வார பலனில் வாகன யோகம்
வெளிவர இருக்கும் இரா.முருகன் அனைத்துக் கவிதைகள் தொகுப்பில் இருந்து
ஊரிலிருந்து மதுரைக்குப் போகும் நேரம்
ஒற்றை மணி இன்னும் வேகம் போனாலோ
முக்கால் மணி தான் பிடிக்கும்.
அரைமணி நேரத்தில் ஒன்றென
மதுரை போகும் பஸ் வரும்
பாதிக்கு மேல் அவற்றில் பட்டது
மதுரை விட்டு இங்கு வந்து
மதுரை திரும்பும் நேரடி சர்வீஸ்
சிலது மட்டும் தொண்டியிலிருந்து
ஊர்வழியாக மதுரை செல்லும்
உலர்ந்த மீனும் பனையின் கிழங்கும்
கவுளி வெற்றிலையும் வாடைகிளப்ப.
எங்கிருந்து புறப்பட்டு வந்தாலும்
மதுரை பஸ்ஸுக்கு மாப்பிள்ளை மதிப்பு
வண்டி கெத்தாக ஸ்டாண்டில் நிற்க
ஏஜெண்ட் ஒருத்தர் திரும்பத் திரும்ப
மதுரை மதுரையென சொல்லிச் சுற்றுவார்
பேருந்து என்ற இரும்புப் பரியை
தோத்திரம் சொல்லி ஆராதிப்பதுபோல்
மதுரை மதுரை கூச்சல் தொடரும்.
அப்புறம் என்னமோ மனசு மாறி
பூவந்தி பூவந்தி கூச்சல் தொடரும்
பூவந்தி என்றவூர் மதுரை போகும்
வழியில் பாதித் தொலைவில் வரும்
பூவந்தி நிற்காத பஸ்கள் பலவுண்டு
அங்கே வசிப்பவர் அதிர்ஷ்டம் குறைந்தவர்
பாதிதூரம் பஸ்விட ஏனோ
யாரும் யோசிக்காத மதுரைக் கிறுக்கு.
என்ன காரணமோ புதன்கிழமைகளில்
பகல்வரை மதுரைபோகக் கூட்டம்
கூடுவதில்லை அதுபோல் தானே
வெள்ளிகாலை தொடங்கிக் கும்பல்
நடுப்பகலுக்கு உச்சியைத் தொடும்
வெள்ளி மாலை மதுரையில் இருந்து
வரும் பயணிகள் எண்ணிக்கை கூடும்
அங்கே தங்கி வேலை செய்வோர்
வார இறுதி என்பதால் திரும்ப.
கணக்கு சொன்னவர் மதுரைக் கூவல்
ஏஜெண்ட்; சொன்னபடிக்கு நடப்பதில்லை
திங்கள் கிழமை வரிசையில் நின்று
மதுரை போகப் பெருங்கூட்டம்
கோவிலில் திருவிழா, பொங்கல் ஷாப்பிங்
புதுப்பட ரிலீஸ் பொதுக்கூட்டம்
என்று ஏதும் இல்லாக் கிழமை.
மானாமதுரை போகவேண்டிய
ராக்காயி அப்பத்தா தவறுதலாக
மதுரை பஸ்ஸில் ஏறிப் பத்தடி
போனதும் யாரோ சொல்ல எழுந்து
அடித்துப் புரண்டு கூச்சல் போட்டாள்
வண்டியைத் திருப்பி ஸ்டாண்டில் வந்து
மானாமதுரை பஸ் பக்கம் நின்று
நாலுபேர் சேர்ந்து ஏற்றி விட்டார்கள்
காது வளர்த்துத் தண்டட்டி போட்ட
ராக்கி அப்பத்தா மவுசு அதிகம்தான்.
கோடாங்கிப் பட்டியில் குறிசொல்கிற
பூசாரிக்கவள் வீட்டுக்காரி
நல்லதும் மற்றும் சொன்னால் பலிக்கும்.
மதுரை பஸ்கள் நிறைத்த வெளியில்
ஓரம் ஒதுங்கி வெய்யிலில் காய்ந்து
தேவகோட்டை பேருந்து நிற்க
சுரத்து இல்லாக் குரலில் ’தேவோட்டை
புலியடிதம்மம் உச்சிப்புளி வரை
போகும் வண்டி’, ஏஜண்ட் பெஞ்சில்
இருந்து சொல்வார் அலுப்பு தென்பட..
சுற்றுப் பற்றும் பத்திருபது
கிராமம் போய்வர டவுன்பஸ் விட்டார்
நகர்நலம் கருதிய நண்பர்கள் சிலபேர்
உண்ணாவிரதம் இருந்தபின் சாதனை
மேலக் கண்டனி, கீழக் கண்டனி,
இடையமேலூர், பையூர், ஒக்கூர், பனையூர்
முத்துப்பட்டி, வீரவலசை, ஏனாபுரம்,
அ.புதூர், ப.புதூர், பு.புதூர்
நீண்ட பட்டியல் சொல்லிச் சொல்லி
ஏஜண்ட் கனவிலும் டவுன்பஸ் தொடரும்
ஓட்டுநர் நடத்துனர் இல்லாத பேருந்து
இருக்கலாம் எனினும் ஏஜெண்ட் இன்றி
பஸ் ஓடினால் சங்கடம் தானாம்.
ப்ரேக்டவுன் ஆன பஸ்ஸில் போனவர்
மந்திரவாதியை நோக்கும் சிறுவர்போல்
கண்டக்டரைப் பார்த்துக்கொண்டு
சுற்றி நிற்க நேரடி சர்வீஸ்
மதுரைபஸ் ஒன்று கடந்து போகும்
தன்னால் ஏதோ தப்பானது போல்சிலர்
தலைகுனிந்தபடி வெட்கம் பிடுங்க
முகம் திருப்பி பின்னால் பார்ப்பார்.
இலவச சவாரி கிடைத்தவர்
காரில் லாரியில் மோட்டார் சைக்கிளில்
போகும்போது பெருமை முகத்தில்
வாரபலனில் வாகனயோகம்
அப்படியும் அமையும் அறிவீர்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

