கணையாழியும் கி.கஸ்தூரிரங்கனும் நானும் சுஜாதாவும் (நிறைவு)

பதிப்பிக்கப்பட இருக்கும் என் அல்புனைவு நூல் இதுவும் அதுவும் உதுவும்-இல் இருந்து
————————————————————————
— —
தொண்ணூறுகளின் மத்தியில் கி.கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது.

ராம்ஜி என் நெருங்கிய குடும்ப நண்பர். நானும் அவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலமை அலுவலகத்தில் அதிகாரிகளாக இருந்தோம். பாரதி மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். (நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.).

ராம்ஜியும் நானும். கி.கவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். கணையாழி இதழின் அப்போதைய இலக்கியப் பங்களிப்பு, நிதி நிலைமை, பற்றிய Status Review meeting ஆன அந்தச் சந்திப்புகளில் சுஜாதாவும் இ.பாவும் தவறாமல் கலந்து கொள்வார்கள். அப்படியான ஃபுல் பெஞ்ச் சந்திப்பு நிகழும்போது ‘கணையாழி கவிதை முந்தைய தரத்தில் இல்லை’ என்ற சாகாவரம் பெற்ற வரியோடு ஒரு போஸ்ட் கார்ட் நிச்சயம் வந்திருக்கும். அதைக் காட்டி சுஜாதா என்னை குறுக்கு விசாரணை செய்வார். ‘ஏம்பா போன மாசம் ஒரு கவிதைகூட தேறலியாமே?’

கணையாழிக்கு முதல் கட்ட கவிதைத் தேர்வாளன் என்ற முறையில் நான் அடுத்த கட்டத் தேர்வாளர் ஞானக்கூத்தனைக் கைகாட்டி, சுஜாதாவின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அபூர்வமாக கி.க பாராட்டிய கவிதைகளையும் மறக்காமல் குறிப்பிடுவேன். இக்கட்டான சந்தர்ப்பம் ஏற்பட்டால் சிலாகிக்க எப்போதும் பசுமையாக நினைவில் ஒட்டிக்கொண்ட, கி.க எழுதிய கவிதையே துணை – ,
கடவுளையும் சர்க்காரையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது இன்னொரு சர்க்கார்’.

நான் சொல்வேன் ‘கடவுளையும் கவிதையையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது ஓராயிரம் கவிதை’.

கி.கவின் சர்க்கார் கவிதையை யார் எழுதியது என்று தெரிந்தோ தெரியாமலோ இன்னும் மேற்கோள் காட்டுகிறார்கள். நான் கலந்து கொண்ட ஒரு சாஃப்ட்வேர் ப்ராஜக்ட் ரிவ்யூ மீட்டிங்கில் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் செய்த இலக்கிய ரசிகரான (அப்போ நிச்சயம் கவிஞரும் தான்) பிராஜக்ட் மேனேஜர் கூட இதில் உண்டு. கி.கவுக்கும் சுஜாதாவுக்கும் சொல்ல விட்டுப்போன தகவல் இது.

கி.க சொல்லி நான் முடிக்காமல் போன காரியம் உண்டு. கணையாழித் தொகுப்புகளாக நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட என்னை தொகுப்பாசிரியனாக இருக்கச் சொன்னார். கூடவே ரெண்டு கள்ளியம்பெட்டி நிறைய பழைய கணையாழி இதழ்களையும் பொறுப்பாகக் கொடுத்து அனுப்பினார். ஒவ்வொரு கணையாழியாக எடுத்து நான் வரிவரியாகப் படித்து சிலாகிப்பதற்குள் பிரிட்டன் அழைத்து விட்டதால் கள்ளியம்பெட்டிகளை கி.கவின் கொட்டிவாக்கம் வீட்டில் திருப்பிக் கொடுத்து விட்டுப் பறந்து விட்டேன். வெ.சபாநாயகம் பொறுமையின் திலகமாக அப்புறம் செய்து முடித்த அருஞ்செயல் அது.

சுஜாதா நினைவுக் கூட்டத்தில் பின்னரங்கில் உட்கார்ந்திருந்த கி.க என்னிடம் சொன்னார் – ‘யுகமாயினி பத்திரிகையில் சுஜாதா படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதேன்’. நான் எழுதவில்லை என்றாலும் தேவகோட்டை மூர்த்தி சிரத்தையாக எழுதி வந்தார். யுகமாயினி தான் நின்று போய்விட்டது.

சுஜாதா நினைவுக்காக இலக்கியச் சிந்தனை நடத்திய கூட்டத்தில் பேசும்போது கி.க சொன்னார் –‘என்னை விட வயசிலே சின்னவன்(ர்). அவர் போனதுக்குப் பதில் நான் போயிருக்கலாம்.’.

பத்திரிகை ஆசிரியர்கள் கண்கலங்க வைப்பதில்லை. கி.க விதிவிலக்கு. அவர் வாழ்க்கையை என்னைப் போல் மற்ற நண்பர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பே இதமாக இருக்கிறது.

அன்னை அணிந்தாள் அனுமன் சுமந்திட்டான்
பின்னையும் யார்க்கோ கிட்டியதாம் – என்னாபோ
அஸ்கா இனிப்பாய் கணையாழி என்றதுமே
கஸ்தூரி ரங்கன் நினைப்பு


(நிறைவு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 08:04
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.