ஒரு வெற்றிக்குப் பின்னால்

 

எண்பத்தைந்துவயதைக் கடந்த எழுத்தாளரான சுப்ர.பாலன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள்,பயணக்கட்டுரைகள், ஆன்மிகக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய படைப்புகள்கல்கி, அமுதசுரபி, கலைமகள் என பல இதழ்களில் இடம்பெற்று வருகின்றன.

இருபதாண்டுகளுக்குமுன்பு, சுப்ர.பாலன் நட்பின் அடிப்படையில் சில எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடியஅனுபவங்களையும் மதிப்பின் காரணமாக மறைந்த எழுத்தாளர்களின் குடும்பத்தாரைச் சந்தித்துஉரையாடித் திரட்டிய தகவல்களையும் தனித்தனி கட்டுரைகளாக அமுதசுரபி இதழில் அவர் தொடர்ந்துஎழுதிவந்தார். அக்கட்டுரைகள் இப்போது ’எழுத்துலகில் சில புள்ளிகள்’ என்னும் தலைப்பில்தொகுக்கப்பட்டு முதன்முதலாக நூல்வடிவம் பெற்றிருக்கிறது. வானதி பதிப்பகம் அந்நூலை அழகாகவெளியிட்டிருக்கிறது. எழுத்துத்துறை மீது சுப்ர.பாலன் கொண்டிருக்கும் தீராத பற்றின்அடையாளமாக இந்நூல் அமைந்திருக்கிறது.

முப்பதுஆளுமைகள் ,பற்றிய கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும்தி.ஜ.ர., சுஜாதா, டி.என்.ராமச்சந்திரன், ஓவியர் மாதவன், லிஃப்கோ சர்மா,  சிட்டி, சு.சமுத்திரம், பாபநாசம் சிவன், விக்கிரமன்,நா.பார்த்தசாரதி, சுந்தா, அழ.வள்ளியப்பா, பெ.சு.மணி, எஸ்.வி.எஸ். போன்ற பலர் இன்றுநம்மிடையே இல்லை. பட்டியலைப் பார்க்கும்போது, அத்தகையோரைச் சந்தித்து உரையாடிய அனுபவங்களைவாசிக்கும் ஆர்வம் இயல்பாகவே மேலோங்கி வருகிறது. இவர்களையெல்லாம் சந்தித்து உரையாடும்பேறு பெற்றவர் என்னும் கோணத்தில் சுப்ர.பாலனும் நம் கண்களுக்கு அதிசய மனிதராகத் தெரிகிறார்.ஓர் அனுபவக்கட்டுரை பழைமை ஆகுந்தோறும் அதன் ஈர்ப்பு பெருகுகிறது.

தி.ஜ.ர.என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். நூறுக்கும் மேலானநூல்களை எழுதியவர். எண்ணற்ற நூல்களை மொழிபெயர்த்தவர். ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு,அவர் எழுதிய படைப்புகளைப் பட்டியலிடும் பொருட்டு தேடலில் மூழ்கியபோது, ஏறத்தாழ நாற்பதுநூல்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அந்த அளவுக்குக் குடத்திலிட்ட விளக்காகவேவாழ்ந்து மறைந்த ஆளுமை அவர்.

அவருடையஅப்பா கிராமக் கர்ணமாக வேலை பார்த்தவர். சிற்றன்னையின் கொடுமையால் நான்காம் வகுப்புக்குமேல் படிக்கமுடியாமல் படிப்பை நிறுத்திவிட்டார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு சிறிது காலம் கர்ணம் வேலையைப் பார்த்தார். சொந்தமுயற்சியால ஆங்கில மொழியைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். கடைசியில் எழுத்தாளராக மாறிபத்திரிகை அலுவலகங்களில் வேலை செய்யத் தொடங்கினார். அதற்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில்சற்றே வெளிச்சம் படரத் தொடங்கியது. கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லாத் தளங்களிலும்அவருடைய படைப்புகள் வெளிவந்து அவர் மீது கவனம் குவிந்தது.

