பல்லுயிர் கனவியல்! Multispecies Oneirology!

பல்லுயிர் கனவியல்! Multispecies Oneirology!



கனவுகளில் மொழியின் வகிபாகம் குறித்து ஃப்ராய்ட் செலுத்திய கவனம் உளவியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.  பின்னாட்களில், லெக்கன், நனவிலிமனம் மொழியைப் போலவே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறதோ என்று சந்தேகம் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.  ‘கனவுகள், மூளையின் குடல்வால்’ என்று கருதிய நவீனத்துவ சூழலில், அவற்றை ஆழ்மனதின் சுவடுகளாகப் பாவிக்க முடியும் என்று நிரூபித்தது உளப்பகுப்பாய்வு!  அதன் பின், கனவுகள் ஆய்வாளர்கள் மத்தியில் மரியாதையான இடத்தை வகிக்க ஆரம்பித்தன.





நானும் எல்லோரையும் போல கனவுகளின் துரதிர்ஷ்டசாலி தான்.  எனது நிறைய கனவுகளில் ‘பேசினோம்’ என்று நினைவிருக்கும் ஆனால், என்ன பேசினோம் என்று சொல்ல வராது.  அதாவது, பேசிய விஷயம், ஒரு பனிப்படலம் போல நினைவிருக்கும்.  இன்னும் சரியாக சொல்லப்போனால், ‘செஷைர் பூனையின் சிரிப்பு’ போல.  பேச்சு மறந்து போன பின்பும், மரக்கிளையில் ‘விஷயம்’ மட்டும் இளித்துக் கொண்டிருக்கும்.


ஃப்ராய்டிலிருந்து பலரும், கனவுகளை நம்மால் துல்லியமாய் ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை என்பதாலேயே அந்த உரையாடல்கள் / பேச்சுகள் நினைவிலில்லை என்று நம்புகிறார்கள்.  அதனால், கூடுமானவரை அக்கனவை எழுத்திலோ பேச்சிலோ பதிவிடச் சொல்கிறார்கள்.  மொழி, அவர்களுக்கு, ஒரு பாதாளக்கரண்டியைப் போல.  ‘நினைவின்மையில்’ மூழ்கியக் கனவுகளை மொழி அள்ளிக் கொண்டுவரும் என்பது ஃப்ராய்டிய நம்பிக்கை.  


சமீபத்தில், விலங்குகள் காணும் கனவுகள் குறித்து நிறைய ஆய்வு செய்கிறார்கள்.  பகலில் நடந்ததை, விலங்குகள், இரவுகளில் ஞாபகங்களாக உருமாற்றுகின்றன; அதற்குக் கனவுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்ற திசையில் ஆய்வுகள் நகர்கின்றன.  


விலங்குகளின் கனவுகளில் அவை பேசக்கூடுமா?   கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  ஒலி எழுப்பலாம் ஆனால், பேசுவதற்கு வாய்ப்பில்லை.  அப்படியானால், விலங்குகளின் கனவுகள், செஷைர் பூனையின் சிரிப்புகளை மட்டுமே ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.  பூனையோ, சிரிப்பொலியோ தேவைப்படாமல் தனித்தியங்கும் இளிப்புகளையே ‘செஷைர் பூனையின் சிரிப்பு’ என்று சொல்கிறேன்.  விலங்குகளுக்கு அப்படி என்றால், மனிதர்களுக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும்?  


ஒரு வேளை, நமது கனவுகளிலும் கூட, பேச்சோ உரையாடலோ இல்லாமல் அதன் ‘சாயல்’ மட்டுமே இடம்பெற்றிருக்கக்கூடுமோ?  ஏனெனில், பெரும்பாலும் நாம், நமது நினைவுகளில் அல்லது ஞாபகங்களில் முழுப் பேச்சுகளையும் வைத்துக் கொண்டிருப்பதில்லை.  அதன், தொனி அல்லது பனிப்படலம் அல்லது ‘இளிப்பு’ மட்டுமே நமக்குப் போதுமானதாக இருக்கிறது.  


