அரசியலின்மைதான் காரணமா?

அரசியல்நீக்கம் அரசிலும் எழுத்தாளனும் சொல் உன் அரசியல் என்ன? அரசியலின்மை என்னும் தவம் நான் எழுதும் அரசியல்

அன்புள்ள ஜெ,

மதிப்புறு முனைவர் பட்டம் பெறுவதற்கு வாழ்த்துக்கள். கல்வித்துறை பொதுவாக தீவிர நவீன எழுத்தாளர்களை அகற்றி வைத்திருப்பதற்கான காரணங்களைச் சொன்னீர்கள். முதன்மையான காரணம் என எனக்குப் படுவது நவீன எழுத்தாளர்கள் சமகாலச் சிக்கல்களை எழுதுவதில்லை என்பதும், அவர்கள் தனிமனித அக அலைச்சல்களை மட்டுமே எழுதுகிறார்கள் என்பதும்தான். அவர்கள் அரசியலை புறக்கணிக்கிறார்கள். சமகாலத்தையும் புறக்கணிக்கிறார்கள். கல்வித்துறையானது சமூகவியல், வரலாறு ஆகிய துறைகளைச் சார்ந்தே படைப்புகளைப் பற்றிப் பேச முடியும். தனிமனித அக ஓட்டமாக உள்ள படைப்புகள் அதற்கு அன்னியமானவை. இதுவும் ஒரு காரணம் அல்லவா?

முனைவர். அ.நாகராஜன்

அன்புள்ள நாகராஜ்,

தமிழ் நவீன இலக்கியவாதிகள் ‘மக்களால்’ ஏற்கப்படாமலிருப்பதற்கும், கல்வித்துறையால் மதிக்கப்படாமலிருப்பதற்கும் காரணம் தமிழ் நவீன இலக்கியத்தில் உள்ள ’அரசியலின்மை’ அல்லது ’அரசியல் எதிர்ப்பு மனநிலை’யே என்றும், அவர்களிடமுள்ள சமகாலத்தை புறக்கணிக்கும் தன்மையின் விளைவாக நவீனப்படைப்பாளிகள் ‘மக்களிடமிருந்து அன்னியமானார்கள்’ என்றும் இன்று சிலர் பேசி நிறுவ முயல்கிறார்கள். இன்று திராவிட கட்சியரசியலுக்குள் தலையைவிட்டு சில்லறைகளுக்காக ஏங்கும் கோஷ்டி அதை மேடைமேடையாகச் சொல்கிறது.

ஆனால் இதை நேற்று இடதுசாரி எழுத்தாளர்கள் இதைவிட மூர்க்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். அதன்வழியாக இலக்கியச் சாதனையாளர்களை மக்கள் விரோதிகள் என்று வசைபாடிச் சிறுமை செய்தனர். நவீன இலக்கியத்தையே குறுங்குழு இலக்கியம் என்று முத்திரை குத்தினர். இன்று அவர்களால் அன்று வசைபாடப்பட்ட ஒவ்வொருவரையும் இலக்கியச்சாதனையாளர்கள், முன்னோடிகள் என்று சொல்லி உரிமை கொண்டாடுகின்றனர்

நவீன இலக்கியவாதிகளை மக்கள்விரோதிகள், குறுங்குழுவினர் என்றெல்லாம் பேசிய எவரும் இன்று எங்கும் இல்லை. நேற்று இதே குரலில் இலக்கிய முன்னோடிகளை தாக்கிக்கொண்டிருந்த முதன்மை ஆளுமை இளவேனில் என்பவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இருந்தார். எவருக்காவது தெரியுமா அவரை? இவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

