குற்றமுகங்கள் 22 தகையார்
சிறாக்குடியில் வசித்த தகையாருக்கு எழுபது வயதிருக்கும். ஆறரை அடி உயரம். நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார். உறுதியான உடற்கட்டு. நரைத்த தலைமயிர். நெய் தடவி வளர்த்த அடர்த்தியான மீசை. தாடி. இடது காதில் இரண்டு மயிர் நீண்டிருந்தது. எருமைத்தோல் செருப்பு அணிந்திருப்பார். இடுப்பில் ஒரு குறுவாள் சொருகப்பட்டிருக்கும்.

தகையார் தானாக எதையும் திருட மாட்டார். யாராவது திருடித் தரும்படி வேண்டுகோள் வைத்தால் மட்டுமே திருடுவார். அதுவும் அந்த வேண்டுகோள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் தான் திருடுவார். அப்படித் திருடிக் கொடுப்பதை ஒரு சேவையாகக் கருதினார்.
இதனை வெள்ளைக்கார அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை. அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க விரும்பினார்கள். ஆனால் தகையார் எப்படித் திருடுகிறார் என அவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர் திருடியதற்கு எந்தச் சாட்சியமும் இல்லை.
தகையாரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டின் அறைகளை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ள விதம் விநோதமானது. நிஜமான கதவுகளையும் பொய்க்கதவுகளையும் பொருத்தியிருந்தார். பொய்கதவினை திறக்கவே முடியாது.
எந்த அறையில் தகையார் உறங்குகிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. தகையாரிடம் உதவி கேட்பதற்காக வருகிறவர்கள் அவரை நேரில் சந்திக்க இயலாது. அவரது வீட்டில் காடி அப்பையா என்றொரு எழுத்தர் இருந்தார். அவரிடம் தான் முறையிட வேண்டும்.
எதை எல்லாம் திருட வேண்டும் , ஏன் திருட வேண்டும் என்று ஜனங்கள் சொல்லும் கதைகளை அன்றாடம் கேட்ட காடி அப்பையாவிற்கு மனிதர்களின் விருப்பம் அச்சமூட்டியது.
தகையாரிடம் வேண்டுதல் கொடுப்பதற்காக எப்போதும் அவரது வீட்டின் வாசலில் மக்கள் காத்திருந்தார்கள். வேண்டுகோள் நிறைவேறாத போது என்றாவது அது நடந்துவிடும் என வீட்டின் முன்பாகவே காத்துகிடந்தார்கள். அவர்களுக்குத் தகையாரே உணவளித்தார்.

தகையாரை எச்சரிக்கை செய்வதற்காகக் காவல்துறை அதிகாரி ஜோர்டன் செம்பழுப்பு நிறக் குதிரையில் சிறாக்குடி வந்திருந்தான். அவனை வீட்டுவாசலில் நிறுத்தி அனுமதி கிடைக்கும்வரை காத்திருக்கும்படியாகச் சொன்னார் அப்பையா. இரண்டு நாட்கள் காத்திருப்பின் பின்பு மூன்றாம் நாள் ஜோர்டனை தனது வீட்டிற்குள் வரும்படி தகையார் அழைத்தார்.
வீட்டின் சுவர்களில் பெரியதும் சிறியதுமாக நிறையக் கண்கள் வரையப்பட்டிருப்பதைக் கண்ட ஜோர்டன் அதிர்ச்சியோடு நடந்தான்.
அந்த அறை மிகப்பெரியதாக இருந்தது. தென்பக்கச் சுவரில் மயிலின் ஒவியம் மிகப்பெரியதாக வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்தபடியே ஜோர்டனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தார் தகையார், ஜோர்டனை அவர் திரும்பி பார்க்கவேயில்லை. அது தன்னை அவமதிப்பதாகவே ஜோர்டன் உணர்ந்தான்.
“ திருட்டுச் செயல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கைது செய்து தூக்கிலிட வேண்டியது வரும்“ என ஜோர்டன் எச்சரிக்கை செய்தான்.
