அலகிலா விளையாட்டு

 

இமயமலையைஒட்டியிருக்கும் ஆலயங்களில் சார்தாம் என அழைக்கப்படுகிற நான்கு கோவில்கள் (கேதாரிநாத்,பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி) மிகமுக்கியமானவை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறுபகுதிகளிலிருந்து திரண்டுவரும் மக்கள் அந்த ஆலயங்களில் வழிபட்டுச் செல்கிறார்கள். இவையனைத்தும்கடுமையான குளிரும் பனியும் சூழ்ந்த இடங்கள் என்பதால் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமேஅந்த ஆலயங்கள் திறந்துவைக்கப்படுகின்றன.

கங்கையின்கிளைநதிகளில் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரமாக கேதார்நாத் ஆலயம் அமைந்துள்ளது. பாண்டவர்கள்தம் பாவத்தைப் போக்க நடந்தே இந்த மலையுச்சிக்கு வந்து வழிபட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு.எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இந்த இடத்துக்கு வந்து பாண்டவர்கள் வழிபட்ட இடத்துக்குஅருகிலேயே புதிதாக ஒரு கோயிலை உருவாக்கினார். பனி படர்ந்த மலைகளுக்கும் மந்தாகினிக்கும்இடையில் உள்ளதால் இந்தக் கோவில் ஒவ்வொரு ஆண்டிலும், ஏப்ரல் மாதம் அட்சயத்திருதியை நாள்முதல் தீபாவளித்திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும். அதற்குப் பிறகு கோவிலில் உள்ளவிக்கிரகங்கள் மலையடிவாரத்தில் உள்ள குப்தகாசியின் உக்கி மடத்துக்கு எடுத்துவரப்பட்டுவழிபாடு தொடர்ந்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

கேதார்நாத்துகுக்குச்செல்பவர்கள் கெளரிகுண்ட் என்னும் இடம் வரைக்கும் சாலை வழியாகச் செல்லமுடியும். அதற்குப்பிறகு பதினாலு கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டும். குதிரை, கழுதை வாகனத்திலும்செல்லலாம். வானிலை சரியாக இருந்தால் ஹெலிகாப்டர் வழியாகவும் செல்லலாம். வேறு வழி எதுவும்இல்லை.

கோவிலுக்குப்பின்னால் சோராபரி பனி ஏரி உள்ளது. அமைதியில் உறைந்திருப்பதுபோலத் தோற்றமளித்தாலும்ஏறத்தாழ அறுபதடி ஆழம் கொண்டது. அதே அளவுக்கு உயரமான தடித்ததொரு பனிச்சுவர் அந்த ஏரியின்அரணாக காலம் காலமாக விளங்குகிறது. பனியே சுவராகவும் பனியே நீராகவும் தோற்றம் கொண்டுமிளிர்கிறது அந்த அற்புத ஏரி.

புதுவையைச்சேர்ந்த மஞ்சுநாத் எழுதியிருக்கும் ’அப்பன் திருவடி’ நாவலை வாசிக்கத் தொடங்கும் முன்பாக,கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூவாயிரத்தைநூறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் அந்தஆலயத்தைச் சுற்றியுள்ள  நில அமைப்பைப் புரிந்துகொள்வதுமிகமுக்கியம். கேதார்நாத்துக்கும் கெளரிகுண்ட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில்தான் மொத்தநாவலின் கதையும் நிகழ்கிறது.

2013ஆம்ஆண்டில் கேதார்நாத் கோவிலுக்கு அருகில் இடிமுழக்கத்துடன் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது.அதையொட்டி மந்தாகினி ஆறு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. சோராபரி ஏரி வழிந்து எடைதாளாமல் பனிச்சுவர் உடைந்தது. வரலாறு காணாத வகையில் ஒரு வெள்ளப்பெருக்கு உருவாகி பெரியபெரிய பாறைகளை உருட்டிக்கொண்டு ஓடியது. எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் மிதந்துவந்தஒரு பெரிய பாறை கோவில் பின்புறம் சிக்கி நின்று இயற்கையாகவே ஒரு தடையை ஏற்படுத்தியது.வெள்ளம் அப்புள்ளியில் இரண்டாகப் பிளந்து கோவிலைச் சுற்றிக்கொண்டு ஓடியது. வழியில்தென்பட்ட மனிதர்களும் மரங்களும் விடுதிகளும் வீடுகளும் சாலைகளும் வெள்ளத்தோடு  அடித்துச் செல்லப்பட்டன.  உயிர்சேதத்துக்கு அளவே இல்லை. உடனடியாக மீட்புப்பணிகள்எதையும் தொடங்க இயலாத சூழலில் அரசு திணறியது. பல நாட்களுக்குப் பிறகுதான் மீட்புப்பணிகள்தொடங்கப்பட்டன. கோவிக்குள்ளேயே தஞ்சமடைந்த ஒருசிலர் மட்டுமே பல நாட்களுக்குப் பிறகுமீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர்.   துரதிருஷ்டவசமாகஅவர்களில் பாதிப் பேருக்கும் மேல் மனச்சிதைவுக்கு ஆளானார்கள். கோவிலையும் சாலைகளையும்சீரமைக்கும் பணிகள்  ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றன.அதற்குப் பிறகு பக்தர்கள் மறுபடியும் ஆலய வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.

