Thug life vs Adam's life
போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு படம் மோசமா எனில் நிச்சயம் கிடையாது. படம் நன்றாக இல்லை என்று விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு திரிஷா காட்சிகள்தான் காண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திரிஷா பகுதியை கத்தரித்து விட்டு இன்னும் தூக்கம் வரவைக்கும் நான்கு சண்டைக்காட்சிகளை மணி இணைத்திருந்தால் தக் இத்தனை எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார்.
திரைபடத்தின் மிகப்பெரிய குறை சண்டைக்காட்சிகள். இரண்டாம் பாதியில் அன்பறிவு மட்டுமே பெரும்பான்மையான காட்சிகளை இயக்கியது போல தோற்றம் ஏற்படுகிறது. மணிரத்னம் தனது கதாப்பாத்திரங்களை அத்தனைஎளிதாக மரணத்தில் முடித்துவிடமாட்டார். இருப்பினும் இத்திரைப்படத்தில் பலரும் சண்டைகளில் மாண்டு போகின்றனர். அத்தோடு அன்பறிவின் தாக்கம் அதீதமாகத் தெரிய காரணம் விக்ரமில் அடியாள் கூட்டத்துக்கு மத்தியில் ரோலக்ஸாக சூர்யா தோன்றும் அதே காட்சியில் இங்கே STR தோன்றி இனி தான்தான் சக்திவேல் என்கிறார். பின்னர் தக்காக ஏதாவது செய்வார் என எண்ணும்போது ஒருபுறம் கோவா, கேசினோ மறுபுறம் திருச்செந்தூர், கடல் என மணிரத்னத்தின் அழகியல் காட்சிகள் வருகின்றன. பிறகு மீண்டும் கோவா சண்டைக்காட்சிகள், படாரென தாவும் டெல்லி சண்டைக்காட்சிகள் என முதல்பாதியில் தெளிவாகக் காட்டப்பட்ட இடமும் காலமும் இரண்டாம் பாதியில் ஊசலாடுகின்றன. விக்ரம், KGF அளவிற்கான சண்டை Thug lifeக்கு தேவையில்லை. அதுவும் தற்காப்பு கலை சண்டைகள் இந்த படத்துக்கு எதற்கு எனும் வினா எழுகிறது. தமிழ் சினிமாவில் ஆபத்தான TRENDING தேய்வழக்குகள் உருவாகியுள்ளன. சாமானிய மக்களிடையே வெகு எளிதில் புழங்கும் Fruit mix பானம் போல, ஒரு திரைப்படத்தில் காமெடியா? சிறிதளவு இவர்கள், வில்லனா? இவர்களை போட்டு இரண்டு கண்டு கிண்டிவிட்டால் போதும், சாகடிக்க வேண்டுமா? அவர்களை அள்ளிப்போட்டு கதையை முடிக்கலாம், அபலையான கதாப்பாத்திரமா? இவர்களைப் போட்டு கிளறினால் முடிந்தது... இவ்வாறு தேய்வழக்காகவே தமிழ் சினிமாவில் பலர் மாறிவருகின்றனர். அன்பறிவும் அப்படியான தேய்வழக்கு Trendingஇல் சிக்கிவிட்டனரோ என்று Thug life பார்க்கும்போது தோன்றுகிறது.
முதல் பாதி மிக அழகாக தெளிந்து செல்கின்றது. ரசிக்க வைக்கும் காட்சிகள் திரிஷா-கமல், கமல் -அபிராமி, வடிவுக்கரசி கமல், STR- கமலுக்கு நடுவே நிகழும் உரையாடல்கள், வெறும் சக்திவேல்-அமரன்- இந்திராணி ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து மட்டுமே தனித்து திரைக்கதை அமைக்கலாம். அவர்கள் மூவருக்கும் இடையே உள்ள மீறல்கள் மற்றும் சிடுக்குகள்தான் இதர கதாப்பாத்திரங்களின் தன்மையையும் கதையோட்டத்தையும் முடிவு செய்பவை.
ஆனால் அவர்களை மையப்படுத்தாமல் காட்சிகள் எங்கெங்கோ செல்கின்றன. மேலும் இதில் சில அடிப்படைக் காட்சிகள் வசனங்களாக பேசப்பட்டு கடந்து போய் விடுகின்றன. உதாரணமாக கமல் ஒரு காட்சியில் அபிராமியை கிட்சனில் சமாதானப்படுத்தும் ஊடல் காட்சியில் முதல் சந்திப்பை மூன்றுவரி வசனமாகப் பேசிக் கடப்பார். அது காட்சியாக மாறியிருந்தால் அழகியல்.
மகாபாரதத்தில் சாந்தனு சத்தியவதியை மணம் செய்துகொள்ளும்போது சாந்தனுவின் மகன் தேவவிரதன் எனும் பீஷ்மன் துறவுகொள்வான். ஒருவேளை தேவவிரதனும் சத்தியவதி மீது காதல்கொண்டிருந்தால் என்னவாகும் என ஒரு கிளாசிக் திரைப்படமாக/ திரைக்கதையாக வரவேண்டிய Adam's Life, Thug life ஆகி பாதை மாறி 'பரவாயில்லை பார்க்கலாம்' commercial ரகமாக நிற்கின்றது.
Published on June 07, 2025 02:38
No comments have been added yet.
Venba Geethayan's Blog
- Venba Geethayan's profile
- 2 followers
Venba Geethayan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
