இரா. முருகன்'s Blog
September 30, 2025
எழுதப்பட்டு வரும் நாவல் றெக்கை – வலனாடு கோல்கீப்பர் ஜாஜா
றெக்கை நாவல் சொல்வனம் இணைய இதழில் அறிமுகமானவன் வலனாடு கால்பந்தாட்ட அணி கோல் கீப்பர் ஜாஜா யரூபா மதத்தவனாக மாதத்தில் பதினைந்து நாளும், மிச்ச நாட்கள் யூத மதத்தவனாகவும் இருக்கிறான்.
எல்லாம் வலனாடு அணி வெற்றி பெறத்தான்.
ஷேப் ஷிப்டர் shape shifter குடும்பம் ஏற்கனவே அறிமுகமாகி நாவலை வழிநடத்திப் போகிறார்கள்.
I like the person I have become
காலையிலிருந்து பல் இடுக்கில் சிக்கி நெருடிக் கொண்டிருக்கும் மாம்பழ நார் போல இந்த வாக்கியம் நினைவு வருகிறது.
It is very becoming என்கிறார் நண்பர் K H.
August 12, 2025
கைகால் முளைத்த அன்னப் பறவையை போல – என் புதிய நாவல் றெக்கை
‘றெக்கை;’ -அத்தியாயம் 2 சொல்வனம் இணைய இலக்கிய இதழில்
-v———————————————————-
Rekkai chapter 2
டாக்டரம்மா’
. ஊர்ப் பெரியவர்களில் ஒருத்தர் அழைக்கிறார்.
”ராட்சச வண்டிக்காரி’ – குரல்கள் காத்திரமாகச் சேர்ந்து ஒலித்தன.
டாக்டர் நிர்மலா நின்றாள்.
எல்லா வீட்டுக் கூரை மேலும் சுரைக்காய் காய்த்துத் தொங்கியதை பார்த்தபடி நிர்மலா ஊர்ப் பெரியவர்களிடம் சொன்னாள் – நான் உள்ளே போய் மரியாதை செலுத்திட்டு வந்துடறேன்.
அவளை வரவேற்கலாமா அல்லது திருப்பி அனுப்பிவிடலாமா என்று முடிவுக்கு வர முடியாமல் அவர்கள் தவித்தது தெரிந்தது. சாவு வீட்டில் வந்தவர்களை வரவேற்பார்களா என்ன?
திரும்ப ‘டாக்டரம்மா’ கூவல். வாசல் கடந்து உள்ளேயும் போகாமல், வெளியேயும் வராமல் நிற்க, அவள் பின்னால் இருந்து தேவதை தேவதை என்று மனம் கவிந்து குரலில் ஏறி வழிய அத்தனை பேரும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். குலவையும் உச்ச சப்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அருகே நிர்மலாவின் மகள் வெண் சிறகுகள் தோளிலிருந்து கணுக்கால் வரை படிந்திருக்க, கைகால் முளைத்த அன்னமாக நின்று கொண்டிருந்தாள். அவர்கள் ஆச்சரியப்பட்டது சரிதான். பறந்து வந்த உயரமான தேவதை போல் சங்கோஜத்தோடு அசைந்திருந்தாள் அவள்.
அத்தனை பெரிய ஆள்கூட்டம் நோக்கி அதிர்ந்து நிற்கத் தனிப்பட்டுப் போனாள் அந்தச் சிறுமி. அழத் தொடங்கினாள்.
அம்மா அம்மா.
”ஒண்ணும் இல்லே விசி.. உன்னை எல்லோருக்கும் பிடிச்சிருக்கு, வா-ன்னு வரவேற்கறாங்க. கையை ஆட்டி அதை ஏத்துண்டு வா’
July 26, 2025
நானும் கலாப்ரியாவும்
இன்று அகவை எழுபத்தைந்தில் அடியெடுத்து வைக்கும் என் அருமை நண்பன் பெருங்கவிஞர் -நாவல் ஆசிரியர் –கட்டுரையாளர் கலாப்ரியாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்..
கோவில்பட்டியில் இன்று கலாப்ரியா -75 விழா சீரும் சிறப்புமாக எடுக்கப்படுகிறது.
இன்று வெளியிடப்படும் விழா மலரில் என் கட்டுரை –
———————————————————————
. கலாப்ரியாவும் நானும்
எது கவிதை?
தொடக்கப் பள்ளிக் காலத்தில் வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு குழு இசைப் பாடல். ’கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே’ என்று பிரார்த்தனைப் பாடலைத் தொடர்ந்து ’பாரத சமுதாயம் வாழ்கவே’. அது நிறைவு பெற, ’பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ இப்படி அடுத்த ஒரு மணி நேரம் நாங்கள் பாடியதெல்லாம் பாரதியின் உன்னதமான கீதங்கள் என்று பின்னர் தெரிய வந்தது விசேஷமான ஒரு தினத்தில். அறுபதுகளின் மதராஸ் மாகாண அரசு ஒரு பதினாறு பக்கப் புத்தகத்தை வெளியிட்டு பள்ளி தோறும் விநியோகிக்க ஏற்பாடு செய்தது. ஏழு வண்ணத்தில் கோபுலு என்ற ஓவிய மேதையின் கோட்டுப் படங்கள்..கூடவே நேர்த்தியாக அச்சாகி இருந்தன எங்கள் வெள்ளிக்கிழமை பாடல்கள்..
அட்டையில் முண்டாசு தலையோடு ஒரு மீசைக்காரன் படம். அதன் கீழ் பாரதியார் கவிதைகள் என்று பெரிய எழுத்தில் அச்சடித்திருந்த அந்த புத்தகப் பிரதி ஒன்றுக்கு பதினாலு நயாபைசா வாங்கிக் கொண்டு விநியோகம் நடத்தப்பட்டது. ஓசியில் கொடுத்தால் குப்பையில் போட்டுவிடுவார்கள் என்று குழு மனோபாவம் தெரிந்த காங்கிரஸ் அரசு அப்போது புத்திசாலித்தனமாகச் செயல்பட்டது.
ஆக tகவிதை என்றால் வெள்ளிக்கிழமை சாயந்திரம் பார்த்துப் பாட உருவாக்கிய படங்கள் நிறைந்த புத்தகம் என்று அர்த்தமானது.
மேல் வகுப்பு போனபோது தெருவில் சுந்தரம் வீட்டில் அவன் அக்காவைப் பொண்ணு பார்க்க வந்தார்கள்..’நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி’. என்று சுமாராகப் பாடி, வந்தவர்களுக்கு பொண்ணு பிடிச்சுப் போச்சு.
.
சுத்தானந்த பாரதி எழுதிய ஜோன்புரி ராகக் கீர்த்தனம் என்று சொன்னார்கள். எங்கள் ஊர்க் கவிஞர் சுத்தானந்த பாரதியார் எழுதிய அந்தக் கீர்த்தனம் கவிதை இல்லை என்றால் வேறு யார் எழுதியது கவிதையாக இருக்க முடியும்.?
பிற்காலத்தில் பக்தவத்சலம் அரசு நாடு முழுக்கப் பரவிப் பணி முடக்கிய ரயில்வே ஸ்டிரைக்கை உடைக்க சகல கவிஞர்களும் புத்திமதி சொல்லும் கவிதை எழுதி ஆகாசவாணியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்தது. சுத்தானந்த பாரதியாரும் ’வேண்டாம் வேண்டாம் வேலை நிறுத்தம் இனி வேலை செய்வதே பொருத்தம். டண்டண் டணடண. டண்டண் டண்டண் என்று வானொலியில் ’பாடினார். ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் ஆனது.
பள்ளியில் பாரதி பாட்டு, பேச்சு என்று நடத்த யாரோ வந்தார்கள். நாங்கள் வழக்கமாகப் பாடும் பாரத சமுதாயம் வாழ்கவே அவரும் பாடினார். முடிந்து மகாபாரதம் பல குரல் நிகழ்வாகச் சுழல் பிரிந்தது.. ஒற்றையராக வந்த கூத்தாடி கண்ணன் ஆனார் பாஞ்சாலி ஆனார் தருமனும் சகுனியும் ஆனார். சூதில் தர்மன் தோற்க, பாட்டு ஒலித்தபின் ரௌத்திரமே உருவாக அவர் குரலில் பீமன் சொன்னான் – ’இனிப் பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டுவா கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்’.
பீமன் எந்தப் பாட்டும் பாடாமல் சீற்றமும் சுய பச்சாதாபமுமாகக் குரல் பேதம் காட்டிப் பேச பக்கத்தில் இருந்த ஆசிரியர் ஒருவர் அற்புதமான கவிதை என்றார்..கவிதைக்கான. பிள்ளைப் பிராய கவிதை பொருளை மாற்றிக் கொண்டேன்.
செயற்கை அறிவு உள்ளே செலுத்தப்பட்ட இயந்திரம் போல அடுத்து பார்க்கக் கிடைத்த கவியரங்கம் மூலம் கவிதை பற்றிய என் புரிதலை மேலும் தெளிவாக்கிக் கொண்டேன்.. குறுந்தாடி வைத்தவர்கள் பாட்டுக்கும் உரையாடலுக்கும் நடுவில் குரலை வைத்துக்கொண்டு இங்கிலீஷ் வாய்ப்பாடு சொல்கிற தொனியில், தாடையைச் சொரிந்து கொண்டு, நாலு வார்த்தைகளுக்கு ஒரு தடவை சொன்னதைத் திருப்பிச் சொல்வது என்று பள்ளிக்காலத்து இறுதிப் புரிதல் அல்லது அவதானிப்பு இருந்தது.
