நானும் கலாப்ரியாவும்

இன்று அகவை எழுபத்தைந்தில் அடியெடுத்து வைக்கும் என் அருமை நண்பன் பெருங்கவிஞர் -நாவல் ஆசிரியர் –கட்டுரையாளர் கலாப்ரியாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்..

கோவில்பட்டியில் இன்று கலாப்ரியா -75 விழா சீரும் சிறப்புமாக எடுக்கப்படுகிறது.

இன்று வெளியிடப்படும் விழா மலரில் என் கட்டுரை –
———————————————————————
. கலாப்ரியாவும் நானும்
எது கவிதை?

தொடக்கப் பள்ளிக் காலத்தில் வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு குழு இசைப் பாடல். ’கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே’ என்று பிரார்த்தனைப் பாடலைத் தொடர்ந்து ’பாரத சமுதாயம் வாழ்கவே’. அது நிறைவு பெற, ’பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ இப்படி அடுத்த ஒரு மணி நேரம் நாங்கள் பாடியதெல்லாம் பாரதியின் உன்னதமான கீதங்கள் என்று பின்னர் தெரிய வந்தது விசேஷமான ஒரு தினத்தில். அறுபதுகளின் மதராஸ் மாகாண அரசு ஒரு பதினாறு பக்கப் புத்தகத்தை வெளியிட்டு பள்ளி தோறும் விநியோகிக்க ஏற்பாடு செய்தது. ஏழு வண்ணத்தில் கோபுலு என்ற ஓவிய மேதையின் கோட்டுப் படங்கள்..கூடவே நேர்த்தியாக அச்சாகி இருந்தன எங்கள் வெள்ளிக்கிழமை பாடல்கள்..
அட்டையில் முண்டாசு தலையோடு ஒரு மீசைக்காரன் படம். அதன் கீழ் பாரதியார் கவிதைகள் என்று பெரிய எழுத்தில் அச்சடித்திருந்த அந்த புத்தகப் பிரதி ஒன்றுக்கு பதினாலு நயாபைசா வாங்கிக் கொண்டு விநியோகம் நடத்தப்பட்டது. ஓசியில் கொடுத்தால் குப்பையில் போட்டுவிடுவார்கள் என்று குழு மனோபாவம் தெரிந்த காங்கிரஸ் அரசு அப்போது புத்திசாலித்தனமாகச் செயல்பட்டது.

ஆக tகவிதை என்றால் வெள்ளிக்கிழமை சாயந்திரம் பார்த்துப் பாட உருவாக்கிய படங்கள் நிறைந்த புத்தகம் என்று அர்த்தமானது.

மேல் வகுப்பு போனபோது தெருவில் சுந்தரம் வீட்டில் அவன் அக்காவைப் பொண்ணு பார்க்க வந்தார்கள்..’நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி’. என்று சுமாராகப் பாடி, வந்தவர்களுக்கு பொண்ணு பிடிச்சுப் போச்சு.
.
சுத்தானந்த பாரதி எழுதிய ஜோன்புரி ராகக் கீர்த்தனம் என்று சொன்னார்கள். எங்கள் ஊர்க் கவிஞர் சுத்தானந்த பாரதியார் எழுதிய அந்தக் கீர்த்தனம் கவிதை இல்லை என்றால் வேறு யார் எழுதியது கவிதையாக இருக்க முடியும்.?

பிற்காலத்தில் பக்தவத்சலம் அரசு நாடு முழுக்கப் பரவிப் பணி முடக்கிய ரயில்வே ஸ்டிரைக்கை உடைக்க சகல கவிஞர்களும் புத்திமதி சொல்லும் கவிதை எழுதி ஆகாசவாணியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்தது. சுத்தானந்த பாரதியாரும் ’வேண்டாம் வேண்டாம் வேலை நிறுத்தம் இனி வேலை செய்வதே பொருத்தம். டண்டண் டணடண. டண்டண் டண்டண் என்று வானொலியில் ’பாடினார். ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் ஆனது.

