சிவசங்கரியின் “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – உருது”வை முன்வைத்து…
அன்பின் ஜெ!
பயன்பாட்டு மொழியாக கடைவீதியில், குடியிருப்பு பகுதியில் உருதுவை தாய்மொழியாகக் கொண்ட எளிய மக்களைச் சூழ என் அன்றாடம் இருக்கிறது. நவீன இலக்கிய வாசகனாக (உருது / ஆங்கில) மொழிபெயர்ப்பின் வழியே வளைகுடா மத்தியக் கிழக்கு நாடுகளின் எழுத்துக்கள் என் முதன்மைத் தேர்வுகள்.
கோவையின் ஃபைஸ் காதிரி (ஏப்ரல், அக்டோபர் என) இரண்டு முறை வெள்ளிமலையில் “முழுமையறிவு உருது இலக்கிய வகுப்பு”களை எடுத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பொதுவான இணைப்பு உருது இலக்கியம், அதனால் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட நாள்தோறும் ஒருமுறையேனும் (போனில்) கட்டாயம் பேசிக் கொள்வோம்.
இணையம் அவ்வளவு புழக்கத்தில் இல்லாத (1990-களின் நடுப்பகுதி) ஆண்டுகளில் விக்கிபீடியா, கூகுள் என தேடுபொறி வசதி அன்றில்லை. வட இந்தியாவில் பேசப்படும் மொழிகளை குறிக்கும் Apabhraṃśa என்ற சொல்லைக் கேட்டேன். மலினமான, இலக்கணமற்றது என்பது அதன் பொருளாம். அது இந்தோ – ஐரோப்பிய, இந்தோ – ஆரிய, இந்தோ – ஈரானிய மொழிக்குடும்பம் என இன்னும் கிளைகள் பிரிகிறது.
கடைசியாகப் பார்த்தால் கோபிசந்த் நாரங் பேசும்போது ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பதை இப்பொழுது (சிவசங்கரியின் நூலை) மீள்வாசிப்பு செய்யும்போது கவனித்தேன். இருபத்தி ஐந்தாண்டுகள் எப்படி அது நினைவில் இருந்தது என்பது வியப்பாக உள்ளது. எங்கோ ஆழ்மனத்தில் தங்கிவிட்ட அச்சொல்லைக் கண்டு மனம் குதூகலித்தது.
பிற்பாடு தங்களின் கட்டுரையிலும் ஒரு இடத்தில் Apabhraṃśa – “அப்பிரம்சா” என்கிற அச்சொல்லை மு. ஜகந்நாத ராஜா (1933 – 2008) கையாண்டிருப்பார். சாதாரண, பாமரர்களிடம் இதை கேட்டிருக்க முடியாது, கோபியும் ராஜாவும் உண்மையில் பன்மொழிப் புலவர்கள்.
https://www.jeyamohan.in/31750/#.Va7g...
ஆம், தினமணிக் கதிரில் (இந்திய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றி சிவசங்கரி) எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகளே – அவர் பிற்காலங்களில் “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” நூல் உருவாகக் காரணமானது.
“உண்மையில் அவர் மறைவுடன் பாலியும் பிராகிருதமும் தெரிந்த கடைசித் தமிழரும் இல்லாமலாகிவிட்டார்” என்று அஞ்சலி செலுத்தியிருப்பீர்கள். அப்துஸ் ஸலாம் (1940 – 2021) என்றொரு மேதை ஒருவர் (எங்கள் ஊரில்) இருந்தார். ஜகந்நாத ராஜாவைப் போல அவரையும் யாருக்கும் தெரியாது. உருது, அரபு, பார்சி மொழிகளிலிருந்து தமிழுக்கும் – அவ்வாறே தமிழிலிருந்து உருதுவுக்கும் மொழிபெயர்த்த, இருவழி மொழிபெயர்ப்பாளர் நரியம்பட்டு அப்துஸ் ஸலாம் சாஹிப்.
ஓஷோ உரைகளில் ஒன்றான “நாரதரின் பக்தி சூத்திரம்” நூலை இரண்டு தொகுதிகளாக இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். மௌலானா ரூமியின் மஸ்னவி என்னும் பார்சீக காவியத்திலுள்ள 28,000 ஈரடிச் செய்யுட்ப்பாக்களை முழுமையாக தமிழாக்கம் செய்தவர்.
என் இளம் பருவத்திலிருந்து கொரொனாவின்போது அவர் இறந்துபோகும் வரை தொடர்பில் இருந்தேன். ஓஷோவும் ரூமியும் அவருக்கு ஒன்றே, எல்லாவிதத்திலும் முழுமையான சூஃபி. கிட்டத்தட்ட அதே தகுதிகளுடன் இருக்கும் இன்னுமொரு (கடைசி?) நபர் ஃபைஸ் காதிரி.
மதீனாவிலுள்ள திருக்குர்ஆன் அச்சுக்கூடத்தின் இயக்குனராக அதுவரை அரேபியர் மட்டுமே இருந்தனர். அவ்வாறு அரேபியர் அல்லாத முதல் இந்தியர், வாணியம்பாடியைச் சேர்ந்த முனைவர் ஃபா.அப்துற் றஹீம் (1933 – 2023), Philologist – மொழியியல் அறிஞரான அவரைப் பற்றியும் பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
வெள்ளிமலையில் தெலுங்கு, மலையாள இலக்கிய அறிமுக வகுப்புகள் நடைபெறுமா எனக்கேட்டு வாசகர் எழுதிய கடிதத்துக்கு – உரிய ஆசிரியர்கள் கிடைத்தால் பரிசீலிக்கலாம் என்று கூறியிருப்பீர்கள்.. மொழிகளில்தான் பண்பாடு, வரலாறு, கலை, மதம், மெய்யியல் சேமிக்கப்படுகிறது. ஆகவே இவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒவ்வொரு சொல்லும், அதன் பொருளும் முக்கியம்.