தி.ஜ.ர.பத்தொன்பது வயது இளைஞராக இருந்தபோது சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர்.சுதேசி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற அந்நியத்துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால்சிவகங்கை சிறையில் பதினோரு மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பிறகு மீண்டுமொருபோராட்டத்தில் ஈடுபட்டு மறுபடியும் சிறைத்தண்டனை பெற்றார். அவர் கைது செய்யப்பட்டபோதுஅவருடைய மெலிந்த தோற்றத்தைப் பார்த்து இரக்கம் கொண்ட காவலர் “உங்கள மாதிரியான ஆளுங்களைஅரெஸ்ட் பண்ணவே மனசுக்கு சங்கடமா இருக்குது” என்று சொல்லிவிட்டு கையில் விலங்கு மாட்டாமலேயேசிறைக்கு அழைத்துச் சென்றார்.

ஒருமுறையாரோ ஒருவர் இலங்கையிலிருந்து வந்த ஒரு வாசகரை அழைத்துவந்து தி.ஜ.ர.விடம் அறிமுகப்படுத்தினார்.அந்த நண்பர் ஊருக்குத் திரும்ப பணமில்லாத நிலையில் இருந்தார். தி.ஜ.ர.விடமே வாய்திறந்துகடன் கேட்டிருக்கிறார். அவருக்குச் சாப்பாடு போட்டு கையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தையும்கொடுத்து அனுப்பிவைத்தார். ஊருக்குச் சென்றதுமே பணத்தைத் திருப்பி அனுப்பிவைப்பதாகக்கூறிவிட்டுச் சென்றவரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அதற்காக தி.ஜ.ர.வும் வருந்தவில்லை.சரியாக இரு ஆண்டுகள் கழித்து ஒரு பார்சல் அவருக்கு அஞ்சலில் வந்தது. அதற்குள் பேனாக்கள்.டீத்தூள் பாக்கட் ஆகியவற்றோடு பணத்தையும் வைத்து அனுப்பியிருந்தார் அந்த இலங்கை நண்பர்.கடைசிவரை நாலுமுழ வேட்டியும் கதர்ச்சட்டையும் மட்டுமே தி.ஜ.ர.வுடைய ஆடைகளாக விளங்கின.

தி.ஜ.ர.வைப்போலசுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு எழுத்தாளர் ஆர்.வி. என்கிற வெங்கட்ராமன்.கலைமகள் நிறுவனம் தொடங்கிய கண்ணன் என்கிற சிறார் பத்திரிகைக்கு பல ஆண்டுகள் ஆசிரியராகஇருந்தவர். 1930இல் இராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்புசத்தியாகிரகம் நடைபெற்ற சமயத்தில்அப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர் ஆர்.வி. கதரியக்கத்திலும் பங்குபெற்றவர். வாழ்நாள் முழுதும் கதராடைகளையே அணிந்தவர். சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பளராகஇருந்த போதும் கண்ணன் என்னும்  பத்திரிகையேஅவருடைய அடையாளமாக நிலைத்து நின்றது.

அவருடையவாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான விஷயம் அவருடைய திருமணம்தான். அவருடைய தங்கைக்காகமாப்பிள்ளை பார்க்க அவருடைய குடும்பத்தினர் சென்றனர். அவரோடு இளைஞரான வெங்கட்ராமனும்சென்றார். மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே மாப்பிள்ளையுடையதங்கைக்கும் அந்த வீட்டாருக்கும் வெங்கட்ராமனைப் பார்த்த கணத்திலேயே பிடித்துவிட்டது.ஒரு திருமணத்தை நிச்சயிக்கச் சென்ற இடத்தில் இரு திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன. இருதிருமணங்களும் இனிதே நடந்தேறின.

ஆனந்தவிகடன்இதழ் நடத்திய ஒரு நாவல்போட்டியில் வெற்றி பெற்ற நாவலை எழுதியவர் ஏ.எஸ்.ராகவன் என்னும்எழுத்தாளர்.  திருச்சியைச் சேர்ந்த இவர் பாரதிஅறிஞர் திருலோக சீதாராமைத் தம் ஞானகுருவாகக் கொண்டவர். அவர்  முதன்முதலாக கதை எழுதத் தொடங்கிய அனுபவத்தைக் குறிப்பிடும்பகுதி சுவாரசியமாக உள்ளது.  பள்ளிப்படிப்பைமுடித்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்துவந்த காலத்தில்அவருக்கு நரசிம்மன் என்றொரு நண்பர் இருந்திருக்கிறார்.  ஒருநாள் அவர் எழுதிய சிறுகதை ஆனந்த விகடன் இதழில்வெளிவந்துவிட்டது. உடனே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் நரசிம்மன் கதையைப்பற்றியே பேசத் தொடங்கிவிட்டனர். 