’மக்களுடன் நின்று பேசுதல்’ என்பதை ஒரு பெரிய அளவுகோலாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுடன் நிற்பது என்று இவர்கள் சொல்வது என்ன? இவர்களின் பார்வையில் இவர்கள் சார்ந்துள்ள கட்சிதான் மக்களின் மெய்யான பிரதிநிதி, ஆகவே இவர்களின் கட்சியுடன் நிற்பதுதான் மக்களுடன் நிற்பது. அப்படி நிற்காத அனைவருமே மக்கள் விரோதிகள். எழுத்தாளன் இவர்களுடன் இணைந்திருந்தால் மட்டும்போதாது, இவர்களின் தலைமை சொல்வனவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பச் சொல்லவேண்டும், இல்லையேல் அந்த எழுத்தாளன் துரோகி ஆகிவிடுவான். இந்த மொண்ணைத்தனத்தை இலக்கியத்திற்கு எதிரான ஒரு பெரிய அறிவார்ந்த நிலைப்பாடாக சித்தரிக்கும் முயற்சியில் இன்று முதிரா அறிவுஜீவிகள் சிலரும், கலையுணர்வு அற்ற எழுத்தாளர் சிலரும் ஈடுபட்டு இருக்கிறார்கள் ஆனால் இது எந்த வாசகனுக்கும் புரியும் எளிமையான அடிப்படை விஷயம்தான்.

இலக்கியம் என்பது ஒரு தனி மனிதனின் அகநிலைப்பாடாகவே முதன்மையாக கருதப்படுகிறது. அவன் தன்னுடைய ஆழுள்ளத்தை, தன்னுடைய கனவை மொழியினூடாக வெளிப்படுத்துவதற்குப் பெயர்தான் இலக்கியம். அது சமூகத்தின் ஆழுள்ளத்தின் வெளிப்பாடு கூட. ஏனெனில் அவன் எழுதும் போது தன்னுள் ஆழ்ந்து சென்று சமூகத்தின் ஆழுள்ளத்தையே  தன்னுடைய கனவாக வெளிப்படுத்துகிறான். ஒரு படைப்பாளியின் தவம் என்பதே தான் என அவன் உணரும் பிரக்ஞையைக் கடந்துசென்று, ஒட்டுமொத்த மானுடத்தின் பிரக்ஞையின் ஒரு துளியாக ஆவதுதான். அப்படி அவன் ஆகும்போது மட்டுமே உயர்படைப்பு வெளிப்படுகிறது. இதை எல்லா படைப்பாளிகளும் சொல்லியிருப்பார்கள். ஒரு பேட்டியில் தேவதச்சன் தன் வயது பல ஆயிரம் ஆண்டுகள் என்கிறார்.

ஒரு படைப்பாளியை அளவிடும் இலக்கணம் என்பது முதன்மையாக அவன் அவனுடைய காலகட்டத்தின் குரலாக தன்னியல்பாக எப்படி ஒலிக்கிறான் என்பதுதான். அவனை அறிந்தால் அப்பண்பாட்டை அறிவதுதான். அந்த சமூகத்தின் ஆழ்மனதை அறிவதுதான். தகழியும், பஷீரும், எம்.டியும்தான் கேரளப்பண்பாட்டை அறிவதற்கான வழிகள். புதுமைப்பித்தனும், சுந்தர ராமசாமியும், ஜெயகாந்தனும், கி.ராவும்தான் தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கான உண்மையான வழிகள். ஆனால் மக்களைத் திரட்டி, அவர்களின் பொது அம்சத்தை ஆராய்ந்து அறிந்து, அதை தன்னுடைய படைப்புகளின் ஊடாக ஒருவன் திட்டமிட்டு முன்வைப்பான் என்றால் அவன் மக்களின் ஆழத்தின் பிரதிநிதி அல்ல. அவன் உண்மையில் மக்களின் மேலோட்டமான உணர்வுகளையே வெளிப்படுத்துகிறான். பெரும்பாலும் திரளுணர்வுகளை. அதையே இதழியலும், அரசியலும் வெளிப்படுத்துகின்றன.  அது இலக்கியத்திற்கு எந்த வகையிலும் முக்கியம் அல்ல.  இலக்கியத்தின் நோக்கம் அதைச் சொல்வது அல்ல. மக்களால் அறியப்படாத மக்களின் ஆழம் வெளிப்படும் போது இலக்கியம் முக்கியமாகிறது. அதை இலக்கியவாதி தன் அறியாத ஆழத்தில் இருந்துதான் எடுக்க முடியும். அதை மொழிவழிக்கனவாகவே சென்றடையமுடியும். அவதானித்து ஆராய்ந்து தொகுத்து வகுத்து அதைச் சென்றடைய முடியாது. ஆகவே தான் மாபெரும் அரசியல் தலைவர்கள், உண்மையான மக்கள் தலைவர்கள் எழுதுவது கூட பெரும்பாலும் இலக்கிய படைப்புகளாக கருதப்படுவதில்லை. சத்யமூர்த்தியோ, ராஜாஜியோ,ஈ.வெ.ராவோ, சி.என்.அண்ணாத்துரையோ, ஜீவாவோ எழுதியவை இலக்கியம் அல்ல. அவற்றுக்கு கருத்து மதிப்பு  உண்டேஒழிய இலக்கியப் படைப்பு என்னும் மதிப்பு இல்லை.