K.M. George தொகுப்பில் ஷம்சுர் ரஹ்மான் ஃபாரூக்கி எழுதியிருந்த கட்டுரையைத்தான் சிவசங்கரியும் பிற்காலங்களில் தான் எழுதிய “Knit India Through Literature” என்பதில் இணைத்திருக்கிறார். ஒருவகையில் ஷம்ஸ்-சின் இந்த ஒரே கட்டுரைதான் கடந்த முப்பதாண்டுகளாக உருதுவைப் பற்றி வேறு மொழியில் கிடைக்கும் காத்திரமான அறிமுகம்.
இந்த தொகைநூலுக்காக சிவசங்கரி செய்திருக்கும் ஆய்வுகளும், திரட்டிய தரவுகளும் பிரமிக்க வைக்கின்றன. இந்த (உருது இலக்கிய) நூலில் மட்டுமே ஏறக்குறைய 100-150 கவிஞர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள், நாடக இயக்குனர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என சொல்லிக் கொண்டே செல்கிறார்.
1850 -1975 என ஏறக்குறைய 125 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலக்கட்டம் இந்த தொகை நூலில் ஆவணமாக கிடைக்கிறது. (உருது) எழுத்தாளர்களில் பலரின் பெயரை இப்பொழுதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். மறந்து போயிருந்த வேறு சிலர் இங்கு குறிப்பிட்டிருந்ததால் – மீண்டும் படிக்க வேண்டுமென எண்ணியுள்ளேன்.
உருது மொழி குறித்து சிவசங்கரியின் இந்த நூலுக்கு Damodar Mauzo (1944…) முன்னுரை எழுதியுள்ளார். கொரொனா பெருந்தொற்றுக்குப் பிறகு தாங்கள் அதிகம் இந்தியப் பெருநகரங்களில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு சந்தித்த எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகையில் தாமோதர் மௌசோவைப் பற்றியும் எழுதி இருப்பீர்கள். இதையொட்டி தமிழிலேயே மொழிபெயர்க்கப்பட்ட “கார்மெலின்” நாவலையும் அண்மையில் படித்தேன்.
குர்ரத்துல் ஐன் ஹைதர் (1923 – 2007),குல்சார் (1934…) என இருவர் ஞானபீட விருதைப் பெற்றவர்கள். ஜோகிந்தர் பால் (1925 – 2016), பால்ராஜ் கோமல் (1928 – 2013), கோபிசந்த் நாரங் ஆகியோரின் நேர்காணல்களும், அறிமுகக் கட்டுரைகள், சிறுகதைகளையும் சிவசங்கரி இணைத்திருக்கிறார். மொத்தப் பக்கங்கள் சுமார் 260. உருது தொகை நூலுக்காக ஆறு பேர்கள் எழுதியுள்ளனர். முற்போக்கு முகாமில் செயல்பட்ட குர்ரத்துல் ஐன் ஹைதரைத் தவிர பிறர் அனைவரு,ம் முஸ்லிமல்லாதவர்கள்.
முகலாயர்கள் டில்லியிலிருந்து ஆட்சி செய்தனர். அவர்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனி, அதன் பிறகு பிரிட்டிஷ் நேரடி ஆட்சி 1772 முதல் 1911 வரை கல்கத்தாவிலிருந்தே நடத்தி வந்தனர். அதனால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வியும் நவீனச் சிந்தனைகளும் முதலில் கல்கத்தாவை மையம் கொண்டே தொடங்கின. ஆர்ய சமாஜ், பிரம்ம சமாஜ் என உள்ளூர் சீர்திருத்த இயக்கங்களும் இதற்கான பங்களிப்பைச் செய்தன. John Gilchrist (1759 – 1841) என்பவர் கல்கத்தாவில் 1800-ல் Fort William College அமைக்கிறார். அதையொட்டி உருது இலக்கியத்தின் நவீன அலை கிழக்கிலிருந்து வீசியது என்கிறார் குர்ரத்துல் ஐன் ஹைதர்.
முகலாய அரசு 1857-ல் ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தது. அந்த கலகத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரான Qasim Nanatwi (1832 – 1880) என்பவரால் தேவ்பந்த் என்னுமிடத்தில் தாருல் உலூம் 1867-ல் நிறுவப்பட்டது. இதுவே இன்று இந்தியாவெங்குமுள்ள மத்ரஸாக்களின் தாய் அமைப்பு. இது காலச் சக்கரத்தை பின்னோக்கி சுழலச் செய்யும் முயற்சி எனக்கூறியவர் Sir Syed Ahmed Khan (1817 – 1898). காலத்தால் முந்தையவரான சர் செய்யத் ஆங்கிலக் கல்வியே இனி இந்தியாவில் – வெள்ளையர்களுக்குப் பிறகும் நீடிக்கும், அது புதியதொரு உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்று தன்னைவிட 15 வயது இளையவரிடம் கூறி இருப்பது நகைமுரண்.