அது 1960களின் இறுதியான காலம். யாப்பு இலக்கணம் வழுவாமல் எழுதிய கவிதைகளை கண் சிவந்து உடல் பதற கவியரங்கக் கோபத்தோடு பழைய காலத்தை நீட்டும் சான்றோர் கவிதைகளும் பாரதி என்ற பெயர் ஒட்டிய கவிஞர்களும் பிரகாசித்த காலம்..அவையன்றி சிவப்பு சிந்தனைக் கவிஞர்கள் பழைய மரபுப்படி பொங்கல் மலருக்கு எழுதிய பாடல்கள் பாரதியாரையும் பாரதிதாசனையும் போலி செய்து ’பரவாயில்லை, இருக்கட்டும்’ என்று பரவலான வாசிப்புக்கு உயிர் கொடுத்தன.
அது சிவகங்கை கல்லூரியில் கவிஞர் மீரா பேராசிரியராக இருந்த காலம். அவர் கவிதைகளை டண்டண்டனடன என்று தாளம் போட்டுப் பாட இயலாது. மீராவின் ‘கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள்’ என்று அல்ஜீப்ராவில் சமன்பாடு போல எழுதித் தொகுத்த அந்தக் கவிதைத் தொகுப்பு மூலம் அ-மரபு அ-வசன அடையாளத்தோடு எளிய படிவம் கூடுதல் பரிச்சயமானது.மீராவின் நட்பு வளையத்தில் இருக்க வாய்ப்பு கிட்டிய அப்புறம் புதுக் கவிதை என்ற சொல் பரிச்சயமானது. நவ கவிதைகள் என்று ஒன்பது கவிஞர்களின் படைப்புகள் மீராவால் அன்னம் பதிப்பாக வெளியாகி இலக்கிய பெருவெளியில் சலனம் ஏற்படுத்தின.
பிரம்மனுக்கு நான்கு முகம், புதுக் கவிதைக்கு நூறு முகம்.. புதுக் க்விஞர்கள் தமிழகம் முழுக்கத் தலையெடுத்தனர். காலம் தப்பி முன்னால் 1940களில் கவிதை செய்திருந்த மூத்தோர் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா போன்றாரும் பரவலாக மேவிய இந்தப் பெருக்கை ஒதுங்கி நின்று பார்த்தார்கள். ஏற்கனவே புதுக்கவிதை எழுதி வந்த அபூர்வ இனமான மரபு பழகிய கவிஞர்கள் ஞானக்கூத்தனும் வைதீஸ்வரனும் எந்த பாதிப்பும் இன்றி அவர்கள் கவிதை என்று தேர்ந்ததை எழுதிக் கொண்டிருந்தார்கள்.
கோவையில் வானம்பாடிகள், சென்னையில் மாலன், சுரமணியராஜு, பாலகுமாரன், மதுரையில் ஜெயபாஸ்கரன், மேத்தா, இரா.மீனாட்சி, நா,காமராசன் என்று ஒரு அணி. சிவகங்கையில் தனியராக மீரா. நெல்லையில் ஏற்கனவே கவனப்படுத்தப் பட்டிருந்த நம் அருமை கல்யாண்ஜி, கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி’ அப்போது தான் அவர் கவிதையில் இருந்து வாசகர் நெஞ்சங்களில் புகுந்தாள். அக்காலம் அழுத்தமாகக் கவி நெசவு செய்து உருவாக்கிய இரவிலே சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவில்லை, நிர்வாணத்தை விலையாக்கினோம் ஆடை வாங்க, பூமிப் பந்தைப் புரட்டிப் போட்டும் நெம்புகோல் கவிதையை யாரெழுதப் போகிறீர்கள் போன்ற அப்போது காத்திரமாகத் தென்பட்டு பரபரப்பாக பேசப்பட்ட’, இந்த ஐம்பது ஆண்டுகளில் தேய்வழக்கான புதுக்கவிதை வரிகள் உண்டு. புதுக் கவிதை என்ற பெயரே க்ளீஷே ஆகிவிட்டது. எனில், சந்தம் என்ற, கலைமகள் ஈந்த வரம் முலம் தமிழ் மரபுக் கவிதை தேய்வழக்கு ஆவதில்லை.-அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள், பரந்து கெடுக உலக இயற்றியான், தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.எல்லாம் இன்னொரு நூறாண்டு இருக்கும்.
கவிஞர் மீராவிடம் அடுத்து பதிப்பிக்கப் போகிறது எந்தக் கவிஞரின் படைப்பாக இருக்கும் என்று கேட்டேன் ஒரு சாயந்திர நேரத்தில். நெல்லைப் பக்கம் இருந்து காற்றடிக்கும் என்றார் அவர். கல்யாண்ஜியின் அடுத்த தொகுப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவ்வளவு தூரம் ஆழ அகலமாக கல்யாண்ஜியின் கவியுலகம் என்னை நல்ல பிசாசாக பாதித்திருந்தது.
அன்னம் அலுவலகத்தில் வெள்ளம் என்ற கவிதைத் தொகுப்பு கண்ணில் பட்டது. கலாப்ரியா எழுதிய கவிதைகள். அவரே அச்சமைத்திருந்த புத்தகம். கல்யாண்ஜிக்கு அடுத்து அந்தக்கால இலக்கிய வட்டாரத்தில் கூடுதலாகப் பெயர் சொல்லப்பட்ட கவிஞர் கலாப்ரியா..
இந்த நாள் வரை கலாப்ரியா கவிதை எதுவும் படிக்காமல் போனோமே என்ற அங்கலாய்ப்போடு வெள்ளத்தில் இறங்கினேன்..
கவிதை பற்றிய என் நினைப்பைத் தலை குப்புற சாய்த்தன கலாப்ரியா என்ற திருநெல்வேலிக் கவிஞரின் படைப்பாக்கங்கள்.
கலாப்ரியாவின் கவிதைகள் ஒன்று அல்லது மேற்பட்ட கவிதை mise en scene (காட்சி வெளி) – ஒரு காட்சியில் இடம் பெறும் பொருள்கள், நடிக நடிகையர் நிற்கும், நகரும் விவரங்கள். காமிரா வைக்கும் இடம், நகர்வு, ஒளியமைப்பு முதலியவற்றை கதையாடலின்படி அமைப்பது). காட்சிக்கான ஒலியமைப்பு இதில் வராது. மிக நுணுக்கமாக பார்த்துப் பார்த்துச் செய்த அரங்க நிர்மாணம் போல் கலாப்ரியாவின் கவிதைகள் நுணுக்கமாகச் செதுக்கபப்டுகின்றன.
இன்னொடு தளத்தில் கலாப்ரியா கவிதைகள் சிதைமேல்மீயுருவாக்கத்தை சுபாவமாகக் கட்டமைக்கின்றன. வீட்டில் மங்கல நிகழ்வு நேரம். வீட்டுப் பெண்கள் எல்லோரும் பெண்ணலங்காரம் தேர்ந்த அத்தையிடம் தம் கையில் மருதாணி இட்டுக் கொள்ளும் இனிய மாலைப் பொழுது. எல்லோரும் மகிழ்வோடு மருதாணி இட்டு சிவந்து நளினம் காட்டும் அழகுக் கரங்களோடு வளைவர கவிதை பாதி முடிகிறது. அந்த விதவை அத்தை தனக்கு விலக்கப்பட்ட மருதாணி மற்றவர்கள் கை முழுக்கச் சிவக்க வைத்ததில் நாணமும், பெருமையும், துயரமுமாக கொல்லைப் பக்கம் கிணற்றடியில் விம்மலோடு தன் வெறுங்கை பார்த்து நிற்கிற ஓற்றை நிகழ்வு கவிதையின் இறுதி வரிகளாகிறது.
மொபைல் தொலைபேசி வர ஐம்பது வருடம் முந்திய காலம் என்பதால் கலாப்ரியா பற்றிய செய்திகள், அவர் கவிதைகள் மெல்லத்தான் வந்தடைந்தன. கலாப்ரியா (அந்தக் காலத்தில்) என்னைப் போல் வங்கி ஊழியர்..
இதெல்லாவற்றையும் விட கலாப்ரியாவும் கல்யாண்ஜியும் ஒரே ஊர்; நெல்லை; ஒரே தெரு; சுடலைமாடன் தெருக்காரர்கள். கல்யாண்ஜி சசிகலாவைப் பார்த்திருப்பாரா? கருப்பு வளையல் கையோடு பெருக்கிப் போனவள் கலாப்ரியா பார்வையில் பட்டிருப்பாளா?
கலாப்ரியாவின் சுடலைமாடன் தெரு அவருடையது; எனில் அந்த மனிதர்களும் சூழலும் கல்யாண்ஜிக்கு கலந்து இடை பழகிய அனுபவம் கொடுத்ததில்லை. இருவருக்கும் சித்தித்தது இருவேறு உலகங்கள். ‘நான் பார்த்த பெண்ணை நீ பார்த்ததில்லை நீ பார்த்த காட்சி நான் பார்த்ததில்லை’ வகைதான். Universe – alternate universe இல்லை.
கலாப்ரியா எப்படி இருப்பார்? நமக் ஹராம் இந்திப் படத்தில் கதாநாயகன் ராஜேஷ் கன்னாவின் நண்பனாக, சதா கவிதை சொல்லும் கவிஞனாக வரும் குணசித்திர நடிகர் ராஸா முரத் மாதிரி இருப்பும் கவிப் பொழிவுமாக இருப்பரோ? அவர் இருக்கட்டும். சசிகலா எப்படி இருப்பார்? காஞ்சனா போல்? வேண்டாம்.
சசிகலா சசிகலா மாதிரித்தான் இருப்பார்.
