாகிவிடுவாள். இரவல் கொடுப்பதென்பது இழப்பதே என்பதை அனுபவம் அவளுக்குக் கற்பித்திருந்தது. அவள் சந்தித்த சொற்பமான மனிதர்களில் விதிவிலக்கானவர்கள் மிகக்குறைவு. இரவல் கொடுக்கப்பட்டு திரும்பிவராத புத்தகங்களை மீண்டும் வாங்கி இலக்கம் ஒட்டி பத்திரப்படுத்துவாள்.

கடைசியில் அம்மா சலித்த கண்களோடு கதவைச் சாத்திவிட்டுப் போவாள். அந்த மூடலில் கோபமும் வருத்தமும் கலந்திருக்கும்.
சேமிப்பு கரைந்துகொண்டே போய் இறுதியில் வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தபோது அவள் அந்த பல்கனியை, அதையொட்டி வளர்ந்திருந்த இலையடர்ந்த மரத்தை அதில் மாலையானதும் வந்தமரும் பறவைகளை துல்லியமான வானத்தை வெளிச்சத்தை இழந்தாள்.

புதிதாகக் குடிபோன வாடகை வீடு பகலிலும் இருண்டிருந்தது. பெயருக்கு சன்னல்கள் இருந்தன. ஆனால், அவற்றைத் திறக்கவொட்டாமல் பக்கத்து வீட்டுச் சுவர் தடுத்துநிறுத்தியிருந்தது. வீடு மாறுவதற்கு முன்பாக புத்தகங்களில் சிலவற்றை பக்கத்திலிருந்த நூலகத்திற்கு மனமில்லாமல் கொடுக்கவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் இடம் போதவில்லை. அம்மா சின்னஞ்சிறிய கூடத்தில் உடலைக் குறுக்கியபடி படுத்துக்கொண்டாள். கோடைகாலத்தில் வெப்பம் தகித்தது. குகையொன்றில் இருப்பதான மனநிலையில் மூச்சுத் திணறியது. மேலும், இரவு பத்துமணிக்கு மேல் விளக்குகளை எரிப்பதற்கு அனுமதியில்லை. ஆறுமாதத்திற்கு மேல் அந்த அனலைத் தாங்கவியலாமற்போக மறுபடியும் வீடு மாறவேண்டியதாயிற்று.

வீடு மாறிச் செல்ல வேண்டியேற்பட்ட ஒவ்வொரு தடவையும் அம்மா புத்தகங்களில் கோபங்காட்டினாள். தனக்குப் பிரியமற்ற மனிதர்களைப் பார்க்கும் கண்களால் அவற்றைப் பார்த்தாள்.

“இதையெல்லாம் என்ன செய்யப்போறாய்?”

நித்திலா மௌனமாக அமர்ந்து சின்னச் சின்ன அட்டைப் பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருப்பாள்.

வீடு மாற்றித் தர வந்திருந்த வேலையாட்களில் ஒருவன் அந்தக் கனமான அட்டைப் பெட்டிகளில் ஒன்றைத் தூக்கிச் செல்லும்போது கீழே போட்டுவிட்டான்.

“இதுக்குள்ளை என்ன பிணமா இருக்குது?”என்று கேட்டான் உடனடி விளைவான எரிச்சலோடு.

“ஓமோம்… உங்கடை பிணம்!”என்று சொன்னபிறகுதான் அப்படிச் சொல்லியிருக்கவேண்டாமே என்று தோன்றியது. அவன் முகம் இருண்டவனாக படியிறங்கிச் சென்றுவிட்டான்.

இது கொஞ்சம் விசாலமான வீடு. ஓவென்றிரைந்தபடியிருக்கும் வீதிக்கருகில் இருந்தது. கண்கள் கூசும்படியான வெளிச்சம். வெட்டவெளியில் நிற்பதுபோலிருந்தது. அவள் சன்னல்களை அடைத்து இருண்ட நிறத்திலான திரைச்சீலைகளைத் தொங்கவிட்டாள். பிறகு பிரிக்கப்படாத பெட்டிகளுக்கு நடுவில் அமர்ந்து வாசிக்கத்தொடங்கினாள். அம்மாவுக்கு அவளை என்ன செய்வதென்றே புரியவில்லை. குனிந்து வாசித்துக்கொண்டிருந்த அந்த மெல்லிய உருவத்தை சில விநாடிகள் உறுத்துப்பார்த்தாள். அவளது துயரம் ஒரு விம்மலெனப் புறப்பட்டது.

“என்ரை காலத்துக்குப் பிறகு நீ தனிச்சுத்தான் போகப்போகிறாய்”

அந்தத் தாய் விழிகளில் துளிர்த்த நீரைச் சுண்டியெறிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துபோனாள். எப்படியாவது யதார்த்த உலகினுள் நித்திலாவை இழுத்துப்போட்டுவிடவேண்டும். அதைச் செய்வதற்கு அப்போதைக்கு அவளுக்குத் தோன்றிய ஒரே வழி நித்திலாவை வேலைக்கு அனுப்புவதுதான். அப்படியாவது அவளை வெளியாட்களோடு பழகச் செய்யலாமென்று அம்மா நம்பினாள். ஆதங்கத்தோடு அந்தக் கேள்வியைக் கேட்கத் தொடங்கினாள். 

“நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது?”

நித்திலா திகைத்துப்போனாள். வேலைக்குப் போவதென்பது அவளளவில் செத்துப்போவதுதான்; அதற்குச் சற்றும் குறைந்ததில்லை அது! அம்மாவால் இதுநாள்வரையில் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுதான் அதிகமும் அச்சுறுத்துவதாக இருந்தது. அலாரம் உச்சிமண்டையில் ஓங்கி அடிக்க அதிகாலையில் பதறித் துடித்து எழுந்து வேலைக்கு ஓடிய அண்ணா நினைவில் வந்தான். ஒரு கோப்பிடமோ கணனியிடமோ இயந்திரத்திடமோ கையில் மறைமுகச் சாட்டையேந்திய எந்த மனிதனிடமோ தனது நாட்களைக் கையளித்துவிட்டு உயிருள்ள பிணமாக உலவுவதென்பது அவளளவில் அசாத்தியமே. ஆனாலும், அம்மா வேலைக்குப் போகச்சொல்கிறாள். நாளாக நாளாக தள்ளவும் கொள்ளவும் முடியாத ஆளாக அம்மா மாறிவருவதாக அவளுக்குத் தோன்றியது. ஆனாலும், நோய்க்கிருமியென கவலை அவளை அரித்துக்கொண்டிருப்பதை நித்திலாவால் உணரமுடிந்தது. எல்லோராலும் வெறுக்கத்தக்க ஒரு ஆளாகத் தான் மாறிவிட்டேனோ என்ற முதற்றடவையாக அவள் யோசிக்கத் தொடங்கினாள். அம்மாவாலும் வெறுக்கப்பட்டுவிடுவேன் என்ற நினைவு தாங்கவியலாத துன்பத்தைத் தந்தது. ஆனாலும் தயங்கியபடியே கேட்டாள்.

“புத்தகக் கடையிலோ லைப்ரரியிலோ எனக்கு வேலை கிடைக்குமா?”
அம்மா ஆயாசம் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தாள்.  அங்கேயே விழுந்து செத்துப்போகலாம் போன்ற களைப்பு அவளை மூடியது.

“ஊருலகத்திலை உன்னைப் போல ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்காது”என்றாள் கசப்போடு.

இதைச் சொல்லும்போது அவளது குரல் இற்றுப்போயிருந்தது. அதன்பிறகு நித்திலா அம்மாவின் கண்களுக்கு அஞ்சத் தொடங்கினாள். அம்மா உறங்கிய பிறகு மெழுகுவர்த்தியின் ஒளியில் வாசிக்கப் பழகினாள். கிடைக்கக்கூடாதென்ற பிரார்த்தனையுடன் வேலைகளுக்கு விண்ணப்பம் அனுப்பவாரம்பித்தாள். நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும்படியாக வந்த கடிதங்களைக் கிழித்துப் போடவும் புத்தகங்களுக்கு அடியில் மறைக்கவும் செய்தாள். எவ்வளவோ கவனமாக இருந்தும் அந்தக் கடிதங்களில் ஒன்று அம்மாவின் கைகளில் சிக்கிவிட்டது.

“இந்தப் புத்தகங்களை விட்டெறிஞ்சுபோட்டு வேலைக்குப் போ”என்றாள்.
“சாப்பிடவும் வாடகைக்கும் காசிருந்தால் போதாதா அம்மா?”

வீடு விற்ற பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு அந்த வட்டியில் சீவனம் போய்க்கொண்டிருந்ததை நித்திலா அறிந்திருந்தாள்.

அம்மாவின் முகம் கடுகடுத்தது. அவள் பல ஆண்டுகளை ஒரு நொடியில் கடந்துவந்திருக்க வேண்டும். பிறகு அறையை நோக்கிப் பாய்ந்தோடினாள். திரும்பி வரும்போது அவளது கையில் புத்தகங்கள் இருந்தன. அவற்றை நித்திலாவின் காலடியில் விசிறியெறிந்தாள்.

“இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத்தான் நீ உருப்படுவாய்”என்று கத்தியழுதாள். பிறகு கதவைத் தடாலென்று அடித்துச் சாத்திவிட்டு வெளியில் போய்விட்டாள்.

நித்திலா காத்திருந்தாள். மாலையாகிற்று. இருண்டது. கடிகாரத்தின் ஓசை அப்படியொருநாளும் பூதாகரமாகக் கேட்டதில்லை. அம்மா அண்ணா வீட்டுக்குப் போயிருப்பாள் என்று தற்சமாதானம் செய்துகொண்டாள். தனிமை கொடிய நகங்களோடும் பற்களோடும் அருகிருந்தது. இரவு பத்துமணியளவில் அம்மா வீட்டினுள் நுழையும் காலடியோசை கேட்டது.
“நான் வேலைக்குப் போறன் அம்மா”என்று எழுந்திருந்து சொல்ல நினைத்தாள். பிறகு அந்த நாளின் கலவரத்தில் அயர்ந்து கண்ணுறங்கிப்போனாள்.

எழுந்து பார்த்தபோது விடிந்திருந்தது. வாகனங்களின் இரைச்சல் அமுங்கலாகக் கேட்டது. அருகிலிருந்த பெருமரத்திலிருந்து பறவையொன்று இடைவிடாமல் கூவியது. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை. எட்டு மணி வரை காத்திருந்தாள். வழக்கமாக தேநீர் கொண்டுவரும் அம்மா வரவேயில்லை. மெதுவாக எழுந்து வெளியில் வந்தாள். அம்மா கூடத்தில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்திருந்தாள். தலையணை கூட வைத்துக்கொள்ளவில்லை.
“அம்மா…”அழைத்துப் பார்த்தாள்.

இப்படியொரு கோபத்தை அம்மா அவளிடம் காண்பித்ததேயில்லை.
“உங்களுக்கு நான் வேலைக்குப் போகோணும்… அவ்வளவுதானே…?”
அம்மா சலனமற்றுக் கிடந்தாள்.

வயிற்றில் கலவரத்தின் கனத்தை உணர்ந்தாள். அருகமர்ந்து உலுப்பினாள். அம்மா அசைவற்றுக் கிடந்தாள். மெதுவாக விசும்பியழத் தொடங்கினாள். விசும்பல் கதறலாக மாறியது. யாரோ படியேறி வரும் காலடியோசை கேட்டது. சற்றைக்கெல்லாம் கூடம் ஆட்களால் நிறைந்துவிட்டது.

அவள் யாருடையவோ தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவ்வளவு துயரத்திற்கிடையிலும், வேலைக்குப் போக வேண்டியதில்லை என்று நினைக்க உள்ளுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது.