சர் செய்யத் முஸ்லிம்களுக்காக 1875-ல் நவீனக் கல்விமுறையில் அலிகர் கல்லூரியை நிறுவினார். அதன் பிறகு Mohd. Ali Jauhar (1878 – 1931) என்பவரால் ஜாமியா மில்லியா போன்றவை 1920-ல் கல்லுரியாகவும், பிற்பாடு பல்கலைக்கழகமாகவும் அது முன்னெடுத்துச் செல்லப்பட்டது. உருது இலக்கியம் பெரும்பாலும் மதச்சார்பற்றப் பண்புடன் இருக்க இதுவே அடிப்படை.
“சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் (அதாவது 1987-ல் ?) கருத்தரங்கு ஒன்று மைசூரில் நடந்தது. அமெரிக்கப் பெண்மணி எழுதிய நாவல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி, அந்த புதினத்தை பல கோணங்களிலிருந்து வரிவரியாக ஆய்வு செய்தனர். அந்த நினைவுடன் ஊர் திரும்பியபோது சக்தி வாய்ந்த கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. கறுப்பர் இலக்கியம், இலத்தீன் இலக்கியம், ஐரோப்பி இலக்கியம் என்று உலக இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு – மக்களை விடுங்கள் – பரவலாக எழுத்தாளர்களுக்கே இருக்கிறதா. நிச்சயமாக இல்லை, காரணம் – இந்திய மொழிகளிடையே போதுமான மொழிபெயர்ப்புப் பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதுதானே” என்று (1997-லில்) எழுதிய முன்னுரையில் சிவசங்கரி குறிப்பிடுகிறார்.
சிக்கிம் மாநிலத்துக்கு அவர் செல்கிறார், தமிழ் குறித்தும், இங்குள்ள இலக்கியம் குறித்தும் எவருக்கும் தெரியவில்லை என்பதை அறிந்து திகைக்கிறார். பிறகு நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். மற்றவர்களைக் குறித்து நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் – என்ற கேள்வியே இந்த பெருந்திட்டமாக சிவசங்கரியிடம் பெருகுகிறது.
அதற்கும் முன்பாக இருபது, இருபத்தி ஐந்தாண்டுகளாக எழுதிக் கொண்டிருந்த சிறுகதைகள் பழக்கத்தையும் கைவிட்டுள்ளார். படைப்பிலக்கியவாதியாக இது அவரளவில் பெரிய முடிவு என்று சொல்லலாம். அனேகமாக 1993-யில் ஆரம்பித்து 2009-லில் நிறைவு செய்த சிவசங்கரி – இந்த 15/16 ஆண்டுகள் வேறு எந்த இலக்கியப் பணிகளிலும் ஈடுபடவில்லை.
இந்திய மாநிலங்களில் வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், உணவுமுறைகள், இயற்கை நிலவியல் உள்ளன. இவற்றை அந்தந்த மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியமே சரியாக பதிவு செய்துள்ளன. அவற்றின் சாறை – இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு நூலின் வழியாக சிவசங்கரி வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்திய இலக்கியம் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படுவதல்ல, இந்திய மொழிகளில் உருவாவது, தனக்கென சுயமான அறிவுத்தளமும், அழகியலும், ஆன்மிகத்தேடலும் கொண்டது. அது இந்திய ஆங்கிலத்தில் வெளியாவதில்லை…” என்று ஓரிடத்தில் தாங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.
அதே கட்டுரையில் தொடர்ந்து “இன்று இந்திய இலக்கியத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிவது மிகப்பெரிய சவால். உதிரியாக நூல்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் முழுச் சித்திரம் மிக அரிது. அண்மைக்காலம் வரை டாக்டர் கே.எம்.ஜார்ஜ் தொகுத்த “இந்திய இலக்கிய அறிமுக நூல்” மட்டுமே இருந்தது” என்கிறீர்கள்.
அதேபோல எம்.டி.வாசுதேவன் நாயரும்கூட “பிற மாநில இலக்கியங்களைக் குறித்து தான் புரிந்துகொண்டது குறைவானது என்பதால் பொதுவான இந்திய இலக்கியங்களைக் குறித்து என்னால் விமர்சிக்கவும் முடியாது. அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைக் குறித்து விரிவாக விவாதிக்க இயலும், நகைமுரணாக பக்கத்து மாநில இலக்கியங்களைப் பற்றி ஏதும் தெரியாது” என்கிறார். பொதுவாக ஆங்கில, ருஷ்ய இலக்கியங்களை படித்துள்ள எவரும், அதைப் பற்றி சொல்ல ஏதும் கருத்தை உருவாக்கிக் கொண்டிருப்பர்.
இன்னொரு இடத்தில் – “நமது நாட்டில் மாநில மொழிகளில்தான் இந்திய இலக்கியத்தின் மேன்மையை உணர முடியும்” – என்றும் – ஆங்கிலத்தில் எழுதும் ருஷ்டியும், குஷ்வந்த் சிங்கும் அல்ல” என்று சொல்வது தங்களின் வாதம் வாசுதேவன் நாயருடன் உடன்பட்டிருப்பதாக் காண்கிறேன்..
