வாழ்க்கையின் இலக்கணம்

 

இந்திய இலக்கியத்துக்கு கன்னடமொழியின் மாபெரும் கொடை என வசனஇலக்கியத்தைக் குறிப்பிடலாம். வசன இலக்கியத்தின் மூலவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு,அக்கமகாதேவி ஆகியோர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நகரங்களில்பிறந்து வளர்ந்தவர்கள். ஆயினும் சிவசிந்தனை அனைவரையும் ஒன்றிணைக்கும் கண்ணியாக விளங்கியது. கல்யாண தேசம் அவர்கள் அனைவருக்கும் இயங்குதளமாகஅமைந்தது.

அவர்கள் உருவாக்கிய சரண இயக்கம், சிவபக்தியை முன்னிட்டு பிறஎல்லா வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைத்தது. நெசவுத்தொழில் செய்பவர், மாடு மேய்ப்பவர்,கன்னக்கோல் வைத்து களவுத்தொழில் செய்பவர், தோணியோட்டும் தொழிலாளர், சவரத் தொழிலாளி,செருப்பு தைக்கும் தொழில் செய்பவர், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், படைவீரர்கள்என சமூகத்தில் நிலவிய எல்லாத் தரப்புகளையும் சேர்ந்தவர்கள் தம்மைச் சரணர்களாக அறிவித்துக்கொண்டுஒருங்கிணைந்தனர்.

மதக்கருத்துகளை விளக்கும் கருவியாக இல்லாமல் அன்றாட உலகியல்நடப்புகளை முன்வைக்கும் பாடல்களை  பக்தியோடுஇணைத்து அவர்கள் எழுதினார்கள். பக்திக்கான இலக்கணத்தை ஒவ்வொருவரும் தனக்கே உரிய தனித்தன்மையோடுவரையறுத்துக்கொண்டனர். உரையாடல் மொழிக்கு நெருக்கமாக இருக்கும் அந்த வசனங்கள் வெவ்வேறுஉவமைகள் வழியாகவும் எடுத்துக்காட்டுகள் வழியாகவும் உள்ளத்தூய்மையையே பக்திக்கு ஆதாரமாகமுன்வைப்பதை இவ்வசனங்களை வாசிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம். 

பன்னிரண்டாம் நூற்றாண்டின் கர்நாடகம் என்பது மகாராஷ்டிரம், ஆந்திரப்பிரதேசம்ஆகியவற்றோடு கூடிய நாடாக இருந்தது. அந்தத் தேசத்துக்கு கல்யாண் நகரம் தலைநகராக இருந்தது.சாளுக்கிய வம்சத்திடமிருந்த ஆட்சி களச்சூரிய வம்சத்திடம் கைமாறியது. களச்சூரிய வம்சத்தைச்சேர்ந்த மன்னன் பிஜ்ஜளனும் தொடக்கத்தில் பிற அரசர்களைப்போல ஆட்சி செய்ய விரும்பியவன்தான்.ஆயினும் பிற எந்த அரசனுக்கும் இல்லாதவகையில், தனக்கு அருகிலிருப்பவர்கள் சொல்லும் கூற்றுகளுக்குச்செவிமடுக்கும் பொறுமையும் மனமும் அவனுக்கு இருந்தன. அவனுக்கு இடித்துரைக்கும் அமைச்சராகஇருந்தவர் பசவண்ணர். அவருடைய சொற்களைக் கேட்டும் அவருடைய செயல்களை நேருறப் பார்த்தும்அரசன் மெல்ல மெல்ல மாற்றமடைந்தான்.

சிவபக்தியை முன்வைத்து எல்லாத் தரப்பு மனிதர்களையும் ஒருங்கிணைத்தபசவண்ணர் உடலுழைப்பை முதன்மையாகக் கொண்ட நிலையை உருவாக்கினார். ’அனைவரும் உழைக்கவேண்டும்,செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதவேண்டும், தொழிலில் ஒருபோதும் மேல், கீழ் பார்க்கக்கூடாது,எந்தத் தொழிலிலும் அதிக பலனை எதிர்பார்க்கக்கூடாது, உழைப்பின் வழியாக மட்டும் கிடைக்கும்பொருளை வைத்துத்தான் உணவுக்கான வழியைத் தேடிக்கொள்ள வேண்டும்’ ஆகியவற்றை சரணர்கள் பின்பற்றவேண்டிய வாழ்க்கை இலக்கணங்களாக பசவண்ணர் வகுத்தளித்தார். அதுவே அவரைப் பின்பற்றிய சரணர்களின்வாழ்க்கை முறையாக மாறியது.

