குற்றமுகங்கள்- 13 பச்சைஅங்கி பிஸ்வாஸ்

அந்த வழக்கு 1879ம் ஆண்டுக் கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நாகோஜி என்ற சாமியாரைக் கொலை செய்ததாகப் பச்சை அங்கி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிறவி ஊமை என்றும் நாகோஜியின் சீடராகப் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொன்னார்கள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸ் நீதிமன்றத்தில் பேசினார். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார். ஆகவே அவர் யார். எதற்காக இப்படி ஒளிந்து வாழ்கிறார் என்பதைக் கண்டறியும் படியாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்சை அங்கி பிஸ்வாஸிற்கு நாற்பது வயதிருக்கும். ஆறடிக்கும் மேலான உயரம். தீர்க்கமான கண்கள். தோள்பட்டை வரை புரண்ட சுருண்ட கேசம். கீழ் உதட்டில் ஒரு மச்சம்.

ஒரு மனிதனின் கடந்தகாலத்தைப் போன்ற புதிர்பாதை வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை மறைந்துக் கொள்ள விரும்புகிறவன் தனது கடந்தகாலத்தை அழிப்பதில்லை. பல்வேறு கடந்தகாலங்களை உருவாக்கி விடுகிறான். இதில் எது உண்மை என யாராலும் கண்டறிய முடியாது.

பச்சை அங்கி பிஸ்வாஸ் என்பது இறந்துவிட்டதாகக் கருதப்படும் நீலாம்பூர் ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் ஷியாம் சௌத்ரியின் இடது கையில் இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அது போலவே பச்சை அங்கி பிஸ்வாஸிற்கும் விரல்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தார்கள்.

அந்த உண்மை வெளிப்பட்டவுடன் ஷியாம் சௌத்ரியின் மனைவி பார்கவி மற்றும் மாமனார் ரதீஷ் பாபு  எவ்வளவு செலவு செய்தாவது பிஸ்வாஸை வழக்கிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரோலன் ஸ்மித்தை நியமித்தார்கள்.

ஷியாம் சௌத்ரியின் வீட்டுபணியாளர்கள். கணக்கர், மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் பச்சை அங்கி பிஸ்வாஸ் தான் ஷியாம் சௌத்ரி இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைக் குடும்பத்தினர் நம்பவில்லை. ஷியாம் சௌத்ரி ஏன் வீட்டை விட்டு ஒடினார். அவர்கள் குடும்பத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்குச் சௌத்ரி குடும்பம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பணியாளர்களில் ஒருவர் மட்டும் அது ஷியாம் சௌத்ரியில்லை. அவரைக் கொல்வதற்கு ஷியாம் சௌத்ரியின் மனைவியே ஆள் அனுப்பிவைத்தார். அதை நேரில் கண்டிருக்கிறேன் என்றார்.

அந்தப் பணியாளர் பித்துபிடித்தவர் என்று சொல்லி சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார். ஷியாம் சௌத்ரியை ஏன் அவரது மனைவியே கொல்ல முயன்றார் என நீதிமன்றம் விசாரிக்க முற்படவில்லை.

அதே நேரம் பர்த்வானில் உள்ள கோவில்பூசாரி கங்காராம் அது தனது இளைய மகன் ராதாநாத் என்று அடையாளம் காட்டினார். அவன் கோவில்பணிகளில் தனக்கு உதவியாக இருந்த நாட்களில் மங்கள் தேப்பின் மனைவி சாரதாவோடு பழக்கம் ஏற்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஒடிப்போனான் என்று அடையாளம் காட்டினார்.

நீதிமன்றம் சாரதாவைக் கண்டறிந்து சாட்சியம் சொல்ல அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். காசியின் படித்துறை ஒன்றில் பிச்சைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த சாரதாவை அவர்கள் கண்டறிந்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு ஒன்பது மாதங்களானது.