நினைவுகளின் எல்லையற்ற சேர்க்கை தான் கனவுகள் என்றால், மொழியின் பங்கு மீச்சிறியதோ என்று இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது.  மொழிக்கு முன்பிருந்தே நாம் கனவுகளைக் கண்டு வந்திருக்கிறோம் என்றால், மொழியின் வாசனையற்ற கனவுகள் சாத்தியம் தான், இல்லையா?


அப்படியானால், கனவுக்கும் மொழிக்குமான பந்தம் எத்தகையது?  காலையில் மறையத்தொடங்கும் கனவுகளுக்கு மொழியின் மூலம் நிரந்தர உருவம் கொடுக்கிறோம் என்று சொல்வது பொய்யா, ஃப்ராய்ட்?  உங்களையும் மொழி ஏமாற்றியதா?


மொழிக்கு முன்பிருந்தே நாம் கனவுகளைக் கொண்டிருக்கிறோம் என்றால், கனவுகளின் இயல்பான பயன்பாடு என்ன?  இன்றைக்கு அதனை, தேவையற்றது என்ற பொருளில் மூளையின் ‘குடல்வால்’ என்று கருதுகிறோமே, அது நியாயமில்லையோ?  


காலையில் கனவுகள் நினைவிருப்பதில்லை என்று சொல்வதிலுள்ள ‘நினைவிருக்க வேண்டும்’ என்ற விதியை, மொழி அல்லவா நமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது!  அதனால் தானே, ஃப்ராய்டும், மொழியின் ஜாலத்தில் மயங்கி, குற்றம்சாட்டிய மொழியையே கனவுகளின் மீட்பராகக் கருதத் தொடங்கினார்!  


உண்மையில், கனவுகளை, காலையில் அது நினைவிருக்கும் (அரையுங்குறையுமாக) தன்மையிலேயே ஏற்றுக் கொள்வதில் நமக்கு என்ன சிக்கல்? 


ஒரு வேளை, இரவில் துல்லியமாகத் தெரிந்த கனவை, காலையில் பனிப்படலம் போர்த்திக் காட்டுவது மொழியாகக் கூட இருக்குமோ?


இருக்கும் பட்சத்தில், கனவுகளின் இரவு நேரத் துல்லியத்தை மீட்டெடுப்பதற்கு, மொழியின் பிடியிலிருந்து விடுபடுவது எவ்வாறு?


மொழியின் அசாத்தியங்களை நெருங்கும் போது, கனவுகளின் உண்மையை நம்மால் தரிசிக்க முடியுமோ?  


அப்படி உண்மையை நெருங்குகிற அன்று (ஆம் என்றும் இல்லை என்றும் அர்த்தம் தரும் ‘அன்று’), கனவுகள் கடவுளின் செய்திகள் அல்லது முன்னுணர்த்தும் சங்கேதங்கள் அல்லது ஆழ்மன ரகசியக் குறியீடுகள் அல்லது தன்னிலையின் குளறுபடிகள் என்ற அத்தனை கற்பனைகளையும் கடந்து, கனவுகளின் இன்னொரு பரிமாணத்தை நம்மால் கண்டுகொள்ள முடியும்!  பிற உயிர்களுக்கும் நமக்குமான இன்னொரு மாபெரும் ஒற்றுமையாகக் கனவு காணுதல் இருக்க முடியும்.  அந்தக் ‘கனவு’ மொழி மீறிய / கடந்த / அன்றிய கனவாக இருக்க முடியும்.  


பல்லுயிர்களையும் இணைக்கிற சங்கதி உயிரியல் மட்டுமல்ல, நினைவுகளின் தொழில்நுட்பத்திலும் எல்லா உயிர்களும் ஒரே மாதிரியானவை என்று சொல்வதற்கு ‘மொழி மீறிய கனவு’ என்ற யோசனை நமக்கு உதவி செய்யலாம்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2021 22:30
No comments have been added yet.


T. Dharmaraj's Blog

T. Dharmaraj
T. Dharmaraj isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow T. Dharmaraj's blog with rss.