குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா

கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.

ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்

ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.

“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.

அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.

சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.

புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.

திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.

ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.

“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.

இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.

அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.

அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.

அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.

செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 00:40
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.