அது ஒரு எமர்ஜென்ஸி கால ராத்திரி
விடியப் போகிறது
எமர்ஜென்ஸி ராத்திரி
நாலு பேட்டரி டிரான்சிஸ்டர் ரேடியோ
நம்பிக்கையோடு இருட்டில் பாடும்;
உச்ச ஸ்தாயியில் ஒற்றைக் குரலில்
சேர்த்து இசைத்த சீனிவாசனை,
இலக்கியம் இசையில் ஆர்வலர் இளைஞரை
நெருக்கடி நிலைமை நல்லதுதானென
நம்ப வைத்தவர் யாரோ எவரோ.
எமர்ஜென்சி சொல்லாட்சியில்
எமர்ஜென்சி என்பது நெருக்கடி நிலைமை
இருபது என்பது பிரதமர் இந்திரா
இங்கறிவித்த இருபது அம்சத் திட்டம்
கொசுறாய் ஐந்து – எந்தப் பதவியும் இல்லாத
சஞ்சய் காந்தி பிரகடனம் செய்த
பரபரப்பான ஐந்தம்ச திட்டம்.
மொத்தம் இருபத்தைந்து, புத்தியுள்ளவர்
கற்றுத் தேர்ந்து பிழைக்கக் கைவசம்.
பகலில் கதைகள் பாட்டோடு கலந்து
எமர்ஜென்சி அல்வா கிண்டி
ஆச்சி மனோரமா அனுதினம் வந்து
கோவுராசாமி கதையாய்ப் படைப்பார்.
வீபுதி தூவி சித்து விளையாடும்
கோவுராசாமி துண்ணூறு ‘பிழிந்தால்’
எல்லா நோயும் ஓடி மறையுமாம்
பத்து நிமிடம் சென்னைத் தமிழில்
சொல்லி முடித்து ஆச்சி அப்புறம்
மெல்ல மெல்லத் தொடங்குவார் – ஆத்தீ
சொன்னாங்களே அம்மா சோமங்கலத்துலே.
இருபது அம்சமும் கொசுறாய் ஐந்தும்
வரும் வரும் முடியாக் கதைகள் நீளும்
எமர்ஜென்ஸி நேரம் பிரதமர் ஓர்முறை
தமிழகம் வந்தார் காஞ்சி அருகே
சோமங்கலம் கிராமத்தில்
சொற்பொழிவாற்றினார்
நாற்பது சொச்சம் வருடம் கழித்து
இன்று சோமங்கலம் செழித்த ஊராம்.
இருபதால் ஐந்தால் வந்த வாழ்வோ
தெரியலை எனினும் விடிந்தது அவர்க்கு
எமர்ஜென்ஸி என்றால் இருபதின் வாடை
கூடவே ஐந்து அம்சத்தின் நெடியும்
ஆகாச வாணியில் தூக்கலாய்க் கவிய
எல்லா மொழியிலும் எல்லா நேரமும்
சர்க்கார் சங்கீதம் சதா ஒலிபரப்பு.
நாஜிகள் யூதரை அடித்து வதைத்துப்
பாடவைத்த ஆடவைத்த
சரித்திரம் படித்தோம்.
எனினும் இங்கே கேட்கச் சொல்லிக்
கட்டாயம் இல்லைதான்
கவிஞனை அழைத்து இருபது,
ஐந்தென எண்கள் சொல்லி
தோத்திரப் பாடல் எழுத வைத்து
தட்டி முழக்கி கொட்டிக் கூவி
இசையாக் கூட்டம் பாடிய தெல்லாம்
எமர்ஜென்சி வதையில் முதலாம்.
எதுகை மோனை இல்லாத பாட்டெழுத
கவிஞர் பலரும் வரிசையில் நின்றதால்
பாட்டுக் கூட்டம் பரவியது இங்கே.
பாட்டு இல்லாமல் எமர்ஜென்சி இருந்திருந்தால்
பரவாயில்லை பொறுக்கலாம் போல
நடிகர் நடிகை பட்டியலெடுத்து
விவிதபாரதி, சிற்றலைப் பரப்பில்
பல்பொடி களிம்பு விளம்பரம் மாதிரி
இருபதம்சமும் ஐந்தும் வரிசையாய்ப்
பொழியச் சொல்லி நச்சரித்து
கோவுராசாமி கதைகள் கலந்து
பேசி நிற்கப் புதுயுகம் பிறந்ததோ
சொன்னாங்களோ சோமங்கலத்திலே.
————————————————-
1975 மே மாதம் 21-ம் நாள் நான் சென்னைக்கு வேலை கிடைத்துக் குடிபெயர்ந்தேன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வால்டாக்ஸ் ரோடு – யானைக் கவுனியில் உத்தியோகம். தி.நகர் மோதிலால் தெரு கோபாலன் மேன்ஷனில் குடியிருப்பு. ஒரு மாதம் சென்று, ஜூன் 21 அன்று எமர்ஜென்ஸியும் நுழைந்து விட்டது. என் நாவல் 1975 இந்தக் காலகட்டத்தைச் சித்தரிப்பதாக அமைந்தது. எமர்ஜென்ஸி காலம் என்ற இந்தக் கவிதையும்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