பள்ளியில் பாரதி பாட்டு, பேச்சு என்று நடத்த யாரோ வந்தார்கள். நாங்கள் வழக்கமாகப் பாடும் பாரத சமுதாயம் வாழ்கவே அவரும் பாடினார். முடிந்து மகாபாரதம் பல குரல் நிகழ்வாகச் சுழல் பிரிந்தது.. ஒற்றையராக வந்த கூத்தாடி கண்ணன் ஆனார் பாஞ்சாலி ஆனார் தருமனும் சகுனியும் ஆனார். சூதில் தர்மன் தோற்க, பாட்டு ஒலித்தபின் ரௌத்திரமே உருவாக அவர் குரலில் பீமன் சொன்னான் – ’இனிப் பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டுவா கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்’.

பீமன் எந்தப் பாட்டும் பாடாமல் சீற்றமும் சுய பச்சாதாபமுமாகக் குரல் பேதம் காட்டிப் பேச பக்கத்தில் இருந்த ஆசிரியர் ஒருவர் அற்புதமான கவிதை என்றார்..கவிதைக்கான. பிள்ளைப் பிராய கவிதை பொருளை மாற்றிக் கொண்டேன்.

செயற்கை அறிவு உள்ளே செலுத்தப்பட்ட இயந்திரம் போல அடுத்து பார்க்கக் கிடைத்த கவியரங்கம் மூலம் கவிதை பற்றிய என் புரிதலை மேலும் தெளிவாக்கிக் கொண்டேன்.. குறுந்தாடி வைத்தவர்கள் பாட்டுக்கும் உரையாடலுக்கும் நடுவில் குரலை வைத்துக்கொண்டு இங்கிலீஷ் வாய்ப்பாடு சொல்கிற தொனியில், தாடையைச் சொரிந்து கொண்டு, நாலு வார்த்தைகளுக்கு ஒரு தடவை சொன்னதைத் திருப்பிச் சொல்வது என்று பள்ளிக்காலத்து இறுதிப் புரிதல் அல்லது அவதானிப்பு இருந்தது.

அது 1960களின் இறுதியான காலம். யாப்பு இலக்கணம் வழுவாமல் எழுதிய கவிதைகளை கண் சிவந்து உடல் பதற கவியரங்கக் கோபத்தோடு பழைய காலத்தை நீட்டும் சான்றோர் கவிதைகளும் பாரதி என்ற பெயர் ஒட்டிய கவிஞர்களும் பிரகாசித்த காலம்..அவையன்றி சிவப்பு சிந்தனைக் கவிஞர்கள் பழைய மரபுப்படி பொங்கல் மலருக்கு எழுதிய பாடல்கள் பாரதியாரையும் பாரதிதாசனையும் போலி செய்து ’பரவாயில்லை, இருக்கட்டும்’ என்று பரவலான வாசிப்புக்கு உயிர் கொடுத்தன.

அது சிவகங்கை கல்லூரியில் கவிஞர் மீரா பேராசிரியராக இருந்த காலம். அவர் கவிதைகளை டண்டண்டனடன என்று தாளம் போட்டுப் பாட இயலாது. மீராவின் ‘கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள்’ என்று அல்ஜீப்ராவில் சமன்பாடு போல எழுதித் தொகுத்த அந்தக் கவிதைத் தொகுப்பு மூலம் அ-மரபு அ-வசன அடையாளத்தோடு எளிய படிவம் கூடுதல் பரிச்சயமானது.மீராவின் நட்பு வளையத்தில் இருக்க வாய்ப்பு கிட்டிய அப்புறம் புதுக் கவிதை என்ற சொல் பரிச்சயமானது. நவ கவிதைகள் என்று ஒன்பது கவிஞர்களின் படைப்புகள் மீராவால் அன்னம் பதிப்பாக வெளியாகி இலக்கிய பெருவெளியில் சலனம் ஏற்படுத்தின.

