ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை
The Most Precious of Cargoes என்ற பிரெஞ்சு அனிமேஷன் திரைப்படம் ஆஷ்விட்ஸ் யூதப் படுகொலையை மையமாகக் கொண்டது. ஆனால் வதைமுகாமின் துயரக் கதையைச் சொல்வதில்லை. முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வின் வழியாக யூத வெறுப்பு அந்த நாளில் எப்படி வேரோடியிருந்தது என்பதையும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய இருவரையும் பற்றி விவரிக்கிறது.

மரபான தேவதைக் கதையைப் போலத் துவங்கும் திரைப்படம் வரலாற்றின் இருண்டபக்கத்தை ஆராய்கிறது அனிமேஷன் திரைப்படத்தின் மூலம் வரலாற்றையும் அதன் அறியப்படாத உண்மைகளையும் பேச முடியும் என இயக்குநர் Michel Hazanavicius நிரூபித்துள்ளார்
2019 ஆம் ஆண்டு வெளியான ஜீன்-கிளாட் க்ரம்பெர்க்கின் நாவலைத் தழுவி இந்த அனிமேஷன் படம் உருவாக்கபட்டுள்ளது

இரண்டாம் உலகப் போரின் போது, போலந்தின் பனிப் பிரதேசக் கிராமத்தில், ஒரு ஏழை மரம் வெட்டும் தொழிலாளி தனது மனைவியுடன் வசிக்கிறார், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. வயதாகி விட்டது. அந்தப் பெண் குழந்தை வேண்டி கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறாள்.
அவர்கள் வசித்த காட்டிற்குள் ரயில்பாதையொன்று செல்கிறது. ஒரு நாள் கடந்து செல்லும் ரயிலைக் கடவுள் என நினைத்துக் கொண்டு அவள் “ரயில் கடவுளே எனக்கொரு குழந்தையைக் கொடு“ என்று வேண்டுகிறாள்.
அந்த ரயில் யூதர்களைப் படுகொலை செய்வதற்காக அழைத்துக் கொண்டு போகும் மரண ரயில். அதில் பயணம் செய்த ஒருவர் தனது குழந்தையைத் துணியில் சுற்றி ரயில்பெட்டியிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறார்.
குழந்தையின் அழுகுரல் கேட்ட விறகுவெட்டியின் மனைவி அதனைத் தனதாக்கிக் கொள்கிறாள். ரயில் கடவுள் தனது வேண்டுகோளை நிறைவேற்றி விட்டதாக மகிழ்ச்சி அடைகிறாள். விறகுவெட்டி அதனை நம்பவில்லை.

அந்தக் குழந்தை ஆஷ்விட்ஸ் செல்லும் ரயிலில் இருந்து வீசி எறியப்பட்ட யூதக்குழந்தை, யூதர்கள் இதயமற்றவர்கள். அவர்கள் குழந்தையை வளர்ப்பதன் மூலம் கிராமவாசிகளின் கோபத்தைச் சந்திக்க வேண்டாம் என மனைவியோடு சண்டையிடுகிறான். ஆனால் விறகுவெட்டியின் மனைவி பிடிவாதமாகத் தான் குழந்தையை வளர்க்கப் போவதாகச் சொல்கிறாள்.
அவர்கள் பிறர் அறியாமல் காட்டில் குழந்தையை வளர்க்கிறார்கள். குழந்தையின் விளையாட்டுத்தனம் மற்றும் ஒளிரும் சிரிப்பு விறகுவெட்டியின் மனதை மாற்றிவிடுகிறது. அவன் குழந்தையின் மீது அன்பு செலுத்துகிறான். குழந்தை விளையாட ஒரு மரப்பொம்மை செய்து தருகிறான். இதயமற்றவர்களுக்கும் ஒரு இதயம் இருக்கிறது எனப் புரிந்து கொள்கிறான். அதனை உரத்து அறிவிக்கிறான். விறகுவெட்டியின் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் பிறக்கிறது.
விறகுவெட்டியின் இயல்பும் நடத்தையும் மாறிவிட்டதைக் கண்ட கிராமவாசிகள் அவனைச் சந்தேகப்படுகிறார்கள். அவன் ரகசியமாக ஒரு யூதக்குழந்தையை வளர்ப்பதை அறிந்து கொண்டு அதனைக் கொன்றுவிடும்படி மிரட்டுகிறார்கள். ஆனால் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி அவன் தன்னையே பலி கொடுக்கிறான். விறகுவெட்டியின் மனைவி தனி ஆளாகக் குழந்தையை வளர்க்கப் போராடுகிறாள்.
அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர் யார். அவர்கள் ஏன் ரயிலில் இருந்து குழந்தையை வெளியே தூக்கி எறிந்தார்கள் என்ற கதையும் இணையாக விவரிக்கபடுகிறது.