நன்றி- “காலம்” மார்ச் 2014, இதழ்



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2014 06:23

November 9, 2013

எழுத்தெனும் குற்றமும் கருத்துக் கொலையாளிகளும் - 02



மேலும், கவிஞர்-ஊடகவியலாளர்-ஊடகச் செயற்பாட்டாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுத்துக்களுக்கு, தமிழ் மக்கள் எவ்விதம் இனரீதியாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள் என்பதை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதில் பிரதான இடமுண்டு.அவரது கவிதைகள் சிங்கள சமூகத்தில் மனச்சாட்சியுள்ளவர்களின் குரலாக ஒலிக்கின்றன. 
……………………………………………………………………………………………………………………………………………………….எரியும் உடல்களிலிருந்துசிகரெட் மூட்டிய தலைமுறை அல்லவா நாம்?சிகரெட் புகைத்தபடியேதெருவில் துவண்டு சரிந்து நடந்து செல்லும்இறந்த மனிதன் ஒருவன்உனது புத்தாண்டுக் கனவுகளில் வருகிறானா?அவனுக்கு வீடு  இருந்ததுஆனால் படுக்கக் கட்டில் இல்லைஊர் இருந்ததுஆனால் நடந்து திரியத் தெருக்கள் இல்லைநாடு இருந்ததுஆனால் புன்னகைக்கும் உரிமை இல்லை
இன்றுஎங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை.பாற்சோற்றை உன் வாய்க்குள்நிறைக்கிறபோதுஉனக்குக் குருதி மணக்கவில்லையா?என்னே சுவை அது!

என்றெழுதிய மஞ்சுள வெடிவர்த்தனவும் அரசின் அச்சுறுத்தல்களையடுத்து, நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் அரசியற் புகலிடம் பெற்று வாழ்ந்துவருகிறார்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ‘புனிதத்தன்மை’யைக் குலைத்துவரும் மேற்குறித்தோரை இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும் ‘தேசத்துரோகிகள்’என்றே விளித்துவருகின்றனர்.  லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிராக சண்டே லீடர் தொடுத்திருந்த வழக்கின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளையும் ‘துரோகிகள்’ என்றே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.  பாலஸ்தீனப் போராட்டத்தின் நியாயத்தன்மை சார்ந்து குரலெழுப்பியமைக்காக பேராசிரியர் எட்வர்ட் செய்த்திற்கு வழங்கப்பட்ட ‘பயங்கரவாதிகளின் வழக்கறிஞர்’என்ற பட்டமானது லசந்த விக்கிரமதுங்கவிற்கு இனவாதிகளால் வழங்கப்பட்டிருந்தது இங்கு நினைவுகூரற்பாலது. சன்டே லீடரின் முன்னைநாள் ஆசிரியரான பிரெட்ரிக்கா ஜான்ஸ், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க ஆகியோரும்கூட அரசினாலும் அதன் விசுவாசிகளாலும் தேசத்துரோகி பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டவர்களே!அதேசமயம், தாங்கள் தேசத்திற்கு விசுவாசமானவர்கள் என்று பொலிப் பெருமிதம் கொள்வோர், சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொள்வோர் குறித்தும் கவனத்திற் கொள்ளவேண்டியிருக்கிறது. இலங்கை எத்தகைய சகிப்புத்தன்மையற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதைச் சுட்டுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக, பொதுமக்கள் தொடர்பு அமைச்சரான மேர்வின் டி சில்வாவின் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டலாம்.“ஜெனீவாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட நான்கு பேரும் இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.  வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு எதிராகச் செயற்பட்ட மேற்கண்டவர்களின்  கை, கால்களைப்  பகிரங்கமாக உடைப்பேன். நான் கொடுத்த அடியினால்தான்  ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த  2009-ம் ஆண்டில் இலங்கையைவிட்டு ஓடிப்போனார்.” உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும் ஜனநாயகத்திற்கான  ஊடகவியலாளர் அமைப்பின் செயற்பாட்டாளருமான போத்தல ஜயந்த நுகெகொடையில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் தெருவோரம் வீசியெறியப்பட்டது போல, ஜெனிவா மனிதவுரிமை மாநாட்டில் கலந்துகொண்டவர்களையும் தன்னால் செய்யவியலும் என்பதே, மேற்குறித்த பேச்சின் சாராம்சமாகும். 
மேலும், “சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன்.”என்று மேர்வின் டி சில்வா வெளிப்படையாகத் தெரிவித்தும்கூட அரசானது அவருக்கெதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்வரவில்லை. அத்துடன் ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியிலிருக்கும்வரையில் நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை’ என்று அவர் சொல்லியிருப்பதிலிருந்தே அவரது இறுமாப்பின் ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்பதை அறியமுடியும்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்குமொருவர் ‘நான் ஒரு கொலையைச் செய்தேன்’என்று பகிரங்கமாக அறிவித்தும் வாளாதிருக்குமளவிற்கு அங்கு நியாயமானது வங்குரோத்தில் இருக்கிறது. ஆக, இலங்கையில் குற்றவாளிகள் அல்லர்; குற்றவாளிகளால் பாதிக்கப்படுவோரே அஞ்சி வாழவேண்டி அல்லது தாய்நாட்டை விட்டுத் தப்பியோட வேண்டிய நிலை உள்ளது மேலும் தெளிவாகிறது.
இலங்கையின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கடும் விமர்சனத்தைக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர்  நவநீதம் பிள்ளை அவர்கள்,  அமைச்சர் மேர்வின் டி சில்வாவின் அச்சுறுத்தலைச் செவியுற்றதும்,  “இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது” என்று வெளிப்படையாக எச்சரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள்படுகொலைகள்:உண்மையைக் கொல்வதற்கு எளிய வழி ஊடகவியலாளர்களைக் கொல்வதே என்பது, அராஜகத்தை ஆட்சிமுறையாகக் கொண்ட அரசுகளால் கைக்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையாகும்.  “சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும்.”என்று, லசந்த விக்கிரமதுங்க தனது இறுதிக் கடிதத்தில் எழுதினார். அங்ஙனம் ஒப்பனையற்ற உண்மையை எழுதுவதற்கு, இலங்கை போன்றதொரு நாட்டில் வழங்கப்படும் சன்மானம் எதுவென்பதை என்பதைக் கீழ்க்காணும் படுகொலைகள் அறிவுறுத்தி நிற்கின்றன.
1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி- சுயாதீன செய்திச் சேவை நிறுவனமாகிய ‘இன்ரர் பிறஸ் சேர்விஸ்’இன் கொழும்புக்கான செய்தியாளன், ஒலிபரப்பாளன், வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞன், எழுத்தாளன் ஊடகவியலாளன் ஆகிய பன்முக ஆளுமை படைத்த றிச்சர்ட் டீ சொய்சா அரச ஆதரவுக் குழுக்களால் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். மறுநாள் காலை கடற்கரையோரமொன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. தலையிலும் தொண்டையிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்திருந்தன. அவரது தாடை எலும்புகள் முறிக்கப்பட்டிருந்தன.
அக்டோபர் 19, 2000 அன்று- தமிழ் பிபிசி சேவை, வீரகேசரி, ராவய (சிங்கள மொழியிலான பத்திரிகை) ஆகியவற்றில் சுயாதீன செய்தியாளராகப் பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் இரவு நேரத்தில் தனது வீட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தவேளையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார். ‘இனந்தெரியாத’ என்று சொல்வது பழக்கத்தின்பொருட்டும் ஒரு வசதிக்காகவுமே. நிமலராஜனைக் கொன்றவர்கள் அரச ஆதரவுத் தமிழ்க்குழுவான ஈபிடிபியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின்போது தெரியவந்தது. தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் ஈபிடிபியினரது காடைத்தனம் மற்றும் தேர்தல் ஊழல்கள் குறித்து எழுதியமைக்காகவே அவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இருந்தபோதிலும் இலங்கையின் வழக்கமான நெறிமுறைகளுக்கிணங்க, அவர்களுக்கு தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை. நிமலராஜனின் தாயும் மருமகனும் கைக்குண்டு வீச்சிலும் தந்தை கத்தியால் வெட்டியும் காயப்படுத்தப்பட்டார்கள். அந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்ட அன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.  நிமலராஜனின் வீடு மூன்று இராணுவ பாதுகாப்பு நிலைகளுக்கு அருகாமையில் இருந்தது. எனினும், கொலையாளிகள் தமக்குரிய ‘சிறப்புப் பாதுகாப்பு’இனைப் பயன்படுத்தி தப்பித்துச் சென்றுவிட்டார்கள்.
இலங்கையின் பிரதான தமிழ் செய்தித்தாளாகிய ‘வீரகேசரி’, இலண்டனை மையமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி. வானொலி, சக்தி தொலைக்காட்சி ஆகியவற்றின் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமாகிய ஐயாத்துரை நடேசன் மே 31 2004அன்று பணிக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசோடு இணைந்தியங்கும் கருணாவின் பராமிலிட்டரிக் குழுவினரே இக்கொலையைச் செய்ததாக இன்றுவரை நம்பப்படுகிறது.
இனபேதங்களைத் தாண்டி நேசிக்கப்பட்டவரும் பிரபல விமர்சகரும் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளனுமாகிய தராக்கி என்றழைக்கப்பட்ட சிவராம், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி 2005ஆம் ஆண்டு, வெள்ளை வானில் வந்த அரச ஆதரவுக் கொலைக்குழுவினால் கடத்தப்பட்டார். சித்திரவதைகளின் தடயங்களோடு தலையில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரது உயிரற்ற உடல் இலங்கை பாராளுமன்றத்திற்கருகில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. கொலை மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறும்படியாக நண்பர்கள் சிவராமை எச்சரித்தபோது, ‘இங்கேயல்லாது நான் வேறு எங்கு சென்று இறப்பேன்?’என வினவியிருந்தார். அவரது குருதி அவரால் நேசிக்கப்பட்ட மண்ணிலேயே சிந்தியது.
உதயனின் சகோதரப் பத்திரிகையான சுடரொளியில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியன்று திருகோணமலையில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகளால் பலிகொள்ளப்பட்டார். ஆகஸ்ட் 20 2006இல் நமது ஈழநாடு நிறுவனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சின்னத்தம்பி சிவமகாராஜாவின் உயிர் பறித்தெடுக்கப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட கொலைகளெல்லாம் இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. உண்மையில் அங்கு எழுத்தின் நிமித்தம் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.
கந்தசாமி ஐயர் பாலநடராஜ் (எழுத்தாளர், ஆகஸ்ட் 16,2004), லங்கா ஜெயசுந்தர (ஊடக புகைப்படப்பிடிப்பாளர், டிசம்பர் 11,2004), கண்ணமுத்து அரசகுமார் (ஊடகப் பணியாளர், ஜூன் 29, 2005) ரேலங்கி செல்வராஜா (ஒலிபரப்பாளர், இவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது – ஆகஸ்ட் 12,2005), டி.செல்வரட்ணம் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 29,2005), யோககுமார் கிருஷ்ணப்பிள்ளை (ஊடகப் பணியாளர், செப்ரெம்பர் 30,2005), நற்பிட்டிமுனை பலீல் (எழுத்தாளர், டிசம்பர் 02,2005), கே.நவரட்ணம் (ஊடகப் பணியாளர், டிசம்பர் 22,2005) எஸ்.ரி.கணநாதன்(நிறுவனர், தமிழ் செய்தி நடுவம்- பெப்ரவரி 01, 2006), பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாஸ் (ஊடகப் பணியாளர், மே 03, 2006), ராஜரட்ணம் ரஞ்சித்குமார் (ஊடகப் பணியாளர், மே 03, 2006), சம்பத் லக்மல் டீ சில்வா (ஊடகவியலாளர், ஜூலை 02, 2006), மரியதாசன் மனோஜன்ராஜ் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 01, 2006), பத்மநாதன் விஸ்மானந்தன் (இசைக்கலைஞர்-பாடகர், ஆகஸ்ட் 02, 2006), சதாசிவம் பாஸ்கரன் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 15, 2006), எஸ்.ரவீந்திரன் (ஊடகப் பணியாளர், பெப்ரவரி 12, 2007), சுப்பிரமணியம் ராமச்சந்திரன் (ஊடகப் பணியாளர், பெப்ரவரி 15, 2007), சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்- கவிஞர், ஊடகவியலாளர், ஏப்ரல் 16, 2007), செல்வராசா றஜீவர்மன் (ஊடகவியலாளர், ஏப்ரல் 29, 2007), சகாதேவன் நிலக்ஷன் (ஊடகவியலாளர் ஆகஸ்ட் 01, 2007) அந்தோனிப்பிள்ளை ஷெரின் சித்தரஞ்சன் (ஊடகப் பணியாளர், நவம்பர் 05, 2007), வடிவேல் நிமலராஜா (ஊடகப் பணியாளர், நவம்பர் 17, 2007), இசைவிழி செம்பியன் அல்லது சுபாஜினி, சுரேஷ் லிம்பியோ, ரி.தர்மலிங்கம் ஆகிய ஊடகப் பணியாளர்கள் (நவம்பர் 27, 2007), பரநிருபசிங்கம் ரூபகுமார் (ஊடகவியலாளர், மே 28, 2008), றஷ்மி மொஹம்மட் (ஊடகவியலாளர், அக்டோபர் 06, 2008), புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (ஊடகவியலாளர், பெப்ரவரி 12, 2009), சசி மதன் (ஊடகப் பணியாளர், மார்ச் 06, 2009), மகேஸ்வரன் அந்தனிகுமார், ரூபன் சசிநாதன், டென்சே, அன்ரன் (வன்னியில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றி இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பணியாளர்கள்) ஆகியோர் 2004 இலிருந்து 2009 ஆகஸ்ட் வரையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறைசார் பணியாளர்களாவர்.