பிரம்மனுக்கு நான்கு முகம், புதுக் கவிதைக்கு நூறு முகம்.. புதுக் க்விஞர்கள் தமிழகம் முழுக்கத் தலையெடுத்தனர். காலம் தப்பி முன்னால் 1940களில் கவிதை செய்திருந்த மூத்தோர் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா போன்றாரும் பரவலாக மேவிய இந்தப் பெருக்கை ஒதுங்கி நின்று பார்த்தார்கள். ஏற்கனவே புதுக்கவிதை எழுதி வந்த அபூர்வ இனமான மரபு பழகிய கவிஞர்கள் ஞானக்கூத்தனும் வைதீஸ்வரனும் எந்த பாதிப்பும் இன்றி அவர்கள் கவிதை என்று தேர்ந்ததை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

கோவையில் வானம்பாடிகள், சென்னையில் மாலன், சுரமணியராஜு, பாலகுமாரன், மதுரையில் ஜெயபாஸ்கரன், மேத்தா, இரா.மீனாட்சி, நா,காமராசன் என்று ஒரு அணி. சிவகங்கையில் தனியராக மீரா. நெல்லையில் ஏற்கனவே கவனப்படுத்தப் பட்டிருந்த நம் அருமை கல்யாண்ஜி, கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி’ அப்போது தான் அவர் கவிதையில் இருந்து வாசகர் நெஞ்சங்களில் புகுந்தாள். அக்காலம் அழுத்தமாகக் கவி நெசவு செய்து உருவாக்கிய இரவிலே சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவில்லை, நிர்வாணத்தை விலையாக்கினோம் ஆடை வாங்க, பூமிப் பந்தைப் புரட்டிப் போட்டும் நெம்புகோல் கவிதையை யாரெழுதப் போகிறீர்கள் போன்ற அப்போது காத்திரமாகத் தென்பட்டு பரபரப்பாக பேசப்பட்ட’, இந்த ஐம்பது ஆண்டுகளில் தேய்வழக்கான புதுக்கவிதை வரிகள் உண்டு. புதுக் கவிதை என்ற பெயரே க்ளீஷே ஆகிவிட்டது. எனில், சந்தம் என்ற, கலைமகள் ஈந்த வரம் முலம் தமிழ் மரபுக் கவிதை தேய்வழக்கு ஆவதில்லை.-அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள், பரந்து கெடுக உலக இயற்றியான், தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.எல்லாம் இன்னொரு நூறாண்டு இருக்கும்.

கவிஞர் மீராவிடம் அடுத்து பதிப்பிக்கப் போகிறது எந்தக் கவிஞரின் படைப்பாக இருக்கும் என்று கேட்டேன் ஒரு சாயந்திர நேரத்தில். நெல்லைப் பக்கம் இருந்து காற்றடிக்கும் என்றார் அவர். கல்யாண்ஜியின் அடுத்த தொகுப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவ்வளவு தூரம் ஆழ அகலமாக கல்யாண்ஜியின் கவியுலகம் என்னை நல்ல பிசாசாக பாதித்திருந்தது.

அன்னம் அலுவலகத்தில் வெள்ளம் என்ற கவிதைத் தொகுப்பு கண்ணில் பட்டது. கலாப்ரியா எழுதிய கவிதைகள். அவரே அச்சமைத்திருந்த புத்தகம். கல்யாண்ஜிக்கு அடுத்து அந்தக்கால இலக்கிய வட்டாரத்தில் கூடுதலாகப் பெயர் சொல்லப்பட்ட கவிஞர் கலாப்ரியா..
இந்த நாள் வரை கலாப்ரியா கவிதை எதுவும் படிக்காமல் போனோமே என்ற அங்கலாய்ப்போடு வெள்ளத்தில் இறங்கினேன்..

கவிதை பற்றிய என் நினைப்பைத் தலை குப்புற சாய்த்தன கலாப்ரியா என்ற திருநெல்வேலிக் கவிஞரின் படைப்பாக்கங்கள்.