இந்த தொகைநூலின் முதல் பயணமாக கேரளா வந்த சிவசங்கரி தன்னை சந்தித்ததை எம்.டி.வாசுதேவன் நாயர் நினைவுகூர்ந்துள்ளார். எழுத்தச்சன் கவி துஞ்சத்துவின் இரும்பு எழுத்தாணியை சிவசங்கரி தொட்டபோது அடைந்த பரவசத்தை, சிலிர்ப்பை, பயபக்தியை நாயர் எழுதிச் செல்கிறார்.
வைக்கம் பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை சந்திப்புக்கு எம்.டி.வாசுதேவன் நாயரே ஏற்பாடு செய்து உடன் சிவசங்கரியை அழைத்துச் செல்கிறார். எழுத்தாளர்கள் 90 வயதில் இருந்துள்ளனர், நொய்வாய்ப்பட்டிருந்தபோதும் அந்த வேதனையை மறந்து கண்களில் சிரிப்பு வெளிச்சம் போட குறும்புடன் பேசிய வைக்கம் பஷீரைக் கடைசியாக நீண்ட பேட்டி எடுத்தது தானே என்று பெருமிதத்துடன் (சிவசங்கரி) எழுதுகிறார். தகழிக்கும் உடல்நலக் குறைவு இருந்தது, இருப்பினும் மணிக்கணக்கில் பேசியதை வாசுதேவன் நாயர் எழுதுகிறார்.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உருது முஸ்லிம்கள் எண்ணிக்கையளவில் அதிகம் இருப்பதாலும், இங்கு ஏற்கனவே திப்பு சுல்தான், ஆற்காடு நவாபுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த பகுதி என்பதாலும் உருது இலக்கிய ஜாம்பவான்களின் பெயர்கள் ஓரளவுக்கு பிரபலம். கம்பனைப் போல, திருவள்ளுவரைப் போல மிர்சா காலிப் (உருது இலக்கியத்தைப் பொறுத்து) எங்கள் வட்டாரத்தின் நாட்டார் கருப்பண்ணசாமி மாதிரி பீடத்தில் அமர்ந்திருப்பார். அப்படியான ஒருவரை தான் எடுத்த ஆவணப்படத்தில் அல்வாக் கடையில் அமர்ந்து சாதாரண பாமரனைப் போல தெருவில் வரக்கூடிய, போகக்கூடிய ஆட்களிடம் பேசிக் கொண்டிருப்பவராக மிர்சா காலிபை காட்டியிருப்பார், இயக்குனர் குல்சார்.
ராவி நதியில்” என்பதும்கூட பிரிவினையைப் பற்றிய குல்சாரின் மிகப் புகழ்ப்பெற்ற படைப்பு. அதை மொழிபெயர்த்த தொடர்பில் வைக்கம் பஷீரின் கதைகளை குல்சாருக்கு அறிமுகப்படுத்துகிறார் சிவசங்கரி. தன் சொந்த தாயின் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத வயதில் இழந்துவிட்ட குல்சார் பிறந்த ஆண்டு 1934. அதன் பிறகு (பாகிஸ்தானாக பிரிந்து சென்ற) தன் சொந்த ஊரிலிருந்து டில்லிக்கு 1947-யில் அகதியாக வருகிறார். அதன் பிறகு 20-25 ஆண்டுகள் வரையிலும் அந்த துயரம், அதிர்ச்சி தன்னை பின்தொடர்ந்து வந்ததாக தெரிவிக்கிறார். நள்ளிரவில் கெட்ட கனவுகள் உடலை அதிரச் செய்ததாகவும் மீண்டும் கண்மூடித் தூங்க பயந்து கொண்டிருந்ததாராம்.
சர்தார் ஜாஃப்ரி, ராஜெந்திர சிங் பேடி போன்ற முன்னோடி, மூத்த எழுத்தாளர்களுடன் கொண்டிருந்த பழக்கமும் பேச்சுமே தன்னை வாழ்க்கையில் பிடிப்புடன் இருக்க வைத்தது என்றும், சூஃபிய ஆன்மீகம் தனக்கு மரபுரிமையாக கிடைத்தது என்கிறார். “நமது சொந்த மொழியை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் பிற மொழிகளின் இலக்கியங்களை வாசிக்கும் பழக்கம் வாசகருக்கு இருந்தாக வேண்டுமென்கிறார்” ஞானபீட விருதாளர் குல்சார்.
உண்மையில் இந்தியர்களாகிய நாம் மற்ற மாநிலத்தாரின் இலக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்கிற கேள்வியே சிவசங்கரி அவர்களை இந்த நூல் எழுத தூண்டியிருக்கிறது. இந்த நூலை எழுதத் தொடங்கியபோது அவர் ஐம்பது வயதைக் கடந்திருக்கிறார். மேற்கொண்டு இன்னுமொரு பதினைந்து ஆண்டுகாலம் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது.
மேலும் “தனி பெண்ணாக மணிப்பூர், காஷ்மீர் என தொலைதூர ஊர்களுக்கு எழுத்தாளர்களை தேடிச் சென்று சந்திப்பது சாத்தியமா? என்று தயங்கியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்ல வேண்டியிருந்தது, இருந்தாலும் ஒரு மொழியை அந்த மொழி பேசப்படும் நிலங்களில் பயணம் செய்து கட்டுரைகளை எழுதி இணைத்துள்ளார்.
