கார்லோஸின் பொய்கள்

கிளாடியா ரெய்னிக்கே இயக்கிய ரெய்னாஸ் Reinas (Queens) திரைப்படம் 2024ல் வெளியானது. இப்படம் பதின்வயதுப் பெண்ணின் மனநிலையை, உணர்ச்சிகளை, ரகசியங்களை மிகவும் அழகாகப் பதிவு செய்துள்ளது.

பதின்வயது பெண்ணான அரோரா தனது தோழிகளுடன் உரையாடும் விதம். தங்கை லூசியாவிடம் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது. அம்மாவிற்கும் மகளுக்கும் வரும் சண்டை. உணவகத்தில் சாப்பிடும் விதம் எனப் படம் நிஜமான உணர்ச்சிகளை, நிஜமான விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. அரோரா மற்றும் லூசியா இருவரும் அழகான கதாபாத்திரங்கள்.

1992 ஆம் ஆண்டு லிமா நகரில் கதை நடக்கிறது. பெருவின் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதாரச் சரிவின் காரணமாகக் கிளர்ச்சியாளர் லிமா நகரில் தொடர் தாக்குதல்களை நடத்துகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்தச் சூழலில் நாட்டிலிருந்து வெளியேறி தனது பிள்ளைகளுடன் அமெரிக்கா செல்ல முடிவு செய்கிறாள் எலினா

கணவன் கார்லோஸை பிரிந்து வாழும் எலெனா தனது மகள்களைத் தன்னோடு அமெரிக்கா அழைத்துப் போவதற்குக் கணவனின் ஒப்புதல் கடிதத்தை எதிர்பார்க்கிறாள்.

தேசத்தை விட்டு தனது பிள்ளைகள் பிரிந்து போவதற்கு முன்பாக அவர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிடக் கார்லோஸ் விரும்புகிறான். அதனை எலோனா அனுமதிக்கிறாள்.

தனது காரில் அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துப் போகிறான். சிறுமி லூசியாவிடம் தான் காவல்துறையின் சீக்ரெட் ஏஜெண்ட் என்று பொய் சொல்கிறான். அவளுடன் உற்சாகமாகக் கடலில் நீந்துகிறான். அதே கடற்கரையில் மூத்தமகள் தனது ஆண்நண்பர்களுடன் பழகுவதைக் காணுகிறான். கடன் வாங்கிய காரில் லிமாவிற்கு வெளியே அமைந்துள்ள மணற்குன்றிற்கு அழைத்துப் போய் மகிழ்ச்சிப்படுத்துகிறான்.

அந்தப் பயணத்தில் கார்லோஸ் தனது இரண்டு மகள்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைப் பற்றி மட்டுமே நினைக்கிறான். அவனது பார்வை அவர்கள் மீதே குவிந்திருக்கிறது

பிள்ளைகளின் பயண அனுமதியை தனது கணவன் தர மாட்டான் என எலெனா நினைக்கிறாள். ஆகவே அவனிடமிருந்து எப்படியாவது அனுமதி கடிதம் வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறாள்.

நீண்டகாலத்தின் பின்பு தந்தையோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்ட அரோரா அவருடன் லிமாவிலே தங்கிவிட விரும்புகிறாள். இதனை எலெனா ஏற்கவில்லை.

ஒரு இரவில் தந்தையைத் தேடி அரோரா மற்றும் லூசியா வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். ஊரடங்கு காலம் என்பதால் காவல்துறை அவர்களைக் கைது செய்கிறது. காவல்துறையின் வாகனத்தில் செல்லும் போது அரோராவிடம் வெளிப்படும் அச்சம் நிஜமானது. காணாமல் போன பிள்ளைகளைத் தேடி வரும் எலெனா அவர்களைக் காவல்நிலையத்தில் கண்டுபிடித்து மீட்கிறாள்.

கார்லோஸை அவனது நண்பர்கள் முட்டாள். பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள். அவன் தனது வேலை மற்றும் வசிப்பிடத்தை மறைத்துக் கொண்டு வாழுகிறான். பிள்ளைகளின் மனதில் தான் நல்லவன் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராகயிருக்கிறான். அதற்காகவே நிறையப் பொய்கள் சொல்கிறான்.