கவிதைத் தொகுப்பின் உள் அட்டையில் பாலகுமாரன் ’சசிகலாவுக்கு சிம்மாசனமாவது வெங்காயமாவது, டர்ட்டி ஃபெலோ’ என்று வாழ்த்தி இருந்தார். கலாப்ரியா கவிதைத் தொகுப்பு பற்றி சுஜாதா கருத்து சொன்னது ’புத்தகத்தின் அட்டையில் புத்தகத்துக்கான கடுமையான விமர்சனத்தைப் பிரசுரிப்பதால் அந்த எதிர்ப்பு முனை மழுங்கி விடுகிறது’’.
கலாப்ரியாவை நேரில் சந்திக்க சிலபல ஆண்டுகள் (1990களின் மத்திய காலம்) ஆனது. நான் வங்கி செண்ட்ரல் ஆபிசிலும், கலாப்ரியா தென்காசியிலும் அதிகாரிகளாகி இருந்தோம்.
அன்புக்கு உரிய திருமதி திலகவதி ஐ.பி.எஸ் மேடம் அமிர்தா பதிப்பக வெளியீடாக முத்தான பத்து கதைகள் வரிசையில் என் கதைகளையும் வெளியிட்டபோது அவர்களும் நானும் ஏக காலத்திலே நினைத்தது – இந்த கதைத் தேர்வை நிகழ்த்தி முன்னுரை எழுதித் தரும்படி கலாப்ரியாவைத்தான் கேட்க வேணும். கலாப்ரியா உடனே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். சிறப்பான கதைத் தேர்வுக்கும், நேர்த்தியான முன்னுரைக்கும் உதாரணம் வகுத்த கலாப்ரியாவை செயல் மறந்து வாழ்த்துதுமே.
கலாப்ரியா கடிதங்கள்
சில கடிதங்கள் எவ்வளவு personal ஆக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் கலாப்ரியா, கல்யாண்ஜி வண்ணதாசன், அவருடைய தந்தையார் பெரியவர் தி.க.சி, முன்றில் மா.அரங்கநாதன் எழுதிய கடிதங்களும், ஆசான் சுஜாதாவின் மின்னஞ்சல், குறுங்கடிதங்களும் இந்த வகையில் வருபவை.
.நான் எப்படி கலாப்ரியா கவிதையில் மூழ்கியிருந்தேனோ அது போல் அவரும் என் கதைகளை விரும்பி வாசித்துக் கொண்டிருந்தார் என்று அவரது கடிதங்கள் மூலம் அறிய மகிழ்ந்தேன். கலாப்ரியாவிடமிருந்து வந்த கடிதம் அடுத்து இருப்பது –
அவர் சொன்னது என் மகன் விஷயத்தில் பலித்திருக்கிறது. மற்றதைக் காலம் தான் சொல்ல வேணும்.
கலாப்ரியா இரா.முருகனுக்கு எழுதிய கடிதம் – 1
dear murukan
இன்னும் பத்து மாதத்தில் பணி ஒய்வு பெறப் போகும் நேரத்தில் வங்கியில் அதிகாரி பதவிக்கு இண்டர் வியூ வந்தது. கிடைச்ச வரை லபம் போய்த்தான் பார்ப்போமே என்று பழைய ‘வங்கிப் பயிற்சிக் கல்லூரியின் புத்தகங்கள் சின்னச் சின்ன கை வெளியீடுகள் hand outs)களை யெல்லாம் தேடிப் பிடித்த போது.. 92-ல் வெளிவந்த IOBIAN ஐ ஓ பி யின் வீட்டிதழ்(home magazine) ஒன்று கிடைத்தது. இது எதற்கு இங்கே இருக்கிறது என்றபடி புரட்டினேன். பதினாறு வருஷத்துக்கு முந்திய R.Murugan, Officer CPPD., எழுதிய கதை ஒன்று வெளி வந்திருந்தது… வெறுங்காவல் என்ற கதை ஆஃபிஸில் நன்றாகப் படிக்க முடியவில்லை என்று வீட்டிற்கு எடுத்து வந்தது.. அப்படியே மேசை அலமாரியில் ஒளிந்திருக்கிறது…
நேர்முகத் தேர்வாவது ஒன்றாவது..கதையில் மூழ்கி விட்டேன்..இப்படித்தான் நடக்கும்… வீட்டை ஒதுங்க வைக்கிறேன் பேர்வழி என்று (இந்த வார்த்தைகளெல்லாம் அந்தக் கால குமுதம் விகடன் ஸ்டைல் கோமதி சாமிநாதன்..போன்ற எழுத்து ஸ்டைல்..) உட்கார்ந்தால் ஏதாவது நல்ல கடிதம் கிடைக்கும் அல்லது புத்த்கம் கிடைக்கும்.. அவ்வளவுதான் அதைப் படிப்பதிலேயே நேரம் கழிந்து விடும் அப்புறம் திரும்பவும் குப்பைகளை அப்படியே அடைச்சு வச்சிர வேண்டியதுதான்..(குப்பையா பொக்கிஷம்ல்லா அது..
சமீபத்தில் வீட்டிற்கு வந்த என் மருமகன் சொன்னார் மாமா நீங்க ஒருமணி நேரம் தள்ளீப் போயிருங்க இதை எல்லாம் கழிச்சுக் கட்டி பரணில் ஒன்றுமே இல்லாமல் செஞ்சுடறேன் என்றார். கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு வருஷ சேகரிப்பை
போகிப் பண்டிகை சமாச்சாரமாக்கறதா.. ஐயா நீங்க தள்ளிப் போங்க என்று சொல்வதற்குள் மகளே சொல்லி விட்டாள்..ஐயோ அப்புறம் சாம்சன் & டிலைலா கதை மாதிரி எங்க அப்பா பலத்தை இழந்துடப் போறாரு என்றாள்)
.முருகன் கதை யும் பதினாறு வருஷத்துக்கு முந்திய “பால முருகன்” படமும்.. சூப்பரா இருந்துச்சு.(இது இன்றைய வாசகர் கடித பாஷை). கதையில் வருகிற ஃப்லாட் வீட்டிற்கு நானும் ரவி சுப்ரமணியனும் போன போது . முருகனின் பையன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான் வீடிற்குள். அவனுக்கு முழுமையான கிரிக்கெட் செட் வாங்கிக் கொடுத்திருந்தார் அவன் வீட்டையே அதகளப் படுத்திக் கொண்டிருந்தான் முருகன் கண்டு கொள்ளவே இல்லை…எனக்கு முருகனும் ரவியும் பேசுவது கவனத்திலெயே இல்லை..பையனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ..அவ்வளவு சுதந்திரம் நம்ம வீட்டில் கொடுப்பமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..அவன் இப்பொது பெரிய பையனாக வளர்ந்திருப்பான் ஒரு முதிர்ந்த கிரிக்கெட் வீரனாய் மாறி இருப்பான்.. முருகன் சிறந்த எழுத்தாளனாகியிருப்பது மாதிரி…
கலாப்ரியா
இரா.முருகன் கலாப்ரியாவுக்கு எழுதிய கடிதம் – 1
என் அன்புக்குரிய கலாப்ரியா
மழை பெய்து ஓய்ந்த ஒரு காலைப் பொழுதில் உங்கள் கடிதத்தைப் படிக்கிறேன். மழை மனதில் பிறப்பித்த குளிர்ச்சி தொடர்கிறது. ஈ-மெயிலையும் இதமான இண்லண்ட் லெட்டர் வாசனையோடு எழுதக் கூடியவர் நீங்கள், நீங்கதான்.
கல்யாண்ஜி ஈ மெயில் அட்ரெஸ் இருந்தா அவரோடயும் இப்படிப் பேசலாம். பாருங்க, முகவரி மட்டும் போதாது, ஈமெயிலும் இருந்தாத்தான் கடிதம் எழுதக் கை போகுது. போஸ்ட் ஆபீஸ் பக்கம் போய் பல வருஷமாச்சு.
சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க. வீடு மாறிட்டேன். மொபைல்லே கூப்பிடுங்க, வழி சொல்றேன். வாயிலே இருக்கு வழிங்கறீங்களா? அதுவும் சரிதான்.
உங்க கடிதத்தை உரிமையோடு என் இணையத் தளத்தில் பிரசுரம் செஞ்சிருக்கேன்.
என் மகன் இப்போ தமிழ்நாடு மாநிலக் குழுவில் விளையாடறான். சீக்கிரம் ரஞ்சி, 20-20 எல்லாம் ஆடணும்னு கனவு. இஞ்சினியரிங் முதல் வருடம் படிக்கிறான். .
உங்களுக்கு மருமகன் வந்த நல்ல சேதி இப்பத்தான் முதல் முறையா உங்க கடிதம் மூலம் தெரிஞ்சுது. ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கலாப்ரியா. வண்ணதாசன் மக கல்யாண நேரத்திலே அவரையும் தி.க.சி சாரையும் வீட்டுலே பார்த்து (மேற்கு மாம்பலம்) ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தென். ஆச்சு, பத்து வ்ருஷத்துக்கு முந்திய சங்கதி.
அப்புறம் நானும் வண்ணதாசனும் சேர்ந்து சென்னை ரேடியோவிலே ஒரு பேட்டி. அதுக்கும் முன்பும், அப்புறமும், பேட்டியின் போதும் அவர் ரொம்ப சுவாரசியமா, அந்நியோன்யமாப் பேசிட்டு இருந்தார். வண்ணதாசன் பேசி அப்பத்தான் பார்த்தேன்!
அன்புடன்
இரா.முருகன்
****************************************=========================================================================
கலாப்ரியா இரா.முருகனுக்கு எழுதிய கடிதம் -2
அன்பு மிக்க முருகன்,
வணக்கம்.நீங்க சொன்ன மாதிரி இந்த குறுஞ்செய்திகளின் உலகில் இன்லண்ட் லெட்டர் வாசனை அபூர்வம்தான்…ஆறு நாட்களுக்குப் பின் காலையில் நடை பழகிக் கொண்டிருந்த போது உங்கள் கைப்பேசி..
