கவிஞனுடன் வளர்தல்

தேவதேவனைச் சந்திக்கையில் எனக்கு வயது 25. அதாவது 1987ல், குற்றாலம் பதிவுகள் கவிதைப்பட்டறையில் அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்கு முன்னரே அவருக்கு நான் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவருடைய குளித்துக் கரையேறாத கோபியர்கள் என்னும் முதல் தொகுதியில் சில கவிதைகள் மட்டும் பிடித்திருந்தன. ஆனால் மின்னற்பொழுதே தூரம் தொகுப்பு என்னை ஆட்கொண்டது. அன்று முதல் அவர் எனக்கான கவிஞராக ஆகியிருந்தார்.

நான் தேவதேவனைச் சந்திக்கையில் அவரிடம் அவர் கவிதைகளின் தனித்தன்மை பற்றிச் சொன்னேன். நான் அன்று நவீனக்கவிதை என்னும் வடிவிலிருந்த நவீனத்துவக் கவிதைமேல் அவநம்பிக்கை கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தேன். தனிநபரின் அகவுலகம், இருத்தலியல் சார்ந்த எதிர்மறைநோக்கு, உலகியல்தன்மை ஆகியவற்றுடன் அவை முழுக்கமுழுக்க சிந்தனையின் கவிதைவடிவங்களாக இருந்தன. விதிவிலக்காக இருந்தவர் அன்று பிரமிள் மட்டுமே. பிரமிளின் அந்த கொந்தளிப்பையும், கனவையும் தேவதேவன் தனக்குரியதாக எடுத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் நான் பேசியதை தேவதேவன் கவனிக்கவில்லை. அவர் வேறேதோ பேசிக்கொண்டிருந்தார். அவர் கவனிப்பதில்லை என்று அப்போது புரிந்துகொண்டேன். அவருக்கு அவர் கவிதை பற்றி எவரும் வெளியிலிருந்து ஏதும் சொல்லவேண்டியதில்லை. “நீங்க கவிதை எழுதலாமே” என்று என்னிடம் சொன்னார். “நான் ஒண்ணுரெண்டு கவிதை எழுதியிருக்கேன். ஆனால் என்னோடது புனைவுலகம்” என்று நான் அவரிடம் சொன்னேன். “அது இன்னும் நல்லது. இப்ப தமிழிலே புனைவிலே கவிதையே இல்லாமப்போச்சு” என்று அவர் என்னிடம் சொன்னார்.

அதன் பின் இன்றுவரை தொடர்ச்சியாக அவருடனேயே இருக்கிறேன். என்னுடன் அவரும். என் விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய முதல் வாசிப்பு எதிர்வினை அவருடையது- அது ஒரு இந்தியக் காவியம் என்று. இரண்டாவது எதிர்வினை ரமேஷ் பிரேதனிடமிருந்து.  அது ஒரு பின்நவீனத்துவ மெட்டாஃபிக்‌ஷன் என்று. “நாங்க சொல்றத நீ எழுதியிருக்கே”. மூன்றாவது எதிர்வினை எம்.டி.முத்துக்குமாரசாமியிடமிருந்து. அது நோபல் பரிசுக்குரிய படைப்பு என்று. கைப்பிரதியை வாசித்து அதை வெளியிடும் முயற்சியை முன்னெடுத்தவர் சி.மோகன்.”எழுதிட்டீங்க…இனிமே என்ன? ஒண்ணுமே எழுதலேன்னாலும் நீங்க இருப்பீங்க. ஜாலியா இருங்க”

தேவதேவன் என்னிடம் சொன்னார், “நாவலுக்காக ஒரு கவித்துவத்தை உருவாக்கிட்டீங்கன்னா அதுக்கு நாவலுக்கு வெளியே இடமில்லை…அதனாலே இன்னொரு நாவலை அந்த கவித்துவத்தோட எழுதக்கூடாது” இது அவர் சொன்னதிலிருந்து நான் புரிந்துகொண்டது. வரையறை செய்து சொல்லும் வழக்கம் அவருக்கு இல்லை. நான் அதை தலைக்கொண்டேன், அந்த மொழியையும் உருவகமுறைமையையும் பின்னர் கையில் எடுக்கவில்லை. ஒவ்வொரு நாவலுக்கும் அதற்கான கவியுலகையே உருவாக்கிக்கொண்டேன். அதுவே என்னை மீளமீளப் பிறக்கச் செய்கிறது.

தேவதேவனுக்கு 1997 ல் சின்னம்மைநோய் வந்தது. ஓர் அகவைக்குப்பின் அது வருவது ஆபத்தானது. உடலுக்குள் நோய் சென்றுவிட்டது. உயிர்பிரியும் அபாயம் இருந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கையில் என் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்று அவர் மனைவி சொன்னார். பின்னர் அவரும் சொன்னார். “அவர்கிட்ட சொல்லுங்க…நான் எழுதின எல்லாத்தையும் அவர்கிட்ட குடுங்க” என்று அவர் அரற்றினார். நான் எப்போதும் எல்லா நெருக்கடிகளிலும் அவருடன் இருந்திருக்கிறேன்.

நான் தேவதேவனைப்பற்றித்தான் அதிகமாக எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக அவரைப்பற்றிய என் ரசனையை எழுதியிருக்கிறேன், ஒரு நூலாக ‘ஒளியாலானது’ என்னும் தலைப்பில் அவர்மீதான என் வாசிப்பு வெளிவந்த பின்னரும் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். நான் தமிழ்க்கவிதைகளில் தீவிர ஈடுபாடுள்ளவன். இன்று என் ஆர்வம் செவ்வியல்கவிதைகளிலேயே. நவீனக்கவிதைகள் என் உள்ளத்தின் உயரத்திற்கு கீழேதான் நின்றுள்ளன, கவிஞர்களும். தமிழ் நவீனக்கவிதைகளில் நான் மேலே நோக்கி வியப்பவை தேவதேவன் கவிதைகள் மட்டுமே.

அவருடைய அகவுலகை அணுக்கமாக பின்தொடர்வது என் உள்ளம். அவர் ஒருவகை பித்தர். ஒருவகை குழந்தை. முற்றிலும் அறிவுச்செயல்பாடே இல்லாத உள்ளம் அது. அத்தகைய ஓர் உள்ளம் இப்புவியில் தூயபேரின்பத்தை மட்டுமே அறியும் என்று, இந்த இயற்கை அந்த உள்ளத்திற்கு ஒவ்வொரு துளியிலும் இனிக்கும் என்பது எனக்கு இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான அடிப்படையை அளிக்கிறது. ‘எல்லா இலையும் இனிக்கும் காட்டில் வாழ்வது பஷீரின் ஆடு’ என கல்பற்றா நாராயணன் ஓரிடத்தில் எழுதினார். அந்தக்காட்டில் ஒரு தும்பியாக அலைபவர் தேவதேவன்.

ஒரு கவிஞனுடன் ஒரு புனைவெழுத்தாளன் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் கொண்டுள்ள இந்த ஆன்ம உறவு என்பது தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலும் சற்று அரிதானது என்றே நினைக்கிறேன். புனைவெழுத்தில் என் விரிவும் உயரமும் எனக்குத் தெரியும். அவை தனிமரம் தோப்பானவை, வான்தொடும் மலைகளுக்கு இணையான தேவதாருக்கள். ஆனால் அவற்றுக்கும் மேலேதான் வண்ணச்சிறகுகள் கொண்ட சிறுபறவைகள் விளையாடும் வெளி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.