கார்லோஸ் எங்கே வசிக்கிறான், எப்படி வாழ்கிறான் என்பது அந்தக் குடும்பத்திற்குத் தெரியாது. அவன் பழைய கார் ஒன்றை ஒட்டுகிறான். அது தான அவனது வீடு. கையில் உள்ள காயத்தைக் காட்டி தான் ஒரு முதலை வேட்டைக்காரன் என்று சொல்கிறான். கார் டிக்கியை திறந்து அதிலிருந்த தனது உடை ஒன்றை எடுத்து மாற்றிக் கொள்கிறான். பொருளாதார ரீதியாக அவன் ஒரு தோற்றுப் போன மனிதன் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தனது பிள்ளைகளின் முன்னால் கார்லோஸ் தனது நிஜத்தைக் காட்ட விரும்பவில்லை. காவல்நிலையத்தில் கூட நடிக்கவே செய்கிறான்.

உண்மையில் கார்லோஸ் மற்றும் எலோனா இவரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, நல்வாழ்வுக்காகப் போராடுகிறார்கள்.

அரோராவிற்குத் தனது தோழிகள் மற்றும் காதலனை விட்டு அமெரிக்கா செல்வதற்குப் பிடிக்கவில்லை. ஆனால் சிறுமியான லூசியா அம்மாவோடு வெளிநாடு போக விரும்புகிறாள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் சண்டை. கோபம். நெருக்கம் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

பதின்வயது பிள்ளைகளின் உலகம் பெற்றோர் அறியாதது. ரகசிய ஆசைகள் நிரம்பியது. மகளின் உணர்ச்சிகளை, ரகசியங்களை எலோனா உணர்ந்து கொள்கிறாள். அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறாள். ஆனால் தன்னை மகள் புரிந்து கொள்ளாத போது ஆத்திரம் அடைகிறாள். மூடப்பட்ட கதவின் முன்னால் எலோனா நிற்கும் காட்சி மறக்க முடியாதது. அது வெறும் கதவில்லை. மறுப்பு. இடைவெளி. நிராகரிப்பு. அதை அவள் முழுமையாக உணர்ந்துவிடுகிறாள்.

வீட்டில் நடக்கும் விருந்தின் போது எல்லோரும் சேர்ந்து குடும்பப் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்கிறார்கள். அப்போது வீட்டின் பணிப்பெண் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற விரும்பவில்லை என விலகிக் கொள்கிறார். தான் அவர்கள் குடும்பத்துடன் இருந்தாலும் அவர்களில் ஒருவரில்லை என்று அழுத்தமாகச் சொல்கிறாள். அது தான் கார்லோஸின் குரலும். அதைப் படத்தில் கார்லோஸ் தனது பார்வையிலே உணரச் செய்கிறான்.

மின்சாரம் துண்டிக்கபட்ட வீட்டில் மெழுகுவர்த்தி ஒளியில் அரோராவை தேடுவது. காவல்துறை வாகனத்தில் அரோரா மீது டார்ச் அடிக்கபடுவது. மணற்குன்றுக் காட்சிகள். கடற்கரை காட்சிகள். என படத்தின் ஒளிப்பதிவு சிறப்பானது. அரோராவாக லுவானா வேகா நன்றாக நடித்துள்ளார்.

இயக்குநர் ரெய்னிக்கே தனது பத்து வயதில் பெருவிலிருந்து வெளியேறியவர். ஆகவே இப்படம் அவரது சொந்த வாழ்க்கையிலிருந்து உருவாக்கபட்டிருக்கிறது. கைவிடப்பட்ட கார்லோஸின் வாழ்க்கை ஒரு தளம். எலோனாவின் அமெரிக்கக் கனவு மறுதளம். இரண்டிற்கும் நடுவே பிள்ளைகள் ஊசலாடுகிறார்கள். அதனைப் படம் மிகவும் இயல்பாக, நேர்மையாகப் பதிவு செய்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2025 01:13
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.