கட்டுரையும் கட்டுரையின் நிமித்தமும்
தற்பாயிரம்
முந்தைய கட்டுரைகள் (இரண்டாம் பிரதியை எழுதுதல் முதலான பொருள்கோடல்கள்) இத்தொகுப்பின் தலைப்பானது, இது என்னுடைய தொடக்க கால கட்டுரைகளின் திரட்டு என்பதைக் குறித்து நிற்கிறது. துணைத் தலைப்போ இக்கட்டுரைகளுக்குள் காணப்படும் மைய வாசிப்பு முறையியல் பற்றியது. வாஸ்தவத்தில் இத்தலைப்புகள் வரிசை மாறி இருந்திருக்க வேண்டியவை. ஆனால், இரண்டாம் பருவம் என்று ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ள நிலையில், திரும்ப வரும் வார்த்தைகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த வரிசையையே இறுதி செய்தேன்.
***

இத்தொகுப்பில் மொத்தம் 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் நான் தொல்காப்பியம் குறித்தும் கவிதைகள் குறித்து எழுதிய நீண்ட கட்டுரைகளும் அல்லாத பிற எல்லாவற்றின் திரட்டு ஆகும். எனவே, கவிதை, புனைவு, நூல் மதிப்பீடுகள், கருத்தரங்குகளில் வாசித்த கட்டுரைகள், சினிமா இலக்கிய ஒப்பீடு, ஆளுமைகள் குறித்த பதிவுகள் எனக் கதம்பமாகக் கோர்க்கப்பட்டுள்ளன.
கட்டுரைகளின் வளர்ச்சி நிலை என்றளவில், சில சட்டகங்களைப் பிரதிகளினூடே பொருத்திப் பார்க்கும் எளிய வாசிப்பினையே நான் முதலில் செய்து வந்தேன் எனத் தோன்றுகிறது. அது கோட்பாட்டுப் பரிட்சயம் ஏற்பட்டத் தொடக்க காலகட்டம். ஆனால், அவ்வகை வாசிப்பு எனது போதாமையை உள்ளடக்கியது; அவசரகதியிலானது. பின்னர், அந்த வாசிப்பின் அடிப்படைகள் யாவும் சாரமாகி எனது வாசிப்பு முறையை ஓரளவு வலுப்படுத்தியது என்பவையெல்லாம் அடுத்தடுத்து நேர்ந்தவை. எனவே, இவ்விரண்டு தரமான கட்டுரைகளுக்குமே இத்தொகுப்பில் சான்று பிரதிகள் வைத்துள்ளேன்.
புனைவு சார்ந்த கட்டுரைகளே தொகுப்பின் முதல் பகுதியாக இடம்பெற்றிருந்தன. அது பெரும்பாலும் எழுதிய வரிசைக்கு நெருங்கி வருகிறதென்று அப்போது எண்ணினேன். ஆனால், நூலின் வரைவினைப் படித்துவிட்டு கருத்துச் சொன்னவர்கள் கவிதை சார்ந்த கட்டுரைகளையே அதிகம் விரும்பினார்கள், அதைப்போல, கவிதையொரு மூத்த இலக்கிய உயிரி என்பதையும் காரணமெனக் கொண்டு அது சார்ந்த கட்டுரைகளையே தற்போது முதல் பகுதியில் இடம்பெறச் செய்துள்ளேன்.
அவ்வாறு அடுக்கி வைக்கும் போது நண்பன் பெரு விஷ்ணு குமாரின் கவிதை (கள்) குறித்து எழுதிய கட்டுரையானது முதலில் இடம்பெறுவதென்பது மகிழ்ச்சிக்குரிய விசயங்களில் ஒன்று. அந்தக் கட்டுரை எனது இன்னாள், முன்னாள் இலக்கிய நண்பர்கள் இணைந்து நடத்திய ‘நகர்வு’ என்ற புலனக் குழுவில் பகிரப்பட்ட, விஷ்ணு தொகுப்பு வெளியிடாததற்கு முன்பு பிரசுரம் கண்ட கவிதை ஒன்றினைப் பற்றியது. அந்தக் குழுவில் உடனடியாக எழுதிய என் வாச்சியம் பிறகு கையளவு நீட்டமும் திருத்தமும் கண்டு சிற்றேட்டில் கட்டுரையாக வெளிவந்தது.