உங்களுடன் பேசி முடித்ததும், யாரோ வழிப்போக்கர்கள் காரை நிறுத்தி எங்கேயாவது அருகே காலைக் கடனை கழிக்க வழியிருக்கா என்று கேட்டார்கள்.. சற்றுச் சேய்மையில் இருந்த காசு கொடுத்து உபயோகிக்கும் சுகாதார வளாகத்திற்கு ஆற்றுப் படுத்தினேன்…
போய்த்திரும்பும் போது காரில் வந்த ஒரு பெண்’ வளாகம் அருகே நின்றபடி நன்றியோடு பார்த்தாள்,,பாரம் இனிதே கழிந்த ஆசுவாசம் முகத்தில் புன்னகையை பரவ விட்டிருந்தது…எல்லாமே ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து விட்டது…
எனக்கே அந்த ஆற்றுப் படுத்தும் யோசனை திடீரென்று உதித்தது.தான்.உங்கள் அழைப்பும் இந்த நிகழ்வும் மனதை இன்னும் லேசாக்கியது….
சாலையில் நடந்து விட்டு தெருவுக்குள் நுழைந்ததும்..தெருவின் சற்றே பெரிய விவசாயியின்(marginal farmer ?) வீட்டு முன்னால்.. பத்துப் பேர் போல நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்…காதில் விழுந்தது,”சார்வாள் குளத்துக்கு தண்ணி வருதாமே நாத்தங்காலை உழுது போட்டிருவோமான்னு யோசனை கேக்க வந்தோம்…”
இதுவும் குறுஞ்செய்தி போல சிறிய அகராதிக்குள் அடங்கி விடுகிற கிராம வாழ்வுதான். ஆனால் எவ்வளவு விஸ்தாரமான அர்த்தங்கள் கொண்டது…பிரமிளின் கவிதை நினைவுக்கு வருகிறது
“மழை வராதா
என்றேங்கி
அண்ணாந்த கண்கள்
கண்டு கொண்டன
வானம்
எல்லை இல்லாதது”
அன்புடன்
கலாப்ரியா
(18.10.2008 சனிக்கிழமை)
——–
June 24, 2025
உலக வாசிப்பு தினம் 25 ஜூன் 2025
இன்று உலக வாசிப்பு தினம். அதை ஒட்டி –
2024 ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நோய் கண்டது எனக்கு. உடல்நலம் வேகமாக குறைந்து வர அது காரணம் சில நோய்க்கூறுகள் தென்படத் தொடங்கின. அவற்றில் எனக்கு முக்கியமானது எழுத்துத் தடங்கல். writers bkock. பத்து நிமிடம் கூட லேப்டாபில் தொடர்ந்து எழுத முடியா.து. கையால் எழுதி முப்பது ஆண்டும் மேலும் ஆகியதால் கை எழுத்து பாதிக்கப்பட இல்லை .
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் இரண்டு சிறுகதைகள் மற்றும் ஒரு குறுநாவல் மட்டும் எழுதிப் பிரசுரமாகின. மிளகு, தினை அல்லது சஞ்சீவனி போல் பெருநாவல் திட்டமிட்டு எழுதி அழித்தெழுதி பாலிம்ஸெட் ஆக ஒரு பிரதி மட்டும் தொடர்ந்து நீட்சி பெற இருந்தது.
எதற்காக எழுத வேணும் என்ற ஆற்றாமையோடு எழுதாமலே நாட்கள் கடந்தன. நண்பர்கள் என்ன ஆச்சு எனக்கு என்று கரிசனத்தோடு விசாரித்தார்கள். சொல்லத் தரமான பதிலேதும் இல்லை.
தொலைபேசி அழைப்பு. நண்பர் அழைத்தார்.
”என்ன ஆச்சு? ஏன் எழுதலே”
‘எழுத முடியாமல் உடல் நலம் குறைஞ்சு போச்சு சார்’
‘மேலுக்கு முடியலேன்னா டாக்டரை போய்ப் பாருங்க. அதுக்கு ஏன் எழுத மாட்டேன்னு அடம்’
‘டாக்டரை பார்த்தாலும் ஒண்ணும் ஆகப் போறதில்லே’
’டாக்டர் சொன்னா எழுத மாட்டீங்க, ப்ரண்ட்ஸ் யாராவது சொன்னா எழுதுவீங்களா? பி.ஏ கிருஷ்ணன், ஜெயமோகன்..”
“அது வந்து..”
“இப்போ நான் சொல்றேன், எழுதுங்க”. அன்புக் கட்டளை
.
”தினம் ஐந்து பக்கம் எழுதுங்க. அதை எனக்கு அனுப்புங்க. நான் படிச்சுட்டு திரும்ப அனுப்பறேன். பிடிக்கலேன்னா தயவு தாட்சணியம் பார்க்காமல் கருத்து சொல்வேன். எழுதுங்க”
“சரி சார்”
இடுக்கண் களைவதாம் நட்பு. இதைவிட ஆத்மார்த்தமாக சிந்தித்து இடுக்கண் களைய முடியாது.
தினம் ஐந்து பக்கம் இல்லை, இரண்டு பக்கம் எழுதலானேன். நண்பருக்கு அனுப்பி வைக்கவில்லை. அவர் அடுத்த திரைப்பட வேலைகளில் சதா பரபரப்பாக இருப்பார். தொந்தரவு செய்ய மனமில்லை.
Writer’s Block is gone!
என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டிய, என்னைப் பிரமிக்க வைக்கும் சாதனையாளர், கவிஞர், எழுத்தாளர் நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாசிப்பு தின வாழ்த்துகள். அனைத்து நண்பர்களுக்கும் வாசிப்பு தின வாழ்த்துகள்.
இரா.முருகன் 25 ஜூன் 2025
(படம் – தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு நீல.பத்மநாபன் அவர்களை திரு கமல் ஹாசனும் நானும் அவரது திருவனந்தபுரம் இல்லத்தில் சந்தித்தபோது)
June 10, 2025
பரிவாதினி இசை மலர் – 1
வாத்திமர் நாவல் எழுதுவதற்கு இடையே பரிவாதினி இசை மலர் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,
இருபதாம் நூற்றாண்டுத் துவக்கம் முதல், மத்தியப் பகுதி வரை ஒரு இசைப் பயணமாக நீளும் மலரில் அந்தக் காலமும், இசைச் சூழலும் குறித்த ambiance உருவாக்குவதில் அபார வெற்றி பெறுகிறார் சிவகுமார். அதற்கு முதல் படியாக 1930 – 1950 வரை தமிழ் இதழ்களில் வெளிவந்த அந்தக்கால ரேடியோ, கிராமஃபோன், இசைத்தட்டு வெளியீடு விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கங்கே வைத்திருக்கிறார். ஓவியக் கலை விற்பன்னர் கோபுலுவின் அதே காலத்துக் கோட்டோவியங்கள் எழுத்துக்கு நுட்பமாக அணிசெய்கின்றன. அபூர்வான புகைப்படங்களும் ஏராளம்.
இசையும் இலக்கியமும் கைகோர்த்து வரும் மலர்ப் பக்கங்கள் தி.ஜானகிராமனைக் கொண்டாடுகின்றன. அட்டைப் படத்தில் தி.ஜானகிராமன்,, ஜானகிராமனின் ஜாலம் பற்றி வயலின் விற்பன்னர் லால்குடி ஜெயராமன் குமுதத்தில் எழுதிய வியாசம், தி.ஜாவின் இசை உலகம் பற்றிய விரிவான கட்டுரை, தி.ஜாவின் மரப்பசு நாவலில் இருந்தும், மாஸ்டர்பீஸ் மோகமுள்ளில் இருந்தும் இசை பற்றிய சிறு பகுதிகள்,, தினமணி அலுவலகத்துக்கு வந்த தி.ஜாவுடன் சந்திப்பு, தி.ஜா மறைந்தது பற்றி வண்ணநிலவன் தொலைபேசியில் தகவல் சொன்னது ..
முழுக்க Thi Jaa centric ஆகாமல் எழுத்தில் மணக்கும் இசை விளம்பும் படைப்பாளிகளான கு.ப.ரா, ந.சிதம்பரசுப்ரமணியன், லா.ச.ர, கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், கரிச்சான் குஞ்சு, எஸ்.வி.வி, தி.ஜ.ரங்கநாதன், யுவன் சந்திரசேகர் ஆகியோர் எழுத்தில் இசைப் பக்கங்கள் மலரை அலங்கரிக்கின்றன. த.ந.குமாரசாமி, சி.சந்திரசேகரன் கதைகளும் உண்டு, ‘
இசை ஆளுமைகள் கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர், மதுரை மணி அய்யர், பாலமுரளி கிருஷ்ணா,, கெம்பெ கவுடர்,, திருவிசைநல்லூர் ராமசாமி சாஸ்திரிகள், மான்பூண்டியா பிள்ளை, அங்கமாலி ஜோஸ், வீணை காயத்ரி, எஸ்.ஜி. கிட்டப்பா பற்றிய கட்டுரைகள் மலர்த் தொகுப்பை காத்திரமாக்குகின்றன. டைகர் வரதாச்சாரியார், சுஜாதா விஜயராகவன், மற்றும் சிவகுமார் ஆகியோர் தத்தம் சங்கீத நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் பகுதி நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. பொடி அனுபவங்கள் கச்சேரி இறுதியில் பாடப்படும் துக்கடா மாதிரி ரசமானவை.
.