“தான் செய்வது குற்றமில்லை. உபகாரம். இது எனது நீதி பரிபாலனம்“ என்றார் தகையார்
ஜோர்டன் ஆத்திரத்துடன் “திருடுவது நீதிபரிபாலனத்தில் எப்படி வரும் “எனக்கேட்டான்.
“எங்கள் நீதியை கேள்விகேட்பதற்கு நீங்கள் யார். என் மீது யார் புகார் அளித்திருக்கிறார்கள். என்னை விசாரணை பண்ணும் உரிமையை யார் உங்களுக்கு அளித்தது. “எனக் கோபமாகக் கேட்டார் தகையார்
“இந்தியாவை விக்டோரியா மகாராணியின் ஆட்சி செய்கிறார். நாங்கள் அவரது ஊழியர்கள். அதிகாரம் செய்வதற்கு எங்களுக்குச் சகல உரிமைகளும் அளிக்கபட்டிருக்கிறது“ என்றான் ஜோர்டன்
“உங்கள் அதிகாரத்தை வைத்து முடிந்தால் இந்த வீட்டிலிருந்து வெளியேறி போங்கள்“ என்றபடியே தகையார் எழுந்து தனக்குப் பின்னால் இருந்த கதவைத் தள்ளி திறந்து வெளியேறிப் போனார்.
ஜோர்டன் வெளியேறும் வாசல்கதவை திறந்து அடுத்த அறைக்குள் வந்தான். அவனால் வீட்டிலிருந்து வெளியேற முடியவில்லை. வீட்டிற்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தான். பகல்முடிந்து இரவாகியது. இருட்டிற்குள் நடந்து கொண்டேயிருந்தான். எப்படி வெளியேறுவது எனத் தெரியாமல் அலறினான். கதவு என நினைத்துக் கொண்டு சுவரைத் திறக்க முயன்று தோற்றான்.
மயங்கி கிடந்த அவனை யார் வீட்டின் வெளியே தூக்கிப் போட்டார்கள் எனத் தெரியவில்லை. அவன் கண்விழித்தபோது மரத்தடியில் கிடந்தான். சூரியன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆத்திரமும் குழப்பமும் கொண்ட ஜோர்டன் தகையாரின் வீட்டை வெறித்துப் பார்த்தான். அது விநோதமான மலர் ஒன்றைப் போலத் தோன்றியது.
தகையாரைப் பற்றி ஜோர்டன் அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் மதராஸ் கம்பெனியின் பத்தொன்பதாவது படைப்பிரிவு இரண்டு பீரங்கி மற்றும் நூற்று இருபது வீரர்களுடன் தகையாரை கைது செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டது.
அவர்களைத் தகையார் வீட்டுவாசலில் காத்திருந்த மக்கள் தடுத்துச் சண்டையிட்டார்கள். படைப்பிரிவு அவர்களை அடித்து ஒடுக்கியது. நிறையப் பேர் சண்டையில் கொல்லப்பட்டார்கள். தகையார் வீட்டிற்குள் சென்றால் மீள முடியாது என்பதால் வீட்டை பீரங்கி வைத்து தகர்த்தார்கள்.
வீடு தரைமட்டமாக நொறுங்கியது. ஆனால் தகையாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வயல் எலியைப் போலப் பூமிக்குள் ஒளிந்து கொண்டிருப்பார் என்று மக்கள் நம்பினார்கள்.
தகையார் இல்லாத காலத்திலும் அவரிடம் வேண்டுதல் போடுவது மாறவில்லை. தனது மனதிலுள்ள குறையைச் சொல்லி தகையாரே செய்து கொடுங்கள் என இருளில் ஒரு கல்லை எடுத்து வீசினால் அவர் செய்துகொடுத்துவிடுவார் என்று மக்கள் நம்பினார்கள். கம்பெனியால் இந்த நம்பிக்கையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