இவ்வாறு ஓர் எழுத்தாளர் தனித்துச் செயல்படுவதனால், தன் உள்ளத்தை மட்டுமே தன் வெளிப்பாட்டுக் களமாக கொள்வதனால் அவனால் எந்த அமைப்பு சார்ந்தும் செயல்பட முடியாது. அரசியல் கட்சிகள் எதிலும் அவனால் முழுமையாக ஒன்ற முடிவதில்லை. எந்த ஒரு இயக்கத்தின் ஒரு உறுப்பாகவும் அவனால் பொருந்த முடிவதில்லை. எந்த அமைப்புக்கும் விசுவாசத்தை அளிக்க முடிவதில்லை. வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் மெய்யான இலட்சிய வேகத்துடன் அரசியல் இயக்கங்களை சார்ந்து செயல்பட்ட படைப்பாளிகள் கூட அதிலிருந்து விலகிவிட்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் முரண்பட்டு, மெல்ல தங்கள் சொந்தக்குரலை கண்டடைந்து முன்னகர்கிறார்கள். மாக்ஸிம் கார்க்கி முதல் அதற்கு ஏராளமான உதாரணங்கள். காந்திய இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட கா.சி.வேங்கடரமணி, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் அதனுடன் முரண்பட்டு விலகினார்கள். இடதுசாரி இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்ட சுந்தர ராமசாமியும், கி.ராவும், ஜி.நாகராஜனும், ஜெயகாந்தனும் அவ்வாறு விலகினார்கள். அதை தவிர்க்கவே முடியாது.

இலக்கியவாதி சமகாலத்தை பிரதிபலிக்கவில்லை. சமகாலத்தின் ஆழத்தை மட்டுமே பிரதிபலிக்கிறார். அவன் இதழியல் யதார்த்தத்தை எழுதுவதில்லை. வரலாற்று யதார்த்தத்தை எழுதுவதில்லை. அகயதார்த்தைதை மட்டுமே எழுதுகிறான். ஆகவே சமகாலத்து எந்த அமைப்புமே அவனுக்கு ஒரு வகையில் பின்தங்கியதாகவும் அவன் முரண்படக்கூடியதாகவும் இருக்கிறது. அவனுடைய கனவு என்பது எதிர்காலம் நோக்கியதாக இருக்கிறது. ஒரு பண்பாட்டின் வளரும் முனை என்று அவனைச் சொல்லலாம். சமூகத்தின் வளர்ந்த விளிம்பில் இருந்து அடுத்த கட்டத்திற்கு தளிர்விட்டுக் கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தாகங்களும் அவனுடைய கனவுகளும் நாளைக்கானவையாக இருக்கின்றன. சமகாலத்திலேயே நின்றுவிட்ட எவராலும் நவீன இலக்கியத்தை உள்வாங்க முடியாது. அமைப்புகளும் அரசியலும் இலக்கியவாதிக்கு அந்நியமானவையாக இருப்பது இதனால்தான்.