கலாப்ரியாவின் கவிதைகள் ஒன்று அல்லது மேற்பட்ட கவிதை mise en scene (காட்சி வெளி) – ஒரு காட்சியில் இடம் பெறும் பொருள்கள், நடிக நடிகையர் நிற்கும், நகரும் விவரங்கள். காமிரா வைக்கும் இடம், நகர்வு, ஒளியமைப்பு முதலியவற்றை கதையாடலின்படி அமைப்பது). காட்சிக்கான ஒலியமைப்பு இதில் வராது. மிக நுணுக்கமாக பார்த்துப் பார்த்துச் செய்த அரங்க நிர்மாணம் போல் கலாப்ரியாவின் கவிதைகள் நுணுக்கமாகச் செதுக்கபப்டுகின்றன.
இன்னொடு தளத்தில் கலாப்ரியா கவிதைகள் சிதைமேல்மீயுருவாக்கத்தை சுபாவமாகக் கட்டமைக்கின்றன. வீட்டில் மங்கல நிகழ்வு நேரம். வீட்டுப் பெண்கள் எல்லோரும் பெண்ணலங்காரம் தேர்ந்த அத்தையிடம் தம் கையில் மருதாணி இட்டுக் கொள்ளும் இனிய மாலைப் பொழுது. எல்லோரும் மகிழ்வோடு மருதாணி இட்டு சிவந்து நளினம் காட்டும் அழகுக் கரங்களோடு வளைவர கவிதை பாதி முடிகிறது. அந்த விதவை அத்தை தனக்கு விலக்கப்பட்ட மருதாணி மற்றவர்கள் கை முழுக்கச் சிவக்க வைத்ததில் நாணமும், பெருமையும், துயரமுமாக கொல்லைப் பக்கம் கிணற்றடியில் விம்மலோடு தன் வெறுங்கை பார்த்து நிற்கிற ஓற்றை நிகழ்வு கவிதையின் இறுதி வரிகளாகிறது.

மொபைல் தொலைபேசி வர ஐம்பது வருடம் முந்திய காலம் என்பதால் கலாப்ரியா பற்றிய செய்திகள், அவர் கவிதைகள் மெல்லத்தான் வந்தடைந்தன. கலாப்ரியா (அந்தக் காலத்தில்) என்னைப் போல் வங்கி ஊழியர்..

இதெல்லாவற்றையும் விட கலாப்ரியாவும் கல்யாண்ஜியும் ஒரே ஊர்; நெல்லை; ஒரே தெரு; சுடலைமாடன் தெருக்காரர்கள். கல்யாண்ஜி சசிகலாவைப் பார்த்திருப்பாரா? கருப்பு வளையல் கையோடு பெருக்கிப் போனவள் கலாப்ரியா பார்வையில் பட்டிருப்பாளா?

கலாப்ரியாவின் சுடலைமாடன் தெரு அவருடையது; எனில் அந்த மனிதர்களும் சூழலும் கல்யாண்ஜிக்கு கலந்து இடை பழகிய அனுபவம் கொடுத்ததில்லை. இருவருக்கும் சித்தித்தது இருவேறு உலகங்கள். ‘நான் பார்த்த பெண்ணை நீ பார்த்ததில்லை நீ பார்த்த காட்சி நான் பார்த்ததில்லை’ வகைதான். Universe – alternate universe இல்லை.

கலாப்ரியா எப்படி இருப்பார்? நமக் ஹராம் இந்திப் படத்தில் கதாநாயகன் ராஜேஷ் கன்னாவின் நண்பனாக, சதா கவிதை சொல்லும் கவிஞனாக வரும் குணசித்திர நடிகர் ராஸா முரத் மாதிரி இருப்பும் கவிப் பொழிவுமாக இருப்பரோ? அவர் இருக்கட்டும். சசிகலா எப்படி இருப்பார்? காஞ்சனா போல்? வேண்டாம்.
சசிகலா சசிகலா மாதிரித்தான் இருப்பார்.