பணத்திற்கு என்ன செய்வது என்று மத்திய, மாநில அரசுகளை அணுகியிருக்கிறார். இத்தனைக்கும் வங்கியொன்றில் மாநிலம் தழுவிய பணியில் இருந்தவர், அதிகார மேல்மட்டத்தில் நீண்டகாலம் புழங்கியவரும்கூட. இந்த திட்டம் நூதனமானது, சிறப்பானது என்று வெறுமனே பாராட்டிவிட்டு – உதவி செய்ய தங்களின் விதிமுறையில் இடமில்லை என்று கையை விரித்தது தனியார் நிறுவனங்களும், அரசும்.
கொங்கணி மொழியின் எழுத்தாள நண்பர் Chandrakant Keni (1934 – 2009), குஜ்ராத்தி மொழியில் ஞானபீட விருதைப் பெற்ற Raghuveer Chaudhari (1938…) ஆகிய இருவர் மட்டுமே இதன் அருமையை உணர்ந்துகொண்டு கோவாவுக்கும், அஹ்மதாபாத் வந்துபோக பயண ஏற்பாடு, தங்குமிட வசதி ஆகியவற்றை அளித்தவர்கள் என்கிறார்.
அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் (1931 – 2001) மட்டும் இதற்காக பண உதவி செய்ததாகவும் இந்தத் தொகைநூலின் 300 பிரதிகளை தனிப்பட்ட முறையில் வாங்கி பள்ளிக்கூட நூலகங்களுக்கு அளித்தார் என்றும் சிவசங்கரி குறிப்பிடுகிறார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற திட்டத்திற்காக பதினெட்டு மொழிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூறு எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறார், சிவசங்கரி. தாங்கள் குறிப்பிடுவதைப் போல இந்திய இலக்கியச் சூழலில் இதற்கு முன்பு பிறர் செய்திராத முன்னுதாரணமற்ற பெரும் சாதனைக்காக 2022-ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்ட விருதைப் பெற்றிருக்கிறார்.
ஒரிய மொழியில் ஞானபீட விருதைப் (1993-ல்) பெற்றவரான Sitakant Mahapatra (1937)-வை பல கடிதங்கள் எழுதியும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அதனால் அவருடன் உரையாடும் சூழல் அமையவில்லை என்று வருத்தப்படுகிறார்.
ஒவ்வொரு மொழியிலும் சரியான இலக்கியவாதிகள் இடம்பெற வேண்டும் என்று நேர்காணல் செய்து, அதன் முதல் படியை (draft copy) அஞ்சலில் அனுப்பி 12-18 மாதங்கள் காத்திருந்து பலமுறை நினைவூட்டிய பிறகு – “திருத்திக் கொடுக்க தன்னிடம் அவகாசம் இல்லை, எனவே கட்டுரையை, நேர்காணலை தொகுப்பில் சேர்க்க வேண்டாம்” என்று சொன்ன எழுத்தாளர்களைப் பற்றியும் கூறுகிறார். நான்கு கடிதங்கள் போட்டும் பதிலளிக்காத எழுத்தாளர்களின் மனோபாவமும் இவரை பயமுறுத்தியிருக்கிறது.
ஒரு மொழியின் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் போது அந்தந்த மொழியில் ஞானபீட அல்லது குறைந்தபட்சம் சாகித்ய விருதுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று வகுத்துக் கொண்டுள்ளார். இவ்வாறான விதிமுறைகளுக்குள் எழுத்தாளர் தெரிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.இதன் சாதகம், பாதகம் அப்படியே இந்த தொகைநூலில் தெரிகிறது.
இந்திய நிலப்பரப்பில் 8,9 – 11 ஆகிய நூற்றாண்டுகளில் உருவாகத் தொடங்கிய மொழிகலப்பு 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதன் பிறகு உருது மொழியின் தோற்றம் நிகழ்ந்திருக்கும் என்று மொழியியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு தரப்பு முன்னகர்த்துகிறது என்றால்; அவ்வளவு பழையதல்ல உருது என்று இன்னொரு குழு பின்னகர்த்தி வைக்கிறது. இரு தரப்புக்கும் வாதங்கள் உள்ளன.
“உருதுவுக்கும் இந்திக்கும் அதிகம் வேறுபாடில்லை, பாரசீக – அரபு லிபியில் எழுதினால் அது உருது, தேவநாகரி லிபியில் எழுதினால் இந்தி என்கிறீர்கள்” என்று சர்தார் ஜாப்ரி கூறியதை தெரிவிக்கிறார். இவ்விரு மொழிகளுக்குமே பொதுவான அடிப்படைதான். எனினும், இரண்டுக்குமே தனித்தனி அடையாளங்கள் உண்டு. இதே போன்றுதான் பஞ்சாபிக்கும், உருது – இந்திக்குமான வேறுபாடும், ஒற்றுமையுமாகும்.
உருது மொழியின் பேராசிரியராக இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய கோபிசந்த் நாரங்-ன் கட்டுரை ஒன்று இத்தொகுப்பிலுள்ளது. பாகிஸ்தானிய நிலப்பரப்பில் பேசப்படும் மொழி Saraiki-யே அவருடைய தாய்மொழியாகும். பஞ்சாபி, சிந்தியிலிருந்து பிரிந்து திரிபடைந்த மொழி. அகதியாக இந்தியாவுக்கு வந்த பிறகும் அவருடைய தாயாரும், பாட்டி வழி உறவினர்களும் பேசிக் கொண்டிருந்தனர் என்றும், தனக்கு அந்த மொழி மறந்துவிட்டது என்கிறார் கோபிசந்த்.
