அன்றும் இன்றும்.
தி நியூயார்க்கர் இதழின் நூற்றாண்டினை முன்னிட்டு அது கடந்த வந்த காலத்தை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்கள். மார்ஷல் கரி இதனை இயக்கியுள்ளார். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இதுவரை தி நியூயார்க்கரில் வெளியான சிறுகதைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆவணப்படம் நியூயார்க்கர் இதழ் யாரால் எப்படித் துவங்கப்பட்டது. அதன் பிரபலமான ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறை, வெளியீட்டில் காட்டும் துல்லியம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. நியூயார்க்கர் அமெரிக்க உயர்குடியின் ரசனைக்குரியது என்ற விமர்சனத்தையும் கூட ஆவணப்படத்தில் கேட்க முடிகிறது.

டிஜிட்டல் மற்றும் அச்சு இதழ் மூலமாக 1.24 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட இந்த இதழ் காலமாற்றத்தில் தனது பாதையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டது. அது சந்தித்த சவால்கள் மற்றும் சாதனைகளைப் படத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மார்க்வெஸின் சிறுகதையை வெளியிட மறுத்த கடிதம்நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இதழில் வெளியான அரிய கார்டூன்கள். எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும் சிறப்பு திரைப்படவிழாவும், பத்திரிக்கை அட்டைகளின் ஒவியக்கண்காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அதனையும் இந்த ஆவணப்படத்தில் காணமுடிகிறது.
நியூயார்க்கர் தனது அட்டையில் புகைப்படங்களைப் பயன்படுத்துவதில்லை. ஒவியங்களை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அது போலவே அதில் வெளியாகும் கேலிச்சித்திரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அவை தனிதொகுதியாகத் தொகுக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளன.
நியூயார்க்கரில் வெளியான சில சிறுகதைகள் திரைப்படமாக்கபட்டுள்ளன. சில கட்டுரைகள் ஆவணப்படமாக உருவாக்கபட்டுள்ளன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் கூட வெளியிட இயலாது என நியூயார்க்கர் திருப்பி அனுப்பியிருக்கிறது. க.நா.சு தனது ஆங்கிலச் சிறுகதை நியூயார்க்கரில் வெளியாக வேண்டும் என ஆசைப்பட்டதாக ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.
நியூயார்க்கர் இதழின் ஆசிரியர் டேவிட் ரெம்னிக் , பத்திரிகையின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எப்படி இணைக்கிறார் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். பரபரப்பான தனது பத்திரிக்கை பணியிலிருந்து துண்டித்துக் கொண்டு வாரம் ஞாயிற்றுகிழமை தான் கிதார் கற்றுக் கொள்வதாகவும், அன்று ஒரு நாள் படிப்பு எழுத்து என எதுவும் கிடையாது என்று சொல்வது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
பத்திரிக்கையாளர் ஜான் ஹெர்சியின் ஹிரோஷிமா பற்றிய விரிவான கட்டுரை மற்றும் ரேச்சல் கார்சனின் சைலண்ட் ஸ்பிரிங் வெளியீடு பற்றிய செய்திகள் சிறப்பாக ஆவணப்படுத்தபட்டுள்ளன
இதழில் வெளியாகும் எல்லாப் படைப்புகளுக்கும் உண்மைச் சரிபார்ப்பு முறை உள்ளது. அந்தப் பிரிவு இயங்கும் விதமும் அவர்கள் தகவல்களின் உண்மையை அறிந்து கொள்வதில் காட்டும் தீவிரமும் நியூயார்க்கர் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான அடித்தளமாகும்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 668 followers