கவிதைத் தொகுப்பின் உள் அட்டையில் பாலகுமாரன் ’சசிகலாவுக்கு சிம்மாசனமாவது வெங்காயமாவது, டர்ட்டி ஃபெலோ’ என்று வாழ்த்தி இருந்தார். கலாப்ரியா கவிதைத் தொகுப்பு பற்றி சுஜாதா கருத்து சொன்னது ’புத்தகத்தின் அட்டையில் புத்தகத்துக்கான கடுமையான விமர்சனத்தைப் பிரசுரிப்பதால் அந்த எதிர்ப்பு முனை மழுங்கி விடுகிறது’’.

கலாப்ரியாவை நேரில் சந்திக்க சிலபல ஆண்டுகள் (1990களின் மத்திய காலம்) ஆனது. நான் வங்கி செண்ட்ரல் ஆபிசிலும், கலாப்ரியா தென்காசியிலும் அதிகாரிகளாகி இருந்தோம்.

அன்புக்கு உரிய திருமதி திலகவதி ஐ.பி.எஸ் மேடம் அமிர்தா பதிப்பக வெளியீடாக முத்தான பத்து கதைகள் வரிசையில் என் கதைகளையும் வெளியிட்டபோது அவர்களும் நானும் ஏக காலத்திலே நினைத்தது – இந்த கதைத் தேர்வை நிகழ்த்தி முன்னுரை எழுதித் தரும்படி கலாப்ரியாவைத்தான் கேட்க வேணும். கலாப்ரியா உடனே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். சிறப்பான கதைத் தேர்வுக்கும், நேர்த்தியான முன்னுரைக்கும் உதாரணம் வகுத்த கலாப்ரியாவை செயல் மறந்து வாழ்த்துதுமே.

கலாப்ரியா கடிதங்கள்
சில கடிதங்கள் எவ்வளவு personal ஆக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் கலாப்ரியா, கல்யாண்ஜி வண்ணதாசன், அவருடைய தந்தையார் பெரியவர் தி.க.சி, முன்றில் மா.அரங்கநாதன் எழுதிய கடிதங்களும், ஆசான் சுஜாதாவின் மின்னஞ்சல், குறுங்கடிதங்களும் இந்த வகையில் வருபவை.

.நான் எப்படி கலாப்ரியா கவிதையில் மூழ்கியிருந்தேனோ அது போல் அவரும் என் கதைகளை விரும்பி வாசித்துக் கொண்டிருந்தார் என்று அவரது கடிதங்கள் மூலம் அறிய மகிழ்ந்தேன். கலாப்ரியாவிடமிருந்து வந்த கடிதம் அடுத்து இருப்பது –
அவர் சொன்னது என் மகன் விஷயத்தில் பலித்திருக்கிறது. மற்றதைக் காலம் தான் சொல்ல வேணும்.