 

உழைப்பில்லாதபக்தன் அரசன்

உழைப்பில்லாதமகேசன் அரக்கன்

உழைப்பில்லாதபூசாரி பரதேசி

உழைப்பில்லாதலிங்கத்தை உடையவன் பாவி

உழைப்பில்லாதசரணன் முட்டாள்

உழைப்பில்லாதலிங்க ஐக்கியம் நகைப்புக்கிடமளிக்கும்

கூடலசங்கமதேவா

 

என்பது சென்னபசவண்ணன் என்பவர் எழுதிய வசனமாகும்.

உழைப்பின் காரணமாக செல்வம் பெருகுவதையும் நாட்டின் தகுதி உயர்வதையும்கண்ட அரசன் பிஜ்ஜளன், பசவண்ணர் சொற்களை ஏற்றுக்கொண்டான். கர்நாடகத்துக்கு கல்யாண் போன்றதலைநகரம் அதற்கு முன்பும் இருந்ததில்லை. அதற்குப் பின்பும் இருந்ததில்லை. பிஜ்ஜளன்போன்ற அரசனும் கூட அதற்கு முன்பும் தோன்றியதில்லை. பின்பும் தோன்றியதில்லை. அந்த நூற்றாண்டைஒரு மறுமலர்ச்சிக்காலம் என்றே சொல்லவேண்டும். அதன் விளைவாக உருவானதுதான் வசன இலக்கியம்

பசவண்ணரின் சமகாலத்தைச் சேர்ந்ததாகவும் அதற்குப் பிறகான காலத்தைச்சேர்ந்ததாகவும் ஏறத்தாழ இருபத்தோராயிரம் வசனங்கள் கிடைத்திருக்கின்றன. இருநூறுக்கும்மேற்பட்ட வசனகாரர்கள் அம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

வசன இலக்கியத்தின் உருவாக்கம் குறித்த இந்தத் தகவல்களின் பின்னணியோடுபடிக்கத் தொடங்கினால், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும்‘யாருக்கும் யாரும் இல்லை’ தொகுதியை வாசகர்கள் இன்னும் நெருக்கமாக உணர்ந்துகொள்ள முடியும்என்பதால் சற்றே நீண்ட குறிப்பை எழுதவேண்டியதாயிற்று.

இத்தொகுதியில் சுகுமாரன் நூறு வசனங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.சமய அடையாளம் துறந்த வசனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சமூகப்பண்பாட்டுச் சலனங்களைப்பதிவு செய்திருக்கும் வசனங்களைத் தேடித்தேடிக் கண்டடைந்து மொழிபெயர்த்திருக்கிறார்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டவெளி வார்த்தைகள் என்னும் தலைப்பில் சாகித்தியஅகாதமி வழியாக வெளிவந்த வசனங்களின் தொகுப்பிலும் அவர் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டவர்.அப்போது கிடைத்த அனுபவம் அவரை வசனங்களோடு நெருக்கமாக உணரச் செய்ததால் இப்போது மீண்டும்ஒரு தொகுதியை உருவாக்கியிருக்கிறார். தமிழ்ச்சூழலில் இதுவரை பலரும் அறியாத கங்காம்பிகா,கொக்கவ்வா, காளவ்வா, மாதார தூளய்யா, லிங்கம்மா, மோளிகெ மகாதேவி, மாதார சென்னய்யா,  சத்யக்கா, அம்பிகர செளடய்யா போன்ற பலரையும் முதன்முறையாகஅறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

சந்திரன்உதிக்கையில் பொங்குகிறது சமுத்திரம்

சந்திரன்தேய்கையில் வற்றுகிறது

சந்திரனைராகு மறைத்த போது

புலம்பியதாசமுத்திரம்?

சமுத்திரத்தைக்குறுமுனி குடித்தபோது

சந்திரன்தடுக்க வந்ததா?

யாருக்கும்யாருமில்லை

கெட்டவர்க்குஉறவுமில்லை

ஐயா,கூடலசங்கம தேவா

உலகுக்குஉறவு நீயே

 

இது பசவண்ணரின் வசனம். எல்லாத் தருணங்களிலும் எல்லோருக்கும்உறவு எனத் திகழ்பவனாக இறைவனை மையப்படுத்துகிறது இவ்வசனம். இந்த உறவை நம்பி மானுடர்பேணி வளர்ப்பதற்கு இந்த உலகில் எதுவும் தடையில்லை என்னும் சமூக உண்மையையும் போகிற போக்கில்நுட்பமாக  உணர்த்திவிட்டுச் செல்கிறது.