அவள் பச்சைஅங்கி பிஸ்வாஸைப் பார்த்த மாத்திரம் அது தனது காதலன் ராதாநாத் இல்லை. அவன் என் முன்னே நின்றிருந்தால் வெறும் கையால் கொன்றுவிடுவேன் என்று சொன்னாள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸை தான் காசியில் படகோட்டியாகப் பார்த்திருக்கிறேன். தங்க கருடன் கொடியுடன் படகில் சுற்றியலைந்த திருடன் துலால் என்றாள். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கங்கையில் படகோட்டுகிறவர்கள் மற்றும் வாரணாசியின் காவல் அதிகாரி இருவர் சாட்சியம் சொல்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் பச்சை அங்கி பிஸ்வாஸை பார்த்த மாத்திரம் அது துலால் தான் என்று உறுதியாகச் சொன்னார்கள். கங்கை நதித் திருடன் துலால் கர்ணனைப் போல நதியில் மிதக்கவிடப்பட்ட குழந்தை என்றார்கள். அவனைப் படகோட்டி விஸ்வன் வளர்த்தான். இளைஞனான துலால் படகில் செல்லும் பயணிகளைத் தாக்கி அவர்களின் நகை பொருட்களைக் கொள்ளையடித்தான். நதியில் அவனைத் துரத்திச் சென்று எவராலும் பிடிக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணின் காதலில் விழுந்தான். அவள் சென்ற படகு நதியில் மூழ்கியதில் அவள் இறந்துவிட்டாள்.  அதன்பிறகு  துலாலை கங்கையில் காணமுடியவில்லை.  . அவனுக்கு என்ன ஆனது, எதற்காக இப்படி ஊமை போல ஒளிந்து வாழ்ந்து சாமியாரைக் கொலை செய்தான் என அவர்களுக்குப் புரியவில்லை.

பச்சை அங்கி பிஸ்வாஸ் தனக்குப் படகோட்டத் தெரியாது என்பதோடு தான் வாழ்நாளில் காசிக்கு சென்றதேயில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தார். அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது எளிதானதில்லை என நீதிமன்றம் உணர்ந்து கொண்டது.

அதே நேரம் வீட்டைவிட்டு ஒடிய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரிக்கு, கோவில் பூசாரி ராதாநாத்திற்கு, திருடன் துலாலிற்கு என்ன ஆனது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, எங்கே ஒளிந்து வாழுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் குறித்த தனி வழக்கு நீதிமன்றத்திற்கு வராதவரை அதை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது.

வழக்கின் புதிய திருப்பமாகப் பச்சை அங்கி பிஸ்வாஸைப் போலவே கொல்லப்பட்ட துறவி ஏகோஜிக்கு இரண்டுவிரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன என்று அவரது சீடர்களில் ஒருவன் சாட்சியம் அளித்தான்.

துறவி நாகோஜி தான் பழைய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி எனத் தெரிந்தவுடன் பச்சை அங்கி பிஸ்வாஸைத் தூக்கிலிட வேண்டும் என ஷியாம் சௌத்ரியின் மாமனார் கூக்குரலிட்டார். தான் நியமித்திருந்த வழக்கறிஞரை பிஸ்வாஸிற்கு எதிராக வழக்காடும்படி உத்தரவிட்டார்.  

ஒரு நட்சத்திரம் வானில் ஒளிந்து கொள்ள முடிவு செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் பிஸ்வாஸ் வாழ்க்கையும் ஆனது.

நாலரை ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது, முடிவில் பச்சை அங்கி பிஸ்வாஸ் கொலை செய்ததற்கான சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை என விடுதலை செய்யப்பட்டார். அவர் யார் என்ற உண்மை கண்டறியப்படவேயில்லை. வானில் செல்லும் பறவைகள் தனது தடயம் எதையும் விட்டுச் செல்வதில்லை. சில மனிதர்களின் வாழ்க்கையும் அது போலத் தான்.

இதன் நான்கு மாதங்களுக்குப் பிறகு மிர்சாபூர் படித்துறையில் ஒருவர் இறந்துகிடந்தார். யாரோ அவரை அடித்துக் கொன்றிருந்தார்கள். இறந்துகிடந்தவர் அணிந்திருந்த பச்சை அங்கியை வைத்து அவர் பிஸ்வாஸ் தானா எனச் சந்தேகம் வந்தது. ஆனால் அதையும் எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 21:51
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.