அடுத்த கட்டுரை, முபீன் சாதிகாவின் கவிதைகள் குறித்தது. அது அவருடைய நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசியது. இக்கட்டுரையானது அவருடைய கவிதைகளை அணுகும் போது ஏற்படும் புரியாமை குறித்துப் பேசுகிறது. குழப்பமான மொழி நிலைப்பட்ட முபீன் சாதிகாவின் கவிதைகளுக்கு எழுவாயும் வினைமுடிபுகளும் இட்டு அதற்கு இரண்டாம் பிரதி ஒன்றை நான் எழுதிக் காட்டியது என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமான அனுபவம்தான்.
அடுத்த வாச்சியம், கவிஞர்கள் ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சி. மணி ஆகியோரின் நேர்காணல்களை ஒரே சமயத்தில் வாசித்ததன் விளைவு. ‘கட்டுரை ஒன்றிற்குத் தரவு திரட்டும் சமயம் படிக்க நேர்ந்ததின் விளைவே இக்கட்டுரை’ என்பது போன்ற குறிப்பு கட்டுரையின் அந்தியில் கிடைக்கிறது. அது என்ன கட்டுரை என்று வாஸ்தவத்தில் எனக்குத் தெரியவில்லை; எனினும், அப்படியான முயற்சியின் மூலம் வித்தியாசமான இப்படி ஒரு வாசிப்பு கிடைக்கப் பெற்றது எனக்குப் பலன்தான்.
அடுத்து ‘புனைவு’ என்ற பகுதி. இதில் மொத்தம் நான்கு கட்டுரைகள் உள்ளன. அதில், இரண்டு கட்டுரைகள் தமிழவனின் ‘அவதாரம்’ கதை குறித்தும், ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ நூல் குறித்தும் எழுதியவை. இவை முறையே புதுப்புனல், கணையாழி ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இவற்றுள் நடனக்காரியான… நூல் குறித்து எழுதிய கட்டுரையின் முன்பாதியை விரிவஞ்சி முற்றிலுமாக நீக்கி உள்ளேன்.
அடுத்து, என் பல்கலைக்கழக வகுப்புத் தோழி முனைவர் சித்ரா தான் ஆய்வாளராக இருந்த காலத்தில் தொகுத்த ஒரு நாட்டுப்புறக் கதை குறித்தது. நாட்டுப்புறக் கதையை நவீன வாசிப்பு செய்ய முடியுமா? என்பது எனக்கிருந்த ஐயம். அதற்கான தப்பும் தவறுமான முயற்சியே அந்தக் கட்டுரை. அடுத்து, சிவசங்கர் எஸ்.ஜே.வின் ஒரு கதை குறித்து வாசகசாலையில் வெளிவந்த கட்டுரை. இந்தப் ‘புனைவு’ பகுதியில் இடம்பெறும் கட்டுரைகளுக்குக் கலவையான எதிர்வினைகள் வந்தன. அவதாரம் கதை குறித்த கட்டுரையின் வரைவை முதலில் மறுத்தவர் தமிழவன்; பின்னர், அதே கட்டுரையினைப் பாராட்டி சிற்றேட்டில் ஒரு பத்தியும் வெளிவந்தது. அதுபோல், தோழர் பொதியவெற்பனும் இக்கட்டுரை குறித்துத் தனது நூலில் எழுதி இருந்தார். ‘எழுக புலவ’ என்று அவர் கூறியது தந்த உற்சாகம் என்றைக்குமானது. இத்தொகுப்பில், (நூல் மதிப்புரை என்ற பகுதியில்) பொதி குறித்த ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது தற்செயலானது; அதேசமயம் மகிழ்ச்சிக்குரியதும் ஆகும்.
பொதியார் குறித்த அக்கட்டுரை அவர் எழுது முறைமையினைப் புரிந்துகொள்ள வேண்டி, அவரைப் போன்ற நடையைப் போலி செய்து விளையாட்டாகவும் ஆழமாகவும் எழுதியது. அக்கட்டுரைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து, இப்பகுதியில், எனது ஆசிரியர்களில் ஒருவரான, மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் மொழிபெயர்த்த யாரோஸ்லோவ் வாச்சக்கின் ஆய்வு நூல் குறித்த அறிமுகக் கட்டுரையும் அந்நூலின் முடிவுகளைத் தயார் நிலைத் தரவுகளாகக் கொண்டு கவிஞர் நிதா எழிலரசியின் கவிதைகளோடு ஒப்பிட்டுக் கண்ட முடிவுகளுமான ஒரு கட்டுரையும் இதில் உள்ளன.
