இலக்கிய வாசிப்பு Scroll material ஆ!?
இலக்கிய வாசிப்பு Scroll material ஆ!?
சில ஆண்டுகள் முன்பு வரை அச்சிதழ்களில் மட்டுமே எழுதி வந்தளவு இலக்கிய பூமர் நான் என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்தேன். சிறுபத்திரிக்கை மரபில் வந்தவன் என்பதால், எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வரித்துக்கொண்டிருந்தேன். சிற்றிதழ்களில் மட்டுமே எழுத வேண்டும், அது அச்சாகும் வரை காத்திருக்க வேண்டும், ஒரு எடிட்டர் அதை நிராகரிப்பதை அவரிடம் சண்டை போட்டும், உள்ளூர விரும்பியும் ஏற்க வேண்டும். புதுத்தனங்களை முயற்சிக்க வேண்டும். என்றாவது வரும் அபூர்வ கடிதத்திற்காகக் காத்திருக்க வேண்டும். ஒரு இதழில் படைப்பு வெளியாகும் போது, அது கைகளில் தொட்டுப் பார்க்கும் நாள் வரை படபடப்புடன் இருக்க வேண்டும். அச்சிதழில் வெளிவந்தால் அதன் விற்பனை பாதிக்கிற வகையில் உடனே அதை இணையத்தில் பகிரக் கூடாது; மட்டுமல்ல, கவிதையை அது புத்தகத்தில் அச்சாகும் வரை திருத்துகிறவன் நான், என் இயல்புக்கு மாறாக இணையத்தில் இருப்பவை, நித்திய வாழ்வு கொண்டிருப்பதைக் கண்டு நான் மிகவும் அஞ்சி வந்தேன். சில இணைய இதழ்களுக்கு அனுப்பி, அதை இரண்டொரு நாள் கழித்துத் திரும்பப் பெற்ற சங்கதிகள் பலமுறை நடந்துள்ளன. இது பற்றி ஒரு கவிதையையும் எழுதியுள்ளேன். உயிர் எழுத்து இதழில் வெளியானது; அச்சிதழில்.
ஆனால், மிகப் பிந்தி எனது படைப்புகள் இணையத்தில் வந்த போது கிடைத்த வாசிப்புகளை எண்ணி நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். என்ன இவ்வளவு பேர் வாசிக்கிறார்கள் என்று திகிலாகவும் இருந்தது. ஒப்புநோக்கும் போது, எனது அச்சுப்படைப்புகளைவிட இணையத்தில் வெளிவருபவற்றிற்கே கூடுதல் வாசகர் கிடைக்கிறார்கள் என்று தோன்றுகிறது; சரி அப்படியென்றால், மொத்தத்தையும் இணையத்தில் வெளியிட்டுவிடலமா என்று யோசித்தால் அதையும் பரிசோதித்துப் பார்த்தேன்.
கவிதை, மொழிபெயர்ப்புக் கதை, சின்னளவிலான கட்டுரைகளை இணையத்தில் வெளியிட்ட போது கிடைத்த வாசிப்பு, பெரிய கட்டுரைகள் வெளியிட்ட போது பத்தில் ஒரு பங்காகக் குறைந்துபோய்விட்டது. இதை யோசித்துப் பார்த்தால், இலக்கிய வாசிப்பு சமூக ஊடகங்களுக்கு ஏற்ப ஸ்க்ரோல் மெட்டீரியல் ஆகி வருகிறதோ என்று தோன்றுகிறது.
முகநூலில் நேரடியாகப் பதிவிடும் பதிவைப் படிப்பவர்கள் – அதில் இணைப்பு தந்தால் படிப்பதில்லை / குறைந்துவிடுகிறார்கள்.
உரை அரை மணி நேரம் இருந்தால் பார்ப்பவர்கள் – ஒரு மணி நேரம் இருந்தால் கடந்துவிடுகிறார்கள் (என் விசயத்தில் அது நடக்காதது சந்தோஷம்)
பதிவு சின்னதாக இருந்தால் படிப்பவர்கள் – கட்டுரை பெரிதாக இருந்தால் படிப்பதில்லை.
கவிதைகள் உணர்வுச் சுரண்டலாக இருந்தால் படிப்பவர்கள் – வேறு பல நல்ல கவிதைகளைக் கண்டுபிடிக்கத் தெரியாமல் தடுமாறுதல்.
பகடியையும் – சுயபடங்களையும் விரும்புபவர்கள் – கருத்துகளைக் கடந்துபோகுதல்.
இதையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
உதாரணத்துக்கு நீலத்திற்காக ஒரு கதையை மொழிபெயர்த்து அனுப்பினேன்; ரொம்பவே பிரமாதமான கதை, மூன்று முறை, மூன்று வடிவங்களில் மொழிபெயர்த்தேன். நீலம் அந்தக் கதை வெளிவர மிகவும் பொருத்தமான தளம். உண்மையில் அதை யாராவது வாசித்துக் கருத்துரைப்பார்க்கள் என்று ரொம்பவே ஆசை கொண்டிருந்தேன். ஆனால், ஒருவருடம் ஒரு சின்ன துண்டு செய்திகூட எங்கிருந்தும் வரவில்லை. அதே கதையை இணையத்தில் பதிந்த நாள் தொட்டு யாராவது ஒருவர், குறைந்தது வாரத்தில் ஒருமுறை அந்தக் கதை குறித்துப் பேசுகிறார்கள்.
இரண்டாவதும் இதைப் போன்றதுதான்; புரவி கூடுகைக்காக, ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன்; கட்டுரை வனம் அச்சு இதழிலும் வெளிவந்தது. அரங்கில் விவாதித்த போது மிக அதிக வரவேற்பு கிடைத்த கட்டுரை அது; ஆனால், அரங்கிற்கு வெளியே அதை ஒருத்தர் வாசித்த தடயம் இல்லை. அந்தக் கட்டுரையில், கவிதை நூல்கள் வெளிவந்த தகவல்களைத் திரட்டி ஒரு கார்பஸ் உருவாக்க வேண்டும் என்றும், கவிதைகள் நூல்கள் (கவிதை மொழிபெயர்ப்புகள், திறனாய்வுகள் உட்பட) ஒரு தனி நூலகம் அமைக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தொடங்கி (சமீபத்தில் நாவலுக்கு அப்படி ஒன்றை குணா கந்தசாமி உருவாக்கினார்) கவிதை சார்ந்த எவ்வளவோ கருத்துகளை முன்வைத்தேன். ஆனால், அதை யாரும் சீண்டவில்லை என்றால் அச்சிதழ் குறித்து புதிதாக எழுதுபவர்களுக்கு என்ன எண்ணம் ஏற்படும்??? இதே கட்டுரையை இணையத்தில் பதிவேற்றத்தான் போகிறேன். காலத்துக்கு ஏற்ப மாறத்தான் வேண்டும் ஆனால்… என் அச்சமெல்லாம் இலக்கிய வாசிப்பு என்பது தேடுதலுக்குரியதாக இல்லாமல், ஸ்க்றோல் மெட்டீயராக மாறிவருகிறதோ என்பதுதான்.
– றாம் சந்தோஷ் வடார்க்காடு
06.07.2025
படம்: AI துணையுடன்
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