கல்கி – மணிக்கொடி சங்கீத சர்ர்சை, கச்சேரி கேட்க வரும் ரசிக ரத்னங்கள், அரசிகக்குடுக்கைகள் பற்றிய பதிவு, கச்சேரி நடக்கும் இடத்தில் நுழைந்த சரக்கு ரயில் எஞ்சின் பற்றிய ஆர்.கே.நாராயணனின் வெடிச் சிரிப்பு ஏற்படுத்தும் கட்டுரை -மொழிபெயர்ப்பு, கதாகாலக்ஷேபம், நாட்டியம் பற்றி எழுதியவை என்றும் பகுதிகள் உண்டு.
இசைமலரின் கணிசமான பகுதிகள் 1940களின் பத்திரிகை, புனைவு இலக்கிய மொழிநடையைக் கைக்கொண்டுள்ளது நூலைச் சிற்ப்பாக்குகிறது.
மலருக்கு ஆசிரியரான தினமணி சிவகுமாருடைய அசாத்தியமான உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் துல்லியமான வாட்டர் மார்க் ஆகத் தெரிகிறது.
ஒரு சிறு கோரிக்கை – நல்ல எழுத்தில் உணர்ச்சி வசப்படுதல் அடக்கமோ என்னவோ, அங்கங்கே மிகக் கொஞ்சமாக விதந்தோதுதலும் தட்டுப்படுகிறது. விரைவில் வெளியாகும் இரண்டாம் இசை மலர் இசைக்கு மட்டும் தலையாட்டட்டும்.
Well Done Sivakumar,, LalithaRam and others of Team Parivadhin
May 22, 2025
Dementia induced incontinence in Tamil novel
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் மூன்று- அர்சூர் நாவல் – மூன்று
திரும்பவும் போயாச்சா? பேஷ்
கற்பகம் காட்டுக் கூச்சலாகச் சத்தம் போட்டாள்.
அடிக்காதேடி. அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன்.
ஹாலில் பிரம்பு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு குனிந்து நின்றார் நீலகண்டன். பயத்தோடு அவளைப் பார்த்தார்.
அவசரமாக உள்ளே போனாள். அது உள் பக்கமா, வெளியே போகிற பாதையா?
எதோ ஒன்று. அங்கே சுவரில் ஆணி அடித்து நீலகண்டனின் சட்டை தொங்கும். பக்கத்தில் நீளமாகக் கயிறு கட்டி பெயர் மறந்து போன எதுவோ கூடவே தொங்கும். தேதி போட்டு. அதற்கு ஒரு பெயர் உண்டு. அதுதான் மறந்து போனது.
நாயுடுவைக் கேட்டால் சொல்வான். ஹைகோர்ட் போய் அவனை விசாரித்து விட்டு வரலாமா? வெளியே எப்படிப் போக? கற்பகம் இருப்பாள். ஆணிக்குக் கீழே,
சட்டைக்கு நேர் கீழே நீளமான பிரம்பு வைத்திருக்கிறாள். எடுத்து வரப் போகிறாள். முதுகில் அடிப்பாள். ஓங்கி ஓங்கி ஓங்கி ஓங்கி அடிப்பாள்.
கற்பகம் திரும்ப வந்தாச்சு. கையில் இலுப்பச் சட்டியோடு நிற்கிறாள். இதுக்குப் பெயர் இரும்பு வாளி இல்லையோ. குளிச்சு விடப் போகிறாளா? வெந்நீர் தானே?
கொஞ்சம் இருடியம்மா, வேட்டியையும், ஜாக்கெட்டையும். அதானே பெயர். இல்லை பனியன். பனியனையும் எடுத்து விட்டு.
எதுக்கு வேட்டியை அவுத்தாறது?
கற்பகம் சத்தம் போட்டுக் கொண்டே வாளியோடு நீலகண்டன் பக்கத்தில் வந்தாள். அதை நீலகண்டன் தலையில் மாட்டி இழுத்துப் போய் ஆணியில் அவரைக் கட்டப் போகிறாள். பிரம்பு அங்கே உண்டு. அடித்தால் வலிக்கும்.
அடிக்காதேடி அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன்.
அவர் இன்னும் குனிந்து உடம்பு நடுங்க தரையில் இருந்து அள்ளி எடுத்து வேட்டியில் முடிந்து கொண்டார்.
கற்பகம் கையை ஓங்கியபடி அவரை முறைத்துப் பார்த்தாள்.
நீலகண்டன் கை நடுக்கத்தில் கையில் அள்ளியது கூடமெல்லாம் சிதறியது. சுவரில் அப்பியது. பொறுக்க முடியாத துர்வாடை.
நடுக் கூடத்தில் கழிஞ்சது போறாதுன்னு அதை சுவத்திலே பூசி, தரையிலே பரத்தி. பிராணனை வாங்கறேளே. சாவு வராதா. எனக்கு.
வாளியைத் தரையில் வைத்து விட்டுத் தலை தலையாக அடித்துக் கொண்டு அழுதாள் கற்பகம்.
அழுகிறாள். அடிக்க மாட்டாள். நீலகண்டனுக்கு நிம்மதியாக இருந்தது. இப்படியே போய்க் கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டால் பங்குனிக்கிழமை சாயந்திரம் எழுந்து விடலாம். அது பங்குனிக்கிழமை தானே? இன்னிக்கு நாள்?
சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போது கை பதிந்து திட்டுத் திட்டாக இன்னும் அசுத்தம் ஒட்டியது.
எழவே ஒரு இடமா உக்கார மாட்டியா?
கற்பகம் ஓடி வந்து நீலகண்டன் முதுகில் அடித்தாள். பிரம்படியை விட இது இன்னும் வலித்தது.
அடிக்காதேடி இவளே,. இனிமே இங்கே பல் தேய்க்க மாட்டேன்.
அவர் அலறினார்.
பல்லு தேச்சு பாழாப் போக. இது கொல்லைக்குப் போன கொடுமை. கொடுமை.
அதாண்டி சொல்ல வந்தேன். வாய் தவறிடுத்து. இனிமே சமையல்கட்டுலே போய்ப் போறேன். இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சுடு.
நீலகண்டன் முடிக்கும் முன் திரும்ப முதுகில் அடி விழுந்தது.
சமையல்கட்டுலே வந்து கழிவே? எங்கே வா. செய் பாக்கலாம்.
நீலகண்டன் முகத்துக்கு அருகில் குனிந்து கொண்டு கண்ணை உருட்டினாள் கற்பகம். ஆடப் போகிற பசுமாடு. கழுகு. ஆடப் போகிற மயில். மயில் நிற்கிற மாதிரி பின்னால் தள்ளிக் கொண்டு நிற்கிறாள். மயில் கண்ணை உருட்டுகிறது. பயமாக இருந்தது நீலகண்டனுக்கு.
நான் அங்கே எல்லாம் போகலே. ஊஞ்சல்லே போய் உக்காந்துடறேன். கை காஞ்சு போன அப்புறம் அலம்பி விடு.
நீலகண்டன் ரெண்டு கையையும் மேலே தூக்கிக் கொண்டு எந்தப் பக்கம் போக வேணும் என்று தெரியாத பதட்டத்தோடு தள்ளாடி நடந்து தரையில் விழுந்தார்.
ஈஸ்வரா என்றாள் கற்பகம். ஹால் கோடியில் டெலிபோன் விட்டு விட்டு அடிக்கிற சத்தம். யார் இப்போ பார்த்து கூப்பிடறது? கற்பகம் வரமாட்டாள்.
நீலகண்டனை ஓடிப் போய்த் தூக்கி நிறுத்தினாள். மூச்சு வாங்குகிறது. வயதாச்சே அவளுக்கும். இன்னும் எத்தனை காலம் இந்தக் கஷ்டமோ.
ஊஞ்சல்லே உக்காந்து தானே கல்யாணம் செஞ்சுண்டேனே. ஞாபகம் இருக்கோ. நீயும் உக்காந்திருந்தியே. எங்கே போட்டிருக்கே ஊஞ்சலை? சொல்லேன்.
அவர் நைச்சியமாகக் கேட்க, கற்பகம் கண் நிறைந்தது.
அழாதேடி.
கண்ணைத் துடைக்க நீண்ட அசுத்தமான விரலை அவசரமாக விலக்கிய போது வாசல் பக்கம் நிழல். கலசலிங்கம். மேல் நர்ஸ்.
திரும்பவும் டெலிபோன் அடிக்க ஆரம்பித்திருந்தது.
அம்மா நீங்க போய் அதை எடுங்க. சாரை நான் பாத்துக்கறேன்.
இதெல்லாம் என்ன கஷ்டம் என்பது போல் சகஜமாகச் சிரித்துக் கொண்டு லிங்கம் நீலகண்டனை தோளில் இறுகப் பற்றிப் பிடித்தபடி சொன்னான்.
குட்மார்னிங் சார்.
நீலகண்டன் சந்தோஷமாகச் சிரித்தார்.
நாயுடு, வெங்காய வடையும், சர்பத்தும் வாங்கி வரச் சொல்லுடா. கற்பகத்துக்குத் தெரிய வேண்டாம்.
சொன்னாப் போகுது.
லிங்கம் மெல்ல பாத்ரூமுக்கு நடத்திப் போக, கற்பகம் போன் சத்தம் நிற்பதற்குள் கொஞ்சம் வேகமாக நகர்ந்து போய் எடுத்தாள். ரிசீவர் தொப்பென்று கீழே விழ, புடவைத் தலைப்பால் துடைத்தபடி காதில் வைத்து, யாரு என்றாள்.
ஏன் பாட்டி, ஜாலியா வடாம் பிழிஞ்சுண்டிருக்கியா?
கற்பகத்தின் பேத்தி ஜனனி. பம்பாயிலிருந்து கூப்பிடுகிறாள்.
நான் எங்கேடி வடாம் பிழிய? உங்க தாத்தா தான் எனக்கும் சேர்த்து பண்றாரே.
