நெருப்பு ஓடு — கல்பனா ரத்தன்
தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவல் பிறகு பதிப்பகத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 நெடும் பட்டியலில் இடம் பெற்றது.இவரது, ‘ நெய்தல் நறுவீ’ கவிதைத் தொகுப்பு மற்றும் கிளிச்சிறை சிறுகதை தொகுப்பும் வேதாரண்யம் பாரதிதாசன் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவரது சிறுகதைகள் நிறைய இதழ்களில் வெளிவந்துள்ளன. பரிசுகளும் பெற்றுள்ளன.
நெருப்பு ஓடு நாவல் பொற்கொல்லர்கள் சமூகம், நகை செய்பவர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. கதையின் நாயகன் கதிர்வேலின் பார்வை வழியாக நாவல் விரிகிறது.பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்த அவன் தன் அப்பாவின், தாத்தாவின், தன் குடும்பத்தின், குடும்ப உறுப்பினர்களின், குடும்பத் தொழிலின் நிலை எல்லாவற்றையும் தங்கத்தை தட்டித் தட்டி ஆபரணம் ஆக்குவது போல முழுமையாக்கி இருக்கிறான்.
கதிரின் தாத்தா கந்தசாமி பத்தர் அந்தக் காலத்தில் நகை செய்யும் தொழிலில் திறமை வாய்ந்தவர். நிறைய சொத்து பத்துகள் சேர்த்தாலும் தான தர்மங்கள் செய்து, குடும்பத்தினருக்கு வேண்டியவற்றை செய்து தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருந்தவர். நான்கு மகன்களில் மூன்று பேர் பொறுப்பற்றவராக இருந்தாலும் கதிரின் அப்பா செல்வம் மட்டும் தன் சொந்த காலில் நின்று வேலை பார்க்கிறார். அவருக்கு தன் பிள்ளைகள் யாரும் தன் தொழிலுக்கு வராதது வருத்தம். தன் மூத்த பேரன் கதிர் மீது மிகுந்த பாசம். தனக்குப் பின் அவனாவது நகைத் தொழிலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்.
கதிர் சிறுவனாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி வீட்டு நினைவுகளை, மூத்த பேரனாக தான் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்கிறான். நகைகள் பற்றிய நகைத் தொழில் பற்றிய நுட்பமான விஷயங்களை கண்டறிகிறான்.
ஒரு கட்டத்தில் சில சம்பவங்களால் அமைதியாகிறான். தன் தாத்தா ஆசைப்பட்ட படியே நகைக்கடை வைக்கிறான். இந்த நாவலை ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையாகப் பார்க்கலாம்.
அதற்குள் தாத்தா பாட்டி பேரன் பாசம், பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மை, சமையலே கதி என்று கிடக்கும் பாட்டி, தன் கணவர்களின் நிலை அறியாத மனைவிகள், தன் கணவனின் காதல் அறிந்தும், அவனை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போராடும் கதிரின் அம்மா, வாழ்க்கையில் அடி நிலைக்கு வந்துவிட்டதை எண்ணி வருந்தும் கந்தசாமி பத்தர், நகைத் தொழில் நசிவடைவது என நிறையக் கதைகளை உள்ளடக்கி உள்ளது.
துறை சார்ந்த தொழில் சார்ந்த நாவல்கள் கதைகள் பெண்கள் எழுதுவது வரவேற்புக்குரியது. நகைத் தொழில் சார்ந்த நிறைய விஷயங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் தேவி லிங்கம். நகை செய்பவர்களின் நேர்மை ஒரு பக்கம், பணம் வந்ததும் ஆடம்பரமாக செலவு செய்து கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம்.
அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் பாஷை, சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணுபவர்கள், தெரிந்தோ தெரியாமலோ திருட்டு நகை கொள்முதல் பண்ணி கஷ்டப்படுபவர்கள், மிஷின்களின் ஆதிக்கம், பெரிய வியாபாரிகள் கைக்கு நகைத் தொழில் போனது, விஸ்வகர்மா சமூகத்தின் ஐந்து பிரிவுகள் பற்றி, அந்த சமூகத்து பெண்கள் போடும் இரண்டு தாலி, மூணு தாலி பற்றி என எல்லாவற்றையும் துல்லியமாக கதைப்போக்கிலேயே சொல்லி விடுகிறார்.
சிறுவயதில் நாம் பார்த்த சிறிய தொழில்கள் எல்லாம் காலங்கள் மாற மாற கார்ப்பரேட்டுகளின், பெரிய கம்பெனிகளின் மாயக் கரங்களுக்குள் சிக்கி நம் கண் முன்னே காணாமல் போவது வலி மிகுந்த துயரம். இந்த நாவலும் அதைப் பற்றித்தான் பேசுகிறது.