நடப்பு ஆட்சியின்கீழ் மட்டும் 34 ஊடகவியலாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்த ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. அவர்களுள் முப்பது பேர் தமிழர்கள், மூவர் சிங்களவர்கள், ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணைகள் நடத்தப்படவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்சொல்லப்பட்ட ‘கருத்துக் கொலை’களை நியாயப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் (தற்போது நீக்கப்பட்டுள்ளது) அரசாங்கம் பயன்படுத்திவந்தது. வருகிறது.“நீ சொல்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன். ஆனால், அவ்விதம் சொல்வதற்கு உனக்கு உள்ள உரிமையை என்னுயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்” என்ற வோல்ட்டயரின் வார்த்தைகள் இலங்கையைப் பொறுத்தளவில் தலைகீழாயிருக்கிறது. ஊடகவியலாளர்களின் உயிரைக் குடிப்பதன் வழியாக அதிகாரம் உயிர்த்திருக்கிறது.

ஊடகவியலாளர் கைது, தாக்குதல் மற்றும் காணாமலடிக்கப்படுதல்:உலகத்தின் கண்கள் தமது நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றன என்று தோன்றும் சமயங்களில், சட்டபூர்மாக ஊடகவியலாளர்களைக் கையாளுகிறோம் என்ற கோதாவில் அரசு இறங்குகிறது. ‘சட்டபூர்வம்’என்ற சொல்லானது அதன் முழுமையான அர்த்தத்தில் ஒருபோதும் இயங்குவதில்லை என்பது நாமறிந்ததே. நோர்த் ஈஸ்ரேன் என்ற மாத இதழின் ஆசிரியராகிய ஜெயப்பிரகாஷ் திஸநாயகத்திற்கு 2009 ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால், 20 ஆண்டுகால கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. திஸநாயகத்தின் இரண்டு கட்டுரைகள் இனங்களுக்கிடையில் பதட்டத்தைத் தூண்டுவனவாக அமைந்திருந்தன என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். இரண்டு கட்டுரைகளுக்காக இருபதாண்டு சிறைத்தண்டனை விதித்த ஒரே நாடாகவும் இலங்கை பெருமைபெற்றது. இந்த அட்டூழியத்திற்கு உடனடி எதிர்வினை ஆற்ற உள்ளுர் ஊடகவியலாளர்கள் அஞ்சும்படியான ஒரு சு+ழல் நிலவியது. ஆனால், சர்வதேசம் இலங்கையின் ஆளுகைக்குட்பட்டதாக இருக்கவில்லை. பீற்றர் மெக்கலர் விருதும் அமெரிக்காவினை மையமாகக் கொண்டியங்கும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான குழு வழங்கிய 2009இன் ஊடக சுதந்திரத்திற்கான விருதும்  வழங்கப்பட்டு திஸநாயகம் கௌரவிக்கப்பட்டார். அமெரிக்க சனாதிபதி ஒபாமா, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளடங்கலாக இந்த அநீதியைக் கண்டித்தனர். உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடக அமைப்புகள், மனிதவுரிமை அமைப்புகளின் தொடர் போராட்டங்கள், அழுத்தங்களைத் தொடர்ந்து சர்வதேச ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு மே 03, 2010 அன்று திஸநாயகத்திற்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
திஸநாயகம் கைதுசெய்யப்பட்ட அதே ஆண்டில், சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் சக்தி வேலுப்பிள்ளை (ஜனவரி 22, 2009), கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் சிறீதர்சிங் (மார்ச் 15, 2009), தேசிய கிறிஸ்தவப் பேரவையின் நிறைவேற்றுச் செயலாளர் சாந்த பெர்னாண்டோ (மார்ச் 27, 2009), லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பேர்னாட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதான ஆசிரியர் சந்தருவன் சேனதீர (ஜூன் 1ஆம் திகதி, 2ஆம் திகதி, 2009), அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன மற்றும் கிஹான் செனவிரத்ன (ஆகஸ்ட் 09, 2009), லங்கா பத்திரிகையைச் சேர்ந்த சாலிகா விமலசேன, தயா நெத்தசிங்க, ரவீந்திர புஸ்பகுமார (செப்டெம்பர் 2009), லங்கா இரித பத்திரிகையின் ஆசிரியர் சிறிமல்வத்த (அக்டோபர் 17, 2009) ஆகியோர் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களாவர்.
தம்மை எதிர்க்கும் எவரெனினும் அவர்களைத் தாக்குவதற்கும்  அதிகாரம் பின்னிற்பதில்லை. உதாரணமாக ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது. ஆயினும், டிசம்பர் 27, 2007ஆம் ஆண்டு அடாவடித்தனமாக ரூபவாஹினி அலுவலகத்தினுள் நுழைந்த அமைச்சர் மேர்வின் டி சில்வாவைத் தடுத்த ஊழியர்கள், தயாரிப்பாளர் மீது அமைச்சரின் அடியாட்களால் தனித்தனியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரச ஊடக வலையமைப்பு பிரதான அலுவலகம் மீதான தாக்குதல்(ஜனவரி 02 மற்றும் 06, 2009) சுவர்ணவாஹினி அலுவலக ஊழியர் சஞ்சீவ் ரத்னாயக்க மீதான தாக்குதல் (நவம்பர் 11,2009), ஐ.ரி.என். தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் மீதான தாக்குதல் (வென்னப்புவவில் ஐ.தே.க. கூட்டத்தில்) ஆகியவற்றை காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல்களாகக் குறிப்பிடலாம்.கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்திருத்தலானது காணாமற் போவதைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் நிம்மதி எனலாம். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் செய்தியாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் பெப்ரவரி 15, 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றில் வழிமறிக்கப்பட்டு, விசாரணைக்கென இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு என்ன நடந்ததென்ற விபரம் தெரியாத நிலையில் காணாமற் போனவர்கள் பட்டியலில் அவரது பெயரும் இருந்துவருகிறது. தனது மகனது மீள்திரும்புகைக்காக அவரது தாயார் ஆறாண்டு காலமாகக் காத்திருக்கிறார்.
அதேபோன்று, சிறுபான்மைத் தமிழரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த ஊடகவியலாளரும் அரசியல் கார்ட்டூனிஸ்டும் மனிதவுரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமாகிய பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010இல், தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாகக் காணாமற் போனார். அல்லது கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டு காலமாகியும் அவருக்கு என்ன நடந்ததென்று அரசு பொறுப்புக்கூற மறுக்கிறது. பிரகீத்தின் மனைவி சந்தியாவின் ஒவ்வொரு நாட்களும் தன் கணவரின் இருப்பைக் கண்டறியும் பணியிலேயே கழிந்துசெல்கின்றன. துணிச்சல் மிகுந்த அந்தப் பெண்மணியின் விடாப்பிடியான தொடர் முயற்சிகள் அவருக்கு ‘தேசத் துரோகி’என்ற பட்டத்தை ஈட்டித் தந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருத்திக பெர்னாண்டோ அண்மையில் சர்ச்சைக்குரிய விடயமொன்றை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதாவது, காணாமற் போனதாகச் சொல்லப்படும் பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும், அவரை பிரான்ஸில் வைத்து கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன தனக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பொய் கூறுகின்றார் என்று, மஞ்சுள வெடிவர்த்தன அதை மறுத்துரைத்துள்ளார். அருத்திக பெர்னாண்டோவை 2007 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்ததன் பின்னர் தான் எங்கேயும் சந்திக்கவில்லை என்றும் மஞ்சுள வெடிவர்த்தன பிபிசிக்கு செய்திச் சேவைக்குப் பதிலளித்தபோது தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலை எனும்போது, சிறுபான்மையினத்திலிருந்து  காணாமற் போன செய்தியாளர்களைக் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. சந்தியா சொல்கிறார்:
“நான் ஒரு சிங்களப் பெண்ணாக இருந்தும்கூட இவ்விதம் நடத்தப்படுகிறேனெனில், தமிழ் மட்டுமே பேசக்கூடிய அப்பாவிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது.”


(தொடரும்)

நன்றி: தீராநதி அக்டோபர் மாத இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2013 19:26

October 19, 2013

எழுத்தெனும் குற்றமும் கருத்துக் கொலையாளிகளும்...




[image error]