அன்றி, கனலி ஒரு தருணத்தில் கேட்டதற்கு இசைந்து எழுதப்பட்ட கட்டுரையானது எனக்கு ஆற்றுப்படையாக அமைந்த, விலை மலிவான பல்வேறு நூல்களின் பட்டியலையும் அந்நூல்கள் குறித்த சிறு சிறு குறிப்புகளையும் உள்ளடக்கியது.
அடுத்து, சினிமா பற்றிய கட்டுரை நேரடி சினிமா குறித்தது அல்ல. மாறாக, அது கி.ரா.வின் கோமதி என்ற சிறுகதையின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வண்ணம், அக்கட்டுரை எழுத நேர்ந்த சமயத்தில் வெளிவந்த கேளிக்கைப் படம் ஒன்றின் கதாப்பாத்திரமான கெளரியை, கோமதி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு எழுதியது. அக்கட்டுரையை எழுத வாய்ப்பளித்தவர் எங்கள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பூ.சு. கணேசமூர்த்தி அவர்கள் ஆவார். அவருக்கு நன்றி.
மற்றுமொரு கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு வழங்கியவர் புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைத் தமிழ்த் துறையின் தலைவர் மதிப்பிற்குரிய பேரா. இரா. அறவேந்தன் அவர்கள். அங்கு 2018 வாக்கில் நடைபெற்ற கருத்தரங்கில் அழைப்பின் பேரில் நான் நேரடியாகப் பங்குபெற்று வாசித்த கட்டுரையே ‘கருத்தரங்கம்’ என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் குறிப்புப்பொருள்கள் பற்றிய நீண்ட கட்டுரை. அது அரங்கில் விளக்குவதற்கு வசதியாக அவ்வாறு எழுதப்பட்டது. இக்கட்டுரையில் குறிப்பொருள் குறித்த முக்கியமான எனது வாசிப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, ஏன் தெய்வம் பாடுவதற்கு அன்று என ஒதுக்கப்பட்டது? என்பது குறித்த முக்கியமான கண்டுபிடிப்பு அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. மேலும், இக்கட்டுரையானது நேரடியாகக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்களால் மணற்கேணி இதழுக்காக அனுப்பப்பட்டு எதிர்பாராத சமயத்தில் வெளிவந்தது; அது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விசயமென்பதை நான் நினைவு கூற விரும்புகிறேன்.
மற்றுமொரு கட்டுரை ஆளுமை என்ற கடைசிப் பகுதியில் இடம்பெறும் மதிப்பிற்குரிய பேரா. க. பஞ்சாங்கம் குறித்தது. அது அவரே கேட்டுக் கொண்டதற்கு இணங்க பஞ்சு 75 என்ற சிறப்பிதழுக்காக எழுதியது. ஆனால், கட்டுரையின் முழுவடிவம் இதழில் வெளிவரவில்லை. கட்டுரை வெட்டப்பட்டதற்கான குறிப்பும் இதழில் இடம்பெறவில்லை. எனவே, அந்த உணர்வுப் பூர்வமான கட்டுரையின் முழு வடிவம் இந்நூலின் கடைசி பக்கங்களை அர்த்தப்படுத்துவதாகவே நான் நினைக்கிறேன்.
***
இக்கட்டுரைகளுள், அல்லது என் கட்டுரைகளுள் பெரும்பாலானவை 2014 தொடங்கி 2016 வரை அதிகமும் எழுதப்பட்டவை. அது நான் தமிழவனுக்கும் சிற்றேடு இதழுக்கும் அறிமுகமான சமயம். கட்டுரை எழுதுவதென்பது எனக்கு முற்றிலும் புதிய காரியம் என்றாலும் எழுத களம் அமைத்துத் தரப்பட்டதால் அதிகமும் எழுதினேன். அவ்வாறு முதலில் களம் தந்தவை சிற்றேடு மற்றும் புதுப்புனல். இவை முறையே காலாண்டிதழ் மற்றும் மாதாந்திர இதழ்கள் ஆகும். அன்று வேலை தேட வேண்டி நிலை ஏற்படும் போது ISSN தேவைப்படும் என்பதால், அதிகமும் இவற்றில் மட்டுமே எழுதினேன். கைக்கொள்ள வேண்டியது ஆய்வு நடையா? அல்லது எழுத வேண்டியது பொது வாசகர்களுக்கா? என்ற குழப்பம் எனக்கு எப்போதும் இருப்பதால், இவற்றில் எழுதிய கட்டுரைகளில் அந்த இரண்டின் குணமும் கலந்துள்ளன.