“ஒன்றே ஒன்றைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறேன். உருது, இஸ்லாமியர்களின் மொழி அல்ல… அவர்களுக்கென ஒரு மொழி உண்டென்றால் அது அரபு மொழிதான். உருது இந்தியாவின் கூட்டுப் பண்பாட்டிற்குச் சொந்தமானது. சகோதரிகளைப் போல இந்தியும் உருதுவும் ஒன்றையொன்று பரஸ்பரம் சார்ந்திருப்பதோடு பாராட்டிக் கொள்ளும் தன்மையும் கொண்டவை. இதை எப்போதும் மறக்கக் கூடாது” என்று Gopichand Narang (1931 – 2022) கூறியுள்ளார்.
உருது என்பது துருக்கிய மொழிச் சொல் என்று எங்கோ படித்திருந்த சிவசங்கரி அதை கேள்வியாக முன்வைக்கிறார். அதற்கு, “உருது என்ற சொல் எப்படி வந்தது என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன. அரச பரம்பரையினர் இருப்பிடங்களில் பேசப்பட்டதால் ‘உருது’ அதாவது ‘அரச இருப்பிடம்’ என்றும் பொருள் உண்டு. இந்தியாவைச் சேர்ந்த மொழி என்பதால் “ஹிந்தவி” என்றழைக்கப்பட்டது. இடைக்காலத்தில் “ரேக்தா”, கடிபோலி என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. தென்னிந்தியாவிற்கு வடக்கிலிருந்து தெற்காக உள்ளே வந்தவர்கள் ஏற்கனவே புழக்கத்திலிருந்த மொழிகளோடு கலந்து தக்னி உருது உருவானது. கோட்டையின் படைவீரர்களும், சந்தையில் வணிகர்களும் உள்ளூரில் பேசும் இணைப்பு மொழியாக மக்களிடம் புழங்கியது” என்று விவரிக்கப்படுகிறது.
உருது மொழி இலக்கியம் பெருமளவில் அரேபிய, பெர்சிய, ஆப்கன், துருக்கி திணையை தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. அதன் செவ்வியல் ஆக்கங்களைத் தந்த உமர் கய்யாம் (1048-1131); ஸனாய் (1080 – 1150) ; ரூமி (1207 – 1273) ; அமீர் குஸ்ரு (1253 – 1325), ஹாபிஸ் (1325 – 1390) ; மீர் தகி மீர் (1723 – 1810), மிர்சா காலிப் தொடங்கி அல்லாமா இக்பால் (1877 – 1938); ஃபைஸ் அஹ்மத் (1911 – 1984) என நம் சமகால இலக்கியவாதிகளின் சுருக்கமான, திட்டவட்டமான முன்குறிப்புகளை இந்த நூல் தருகிறது.
மேலும் – ஆங்கில கல்வி கற்றவர்களே எல்லா மொழிகளிலும் நாவலை இந்திய மொழிகளில் எழுதியதைப் போல் உருதுவிலும் நிகழ்ந்திருக்கிறது. அந்த காலத்தில் மாவட்ட கலெக்டர் பதவி வெள்ளையர்களுக்கும் – துணை பொறுப்பில் மட்டும் இந்தியர்கள் இருந்ததாக தெரிகிறது, பெயரிலேயே பதவியைக் குறிக்கும் துணை ஆட்சியர் என்கிற முன்னொட்டுடன் அழைக்கப்படும் Deputy Nazeer Ahmed (1833 – 1912) உருது மொழியின் முதல் நாவலை எழுதியிருக்கிறார். Mirathul Uroos – மணப்பெண்ணின் கண்ணாடி என்கிற அந்த முதல் நாவல் 1869-ல் வெளியாகியிருக்கிறது. இதை தமிழ் சூழலில் ஒப்பிடும்போது மாயூரம் வேதநாயகம் பிள்ளை – “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவலின் (1879) காலத்தை ஒட்டி உள்ளது.
உருதுவின் துவக்கக்கால முதல் நவீன சிறுகதை 1900-வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. Sajjad Haider Yaldram (1880 – 1943) முன்னோடி சிறுகதையாளர்களில் ஒருவர் என்று தன்னிடம் “அக்னி நதி” புகழ் – குரத்துல் ஐன் ஹைதர் கூறிவிட்டு, அவர் தன் தந்தை என்று பெருமைப்பட்டதாக சிவசங்கரி கூறுகிறார். பண்டிதர்களும் புலவர்களும் எல்லா மொழிகளிலும் ஆரம்பத்தில் எழுதியவர்கள். அதனால் அதற்கொரு மேட்டுக்குடிதன்மையும் மிகையுணர்வு ஓங்கியும் இருந்தது.
