ஆசையின் அங்கி
பெண் இயக்குநரான மரியம் டூசானி இயக்கிய The Blue Caftan திரைப்படம் ஒரு இலக்கியப்பிரதியைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களுக்குள் வளரும் உறவுநிலை மாற்றம். ரகசியங்களை மறைத்துக் கொள்ளும் விதம். உடை தயாரிக்கும் தொழிலின் நுட்பங்கள் எனப் படம் மாறுபட்ட. நிஜமான கதைக்களனை விவரிக்கிறது. ஆடை தைப்பது என்பது படத்தில் குறீயீடாகவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது

ஒரு தளத்தில் இந்தக் குறியீடு பாலின்பத்தின் அடையாளம். மறுதளத்தில் நுட்பமான மரபுக்கலை வெளிப்பாடு மற்றும் திறமையின் வடிவம்.
மொராக்கோவில் வசிக்கும் நடுத்தர வயதுடைய ஹலீம் மிகச்சிறந்த தையல்கலைஞர். அவன் உடைகளைத் தைக்கும் விதமும் அதில் வெளிப்படும் நுட்பமான வேலைப்பாடுகளும் அவனைப் புகழ்பெற்ற கலைஞனாக அடையாளப்படுத்துகிறது
வழவழப்பான நீல நிற சாடின் துணியின் மடிப்புகளின் மீது கேமரா மெதுவாக நகர்கிறது. விரைவாக விரல்கள் சட்டகத்திற்குள் நுழைந்து, மிகுந்த கவனத்துடன் அதனை வருடுகின்றன. இந்த மென்மையான படத்தின் துவக்க காட்சி மறக்க முடியாதது
ஹலீம் ஒரு மாலெம், அதாவது பாரம்பரியமுறையில் அங்கிகள் தயாரிப்பவர்; இந்தக் கலை அவரது தந்தையிடமிருந்து அவருக்குக் கைமாற்றப்பட்டது. தனது பாராம்பரியத் தொழிலைத் தன்னுடைய மனைவி மினாவுடன் சிறப்பாக நடத்திவருகிறார்.
மினா கடையை நிர்வாகம் செய்வதில் உதவி செய்கிறாள். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து வண்ண வண்ணமான துணிரகங்களை விற்பனை செய்கிறாள்.
தனது கணவன் ஒன்றும் இயந்திரமல்ல. அவசரமாக வேலை செய்து தருவது எனக் ஹலீமை பாதுகாப்பதிலும் கவனமாக இருக்கிறாள். அவர்களின் திருமண உறவில் சொல்லப்படாத இடைவெளி இருப்பதை அவர்களின் பேச்சில். செயல்களில் காண முடிகிறது.
இந்தத் தையற்கடைக்கு உதவியாளராக வந்து சேருகிறான் யூசுஃப் என்ற இளைஞன். அவனும் திறமையான தையற்கலைஞன். அவனது அறிமுகத்தில் தான் படம் துவங்குகிறது.

அவனுக்குத் தேவையான பயிற்சிகள் கொடுத்து தன்னோடு வைத்துக் கொள்கிறான் ஹலீம். அவர்கள் தையலகத்தின் பின்புறமுள்ள அறையில் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள். அந்தக் காட்சிகள் படமாக்கபட்டுள்ள விதம் அழகானது. படத்தின் ஒளிப்பதிவும் நடிப்பும் நிகரற்றது.
பழைய கால அலங்கார அங்கியொன்றை காணும் ஹலீம் அது போன்ற வேலை செய்பவர்களை இப்போது காண முடியாது என்கிறான். அந்தத் தையல்முறையைத் தன்னால் செய்ய முடியும் என யூசுஃப் மீட்டுருவாக்கம் செய்ய முனைகிறான்.
யூசுஃப்பின் வருகையும் அவனது இளமையும் ஹலீமை மாற்றுகிறது.
ஒரு இரவு ஹலீமும் மினாவும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ராணுவத்தால் தடுத்தி நிறுத்தி சோதனையிடப்படுகிறார்கள். அடையாள அட்டை இல்லாமல் போன மினாவை ராணுவ அதிகாரி விசாரிக்கிறான். அவள் இதனால் ஆத்திரமடைகிறாள் கண்ணுக்குத் தெரியாத இரும்புப்பிடி ஒன்று அவர்களை வளைத்திருப்பதைப் படம் உணரச் செய்கிறது
தையலகத்தில் இரு ஆண்களும் இணைந்து ஒரு நீல நிற காஃப்தானைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனது கணவன் யூசுப்பின் மீது தன்பாலுறவு நாட்டம் கொண்டிருப்பதை அறிந்த மினா யூசுஃப்பை வெறுக்கிறாள். அவனிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறாள்.
மினாவுக்குக் குணப்படுத்த முடியாத ஒரு நோய் ஏற்பட்டு, அவள் பணியிடத்திற்கு வருவது தடைபடுகிறது. இந்தச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ஹலீம். யூசுஃப் அவனது நெருக்கத்தை நிராகரித்துவிடுகிறான். மினாவின் உடல்நிலை மோசமடைய, ஹலீம் வீட்டிலிருந்தே அவளைக் கவனித்துக்கொள்கிறான்,
யூசுஃப் தையலகத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்கிறான். இதனால் மினா அவனை மதிக்கத் துவங்குகிறாள். அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் உருவாக ஆரம்பிக்கிறது. உடை தைப்பதற்காகக் கச்சிதமாகத் துண்டிக்கப்படுவது போலவே நிகழ்ச்சிகள் கதையில் நடந்தேறுகின்றன. படத்தின் முடிவும் அப்படியானதே.