மட்டுமல்லாது, இந்த வருடங்கள், நான் அதிகம் எழுதிய காலகட்டம் என்பது போலவே, அதிகம் பேசிய காலகட்டமும்கூட; குறிப்பாக, பாளையங்கோட்டை மேலும் இலக்கிய அமைப்பு ஒருங்கிணைத்த பெரும்பாலான கூட்டங்களுக்கு நான் நம்பிக்கையுடன் அழைக்கப்பட்டேன். அத்தகைய கூட்டங்களில், குப்பத்திலிருந்து சுமார் பதினைந்து, பதினாறு மணி நேரங்கள் பயணித்து ஐந்தாறு நிமிடங்கள் பேசிவிட்டுத் திரும்புவேன்; உபசரிப்பில் எந்தக் குறையும் அவர்கள் வைத்ததில்லை.
ஆனால், மேலும் ஒருங்கிணைத்த கூட்டங்களில் பேசிய உரைகளைக் கட்டுரை ஆக்கி இத்தொகுப்போடு பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இத்தனை வருடத் தாமதத்திற்குப் பிறகும் கைகூடி வரவில்லை. அதுபோல் எனக்குப் பிடித்த நூல்களில் ஒன்றான பெருந்தேவியின் ‘உடல் – பால் – பொருள்’ என்ற நூல் குறித்து நான் எங்கள் திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திவரும் வாராந்திரக் கருத்தரங்கமான புதன் வட்டத்தில் ஆற்றிய முக்கிய உரையும், முபீன் சாதிகாவின் ‘நூறு புராணங்களின் வாசல்’ என்ற குறுங்கதைகள் குறித்து நுட்பம் ஒருங்கிணைத்த கூட்டத்தில் பேசிய உரையும் இது நாள் வரை உரைகளாகவே எஞ்சிவிட்டன.
***
எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் நூலாக்கம் செய்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தொடக்கத்தில் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால், அதுவே நூல் வெளிவருவதைத் தள்ளிப்போடக் காரணமாக அமைந்ததும் மற்றுமொரு வாஸ்தவம்.
கோட்பாட்டுப் பரிட்சயம் ஏற்பட்ட அத்தொடக்கக் காலகட்டத்தில் ஏதோ ஒன்றை எதனோடோ பொருத்திப் பார்த்து அர்த்தம் கண்டுபிடித்துவிடும் மன அமைப்பு அன்று எனக்கு வாய்த்திருந்தது. அது அந்த சமயத்தில் தவிர்க்க முடியாததும் கூட; எனினும், மிகை, பிழை வாசிப்புகள் கூடிவிட்ட இன்றைய சூழலில்: அவ்வாறு நான் மேற்கொண்ட சில வாசிப்புகளை மறுபரிசீலனை செய்ததின் பேரிலும் எனக்குள் கோட்பாட்டு அறிவின் மீது தற்போது எனக்கு முழு நம்பிக்கை இல்லாததாலும் அத்துறை சார் கலைச்சொற்கள், பெயர்கள், அவற்றைக் கற்றுத் தேர்ந்ததாக நான் கொண்ட மயக்கங்கள் ஆகியவை வெளிப்படும் கட்டுரைகளை மறுவாசிப்பின் போது தயவின்றி நீக்கிவிட்டேன். லக்கான், பார்த், ஃபூக்கோ என பலப்பெயர்களைக் கொட்டி நான் செய்த பல அசட்டுத்தனமான வேலைகள் கொண்ட அவை நிச்சயம் ஒரு ஐந்தாறு தேறும். அதேசமயம் அவை ஒன்றும் பாராட்டுப் பெறாதவையும் அல்ல. என்றபோதும், அவற்றை நீக்குவதற்கு நான் துணிந்தேன் என்பது நான் மேலும் அத்துறை குறித்து ஓரளவாவது கற்றுத் தேர்ந்த பின்பே கால்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தின் வெளிப்பாடுமாகும். அல்லாமல், நேரடியான கோட்பாட்டுக் கலைச்சொற்களை, விசயங்களை நான் மீதமுள்ள கட்டுரைகளில் பாவிக்கவில்லை என்றாலும், என்னுடைய எந்த ஒரு சிறு கட்டுரையுங்கூட அவற்றின் பாதிப்பில்லாமல் இருப்பதில்லை என்பதே வெள்ளிடைமலை; இதுவும் கவனத்தில் கொள்ளக் கூடியது. எஞ்சியும் இருந்துவிட்ட இத்தொகுப்பின் சில பலவீனங்கள் குறித்து நான் ஓர்மையுற்றிருக்கும் போதும் எனது எழுத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்த ஒருவரின் வாசிப்பிற்கு அவை உதவும் என்பதால் அவற்றை நான் இடம்பெறவே செய்துள்ளேன். கட்டுரைகளைப் படித்துக் கருத்துரைத்தவர்களும் பெரிய பிழை என்று எதையும் சொல்லவில்லை என்பது மற்றுமொரு காரணம்.