ராகவனைநெருங்கி பேச்சுக் கொடுத்த நண்பரொருவர் “உங்க நண்பர் நரசிம்மனின் கதை ஆனந்த விகடனில்வந்திருக்குதே, பார்த்தீர்களா?” என்று கேட்டார். தன்னோடு பேசிப் பழகும் நரசிம்மனா கதைஎழுதுகிறான் என ராகவன் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார். அக்கணத்தில் அவனே எழுதும்போதுநாமும் எழுதினால் என்ன என்றொரு வேகம் நெஞ்சில் புகுந்துவிட்டது. அன்றைக்கே ஒரு கதையைஎழுதி ஆனந்த விகடன் இதழுக்கு அனுப்பிவிட்டார் ராகவன். இரண்டு வாரம் கழித்து வீட்டில்உறங்கிக் கொண்டிருந்த ராகவனைத் தட்டி எழுப்பிய நரசிம்மன் “இந்த வார விகடன்ல உன் கதைவந்திருக்குது. ‘சலீமா பேகம்’னு உன் கதையுடைய தலைப்பையும் உன் பேரையும் போட்டு போஸ்டர்அடிச்சி ஒட்டியிருக்காங்க” என்று தெரிவித்தார். அச்செய்தி அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கேஅழைத்துச் சென்றுவிட்டது.

கதை எழுதும்பயிற்சிக்கு மூலமாக ராகவன் குறிப்பிடும் பள்ளிக்காலத்து நிகழ்ச்சியொன்று சுவாரசியமாகஇருக்கிறது. பள்ளியில் அவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் வை.பொன்னம்பலனார் என்பவர்.சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அதனால் அவருடைய நடவடிக்கைகளைக் கேலி செய்து தனக்குத்தெரிந்த இலக்கணத்தைப் பயன்படுத்தி அவர் மீது ஒரு அகவற்பாவை எழுதினார். ரகசியச்சுற்றுக்காகநண்பர்களிடையில் படிப்பதற்காகக் கொடுத்த அந்தக் கவிதைத்தாள் கடைசியில் தமிழாசிரியரிடமேசென்று சேர்ந்துவிட்டது. கவிதையைப் படித்த ஆசிரியர் ராகவனை அருகில் அழைத்தார். அடிப்பதற்காகத்தான்அருகில் அழைக்கிறார் என நடுங்கிக்கொண்டே சென்ற ராகவனை ”உன்னிடம் நல்ல எழுத்துத்திறமைஇருக்கிறது. அதை நல்ல வழியில் பயன்படுத்து” என்று சொல்லிவிட்டு கவிதைத்தாளைக் கொடுத்தார்அவர். அது வகுப்பு என்று கூட பார்க்காமல் ஆசிரியரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துவணங்கினார் ராகவன்.

அரியக்குடிராமானுஜ ஐயங்கார் தொடக்கத்தில்  தமிழில் சாகித்தியங்களைப்பாட விருப்பமற்றவராகவே வாழ்ந்ததாகவும் அவரை அந்தத் திசையில் செலுத்தியவர் நீலம் என்னும்புனைபெயரில் எழுதிவந்த நீலமேகம் என்றும் ஒரு குறிப்பை ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்சுப்ர.பாலன். அந்த அனுபவத்தை எழுத்தாளர் நீலம் அவர்களே அவரிடம் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.  தமிழ்ப்பாடல்கள் இசைக்கச்சேரிக்குஏற்றவை அல்ல என்னும் எண்ணம் கொண்டவராக தொடக்கத்தில் ராமானுஜ ஐயங்கார் இருந்திருக்கிறார்.நீலம் அவரிடம் பேசிப் பேசி அவர் மனத்தைக் கரைத்தார். அதே நேரத்தில் காஞ்சி மகாஸ்வாமிகளும்நீலம் சொன்ன அதே ஆலோசனையை அவருக்கு வழங்கி உற்சாகமூட்டினார். அதையடுத்து உடனடியாக செயலில்இறங்கிவிட்டார் ஐயங்கார். முதலில் திருப்பாவைப் பாடல்களுக்கு ஸ்வரம் அமைத்துப் பாடினார்.அதற்குக் கிடைத்த வரவேற்பினால் உந்தப்பட்டு குலசேகர ஆழ்வாரின் பாசுரங்கள், அருணாசலக்கவிராயரின் ராம நாடகக்கீர்த்தனைகள் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் அமைத்துப் பாடத் தொடங்கினார்.