கேதார்நாத்பயணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தருணத்தில் சந்தித்துக்கொண்ட இருவர் அதிர்ஷ்டவசமாகவோ,துரதிருஷ்டவசமாகவோ அடுத்த பயணத்தில் தற்செயலாகச் சந்தித்துக்கொள்வதாக ஒரு தருணத்தைஇந்த நாவலில் நம் முன் நிகழ்த்திக்காட்டுகிறார் மஞ்சுநாத். ஒருவர் சுருளிச்சாமி எனஅழைக்கப்படுபவர்.  ராணுவ வீரர். இன்னொருவர்மாதவ். கெளரிகுண்ட்டிலிருந்து குதிரை மீது பக்தர்களை அழைத்துவந்து வாழ்க்கைக்கான பொருளையீட்டும்சாதாரண குதிரைக்காரன். நாவலின் கதைக்களம் அக்கணத்திலிருந்து விரிவடைந்தபடி செல்கிறது.

அந்தப்பருவத்திற்குரிய வழிபாட்டின் இறுதிநாளில் கதை தொடங்குகிறது. பிரசாதத்தை வாங்கிக்கொண்டுதனக்கு அருகிலில்லாத மனைவியோடும் மகளோடும் பேசியபடி மனம்போன போக்கில் படியிறங்கிச்செல்கிறார் சுருளிச்சாமி. அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மனச்சமநிலையற்றவராகவே அவரைப்பார்க்கவைக்கிறது. குதிரைப்பாதையில் சண்டித்தனம் செய்து தன் மீது அமர்ந்திருந்தவரைக்கீழே விழவைத்ததால் குதிரைப்பயணத்தை ரத்து செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றுவிடுகிறார்ஒரு பக்தர். வருமானத்துக்கான வழியைக் கெடுத்துவிட்டதே என்கிற ஆத்திரத்தில் குதிரையைஅடித்து விளாசுகிறான் மாதவ். குதிரை இறந்துவிடுகிறது.   அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பத்தோடு கோவில்பாதையில் நடந்தபடியே இருக்கிறான் அவன். அப்போதுதான் பித்தனைப்போல பேசியபடி செல்லும்சுருளிச்சாமி ஆபத்தான பள்ளத்தை நோக்கிச் செல்வதை உணர்ந்து பனிப்பள்ளத்தில் விழுந்துவிடாமல்காப்பாற்றி மேலேற்றி அழைத்துவந்து ஆசுவாசப்படுத்துகிறான்.

இருவருமேமூச்சு வாங்க ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது, இருவருமே தாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள்என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.  வெள்ளப்பெருக்குஏற்படுவதற்குச் சிற்சில நிமிடங்களுக்கு முன்பாக அந்த ராணுவவீரரும் மாதவும் குப்தகாசியில்சந்தித்துக்கொண்டவர்கள். குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்குச் செல்லவிருந்த ராணுவஉயர் அதிகாரிக்குத் துணையாக அந்த வீரர் ஹெலிகாப்டரில் செல்லவேண்டியிருந்தது. அதிகாரியின்ஆணையை அவரால் மீறமுடியவில்லை. அதனால் குதிரைக்காரனாக இருந்த மாதவ் வசம் தன் மனைவியையும்மகளையும் கேதார்நாத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துவரும் பொறுப்பை அளித்துவிட்டு அவர்அதிகாரியுடன் சென்றுவிடுகிறார்.

வானத்தில்பறந்துகொண்டிருந்தபோது பனிமூட்டத்தின் காரணமாக கருடச்சட்டி பாறையில் மோதி ஹெலிகாப்டர்வெடித்துச் சிதறிவிடுகிறது. அதிகாரியும் அதிகாரிக்குத் துணையாகச் சென்ற வீரரும் எங்குவிழுந்தார்கள் என்பதே தெரியவில்லை. தன் சகோதரர்களோடும் ராணுவவீரரின் குடும்பத்தாரோடும்கேதார்நாத்துக்குச் செல்கிறான் மாதவ். கேதார்நாத்தில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவும்வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு அந்தச் சூழலையே அலங்கோலமாக மாற்றிவிடுகின்றன. மாதவ் தான்வாக்களித்தபடி அபயமென ஏற்றுக்கொண்டவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கடைசிவரை போராடுகிறான்.எனினும் அவன் முயற்சி தோல்வியிலேயே முடிவடைகின்றன. அனைவரும் மரணமடைகிறார்கள்.  அவன் மட்டும் எப்படியோ உயிர்பிழைக்கிறான்.