ஜனனி சிரிக்க ஆரம்பித்தாள்.
சிரிடி. சிரிக்க மாட்டே. நானானா இங்கே கெடந்து பீ வாரிக் கொட்டிண்டு அவதிப் படறேன். விடிக்கறது தான் விடிக்கறார் இந்தக் கெழவர். மல்லியப் பூ வாசனையோட, தாழம்பூ மணத்தோட, அட ஒரு கந்தமும் இல்லாமப் போகக் கூடாது? எடுத்துப் போட்டா எட்டூருக்கு குமட்டிண்டு அடிக்கறது.
ரொம்ப குசும்புடி உனக்கு.
ஆமா அதான் வாயையும் மூக்கையும் மத்த எல்லாத்தையும் பொத்திண்டு இங்கேயே சகலமும்னு உக்காந்திருக்கேன்.
நீ வாயடிச்சு அடிச்சு தாத்தாக்கு டிமென்ஷியா முத்திடுத்து.
பேத்தி வாயைக் கிண்ட கற்பகத்துக்கு மனசில் சந்தோஷம் பெருகி வழிந்தது. போன நிமிஷத்து துக்கமும் வாதனையும் போன இடம் தெரியவில்லை.
ஆமாடி, குசும்பு எனக்குத்தான். திமிர் எனக்குத்தான். நான் பேசிப் பேசித்தான் தாத்தா மடியிலே நரகலை வச்சுக் கட்டிண்டு நிக்கறார்.
தாத்தாவை டோண்ட் டச் ஓல்ட் கேர்ல். அவர் அப்படித்தான் இருப்பார். நீ அலம்பி விடு. நிச்சயம் சொர்க்கத்துக்குப் போவே.
போடி சரித்தான். இந்த நாத்தக் கையோட சொர்க்கத்துக்கு வேறே போகணுமா.
ஆல்ரைட் கெழவி. நீ என்னை எப்படி இருக்கே, படிப்பு எப்படிப் போறது கால்லே அடி பட்டது எப்படி இருக்குன்னு எல்லாம் கேட்டியோ, கேட்க மாட்டே.
ஜனனி சொல்லி விட்டுக் காவாலித் தனமாக விசிலடித்தாள்.
விசில் அடிக்காதேடி பிசாசே. நீ மட்டும் என்னை தூங்கினியா எழுந்தியா குளிச்சியா சாப்பிட்டியான்னு அலம்பி விட்டியான்னு பேச்சுக்காவது கேட்டியோ? பேத்தின்னு பெத்த பேரு. தாக நீளு லேது.
அவுனும்மா கற்பகம். ஒக்க சரி. ராத்திரி தூங்கினியா தாத்தாவைக் கட்டிப் பிடிச்சுண்டு? தூரம் குளிச்சியா? பூ வச்சுப் பின்னிண்டியா? புளியம்பழம் தின்னியா?
சீ போடி கழுதை
.
கற்பகத்துக்கு எல்லாம் இஷ்டமாக இருந்தது.
நீலகண்டன் முந்தின ஜென்மம் எதிலோ அவளை இழுத்து மடியில் போட்டுக் கொஞ்சிக் கொஞ்சிக் கூடிக் கலந்த சந்தோஷம் போல இது வியாபிக்கிறது எல்லா திசையிலும் சூழ்ந்து.
கற்பகத்துக்கு வாரணமாயிரம் பாட வேண்டும் போல் இருந்தது. இந்த வாசனைக்கு ஆண்டாளும், ஆண்டவனும் நெட்டோட்டம் ஓட மாட்டார்களோ.
பாட்டி,பொங்கல் வச்சியோ?
ஆமாடி. பொங்கல் இன்னிக்கு. பீ வார்ற மும்முரத்திலே அதுவும் நினைவு வரலே. நீ பண்ணினியோ டி?
கன்சர்ன்லே போய் சாப்பிட்டேன். ஸோ ஸ்வீட். ஆமா, உன் பிறந்த நாள் நாளைக்கு இல்லே?
உங்கப்பன் எப்பவோ கேட்டு டயரியிலே குறிச்சுண்டு போனான். எது மறந்தாலும் இதையும், உங்க தாத்தா ஜன்ம தினத்தையும் மறக்க மாட்டான்.
அப்பா நாக்பூர்லே காரியக் கமிட்டி மீட்டிங் போயிருக்கார். போற போது உன்னைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னார்.
இல்லாட்ட மாட்டியோ.
நீ உன் பிறந்த நாளுக்கு எனக்குக் காசு கொடுத்தா பேசுவேன். எண்பத்து ரெண்டாவது பர்த் டே. வருஷத்துக்கு பத்து போட்டா, எண்ணூத்து இருபது ரூபா. முழுசாக்கி ஆயிரத்துக்கு மணியார்டர் அனுப்பு. சில்லுண்டி செலவுக்காகும்.
காலேஜ் படிக்கற பொண்ணுக்கு என்னடி செலவு?
இல்லாம என்ன? பானி பூரி வாங்க, பேல் பூரி வாங்க. காதிலே போட்டுக்க ஸ்டட், நெத்தியிலே வச்சுக்க பிந்தி, பிங்க் கலர் சூரிதார், சண்டிகர் பைஜாமா, ஜிம் ரீவ்ஸ் ரிக்கார்ட், ராஜ்கபூர் படத்துக்கு சிநேகிதியோட போக டிக்கெட், கரும்பு ஜூஸ், கோலாப்பூரி செருப்பு, பெர்ரி மேஸன் நாவல், சித்தி விநாயகருக்கு காணிக்கை, ஐஸ்கிரீம், ஆப்கன் ஸ்நோ, பிரஞ்ச் செண்ட், மாடுங்கா கடையிலே தேங்குழல்.
ஏ’யப்பா, எனக்கு வயசு எண்பத்து ரெண்டுன்னா உனக்கு நூறு விஷயம் செலவு பண்ண இருக்கேடி.
தாத்தாவுக்கு அடுத்த மாசம் எண்பத்தி ஏழு வருதே. அப்போ பார்.
ஒரு வினாடி தொண்டை அடைக்க நின்றாள் கற்பகம்.
ஏய், இருக்கியா போய்ட்டியாடி கல்பு? உன் ஸ்வீட் ஹார்ட் பெறந்த நாளுக்கு இன்னும் பெரிய லிஸ்டோட கூப்பிடறேன். சரியா.
அதுக்குள்ளே பகவான் என்னைக் கூப்பிடட்டும்னு வேண்டிக்கோடி கொழந்தே.
ஹலோ ஹலோ என்று அந்தப் பக்கம் பேத்தி கூப்பிட்டபடி இருக்க, கற்பகம் சன்னமாகச் சொன்னாள்.
அப்புறம் பேசறேண்டி செல்லம். உங்க தாத்தா விழுந்து எழுந்திருந்திருக்கார்.
அவள் போனை வைத்து விட்டு நிமிர்ந்தபோது, பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம். லிங்கம் நீலகண்டனுக்குக் குளித்து விட்டுக் கொண்டிருக்கிறான். வாளி வாளியாகக் குழாயில் தண்ணீர் பிடித்து டெட்டாலைக் கொட்டிக் கலந்து மேலே அடித்துக் கழுவி இன்னும் ஐந்து நிமிஷமாவது விடாமல் செய்வான்.
இதெல்லாம் போன புரட்டாசி வரை கற்பகம் தான் செய்தது. ரத்த அழுத்தமும், நரம்புத் தளர்ச்சியும் அவளை ஓய்த்த போது பம்பாயிலிருந்து பிள்ளைகள் ரெண்டு பேரும் வந்தார்கள். அவளை பம்பாய் கூட்டிப் போவதில் அக்கறை காட்டினார்கள்.
அப்பாவை இங்கே ஆஸ்பத்திரியிலே விட்டுட்டுப் போயிடலாம்.
சித்தப்பிரமையோட, உடம்பு ஷீணத்தோட இருக்கார் அவர். இப்போ தான் நான் கூட இருக்க வேண்டியிருக்கு. எங்கேயும் வரலே.
கற்பகம் தீர்மானமாகச் சொல்லி விட்டாள். அடித்தாலும் திட்டினாலும் நீலகண்டனுக்கு கற்பகம் இல்லாமல் முடியாது.
நாற்பது வருஷம் முன்பு மோகாவேசத்துடன் இடுப்பைப் பிடித்து இழுத்து மடியில் போட்டுக் கொஞ்சிக் கலந்த, சதா சர்வ காலமும் போகம் போகம் என்று அலைந்த நீலகண்டன் இல்லை இப்போது நடு வீட்டில் மலம் கழிக்கிற நீலகண்டன்.
அவருக்கு நாள் நட்சத்திரம் பகல் ராத்திரி எதுவும் கணக்கில்லை. கற்பகம் மட்டும் மனசில் எப்போதும் உண்டு. அந்தப் பெயரும் நினைப்பும் கூட இன்னும் கொஞ்ச நாளில் மறந்து போகலாம்.
கல்ப்பு. தொடச்சு விடுடி. குளிர்றது.
பாத்ரூம் வாசலில் ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிற நீலகண்டன் சத்தம் போட்டார்.
வாளியில் தண்ணீர் சேந்தி வந்து ஹால் சுவரை எல்லாம் கவனமாகத் துடைத்தான் லிங்கம். ஒரு சின்ன அருவெறுப்பும் இன்றி ஈரத் துணியை பாத்ரூமில் பிழிந்து அலசி திரும்ப டெட்டால் ஊற்றி எடுத்து வந்தான் அவன்.