ஓவியர்மாதவன் வாழ்வில் நடந்த ஓர் அரிய தருணத்தைத் தன் உரையாடல் வழியாக அறிந்து பதிவு செய்திருக்கிறார்சுப்ர.பாலன். கன்னையா நாடகக் கம்பெனியில்தான் முதன்முதலாக ஆர்ட்டிஸ்டாக வேலைக்குச்சேர்ந்தார் மாதவன். அரங்க நிர்மாண வேலைகளும் பொருத்தமான ஓவியங்களைக் கொண்ட திரைச்சீலைகளைஅமைக்கும் வேலைகளும் ஓவியர் மாதவனுடைய பொறுப்பில் இருந்தன.

ஒரு சமயம்கன்னையா கம்பெனி நாடகத்தைப் பார்க்க ஆங்கிலேயக் கவர்னர் துரை வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மறுநாள் நாடகம் என்ற நிலையில் முதல்நாள் மாலை வரை மாதவன் எந்த வேலையையும் தொடங்கவில்லை.கவர்னர் வருகையின் போது இப்படி நடக்கிறதே என முதலாளி கவலையில் மூழ்கிவிட்டார். கடைசியில்ஒருவழியாக ஓவியர் மாதவனைப் பார்த்து “என்னப்பா, ஒரு வேலையும் செய்யலையா?” என்று கேட்டுவிட்டார்.அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் எழுந்துபோய்விட்டார் மாதவன்.

அன்றுபொழுது இறங்கிய வேளையில் அரங்கத்துக்குத் திரும்பிவந்த மாதவன் உதவிக்கு இருந்த பையன்களைஅழைத்து படுதா விரிப்பில் வண்ணக்கலவைகளை அப்படியே ஊற்றும்படி கேட்டுக்கொண்டார். பையன்கள்வண்ணங்களை ஊற்றும் வரை காத்திருந்து, தன் கையில் துடைப்பத்தை எடுத்து அதையே தூரிகையைப்போலசுழற்றிச்சுழற்றி அந்தப் படுதாவை அழகுபடுத்த ஆரம்பித்துவிட்டார் மாதவன். இரவு முழுதும்தொடர்ந்த அந்த வேலை அதிகாலையில்தான் முடிந்தது. அப்போது படுதாவில் இந்திரப்பிரஸ்தத்தின்அரண்மனைத் தோற்றம் காட்சியாக விரிந்திருந்தது. பார்ப்பவர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கிவிட்டனர்.விடிந்ததும் அந்த ஓவியத்தைப் பார்த்து மகிழ்ந்த முதலாளி கன்னையா “துடைப்பத்தையே தூரிகையாகக்கொண்டு எங்கள் கம்பெனி ஓவியர் தீட்டிய அரண்மனைக்காட்சிகளைக் காண வருக வருக” என அந்தநிகழ்ச்சியையே விளம்பர வாக்கியமாக மாற்றியமைத்து பிரபலப்படுத்திவிட்டார்.

எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் என்பவர் மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து திருப்பாவை, திருக்குறள், பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, நாலடியார், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், ஒளவையாரின் நீதிநூல்கள் என எண்ணற்றபடைப்புகளை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 1983இல் சுப்ர.பாலனின் இந்தப்பதிவை எழுதியிருக்கிறார். தேசிகன் அவர்களுடைய பங்களிப்பைப்பற்றிய மிகமுக்கியமான ஆவணம்என்றே இப்பதிவைப்பற்றிக் குறிப்பிடவேண்டும்.