ஒளி புகாதபடி எல்லாச் சாளரங்களையும் அடைத்தாயிற்றுகதவிடுக்குகளிலும் கறுப்பு நாடாக்கள்நாட்பட்ட பிணங்களின் துர்க்கந்தத்தைசுழன்று மூடுகிறது சாம்பிராணிப் புகைஎஞ்சிய மனிதரின்கண்களிலிருந்து காட்சிகளும்உதடுகளிலிருந்து சாட்சிகளும்உருவப்பட்டுவிட்டன
இருளின் ஒளியில் எல்லாம் படு சுத்தம்!ஒரேயொருவன் மட்டும்ஓலங்கள் நிறைந்து வழியும் தோள்பையோடு தப்பித்துப் போயிருக்கிறான்
மார்ச் 09, 1933, ஜேர்மனி- ‘நேர் வழி’(The Straight Path) என்ற பத்திரிகை அலுவலகத்தினுள் ஹிட்லரின் நாஜிக் கும்பல் புயல்வேகத்தில் நுழைகிறது. பத்திரிகை ஆசிரியர் பிரிட்ஸ் கேர்லிச் இன் ‘கடைசி எழுத்தை’ அச்சியந்திரத்திலிருந்து பிடுங்கியெறிகிறது. கண்மண் தெரியாமல் அவரை அடித்துத் துவம்சம் செய்கிறது. பிறகு அங்கிருந்து அவரை இழுத்துச் செல்கிறது. அரசியற் கைதிகளுக்கான கடூழியத் தடுப்பு முகாமொன்றில் அவர் ஓராண்டுக்கும் மேலாக அடைத்துவைக்கப்படுகிறார்.   ஜூலை 30, 1934அன்று, நூற்றுக்கணக்கான அரசியற் கைதிகளுடன் அவரும் படுகொலை செய்யப்படுகிறார். அவர் கொல்லப்பட்டுவிட்ட செய்தியை பிரிட்ஸ் கேர்லிச்சின் மனைவி ஷோபிக்கு நாஜிக்கள் புதுமையான முறையில் அறிவிக்கிறார்கள். அதாவது, அந்தப் பத்திரிகை ஆசிரியரின் இரத்தம் தோய்ந்த மூக்குக் கண்ணாடி (சிறப்பாக இரும்பு விளிம்புகளையுடையது.) கொல்லப்பட்டவரின் மனைவிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.அவர் செய்த குற்றம், ஹிட்லரையும் அவரது அட்டூழியம் நிறைந்த நாஜி விசுவாசிகளையும் விமர்சித்து தனது பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்ததேயாகும்.
சற்றேறக்குறைய எழுபத்தாறு ஆண்டுகள் கழித்து, 2009 ஜனவரி 08ஆம் திகதி காலை 10:30. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கொழும்பின் புறநகர்ச் சாலையொன்றில் அந்த மனிதர் தனது வாகனத்தில் அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். கறுப்பு நிறத்தில் உடையணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் அவரை வழிமறித்து குண்டுகளைத் தீர்க்கிறார்கள். பிறகு நிதானமாக திரும்பிச் சென்று சாலையின் கூட்டத்துள் கலந்து மறைகிறார்கள். எவ்வளவு நேர்த்தியாக, பாதுகாப்பாக, எளிதாக அந்தக் கொலையை அவர்கள் செய்தார்கள்! பாதுகாப்பின் கயிறு இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டிருந்த கொழும்பு மாநகரின் இராணுவச் சாவடிகள் ஏதொன்றிலும் அந்தக் கொலைஞர்கள் வழிமறிக்கப்படவில்லை. ‘எழுதினால் கொல்லப்படுவாய்’என்ற எச்சரிக்கை வாசகத்தோடு மலர்வளையத்தையும் சில நாட்கள் முன்னதாக லசந்தவுக்கு வழங்கிச் சென்றவர்கள் சொன்னபடியே செய்து முடித்தார்கள். ‘சன்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபலமான ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான லசந்த விக்கிரமதுங்கவால் எழுதப்பட்டு, அவர் கொலையுண்ட பின் வெளியாகிய ஆசிரியர் தலையங்கமானது ஒரு மரணசாசனத்தின் வரிகளைக் கொண்டிருந்தது. “இறுதியாக நான் கொல்லப்படுவேனாகில், அரசே அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும்”. லசந்தவைப் போன்று இலங்கை அரசின் எண்ணவோட்டத்தை மிகத்துல்லியமாகக் கணித்திருந்த ஊடகவியலாளன் வேறெவரும் இருக்கமுடியாது. அந்த ஆசிரியர் தலையங்கமானது, ஹிட்லரின் அட்டூழியங்களுக்கெதிராகக் கருத்துக்கூறிய காரணத்திற்காக நாஜிப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு எட்டாண்டுகள் கடுஞ்சித்திரவதைக்காளாக்கப்பட்ட, மார்ட்டின் நேய்மொல்லரின் மிகப் பிரபலமான ‘முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்’ என்ற கவிதையோடு முடிந்திருந்தது.  கருத்தின் குரல்வளையை கரகரவென்று ஈவிரக்கமற்று அறுக்கும் கொலைப்பாரம்பரியத்தின் ஆயுள் நீண்டது. மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கழுத்தில் கத்தியாக விழுந்திருக்கிறது அதிகாரங்களுக்கு அஞ்சாத எழுத்தும் பேச்சும்.
ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையின் தோற்றுவாய்:இலங்கையின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயரின் கைகளிலிருந்து பெரும்பான்மை சுதேசிகளின் கைகளுக்கு மாற்றிக்கொடுக்கப்பட்ட 1948ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மையினர் திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு ஆளாகிவந்துள்ளனர். சிறுபான்மையினர் மட்டுமல்லாது ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த, எதிர்ப்புக் குரலெழுப்பிய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களும் அதிகாரத்தின் கைகளில் பலியுயிர்களாக்கப்பட்டே வந்துள்ளனர். ஆகவே, சுதந்திர இலங்கைக்கும் ஊடக ஒடுக்குமுறைக்கும் வயது ஒன்றெனலாம்.  சிங்களப் பேரினவாதமானது சிறுபான்மைத் தமிழர்களை 1958,1977,1983எனத் தொடர்ந்து இனக்கலவரங்களுடாக  அழித்தொழித்து வந்திருக்கிறது. அடக்குமுறைக்கு வலுச்சேர்ப்பதற்காக அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை அக்காலகட்டங்களில் ஆட்சியிலிருந்த அரசுகள் கொண்டுவந்தன. 1971 மற்றும் 1988-1989 காலகட்டங்களில் இடம்பெற்ற ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின்போது அந்த ஒடுக்குமுறைக்கு பெரும்பான்மை சிங்களவர்களும் தப்பவில்லை. ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியை நசுக்குவதற்கென்றே பிரேமதாச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒப்பரேசன் கம்பைன்ஸ்’என்ற இராணுவ உட்பிரிவின் மூலமாக பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான சடலங்கள் மிதந்தன. மன்னம்பெரி போன்ற பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டார்கள். சோசலிச புரட்சிகர சிந்தனைகளை முன்வைத்து அதிகாரத்திற்கெதிராகப் போராடக் கிளம்பிய ஜே.வி.பி.யானது இன்று பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்து குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளுள் ஒன்றாக வளர்ச்சியடைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.2009 மே மாதத்தில் இந்த நூற்றாண்டின் மனிதப் பேரவலம் என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது இந்திய–சீன உதவியுடன் மகிந்த ராஜபக்ஷ அரசினால் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. ஏறத்தாழ 1,50,000 தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமற்போயும் சிறைப்படுத்தப்பட்டும் இனக்கபளீகரம் செய்யப்பட்டனர். தமிழ்மக்களின் ஒரே அரணாக அதுகாறும் இருந்துவந்த விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வாளேந்திய சிங்கக்கொடி தகத்தகாயமாய் பறந்துகொண்டிருக்கிறது.
ஆக, ‘சுதந்திர’த்திற்குப் பிறகான இலங்கைத்தீவின் வரலாறானது ஒடுக்குமுறையின், படுகொலையின் வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவ்வகையில், ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாயினும் சரி மக்கள்விரோத சக்திகளாகவே செயற்பட்டுவந்திருக்கின்றன. சிறுபான்மை இனச்சிக்கலைப் பொறுத்தளவிலோ ஆட்சி மாற்றங்கள் அடிப்படை மாற்றங்களுக்கு இட்டுச்சென்றதேயில்லை. படுகொலைகள் மிக வெளிப்படையாகவே நடந்தேறிய போதிலும், ஒப்புக்கு எனினும் உலகின் கண்களில் தன்னையொரு ஜனநாயக நாடாக, புத்தனின் நெறிமுறைகளைப் பின்பற்றுமொரு நாடாகக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம்  நடப்பு அரசுக்கு இருக்கிறது. கொலைபடாது எஞ்சிய தமிழர்களை அச்சுறுத்தலின் மூலமும், பெரும்பான்மை சிங்களவர்களை ‘ஐக்கிய இலங்கை’ மற்றும் வெற்றிபெற்ற இனம் என்ற பெருமிதத்தின் மூலமும் கையாண்டுவரும் அரசைப் பெரிதும் உறுத்துவது, சில ஊடகங்களில் வெளியிடப்படும் உண்மைகளேயாகும். ‘போர் நடக்கும் பிரதேசங்களில் முதலில் கொல்லப்படுவது உண்மையே’என்பது இலங்கை விடயத்திலும் சரியாகவே பொருந்திவருகிறது.

“2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மகிந்த, தனது முதலாவது உரையில், ‘ஊடகங்கள் போருக்கு எதிராக என்ற பெயரில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தினை ஒருபோதும் வழங்காது’என்றார். அவரது குரல் தரும் செய்தி மிகத் தெளிவானது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரேயொரு உண்மை மட்டுமே உண்டு. அதாவது, தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அல்லது அதற்கு இணையான தரப்பிலிருந்து வரும் செய்தி மட்டுமே உண்மையானது என்பதே அது.”என்று இலங்கையின் தற்போதைய நிலையை விளக்கியுள்ளார் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஆரம்ப கர்த்தாவும் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரிய.

ஆக, ஆட்சியமைத்த காலத்திலிருந்து ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையானது அரசின் முதன்மைத்திட்டங்களில் ஒன்றாக அமைந்திருப்பது புலனாகிறது.
செய்திகளைக் கண்காணிக்கும் ‘பெரியண்ணன்’கள்:
 “சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும்.”என்று, லசந்த விக்கிரமதுங்க தனது இறுதிக் கடிதத்தில் எழுதினார். ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்கள் அரசைத் திருப்திப்படுத்தும் செய்திகளை மட்டுமே எழுத முடிந்தவர்களாக, சுயதணிக்கைக்குத் தம்மை உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.  இவர்கள் தவிர்த்து அரசோடு ஒத்தோடக்கூடிய கூட்டமொன்று உண்டு. அத்தகையோர்  இந்த ‘வணிக’த்தின் வழி தம்மைச் செழுமைப்படுத்துபவர்களாக நீடித்திருக்கிறார்கள். இலங்கை பொருளாதார சுபிட்சத்தில் கொழிக்கிறது என்றும், அங்கு சிறுபான்மை இனத்தவர்கள் சரிசமமாக நிறைந்து வழியும் உரிமைகளோடு நடத்தப்படுகிறார்கள் என்றும், முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முந்தைய காலங்களிலோ ஒரு கொலைதானும் அந்த மண்ணில் நிகழ்த்தப்படவில்லை என்றும் செய்திகளை அள்ளி வீசுபவர்கள் அத்தகையோரே!
இலட்சியவாதத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கவேண்டிய பத்திரிகைத் துறையானது குற்றவுணர்வின்றி சர்வாதிகாரத்திற்குத் துணைபோகும் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது.  இத்தகு கீழ்நிலையில், உயிராபத்தை உணர்ந்தும் உண்மைக்காகப் போராடக்கூடிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையானது விரல்விட்டு எண்ணிவிடத்தக்க அளவுக்குச் சொற்பமானது.
‘சிங்கள ராவய’பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணிபுரியும் லசந்த ருகுனுகே சொல்கிறார்:“சரியான தகவல்களை வெளியிடுவதென்பது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது”
லசந்த பலிகொள்ளப்பட்ட பிற்பாடு ‘சன்டே லீடர்’இன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந்த பிரெட்ரிகா ஜான்சும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோரின் நேரடி அச்சுறுத்தல்களாலும் அநாமதேயமான கொலைமிரட்டல்களாலும் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அண்மையில் அவர் அமெரிக்காவைச் சென்றடைந்து அங்கு தஞ்சம் கோரியிருப்பதாக, செய்திகளிலிருந்து அறியமுடிகிறது.  மகிந்த சாம்ராஜ்ஜியத்தின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். குறிப்பாக, இறுதிப்போரின்போது வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொல்லுமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உத்தரவிட்டதாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேர்காணலொன்றின்போது தன்னிடம் தெரிவித்ததாக தலைப்புச் செய்தியொன்றை வெளியிட்ட காரணத்திற்காக அரசின் கடுங்கோபத்தை இவர் சம்பாதித்துக்கொண்டார்.
புலம்பெயர்ந்த பிற்பாடு ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு’க்கு  வழங்கிய செவ்வியில் அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை விலைக்கு வாங்குகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பிரெட்ரிகா ஜான்ஸ் அவரது செவ்வியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.“90 வீதமான இலங்கை மக்கள் நான் இறந்துபோவதையோ கொல்லப்படுவதையோ விரும்புகிறார்கள் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய என்னிடம் கூறினார்.”
 “பதிப்பாசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாசிரியர்களாகிய எங்களைப் போன்றோர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரசன்னமாகியிருக்கும் ‘காலையுணவு கூட்டம்’என்று விளிக்கப்படும் ஒன்றுக்கு அழைக்கப்படுவது வழக்கமாயிருந்தது. அங்கு சனாதிபதியானவர் போதைப்பொருள் தாதா (Drug Lord) போல அமர்ந்திருந்து சொல்லும் வார்த்தைகள் மிகுந்த அபத்தமும் அநியாயமும் நிறைந்தவை. என்போன்ற ஓரிருவர் தவிர்த்து அங்கு சமூகமளிக்கும் ஊடகவியலாளர்களும் பதிப்பாளர்களும் பத்திரிகையாசிரியர்களும் சனாதிபதியை கேள்விகள் கேட்கத் துணிவற்றவர்களாக ஊமைகள் போல வாய்மூடியிருப்பதை அவதானித்திருக்கிறேன். கூட்டத்தின் முடிவில் அவர்கள் தமது ‘சன் சைன் ரிப்போர்ட்’களை எழுதுவதற்காகப் புறப்பட்டுப் போவார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செய்திகளின் மீதான இருட்டடிப்பு இலங்கையில் நிலவுகிறது”
ஆக, ஆட்சியாளர்களாக மட்டுமல்லாது, ஊடகங்களுக்கான செய்தித் தயாரிப்பாளர்களாகவும் மகிந்த சகோதரர்களே இருந்துவருகிறார்கள். பெரியண்ணன்களாகிய மகிந்த சகோதரர்களின் கண்காணிப்பிலிருந்து எந்தவொரு செய்தியும், நிகழ்வும் தப்பித்துவிட முடியாது. அவர்களுடைய பிரசன்னம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. போதாக்குறைக்கு வீதிகளில் சுவரொட்டிகளிலும், பிரம்மாண்டமான விளம்பரத் தட்டிகளிலும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கூவியழைத்தபடி நின்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இவர்களது விசுவாசிகள் தேசத்துரோகிகளையும் தேசப்பற்றாளர்களையும் வகைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துவருகிறார்கள்.
‘தேசத்துரோகி’களும் ‘தேசப்பற்றாளர்’களும்
மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களின் அடக்குமுறை ஆட்சி குறித்து எழுதுவதும் பேசுவதும் தண்டனைக்குரிய, உயிராபத்து மிக்க செயலென்பதை அனுபவபூர்வமாகக் கண்டபின்னர், அறிந்த உண்மைகளை எழுதுவதற்கு ஊடகவியலாளர்கள் பின்னிற்கிறார்கள். வெளிப்படுத்தக் களம் மறுக்கப்பட்ட உண்மைகள் துருவேறிய கத்தியென மனச்சாட்சியுள்ளவர்களின் இதயங்களில் கிடந்து உறுத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தென்பகுதியிலிருந்து நாட்டை விட்டு வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் அந்தப் பொறுப்பில் பெரும்பகுதியைக் கையேற்றிருக்கிறார்கள்.  அத்துடன், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜெனீவா பிரகடனத்திற்கமைய, இனப்படுகொலை அடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காகவும் இயங்கி வரும் ‘இனப்படுகொலைக்கெதிரான தமிழர் அமைப்பு’ம் பெருந் தொகையான ஆதாரங்களைச் சேகரித்துத் தொகுத்துள்ளார்கள்.
இறுதிப் போரின்போது இலங்கை இராணுவத்தரப்பால் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, ஈவிரக்கமற்ற படுகொலைகளை, மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை பெருமளவில் உலகறியச் செய்த- ‘சாட்சிகள் அற்ற போர்’இன் சாட்சியாயமைந்த, ‘சானல் 4’ வின் ‘இலங்கையின் கொலைக்களம்’, ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ ஆகிய காணொளிகளில் பயன்படுத்தப்பட்ட தகவல்கள், ஒளியிழை நாடாக்கள், நேர்காணல்கள், புகைப்படங்களைக் கொடுத்துதவியதில் மேற்குறித்தோரின் பங்கு (குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு) அபரிமிதமானது. இனம், மொழி கடந்து மனிதாபிமானத்தோடு இயங்கும் அவர்தம் பணி  நன்றியறிதலோடு போற்றுதற்குரியது.
சட்டத்தரணியும் இனவெறிக்கும் பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரும் இலங்கையில் அமைதிக்கான மகளிர் அமைப்பின் தலைவருமான  நிமல்கா பெர்னாண்டோ,  ஊடகவியலாளர்களுக்கான ஊடக ஒழுக்கக் கோவையின் உருவாக்கத்திற்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் உழைத்தவரும் இலங்கையில் ஜனநாயத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவருமாகிய சுனந்த தேசப்பிரிய, மனித உரிமைச் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியும் சிறுபான்மைத் தமிழர்களது உரிமைக்காகக் குரல்கொடுத்துவருபவருமாகிய சுனிலா அபேசேகர, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பிவரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன  ஆகியோர், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் மற்றும் இலங்கையின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உலகளாவிய அளவில் நடத்தப்படும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உண்மையை வெளியுலகு அறியச்செய்துவருகிறார்கள்.
இலங்கையின் இன்றைய நிலையை சுனிலா அபேசேகர அவர்களின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.  ‘அமைதியாக இருப்பவர்களே சிறந்த மக்கள் என்பது அவர்கள் (பெரும்பான்மையினத்தவர்) மனதில் ஊட்டப்பட்டிருக்கிறது. ஆகவே மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.” நேர்காணலொன்றில் அவர் மேலும் கூறுகிறார்:
“அங்கு சட்டத்தின் ஆட்சியோ, ஜனநாயகத்தின் வேறு கூறுகளான  நீதித்துறைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்ற எந்தவொரு அம்சமும்  நடைமுறையில் இல்லை என்பதைத்தான் கடந்த மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆக, இலங்கையில் இன்று ஜனநாயகம் இல்லை என்று ஒருவரால் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமான அதேவேளை,  நாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை என்றும் ஒருவரால் கூறிவிட முடியும்.”
மேலும், கவிஞர்-ஊடகவியலாளர்-ஊடகச் செயற்பாட்டாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுத்துக்களுக்கு, தமிழ் மக்கள் எவ்விதம் இனரீதியாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள் என்பதை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதில் பிரதான இடமுண்டு.அவரது கவிதைகள் சிங்கள சமூகத்தில் மனச்சாட்சியுள்ளவர்களின் குரலாக ஒலிக்கின்றன. 