அனைவரையும்காப்பாற்றுவதற்குப் போராடித் தோற்ற கதையை அந்தச் சந்திப்பில் சுருளிச்சாமியிடம் சொல்கிறான்மாதவ். இத்தனை காலமும் அவர்கள் எங்கோ உயிருடன் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தோடு மனைவியோடும்மகளோடும் கற்பனையில் வாழ்ந்துவந்த அவருடைய  கனவு அக்கணத்தில் கலைந்துவிடுகிறது. எதார்த்த உண்மைசுருளிசாமியின் நெஞ்சில் அளவில்லாத பாரத்தை ஏற்றிவைத்துவிடுகிறது. அமைதியின்மை இருவரையுமேஅலைக்கழிய வைக்கிறது. இருவருமே ஆளுக்கொரு திசையில் பிரிந்துசென்று விடுகிறார்கள். மலையைவிட்டு இறங்காமல் மலைப்பாதையிலேயே புதியபுதிய இடங்களை நோக்கி நடந்துகொண்டே இருக்கிறார்சுருளிசாமி. மாதவ் மலையிலிருந்து விழுந்து உயிர்துறக்க நினைக்கிறான். ஆனால் ராணுவ முகாமைச்சேர்ந்தவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் பிழைக்கவைக்கின்றனர்.

மரணம்வரைக்கும் சென்று மீண்டுவந்த இருவரும் மீண்டும் ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு வகையில் வாழத்தொடங்கக்கூடும் என்பதுதான், அதுவரை நாவலை வாசித்துவந்தவர்களின் எண்ணமாக இருக்கக்கூடும்.  ஆனால் அவர்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்பதுதான்வியப்பளிக்கிறது. வாழ்ந்தது போதும் என்கிற எண்ணம் அவர்களுக்கு எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது.அத்தகு முடிவை அவர்கள் இழப்பின் காரணமாகவோ வேதனையின் காரணமாகவோ எடுக்கவில்லை. மாறாக,மனம் விரும்பியே அந்த முடிவை எடுக்கிறார்கள். ஒருவர் இருப்பிடம் இன்னொருவருக்குத் தெரியாமல்இமயமலையின் முன் அலையத் தொடங்குகிறார்கள். அப்பன் திருவடி அவர்களை அங்கேயே வட்டமிடவைத்துவிடுகிறது.

சுருளிச்சாமி,மாதவ் மட்டுமல்ல, இமயமலையைச் சுற்றிச்சுற்றி இப்படி நிறைவுடன் வாழ்பவர்கள் பலர். அவர்களில்சிலருடைய சித்திரங்களும் நாவலின் போக்கில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கின்றன. ராணுவ வீரர்உயிரிழந்த அதே ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு மருத்துவர் மட்டும் தப்பிப் பிழைக்கிறார்.ஆனால் ஊருக்குத் திரும்பாமல் அங்கேயே துறவியாகத் திரியத் தொடங்கிவிடுகிறார். அங்கேஅலைகிற யோகிகள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுநிலப்பகுதிகளிலிருந்து இமயமலையை நோக்கி வந்தவர்கள். ஆனால் மீண்டும் நிலத்தை நோக்கிச்செல்லும் விருப்பத்தைத் துறந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டவர்கள்.

இந்தநாவல் வழியாக மஞ்சுநாத் முன்வைத்திருக்கும் கேள்வி இதுதான். இமயமலை தன்னை நாடிவரும்மனிதர்களின் நெஞ்சில் உருவாக்கும் உணர்வலைகள் எத்தகையவை? ஒருசிலர் அதன் காட்சியைக்கண்டு களித்துவிட்டு ஆனந்த அனுபவத்தோடு மீண்டும் நிலத்தை நோக்கித் திரும்பிச் செல்கிறார்கள்.இன்னும் ஒருசிலர் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஓர் இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.இன்னும் ஒரு சிலர் இமயமலையைத் தரிசித்த நிறைவோடு தன் வாழ்க்கையைத் தானே அந்தப் புள்ளியிலேயேமுடித்துக்கொள்கிறார்கள். இன்னும் ஒரு பகுதியினர் மட்டும் கீழே இறங்க மனமின்றி தாயின்இடுப்பிலேயே அமர்ந்திருக்க நினைக்கும் குழந்தையென இமயமலையையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டேஇருக்கிறார்கள். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்ந்தபடிஇருக்கிறது. காரணம் கண்டறிந்து சொல்லமுடியாத ஒரு புதிரான வாழ்க்கையை நமக்குக் காட்டுகிறார்மஞ்சுநாத். நம்மிடமும் அதற்கு விடையில்லை. அவரைப்போலவே நாமும் மலைப்போடு அவர்களை அண்ணாந்துபார்க்கவேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

இந்தநாவலை வாசிக்கும் போக்கில் ஏதேனும் ஒரு தருணத்தில் ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார்’ என்னும் கம்பன் வரிகளைநினைத்துக்கொள்ளாமல் படிக்கவே முடியாது. அப்பன் திருவடியின் அலகிலா விளையாட்டை நாம்கண்ணால் பார்க்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை வகுத்துரைக்கும் ஆற்றல் நம் செயல் எல்லைக்குஅப்பாற்பட்டதாக இருக்கிறது.

 

(அப்பன் திருவடி. நாவல். மஞ்சுநாத். எதிர்வெளியீடு, 96, நியு ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. விலை. ரூ375)

 

(புக் டே – இணைய இதழ் – 08.11.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2025 17:43
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.