ஒரு செய்தியை வாயால் சொல்வது எளிது. அதை உணர்ந்துகொள்வதுகூடஎளிது. ஆயினும் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. காரணம் நம்முடைய மனப்பழக்கம். காலம்காலமாகஒரு சங்கதிக்குப் பழகிய மனத்தைத் திசைதிருப்பி வேறொரு திசைக்குத் திருப்புவது மிகவும்கடினமானது. அப்படிப்பட்ட மனத்தை வெல்லும் ஆற்றலை அடைவதுதான் நம் பிறவியின் நோக்கமாகஇருக்கவேண்டும் என்பது பசவண்ணரின் ஆவல். மனப்பழக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது பசவண்ணர்‘பல்லக்கு ஏறிய நாய்போல கண்டால் விடாது முந்தைய பழக்கம்’ என்றொரு உவமையைச் சொல்கிறார்.அதைப் படிக்கும்போது தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பதுபோல உள்ளது.

ஏற்கனவே நிறைந்து வழியும் கோப்பையில் புதிதாக எதையும் ஊற்றிவிடமுடியாது என்னும் உண்மையை நாம் பல உவமைக்கதைகள் வழியாகப் படித்திருப்போம். அறிந்ததினின்றுநாம் விடுதலையடையாமல் புதிய ஒன்றை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ளவே முடியாது.

ஒரு வசனத்தில், அக்கமகாதேவி ஒரு புதிரைப்போல ஒரு கேள்வியை எழுப்பிஅந்த உண்மையை நம்மை அழகாக உணரச் செய்கிறார். சென்னமல்லிகார்ஜுனனின் குணநலன்களைப்பற்றிஎடுத்துரைப்பதுபோலத்தான் அந்த வசனம் சம்பிரதாயமாகத் தொடங்குகிறது. உள்ளூர மனமும் உடலும்உருகாதவர்களின் அபிஷேகத்தை அவன் ஏற்பதில்லை. அவர்கள் வைத்து வழிபடும் பூக்களையும் அவன்ஏற்பதில்லை. அவர்கள் பூசும் சந்தனத்தையும் அவன் ஏற்பதில்லை. இப்படி ஒவ்வொன்றாக அவன்ஏற்பதற்கு வாய்ப்பில்லாத பல செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் அக்கமகாதேவி. இறுதியில்‘என்னிடம் எதுவும் இல்லை, நான் எதையும் வைக்கவும் இல்லை’ என்னும் பொருள்படும்படி ‘என்னிடம்இருப்பது என்னவென்று என் கைத்தலத்தில் வந்தமர ஏற்றாய்?’ என்று சென்னமல்லிகார்ஜுனனையேகேட்டு முடிக்கிறார். தன் மனத்தை அவர் வெற்றிடமாக வைத்திருக்கிறார், அவ்வெற்றிடத்தையும்அவனுக்கு அளிக்க அவர் எந்தத் தடையுமில்லாமல் இருக்கிறார் என்பதுதான் காரணம் என்பதைவாசகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடிவடைகிறது அவ்வசனம்.

தன் மனப்போக்கைச் சித்தரிக்கும் வகையில் அக்கமகாதேவியே எழுதியஇன்னொரு வசனத்தையும் சுகுமாரன் இத்தொகுதியில் மொழிபெயர்த்திருக்கிறார். அது இன்னும்வெளிப்படையாகவும் சுவையாகவும் அமைந்திருக்கிறது.

 

பசியேநீ நில்லு நில்லு

தாகமேநீ நில்லு நில்லு

உறக்கமேநீ நில்லு நில்லு

காமமேநீ நில்லு நில்லு

குரோதமேநீ நில்லு நில்லு

மோகமேநீ நில்லு நில்லு

லோபமேநீ நில்லு நில்லு

மதமேநீ நில்லு நில்லு

மாச்சரியமேநீ நில்லு நில்லு

நான்சென்னமல்லிகார்ஜுனனுக்கு

அவசரஓலை எடுத்துச் செல்கிறேன்

வணக்கம்

 

இவ்வசனத்தில் தன்னைத்தானே தற்படமாக தீட்டிவைத்திருக்கிறார் அக்கமகாதேவி.தன் மனத்தில் எதற்கும் இடமளிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்கமகாதேவியின் சொல்லை அல்லமப்பிரபு வேறொரு விதமாக தன் வசனங்களில்எடுத்துரைக்கிறார். இறைநம்பிக்கை என்பது இறையை உணர்வதால் உருவாகி நீடித்திருக்கும்ஒருவகை உணர்வு. அந்த உருவாக்கத்துக்கு வேறெதுவும் பின்னணிக்காரணமாகவோ உந்துசக்தியாகவோஇருக்கக்கூடாது. அப்படி ஒன்று இருப்பின், அது போலியாகவே இருக்கும். இறைநம்பிக்கை என்பதுஏதோ ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காக அமையும் புகலிடமல்ல, அவனை நம்பி அவனோடு இருப்பதற்காகவருபவர்களுக்கு மட்டுமான புகலிடமாகும்.

 

கள்ளனுக்கஞ்சிகாட்டுக்குள் புகுந்தால்

புலிதின்னாமல் விடுமா?