நீல நிற காஃப்தான் என்பது கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட அலங்கார அங்கி ,இது விசேச நாட்களில் பெண்கள் விரும்பி அணிவதாகும். அதிலுள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கையால் உருவாக்குவது கடினமானது.
வெல்வெட் மற்றும் பட்டு துணிகளைக் கொண்டு காஃப்தான் செய்யும் தையல்காரர்கள் மொராக்கோவில் வசிக்கிறார்கள். அவர்களில் ஒருவராகவே ஹலீம் சித்தரிக்கப்படுகிறான் எப்போதும் அவனது முகத்தில் மெல்லிய சோகம் படிந்திருக்கிறது. அது போலவே மினா எதையோ சொல்ல விரும்பி அதை விழுங்கிக் கொண்டவளைப் போல நடந்து கொள்கிறாள். அந்த உண்மை பிற்பாதியில் வெளிப்படுகிறது.
புதுத்துணியைக் கத்தரிக்கோலால் வெட்டுவதற்கு முன் உறுதியாக இருக்குமாறு அந்த இளைஞனிடம் ஹலீம் கூறுகிறான், ஏனெனில் வெட்டியதை மாற்ற முடியாது. அது தையல்வேலைக்கான அறிவுரை மட்டுமில்லை. இருவருக்குள் உருவாகப் போகும் பாலுறவின் எச்சரிக்கையாகவும் வெளிப்படுகிறது. ஆடைகளைத் தைக்க உதவி செய்யும் காட்சியில் ஹலீம் நடந்து கொள்ளும் விதமும். மினாவின் பார்வையில் வெளிப்படும் ஆத்திரமும் சிறப்பானவை.
வழக்கமான படங்களில் இடம்பெறாத சின்னஞ்சிறு காட்சிகள். அதுவும் வீட்டில் நடக்கும் காட்சிகள் படத்தினைச் சிறப்பாக்குகின்றன.
மினாவின் வாடிக்கையாளர்கள் பொறுமையற்றவர்கள். அவர்கள் உடைகளைத் தைத்து தரும்படி அவசரப்படுத்தும் போது மினா கோவித்துக் கொள்கிறாள். அது போலவே தாயும் மகளும் துணி வாங்க வந்த இடத்தில் நடந்து கொள்ளும் முறை அவளை எரிச்சல் அடையச் செய்கிறது. தனது கணவனின் வேலை என்பது வெறும் தையல் இல்லை. கலை நுட்பம் மிகுந்த பணி என்பதை மினா நன்றாக உணர்ந்திருக்கிறாள். அதில் பெருமை கொள்கிறாள்
மொராக்கோவின் பண்பாடும் அரசியல் நெருக்கடிகளும் இன்றைய வாழ்க்கை முறையும் படத்தில் நுணுக்கமாக வெளிப்படுத்தபடுகின்றன.
நடிகர்களின் நேர்த்தியான முகபாவங்கள். அசலான, அழுத்தமான பார்வைகள் மற்றும் மௌனமான நகர்வுகள் படத்தினைச் சிறப்பானதாக்குகின்றன. கைவினைக் கலையின் மரபை, சிறப்புகளைப் பேசுவதோடு மறைக்கபட்ட ரகசிய இச்சைகளின் வெளிப்பாட்டினை பகிரங்கமாகப் பேசுவது படத்தைச் சிறப்பானதாக்குகிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

