இருவேறு உலகம்.
The Best Years of Our Lives 1946ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம். ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்ற படம். இதனை வில்லியம் வைலர் இயக்கியுள்ளார்

இரண்டாம் உலகப் போரிலிருந்து மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் வீடு திரும்புகிறார்கள். அவர்கள் சிறிய வணிக விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மூவரும் ராணுவத்தின் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு பதவிகளை வகித்தவர்கள். அவர்கள் புதிய கனவுகளுடன் வீடு திரும்புகிறார்கள். அந்தப் பயணத்தில் மூவரும் நண்பர்களாகிறார்கள்.

ஆகாயத்தில் பறந்தபடியே தங்கள் ஊர் மாறியிருப்பதை காணுகிறார்கள். ஊரைப் பற்றிய கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மாறியிருப்பது ஊர் மட்டுமில்லை. அவர்கள் வாழ்க்கையும் தான் என்பதையே படம் விவரிக்கிறது.
போரில் கைகளை இழந்து செயற்கை கைகள் பொருத்தப்பட்ட ஹோமர் வீடு திரும்பும் போது அவனது அம்மா கண்ணீர் சிந்துகிறார். அவனைக் காதலிக்கும் பக்கத்துவீட்டுப் பெண் வில்மா அதிர்ச்சி அடைந்தாலும் அன்போடு வரவேற்கிறாள். ஆனால் அவளது குடும்பம் ஹோமரின் நிலையை பெரிய குறைபாடாகக் கருதுகிறது.

தன் மீது பரிதாபம் கொண்டு வில்மா நேசிப்பதாக ஹோமர் நினைக்கிறான். ஆகவே அவளை விட்டு விலகுகிறான். வில்மா முழுமனதோடு ஹோமரை விரும்புகிறாள். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்.
இராணுவ சார்ஜென்ட் அல் ஸ்டீபன்சன் பல ஆண்டுகளுக்குப் பின்பு தனது குடும்பத்தைச் சந்திக்கிறார். அவரது மகளும் மகனும் வளர்ந்திருக்கிறார்கள். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் குடும்பத்துடன் உணவருந்தச் செல்கிறார். மதுவிடுதியில் நிறையக் குடிக்கிறார். பிரிந்த நாட்களை ஒரே இரவில் சரிசெய்துவிட முடியும் என்பது போல நடந்து கொள்கிறார்.
மிதமிஞ்சிய போதையில் தடுமாறும் அவரை மனைவி மில்லி தாங்கிப் பிடித்துப் படுக்கையில் உறங்க வைக்கிறார். மறுநாள் காலையில் கண்விழிக்கும் போது தான் வீட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே அவருக்கு ஏற்படுகிறது. மில்லிக்கும் ஸ்டீபன்சனுக்கும் இடையிலான மறு இணைவு மனதைத் தொடுகிறது:

விமானப்படையில் பணியாற்றிய கேப்டன் பிரெட் டெர்ரி தனது வீடு செல்கிறான். அங்கே வயதான அப்பா அம்மாவைச் சந்திக்கிறான். தனது ஆசை மனைவி மேரி எங்கே என விசாரிக்கிறான்.. அவள் இப்போது வேறு வேலை தேடி கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில தனியே வாழ்வதாகச் சொல்கிறார்கள்.
மனைவியைக் காணச் செல்கிறான். ஆனால் மேரியின் அபார்ட்மெண்டிற்குள் நுழைய முடியவில்லை: அவன் தொடர்ந்து அழைப்பு மணியை அடிக்கிறான், ஆனால் அவள் வீட்டில் இல்லாததால் சந்திக்க முடியவில்லை. அவள் இரவு விடுதி ஒன்றில் பணியாளராக வேலை செய்கிறாள்.
அவன் மதுவிடுதி ஒன்றில் மீண்டும் ஸ்டீபன்சனை குடும்பத்துடன் சந்திக்கிறான். ஒன்றாக குடிக்கிறார்கள். போதையேறிய டெர்ரியை தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறாள் ஸ்டீபன்சனின் மகள் பெக்கி
ஃப்ரெட்டை தனது படுக்கையில் படுக்க வைக்கிறாள், பின்பு தான் வெளியே ஒரு சோபாவில் தூங்கச் செல்கிறாள். ஃப்ரெட் நள்ளிரவில் துர்கனவு ஒன்றின் காரணமாக அலறுகிறான். பெக்கி அவனை சமாதானப்படுத்துகிறாள். மறுநாள் தனது மனைவியைத் தேடிச் சென்று சந்திக்கிறான்.