“ காப்பவுன மாப்பவுனு எடுத்துப்பான் பத்தன் “ போன்ற நகைத் தொழில் செய்பவர்களை இழிவுபடுத்தும் பழமொழிகளைக் கண்டு கோபப்படுகிறார் கந்தசாமி பத்தர். அவருக்குத் தெரியும், நகை செய்பவர்களின் வாழ்வாதாரம் என்றும் ஒரே நிலையிலேயே உயராமல் இருக்கிறது என்று.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புமே நகை மற்றும் நகை சம்பந்தமாக வைத்துள்ளது அழகிய ஆபரணமாக மிளிர்கிறது.
தேவி லிங்கம் முன்னுரையில் தன்னைச் சுற்றி நிகழ்வதை கூர்ந்து கவனித்து தன் மனதுக்குள்ளையே பேசிப் பார்ப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் கதையின் பாத்திரங்களும் தங்களுக்கு நடக்கும் விஷயங்களை, அனுபவங்களை தங்கள் மனதுக்குள் பேசிப் பார்த்து தத்துவார்த்தமாக சிந்திப்பது அழகு.
“ நம்ம வாழ்க்கையில் எதை முக்கியமா எடுத்துக்களும் எத தகவலா எடுத்துட்டு போகணும்கிறது முக்கியம் “
இதுபோன்ற தத்துவார்த்த சிந்தனைகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
தேவி லிங்கம் கூறியது போல் நிறைய பெண்களுக்கு தங்கள் திருமணம்,குழந்தைகள்,கடமை என்று எல்லாவற்றையும் முடித்த பின்னர் தான் எழுத வர முடிகிறது என்பது சத்தியமான வலி மிகுந்த வார்த்தைகள். தாமதமாக வந்தாலும் தரமான எழுத்துக்களைத் தருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கதை வேதாரண்யம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது. காலம் ஏணிப்படிகள் திரைப்படம் வெளிவந்த சமயம். பவுன் நானூறு ரூபாய்க்கு விற்ற காலம். பெண்களுக்கு ரேடியோ திரைப்படம் பாடல்கள் தவிர வேறு பொழுது போக்கு கிடையாது. சமூக கட்டுப்பாடுகள் பெண்களை அழுத்தி அழுத்தி பெண்களின் ஆசைகள் கனவுகள் நிறைவேறுவதற்கான கதவுகளை இழுத்து மூடி விடுகின்றன.
பெண்களின் ஏக்கங்களும் நிராசைகளும், பள்ளி கல்லூரி செல்வதற்கு கூட பெற்றவர்களின் முடிவே பிரதானமாக உள்ள நிலை, காதல் காமம் எல்லாம் எட்டாப் பொருளாக இருக்கும் காலம், மூடிய கதவுகளைத் தட்டித்தட்டி புறவாசலைத் திறந்து தங்களுக்கான சுதந்திரத்தை தேடும் பெண்களும் இருக்கிறார்கள்.
இதெல்லாம் பெண்களாலே தான் உண்மையாகப் பதிவு செய்ய முடியும்.கதிர்வேல் வாழ்க்கையிலும் மெல்லிய தென்றலாக ஒரு காதல் வருகிறது.காதலிலே ஆரம்பித்து காதலுடன் நாவல் நிறைவடைகிறது. சிறுவனாக இருக்கும்போது ஜெயலட்சுமி பாட்டியிடம் உங்கள மாதிரி ஒரு பெண்ணை நான் காதலிப்பேன் என விளையாட்டாக சொல்கிறான். திருமணம் முடிந்து குழந்தைகளும் வந்தபின் காதம்பரி அவன் வாழ்வில் வருகிறாள். தன் பாட்டியின் குரலையும் சாயலையும் காதம்பரியிடம் கண்டடைகிறான்.
தேவி லிங்கத்திற்கு ஒரு நாவலை தங்கு தடை இன்றி இயல்பான மொழியில் கொண்டு செல்லும் லாவகம் நேர்த்தியாக வந்திருக்கிறது.நாவலில் கதிரின் வார்த்தைகளாக வரும், “ பூமியில் பிறந்த படைப்புல எல்லா உயிருக்கும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. அதை கண்டறிவது தான் அவரவர் பொறுப்பு “.
தேவி லிங்கம் தனக்கான வசீகரத்தை தன் எழுத்துக்கள் வழியே கண்டடைந்து விட்டார்.அவசியம் படிக்க வேண்டிய நாவல்.
கல்பனா ரத்தன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