தொடரும்....

நன்றி: தீராநதி (செப்டெம்பர் மாத இதழ்)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2013 17:32

May 11, 2013

தாழம்பூ






இடத்தை மாற்றிக்கொண்டால் துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான் போகமுடிகிறது. புதிய இடத்தில் சற்று தணிந்தாற்போலிருந்த ஞாபகங்கள் ஓரிரு நாட்களிலேயே உள்ளுக்குள் குமுழியிடத் தொடங்கிவிட்டன. வாழ்வதான பாவனையை மற்றவர்களின் கண்களுக்கு அளிக்க முயன்று களைத்துப்போனதொரு நாளில் வெளியில் சென்றுவரலாமென்று என்னை வற்புறுத்தி அழைத்துப்போனாள் அவள்.

தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கியதுமே இனம்புரியாத அந்தரவுணர்வினால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பிவிட என் மனம் அவாவியது. அவ்வூரின் குச்சொழுங்கைகள் கூட வழக்கமான வீதிகளை விட அகலமாக இருந்ததை அச்சோர்வினுக்கிடையிலும் கவனித்தேன்.  சில நூற்றாண்டுகளுக்கு முன் எவனோ ஒரு குறுநில மன்னனின் காதலி அங்கு வாழ்ந்ததாக மது சொன்னாள்.

குடிமனைகளுக்குச் சற்று தொலைவில் எந்தக் காலத்திலோ ஆறு ஓடிய தடம் வெள்ளைவெளேரென மணல்வெளியாய் நீண்டு கிடந்தது. வழியில் இருந்த கோவிலில் நித்திய பூசை நடப்பதன் சாயல்கள் இல்லை. கருங்கற் சுவர்களில் வெளவால்கள் முட்டிமோதித் திரிந்தன. கோபுரக்கூண்டுக்குள்ளிருந்த புறாக்கள் உக்கும் உக்கும் என்றன. ஆங்காங்கே நீளமும் அகலமுமான திண்ணைகளுடன்கூடிய, கூரை தாழ்ந்த வீடுகள் இடிந்து கிடந்தன. வயதானவர்களில் சிலர் கோடையின் வெம்மைக்கஞ்சி திண்ணைகளில் அமர்ந்திருந்தார்கள். இளைஞர்கள் அவ்வூரில் வாழ்வதற்கான அடையாளங்களே இல்லை. இறந்தகாலத்தின் கண்களால் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறிய ஊர், புழுங்கிக்கொண்டிருந்த மனதின் வெறுமையை இன்னுமின்னும் விசிறியது. அந்த அனுபவத்திற்குப் பிறகு வெளியில் செல்ல மது என்னை அழைத்தபோதெல்லாம் மறுத்துவந்தேன்.

தனித்து விடப்பட்ட பொழுதுகளில் ‘நான் ஒரு முட்டாள்’என்ற நினைவு அடியாழத்தில் இருந்து மேலெழுந்து வந்து வதைத்தது. கடந்த நாற்பத்தெட்டு நாட்களில் பல நூறு தடவைகள் அப்படி நினைத்தாயிற்று. அவனுடைய நினைவு வந்தபோதெல்லாம் கண்களில் நீர் தளம்பிற்று. நாட்பட்டானபிறகு அந்தக் கண்ணீரின் ஊற்று, துயரமாக இருக்கவில்லை; அவமானமாக இருந்தது. ‘இப்படிப் போய் ஏமாறுவாயா…?’என்று கண்ணாடியைப் பார்த்துக் கேட்டேன். ஒரு தடவை கண்ணாடியை கைகளால் குத்தவும் செய்தேன்.

மது வெளியே போயிருந்தாள். தனது தோழியொருத்தியின் வீட்டிற்குச் சென்று வரலாமென்று என்னை அவள் அழைத்தபோது மறுத்துவிட்டேன். தனித்திருப்பதற்கான விருப்பமும் தனிமை அளிக்கும் நிராதரவான மனநிலையும் எனக்குள் ஒருசேர இயங்கின. முன்பெனில் தனிமையென்பது அவனது ஞாபகங்களை மீட்டுவதாக இருந்தது. பைத்தியக்காரத்தனமான சுகம். அல்லது, காதலிக்கும் பெண்களாலும் ஆண்களாலும் சுகமென்று நம்பப்படுவது. முன்பே சொன்னதுபோல, அவனுக்கும் எனக்குமான உறவு அறுந்துபோய் நாற்பத்தெட்டு நாட்களாகிவிட்டன. தனது அழைப்புகள் துண்டிக்கப்படுமென்று தெரிந்தே தொலைபேசியில் கூப்பிட்டான். அதையொரு சடங்குபோல வெகு கிரமமாகவும் நேர்த்தியாகவும் முன்பே திட்டமிட்டிருந்ததுபோலவும் செய்தான். அவனுடைய குற்றவுணர்வுக்குப் போடும் தீனியே அதுவென அறிந்திருந்தேன். தொலைபேசி அழைப்புகளால் என்னுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவரமுடியாத நிலையில் களைத்துப்போனவனாக நேரில் வந்தான். துயரப்படுவதான பாவனையோடு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். ஏமாற்றத் துணிபவர்களுக்கு துயரப்படத் தெரியாதென்று சொல்லி அனுப்பிவிட்டேன். நூலிலிருந்து விடுபட்ட பட்டம்போல அவன் அன்று தன்னை உணர்ந்திருக்கலாம்.

நானோ உறங்கிக்கொண்டிருந்தபோதும் மனவலியோடு இருந்தேன் என்பதை கண்விழித்து எழுந்தபோதெல்லாம் உணர்ந்தேன். காலத்தை நகர்த்துவது ஒன்றே உடனே செய்யக்கூடியதாகத் தோன்றியது. வாகைப்பட்டியிலோ காலம் ஆமையென ஊர்ந்துகொண்டிருந்தது.

மதுவின் தாயார் உள்ளறையில் வெறுந்தரையில் சேலையை விரித்துப்போட்டு உறங்கிக்கொண்டிருந்தார். மதியத்தின் வெக்கை அவரை அசந்து தூங்கப் பண்ணியிருந்தது. வேம்புகளைச் சுற்றி கிளிகள்  கீச்சிட்டுக்கொண்டிருந்தன. மற்றபடி அமைதி. முன் திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியொரு ஊரில் அப்படியொரு ஆளற்ற வேனல் தெருவை முன்னொருகாலம் பார்த்துக்கொண்டிருந்ததான ஞாபகம் ஓடியது. சில நாட்களாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துண்டு துண்டான எண்ணங்கள் மனதுள் சுழன்றுகொண்டிருந்தன. அப்படி நான் சிந்திக்கிறேன் என்று அறிந்திருந்தது மேலும் அச்சத்தை அளித்தது.

நீரடியில் கிடக்கும் பொருட்களாய் எண்ணற்ற பிம்பங்கள் உள்ளுக்குள் அசைந்தன. சோம்பிக் கிடந்த தெருவில் இறங்கினேன். காற்றில் அனல் இருந்தது. வெயில் மேகங்களுக்குள் மறைந்தும் தோன்றியும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. கோடை மழையொன்று தரையிறங்குவதன் முன்னான சாயலைக் கொண்டிருந்தது தெரு. வழியில், தெற்கு நோக்கி உள்ளிறங்கிய கருங்கற்தளம் பாவிய சாலையைப் பார்த்தேன். இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தன. அதை நோக்கி  ஈர்க்கப்படுவதை உணர்ந்தபோது அந்தச் சாலையில்  நடந்துகொண்டிருந்தேன்.