நவீன் இலக்கியம் அரசியலை மறுக்கவில்லை. தமிழ் நவீன இலக்கியத்தின் முதன்மை ஆளுமைகள் அனைவருமே வெவ்வேறு அரசியல் களங்களின் செயல்பாடுகளுடன் இணைந்திருந்தவர்கள்தான். அந்த இணைப்பு தற்காலிகமானது என்பதுதான் உண்மை. நவீன இலக்கியத்தில் பதிவான அளவிற்கு சமகாலம் வேறெந்த களத்திலும் பதிவானதில்லை. அரசியல்வாதிகளின் நினைவுக்குறிப்புளில் சமகாலம் மிக மங்கலாகவும், அவர்கள் நோக்கில் வளைக்கப்பட்டும், அவர்களை மட்டுமே மையமாக்கியும் மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழக வரலாற்றை அறிய உண்மையில் இலக்கியம் அன்றி வேறு வழியே இல்லை.

உதாரணமாக இன்று ஒருவர் விடுதலைப்போர் பற்றி படிக்கவேண்டும் என்றால் கா.சி.வேங்கடரமணியின் தேசபக்தன் கந்தன், ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் முதல் சி.சு.செல்லப்பாவின் சுதந்திரதாகம் வரை பல படைப்புகள் உள்ளன. நெருக்கடி நிலை பற்றி தமிழில் ஏதேனும் படிக்க வேண்டும் என்றால் தமிழ் நவீன இலக்கியமே ஒரே வழி. பொன்னீலனின் புதியதரிசனங்கள், அசோகமித்திரனின் இன்று என மிக நுணுக்கமான பதிவை அவர்கள் பெறலாம். திராவிட இயக்கம் உருவான விளைநிலத்தை அறிய விரும்புபவர் வாசிக்கவேண்டிய நூல் பாவை சந்திரனின் நல்ல நிலம்தான்.

நவீன இலக்கியத்தில் இருப்பது அரசியலின்மை அல்ல. அது கலைஞனின் அரசியல். திரளின் பார்வையோ அமைப்பின் பார்வையோ இலக்கியத்தில் இல்லை, கலைஞன் வழியாக வெளிப்படும் பண்பாட்டின் ஆழத்தின் பார்வை மட்டுமே உள்ளது. அது எளிய சமகால அரசியல் அல்ல, காலம்கடந்த அரசியல். ஆகவே அது நடைமுறை அரசியலைப் பேசுவதில்லை. மானுட அரசியலைப் பேசுகிறது. அதைப்பேசினால்தான் அது இலக்கியம். ஏதேனும் அதிகாரத்தரப்பின் குரலாக ஒலிப்பது கலையின் பணி அல்ல. அதைச் செய்பவர்கள் அதற்கான லாபத்தை அடையலாம், கலைஞன் என்று சொல்லிக்கொள்ளக்கூடாது. அது எந்தத்தரப்பானாலும் சரி.

நம் கல்வித்துறையின் பிரச்சினை அதில் இலக்கிய வாசகர்கள் இல்லை என்பது மட்டும்தான். நம் மக்களின் பிரச்சினை அவர்கள் இலக்கியத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை, ஆகவே படிப்பதே இல்லை என்பதுதான். நம் மக்களுக்கு முதன்மை ஆர்வம் சினிமா (அதன் உள்ளடக்கம் காமம்), அதன்பின்  அரசியல் (அதன் உள்ளடக்கம் சாதி), அதன்பின் சாப்பாடு, வேறேதுமில்லை. அந்த மூன்றுமே அடிப்படை விலங்கு இச்சைகளின் வெளிப்பாடுகள். இலக்கியத்தை வாசிக்க, கலைகளை ரசிக்க தமிழ்ச்சூழலில் எந்த அறிமுகமும் கிடைப்பதில்லை. எந்தப் பயிற்சியும் எங்கும் அளிக்கப்படுவதில்லை. இதுதான் பிரச்சினை. இதை மறைத்து பழியை இலக்கியம் மீதும், கலைகளின் மீதும் போடுவது மக்களை இந்த விலங்குநிலையிலேயே வைத்துக்கொள்ள விரும்பும் அதிகார அரசியல்வாதிகளின் பேச்சுமட்டுமே.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 10:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.