***
இக்கட்டுரைகளின் நெடுகிலும் நான் திரும்பத் திரும்ப பிரதிகளுக்கு இரண்டாம் பிரதியை எழுதிப் பார்த்துள்ளேன் என்பது எனக்கு இவற்றை நூலுக்குரியவையாகத் தொகுத்து, திரும்பவும் வாசிக்கும் போதுதான் கவனிக்க முடிந்தது. அதுவே நூலின் தலைப்பாகி உள்ளது.
இந்த வாசிப்பு முறையினை ஏனைய பல எனது வாசிப்பு முறைகளைப் போலவே எனது ஆசிரியரான தமிழவனிடம் கற்றுக்கொண்டேன். அதை அவர் கவிதையின் இன்மை, இருண்மை ஆகியவற்றைக் களைய கைக்கொண்டு வந்தார். நான் பிரதிகளை அரசியல் மயப்படுத்தியும் மொழி வழி அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திலும் பல வகைப் புனைவுகளுக்கு என விரித்தேன்.
நடையில், முறையியலில் எனது ஆய்வுக் களமான உரையாசிரியர்களின் பாதிப்பு அவ்வப்போது வெளிப்பட்டு மறைகிறது. அதன் பொருட்டே, பிரதிக்கு வியாக்கியானமாகவும் நடையில், இடைச்சொற்கள் அதிகம் இடம்பெறுவதும் நேர்ந்துள்ளதாக எண்ணுகிறேன்.
பல கட்டுரைகள் – அவற்றின் தலைப்புகள் உட்பட – வெளிவந்த வடிவில் இல்லை. திருத்தம் கண்டுள்ளன.
இதுகாறும் எனது கட்டுரைகளை வெளியிட்ட இதழ்கள், அவற்றின் ஆசிரியர்கள், இக்கட்டுரைகள் எழுதக் காரணமாக அமைந்த பெரியவர்கள், நண்பர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கும் எப்போதும் துணை நிற்கும் எனது நெறியாளர் த. விஷ்ணுகுமாரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இக்கட்டுரைகள் வெளிவந்த காலத்திலும் நூலின் வரைவினைப் படித்துவிட்டும் கருத்துரைத்த வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
மெய்ப்பு கண்ட எனது நண்பர்களுக்கும், நூலினை கால நெருக்கடியில் படித்து நல்லதொரு பாயிரங் கண்ட அன்பின் அக்கா முனைவர் அ. மோகனா அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.
நான் யார் என்ன என்ற எந்தப் பின்னணியும் தேவைப்படாமல், நல்ல ஆசிரியர்கள், அறிஞர்கள் என்கிற தமது அரிய பண்பின் பொருட்டு மட்டுமே என் கட்டுரைகளை, அவை வெளிவந்த காலத்திலேயே வாசித்துவிட்டுப் பாராட்டியும் ஊக்குவித்தும் வந்தவர்கள் அருமை பேராசிரியர்கள் க. பஞ்சாங்கம், இரா. அறவேந்தன் ஆகிய இருவரும். நான் பார்த்து வியந்த என்னுடைய நேரடி ஆசிரியர்கள் அல்லாத இவர்களின் வார்த்தைகளும் அளித்த வாய்ப்பும் எனக்கு அப்போது அளித்த உற்சாகம் அளப்பரியது. அதற்கான சிறு காணிக்கையாக இந்நூலைப் படைப்பதில் நிறைவு கொள்கிறேன்.
நல்ல வடிவமைப்புடன், சமயத்தில் கொண்டு வரும் எனது பிரியத்திற்குரிய பதிப்பாளர் பரிசல் சிவ செந்தில்நாதன் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் நூலினை, அதன் முகப்பினை நல்ல முறையில் வடிவமைத்த வடிவமைப்பாளர்கள், அச்சகர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள் பல.
மேலும், உதவியவர்களின் பெயர்கள் யாவும் தனியே பட்டியலிட்டுள்ளேன் என்பதால், இங்கு அவற்றைத் தவிர்த்தேன் அன்றிக் காரணம் பிறிதில்லை.
அநேகருக்கும் எனது நன்றிகள் பல யாவருக்கும் எனது அன்பு
சண்முக. விமல் குமார்,
குப்பம், ஆந்திரா.
14.11.2024
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