அப்படியே உருதுவிலும் ஒரு கட்டத்தில் தேக்கம் உருவானது. அதுவரை உருது மொழி அணிந்துவந்த பட்டாடையை வீசியெறிந்த முதல் நபர் Munshi Premchand (1880 – 1936) எனப்படுகிறது. இத்தனைக்கும் அவருக்கு உருதுவே ஒழுங்காக தெரியாது என்று கூறப்பட்டதாம். அதனால்தான், (சிறு)கதைகளின் நிகழ்வுகளை நெருக்கமாகவும், யதார்த்தமாகவும் அவரால் சித்தரிக்க முடிந்தது. இலக்கியவாதி மொழியைப் படைப்பதில்லை, அதை மீறிச் செல்கிறார், கதையோட்டத்திற்குரிய நடையை அவர் கையாண்டார், அதுவே முன்ஷியின் சாதனை” என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“புதிய இலக்கியவாதிகளின் முன்புள்ள பெரிய சவால் என்பது – அதன் முந்தைய தலைமுறையின் சாதனையை கடந்து செல்வதன் மூலம் தொடங்கியாக வேண்டும்” என்பதுதான் என்று W. H. Auden-னை மேற்கோள் காட்டுகிறார். இலக்கியத்தில் ஏற்படும் உடைவுகளே மொழியை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்வதால் இங்கு நம் தமிழ்ச் சூழலில் கி.ரா.வை நினைவு கூர்கிறேன்.
இயல், இசை, நாடகம் என்கிற வகைப்பாடு தமிழில் தொன்றுதொட்டு இருந்தாலும் – மீனாட்சி சுந்தரம் அவர்கள் (1891-ல்) எழுதிய “மனோன்மணியம்” தமிழின் நவீன நாடகமாக கருதப்படுகிறது. அதற்கு சற்று முன்பு உருது மொழியின் நாடகத்தை Agha Hasan Amanat (1815 – 1858) என்பவரால் 1853-ல் இயற்றப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
“ஜே.ஜே. சில குறிப்புகள்” நாவலை ‘க்ரியா’தான் முதலில் வெளியிட்டிருந்தது (என்று நினைவு). தமிழின் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் என கிட்டத்தட்ட நிறுவப்பட்டிருக்கும் க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து தாங்கள் எழுதியவை வெளிப்படையானது. அதில் சொன்னதைப் போல, ”இலக்கியவாதி யாரும் மொழியைப் உருவாக்குவதில்லை, இலக்கியத்தைதான் படைக்கின்றனர் – படைப்பனுபவம்தான் இலக்கியத்தின் சாரம்” என்று இந்த நூலில் ஜோகீந்தர் பால் கூறுகிறார்.
உருதுவில் மொழிபெயர்க்கப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க, ருஷ்ய கவிஞர்கள், எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள் போல, அத்தனை இஸங்களும் உருதுவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. All India Writers’ Association – இந்தியாவைப் பொறுத்தவரை “முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்” இந்திய மொழிகளில் முதன்முதலாக உருது எழுத்தாளர்களால்தான் 1936-யில் தொடங்கப்பட்டது. “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அதன் பிறகு கால்நூற்றாண்டு கழிந்த பிறகு ”1961-யில்தான் வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
சோவியத் யூனியனுக்கு உலகம் முழுவதிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்றதைப் போல உருதுவிலிருந்து ஏராளமானவர்கள் மாஸ்கோ சென்றனர், சிலர் அங்கேயே இறந்தும்போயினர். Sadath Hasan Manto (1912 – 1955) தன் முன்னோடி எனக்கூறிய Sajjad Zaheer (1905 – 1973) அவர்களில் ஒருவர்.
முற்போக்கு முகாம், நவீனத்துவர்கள், மரபாளர்கள் என உருது மொழி இலக்கியத்தில் இருக்கின்றனர். அதேபோல் – பழமைக்கு லக்னௌ சிந்தனைப் பள்ளி, புதுமைக்கு டில்லி சிந்தனைப் பள்ளி என்றும் பொதுவாக பிரிந்துள்ளனர். உருது மொழி இலக்கியத்தைப் பற்றி அந்த மொழியின் ஆறு பேராளுமைகளுடன் பேசியபோது அவர்கள் அனைவரும் இதனுடன் தொடர்புடைய 50-க்கும் அதிகமான பெயர்களை மேற்கோள் காட்டியதை சிவசங்கரி பதிவு செய்திருக்கிறார்.
Allama Iqbal (1877 – 1938) தாகூரைவிட பதினைந்து ஆண்டுகள் இளையவர். பாரதியாரைவிட ஐந்தாண்டுகள் மூத்தவர். அவரைப் பற்றி குறிப்பிடாமல் உருது கவிதைப் பற்றி எழுதவே முடியாது. Sare Jahan Se Acha, Hindustan Hamara-வை இயற்றிய பாடலாசிரியர். The Reconstruction of Religious Thought in Islam என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்ற 1930-ல் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆறு நாட்கள் இங்கு தங்கியிருந்து ஆற்றிய தத்துவார்த்த உரைகள் பிற்காலங்களில் நூலாகவும் தொகுக்கப்பட்டது.
பெர்சியன் இலக்கியத்தின் உச்சமாக கொண்டாடப்பட்ட தீவான் வடிவத்தை பரிட்சார்த்த ரீதியாக West–östlicher Divan 1815-வாக்கில் J. W. Goethe (1748 – 1832) எழுதினார். அது எழுதப்பட்டு நூறாண்டுகள் கழித்து அதே வடிவத்தில் Message from the East என்பதை மறுப்பாக 1923-ல் வெளியிட்டார், இக்பால். Cambridge, Munich-ல் ph.d. பட்டம் பெற்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் ஆனவர் இக்பால்.