புலிக்குஅஞ்சி புற்றுக்குள் நுழைந்தால்

பாம்புகொத்தாமல் விடுமா?

மரணத்துக்கஞ்சிப்பக்தனானால்

கர்மம்தின்னாமல் விடுமா?

இவ்வாறு,சாவின் வாய்க்குக் கவளமாகும் வேடதாரிகளை

என்னென்பேன்குகேஸ்வரா?

 

தேவரதாசிமய்யா என்னும் வசனகாரரும் பக்திக்கான அடிப்படையை வரையறுக்கும்போக்கில் புரிந்துகொள்ளாத பக்தியைச் சுட்டிக் காட்டுகிறார்.

 

கிழிந்தகோணியில் ஒருவன் நெல்லை நிரப்பினான்

தீர்வைக்குப்பயந்து இரவெல்லாம் நடந்தான்

நெல்லெல்லாம்போய் மிஞ்சியது கோணிப்பை

பலவீனன்பக்தி இதுதான் பார், ராமநாதா

 

ஒவ்வொரு வசனகாரரும் பக்திக்கென ஓர் இலக்கணத்தை வரையறுத்துச்சொல்கின்றனர். சொல்லழகாலும் உவமை அழகாலும் படிம அழகாலும் ஒவ்வொன்றும் ஒருவிதமாகத் தோற்றமளித்தாலும்அடிப்படையில் அவை அனைத்தும் ஒரே உண்மையையே பறைசாற்றி நிற்கின்றன. பற்றற்று இருப்பது,ஏற்றத்தாழ்வின்றி பிறருடன் இணைந்திருப்பது, ஒரே எண்ணத்துடன் இருப்பது ஆகியவை மட்டுமேபக்திக்கான வழி என்பதுதான் அந்த உண்மை.

எல்லா வசனங்களையும் மிஞ்சும் வகையில் சித்தராமா என்பவர் எழுதியஒரு வசனத்தையும் சுகுமாரன் இத்தொகுதியில் மொழிபெயர்த்திருக்கிறார். கல்யாண தேசத்துக்கேவராத வசனகாரர் அவர். மகாராஷ்டிரத்தில் பிறந்த ஊரான சோனாலிகெ என்னும் சிற்றூரிலேயே தொண்டாற்றிமறைந்தவர். வாசிப்பின்  வழியாகவே அல்லமப்பிரபுவின்தத்துவ விளக்கத்தைப் பயின்று தெளிவு பெற்று ஈசனின் பாதையில் மக்கள் சேவையில் ஈடுபட்டுவாழ்ந்தவர்.

 

ஒரு கோழிகூவுகிறது பகலிரவு பாராமல்

அதை அறியார்மனிதர் கூட்டம்

அறிந்தால்பவபந்தமில்லை

மறந்தால்பிறப்பு இறப்புக்கு எல்லையுமில்லை

கபிலசித்த மல்லிகார்ஜுனா

 

கோழியின் குரலை இறைவனின் அழைப்பாக அறிந்துகொள்ளக்கூட ஞானமில்லாதவர்களாகவாழும் மனித வாழ்க்கையை இதைவிட மென்மையாக இன்னொருவர் இடித்துரைத்துவிட முடியாது. காலுக்குக்கீழேயே புதையல் இருந்தும், புதையல் எங்கோ இருக்கிறது எனத் தேடி ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டேஇருப்பவர்களாக இருக்கிறோம் நாம். பொருளில்லாத இந்த வாழ்க்கையைத்தான் நாம் அனைவருமேபொருள் நிறைந்த ஒன்றாக நினைத்து வாழ்ந்துவருகிறோம் என நினைக்கும்போது மனம் கூசுகிறது.கவித்துவமான அத்தகு சுடர்மிகுந்த வரிகள் இத்தொகுதியில் மாணிக்கப்பரல்களென பல இடங்களில்அடங்கியிருக்கின்றன.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியை மனத்துக்கு நெருக்கமாகஉணரச் செய்கிறது. தமிழ் வாசக உலகம் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. அழகானஓவியங்களோடும் நல்ல வடிவமைப்போடும் சிறப்பான முறையில் இத்தொகுதியை வெளியிட்டிருக்கும்பரிசில் புத்தக நிலையத்தின் பணி பாராட்டுக்குரியது.  

 

(யாருக்கும் யாரும் இல்லை. கன்னட வசன கவிதைகள்.தமிழில்: சுகுமாரன், பரிசில் புத்தக நிலையம், 47, பி1 பிளாட், முதல் தளம், தாமோதர்ப்ளாட், ஐஸ்வர்யா அடுக்ககம், ஓம் பராசக்தி தெரு, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை-600106. விலை. ரூ.150)

 

(புக் டே – இணைய தளம் -  27-10.2025)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2025 19:35
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.