கலாப்ரியா இரா.முருகனுக்கு எழுதிய கடிதம் – 1
dear murukan
இன்னும் பத்து மாதத்தில் பணி ஒய்வு பெறப் போகும் நேரத்தில் வங்கியில் அதிகாரி பதவிக்கு இண்டர் வியூ வந்தது. கிடைச்ச வரை லபம் போய்த்தான் பார்ப்போமே என்று பழைய ‘வங்கிப் பயிற்சிக் கல்லூரியின் புத்தகங்கள் சின்னச் சின்ன கை வெளியீடுகள் hand outs)களை யெல்லாம் தேடிப் பிடித்த போது.. 92-ல் வெளிவந்த IOBIAN ஐ ஓ பி யின் வீட்டிதழ்(home magazine) ஒன்று கிடைத்தது. இது எதற்கு இங்கே இருக்கிறது என்றபடி புரட்டினேன். பதினாறு வருஷத்துக்கு முந்திய R.Murugan, Officer CPPD., எழுதிய கதை ஒன்று வெளி வந்திருந்தது… வெறுங்காவல் என்ற கதை ஆஃபிஸில் நன்றாகப் படிக்க முடியவில்லை என்று வீட்டிற்கு எடுத்து வந்தது.. அப்படியே மேசை அலமாரியில் ஒளிந்திருக்கிறது…
நேர்முகத் தேர்வாவது ஒன்றாவது..கதையில் மூழ்கி விட்டேன்..இப்படித்தான் நடக்கும்… வீட்டை ஒதுங்க வைக்கிறேன் பேர்வழி என்று (இந்த வார்த்தைகளெல்லாம் அந்தக் கால குமுதம் விகடன் ஸ்டைல் கோமதி சாமிநாதன்..போன்ற எழுத்து ஸ்டைல்..) உட்கார்ந்தால் ஏதாவது நல்ல கடிதம் கிடைக்கும் அல்லது புத்த்கம் கிடைக்கும்.. அவ்வளவுதான் அதைப் படிப்பதிலேயே நேரம் கழிந்து விடும் அப்புறம் திரும்பவும் குப்பைகளை அப்படியே அடைச்சு வச்சிர வேண்டியதுதான்..(குப்பையா பொக்கிஷம்ல்லா அது..
சமீபத்தில் வீட்டிற்கு வந்த என் மருமகன் சொன்னார் மாமா நீங்க ஒருமணி நேரம் தள்ளீப் போயிருங்க இதை எல்லாம் கழிச்சுக் கட்டி பரணில் ஒன்றுமே இல்லாமல் செஞ்சுடறேன் என்றார். கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு வருஷ சேகரிப்பை
போகிப் பண்டிகை சமாச்சாரமாக்கறதா.. ஐயா நீங்க தள்ளிப் போங்க என்று சொல்வதற்குள் மகளே சொல்லி விட்டாள்..ஐயோ அப்புறம் சாம்சன் & டிலைலா கதை மாதிரி எங்க அப்பா பலத்தை இழந்துடப் போறாரு என்றாள்)
.முருகன் கதை யும் பதினாறு வருஷத்துக்கு முந்திய “பால முருகன்” படமும்.. சூப்பரா இருந்துச்சு.(இது இன்றைய வாசகர் கடித பாஷை). கதையில் வருகிற ஃப்லாட் வீட்டிற்கு நானும் ரவி சுப்ரமணியனும் போன போது . முருகனின் பையன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான் வீடிற்குள். அவனுக்கு முழுமையான கிரிக்கெட் செட் வாங்கிக் கொடுத்திருந்தார் அவன் வீட்டையே அதகளப் படுத்திக் கொண்டிருந்தான் முருகன் கண்டு கொள்ளவே இல்லை…எனக்கு முருகனும் ரவியும் பேசுவது கவனத்திலெயே இல்லை..பையனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ..அவ்வளவு சுதந்திரம் நம்ம வீட்டில் கொடுப்பமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..அவன் இப்பொது பெரிய பையனாக வளர்ந்திருப்பான் ஒரு முதிர்ந்த கிரிக்கெட் வீரனாய் மாறி இருப்பான்.. முருகன் சிறந்த எழுத்தாளனாகியிருப்பது மாதிரி…
கலாப்ரியா
இரா.முருகன் கலாப்ரியாவுக்கு எழுதிய கடிதம் – 1