ஒரே சாயலைக் கொண்ட நான்கைந்து சிறிய வீடுகளைத் தாண்டியதும் அந்த மதிற்சுவர் தொடங்கியது. வழக்கத்தைவிட உயரமான அந்த மதிலின் மேல் கூரிய முனையுடைய கம்பிகள் செருகப்பட்டிருந்தன. நடக்க நடக்க முடிவுறாமல் நீண்டுகொண்டிருந்த அந்தச் சுவர் பெரிய இரும்புக் கதவொன்றில் முடிந்து மறுபுறமாக நீண்டு சென்று எங்கோ கண்ணுக்கெட்டாத தொலைவில் முடிந்தது. கதவுக்குள் இரும்பினால் வனையப்பட்டிருந்தன யானைகள். அவற்றின் தும்பிக்கைகள் பல்திசைகளிலும் பரந்து இரும்புச் சதுரத்தை அடைத்துக்கொண்டிருந்தன. இரட்டைக் கதவுகள் பிணைக்கப்பட்டிருந்த தூண்கள் ஒவ்வொன்றும் மூன்றடிக்குக் குறையாத அகலம். இடதுபக்கத் தூணுக்கும் மதிற்சுவருக்குமிடையிலிருந்த வெடிப்பில் எந்தப் பறவையின் எச்சமோ செடியாகத் துளிர்விட்டிருந்தது. உயிர்ப்பின் மினுமினுப்போடு அசைந்துகொண்டிருந்த அந்தத் துளிருக்கும் மழைப்பாசி படிந்து காலத்திற்கு இரையாகிக்கொண்டிருந்த மதிலுக்கும் இடையில் முரணின் அழகு கூடியிருந்தது. இரட்டைக் கதவுகளை துருவேறிய பூட்டொன்று இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது. ஆனால், அது பூட்டப்பட்டிருக்கவில்லை. பேராவல் உந்த அதை விடுவித்தேன். மெல்லிய ஓசையெழ ஓராள் நுழையும்படியாக இரும்புக்கதவு திறந்துகொண்டது. அந்தச் சிறிய இடைவெளிக்குள் என்னை நுழைத்தபோது திரும்பிப் போய்விடும்படியாக மனக்குறளி எச்சரித்தது. நானோ மரணம் வந்து அழைத்தாலும் அதன் விரல்களைப் பிடித்துக்கொண்டு போய்விட ஆயத்தமாயிருந்தேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன். என் கசப்பே என்னைச் செலுத்தியது.

உள்நுழைந்ததும் திகைத்துப் போய் நின்றுவிட்டேன். பெருமரங்கள் நிறைந்த காட்டினை ஒத்திருந்தது அந்த இடம். ஏதோவொரு பறவை விட்டுவிட்டு வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தது. பிராணிகளின் மெல்லிய அரவங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. முன்பொருகாலம் இருபுறமும் மரங்களடர்ந்த பாதையொன்று நடுவில் இருந்திருக்கவேண்டும். பாதை சிறுத்து ஒற்றையடிப்பாதையாகி அதுவும் மெலிந்து புற்களால் மூடுண்டிருந்தது. அதன் முடிவில் காலம் விட்டுச் சென்ற ஞாபகமாய் அந்த அரண்மனை உயர்ந்து நின்றது. உயிர்ப்பின் அசைவுகள் அற்ற கற்கூடமாயிருந்த அதை நோக்கி யாராலோ செலுத்தப்படுபவள் போல போனேன். அரண்மனையை நெருங்கியதும் ஒருகாலத்தில் தோட்டமாயிருந்ததென ஊகிக்கும்படியான முற்பகுதி புதர்மண்டிக் கிடந்ததைக் கவனிக்க முடிந்தது. மேலும் முன்னோக்கி நகர்ந்தபோது நீண்டு பருத்த பாம்பொன்று அடர்ந்த புதர்களுக்குள் வழிந்தோடி மறைந்தது. அப்படியொன்றும் மரணத்தை நான் விளைந்திருக்கவில்லை என்பதை அந்தக் கணம் உணர்ந்தேன். அங்கு நிற்பதன் விபரீதம் உறைக்க, திரும்பிச் செல்லக் காலெடுத்தேன். அப்போது அந்தக் குரலைக் கேட்டேன். முதலில் மெல்லிய கமகமாகச் சுழன்று வந்தது. பிறகு வார்த்தைகள். அந்த மொழி புரியவில்லை. ஆனால்… அந்தக் குரல்.. உயிரைத் திருகித் திருகிப் பிடுங்குகிற குரல். விம்மி விம்மி அழத் தூண்டுகிற தாபம் பொருந்திய குரல். குரல் வந்த திசையில் திரும்பியபோது, செடிகொடிகளுக்கு நடுவில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.

முதலில், அந்தப் பெண்ணின் இடுப்பைத் தாண்டி நீண்டு அடர்ந்திருந்த கூந்தலில் இருந்த தாழம்பூக் காட்டைப் பார்த்தேன். அவ்வளவு மலர்களை அவள் அள்ளிச் சூடியிருந்தாள். என்னை நோக்கித் திரும்பியவளின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். அப்படியொரு பெண்ணை என் வாழ்நாளில் சந்தித்திருக்கச் சாத்தியமேயில்லை. ஆனால், அவள் யாரையோ எனக்கு ஞாபகப்படுத்தினாள். மாநிறமாயிருந்தாள். ஒரு துளிச் சதை உபரி இல்லா தேகத்தில் சிலைகளில் மட்டும் பார்க்கக்கூடிய நேர்த்தி. எத்தனை முழச்சேலையோ அவளைச் சுற்றிச் சுற்றிப் படர்ந்திருந்தது. மார்க்கச்சை மேலுடலை இறுக்கிப்பிடித்திருந்தது. கண்கள் தெளிந்த வானத்தின் நிறம்… கருவிழிகளிலோ துயரம் படிந்திருந்தது. பார்க்கப் பார்க்கச் சலிக்காத பெண்ணாயிருந்தாள் அவள். அவள் கன்னங்களில் கண்ணீர்த்துளிகள்…பாறையிலிருந்து நதி சரிந்தோடி வருவதைப் போலிருந்தது. நான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன் என்று அந்நேரம் தோன்றியது. கண்களைத் துடைத்துக்கொண்டு என்னைப் பார்த்தாள்.

“ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?”

வழக்கமான பேச்சுவழக்கு எனக்கு மறந்துபோய்விட்டது. இன்றைக்கு எல்லாமே அதிசயமாக இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

தாழம்பூவும் உழுந்தும் கலந்த மணம் அவளிலிருந்து கமழ்ந்துகொண்டிருந்தது. அந்தக் கணம் எனக்குள் ஒரு வினோதமான ஆசை கிளர்ந்தது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட விரும்பினேன். ஏதோவொரு ஜென்மத்தில் தீராத காதல் என்னை அங்கு அழைத்து வந்ததாக நான் நம்பத்தொடங்கினேன். ஆனால்… நான் ஒரு பெண்…

“உன்னைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்”என்றாள் அவள்.

நல்லவேளையாக அவள் தமிழில் பேசினாள். ஆனால்… வேறொரு மொழியில் பாடிக்கொண்டிருந்தாளே…
ஆக, அவளுக்கு என் மனதில் ஓடும் எண்ணங்களைப் படிக்க முடிகிறது. இன்றைய நாளை அதிசயத்திடம் ஒப்படைத்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். சாதாரண வாழ்வின் ஏமாற்றத்திலிருந்து தப்பிக்க ஒரு கொலையை அல்லது தற்கொலையைச் செய்யும் நிலையில் இருந்த எனக்கு, இந்த அசாதாரணப் பெண் உதவக்கூடும்.

“நீ எப்படி உள்ளே வந்தாய்?”

 “கதவு திறந்திருந்தது…”

அவள் சிரித்தாள். அவள் சிரித்தபோது செடிகொடிகள் மாயம்போல அசைந்தன. ஆனால், அந்தச் சிரிப்பின் பொருளை என்னால் உணரமுடிந்தது. ‘திறந்திருக்கும் வீடுகளினுள்ளெல்லாம் நுழைந்துவிடுவாயா?’என்பதன்றி அந்தச் சிரிப்புக்கு வேறென்ன பொருளிருக்க முடியும்?

“இது உன்னுடைய இருப்பிடமா? எவ்வளவு பெரிது!”என்றேன்.

“ஆம்…. இந்த அரண்மனையை நீ பார்க்க விரும்புகிறாயா?”என்று கேட்டாள் சிரித்தபடி. அவள் சிரிக்கும்போதெல்லாம் தாழம்பூ வாசனை எழுந்தடங்கியது. என் கண்களிலிருந்த வியப்பு அந்தக் கேள்விக்கு அவளைத் தூண்டியிருக்கவேண்டும்.

அந்தக் கணம் அவள் எங்கே அழைத்தாலும் போகத் தயாராக இருந்தேன். எனக்கு அவளது அருகாமையில் இருந்தாலே போதுமென்றிருந்தது. பதிலேதும் சொல்லாமல் அவளைப் பின்தொடர்ந்தேன். புதர்களுக்குள் சரசரவென்று ஊரும் சத்தம் கேட்டது. அங்கு பாம்புகளாலும் விஷஜந்துகளாலுமான ஓருலகம் இயங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் என்னுடைய பைத்தியக்காரத்தனத்தைக் குறித்து அஞ்சினேன். விசித்திரங்களையும் மாயங்களையும் உள்ளடக்கிய நெடிய மதிற்சுவர்… அதனிலும் மாயவசீகரத்தோடு தோன்றுகிற இந்தப் பெண்… நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என் முட்டாள்த்தனத்தை மேலுமொரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறேனா…?

தரையிலிருந்து சில அடிகள் உயரத்திலிருந்தது அந்த அரண்மனையின் நுழைவாயில். படிகளில் ஏறி அகல் விளக்கினைத் தாங்கிய பதுமைகள் செதுக்கப்பட்ட கனத்த கதவுகளினூடே என்னை அழைத்துச் சென்றாள். அங்கு மனிதர்கள் வசிப்பதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே செப்புப் பதுமைகள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நின்றிருந்தன. அவற்றில் காலம் பச்சைக் களிம்பை ஏற்றியிருந்தது. உத்தரத்திலும் சுவர்மூலைகளிலும் ஒட்டடை படிந்து போயிருந்தது. காலடி பட்டு தூசி கலைந்த இடங்களில், தரை செஞ்சாந்தால் மெழுகப்பட்டு வழுவழுவென்றிருந்ததைக் காணமுடிந்தது. கன்னத்தை தரையில் அழுத்தி வைத்துக்கொண்டு அங்கேயே படுத்துவிடத் தூண்டியது குளிர்ச்சி. வெளியில் அனலெறிந்துகொண்டிருக்கையில் இந்த இடம் மட்டும் நதியின் மேலிருப்பது போல குளிர்ந்தது. அந்த அரண்மனையின் மனிதர்களுக்கு வேட்டையின்பாலிருந்த காதலை வெளிப்படுத்தின சுவர்களில் அச்சுறுத்தியபடி தொங்கிய மிருகங்களின் தலைகள்.

“எத்தகைய வாழ்வு!!!”வியந்தபடி நடந்தேன்.

நடக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அந்தப் பெண்ணின் நிழல் தரையில் விழவேயில்லை. என்னுருவம் மட்டும் தலைகீழாக நடந்துகொண்டிருந்தது. முதல்முறையாக அவளை அஞ்சினேன். ஒரேசமயத்தில் என்னை ஈர்க்கவும் அச்சுறுத்தவும் செய்பவளின் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். கேட்கலாமென்றால், வழியிலிருந்த ஊஞ்சலில் தாவியேறிவிட்டிருந்தாள். தரையை உந்திப் பறந்தாள். நிமிர்ந்து பார்த்தபோது வெறும் ஊஞ்சல் அந்தரத்தில் நின்றது. அவளைக் காணவில்லை. பதறிப் போனேன். அங்கிருந்து வெளியேறினால் போதுமென்று தோன்ற, சுற்றுமுற்றும் பார்த்தேன். கதவு எங்கேயுமில்லை. அந்தக் கூடம் சுற்றவர சுவர்களால் மூடப்பட்டிருந்தது. மெதுவாக மிக மெதுவாக சுவர்கள் என்னை நெருங்கி வருவதை உணர்ந்து அலறினேன். சதைகள் நசுங்கி எலும்புகள் நொறுங்கி குருதி வெளியேறி மூச்சுத்திணறி இறந்துபோகவா இங்கு வந்தேன்… பிரார்த்தனையைப் பிதற்றத் தொடங்கியபோது அவள் மீண்டும் அங்கு தோன்றினாள்.

“நான் போக வேண்டும்”ஏறத்தாழ மன்றாடினேன்.