மேரி பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறாள். ஒரு காட்சியில் வேண்டும் என்றே ராணுவ சீருடையுடன் ஃப்ரெட்டை மதுவிடுதிக்கு அழைத்துப் போகிறாள். அவள் தன்னை ஒரு காட்சிப்பொருளாக நடத்துவதைப் பிரெட் ஏற்க மறுக்கிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவளுக்கு வேறு காதலன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறான்.
ஃப்ரெட் ராணுவ சேவைக்குப் போவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்கிறான். அது அவசர கோலத்தில் நடந்த நிகழ்வு. மேரியின் அழகு மற்றும் இளமை துடிப்புக்காக அவளைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறான். அவளும் ஃப்ரெட்டின் சீருடைக்காகவும், நல்ல சம்பளம் வாங்கும் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புக்காகவும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் அவன் ராணுவத்திற்கு சென்ற பிறகு தனியே வாழ அவள் விரும்பவில்லை. ஆகவே தகுந்த ஆண்துணையைத் தேடிக் கொள்கிறாள்.

வீடு திரும்பிய மூன்று ராணுவ வீர்ர்களும் வேலை தேடுகிறார்கள். கௌரவமான வேலை கிடைப்பதில்லை. சமூகம் அவர்களுக்கு உரிய மரியாதை தர மறுக்கிறது. அமெரிக்க தேச சேவை, ராணுவ வீரம் என்பதெல்லாம் வெறும் சொற்கள் என உணருகிறார்கள்.
ஃபிரெட் பல்பொருள் அங்காடி ஒன்றின் விற்பனைப் பிரிவில் பணியாளராக வேலைக்குச் சேருகிறான்.
ஸ்வன்சனின் மகள் பெக்கி அவனைக் காதலிக்கத் துவங்குகிறாள். அவளது காதலுக்குக் குடும்பம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஃபிரெட் தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிடுவான் எனப் பெக்கி நம்புகிறாள்.
ஸ்டீபன்சன் வங்கி ஒன்றின் கடன் வழங்கும் பிரிவில் வேலைக்குச் சேருகிறார். அங்கே முன்னாள் ராணுவ வீர்ர் ஒருவருக்குக் கடன் உதவி செய்ய முயன்று வங்கியால் கண்டிக்கபடுகிறார். தன்னை வங்கி நடத்தும் விதம் ஏமாற்றமளிப்பதாக ஸ்டீபன்சன் புலம்புகிறார்.
கைகளை இழந்த ஹோமர் வேலை தேடிச் செல்லும் இடங்களில் அவமானப்படுத்தபடுகிறான். மருந்துக் கடையில் அவனைச் சீண்டும் இன்னொரு ராணுவ வீரனை ஃபிரெட் தாக்குகிறான். இதற்காக அவனது வேலை பறிபோகிறது.
வில்மா ஹோமரின் திருமணம் என்னவானது.
பிரெட்டைக் காதலிக்கும் பெக்கி என்ன ஆகிறாள்.
ஸ்டீபன்சன் எப்படி வங்கி பணியில் நடந்து கொள்கிறார் என மூன்றுகிளைகளாகக் கதை விரிகிறது.
ராணுவ சேவையிலிருந்து வீடு திரும்பியவர்களுக்கு எத்தகைய மறுவாழ்வு அளிக்கபடுகிறது என்பதைப் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது.
படத்தின் மறக்கமுடியாத கதாபாத்திரம் ஹோமர். கைகளை இழந்த நிலையிலும் வேடிக்கையாக உரையாடுகிறான் எவரையும் எந்த உதவியும் கேட்பதில்லை. தனது ஆசைக்காதலியை கட்டிக் கொள்ளக் கைகள் இல்லையே என்று மட்டும் வருந்துகிறான். வில்மா அவனை உண்மையாகக் காதலிப்பதை அறிந்து முடிவில் அவளை ஏற்றுக்கொள்கிறான்.
வீடு திரும்பிய படைவீர்ர்களின் வாழ்க்கை போராட்டங்களைப் படம் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. அமெரிக்க சமூகத்தின் மீது இப்படம் முன்வைத்த வெளிப்படையான விமர்சனம் காரணமாக இன்றும் ஹாலிவுட்டின் நிகரற்ற படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 668 followers