அஞ்சலை இருந்தாள் இதையெல்லாம் செய்ய. அவளும் இப்படித்தான். கொடுத்த காசுக்கான வேலை இல்லை அவள் செய்ததும். கற்பகம் மேல் கரிசனமும், அவள் வயசும் தள்ளாமையும் குறித்த பரிதாபமுமாக அஞ்சலை நாள் முழுக்க இங்கே இருந்திருக்கிறாள். நீலகண்டன் உடுப்பெல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு பாத்ரூம் வாசலில் நின்று அஞ்சலை தான் குளிப்பாட்டணும் என்று அடம் பிடித்த தினத்தில் வெளியே ஓடியவள் தான். திரும்பி வரவேயில்லை.
லிங்கம் மேல்நர்ஸாக அடுத்த வீட்டு டாக்டர் மூலம் கிடைத்தான். அண்டை அயலில் எல்லோருக்கும் கற்பகம் வீட்டு நடவடிக்கைகள் வேடிக்கை பார்க்க, அவ்வப்போது கரிசனம் காட்ட வேண்டிய நிகழ்ச்சிகள்.
பம்பாய்லே உங்க் பிள்ளை ஆள் அம்பு அரசியல்னு பிரபலமா இருக்கார். எல்லா பம்பாய்ப் பேப்பர்லேயும் பொழுது போய்ப் பொழுது விடிஞ்சா அவர் படம் தான். கஷ்டமே படாம ஹாய்யா இருக்கலாம். மும்பாய்க்கே போயிடுங்கோளேன். நாங்களாச்சு, நீலு மாமாவை அப்பப்போ ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்துக்கறோம்.
இதெல்லாம் தன் மினிஸ்டர் பிள்ளை சொல்லி வைத்து அவர்கள் பேசினது. அப்படித்தான் கற்பகம் நினைக்கிறாள். தப்பு சொல்ல முடியாது. அவள் அந்தப் பக்கம் இருந்தாலும் இதேதான் பேசுவாள்.
அம்மா, ஐயா போட்டுக்க டயாபர் கொடுங்க.
லிங்கம் கேட்டான்.
எதுக்கு அது லிங்கம்? ஓரமாப் போய் அவுத்துப் போட்டுட்டு அக்கடான்னு கட்டில்லே படுத்துண்டாறது. ஒண்ணுக்குப் போய் நனைஞ்ச பெட்ஷீட்டை பாத்ரூம் ஓரமா குவிச்சு வச்சிருக்கேன் பாரு.
பாவம், குழந்தை மாதிரி ஆயிட்டார். நான் அலசிடறேம்மா.
அவனுக்குச் சலிப்பு வருவதில்லை. வேலைக்கு அவன் சளைப்பதே இல்லை.
இன்னும் மூணு மாசம் கழித்து வெய்யில் ஆரம்பிக்கும்போது தண்ணீர்க் கஷ்டமும் வந்துவிடும். தினசரி நீலகண்டனுக்காக இவ்வளவு செலவு பண்ண முடியாது.
கற்பகம்.
நீலகண்டன் டயாப்பரும் மேலே பனியனுமாக பெரிய சைஸ் குழந்தை போல் கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு கையைத் தூக்கினார்.
என்ன வேணும் இப்போ?
ரசம் கொடுடீ கல்ப்பு. நாயுடு ஹைகோர்ட்டுலே வச்சு வெங்காய வடை வாங்கிக் கொடுத்தான். கூடவே முட்டாய் மாதிரி தித்திப்பா எலுமிச்சம்பழ சர்பத்தும். சாப்பிட்டது இன்னும் ஏப்பம் ஏப்பமா வருது. படுத்துக்கறேன். ராத்திரியாயிடுத்து.
டெலிபோன் அடித்தது.
ராத்திரியா? ஜன்னல் பக்கம் பாருங்க. சூரியன் கண்ணைக் குத்துது. காலை நேரம். நாஷ்தா பண்ற டைம் சார்.
லிங்கம் சிரித்தான். சும்மா இருடா நாயுடு என்றார் சார்.
சாப்பிட்டுட்டு தூங்குங்கோ. ரசஞ்சாதம் பிசைஞ்சு தரேன். லிங்கம் ஊட்டி விடுவான்.
கற்பகம் நிதானமாக நடந்து போய் ஃபோனை எடுத்தாள்.
May 21, 2025
அமெரிக்கா(னா)விலிருந்து அடிசெ எழுதிய அடுத்த புனைகதை
சிமாமண்டெ அடிசி விருது பெறாவிட்டாலும், சரவணன் Saravanan Manickavasagam சொல்கிற மாதிரி ஓர் இலக்கிய சூப்பர்ஸ்டார்..
அவரது மூன்றாம் நாவல் டெத் கவுண்ட் நூலை அடுத்துப் படிக்க வேண்டும். அடிசியின் இரண்டாவது மெகா நாவலான அமெரிக்கானா பற்றி என் அல்புனைவு வாதவூரான் பரிகள் நூலில் இருந்து –
அமெரிக்கானா
————————
கருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும் சோடை போனதில்லை.
இவற்றின் பொதுவான கதையாடலை சிக்கலெடுத்துப் பார்த்தால் நேர்கோடாக இப்படி வரலாம் – மறு நாட்டில் பொருள் தேடிக் குடியேறிய கதை சொல்லி பங்கு பெற்ற நிகழ்வுகளாகக் கதை முன்னேறி, ஒரு கட்டத்தில் வாழ்க்கை குறித்த தரிசனம் கிடைத்து போதும் இது என்று சொந்த பூமிக்குத் திரும்பப் புறப்படுவதோடு கதை முடியும்.
சிமாமண்டா-வின் நாவல் அமெரிக்கானா இந்த இடத்தில் தொடங்குகிறது.
சிமாமண்டா எங்கோஸி அடிசெ, கருப்பர் இன உரிமைப் போராளி, வெகுவாக வாசிக்கப்படும் ஆங்கில எழுத்தாளர், பிரபல பெண் எழுத்தாளர், ’எல்லோரும் ஃபெமினிஸ்ட் ஆகணும்’ என்று முழக்கமிடும் பெண்ணிய வாதி, மனித உரிமைப் போராளி என்று மாய மேலங்கிகள் அணிந்து ஸ்வயம் தொலைந்த கால-இட வெளியில் space time continuum சத்தியம் தேடும் சக மனுஷி என்பது பொருள் மற்றும் விஷய கனமான இந்த நாவலில் வெளியாகிறது.
நைஜீரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் இஃபமேலு என்ற இளம்பெண் தான் அமெரிக்கானா நாவலின் உயிர்ப்பிடிப்பான கதை சொல்லி. நான், எனது என்று தன்மை ஒருமையில் நாவல் எந்தத் தடங்கலுமின்றி நகர்கிறது.
இப்படித் தன் கதை சொல்வதான மாயப் புனைவு இழைகளை ஊடும் பாவுமாகச் சேர்த்து நெய்யும்போது பாத்திரப் படைப்பு சகல கல்யாண குணங்களோடுமுள்ளதாகத் திகழ வேண்டியதில்லை. சூப்பர் மார்க்கெட் வரிசையில் பின்னால் நின்று தேகம் பருத்த கதை சொல்லியை உடல் விமர்சனம் செய்கிற யாரோ, ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கையில் வடிய விட்டுக்கொண்டு ஐஸ் க்ரீம் சாப்பிடும் அந்நியன், விமானத்தில் அடுத்த இருக்கையில் அமர்ந்து கருப்புக் குழந்தையை தத்து எடுக்கும் வெள்ளை அமெரிக்கன் பற்றிப் பேசுகிற கம்பெனி மானேஜர் இப்படி கண்ணில் படும், ஒரு நிமிட பேச்சு நடத்திப் போகும் பலரும் நாவல் கதாபாத்திரங்களாக மின்னி மறைகிறார்கள். அந்த கம்பெனி மேனேஜர் உண்மையாகவே கருப்பினக் குழந்தையைத் தத்தெடுத்தவர் என்று பின்னால் வரும்.
இவர்களில் சிலர் நீண்ட காலம் சென்று மறுபடி இஃபமேலு வாழ்க்கையில் குறுக்கிடும் சுவாரசியமும் கொண்ட கதையாடல் அமெரிக்கானா நிகழ்த்திப் போவது.
தன்மை ஒருமையில் எழுதப்பட்ட ஆதிகதை எது என்று தெரியவில்லை. அந்தக் கதைசொல்லி எழுத்தாளன் தான் என்று பரவலாக நம்பிய ஆதிவாசகன் இன்னும் பல பிரதிகளாக உயிர்த்திருக்கிறான்.
’நான் இஃபமேலு இல்லை. அவளாக இருந்திருந்தால் என் வாழ்க்கை சுவாரசியமாக இருந்திருக்கும்’ என்று சிமாமண்டெ விவரம் சொன்னாலும் விளக்கம் கேட்கிறவர்கள் கேட்டபடிதான் இருக்கிறார்கள். எழுத்தாளர் விரல் சுண்டி நாவலில் வரும் இன்னொரு கதாபாத்திரத்தைக் காட்டிச் சொல்கிறார் – ’இந்த பாய் ஃப்ரண்ட் தான் நான். நான் பெண் அவன் ஆண் என்றாலும் அது அப்படித்தான்’.
பாய்ஃ ப்ரண்ட்டுக்குப் பஞ்சம் இல்லாத கதை இது. பதின்ம வயதில் சிநேகிதனும் உடலுறவும் கிடைக்கும் இஃபமேலு அதற்கு அப்புறம் எத்தனையோ பேரோடு உறவு கொள்கிறாள். அவர்கள் மூலம் கிட்டும் நிதர்சனம் கருப்பினம் என்பது ஒற்றை இனப் பகுப்பு இல்லை. அமெரிக்கக் கருப்பர்கள் மற்ற நாட்டு, பிரதேசக் கருப்பர்களை விட சமூகரீதியில் மேம்பட்டவர்கள். பிரஞ்சு பேசுகிற நைஜீரியக் கருப்பர்கள், கரிபியன் கருப்பர்கள், இதர ஆப்பிரிக்கக் கருப்பர்கள் என்று colour gradation மற்றும் மொழி, சமூகம், நாட்டு அடிப்படையில் வேறுபடும் கருப்பர்கள் உண்டு. It would be an interesting exercise to profile all of them.