அவளோ சிரித்தாள். எனது இறைஞ்சுதல் அவளது செவிகளை அடையவேயில்லை. அந்த அரண்மனையின் அறைகள் சமதளத்தில் இருக்கவில்லை. எனது கைகளைப் பற்றி சற்றே உயரத்திலிருந்த கூடத்திற்கு அழைத்துப்போனாள். அந்தத் தொடுகையில் எனது பயம் அழிந்தது. அவளுடைய கைகள் மார்கழி விடிகாலையில் தண்ணீரைத் தொடுவதைப் போல குளிர்ந்திருந்தன. அவள் என்னை அழைத்துச் சென்ற திசையில் கதவு இருந்தது.

“உன் பெயர் என்ன…?”

“தாழம்பூ”

அந்தப் பெயரைக் கேட்டு வியப்படையவில்லை. ஏற்கெனவே அறிந்து, காலநீட்சியில் மறந்திருந்த பெயரை ஞாபகப்படுத்திக்கொள்வதுபோலவே தோன்றிற்று.

அவள் என்னைக் கூட்டிச் சென்ற கூடத்தின் சுவரில் மூன்று ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. முதலாவது ஓவியத்திலிருந்தவர் பெரிய மீசையும் உறுத்துப் பார்க்கும் விழிகளும் அரசர்களுக்கேயுரிய உடையலங்காரத்தோடும் இருந்தார். இடுப்பிலிருந்து தொங்கிய வாள் பாதம் வரை நீண்டிருந்தது. அவர் நின்றிருந்த தோரணையில் அச்சமின்மையும் அதிகாரமும் வெளிப்பட்டது. இரண்டாமவருக்கு பெண்மையின் சாயல் மிளிரும் முகம். மெல்லிய மீசை. உதடுகளும் மெல்லியவையே. அரச வஸ்திராபரணங்களைக் கழற்றிவிட்டால் அவர் அன்றாடம் தெருவில் காணும் மனிதர்களில் ஒருவராகிவிடுவார். ஆனாலும், அவரது விழிகளில் இறுமாப்பு குடிகொண்டிருந்தது. மூன்றாவது ஓவியத்தில் இருந்த இளைஞனின் விழிகளில் எவரையும் ஈர்க்கக்கூடிய சாந்தமும் தெளிவும் துலங்கின. அவன் தாத்தாவின் கம்பீரத்தையும் கூடுதல் வசீகரத்தையும் கொண்டிருந்தான். அவன் கண்கள் என்னைப் பார்த்தன. இமைத்து ஒரு கணம் புன்னகைத்தாற் போல தோன்றியது.

“அழகாயிருக்கிறார்”என்றேன்.

தாழம்பூ விருட்டென்று என்னை நோக்கித் திரும்பினாள். இருண்டிருந்த அந்தக் கூடத்தில் அவளுடைய கண்கள் நெருப்புத் தணலென ஒளிர்ந்தன. கோபமிகுதியால் அவை பச்சையாக மாறியிருந்தன. அக்கணம் நானொரு பாம்பின் அருகில் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். என் உடல் நடுங்கத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கிருந்து ஓடிவிடுவதே புத்திசாலித்தனம் என்று என் உள்ளுணர்வுக்குத் தோன்றியது. என் முகத்தைப் பார்த்ததும் அவள் கண்களிலிருந்த கனல் மறைந்தது. என் அச்சத்தைப் போக்கடித்து நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் மீண்டும் என் கைகளைப் பற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றாள். அந்த விரல்களில் மார்கழியின் குளிர்ச்சி அகன்றிருந்ததை உணர்ந்தேன். அரண்மனையெங்கும் புறாக்களின் அமுங்கிய குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

தாழிடப்பட்டிருந்த அறையொன்றின் கதவை அரையடிக்குக் குறையாத நீளமுடைய திறவுகோலால் திறந்தாள் தாழம்பூ. அதுவரை அவளிடம் இல்லாதிருந்த அந்தத் திறவுகோல் திடீரென எங்கிருந்து தோன்றியது என்ற கேள்வி எனக்குள் எழுந்து அடங்கிற்று. அகலமான பஞ்சணையுடன் கூடிய கட்டில் ஒன்று அந்த அறையினுள் கிடந்தது. விதிவிலக்காக அந்த அறை மட்டும் சிறுதூசியும் படியாமல் சுத்தமாக இருந்தது. படுக்கை விரிப்பிலிருந்து, அப்போதுதான் துவைக்கப்பட்டதான சுகந்தம் வீசிற்று. ஐந்தாறு பேர் சேர்ந்தாலும் நகர்த்த முடியாத கனமுடைய தேக்குமர எழுதுபலகையில் சுவடிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் சுவடியொன்று விரித்த நிலையில் கிடக்கக் கண்டேன். யாரோ ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது அவசர வேலையாக பாதியில் விட்டுச் சென்றதுபோலிருந்தது அந்தக் காட்சி. ஆவல் தாளாமல் அருகில் சென்று வாசித்தேன்.

“கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதல ரகலக் கல்லென் றவ்வே”


 “குறுந்தொகை”என்றாள் தாழம்பூ.

அவளை நிமிர்ந்து பார்த்தேன். நான் நினைத்துக்கொண்டிருந்த பெண்ணில்லை இவள் என்ற எண்ணம் உள்ளுக்குள் தோன்றி மறைந்தது.

 “நிறையப் படிப்பாயா…?”

ஆமெனத் தலையசைத்து கூச்சத்துடன் புன்னகைத்தாள். எதிர்பாராத காட்சிகளால் எனக்குள் தணிந்திருந்த காய்ச்சல் அந்தத் தலையசைப்பிலும் புன்னகையிலும் மீண்டும் அனலெறியத் தொடங்கிற்று. அவளை நெருங்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் முன்னிலும் அதிகமாய்க் கிளர்ந்தது. எனக்குள் புயலென அடித்துக்கொண்டிருக்கும் அந்த உணர்வின் பெயரறியாது அதில் சிக்குண்டு கிழிபடுபவளாக இருந்தேன்.

தாழம்பூ அந்தப் பஞ்சணையில் சென்று அமர்ந்தாள். அப்போது அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. விசித்திரங்களுக்கு முடிவேயில்லை என்று நினைத்துக்கொண்டேன். படுக்கை விரிப்புகளை தன் நீண்ட விரல்களால் நீவியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். அங்கிருந்த பாத்திரத்தில் தண்ணீர் நிறைந்திருக்கிறதா எனக் குலுக்கிப் பார்த்தாள். இருந்தது போலும். பிறகு அறையைப் பூட்டிவிட்டு என்னையும் தன்னையும் மறந்தவளாக அந்த அறையிலிருந்து வெளியேறி வேகவேகமாக நடந்துபோனாள். அவளுடைய மூச்சு பாம்பின் சீறலாக மாறியிருந்தது. அவளை நெருங்குவதற்கு நான் ஓடவேண்டியிருந்தது. எந்நேரமும் விபரீதத்திற்குக் காத்திருந்தாலும், ஏதோவொரு காரணத்தினால் அவள் எனக்குத் தீங்கிழைக்க மாட்டாள் என்று உள்ளுணர்வு நம்பியது. அந்த நம்பிக்கையில் தயங்கித் தயங்கி எனது கேள்விகளை உதிர்க்கவாரம்பித்தேன்.

“அந்த அறையில்தான் நீங்கள் உறங்குவீர்களா?”

“ஆம்…”

“நீ அவரைக் காதலித்தாயா?”

அவள் நடப்பதை நிறுத்தி என்னைப் பார்த்துச் சிரித்தாள். உலகத்தின் கசப்பையெல்லாம் உருத்திரட்டி வழிந்த புன்னகை!  ‘இவ்வளவும் பார்த்தபிற்பாடு இது என்ன கேள்வி’என்பதுபோல என்னை உறுத்து நோக்கினாள். பிறகு, அயர்ச்சியோடு ஆமென்பதாகத் தலையசைத்தாள்.

“அவருடைய குதிரையின் குழம்படி ஓசை கேட்டதுமே எனது இதயம் தரையில் விழுந்து துடிக்க ஆரம்பித்துவிடும்.”

“அவரும் உன்னை....?”

“ஆமாம். நேசிக்காமலா என்னை இப்படியொரு அரண்மனையில் கொண்டுவந்து சேர்த்தார்?”

இதைச் சொல்லிவிட்டு உரத்துச் சிரித்தாள். சிரிப்பொலியில் அதிர்ந்த புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. ஏதேதோ நினைவுகள் அலைபுரளும் முகத்தோடு சில நிமிடம் கழிந்தது.

பிற்பாடு அவள் என்னை அழைத்துச் சென்ற இடம் ஒரு கலைக்கூடம். அதன் மூலையில் யாழொன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகில்போய் அதன் தந்திகளை வருடினாள். சாத்தப்பட்டிருந்த நிலையிலும் அதிலிருந்து எழுந்த சுநாதம் தாழம்பூவுக்கு அதிலிருந்த தேர்ச்சியை உணர்த்திற்று. விசாலமான அந்தக் கூடத்தை கலைஞர்களின் ஓவியங்களும் சிற்பங்களும் அலங்கரித்தன. அவள் அங்கிருந்த இருக்கையொன்றில் அமர்ந்தாள். அவளது தோரணை அந்த அரண்மனையின் மகாராணி தான்தான் என அறிவித்தது. அவளுடைய அழகே அந்தச் செருக்குத்தான் எனத் தோன்றியது. என் வயதொத்தவள்தான். ஆனால், முன்னர் பார்த்த, பழகிய எந்தவொரு மானுடத்தியின் சாயலோ நடத்தையோ அவளிடமிருக்கவில்லை.

இறந்தகாலத்துள் மூழ்கின அவள் விழிகள்.

“அந்நாட்களில் இந்த இடம் எப்படி இருந்ததென்கிறாய்… நீ வரும் வழியில் பார்த்தாயே சிறிய வீடுகள்… அவற்றிலும் இந்த அரண்மனையின் பின்புறத்திலுள்ள வீடுகளிலும் பணியாட்கள் தங்கியிருந்தார்கள். அவர் இங்கு வரும் நாட்களில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு இந்த அரண்மனை ஒளிபொருந்தியதாக மாறிவிடும். பாடல்கள் ஒலிக்கும். சதங்கைகள் கலீர்கலீரென்கும். நான் பாடவாரம்பித்தால்… இதோ இந்த இருக்கையில் சாய்ந்து நீள்விழிகளை மூடிக்கொண்டுவிடுவார். என் பாடலே அவரை இங்கு அழைத்துவந்தது. ஈற்றில்…”

சில நிமிடங்கள் இறந்தகாலத்துள் முழுமையாக அமிழ்ந்துபோனாள்.

“நீ அழகாகப் பேசுகிறாய். ஈற்றில் என்னவாயிற்று?”

“எதிர்காலம் குறித்த எங்களுடைய கனவுகளைக் கேட்டிருந்த இந்த அரண்மனையின் சுவர்களில் செவிகளைப் பதித்துக் கேள். என்னைக் காட்டிலும் அவை அழகாகப் பேசக்கூடும்.”

மதியம் சரிந்து மாலையாகிவிட்டிருந்தது. மதுமிதா என்னைத் தேடிக்கொண்டிருப்பாள் என்ற எண்ணம் எழுந்தது.

“என்னைத் தேடுவார்கள். நான் போகவேண்டும்”என்றேன் மெதுவாக.

“போகத்தான் வேண்டுமா…?”அது தனிமையின் குரலாக ஒலித்தது. என்னால் அந்தக் குரலை மிதித்துவிட்டுச் செல்லமுடியவில்லை.

“உனக்கு ஒரு இடத்தைக் காட்டுகிறேன். என் பின்னே வா…”

அவள் துள்ளியெழுந்தாள். விரித்த கருங்கூந்தல் பின்புறங்களில் படிந்தசைய நடந்தவளைப் பின்தொடர்ந்தேன். அவளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை என்னுள் மிகுந்து வந்தது. ஒரேயொரு தடவை அந்தத் தாழம்பூ வாசனையை நெருங்கி உள்ளிழுத்து எனக்குள் நிறைத்துக்கொள்ள வேண்டும். காலாகாலங்களுக்கும் நான் அதனுடன் வாழ்ந்துவிடுவேன். அந்த உதடுகளில் ஒரேயொரு முத்தம்… அதன் வெம்மை போதும் என் ஞாபகங்களைக் குளிர்த்த.