என் அன்புக்குரிய கலாப்ரியா
மழை பெய்து ஓய்ந்த ஒரு காலைப் பொழுதில் உங்கள் கடிதத்தைப் படிக்கிறேன். மழை மனதில் பிறப்பித்த குளிர்ச்சி தொடர்கிறது. ஈ-மெயிலையும் இதமான இண்லண்ட் லெட்டர் வாசனையோடு எழுதக் கூடியவர் நீங்கள், நீங்கதான்.
கல்யாண்ஜி ஈ மெயில் அட்ரெஸ் இருந்தா அவரோடயும் இப்படிப் பேசலாம். பாருங்க, முகவரி மட்டும் போதாது, ஈமெயிலும் இருந்தாத்தான் கடிதம் எழுதக் கை போகுது. போஸ்ட் ஆபீஸ் பக்கம் போய் பல வருஷமாச்சு.
சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க. வீடு மாறிட்டேன். மொபைல்லே கூப்பிடுங்க, வழி சொல்றேன். வாயிலே இருக்கு வழிங்கறீங்களா? அதுவும் சரிதான்.
உங்க கடிதத்தை உரிமையோடு என் இணையத் தளத்தில் பிரசுரம் செஞ்சிருக்கேன்.
என் மகன் இப்போ தமிழ்நாடு மாநிலக் குழுவில் விளையாடறான். சீக்கிரம் ரஞ்சி, 20-20 எல்லாம் ஆடணும்னு கனவு. இஞ்சினியரிங் முதல் வருடம் படிக்கிறான். .
உங்களுக்கு மருமகன் வந்த நல்ல சேதி இப்பத்தான் முதல் முறையா உங்க கடிதம் மூலம் தெரிஞ்சுது. ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கலாப்ரியா. வண்ணதாசன் மக கல்யாண நேரத்திலே அவரையும் தி.க.சி சாரையும் வீட்டுலே பார்த்து (மேற்கு மாம்பலம்) ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தென். ஆச்சு, பத்து வ்ருஷத்துக்கு முந்திய சங்கதி.
அப்புறம் நானும் வண்ணதாசனும் சேர்ந்து சென்னை ரேடியோவிலே ஒரு பேட்டி. அதுக்கும் முன்பும், அப்புறமும், பேட்டியின் போதும் அவர் ரொம்ப சுவாரசியமா, அந்நியோன்யமாப் பேசிட்டு இருந்தார். வண்ணதாசன் பேசி அப்பத்தான் பார்த்தேன்!
அன்புடன்
இரா.முருகன்
****************************************=========================================================================
கலாப்ரியா இரா.முருகனுக்கு எழுதிய கடிதம் -2
அன்பு மிக்க முருகன்,
வணக்கம்.நீங்க சொன்ன மாதிரி இந்த குறுஞ்செய்திகளின் உலகில் இன்லண்ட் லெட்டர் வாசனை அபூர்வம்தான்…ஆறு நாட்களுக்குப் பின் காலையில் நடை பழகிக் கொண்டிருந்த போது உங்கள் கைப்பேசி..
உங்களுடன் பேசி முடித்ததும், யாரோ வழிப்போக்கர்கள் காரை நிறுத்தி எங்கேயாவது அருகே காலைக் கடனை கழிக்க வழியிருக்கா என்று கேட்டார்கள்.. சற்றுச் சேய்மையில் இருந்த காசு கொடுத்து உபயோகிக்கும் சுகாதார வளாகத்திற்கு ஆற்றுப் படுத்தினேன்…
போய்த்திரும்பும் போது காரில் வந்த ஒரு பெண்’ வளாகம் அருகே நின்றபடி நன்றியோடு பார்த்தாள்,,பாரம் இனிதே கழிந்த ஆசுவாசம் முகத்தில் புன்னகையை பரவ விட்டிருந்தது…எல்லாமே ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து விட்டது…
எனக்கே அந்த ஆற்றுப் படுத்தும் யோசனை திடீரென்று உதித்தது.தான்.உங்கள் அழைப்பும் இந்த நிகழ்வும் மனதை இன்னும் லேசாக்கியது….
சாலையில் நடந்து விட்டு தெருவுக்குள் நுழைந்ததும்..தெருவின் சற்றே பெரிய விவசாயியின்(marginal farmer ?) வீட்டு முன்னால்.. பத்துப் பேர் போல நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்…காதில் விழுந்தது,”சார்வாள் குளத்துக்கு தண்ணி வருதாமே நாத்தங்காலை உழுது போட்டிருவோமான்னு யோசனை கேக்க வந்தோம்…”
இதுவும் குறுஞ்செய்தி போல சிறிய அகராதிக்குள் அடங்கி விடுகிற கிராம வாழ்வுதான். ஆனால் எவ்வளவு விஸ்தாரமான அர்த்தங்கள் கொண்டது…பிரமிளின் கவிதை நினைவுக்கு வருகிறது
“மழை வராதா
என்றேங்கி
அண்ணாந்த கண்கள்
கண்டு கொண்டன
வானம்
எல்லை இல்லாதது”
அன்புடன்
கலாப்ரியா
(18.10.2008 சனிக்கிழமை)
——–

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 21:08
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.