ஒளிரும் வானவேடிக்கைகள்

வானவேடிக்கைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, பிரமாண்டமான விழாக்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் வாணவேடிக்கைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை விளக்கும் அரிய ஓவியங்களைக் காண முடிகிறது.

தாரா திருமண ஊர்வலம்

முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் திருமணத்தைச் சித்தரிக்கும் 1633ல் வரையப்பட்ட ஓவியத்தில் இரவு வானத்தில் ஒளிரும் வானவேடிக்கைகளைக் காண முடிகிறது.

ஓவியத்தில் மணமகன் தாராவும் அவரது குழுவினரும் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு வருகிறார்கள். அவர்களை நதிரா பானுவின் குடும்பத்தினர் எதிர் கொண்டு வரவேற்கிறார்கள்.

தாரா ஷிகோ மற்றும் நதிரா பானு பேகத்தின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தேறியது. ஷாஜகான் நாமா புத்தகத்தில் இந்தத் திருமணத்திற்கான பிரம்மாண்ட செலவைப் பற்றிய விரிவான கணக்கு குறிப்பிடப்பட்டுள்ளது

பேரழகுடன் வரையப்பட்ட இந்த ஓவியத்தினை நுண்மையாகக் காணும் போது அதன் சிறப்புகள் வியப்பளிக்கின்றன. எத்தனை விதமான குதிரைகளை வரைந்திருக்கிறார்கள். அவற்றின் தனித்துவமிக்க முகபாவம்..யானைகளின் கண்கள் வரையப்பட்டுள்ள அழகு, ஊர்வலத்திற்காக எடுத்துவரப்படும் பந்தங்களின் அமைப்பு, மெழுகுவர்த்திகளைக் கூண்டுகளுக்கு வைத்துக் கொண்டு வருவது. நீண்ட தீப்பந்தங்கள். வாசனை திரவியங்கள். எதிர்கொண்டு அழைக்கும் பெண்களின் முகங்கள் மற்றும் உடை, மணமகனின் முகத்திரை, அவரது அலங்கார உடை. வழி எங்கும் வானவேடிக்கைகள் ஒளிர்கின்றன.

ஆங்கிலேய வர்த்தகர் பீட்டர் முண்டி இந்தத் திருமணத்தை நேரில் கண்டு குறிப்பு எழுதியுள்ளார் அதில் ஆக்ரா வானத்தில் அரை மைல் நீளத்திற்கு வாணவேடிக்கை ஒளிர்ந்தன என்கிறார்

பேரரசரின் வாரிசான தாரா தங்கள் குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொள்வதும் வினோதமாகக் கருதப்பட்டது, காரணம் பாபரின் காலத்திலிருந்தே இந்த நடைமுறை தவிர்க்கப்பட்டது. ஷாஜகான் தனது ஆட்சியின் வலிமையைத் தக்கவைத்துக் கொள்ள இந்தத் திருமணத்தை நடத்தினார் என்கிறார்கள்,

Men with fireworks

ராஜஸ்தானிய ஓவியமான .Men with fireworks ல் பல்வேறு வகையான வானவேடிக்கைகளை மக்கள் வெடிப்பதை சித்தரிக்கிறது. பட்டாசு வெடிப்பவர்களின் வேடிக்கையான செயல்களை ஓவியம் அழகாகச் சித்தரித்துள்ளது.

சீனாவிலிருந்து வாணவேடிக்கைகள் உலகெங்கும் பரவின.. ஐரோப்பாவிற்கு 13 ஆம் நூற்றாண்டில் பட்டாசுகள் வந்தன. இத்தாலியர்களே முதலில் பட்டாசு தயாரித்த ஐரோப்பியர்கள்.

Tarikh-i Firishta நூலில், ஹுலேகு கானின் தூதர் கி.பி 1258 இல் டெல்லிக்கு வந்தபோது வாணவேடிக்கை கண்காட்சியுடன் வரவேற்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. முகலாய இந்தியாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன

சீன ஓவியம்

சீனாவின் பண்டைய ஓவியங்களில் வானவேடிக்கைகள் ஒளிர்வதைச் சித்தரித்துள்ளார். அதே பாணியில் தான் இந்திய ஓவியங்களிலும் பட்டாசு ஒளிர்வது வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியங்களில் வானவேடிக்கை சித்தரிக்கபட்டதற்கும் இன்றைக்கும் பெரிய மாற்றமில்லை.

வானவேடிக்களைச் சித்தரிக்கும் ஓவியம் எதிலும் சிறுவர்கள் பட்டாசு வெடிப்பதைக் காண முடியவில்லை.

1760 லக்னோவில் வரையப்பட்ட ஓவியத்தில் அரண்மனையில் பெண்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இந்த ஓவியத்தில் மாடத்தில் நின்றபடி பெண்கள் மத்தாப்பூ வெடிப்பதை சிறப்பாக வரைந்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள புத்தாடைகளை வரைந்துள்ள விதம் வியப்பூட்டுகிறது இந்த ஓவியத்திலும் ஆற்றங்கரையில் வானவேடிக்கைகள் நடக்கின்றன. படகில் இருந்தபடியே சிலர் பட்டாசு வெடிக்கிறார்கள்.

The History of Fireworks in India Between AD 1400 and 1900”, என்றொரு புத்தகத்தை Parashuram Krishna Gode எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் பட்டாசு அறிமுகமான வரலாறு பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 05:59
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.