“யூதர்கள்” என்ற வார்த்தையே படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் யூதவெறுப்பு எப்படி மக்களிடம் பரவியிருந்தது என்பதைப் படம் துல்லியமாக விவரிக்கிறது. படத்தில் வரும் கிராமவாசிகள் யூதர்களைக் காரணமில்லாமல் வெறுக்கிறார்கள். யூதர்களைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். விறகுவெட்டியும் அதில் ஒருவனாகவே இருக்கிறான். ஆனால் குழந்தை அவனது எண்ணத்தை மாற்றிவிடுகிறது.
விறகுவெட்டியின் மனைவி ரயிலைக் கடவுளாகக் கருதுகிறாள். அது தான் கதையின் தனித்துவம். வதைமுகாமிற்குச் செல்லும் போது யூதர்கள் பலரும் ரயிலை கடவுளாகவே நினைத்தார்கள். பிரார்த்தனை செய்தார்கள்.
தாயும் மகளும் வனவாசி ஒருவரின் வீட்டில் ஒளிந்து வாழுகிறார்கள். காலம் மாறுகிறது. அந்தச் சிறுமி வளருகிறாள். புதிய வாழ்வில் அடி எடுத்து வைக்கிறாள். வரலாறு மறந்த அவளது கதையை, அவளை வளர்த்த விறகுவெட்டி குடும்பத்தின் கருணையைப் படம் நம்பிக்கையின் வெளிச்சமாக அடையாளப்படுத்துகிறது.
கைவிடப்பட்ட குழந்தையைக் காப்பாற்றி வளர்ப்பது என்ற கதை நிறையத் திரைப்படங்களில் வந்திருக்கிறது. மதம் மற்றும் புராணத்தில் பலமுறை இடம்பெற்றிருக்கிறது. அதே கதையை மாறுபட்ட வரலாற்றுப் புலத்தில். உணர்ச்சிப்பூர்வமாகச் சித்தரித்துள்ள விதத்தில் படம் தனித்து விளங்குகிறது.

கிராபிக் நாவல்களில் இடம்பெறும் ஓவியங்களைப் போலவே படக்காட்சிகள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் பனியின் ஊடாக ரயிலின் வருகை. நெருப்பின் முன்னால் குழந்தையைக் கொஞ்சும் விறகுவெட்டியின் உருவம். தாயும் குழந்தையும் வீடு திரும்பும் காட்சி, அடைக்கலம் தரும் வனவாசியின் வீடு. அவன் சிறுமியோடு காட்டில் நடந்து செல்லும் காட்சிகள். யூத வதைமுகாமிற்குச் செல்லும் ரயில்பயணிகளின் அச்சம் பீறிடும் முகம். மற்றும் வதைமுகாமில் நடந்த துயரங்கள் எனப் படம் அழுத்தமான சித்தரிப்பை கொண்டிருக்கிறது.
The Artist என்ற கறுப்பு வெள்ளை மௌனத் திரைப்படத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் Michel Hazanavicius இந்த அனிமேஷன் திரைப்படத்தின் மூலம் இன்னொரு சிறந்த கலைப்படைப்பினைத் தந்திருக்கிறார்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 668 followers