நக்கீரன்கோபால் இன்று தமிழகத்தில் அனைவரும் அறிந்த பத்திரிகையாளர். ஆயினும் ஒரு பத்திரிகையாளராகக்காலூன்றி நிற்பதற்கு முன் அவர் எதிர்கொண்ட சவால்களைக் கேட்டறிந்து சுவாரசியமான பதிவாகஎழுதியிருக்கிறார் சுப்ர.பாலன். ஒரு வங்கி ஊழியராக மகனைப் பார்க்க நினைத்த அவருடையதந்தை அவரை வணிகவியல் படிக்கவைத்தார்.  ஆனால்அவருக்குக் கல்வியின் மீது அதிக அளவில் நாட்டம் இல்லை. ஓவியத்தின் மீதும் ஹாக்கி விளையாட்டின்மீதும் கோபால் கொண்டிருந்த நாட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் தேர்வில் வெற்றிபெற்று பட்டதாரியானார். ஆயினும் தொடர்ந்து படிக்கவும் செல்லாமல் வேலைக்கும் முயற்சிசெய்யாமல் உள்ளூரிலேயே இருந்த அரிசிமண்டியில் தொண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச்சென்றார். சென்னைக்குச் சென்று ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். சொந்தத்தொழில் தொடங்கும் ஆசையை யாரோ தூண்ட, அங்கிருந்து வெளியேறி ரப்பர் உதிரிகளைத் தயாரிக்கும்ஒரு நிறுவனத்தைத் தொடங்கி முதலீட்டையும் ஆரோக்கியத்தையும் இழந்து சொந்த ஊருக்கே திரும்பிவந்தார்.

உடல்நலம்குன்றி ஓய்வெடுத்த காலத்தில் பழைய ஓவிய ஆசை துளிர்விட மீண்டும் சென்னைக்கு வந்து வாரஇதழ்களில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக வேலைக்குச் சேர்ந்தார். தாய், தராசு போன்ற இதழ்களில்பணிபுரிந்தார். அப்போது சொந்தமாகவே ஒரு பத்திரிகையை நடத்தும் ஆவல் அவர் நெஞ்சில் கருக்கொண்டது.அப்போது க.சுப்பு என்பவர் நக்கீரன் என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி நிறுத்தியிருந்தார்.புதிய பெயருக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பதற்குப் பதிலாக நக்கீரன் என்னும் பெயரையேபயன்படுத்திக்கொள்ள நினைத்து சுப்புவை அணுகி அனுமதி கேட்டார். அவரும் பெருந்தன்மையோடுஅதற்கு அனுமதி கொடுத்தார். தொடக்கத்தில் நிறைய பொருளிழப்பு சலிப்பூட்டியது. ஆனாலும்செயலூக்கம் குன்றாமல் செலுத்திய தொடர் உழைப்பு அவரை வெற்றி பெற்ற பத்திரிகையாளராக்கியது.இக்கட்டுரையை பல திருப்பங்களைக் கொண்ட சுவாரசியமான ஒரு கதையைப் போல எழுதியிருக்கிறார்சுப்ர.பாலன்.

தி.ஜ.ர.முதல் நக்கீரன் கோபால் வரை முப்பது ஆளுமைகளைப்பற்றி இத்தகு சித்திரங்களைச் சொல்லோவியங்களாகத்தீட்டியிருக்கிறார் சுப்ர.பாலன். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனுபவம், ஒரு பழைய புகைப்படஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்துக்கும் பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கும்அனுபவத்துக்கும் நிகரானது.

பொதுவாகவே,ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் தோல்விகளும்கசப்பான அனுபவங்களும் எண்ணற்றவை. கலையை ஊடகமாகக் கொண்ட மனிதர்களின் வாழ்க்கையில் இந்தஎண்ணிக்கை கூடுதலாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் வெற்றியின் வெளிச்சத்தில் பார்ப்பவர்களின் கண்களுக்கு அவை எதுவும் தெரிவதில்லை.சுப்ர.பாலன் போன்ற சிலர் உரையாடிக் கண்டறிந்து தொகுத்தளிக்கும்போதுதான் அவற்றை நம்மைப்போன்றவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. 

 

(எழுத்துலகில் சில புள்ளிகள். சுப்ர.பாலன்.வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை – 17)

 

(புக் டே – இணைய தளம் – 27.09.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2025 09:42
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.