நைஜீரியப் பெருநகர் லாகோஸிலிருந்து இங்கிலாந்து வழியாக அமெரிக்கா வந்து, நடுத்தர வர்க்க்க தம்பதியர் இல்லங்களில் குழந்தை பார்த்துக் கொண்டு வரும் வருமானம் குறைவுதான் எனினும் மிச்சம் பிடித்து நைஜீரியாவில் அம்மா அப்பாவுக்கு மாதாமாதம் அனுப்பி வைக்க இஃபமேலுவுக்கு முடிகிறது.
இதனிடையே இஃபமேலு இண்டர்நெட்டில் ஏற்படுத்திய ப்ளாக் ஏகப் பிரசித்தி அடைகிறது. அதன் மூலம் வருமானமும் உயர்கிறது. ஒரு அமெரிக்க வெள்ளையர் மூன்று வருட சிநேகிதனாகக் கிட்ட, கல்யாணமின்றிக் கூடி வாழ்கிறார்கள் இருவரும்.
அவனுக்கு இன்னொரு வெளுத்த அமெரிக்கப் பெண் சிநேகிதம் கிட்டுகிறது. இஃபமேலுவுக்கு அது தெரிய வர, வெறுத்துப்போய் நைஜீரியா திரும்புகிறாள். அவளுடைய முதல் – பதின்ம வயது சிநேகிதன் தன் குடும்பத்தைப் புறக்கணித்து இஃபமேலுவுக்கு மறுபடி சிநேகிதனாக, அடுத்த கூடியிருந்து வாழ்தல் தொடங்குகிறது. அமெரிக்கானா கதை நடக்கும் பாதை இது.
கேமிரா பார்வையும், staccoto சொல்லாடலுமாக நாவல் முன்னால் போகிறது. பெண்களுக்கு முடி சீர் செய்யும் சலூனுக்கு இஃபமேலு ஒரு வெப்பமான பகல் நேரத்தில் டாக்சியில் போய்க் கொண்டிருக்கிறாள். டாக்சி ட்ரைவர் ஒரு மத்திய வயது நைஜீரியர். அவர் பெயர், வாழ்க்கை பற்றிய அவரது கண்ணோட்டம், இஃபமலுவோடு அவர் நைஜீரியா பற்றிப் பகிர்ந்து கொண்டது என்று நகரும் டாக்சி, முடி திருத்தகம் வந்து நிற்கிறது.
அது அழுக்கான புறநகர்ப் பகுதியில் இருக்கும் திருத்தகம். வெள்ளைக்கார பெண்கள் தப்பித் தவறிக்கூட உள்ளே நுழைய மாட்டார்கள். அப்படியே புகுந்தாலும் ஆயிஷா சலூன், ஆமினா சலூன் போன்ற பெயர்கள் அவர்களைத் திருப்பியனுப்பி விடும்.
உள்ளே இரண்டு பெண்களுக்கு முடி திருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுவர் ஓரம் பழைய டெலிவிஷனில் ஏதோ ஒரு நைஜீரியத் திரைப்படம் கரகரவென்று ஒலி, ஒளி தகராறாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் கதாநாயகன் மனைவியை அடிக்கிறான். சுவரை ஒட்டி பழைய சோபாவில் முடிதிருத்தும் பெண்ணின் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. அவள் டிவி சினிமாவில் ஒரு கண்ணும், உறங்கும் குழந்தை மேல் மற்றதுமாக வாடிக்கையாளர் முடியை சீராக்கிக்கொண்டிருக்கிறாள். ஜன்னலை ஒட்டி தூசி அடைந்து ரிப்பேர் ஆகி ஒரு ஏர் கண்டிஷனர் தட்டுப்படுகிறது. நேர்கீழே ஹேர் ட்ரையர் கிடக்கிறது. அதுவும் பழுதாகிக் கிடக்கிறது. கடை உரிமையாளினி என்று தோன்றும் மத்திய வயதுப் பெண்ணிடம் இஃபமேலு, ‘முடியைப் பின்னல் போடணும்’ என்கிறாள்.
நாவல் முழுக்க இந்தக் கதையாடலின் மூலம் வாசகரைக் கட்டிப் போடுகிறார் சிமமண்டெ. இஃபமேலு கதை முன்னேற முன்னேற, நம்ம அலமேலு போல் அவள் நமக்கு நெருக்கமாகிறாள். அவள் நைஜீரியாவில் இருந்து மறுபடி அமெரிக்கா திரும்புவாள் என்று ஏனோ எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது.
May 20, 2025
காற்றினிலே வந்து காதில் தங்கிய நாதம்
எழுதக் கொஞ்சம் நேரமும், அச்சிலும், தேர்ந்தெடுத்து நெட்டிலும் வாசிக்கச் சற்று நேரமும், முதுகு வலிக்குக் சிறிது நேரமுமாக நாட்க:ள் நகர்கின்றன.
வாத்திமர் நாவல் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஜூன் இறுதியில் நிறைவு பெறும் புதுமையான இந்தப் புதினம்.
ஈதிப்படி இருக்க, சொல்வனம் இணைய இலக்கிய இதழில் நண்பர் சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய ‘ஐவர் – தமிழின் நம்பிக்கை’ என்ற கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. தேர்ந்த வாசகரும் விமர்சகருமான சரவணன் தேர்ந்தெடுத்த முதல் ஈடு நன்னம்பிக்கை நட்சத்திரங்கள் குறிப்பிடத் தகுந்தவர்களே.
ஐந்து பேர் என்பதை இருபத்தைந்து என்று நீட்சி பெறச் செய்தால் இன்னும் ரசமாக இருக்கும்.
அவர்களில் என் இளைய தலைமுறை எழுத்தாளர் நண்பர்கள் அனைவரும் இருப்பார்கள். குறைந்த பட்சம் ஆளுக்கு ஒரு நல்ல கதையாவது எழுதிப்பார்கள்.
சட்டென்று ஒரு பெயரைச் சொல்லச் சொன்னால் சட்டென்று மனதில் தோன்றுவது செந்தில் ஜெகந்நாதன்.
இவருடைய சிறுகதை அனாகத நாதம் இன்னும் பல காலம் என் உட்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
April 25, 2025
உலகப் புத்தக வாரம் 2025
என் நூல்களின் பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுனத்தினர் இந்த வாரம (ஏப்ரல்) 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் இறுதி வரை நீட்சி பெற்ற உலகப் புத்தக வாசிப்பு விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் விழாக்கால தள்ளுபடி 25% அளிக்கப்படுகிறது
ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கும் என் நூல்கள் –
நாவல்கள்
1) மூன்று விரல்
2) அரசூர் வம்சம்
3) விஸ்வரூபம்
4) அச்சுதம் கேசவம்
5) வாழ்ந்து போதீரே
6) நெம்பர் 40, ரெட்டைத் தெரு
7) தியூப்ளே வீதி 1975
9) ராமோஜியம்
10) மிளகு
11) தினை அல்லது சஞ்சீவனி
12) பீரங்கிப் பாடல்கள் (மலையாளத்திலிருந்து நேரடி மொழியாக்கம்)
13) Ghosts of Arasur (அரசூர் வம்சம் நாவல் இங்க்லீஷ் மொழியாக்கம்)
சிறுகதை, குறுநாவல் தொகுப்புகள்
———————————————-
14) இரா.முருகன் கதைகள் (omnibus edition)
15) நண்டுமரம்
16) மயில் மார்க் குடைகள்
16) இரா.முருகன் குறுநாவல்கள்
———————————————-
அல்புனைவு நூல்கள் (கட்டுரைத் தொகுப்புகள்)
17) ராயர் காப்பிகிளப்
18)அற்ப விஷயம்
19) லண்டன் டயரி
20) இதுவும் அதுவும் உதவும்
21) ஏதோ ஒரு பக்கம்
22) எடின்பரோ குறிப்புகள்
23) வாதவூரான் பரிகள்
24) வேம்பநாட்டுக் காயல்
25) யாதும் ஊரே
வாங்கி வாசித்து விழா சிறக்கச் செய்ய வேண்டுகிறேன்
Ramjee Narasiman is with Abul Kalam Azad and
April 13, 2025
கமல்ஹாசன் என்ற Shape Shifter
படிக்கத் தொடங்கிய புத்தகம் நண்பர் கே.ஹரிஹரன் எழுதிய ‘Kamal Hassan -A Cinematic Journey’ (கமல்ஹாசன் – ஒரு திரைவெளிப் பயணம்.).
ஹரிஹரன் தேசீய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் மேநாள் திரைப்படக் கல்லூரி முதல்வர்.
ஒரு பத்து வருடம் போல் இந்தப் புத்தகத்துக்காக உழைத்திருக்கிறார் ஹரிஹரன் என்பதை அறிவேன்.
கமல் என்ற Shape Shifter பன்முக ஆளுமை குறித்து எழுதும்போது தொடர்ந்து இற்றைப்படுத்திக் கொள்ள (update) வேண்டியது அவசியம். ஹரிஹரன் அதை சீராகக் கடைப்பிடித்திருக்கிறார்.விதந்தோதுதலோ hyperbole-ஓ (உயர்வு நவிற்சி) இல்லாமல், அதே நேரம் நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுமான உரைநடையுமாகப் புத்தகப் பக்கங்கள் நகர்கின்றன.A Harper Collins publication
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