பஞ்சாபியரான சம்பூர்ணசிங் எனப்படும் குல்சார் அதிகம் உருதுவில்தான் எழுதினார், இந்தி சினிமாவின் பாடலாசிரியராக புகழ்ப்பெற்றவர். சுபாஷ் முகோத்பாத்யாவை மூலத்தில் படிக்க விரும்பி – வங்காள மொழியை கற்றுக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த வங்க மொழி இலக்கியம் இன்று தேங்கிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு மொழியின் இலக்கியத்தை இன்னொரு மொழியோடு ஒப்பிடவும்கூடாது, எந்தவொரு மொழியிலும் இலக்கியம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வளர்ச்சியடையும், வீழ்ச்சியையும் அடையும், ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்காது என்கிறார்,
ஃபைஸ் காதிரி அடிக்கடி குறிப்பிடும் உருது எழுத்தாளர் Noon Meem Rashid (1910 – 1975) ஆவார். இஸ்மத் சுக்தாய், குர்ரத்துல் ஐன் ஹைதர் போலவே உருதுவில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். Mumtaz Shireen (1924 – 1972) போன்று பலரைப் பற்றிய அறிமுகம் இதிலுள்ளது.
ஞான பீட விருதை உருது மொழி இலக்கியத்துக்காகப் பெற்றவர்களில் ஒருவர் Ali Sardar Jafri (1913 – 2000) அவருடைய கட்டுரையோ, நேர்காணலோ இதில் இல்லை. இந்த தொகுப்பை சிவசங்கரி தயாரித்துக் கொண்டிருக்கும்போதே அவர் இறந்து போய்விடுவதால் விடுபட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் பல்வேறு இடங்களில் அவரைப் பற்றி பலரும் பேசியதை பதிவு செய்துள்ளார்.
முஹம்மத் நபியைத் தொடர்ந்து Khaja Muinuddin Chisthi (1143 – 1236); Nizamuddin Awliya (1238 – 1325); Ameer Khusru (1253 – 1325) ஆகியோரின் காலத்தில் மெல்ல மெல்ல வேர்பிடித்த சூஃபித்துவம் இந்திய மண்ணில் வலுவாக நிலைகொண்டது. வரலாற்றில் இரண்டு ரூமிகள் உள்ளனர். ஒருவர் இன்றைய பங்களாதேசமாக இருக்கும் பழைய ஒன்றிணைந்த இந்தியாவுக்கு வந்த Shah Sultan Rumi (d.1075) . ஆனால் பிற்காலங்களில் Jalalulddin (1207 – 1273) எனப்படும் ரூமி மிகவும் புகழ்ப்பெற்றார், இந்தியாவைப் பற்றி எழுதிய ரூமி இங்கு இந்த மண்ணில் கால் வைக்கவில்லை என்பதே வரலாறு.
திருக்குர்ஆன் நெடுக காணப்படும் “Qul” என்கிற அரபுச் சொல்லின் வேரான – “Qawla” என்கிற வினைச் சொல்லுக்கு – (கதையைச்) சொல், (உரக்கக்) கூறு, (சரளமாக) பேசு, என்பது பொருளாகும். கடனாக அச்சொல்லைப் பெற்ற உருது – அதன் எல்லைகளை விரிவாக்கி கஸல் பாடலுக்கான கவ்வாலி என்று பிரபலயமாக்கியது. Whirling and chanting darvesh – சுழன்றாடி மந்திரம் ஓதும் துறவிகளைப் பற்றிய குறிப்புகள் மௌலானா ரூமியின் காலத்திலிருந்து கிடைக்கிறது.
இது அரபு நிலப்பரப்புக்கு கிழக்கிலும் மேற்கிலும் என இரு திசைகளில் முன்னேறியது. பாகிஸ்தான், பங்களாதேசம் உள்ளடக்கிய இந்திய துணைக்கண்டத்தில் கவ்வாலி அடைந்த ஏற்பு முஸ்லிம்கள் வசிக்கும் பிற நாடுகளில் கிடைக்கவில்லை. கவ்வாலிக்கும் இந்திய பஜனை, கீர்த்தனை சம்பிரதாயத்துக்கும் இடையே வெளிப்படையாக தெரியும் தொடர்பை கவனிக்கவேண்டும் என்றும் உள்ளூர் இசையும், நாட்டார் பாடலாக கவ்வாலியும், கஸலும் இணைபிரியாமல் கலந்தது என்றும் கூறுகிறார், கோபிசந்த் நாரங்.
மதரீதியான வழிபாட்டை முஸ்லிம்கள் தொழுகை என்று அழைப்பர். அதில் திருக்குர்ஆன் வசனங்களை பாராயணம் போல் மனதுக்குள், அல்லது மெல்லிய குரலில் ஓதிக் கொள்கின்றனர். இது பிரார்த்தனையாக, அருள்மொழியாக கருதப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தளவில் ஆட்சியிலிருந்த முஸ்லிம் மன்னர்கள் சூஃபிகளின் புரவலர்களாக இருந்தாலும் – அதிகார வட்டத்தில் மௌலவிகள், முல்லாக்கள், ஆலிம்கள் எனப்படும் மதகுருமார்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்துவந்தது. அதன் எதிர்பதமாக சூஃபிகள் மக்களுடன் ஒன்றுகலந்து இன்றைய கலைச்சொல்லான – விளிம்புநிலையில் இருந்தனர் என்பதே உண்மை.
(முஸ்லிம் சனாதனிகளான) உலமாக்களை ஆச்சாரவாதிகள் எனலாம். எதிர்நிலையிலிருக்கும் சூஃபிகள் மாற்றுச் சிந்தனையாளர்கள். எனவே முரண் எப்பொழுதுமே இருந்துவந
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