நீண்ட தூரம் அவளோடு நடந்தபிறகு அரண்மனையின் பின்பகுதியை வந்தடைந்திருப்பதை உணர்ந்தேன். கீழிறங்கப் படிகள் இருந்தன. அவை பின்புறத்தில் அமைந்திருந்த தோட்டத்திற்கு இட்டுச்சென்றன. இருள் சூழவாரம்பித்திருந்தது. ‘எங்கே அழைத்துச் செல்கிறாள்?’என்ற கேள்வியுடன் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். அச்சம் அகன்றுவிட்டிருந்தது. அதனிடத்தில் வியப்பும் திகைப்பும் காதல் போல ஓருணர்வும் நிறைந்திருந்தன. வானத்து நிலவு, வெள்ளியிலிருந்து தங்கமாக உருமாறியிருந்தது. அந்த மெல்லிய இருளும் காற்றும் நிலவொளியும் அவளது அருகாமையும் என்னை வேறொருத்தியாக மாற்றியிருந்தன. அந்நேரம் யாராவது பாடிக் கேட்கவேண்டும் போலிருந்தது. புற்களால் மூடப்பட்டிருந்த பாதையில் அநாயாசமாக அவள் நடந்துபோனாள்.

செடிகொடிகள் மீது நிலவினொளி படர்ந்து இலைகள் பளீரிட்டுக்கொண்டிருந்தன. இயற்கையின் வாசனையை காற்று அள்ளிவந்தது.

தாழம்பூ ஓரிடத்தை அடைந்ததும் நின்றாள். அதுவொரு கேணி. குறுக்கு விட்டம் முப்பதடிக்குக் குறையாது. உள்ளிறங்க நாற்புறமும் படிகள் இருந்தன. கரைகளில் நீர்ப்பாசி பயிரெனப் படர்ந்திருந்தது. எட்டிப் பார்த்தேன். ஆழமறியாதபடிக்கு இருளின் கருமையில் உறங்கிக்கொண்டிருந்தது கேணி. நீரைக் குறுக்கறுத்து நீந்திய சிறுமீன் கூட்டங்கள் அவ்விரவில் நில வெள்ளிகளென மினுங்கின. அடங்கியிருந்த அச்சம் மேலெழ ஆரம்பித்தது. கடைசியில் இந்த மாயப்பெண்ணின் கைகளால் நீர்நிலையில் தள்ளப்பட்டு அநாதரவாக இறந்துபோவதுதான் என் விதியோ என்று துக்கித்தேன்.

“அன்று இறுதியாக நாங்கள் சந்தித்துக்கொண்டோம்”கேணியின் கரைக் கட்டில் அமர்ந்தபடி சொன்னாள்.

“இறுதியாகவா…?”

“ஆம்… இந்த உலகத்தைப் பொறுத்தளவில் இறுதி. எனக்கு முடிவற்றது.”சிரித்தாள். அது சிரிப்புப் போலவே இல்லை.

“அரயத்தி அம்மன் சந்நிதியில் பெண் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தார். என்னைப் போல சாதாரண பெண்ணில்லை அவள்… குறுநில மன்னனொருவனின் மகள்… அன்று அவர் குதிரைகூட பட்டுக் குஞ்சம் கட்டியிருந்தது.”

கசப்பும் ஏமாற்றமும் நிறைந்து வழிந்தன வார்த்தைகளில். நிலவை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அந்தப் பெருமூச்சு என் நெஞ்சைச் சுட்டது.

இப்படி எத்தனை இரவுகளை நான் கழித்திருந்தேன்! தென்னோலைக் கீற்றுக்கள் அசைவதை விடிய விடியப் பார்த்துக்கொண்டிருந்து கழித்த அவ்விரவு… தூரத்தில் கடலலைகள் வாவாவென இரைந்து என்னை அழைத்தபடியிருக்க விடிகாலையில் கண்ணயர்ந்தது…

“என் விழிகளை எதிர்கொள்ளக் கூசினார். அடிக்கடி இமை தாழ்ந்த அவருடைய விழிகள் என்னிடம் மன்னிப்பை யாசித்தன. திரும்பிச் செல்வதற்கு அவசரப்பட்டார். அன்றிரவு மட்டும் அங்கு தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக் கேட்டுக்கொண்டேன்.”

“தங்கினாரா? நீ அவரை மன்னித்தாயா?”

“ஆம். அன்றிரவு பிறைநிலவு சுடர்ந்துகொண்டிருந்தது. அவர் தன் தந்தையைத் தன்னால் எதிர்க்க முடியாதென்றார். நான் அவருடைய காதலியாக நீடித்திருக்கலாம் என்றார். மன்னிப்புக் கேட்டு மன்றாடிய உதடுகளை என் உதடுகளால் மூடினேன். இனிமேல் தூலமாக அடையவே முடியாத அந்த உடலை நான் அடைந்தேன். எந்தக் கண்களைப் பார்க்கவியலாமல் பகலில் வெட்கம் பிடுங்கித் தின்றதோ அந்தக் கண்களை வெறியோடு முத்தமிட்டேன்.”

அந்த வார்த்தைகளை நான்தான் உச்சரித்துக்கொண்டிருந்தேன். அவனுடைய திருமணப் பத்திரிகையில் இருந்த பெண்ணின் பெயர் ஞாபகம் வந்தது.

இருள் முற்றாக மூடிவிட்டது. இருளில் தாழம்பூவின் கண்கள் மினுமினுத்துக்கொண்டிருந்தன. மது என்னைக் காணாமல் பதைத்துப்போயிருப்பாள் என்ற கவலை அடியாழத்திலிருந்து மிதந்து வந்தது.

“பிறகுகொருநாளும் நீ அவரைப் பார்க்கவேயில்லையா…?”

“பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கிறேன்..”என்று சொல்லியபடி கேணியின் இருளாழத்தை நோக்கிப் புன்னகைத்தாள். என்னுடல் சில்லிடுவதை நான் உணர்ந்தேன். இப்போது அங்கிருந்து தப்பித்துச் செல்லும்படி ஒரு குரல் காதுக்குள் ஒலிக்கக் கேட்டேன். அது ஒரு ஆணின் குரல்.

“ஓடிவிடு… ஓடிவிடு…”அந்தக் குரல் என் செவிகளில் நடுக்கத்தோடு கரகரத்தது.

“ஆழத்தை நோக்கிச் சரிந்துசெல்வது இனிய அனுபவம்”என்றாள். நான் அச்சத்தோடு அவள் கண்களை நோக்கினேன். அவளுடைய கண்களிலிருந்த துயரம் கரைந்திருந்தது. அவள் பின்னாலிருந்த செவ்வரளியைப் பார்த்தேன். அவளுடைய உடலினூடாக செந்நிற அரவத்தின் தலையென அம்மலர் அசைந்துகொண்டிருந்தது.

“எத்தனை தடவைதான் என்னை நீ கொல்வாய்?”என்றேன்.

அந்தக் கேள்வி என்னிலிருந்து புறப்பட்டதை உணர்ந்தபோது திடுக்கிட்டேன். என்ன அதிசயம்! அந்தக் கேள்வியை உதிர்த்தது என் உதடுகள்தாம்!

தாழம்பூ விசும்பி விசும்பி அழுதாள். அந்த இரவுக்கு மட்டும் இதயம் இருந்திருந்தால் அது கிழிந்து குருதி கொட்டியிருக்கும்.

நான் வெளிவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னை அவள் தடுத்து நிறுத்தவில்லை. தாளவியலாத வேதனையொன்று திடீரெனக் கிளம்பி என்னை வாட்டியது. அங்கே அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை. சில நிமிடங்கள் முன்னகர்வதும் பின்னோக்கிச் செல்வதுமாகக் கழிந்தன. ஈற்றில் நான் ஆற்றாமையின் கண்ணீரோடு அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினேன். இருளில் அவள் ஒரு சிலையென நின்றிருந்தாள்.

வெளிவாயிற் கதவைக் கண்டுபிடித்து வெளியேறியபோது மதுவைப் போலொரு பெண் வந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். மதுவேதான்! எனது உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது.

“உன்னைத் தேடியே வந்தேன்”என்றாள்.

“என்ன இது? இவளும் இன்று இயல்பில் இல்லை”என்று நினைத்தேன்.

பிறகு, அரண்மனையை நோக்கித் தயங்கியபடியே ‘தாழம்பூ’ என்றேன். கண்களிலிருந்து உதிர்ந்த நீர்த்துளிகள் அக்கருங்கற் தளத்தில் விழுந்து சிதறின.

“நான்தான் அவள்”என்றாள் மது.

நான் அவநம்பிக்கையோடு மதுவைப் பார்த்தேன். அவள் எனது கையைப் பற்றி என்னை இறுக்கிக்கொண்டபோது அவள் மீது தாழம்பூ வாசனையடித்தது.

நாங்கள் அவ்விடத்திலிருந்து வேகவேகமாக அகன்றோம். சற்று தொலைவில் போனதும் மெல்லத் திரும்பிப் பார்த்தேன். சிறிய படைவீடுகளும் அரண்மனை மதிலும் சுவடில்லாமல் மறைந்திருந்தன. பெருங்காடொன்று கருங்கற் சாலையை மூடியபடி சரசரவென நகர்ந்துவந்துகொண்டிருந்தது.


நன்றி: காலம் (கனடாவில் வெளிவரும் இலக்கிய சஞ்சிகை)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2013 09:09

May 10, 2013

காசு மரம்



கந்தகப் புகை
வானத்தைக் கருக்கிய கொடுங்காலமொன்றில்
உன்னைப் பெயர்த்துக்கொண்டு நீயும் போனாய் தொலைதேசம்
பனிப்பாரம் தலையிழுத்துக் கிளை முறிக்க
வசந்தத்திலும் அந்நியத்தில் பூக்கவில்லை.
உன் நிலத்துப் பறவைகள் அழைத்தபோது
திரும்பி வந்தாயல்லவா மறுபடியும்
முறிந்த கிளைகளை எக்களித்து நீட்டி!
உன்னில் புள்ளினங்கள் எண்ணற்றுப் பூத்திருந்த காலத்தில்
உணர்ந்தாயில்லை
நீயொரு காசு மரமென்பதை
உலுக்கி உலுக்கி
உலுக்கி உலுக்கி
பச்சையமே முன்னைக் காலத்தொரு கனவாக
வெண்ணிற எச்சங்களோடு தனித்துவிட்டாய்
பாவப்பட்ட மரமே!
உனது வேருயிருள்ளும் வெந்நீர் ஊற்றி
விறகெனச் சரிக்கும் காலமோ இது…
இனி நீ எப்படித்தான் எங்கேதான் போவாய்
வேருமின்றி ஊருமின்றி?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2013 09:48

இயலாமை



எஞ்சியிருக்கிற மேன்மைகளையெல்லாம்
திரட்டிக்கொண்டே
ஒவ்வொரு தடவையும் உன்னைச் சந்திக்க வருகிறேன்.
ஒவ்வாத கூட்டத்திலிருந்து எழுந்துசெல்லும்
மனச்சாட்சிபோல திரும்பிச் செல்கிறேன்

மன்னித்துவிடு
மறக்க இயலவில்லை!

நீ அதைச் சொன்னபோது
குரலொரு குறுங்கத்தியாயிருந்தது
விழிகளிரண்டிலும் ஒளிந்துகொண்டிருந்தது வனவிலங்கு
ரத பதாகை சாமரங்களுடன் உலாவரும் சீமாட்டி
அடிமைகளின் குடியிருப்பைக் கடந்துசெல்லும்
அலட்சியமிருந்ததுன் தோரணையில்.

என் படிப்பறையின் மூலையில்
விரட்ட விரட்டப் போகாமல்
 விழியிரண்டும் மின்னும் பாம்பாய்
சுருண்டிருக்கிறதுன்  கேள்வி

நட்பென்றால்
வாலிலிருந்து பற்கள் வரை
குழைந்துகொண்டே ஓடிவரும்
குட்டிநாய்தான் நான்.

ஆனால்,
நீ சந்தேகித்தது
என் ஆன்மாவை
என் உயிர்ப்பை
என் வாழ்வின் உப்பை
என் எழுத்தை.

மன்னித்துவிடு 
உன் கேள்வியை
மறக்க இயலவில்லை!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2013 08:11

தமிழ்நதி's Blog

தமிழ்நதி
தமிழ்நதி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்நதி's blog with rss.